தூய்மைக்கேட்டின் காரணங்களை முழுமையாக ஆராய்தல்
ஆம், நம்மில் சிலர் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், மின்காந்த அடுப்புக்களையும் சொந்தக் கணணிகளையும் வைத்திருக்கிறோம். ஆனால் நம்முடைய தூய்மையான காற்றும் சுத்தமான உணவும் தூய்மையான தண்ணீரும் எங்கே? மனிதனைச் சந்திரனுக்கு அனுப்பி வைக்க திறமையுள்ளதாயிருக்கும் தொழில்துறை, நம்முடைய இந்த மிக அடிப்படையான தேவைகளை நமக்கு அளிக்க திறமையற்றிருப்பது போலிருக்க காரணம் என்ன? ஆம் தூய்மைக்கேட்டின் கொடியத் தடங்கள் ஏன் அதிகமதிகமாக தெளிவாக தனிப்படத் தெரிகின்றன?
“எல்லாம் வளர்ந்து கொண்டிருக்கின்றன”
“சுற்றுப்புறச்சூழல் பிரச்னைகள் அனைத்துமே முக்கியமாக வளர்ச்சியினால் ஏற்படுகின்றன, எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்பாராத வேகமான மக்கள் தொகை வளர்ச்சியினால் ஏற்படுகிறது” என்பதாக ஜெர்மானிய விஞ்ஞானப் பத்திரிகையில் எழுதிய பேராசிரியர் குர்த் ஹாமராக் தெரிவிக்கிறார். 1950 முதற்கொண்டு உலகின் மக்கள் தொகை இரண்டு மடங்குக்கும் அதிகமாகிவிட்டிருக்கிறது. அதோடுகூட, ஐக்கிய நாடுகளின் ஆராய்ச்சி ஒன்று அழைக்கிறபடி, “வெடிக்கின்ற நகரங்களடங்கிய ஓர் உலகத்தில்” நாம் வாழ்ந்து வருகிறோம். 2000 ஆண்டுக்குள், வளர்ச்சியடைந்துள்ள பகுதிகளில் வாழ்பவர்களில், முக்கால்வாசிப் பேர் நகரங்களில் வசிக்கிறவர்களாக இருப்பார்கள். மக்கள் தொகை நெருக்கம் அதிகமாகும் போது தூய்மைக்கேடும்கூட அதிகரிக்கும்.
அதிகரித்துவரும் அறிவும் தொழில்துறையும் கிடைக்கக்கூடியதாகச் செய்யும் சரக்குகளை வாங்கும் ஆட்களின் எண்ணிக்கை வளருவதால், தொழில் துறை உற்பத்தியும் வியாபாரமும்கூட வளர்ச்சியடையும். அப்படியென்றால் புதிய தொழிற்சாலைகளும் இரசாயன இயந்திர சாதனங்களும் உருவாகும் என்றும் தூய்மைக்கேட்டுக்குப் புதிய ஊற்றுமூலங்களாக இவை அமையுமென்றும் அர்த்தமாகிறது. இவைகளுக்குச் சக்தி தேவைப்படுமாதலால், புதிய சக்தியை உற்பத்திசெய்ய தொழிற்சாலைகள் கட்டப்படுவது அவசியமாயிருக்கும். உலகம் முழுவதிலும் இவற்றில் சுமார் 400, அணுசக்தி உலைகளாக இருக்கின்றன.
மக்களுக்கிருக்கும் ஓய்வுநேரமும் கூட அதிகரித்துவருகிறது. இது நாட்டுப்புறப் பகுதிகளுக்குள் சென்றுவர அதிகமான நேரத்தையும் வாய்ப்பையுமளித்து, அநேகமாக நிலமும் காற்றும் தண்ணீரும் தூய்மைக் கேடடையவும் இதன் மூலமாக தாவர மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படவும் காரணமாகிவிடுகிறது.
தூய்மைக்கேட்டை தவிர்ப்பதற்குப் பதிலாக, நவீன நாகரீகம் கலப்பான ஆசீர்வாதமாக இருக்கும் ஒரு பொருள்பற்றுள்ள நோக்குநிலையை ஆதரிப்பதன் மூலம் உண்மையில் அது உருவாவதற்கே உதவியாக இருந்திருக்கிறது. தடுத்து நிறுத்தப்படாத வளர்ச்சி அழிவுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதாகப் பொறுப்புள்ள ஆட்கள் அநேகர் எச்சரித்துவருகிறார்கள். தி டூம்ஸ்டே புத்தகத்தை G.R. டெய்லர் பின்வருமாறு முடிக்கிறார்: “பொருள்பற்றுள்ள நோக்கு வெற்றிகொள்ள வேண்டும் என்ற கருத்து இப்பொழுது வரையாக இருந்து வந்தது . . . திடீரென்று அதனால் வெற்றிகொள்ள முடியாது என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.”
