கருக்கலைப்பு இரண்டகநிலை—ஆறு கோடி கொலைகள்தான் தீர்வா?
குழப்பமடைந்த, திகிலடைந்த, கண்ணீர் நிறைந்த, ஒரு 15 வயது பெண், தனது காதலன் வெறுப்புணர்ச்சியுடன் விலகி செல்வதைப் பார்க்கிறாள். கருத்தரித்தமைக்காக அவளை முட்டாள் என்றழைத்தான் அவன். இருவரும் காதலித்ததாக அவள் நினைத்தாள்.
அவள் தனது ஆறாவது குழந்தைக்காகக் காத்திருக்கிறாள் என்று உணர்ந்ததும், மனமுறிவடைகிறாள் ஒரு பெண். அவளுடைய கணவனுக்கோ வேலை கிடையாது. குழந்தைகள் ஒவ்வொரு இரவும் பசியோடு படுக்கைக்குச் செல்கின்றனர். அவர்கள் எவ்வாறு இன்னொரு குழந்தையைக் கவனித்துக்கொள்ளமுடியும்?
“நான் இதைவிட இக்கட்டான நிலையில் கருத்தரித்திருக்கமுடியாது,” என்று தன்னுடைய மருத்துவரிடம் சொல்கிறாள் நாகரிகமாக உடையணிந்த ஒரு பெண்மணி. அவள் இறுதியில் தனது பொறியாளர் பட்டத்தைப் பெற்றுவிட்டு, ஒரு புதிய வாழ்க்கைத் தொழிலைத் தொடங்கவிருக்கிறாள். அவளுடைய கணவன் தன்னுடைய வழக்கறிஞர் பணியில் தன்னை முழுவதுமாக இழந்துவிட்டார். ஒரு குழந்தையை வளர்க்க அவர்களுக்கு நேரம் எங்கிருந்து கிடைக்கும்?
இந்த நபர்கள் தங்களுடைய வாழ்க்கைப்பாணிகளில் மற்றவர்களைவிட மிகவும் வித்தியாசப்படுகின்றனர், வித்தியாசமான தெரிவுகளை எதிர்ப்படுகின்றனர். ஆனால் அவர்கள் ஒரே தீர்வைத் தெரிந்தெடுக்கின்றனர்: கருக்கலைப்பு.
கருக்கலைப்பு இந்தப் பத்தாண்டுகளின் வெடித்தெழும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. இது அரசியல், சமூகம், மருத்துவம், மதம் போன்ற துறைகளில் பற்றியெரியும் விவாதங்களைக் கொளுத்திவிடுகிறது. ஐக்கிய மாகாணங்களில், உயிரை ஆதரிப்பவர்கள் (pro-lifers) பிறவாக் குழந்தையின் உரிமைகளுக்காக அணிவகுத்துச் செல்கின்றனர். தெரிவை ஆதரிப்பவர்களோ (pro-choicers) சட்டத்தின் அடிப்படையிலான சுதந்திரத்தையும், கருக்கலைப்பைத் தீர்மானிப்பதற்கான பெண்களின் உரிமையையும் வலியுறுத்துகின்றனர். உயிரை ஆதரிப்பவர்கள் தெரிவை ஆதரிப்பவர்களை எதிர்த்துத் தேர்தல்களில் போட்டியிடுகின்றனர், நீதிமன்றங்களில் வாதாடுகின்றனர், சர்ச்சுகளில் சர்ச்சை செய்கின்றனர், ஏன் தெருக்களில்கூட சண்டையிடுகின்றனர்.
