கருக்கலைப்புத் துயருற கொள்ளைக் கொள்கிறது
ஒவ்வொரு வருடமும் 5 கோடி முதல் 6 கோடி பிறவாக் குழந்தைகள் கருக்கலைப்பினால் மடிகின்றனர். அந்த எண்ணிக்கையை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா? அது ஒவ்வொரு வாரமும் ஹவாய்த் தீவுகளின் முழு மக்கள்தொகையையும் உலக வரைபடத்திலிருந்து துடைத்தழிப்பது போலாகும்!
பெரும்பாலான அரசாங்கங்கள் கருக்கலைப்புகளைப்பற்றிய சரியான பதிவுகளை வைத்திருப்பதில்லை. ஆகவே துல்லியமாகக் கணக்கிடுவது கடினமாயிருக்கிறது. கருக்கலைப்புத் தடைசெய்யப்பட்ட அல்லது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ள தேசங்களில், வல்லுநர்கள் குருட்டடியாக ஊகிக்கத்தான் முடியும். ஆனால் உலக கருக்கலைப்பு வடிவுருவம் கீழுள்ளவாறு காணப்படுகிறது:
ஐக்கிய மாகாணங்களில், உள்நாக்குச் சதை அறுவைக்கு (tonsillectomy) அடுத்து, மிகப் பொதுவாக செய்யப்படும் இரண்டாவது அறுவைசெய்முறை கருக்கலைப்பாகும். ஒவ்வொரு வருடமும், 15 லட்சத்துக்கும் அதிகமான கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. தெளிவாகவே, பெரும்பாலானோர் திருமணமாகாத பெண்கள்—ஐந்தில் நான்கு பேர். திருமணமாகாத பெண்கள் தாங்கள் எத்தனை பிள்ளைபெறுகிறார்களோ அதைவிட இருமடங்கு கருக்கலைப்புச் செய்துகொள்கின்றனர். திருமணமான பெண்களோ தாங்கள் எத்தனை முறை கருக்கலைப்புச் செய்துகொண்டனரோ அதைவிட பத்து மடங்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர்.
பெரும்பாலும் கத்தோலிக்க நாடுகளாகிய மத்திய மற்றும் தென்னமெரிக்காவில், கருக்கலைப்புச் சட்டங்கள் உலகிலேயே மிகக் கடுமையானவையாக இருக்கின்றன. இருப்பினும், சட்டவிரோதமான கருக்கலைப்புகள் தாராளமாக நடந்து, பெண்களுக்கு வினைமையான அபாயங்களை விளைவிக்கின்றன. உதாரணமாக, கடந்த வருடம் பிரேஸிலிய பெண்கள் சுமார் நாற்பது லட்சம் கருக்கலைப்புகளைச் செய்துகொண்டனர். அவர்களில் 4,00,000 பேருக்கும் அதிகமானோர் சிக்கல்களினால் மருத்துவ சிகிச்சையை நாடவேண்டியிருந்தனர். லத்தீன் அமெரிக்காவில் ஏற்படும் அனைத்துக் கருத்தரிப்புகளிலும் சுமார் நான்கில் ஒரு பாகம் கலைக்கப்படுகின்றன.
அட்லான்டிக் பெருங்கடலின் குறுக்கே ஆப்பிரிக்கக் கண்டத்தில், சட்டங்களும் மிகக் கெடுபிடியானவை. காயப்படுதலும், மரித்தலும் பொதுவானவையாக இருக்கின்றன. முக்கியமாக சட்டவிரோதமாக மருத்துவம் பார்ப்பவர்களின் உதவியை நாடும் ஏழைப்பெண்கள் மத்தியில் இது இவ்வாறு சம்பவிக்கிறது.
மத்திய கிழக்கு முழுவதிலும், அநேக நாடுகள் புத்தகங்களில் கெடுபிடியான சட்டங்களைக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதிகக் கட்டணம் கொடுக்கமுடிந்த பெண்களால் கருக்கலைப்புப் பரவலாக நாடப்பட்டும், செய்யப்பட்டும் வருகின்றன.