ஆம், “அனைத்துமே வளர்ந்துகொண்டிருக்கிறது, பிரச்னைகள் உட்பட” என்கிறார் பேராசிரியர் ஹாமராக். ஆனால் தூய்மைக்கேட்டுக்கு எதிரான போராட்டம் சீராக நடைபெறுவதற்கு மற்ற இன்னும் அதிமுக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
குறைவான அறிவு
“உதாரணமாக ஒரே சமயத்தில் இணைந்து காணப்படும் பல தூய்மைக்கேடு செய்யும் பொருட்களிடையே ஏற்படும் பின்னிய செயல்விளைவுகளைப் பற்றி உண்மையில் எதுவுமே அறியப்படவில்லை” என்பதாக டூம்ஸ்டே புத்தகம் சொல்கிறது. மேலுமாக ஒரு நபர் மோசமானப் பாதிப்புகளினால் அவதியுறுவதற்கு முன்பாக, எந்த அளவு நச்சுத்தன்மையுள்ள பொருட்களுக்கு அல்லது கதிரியக்கச் செயலுக்கு உட்படுத்தப்படலாம் என்பது பற்றிகூட உறுதியாகச் சொல்வதற்கில்லை. “தூய்மைக்கேடு செய்யும் பொருட்களின் உற்பத்தி, உபயோகம் மற்றும் விநியோகத்திலிருந்து எழக்கூடிய ஆபத்தின் அளவினை அறுதிச் செய்வது சாத்தியமில்லை” என்பதாக பிரிமென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நச்சுப் பொருளியல் நிபுணர் L. ஹார்ஸ்ட் கிரைமோ சொல்கிறார். தூய்மைக்கேடு செய்யும் பொருள், எந்த அளவில் தீங்கற்றது என்பதிலிருந்து தீங்கானது என்ற நிலைக்குக் கடந்து செல்கிறது என்பதைத் தீர்க்கமாக முடிவுசெய்ய எந்த வழியுமில்லை என்பதாக அவர் நினைக்கிறார். “அநேக சந்தர்ப்பங்களில் நிபுணர்கள் ஏற்கத்தகுந்த வரம்புகளைத் தீர்மானிக்கக்கூடிய அளவுக்குப் போதுமான அளவு விஷயமறிந்தவர்களாக இல்லை” என்பதாக அவர் சொல்கிறார். மேலுமாக ஆராய்ச்சி சமீபத்தில் தானே செய்யப்பட்டு வருவதால், “ஏற்கத் தகுந்த வரம்புகளின்” நீண்ட காலப் பாதிப்புகளும்கூட எப்படி இருக்கும் என்பது எவருக்கும் உண்மையில் தெரியாது.
நச்சுத்தன்மையுள்ள கழிவுப் பொருட்களை எவ்விதமாக அப்புறப்படுத்துவது என்பதும்கூட ஒரு கேள்வியாக இருக்கிறது. இது ஒரு சிறிய பிரச்னை அல்ல, ஏனென்றால் மேற்கத்திய ஐரோப்பாவில் மாத்திரமே வெளிவரும் ஆபத்து விளைவிக்கக்கூடிய கழிவுப் பொருட்களின் அளவு பல கோடி டன்களாக இருக்கின்றது. (புள்ளி விவர விளக்கக் காட்சிப் படத்தைப் பார்க்கவும்.) இதைக் கையாள ஆறு முக்கிய வழிகள் பயன்படுத்தப்படுகின்றன: (1) கடலில் கொட்டுவது; (2) நிலத்தைத் தோண்டி அதைப் புதைப்பது; (3) நீண்ட காலத்துக்குச் சேமித்து வைப்பது; (4) இயற்கை முறையில் அல்லது இரசாயன முறையில் அல்லது உயிரியல் முறையில் பதப்படுத்துவது; (5) நிலத்திலோ அல்லது சமுத்திரத்திலோ எரித்து சாம்பலாக்குவது மற்றும் (6) கழிவுப் பொருட்களிலுள்ள பிரயோஜனமானப் பொருட்களை மீண்டும் பெற முயற்சி செய்வது அல்லது பதப்படுத்துவதற்காக ஒரு சுழற்சிக்கு அதை உட்படுத்துவது. இந்த முறைகளில் ஒன்றுக்கூட திருப்திகரமாகவோ அல்லது எத்தனைக் கவனக்குறைவினாலும் சேதப்படுத்தப்படமுடியாதபடி மிகவும் உறுதிவாய்ந்ததாகவோ இல்லை.