இலட்சக்கணக்கானோர் ஒரு போராட்டத்தில் சிக்குண்டு, ஒவ்வொரு அணியின் உணர்ச்சியைக் கிளரும் வாக்குவாதங்களால் பிளவுபட்டிருக்கின்றனர். “உயிரை ஆதரிப்பவர்கள்,” “தெரிவை ஆதரிப்பவர்கள்” என்ற சொற்றொடர்கள்தானே, தீர்மானிக்கமுடியாத நிலையிலுள்ளவர்களை நயந்து வேண்டுவதற்காக கவனத்துடன் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்தைப் போற்றி வழிபடும் இந்தக் காலத்தில், யார்தான் தெரிவை ஆதரிக்கமாட்டார்கள்? ஆனால் மறுபட்சத்தில், யார்தான் உயிரை ஆதரிக்கமாட்டார்கள்? தெரிவை ஆதரிப்பவர்கள் சட்டை மாட்டிவைக்கும் கம்பிகளைச் சுழற்றியடிப்பதன் மூலம், ஆபத்தான, சட்டவிரோதமான கருக்கலைப்பைச் செய்துகொள்ளும் ஒடுக்கப்பட்ட பெண்களின் மரணத்தை விளைவிக்கின்றனர். உயிரை ஆதரிப்பவர்கள் ஜாடிகளில் வைக்கப்பட்டுள்ள கலைத்த கருக்களை, பிறவாமலேயே மரித்துப்போன லட்சக்கணக்கான குழந்தைகளின் ஒரு கோரமான நினைப்பூட்டுதலாக பாதுகாத்து வைக்கின்றனர்.
மரணத்துக்கேதுவான இந்தத் துயரம் முழுவதும் லாரன்ஸ் H. ட்ரைபின் கருக்கலைப்பு: எதிர்முனைகளின் போராட்டம் (Abortion: The Clash of Absolutes) என்ற புத்தகத்தில் பொருத்தமாக விவரிக்கப்பட்டுள்ளது. “கரு நிச்சயம் ஒரு மனிதன்தான் என தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் புலம்பும் அநேகர், அதனைச் சுமக்கும் பெண்ணையும், அவளுடைய மோசமான நிலையையும் கருத்தில்கொள்வதில்லை. . . . கருத்தரித்திருக்கும் பெண்ணையும் அவளுடைய உடலையும் கருத்தில்கொண்டு, தன்னுடைய முடிவைக் கட்டுப்படுத்துவதற்கான அவளுடைய உரிமைக்காக குரலெழுப்பும் மற்றநேகர், அந்தப் பெண்ணின் உள்ளே இருக்கும் கருவைக் கருத்தில்கொள்வதில்லை, மற்றும் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது நடத்தியிருக்கும் வாழ்க்கையை உண்மையான ஒன்றாக அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை.”
இந்த நெறிமுறை சார்ந்த போர் உச்சநிலையில் முழங்கிக்கொண்டிருக்கையில், இந்த ஆண்டு 5 கோடி முதல் 6 கோடி பிறவாக் குழந்தைகள் உரிமைகளின் போர்க்களத்தில் மடியப்போகின்றனர்.
இந்த உணர்ச்சிசம்பந்தப்பட்ட பிரச்னையில் உங்களுடைய நிலைநிற்கை என்ன? பின்வரும் முக்கிய கேள்விகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்: தீர்மானிப்பது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையா? எந்தச் சூழ்நிலைமைகளிலும் ஒரு கருக்கலைப்பைச் சரியென நிரூபிக்கமுடியுமா? உயிர் எப்போது தொடங்குகிறது? இறுதியான, ஆனால் ஒருபோதும் கேட்கப்படாத, கேள்வியானது: உயிரையும், பிள்ளைப்பேற்றையும் படைத்தவர் கருக்கலைப்பை எவ்வாறு நோக்குகிறார்?
கருக்கலைப்பு நீண்ட ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. பூர்வீக கிரீஸிலும், ரோமிலும் கருக்கலைப்புப் பொதுவான ஒரு பழக்கமாக இருந்தது. ஐரோப்பாவில் இடைக் காலத்தின்போதும், மறுமலர்ச்சியின்போதும், கருப்பையில் கரு அசைவு ஏற்படும்வரை, அதாவது, தாய் கருப்பையில் உயிர் உள்ளதை உணரும் சமயம்வரை, கருக்கலைப்பு அனுமதிக்கப்படத்தக்கதாகக் கருதப்பட்டது. பாலின புரட்சியோடு வந்தது அதன் விளைவுகள்—லட்சக்கணக்கான தேவையற்ற கருத்தரிப்புகள்.
