தூய்மைக்கேடு—இதை உண்டுபண்ணுவது யார்?
“இந்தத் தீவு பரிசோதனையின் கீழிருக்கும் அரசாங்க சொத்து. நிலம் அந்திராக்ஸினால் நச்சுப்படுத்தப்பட்டு ஆபத்தாக இருக்கிறது. நிலத்தில் கரையேறுதல் விலக்கப்பட்டுள்ளது.”a குரியிநார்ட் தீவுக்கு எதிரிலுள்ள ஸ்காட்லாண்டின் தலைநிலப்பரப்பில் ஒட்டப்பட்ட இந்த அடையாளம் விரும்பும் வருகையாளர்களை எச்சரிக்கிறது. கடந்த 48 வருடங்களாக, இரண்டாம் உலக யுத்தத்தின் சமயத்தில் நோய் கிருமிகளை பயன்படுத்திய குண்டுகளின் ஒரு பரிசோதனை வெடிப்பினால் இந்த அழகிய தீவு அந்திராக்ஸின் நோய் இயக்கிகளினால் தூய்மைக்கேடாக்கப்பட்டுள்ளது.
குரியிநார்ட் தீவு தூய்மைக் கேட்டுக்கு ஓர் உச்ச அளவு உதாரணமாக இருக்கிறது. ஆனால் அவ்வளவு கடுமையாயிராத நில தூய்மைக்கேட்டின் வகைகள் விரிவாக பரவும் மற்றும் வளரும் ஒரு பிரச்னையாக இருக்கிறது.
நில தூய்மைக்கேடு அதிகரிக்கிறது
இந்த நில தூய்மைக்கேட்டுக்கு ஒரு காரணம் குப்பையாகும். உதாரணமாக, லண்டனின் தி டைம்ஸ் பிரகாரம் நான்கு பேருள்ள ஒரு பிரிட்டிஷ் குடும்பம் ஒவ்வொரு ஆண்டும் 112 பவுண்ட் உலோகத்தையும் 90 பவுண்ட் பிளாஸ்டிக்கையும் வெளியே எறிகிறார்கள். “இதன் பெரும்பாகம் தெருக்களையும், பெருஞ்சாலை ஓரங்களையும், கடற்கரைகளையும் மற்றும் ஓய்வெடுக்கும் பகுதிகளையும் அருவருப்பாக்குகிறது.”
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஃபிரான்சில் மார்செல்ஸுக்கு வெளியேயுள்ள ஒரு பெரிய என்டிரீஸன் குப்பை குவியல் 200 அடி உயரத்தை எட்டிக்கொண்டிருந்தது மற்றும் 1,45,000 கல்ஸ் என்ற பறவைகளை இது கவர்ந்திருக்கிறது என கணக்கிடப்பட்டுள்ளது என்று GEO என்ற பத்திரிகை அறிக்கையிட்டது. குவியலைச் சுற்றி போடப்பட்டுள்ள சுற்றுவட்ட வேலி காகிதம் மற்றும் பிளாஸ்டிக் குப்பையை காற்று வீசியடித்துக் கொண்டு போவதிலிருந்து தடுத்து நிறுத்தவில்லை. இதன் விளைவாக, உள்ளூர் அதிகாரிகள் அருகிலுள்ள 74 ஏக்கர் விவசாய நிலத்தை விலைக்கு பெற்று குப்பை பிரச்னையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியில் ஈடுபட்டார்கள்.
மார்ச் 1988-ல் முடிவுபெற்ற ஐரோப்பாவின் சுற்றுப்புறச்சூழல் வருடத்தை அமைத்தலில் EEC ஆணையர் ஸ்டன்லி கிளின்டன் டேவிஸ் தூய்மைக்கேட்டின் பிரச்னைகளில் “முடிவில்லாத” பட்டியலைக் கண்டார்.b இதன் விளைவாக, ஒவ்வொரு வருடமும் சமுதாயத்தின் 2,20,00,00,000 டன் குப்பையில் 80 சதவிகிதம் மறுசுழற்சியின் நோக்கத்தோடு கழிவுப்பொருட்களை மறுபடியும் உபயோகிக்க உற்சாகப்படுத்துவதற்கு ஓர் இயக்கம் திட்டமிடப்பட்டது.