பெரும்பாலான மேற்கு ஐரோப்பா சில கருக்கலைப்புகளை அனுமதிக்கிறது. அவற்றில் ஸ்காண்டிநேவியா மிகவும் தாராளமாகவே அனுமதிக்கிறது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை 1967-ல் இந்தச் செயல்முறை சட்டப்பூர்வமாக்கப்பட்டதிலிருந்து செய்யப்பட்ட கருக்கலைப்புகளைப் பதிவு செய்துவந்திருக்கிறது. அது கருக்கலைப்பின் எண்ணிக்கையில் இரட்டிப்பையும், அதோடுகூட சட்டவிரோதமான பிறப்புகள், பாலுறவு நோய்கள், விபசாரம், மற்றுமநேக இனப்பெருக்க கோளாறுகள் போன்றவற்றில் அதிகரிப்பையும் குறிப்பிட்டது.
கிழக்கு ஐரோப்பா இப்போது அதிக மாற்றத்தை அடைந்துகொண்டிருக்கிறது. அங்குள்ள கருக்கலைப்புச் சட்டங்களும் மாற்றமடைந்துவருகின்றன. முன்பு சோவியத் யூனியனாக இருந்த தேசத்தில், ஆண்டுதோறும் 1.1 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டது. இது உலகமுழுவதும் உள்ள அதிகப்படியான எண்ணிக்கைகளில் ஒன்றாகும். கருத்தடை சாதனங்கள் எளிதில் கிடைக்காத, மோசமான பொருளாதார நிலைமைகளையுடைய இந்தப் பகுதியில், ஒரு சராசரி பெண் தன்னுடைய வாழ்நாளில் ஆறு முதல் ஒன்பது கருக்கலைப்புகளைச் செய்துகொள்ளலாம்.
கிழக்கு ஐரோப்பா முழுவதும் காணப்படும் போக்குப் பொதுவாகவே தளர்த்தப்படும் பாணியிலேயே இருக்கிறது. ருமேனியா ஒரு தெளிவான உதாரணமாக இருக்கிறது. இங்கு முன்னாள் ஆட்சி மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊக்குவிக்க, கருக்கலைப்பையும், கருத்தடையையும் தடைசெய்திருந்தது. ஒரு பங்காக (quota) குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெறும்படி பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ருமேனிய அனாதை விடுதிகள் 1988-ல் அனாதையாகக் கைவிடப்பட்ட இளைஞரால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. இதன் காரணமாக 1989-ன் புரட்சி ஆட்சி கருக்கலைப்பின் மீதான இத்தடைகளை நீக்கியதிலிருந்து, ஒவ்வொரு நான்கு குழந்தைகளிலும் மூன்று குழந்தைகள் கருக்கலைக்கப்படுகின்றனர். இது ஐரோப்பாவின் மிக அதிகமான விகிதமாகும்.
ஆசியா மிக அதிகமான எண்ணிக்கையுள்ள கருக்கலைப்புகளைக் கொண்டிருக்கிறது. சீன மக்கள் குடியரசு, அதன் ஒரு-குழந்தை கோட்பாடு, கட்டாயக் கருக்கலைப்புப் போன்ற திட்டங்களோடு, பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இது வருடத்திற்கு 1.4 கோடி கருக்கலைப்பை அறிக்கை செய்கிறது. ஜப்பானில் கருக்கலைக்கப்பட்ட தங்கள் குழந்தைகளின் நினைவாக பெண்கள் சிறுவர் ஆடைகளாலும் விளையாட்டுப் பொருட்களாலும் சிறிய சிலைகளை அலங்கரிக்கின்றனர். பொதுமக்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளைப்பற்றிய மிகுந்த பயத்தை உடையவர்களாக இருக்கின்றனர். எனவே கருக்கலைப்புதான் அடிப்படையான குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகும்.