பெண்களின் இயக்கத்தில் அதிகரிப்பைத் தனிப்படுத்திக் காட்டியது 1960-கள் ஆகும். இனப்பெருக்க உரிமை என்றழைக்கப்படுவதே இவ்வியக்கத்தின் அடிக்கல்லாகும். கற்பழிப்புக்கோ, முறைதகாப் புணர்ச்சிக்கோ பலியானோருக்காக, அல்லது தாயின் உடல்நிலை ஆபத்திலிருக்கும்போது கருக்கலைப்பு உரிமைகளுக்காக சிலர் வற்புறுத்துகின்றனர். ஏற்படவிருக்கும் பிறப்புக் குறைபாடுகளையும், குழந்தையின் பாலையும் கண்டுபிடிப்பதற்காக கருப்பைக்குள் பார்ப்பதை மருத்துவ தொழில்நுட்பம் சாத்தியமாக்கியிருக்கிறது. ஒரு மருத்துவரின் நம்பிக்கையற்ற முன்கணிப்பின் அடிப்படையில் கருத்தரிப்புகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றன. நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகள் ஊனமாகப் பிறப்பதைப்பற்றிய கவலையுள்ளவர்களாக இருக்கலாம்.
வறுமையால் தாக்கப்பட்ட தேசங்களில், கருத்தடை சாதனங்களைப் பெறுவதற்குக் குறைந்த வாய்ப்புகளையே கொண்ட அநேக பெண்கள், அதிகக் குழந்தைகளைப் பராமரிக்கமுடியாதவர்களாக உணரலாம். கருத்தரித்த சில பெண்கள், தெரிவை ஆதரித்தலின் (pro-choice) சொல்பொருள் விளக்கத்தை அதன் வரம்புக்கு நீட்டி, ஒரு கருவைக் கலைப்பதைத் தெரிந்துகொள்கின்றனர். காரணம், கருத்தரித்திருக்கும் காலம் தங்களுக்குச் சரியானதல்ல என்று உணருவதே, அல்லது பிறவாக் குழந்தையின் பாலை அறிந்துகொண்டதால், வெறுமனே அது அவர்களுக்கு வேண்டாம் என்பதே.
இந்த முரண்பாட்டின் பேரில் வெளிப்படுத்தப்படும் அநேக தீவிரமான சர்ச்சைகள், உயிர் எப்போது தொடங்குகிறது என்ற கேள்வியைக் கையாளுகின்றன. கருவுற்ற முட்டை செல் உயிருள்ளது என்ற கருத்தை ஒரு சிலரே சந்தேகிப்பார்கள். கேள்வி என்னவென்றால், என்னவாக உயிர் வாழ்கிறது? வெறுமனே திசுவாக மட்டுமா? அல்லது ஒரு மனித குழந்தையாகவா? ஒரு கருவாலி கொட்டை ஒரு கருவாலி மரமா? அப்படியானால், ஒரு கரு ஓர் ஆளா? அதற்குச் சமூக உரிமைகள் உண்டா? வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு வாதாடுவதற்கு முடிவில்லை. ஒரே மருத்துவமனையில், உரிய காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றவும் அதே சமயம் சமவயதுள்ள ஒரு கருவின் உயிரை மாய்க்கவும், மருத்துவர்கள் தங்கள் முழுத்திறமையுடன் போராடிக்கொண்டிருப்பது என்னே ஒரு முரண்பாடு! ஒரு குழந்தையைக் கருப்பைக்குள்ளேயே கொல்ல சட்டம் அவர்களை அனுமதிக்கலாம்; ஆனால் அக்குழந்தை கருப்பைக்கு வெளியே இருக்குமானால் அது கொலை.