குப்பையினால் உண்டாகும் தூய்மைக்கேடு மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே நேரிடும் ஒன்றாக இல்லை. இது இப்பொழுது பூகோள அளவிலானது. நியு சயன்டிஸ்ட் என்ற பத்திரிகையின் பிரகாரம், மிகத் தொலைவிலுள்ள அண்டார்டிக்கா கண்டத்தில்கூட சுத்தம் செய்வது தேவையாயிருக்கிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள ஆராய்ச்சி விஞ்ஞானிகள் 40 டன்களுக்கும் மேலாக அவர்களுடைய தலைமையகத்திற்கு அருகாமையில் சிதறிக்கிடந்த கழிக்கப்பட்ட இயந்திர மற்றும் கட்டிட பொருட்களை சேகரித்தார்கள். அண்டார்டிக்காவிலுள்ள மக்மூர்டோ நிலையத்தில் உள்ள அமெரிக்கர்கள் எண்பதடி ஆழமுள்ள நீரில் மூழ்கிய 77,000 பவுண்டு எடையுள்ள டிராக்டர் உட்பட, 30 வருடங்களாக குவிக்கப்பட்ட குப்பையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தி நியு யார்க் டைம்ஸ் (டிசம்பர் 19, 1989) அறிக்கை செய்கிறது.
ஆம், வறண்ட நிலத்தில் தூய்மைக்கேடும் கறைப்படுத்துதலும் நிறைந்திருக்கிறது. ஆனால் பூமியின் நீரைப் பற்றியதென்ன?
அழுக்கு நீர்—வாழ்க்கைக்கு தகுதியற்றது
“பிரிட்டனிலுள்ள ஆறுகள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக முதன் முறையாக அழுக்கடைந்து வருகிறது,” என்று தி அப்சர்வர் சொன்னது. “கேட்டிகாட் (ஸ்வீடனுக்கும் டென்மார்க்குக்கும் நடுவிலுள்ள கடல்) மரித்துக்கொண்டிருக்கிறது. இது அவ்வளவு தூய்மைக்கேடாக்கப்பட்டதாலும் பிராணவாயு குறைவாலும் மீன் வாழ்க்கைக்கு ஆதரவளிக்க முடியாமல் வேகமாக மாறுகிறது,” என்பதாக லண்டனின் தி டைம்ஸ் அறிக்கையிட்டது. “போலந்திலுள்ள ஆறுகள் திறந்த சாக்கடைகளாக வேகமாக மாறிக்கொண்டு வருகிறது மற்றும் பார்வையில் ஒரு முன்னேற்றமுமில்லை.”—தி கார்டியன்.
“மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரியதும் அதிக உற்சாகமுமான நீர்வழியின் வலுக்காட்டாயம்” போன்று நவம்பர் 1986 ஒரு தூய்மைக் கேட்டின் நாசத்தைக் கண்டது என்பதாக லண்டனிலுள்ள டெய்லி டெலிகிராப் விளக்கியது. சுவிட்சர்லாந்திலுள்ள பேசெலில் ஓர் இரசாயன ஆலையில் ஏற்பட்ட வினைமையான தீயை தண்ணீர் அடித்து அணைக்க தீயணைப்பாளர்கள் கொண்டுவரப்பட்டார்கள். கவனக்குறைவினால் அவர்கள் 10 முதல் 30 டன்கள் வரை இரசாயனங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் கழுவி ரைன் ஆற்றில் விட்டு “நீர் ஆலையின் செர்னோபெல்லைக்” கொண்டுவர காரணமாயிருந்தனர். இந்நிகழ்ச்சி செய்தித்தாள் தலையங்கங்களில் இடம்பெற்றன. என்றபோதிலும், நச்சுக்கழிவுகள் எந்த ஒரு பெரிய கிளர்ச்சியும் ஏற்படாமல் இடைவிடாமல் ரைன் நதியினுள் குவிக்கப்பட்டு வருகிறது என்ற உண்மை சாதாரணமாக அறிக்கை செய்யப்படுவதில்லை.