ஆசியா முழுவதும், குறிப்பாக இந்தியாவில், மருத்துவத் தொழில் நுட்பம் பெண்ணுரிமை ஆதரவாளர்களுக்கு ஓர் இக்கட்டான குழப்பநிலையை உருவாக்கிவிட்டிருக்கிறது. பனிக்குடத் துளைப்பு (amniocentesis), கேளா ஒலி (ultrasound) போன்ற தொழில் நுட்பங்கள் கருத்தரிப்பின் ஆரம்ப, மிகவும் ஆரம்ப நிலைகளிலேயே ஒரு குழந்தையின் பாலைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படக்கூடும். கீழ்த்திசை பண்பாடு வெகுகாலமாகவே மகள்களைவிட மகன்களை மதிப்பிற்குரியவர்களாகக் கருதிவந்திருக்கிறது. ஆகவே பால்-தீர்மானிப்பு, கருக்கலைப்புப் போன்ற செயல்முறைகள் எளிதில் கிடைக்கும் இடங்களில், பெண்கருக்கள் அதிக எண்ணிக்கைகளில் கலைக்கப்படுகின்றன. இது ஆண்⁄பெண் பிறப்புவிகித சமநிலையைச் சீர்குலைக்கிறது. இதன் விளைவாக, பெண்ணுரிமை இயக்கம் இப்போது பெண்கருவைக் கலைப்பதற்கான பெண்களின் உரிமைக்கு எதிராக நிற்கும் முரண்பாடான நிலையிலுள்ளது.
ஒரு தாய் உணருவதென்ன
மற்ற மருத்துவ செயல்முறைகளைப்போலவே, கருக்கலைப்பும் ஓரளவு ஆபத்தையும் வேதனையையும் தருகிறது. கருத்தரிப்புக் காலத்தில் குழந்தையைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகக் கருப்பை வாய் (cervix) இறுக மூடப்பட்டுள்ளது. விரித்தலும், கருவியை உட்புகுத்துதலும் வேதனைத் தருவதாகவும், காணக்கூடிய காயங்களை ஏற்படுத்துவதாயும் இருக்கக்கூடும். உறிஞ்சியெடுக்கும் கருக்கலைப்பு முறை (suction abortion) 30 நிமிடங்களையோ அல்லது அதற்கு அதிகமான சமயத்தையோ தேவைப்படுத்துகிறது. இச்சமயத்தில் சில பெண்கள் மிதமான வேதனையிலிருந்து கடும் வேதனையையும், சுளுக்கையும் அனுபவிக்கலாம். உப்புநீர் கருக்கலைப்பு முறையில் (saline abortion) உரிய காலத்திற்கு முற்பட்ட பிரசவ வேதனை, சில நேரங்களில் ப்ரொஸ்டாக்ளேன்டின் என்ற பிரசவ வேதனையைத் தொடங்கிவைக்கும் ஒரு பொருளை உபயோகித்துத் தூண்டிவிடப்படுகிறது. சுருங்குதல் மணிக்கணக்காக, அல்லது பல நாட்களுக்கு நீடிக்கலாம். இது வேதனை நிறைந்ததாகவும் உணர்ச்சிசம்பந்தமாக தளரவைக்கக்கூடியதாகவும் இருக்கும்.
கருக்கலைப்பினால் வரும் உடனடி சிக்கல்கள் இரத்தக்கசிவு, கருப்பை வாய்ப் புண்படுதல் அல்லது கிழிதல், கருப்பையில் துளை ஏற்படுதல், இரத்தங்கட்டுதல், மயக்கமருந்து ஏற்படுத்தும் எதிர்விளைவுகள், வலிப்பு, காய்ச்சல், குளிர், வாந்தி போன்றவையாகும். முக்கியமாக குழந்தையின் அல்லது கருக்கொடியின் (placenta) பாகங்கள் கருப்பையினுள் தங்கிவிடும்போது நோய்த் தாக்குதலுக்கான ஆபத்து மிக அதிகமாகவே இருக்கிறது. முற்றுப்பெறாத கருக்கலைப்புச் சாதாரணமாக சம்பவிக்கும் ஒரு காரியமாகும். தங்கிவிட்ட அழுகிக்கொண்டிருக்கும் திசுவையோ, கருப்பையையோகூட நீக்குவதற்கு, அறுவை சிகிச்சை தேவையாக இருக்கலாம். ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டன், முன்னாள் செக்கோஸ்லோவாகியா போன்ற நாட்டு அரசாங்கங்களால் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் கருவுறாத்தன்மை, குழாய்க் கருத்தரிப்பு, கருச்சிதைவு, உரிய காலத்திற்கு முன் பிறப்பு, பிறப்புக் குறைபாடுகள் போன்றவை பிற்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் கருக்கலைப்பு மிகவும் அதிகரிக்கிறது என குறிப்பிடுகின்றன.