முதலாவதாக, கருத்தரிப்பைத் தடுப்பதற்கான கருத்தடைமுறைகள் தாராளமாகப் பெறும் வாய்ப்பைக்கொண்டுள்ள “விடுதலையடைந்த” பெண்ணுரிமை ஆதரவாளர்களிடமிருந்துதான், சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கான மிக உரத்த கோரிக்கைகள் வருகின்றன. இனப்பெருக்க உரிமைகள் என்றழைக்கப்படுபவற்றிற்கான கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் கருத்தரித்து, இனப்பெருக்கம் செய்வதற்கான திறனை அவர்கள் ஏற்கெனவே உபயோகித்துவிட்டனர். அவர்கள் உண்மையில் விரும்புவது என்னவென்றால் இனப்பெருக்கம் செய்ததை அழிப்பதற்கான உரிமையாகும். அவர்கள் காட்டும் நியாயம்? “அது என் சரீரம்!” ஆனால் அது உண்மைதானா?
கருத்தரிப்பின் முதல் 12 வாரங்களில், “ஒரு பசை நிலையிலுள்ள இந்தச் சிறிய தசைத் தொகுதியை நீக்குவது மிகவும் எளிதாகும்,” என்று கருக்கலைப்பு—இப்பிரச்னைகளின்பேரில் மக்களுடைய ஒரு வழிகாட்டி (Abortion—A Citizen’s Guide to the Issues) கூறுகிறது. கருக்கலைப்புச் சரியாக எவ்வாறு கருதப்படவேண்டும்—“ஒரு தசை உருண்டையை நீக்குவதை” போன்றா அல்லது “கருத்தரித்தலின் பலனை அழிப்பதை” போன்றா? அல்லது இப்படிப்பட்ட சர்க்கரைத் தடவிய வார்த்தைகள் ஏற்கமுடியாத உண்மைகளை ஏற்கவும், உறுத்தும் மனசாட்சியை அமைதிப்படுத்தவும் அமைக்கப்பட்டவையல்லவா?
அந்தத் தேவையற்ற திசுத் துணுக்கு, தனது சொந்த குரோமசோம் தொகுதிகளைக் கொண்டு முழுமையான, வளர்ந்துகொண்டிருக்கும், செழித்துவரும் ஓர் உயிராகும். ஒரு தீர்க்கதரிசன சுயசரிதையைப் போல், அது உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு தனிச்சிறப்புள்ள ஒரு தனிநபரின் விவரமான கதையைச் சொல்கிறது. கருவியலில் புகழ்பெற்ற ஆராய்ச்சி பேராசிரியர் A. W. லைலி இவ்வாறு விவரிக்கிறார்: “உயிரியல்பூர்வமாக, கரு வெறுமனே தாயின் ஓர் உறுப்பு என்ற கருத்தை நாம் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. மரபியல்பூர்வமாக, தாயும் குழந்தையும் கருத்தரிப்பிலிருந்தே தனி ஆட்களாக இருக்கின்றனர்.”
பொறுப்பற்ற நடத்தை
இருப்பினும், கருக்கலைப்புச் செய்துகொள்ள எளிதான வாய்ப்புகள் இருப்பதனால், தேவையற்ற கருத்தரிப்புகளுக்கெதிராக காத்துக்கொள்ளவேண்டிய அவசரதேவையை அநேகர் உணர்ந்திருக்கவில்லை. “திட்டமிடாத கருத்தரிப்புகள்” ஏதேனும் ஏற்படுமாயின் அதைத் தவிர்க்கும் பாதுகாப்பு வலையாக அவர்கள் கருக்கலைப்பைப் பயன்படுத்த விரும்புகின்றனர்.