மனித பலவீனமும் குறைபாடுகளும்
1978, மார்ச் மாதத்தில் கடுமையாக காற்று வீசிக் கொண்டிருந்த ஓர் இரவில் பெரிய அளவில் எண்ணெய் எடுத்துச் செல்வதற்காகத் தொட்டிகளைக் கொண்ட அமோக்கோ காடிஸ் என்ற கப்பல், திசை திருப்பு கட்டையின் கட்டுப்பாட்டை இழந்து, பிரான்ஸின் வடமேற்குப் பகுதியில் ஆழங்குறைந்த அடி நிலத்துக்கு அப்பால் பாய்விரித்துச் சென்றது, 2,00,000 டன்களுக்கும் அதிகமான பக்குவப்படுத்தப்படாத எண்ணெய் சமுத்திரத்திற்குள் வழிந்தோட, 10,000-க்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்து சிப்பித் தொழிற்சாலை இயங்குவது தடைப்பட்டு, நூற்றுக்கும் அதிகமான மைல்கள் கடற்கரையின் தூய்மைக் கெடுக்கப்பட்டு ஒரு மாபெரும் எண்ணெய் படலம் உருவானது. மனிதர்களின் கவனக்குறைவே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
மனித பலவீனத்துக்கு மற்றொரு அதிக பயங்கரமான உதாரணம் 1986 ஏப்ரல் மாதம் நடைபெற்றதாகும். ருஷ்யாவிலுள்ள செர்நோபிலில் அணுசக்தி அணுவுலை தொழிற்சாலையில் நடந்த வினைமையான ஒரு விபத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்தார்கள். சொல்லி முடியாத ஆயிரக்கணக்கானோர் ஆபத்திற்குள்ளானார்கள். 1,35,000 சோவியத் குடிமக்களுக்கு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தி வால் ஸ்டீரிட் ஜர்னல் அறிவிப்பதாவது: “அணுசக்தி விபத்துக்குப் பின்பு சோவியத் நாட்டவரும் ஐரோப்பியர்களும் உட்கொண்டிருக்கும் கதிரியக்கத்தின் நீண்ட கால உடல் நல பாதிப்புகள் பல வருடங்களுக்கு அறியப்படாததாகவே இருக்கும் என்பதாக விஞ்ஞானிகள் பலர் சொல்கிறார்கள். . . . [அவர்கள்] அதிகமான வெள்ளணுப் பெருக்க நோய்களையும் சுவாசப்பை, மார்பு மற்றும் தைராய்ட் புற்றுநோய்களையும் எதிர்பார்க்கிறார்கள்.” ஒரு ப்ராவ்டா அறிக்கையின்படி, விபத்துக்குக் காரணம் “பொறுப்பில்லாமை, கடமை புறக்கணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் குறைவே.”
இதுபோன்ற விபத்துக்கள் முற்காலத்திலும் நடந்திருக்கின்றன. “மனிதவர்க்கம் பலமுறைகள் அழிவிலிருந்து மயிரிழையில் தப்பியிருக்கிறது” என்கிறது டெர் ஸ்பகல். பன்னாட்டு அணுசக்தி அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள 250 அணுவுலை விபத்து அறிக்கைகளில் 48 அறிக்கைகளை அறிய வாய்ப்புப் பெற்றிருந்ததாக இந்த ஜெர்மன் நாட்டுப் பத்திரிகைத் தெரிவிக்கிறது. இவை ஆர்ஜென்டீனா, பல்கேரியா, பாக்கிஸ்தான் போன்ற வெவ்வேறு இடங்களில் நடைப் பெற்ற விபத்துக்களாகும். ஐக்கிய மாகாணங்களில் திரீ மைல் தீவில், மார்ச் 1979-ல் உருக்கி உருவழிந்துப் பிழம்பானது உட்பட, இவைகளில் பெரும்பாலானவற்றிற்கு மனிதனின் தவறே காரணமாகும்.