முன்னாள் ஐ.மா. தலைமை மருத்துவர் C. எவ்ரட் கூப், “கருக்கலைப்புச் செய்துகொண்டு ஆனால் தன்னால் பெறமுடியாத குழந்தை ஒன்றை இப்போது பெற மும்முரமாக விரும்பும் பெண்ணின் குற்றவுணர்ச்சியைப்பற்றிய, அல்லது உணர்ச்சிசம்பந்தமான பிரதிபலிப்பைப்பற்றிய ஓர் ஆராய்ச்சியை” இதுவரை யாரும் நடத்தவில்லை என்று குறிப்பிட்டார்.
கருக்கலைப்பைப்பற்றிய ஆராய்ச்சிகள் அவற்றின் மாதிரித்தொகுதிகளில் (control groups) கடவுளுடைய சட்டங்களுக்கும், உயிருக்கும் உள்ள மரியாதையின் காரணமாக கன்னிமையோடு தங்களை வைத்திருக்கும் கற்புடைய கிறிஸ்தவ இளைஞரை உட்படுத்தியிருக்கவேண்டும். இவர்கள் நல்ல உறவுமுறைகள், அதிக சுயமரியாதை, நீடித்த மன அமைதி போன்றவற்றை அனுபவித்து மகிழ்ந்தனர் என்று அத்தகைய ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கும்.
பிறவாக் குழந்தை உணருவதென்ன
தன்னுடைய தாயின் கருப்பையின் இதமான சூழ்நிலையில் பாதுகாப்பாக அணைக்கப்பட்டிருந்துவிட்டு, பிறகு திடீரென மரணத்திற்கேதுவான சக்தியால் தாக்கப்படுமானால் ஒரு பிறவாக் குழந்தை எப்படி உணரும்? நாம் கற்பனை செய்துதான் பார்க்கமுடியும். ஏனென்றால் இந்தக் கதை நமக்கு ஒருபோதும் நேரடியாக சொல்லப்படாது.
பெரும்பாலான கருக்கலைப்புகள் உயிரின் முதல் 12 வாரங்களில் செய்யப்படுகிறது. இந்தப் பருவத்தில் அந்தச் சிறிய கருவானது சுவாசிக்கவும் விழுங்கவும் பழகுகிறது. அதன் இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது. அது தனது சிறிய கால்விரல்களை வளைக்கமுடியும், கைமுட்டியால் ஒரு குத்துக் கொடுக்கமுடியும், தன்னுடைய திரவ உலகத்தில் லேசாக தட்டமுடியும்—மேலும் வேதனையை உணரமுடியும்.
அநேக கருக்கள் கருப்பையிலிருந்து முறுக்கியிழுக்கப்பட்டு, ஒரு கூர் நுனியையுடைய ஒரு வெற்றிடக் குழாயினால் (vacuum tube) ஒரு குடுவையினுள் உறிஞ்சியெடுக்கப்படுகிறது. இந்தச் செயல்முறை வெற்றிட உறிஞ்சல் (vacuum aspiration) என்றழைக்கப்படுகிறது. இந்தச் சக்திவாய்ந்த உறிஞ்சி (வீடுகளில் பயன்படுத்தும் ஒரு வெற்றிட சுத்தப்படுத்தும் கருவியின் சக்தியைவிட 29 மடங்கு சக்திவாய்ந்தது) அந்தச் சிறிய உடலைக் கிழித்தெடுக்கிறது. மற்ற குழந்தைகள் விரித்துச் சுரண்டல் (dilation and curettage) முறையில் கலைக்கப்படுகின்றனர். வளையம் வடிவில் உள்ள ஒரு கத்தி குழந்தையைத் துண்டு துண்டாக வெட்டி, கருப்பையின் உட்படலத்தைச் சுரண்டியெடுக்கிறது.