இந்த நூற்றாண்டில், பருவம் அடையும் வயது குறைந்திருக்கிறது என்பதாக புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன. ஆகவே, சிறுவயது குழந்தைகள்கூட பிள்ளைபெறும் திறனையுடையவர்களாய் இருக்கின்றனர். அந்த சிலாக்கியத்தோடு சேர்ந்துவரும் கனமான பொறுப்பைப்பற்றி அவர்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றனரா? சராசரி அமெரிக்கர் அவனுடைய அல்லது அவளுடைய கன்னிமையை 16 வயதாகும்போது இழக்கின்றனர்; ஐந்து பேரில் ஒருவர் 13 வயதிற்கு முன்பே இழந்துவிடுகின்றனர். திருமணமான ஆண்களில் மற்றும் பெண்களில் மூன்றிலொருவர் ஒரு காதல் விவகாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் அல்லது கடந்த காலத்தில் ஈடுபட்டிருந்தனர். வரைமுறையின்றி பாலுறவு கொள்பவர்கள் கருக்கலைப்பினால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். எய்ட்ஸ் பரவுவதைத் தடைசெய்ய விபசாரத்தைச் சட்டப்பூர்வமாக்குவதற்காக அவ்வப்போது விடுக்கப்படும் வேண்டுகோளைப்போல, கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக்குவது கருக்கலைப்புச் செய்முறையை மருத்துவப்பூர்வமாக ஒருவகையில் பாதுகாப்பானதாக ஆக்கியிருக்கலாம். ஆனால் நெறிமுறை சார்ந்த நோய் செழித்தோங்கக்கூடிய மற்றும் செழித்தோங்கியிருக்கிற ஒரு வளமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு அது அதிகத்தைச் செய்துள்ளது.
வன்முறைக்குப் பலியானவர்களா அல்லது சூழ்நிலைமைக்குப் பலியானவர்களா?
ஆர்வமூட்டும்வகையில், கற்பழிப்பினால் கருத்தரிப்பது மிகவும் அபூர்வம் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அ.ஐ.மா.-வின் மின்னபோலிஸில், அடுத்தடுத்துக் கற்பழிப்புக்குப் பலியான 3,500 பேரை உட்படுத்திய ஒரு சுற்றாய்வில், ஒரு கருத்தரிப்புக்கூட கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னாள் செக்கோஸ்லோவாகியாவில் ஏற்பட்ட 86,000 கருக்கலைப்புகளில், 22 மட்டுமே கற்பழிப்பினால் ஏற்பட்டதாகும். இவ்வாறு, கருக்கலைப்பை நாடுபவர்களில் ஒரு சிறு பகுதியினரே இத்தகைய காரணங்களுக்காக நாடுகின்றனர்.
குணமாக்கப்படமுடியாத பிறப்புக் குறைபாடுகளோடு பயங்கர ஊனமுடன் பிறக்கும் குழந்தைகளைப்பற்றிய அச்சுறுத்தும் முன்கணிப்புகளைப்பற்றி என்ன? பிரச்னையின் முதல் அறிகுறியிலேயே, சில மருத்துவர்கள் உடனடியாக கருக்கலைப்பை வற்புறுத்துகின்றனர். தாங்கள் கண்டுபிடிக்கும் நோய் அறிகுறிகளைப்பற்றி அவர்கள் முழு நிச்சயமாக இருக்கக்கூடுமா? அப்படிப்பட்ட அச்சுறுத்தும் முன்கணிப்புகள் ஆதாரமற்றவையாய் இருக்கலாம் என்று பெற்றோரில் அநேகர் சான்றளிக்கமுடியும். அதை நிரூபிக்க அவர்களுக்குச் சந்தோஷமான, ஆரோக்கியமான குழந்தைகள் இருக்கின்றனர். ஊனமுற்றோர் என்று கருதப்படும் குழந்தைகளையுடைய மற்றவர்களும் தாங்கள் பெற்றோராயிருப்பதற்கு மகிழ்ச்சியுள்ளவர்களாகவே இருக்கின்றனர். உண்மையில், ஐக்கிய மாகாணங்களில் கருக்கலைப்பை நாடுபவர்களில் வெறுமனே ஒரு சதவீதத்தினர் மட்டுமே கருவில் ஏதோ குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக தாங்கள் சொல்லப்பட்ட காரணத்திற்காக அவ்வாறு செய்கின்றனர்.
இருப்பினும், இந்தக் கட்டுரையைப் படிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட சமயத்தில், பிறவாக் குழந்தைகள் நூற்றுக்கணக்கில் மரித்திருக்கின்றனர். அது எங்கு நடைபெறுகிறது? அதில் உட்பட்டிருப்பவர்களின் வாழ்க்கைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
தாய்: “இது என் சரீரம்!”
சேய்: “இல்லை! இது என் சரீரம்!”