மனிதர்கள் தவறிழைக்கும் மனசாய்வுடையவர்களாக இருப்பது மாத்திரமல்லாமல், இயற்கை சக்திகளையும் முழுமையாக கட்டுப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள். மத்திய ஐரோப்பாவில் காற்று பொதுவாக மேற்கிலிருந்து கிழக்காக வீசுவதால் ஜெர்மன் குடியரசு, இங்கிலாந்தின் பக்கமிருந்து வீசும் தூய்மை கெடுக்கப்பட்ட காற்றை பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஜெர்மன் குடியரசும் செக்கோஸ்லோவேக்கியாவும் ஃபெடரல் குடியரசிலிருந்து வரும் தூய்மை கெடுக்கப்பட்ட காற்றின் தாக்குதலைப் பொறுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. ஆனால் காற்று அடிக்கடி மாறுகின்ற இயல்புள்ளதாக இருக்கக்கூடும். உதாரணமாக அவை திசை மாறியதால் செர்நோபில் விபத்தின் போது, ஐரோப்பாவின் மற்றப் பகுதிகளைவிட போலந்திலும் பால்டிக் தேசங்களிலும் ஸ்கன்டிநேவியாவிலும்—சோவியத் யூனியனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை—கதிரியக்கத் துகள்கள் கலந்து மிக மோசமாக காற்றின் தூய்மை கெடுக்கப்பட்டது.
அதிக கவலைக்குரிய குறைபாடுகள்
தூய்மைக்கேட்டைப் பற்றிய உண்மைகளை மதிப்பிடுகையில் மக்கள் அநேகமாக நேர்மையிலும் குறிக்கோளிலும் குறைவுபடுகிறார்கள். சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்க விரும்புகிறவர்கள் அவர்களுடைய வாதத்துக்கு ஆதரவாக அதன் எதிர்மறயான அம்சங்களை மிகைப்படுத்திக் கூறும் போது, அவர்களுடைய எதிராளிகள் அதன் ஆக்கப்பூர்வமான அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். உதாரணமாக தூய்மைக் கெடுக்கப்பட்ட ஆறுகளைக் குறித்து அதிகாரக் குழு ஒன்று சொல்வதாவது: “நூற்றாண்டின் திருப்பத்தில், ஐரோப்பியத் தண்ணீர் மார்க்கத்தில் திரளான மீன்களைக் கொண்டிருப்பதற்காக உயர்வாக மதிப்பிடப்பட்ட எல்பியின் பெரும்பகுதி இயற்கைக் கோளாறை மட்டுப்படுத்தும் அதன் ஆற்றலைப் பொறுத்தவரையில் அது எப்போதோ மரித்துவிட்டது.” சான்டாஸ் விபத்துக்குப் பிறகு ரைன் நதியைப் பற்றியும் கூட இதுவே சொல்லப்பட்டிருக்கிறது. மறுபட்சத்தில் வேதியல் தொழிற்சாலையின் பிரதிநிதி, “சான்டாஸின் தீ விபத்துக்குப் பின்னும்கூட ரைன் நதி பத்தாண்டுகளுக்கு முன்பாக இருந்ததைவிட இன்னும் மேம்பட்ட நிலையிலேயே இருக்கிறது” என்கிறார்.
சரியாகச் சொல்லப்போனால், இது உண்மையாக இருக்கக்கூடும். ஏனென்றால் 1983-லிருந்த அறிகுறிகளின்படி அரசு கொண்டுவந்த தூய்மைக்கேடு எதிர்ப்புச் சட்டம் பயனுள்ளதாவும் ரைன் குறிப்பிடத்தக்கவகையில் முன்னிலையை எய்தியும் வந்தது. பிரிட்டனிலுள்ள தேம்ஸ் நதியைப் பற்றி நேஷனல் ஜியாக்கிராபிக் அறிவிப்பதாவது: “கடந்த 30 ஆண்டுகளில் தூய்மைக்கேடு 90 சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது.” ஒருங்கிணைந்து செயல்பட்டதே இந்த வெற்றிக்கு காரணமாயிருந்தது. ஆனால் பத்திரிகை ஆசிரியர் தாமஸ் நெட்டரின்படி, இது அநேக தேசங்களில் குறைவுபடுகிறது. ஏனென்றால் “உயிரின வாழ்க்கைச்சூழலுக்கு ஏற்படும் கேடு இன்னும் வேறு ஒருவரின் பிரச்னையாகவே பொதுவாக கருதப்பட்டு வருகிறது.”