பதினாறு வாரங்களுக்குமேல் வளர்ந்த கருக்கள் உப்புக்கரைசல் கருக்கலைப்பு, அல்லது உப்பு நச்சேற்றம் (saline abortion or salt poisoning) என்ற முறையில் இறந்துபோகலாம். நீண்ட ஓர் ஊசி திரவம் நிறைந்த பையைத் துளைத்து, அதிலுள்ள பனிக்குடப் பாய்மத்தில் (amniotic fluid) சிறிதளவை உறிஞ்சியெடுத்து, செறிவூட்டப்பட்ட ஓர் உப்புக் கரைசலால் அதை மாற்றீடு செய்கிறது. அந்தக் குழந்தை விழுங்கி, சுவாசிக்கும்போது, அதன் மென்மையான நுரையீரல்கள் நச்சுக் கரைசலால் நிரப்பப்பட்டு, அது துடிதுடித்துப் போராடுகிறது. அந்த நச்சுக் கரைசலின் எரிச்சல்தரும் விளைவு, அதன் தோலின் மேற்படலத்தை அரித்தெடுத்து, தோலுரிக்கப்பட்ட நிலையில் அது வற்றி சருகாகிறது. அதன் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட தொடங்குகிறது. சில மணிநேரத்தில் வேதனை நிறைந்த மரணம் ஏற்படலாம். சில வேளைகளில் ஓரிரு நாட்களுக்குப் பின் பிரசவ வேதனை தொடங்கும்போது, உயிரோடுள்ள ஆனால் இறந்துகொண்டிருக்கும் ஒரு குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது.
இந்த முறைகளாலோ அல்லது இதைப்போன்ற மற்ற முறைகளாலோ கொல்லப்படமுடியாத அளவுக்குக் குழந்தை பெரிதாக வளர்ந்துவிட்டிருந்தால், இன்னுமொரு முறை இருக்கிறது—கருப்பைத் துளைப்பு (hysterotomy). உயிரைக் காப்பதற்குப் பதிலாக அதை மாய்ப்பதற்கான நோக்கத்தோடு செய்யும் ஒரு கருப்பை மேற்திறப்பு அறுவையாகும். அறுவை முறையில் தாயின் வயிறு திறக்கப்பட்டு, அநேகமாக எப்போதுமே உயிருள்ள ஒரு குழந்தை வெளியே இழுக்கப்படுகிறது. அது ஒருவேளை கத்தலாம்கூட. ஆனால் அதை அப்படியே சாகும்படி விட்டுவிடவேண்டும். சில குழந்தைகள் மூச்சு முட்டச்செய்தோ, நீரில் அமிழ்த்துவித்தோ, வேறு வழிகளிலோ திட்டமிட்டே கொல்லப்படுவதுமுண்டு.
ஒரு மருத்துவர் உணருவதென்ன
மதிக்கப்பட்டுவரும் ஹிப்பாக்ரட்டிஸின் உறுதிமொழியில் வெளிப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளை மருத்துவர்கள் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்துவந்திருக்கின்றனர். அதன் பகுதி இவ்வாறு கூறுகிறது: “மரணத்துக்கேதுவான மருந்தை, வேண்டினாலும், யாருக்கும் கொடுக்கமாட்டேன். அப்படிப்பட்ட மருந்தை உட்கொள்ளும்படி ஆலோசனையும் கொடுக்கமாட்டேன். எந்த ஒரு பெண்ணுக்கும் [கருக்கலைப்பு ஏற்படுத்தக்கூடிய] ஓர் அழிவு செருகு மருந்தைக் கொடுக்கமாட்டேன். என்னுடைய கலையைக் குற்றமற்றதாயும், மதிப்பிற்குரியதாயும் காத்துக்கொள்வேன்.”
கருப்பையிலுள்ள உயிரைக் கொல்லும் மருத்துவர்களை எதிர்ப்படும் நெறிமுறை சார்ந்த போராட்டம்தான் என்ன? டாக்டர் ஜார்ஜ் ஃப்லெஷ் இதை இவ்வாறு விவரிக்கிறார்: “ஒரு பயிற்சி மருத்துவனாகவும், தகுதிபெற்ற மருத்துவனாகவும், நான் தொடக்கத்தில் செய்த கருக்கலைப்புகள் உணர்ச்சிப்பூர்வமாக எனக்குத் துக்கத்தைத் தந்ததில்லை. . . . நூற்றுக்கணக்கான கருக்கலைப்புகள் செய்த பிறகே நான் மன அமைதியிழக்க ஆரம்பித்தேன். . . . நான் ஏன் மாறிவிட்டேன்? நான் தொழில் தொடங்கிய காலத்தில், திருமணமான ஒரு தம்பதி என்னிடத்தில் வந்து கருக்கலைப்புக்காக வேண்டினர். கருக்கலைப்புச் செய்துகொள்ளவேண்டியவரின் கருப்பை வாய் இறுக்கமாக இருந்ததால், அச்செயல்முறையைச் செய்ய அதை என்னால் விரிக்கமுடியவில்லை. ஒரு வாரம் கழித்துக் கருப்பை வாய் மிருதுவாக இருக்கும்போது திரும்பி வரச்சொன்னேன். அந்தத் தம்பதி திரும்பி வந்தனர், ஆனால் தங்கள் மனதை மாற்றிக்கொண்டதாக என்னிடம் சொன்னார்கள். ஏழு மாதங்கள் கழித்து நான் அவர்கள் குழந்தைக்குப் பிரசவம் பார்த்தேன்.