நீர் மூலம் பரவும் தூய்மைக்கேடு அதனுடைய ஊற்றுமூலம் சுற்றிலுமுள்ள பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. பல மைல்கள் தொலைவில் இதனுடைய விளைவுகள் நச்சுத்தன்மையுடையதாக இருக்கமுடியும். மீன் தொழிற்துறையின் சோதனைக்கான டச்சு நிறுவனம், வட கடலில் பாயும் ஐரோப்பாவிலுள்ள ஆறுகள், சாயம், பற்பசை வெண்மையாக்கும் பொருட்கள், நச்சு கழிவுகள், மற்றும் உரங்கள் இவைகளை இவ்வளவதிகமாக கடத்துவதால், வட கடல் தட்டை மீன் உண்பதற்கு தகுதியற்றது என்று இப்பொழுது விளம்பரம் செய்திருக்கிறது. ஆழமற்ற பகுதியிலுள்ள தட்டை சிறுமீன் வகையில் 40 சதவிகிதம் தோல் வியாதிகளையும் அல்லது புற்றுநோய் கட்டிகளையும் உடையவையாக இருக்கின்றன என்று சுற்றாய்வுகள் காட்டுகின்றன.
யாரை இந்த மாசுப்படுத்துதலுக்கு குற்றப்படுத்த முடியும்? அநேகர் தொழில்துறையின் மீது உடனே விரலைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இலாபத்திற்கான அவைகளுடைய பேராசை சுற்றுப்புறச் சூழலுக்கான அக்கறையை காட்டிலும் அதிகமாக மிஞ்சிவிட்டிருக்கிறது. இருந்தாலும், விவசாயிகளும்கூட தங்களுடைய நிலத்தின் அருகாமையிலுள்ள நீரோடைகளையும் ஆறுகளையும் தூய்மைக்கேடடையச் செய்வதற்கு குற்றமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய நைட்ரேட் உரத்தின் அதிகரித்துக்கொண்டே போகும் உபயோகம் இப்பொழுது கால்நடை தீவனம் பதனிடுதலிலிருந்து செல்லும் நீரை நச்சுத்தன்மையுடையதாக்கியிருக்கிறது.
தனியாட்கள்கூட ஆறுகளை குப்பை கூளங்களை குவிப்பதற்கான ஓர் இடமாக பயன்படுத்துகிறார்கள். இங்கிலாந்தின் வடமேற்கு நிலப்பகுதியில் நீர்தேக்கமுள்ள பரப்பை உடைய மெர்சே ஆறு ஐரோப்பாவிலேயே மிகவும் அழுக்கடைந்த ஒன்றாக கோரப்பட்டுள்ளது. “இப்பொழுது புத்தியில்லாதவர்கள் அல்லது அறியாமையுள்ளவர்கள் மட்டுமே மெர்சேயில் நீச்சலடிப்பார்கள்” என்று லிவர்பூலின் டெய்லி போஸ்ட் குறிப்பிட்டு, தொடர்கிறது: “யாராவது துரதிர்ஷ்டவசமாக இந்த ஆற்றினுள் விழுவார்களேயானால் மருத்துவமனைக்கு வியாதிப்பட்டவராக எடுத்துச் செல்லப்படக்கூடும்.”
செப்பனிடப்படாத கழிவு நீர் கூட சமுத்திர தூய்மைக்கேட்டின் கலவையின் ஒரு முக்கிய பாகமாக இருக்கிறது. ஆங்கிலேயரின் ஒரு புகழ்பெற்ற விடுமுறை கடற்கரையோர நெடுகிலுமுள்ள ஒரு கடல் “வீட்டில் குளியலுக்கு சராசரியாக உபயோகிக்கப்படும் தண்ணீரில் ஒரு கிண்ணம் செப்பனிடப்படாத கழிவுநீர்” இருப்பதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இது EEC-யினால் வைக்கப்பட்ட வரம்பைவிட நான்கு மடங்கு மிஞ்சியதாயிருக்கிறது.
பின்பு வேறொரு அபாயமிருக்கிறது; இது ஆகாயத்திலிருந்து விழுவதாயிருக்கிறது.