பன்னாட்டு தூய்மைக்கேடு கட்டுப்பாடுகளை மேற்கொள்வது அரசாங்கங்களுக்குப் பெரிய பிரச்னையாக இருப்பதற்கு இது ஒரு காரணமாக இருப்பதில் சந்தேகமேதுமில்லை. பல வருடங்களாக, கானடாவும் ஐக்கிய மாகாணங்களும் அமில மழையை எதிர்த்துப் போராடுவதில் எந்த ஓர் உடன்பாட்டுக்கும் வரக்கூடாதவர்களாக இருந்திருக்கின்றனர். கடைசியாக 1986-ல் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அதுவரையாக கானடா நாட்டு அதிகாரி ஒருவர் குறிப்பிட்ட பிரகாரம், “மீனைப்போலவே அமில மழை தண்ணீரில் மரித்துவிட்டது.” மருந்து நீர் கலவையை வானிலிருந்து தூவுவதால் பூமியின் ஓசோன் அடுக்கு அழிந்துகொண்டிருப்பதாகக் கருதப்பட்டதால் அதன் உற்பத்தியை பாதியாகக் குறைத்துக் கொள்ள 31 தேசங்கள் 1987-ல் ஒப்புக் கொண்டபோதிலும் நூற்றாண்டின் திருப்பம் வரையிலும் இந்த இலக்கை அடையமுடியாது. பன்னாட்டு ஒத்துழைப்பை ஊக்குவிக்க ஐரோப்பிய சமுதாயம் 1987-ஐ “சுற்றுப்புறச் சூழல் ஆண்டு” என்பதாக அழைத்தது.
ஆனால் பேராசை மிக்க மக்கள், பொருளாதார ஆதாயத்துக்காகவும், சுயநலவாதிகள் வசதிக்காகவும் வேண்டுமென்றே தூய்மையைக் கெடுத்துக்கொண்டிருக்கும் வரை, முன்னேற்றம் அவ்வளவாக இருக்கமுடியாது. ஒருவருடைய நலனில் மற்றவர் அக்கறைக் கொள்வதிலும், தனிப்பட்ட வகையில் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வருவதிலுமே வெற்றி சார்ந்திருக்கிறது. “தூய்மைக்கேடு கட்டுப்பாடு வீட்டில் ஆரம்பமாகிறது—இதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் ஜெர்மன் நாட்டுச் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் க்ளாஸ் டாப்ஃபர். ஆகவே ஒவ்வொரு குடிமகனும் தன் பங்கைச் செய்ய வேண்டும். சிறியவன் தன்னை நீதிமானாகக் கருதிக் கொண்டு பெரியவனை—இரசாயன ஆலைகளையும் தொழிற்சாலைகளையும்—சுட்டிக் காண்பிக்கக்கூடும்—ஆனால் சிறியவன் அவனுடைய சொந்த விரல்களாலே கவலையீனமாக குப்பைகளை எங்கும் எறியும்போது, அவன் மட்டும் யோக்கியமானவனா?
பைபிள், “கடைசி நாட்களில்” “மனுஷர்கள் தற்பிரியராயும் பணப்பிரியராயும், . . . இணங்காதவர்களாயும் . . . நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்” இருப்பார்கள் என்பதாக முன்னறிவித்திருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1–5) தூய்மைக்கேடு அதிகரிப்பதற்கு இந்தக் குணங்கள்தாமே காரணமாக இருப்பதால், நிலைமை நம்பிக்கைக்கு இடமில்லாததாகத் தோன்றலாம். தூய்மைக்கேடு இல்லாத ஓர் உலகுக்கு இடையூறுகளாக இருப்பவை நீக்கப்படும்—சீக்கிரத்தில் நீக்கப்படும் என்று நம்புவதற்கு இன்னும் நமக்கு காரணமிருக்கிறது! (g88 5⁄8)
[பக்கம் 6-ன் பெட்டி]
தூய்மைக்கேட்டுக்கு எதிரான மனிதனின் போராட்டத்தில் தடைகள்
◼ கட்டுப்படுத்தப்படாத வளர்ச்சி
◼ குறைவான அறிவு
◼ மனித பலவீனங்கள்
◼ இயற்கை சக்திகள் மீது கட்டுப்பாட்டுக் குறைவு
◼ மற்றவர்களின் நலனில் சுயநலமான அசட்டை மனப்பான்மை
[பக்கம் 7-ன் வரைப்படம்/அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
சமீப ஓர் ஆண்டில் டன்கள் கணக்கில் உற்பத்தியான நச்சுத்தன்மையுள்ள கழிவுப் பொருட்களின் மதிப்பீடு
நார்வே 1,20,000
பின்லாந்து 87,000
ஸ்வீடன் 5,50,000
நெதர்லாந்து 2,80,000
பிரிட்டன் 15,00,000
ஜெர்மன் குடியரசு 48,92,000
பிரான்சு 20,00,000
ஸ்விட்ஸர்லாந்து 1,00,000