“வருடங்கள் கழித்து, டென்னிஸ் க்ளப் நீச்சல் குளத்தில் குட்டிப்பையன் ஜெஃப்ரியோடு நான் விளையாடினேன். அதே க்ளப்பில்தான் நானும் அவனுடைய பெற்றோரும் அங்கத்தினராக இருந்தோம். அவன் அழகாகவும் மகிழ்ச்சியுடனும் இருந்தான். ஒரே ஒரு தொழில்நுட்ப தடங்கல்தான் ஜெஃப்ரியின் வளம்வாய்ந்த வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதிலிருந்து என்னைத் தடைசெய்திருக்கிறது என்று நினைத்துப் பார்ப்பது என்னை அதிர்ச்சியடையச் செய்தது. . . . ஏதோ தாய் வேண்டுகிறாள் என்பதற்காக, வளர்ந்த ஒரு கருவைக் கலைப்பதானது ஒரு நடத்தைக்கெட்ட செயலாகும். சமுதாயமும் இதனை அனுமதிக்கலாகாது.”
கருக்கலைப்பு மருத்துவமனையில் கருக்கலைப்புகளுக்கு உதவுவதை நிறுத்திய ஒரு நர்ஸ் தன்னுடைய வேலையைப்பற்றி கூறுகிறார்: “உடல் பாகங்களை எண்ணுவது எங்களுடைய வேலைகளில் ஒன்றாகும். . . . குழந்தையின் உடற்பாகங்களை இன்னும் தன் கருப்பையில் வைத்துக்கொண்டே அந்தப் பெண் வீட்டிற்குப் போவாளேயானால், வினைமையான பிரச்னைகள் வரக்கூடும். அந்த உடற்பாகங்களை நான் எடுத்து, இரண்டு கைகள், இரண்டு கால்கள், ஒரு முண்டம், ஒரு தலை போன்றவை இருக்கின்றனவா என்று நிச்சயப்படுத்திக்கொள்வேன். . . . எனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். . . . என்னால் ஒப்புரவாக்கமுடியாதளவுக்கு என்னுடைய தொழில் வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஒரு பெரிய முரண்பாடு இருந்தது. . . . கருக்கலைப்புக் கடினமான ஒரு வேலையாகும்.”
[பக்கம் 7-ன் படம்]
ஆண் பிள்ளைகளை விரும்பக்கூடிய ஆசியாவில் மருத்துவர்கள் ஆயிரக்கணக்கான பெண் கருக்களைக் கலைக்கின்றனர்
[படத்திற்கான நன்றி]
Photo: Jean-Luc Bitton/Sipa Press
[பக்கம் 8-ன் படம்]
கருக்கலைப்பை எதிர்த்து நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நிருபர் கர்ப்பத்திலுள்ள 20-வார சிசு சட்டப்பூர்வமாக கலைக்கப்பட்டதை நிழற்படம் எடுக்கிறார்
[படத்திற்கான நன்றி]
Photo: Nina Berman/Sipa Press
[பக்கம் 8-ன் படம்]
அ.ஐ.மா., வாஷிங்டன் D.C.-யில் கருக்கலைப்பை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டம்
[பக்கம் 9-ன் படம்]
ஐக்கிய மாகாணங்களில், கருக்கலைப்புகளை நாடும் 5 பெண்களில் நான்குபேர் திருமணமாகாதவர்