அமில மழை—ஒரு கவலைப்படுத்தும் பயமுறுத்தல்
ஒரு சமயம், இங்கிலாந்திலுள்ள ஜனங்கள் காற்றை, உண்மையில் புகைப்பனியை சுவாசித்தலின் காரணமாக இறப்பது வழக்கமாக இருந்தது. இன்று, இவ்வித தூய்மைக் கேட்டிலிருந்து வரும் சாவுகள் மிகவும் அரிது. 1952-ல் 4,000 பேரைக் கொன்றதாக கணக்கிடப்பட்ட லண்டனிலுள்ள புகைப்பனி இனிமேலும் ஒரு பயமுறுத்தலாக இல்லை. இந்தப் புகைப்பனியைக் கொண்டுவந்த சில நிலக்கரி எரிக்கும் மின் நிலையங்கள் நாட்டுபுறங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன, மற்றும் உயர்ந்த புகைப்போக்கிகள், மேலும் சிலவற்றில் கரிவளி தனிப்படுத்துவதற்கான அமைவுகள் உயிரைப் பாதிக்கக்கூடிய அநேக வாயுக்களின் ஒரு பெரிய சதவிகிதத்தை நீக்குவதற்காக பொருத்தப்பட்டிருக்கின்றன.
என்றபோதிலும், இது வளி மண்டலத்தின் தூய்மைக்கேட்டை தடுக்கவில்லை. உயர்ந்த புகைப்போக்கிகள் அருகிலுள்ள பகுதியிலிருந்து ஆபத்தைத் தவிர்க்கலாம். ஆனால் இப்பொழுது, நீடித்திருக்கக்கூடிய காற்றுகள் தூய்மைக்கேடுகளை தூரமான நிலங்களுக்கு, அடிக்கடி மற்ற நாடுகளுக்கு கடத்துகின்றன. இதன் விளைவாக, ஸ்கன்டிநேவியா பிரிட்டனின் தூமைக்கேட்டினால் துன்பமனுபவிக்கிறது, அநேகர் பிரிட்டனை “ஐரோப்பாவின் அழுக்கான கிழவன்” என்று குறிப்பிடுகின்றனர். இதேவிதமாக, ஐக்கிய மாகாணத்திலுள்ள நடுமேற்கு தொழிற்சாலை கானடாவில் அதிகமான அமில மழை பிரச்னை உண்டாக்குவதற்கு காரணமாயிருக்கிறது.
காற்றின் தூய்மைக்கேட்டிற்கு அமில மழையை உண்டுபண்ணும் கந்தக டைஆக்ஸைட் முக்கிய குற்றவாளி என்பதாக பல வருடங்களாக, விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டும் விரலை அதன் பேரில் காண்பித்து வந்திருக்கிறார்கள். 1985-ல் ட்ரூ லூயி, அமில மழை சம்பந்தப்பட்ட கானடா-அமெரிக்க தொழில் நிறுவனங்களின்மேல் ஓர் ஐக்கிய மாகாண ஜனாதிபதிக்குரிய தூதுவர், “கந்தகம் அமில மழைக்கு காரணமில்லை என்று சொல்வது புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்கு காரணமாயிருக்கவில்லை என்று சொல்வதைப் போன்றதாயிருக்கிறது” என்று உரிமைக்கோரினார். வெளித்தோற்றத்தில், நீராவியோடு இது தொடர்பு கொள்ளும்போது கந்தக டைஆக்ஸைட் கந்தக அமிலத்தை உண்டாக்குகிறது, இது மழையை அமிலமாக்கலாம் அல்லது மேகங்களின் துளிகளில் சேகரிக்கப்பட்டு, இவ்வாறு நச்சுத்தன்மையுள்ள ஈரத்தோடு மேட்டு நிலத்திலுள்ள காடுகளை குளிப்பாட்டுகின்றன.
அமில மழை விழும்போது, அல்லது படுமோசமாக அமில பனி உருகும்போது அடியிலுள்ள நிலம் பாதிக்கப்படுகிறது. 1927-ன் ஒரு படிப்பை மறுபடியும் செய்த ஸ்வீடனிலுள்ள விஞ்ஞானிகள் 28 அங்குல ஆழத்தில் காடுகளின் அமிலத்தன்மை பத்து மடங்காக உயர்ந்துள்ளது என்று முடிவு செய்தனர். இந்த இரசாயன மாற்றம் கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற பிரதான தாதுப்பொருட்களை எடுத்துக்கொள்ளும் ஒரு தாவரத்தின் திறமையை வினைமையாக பாதிக்கின்றது.
இவையெல்லாம் என்ன விளைவை மனிதனின் மேல் உடையதாக இருக்கிறது? முன்பு உயிர் நிறைந்திருந்த ஏரிகளும் ஆறுகளும் அமிலத்தன்மையுடையதாகவும் ஜீவனில்லாமல் மாறுகிறபோது அவன் துயரப்படுகிறான். மேலுமதிகமாக ஏரியானாலும் நிலமானாலும் நீரின் அமிலத்தன்மையின் அதிகரிப்பு அலுமினியத்தை கரைக்கிறது என்று நார்வேயின் விஞ்ஞானிகள் அவர்களுடைய படிப்புகளிலிருந்து முடிவு செய்கிறார்கள். இது ஒரு திட்டவட்டமான ஆரோக்கிய அபாயத்தைக் கொடுக்கிறது. “இறப்பு புள்ளிவிவரங்களுக்கும் நீரில் அலுமினியத்தின் கெட்டித்தன்மை அதிகரிப்புக்கும் இடையே ஒரு தெளிவான உறவை” விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர். அலுமினியத்திற்கும் அல்ஸீமெர் வியாதி மற்றும் மற்ற வயோதிபத்தின் நோய்களுக்கும் இடையேயுள்ள சாத்தியமான இணைப்புகள் தொடர்ந்து பீதியடைவதற்கு காரணமாயிருக்கிறது.
பிரிட்டனின் மெர்சே ஆறு மற்றும் பிரான்சின் என்டிரீஸன் குப்பைக்குவியல் போன்ற பகுதிகளில் சூழ்நிலையை முன்னேற்றுவிக்க முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது உண்மையே. இருந்தபோதிலும், இவ்விதமான பிரச்னை போய்விடாது. இது மறுபடியும் உலகமெங்கும் காணப்படுகிறது. ஆனால் தூய்மைக்கேட்டின் மற்றொரு வகை இருக்கிறது—அது காணமுடியாத ஒன்று.
ஓசோன்—பார்க்கமுடியாத பகைவன்
மின் நிலையங்களில் அல்லது வீட்டு அடுப்புகளில் தோண்டியெடுக்கப்பட்ட எரிப்பொருட்களை எரிப்பது கந்தக டைஆக்ஸைடுடன்கூட பிற தூய்மைக்கேடு செய்பவைகளை உற்பத்தி செய்கின்றன. நைட்ரஜனின் மற்றும் எரிக்கப்படாத ஹைட்ரோ கார்பன்களின் ஆக்ஸைடுகளை இவை உட்படுத்துகின்றன.
விஞ்ஞானக்கருத்து இப்பொழுது காற்றுத் தூய்மைக்கேடுக்கான அதிகரிக்கும் குற்றச்சாட்டை இந்த ஹைட்ரஜன் ஆக்ஸைடுகளின்மேல் வைத்திருக்கின்றன. சூரிய ஒளியின் விளைவின் கீழ், இவைகள் ஒரு நச்சு வாயு ஓசோனை உற்பத்தி செய்வதற்கு உதவுகின்றன. “ஓசோன் தாவர வளர்ச்சியை ஐ.மா.-வில் பாதிக்கும் மிக முக்கியமான காற்றுத் தூய்மைக் கேடாகும்” என்று ஐ.மா.-வின் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அமைப்பின் டேவிட் டிஞ்ஜி குறிப்பிட்டார். இது அவருடைய நாட்டுக்கு 1986-ல் ஒரு வருடத்திற்கு 1,000 மில்லியன் டாலர்கள் செலவை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கணக்கிட்டார். ஐரோப்பாவின் நஷ்டம் அப்பொழுது வருடத்திற்கு 400 மில்லியன் டாலர்களாக வைக்கப்பட்டது.
எனவே, அமில மழை நீர் வழிகளை கொல்லுகையில், ஓசோன் வாகன வாயுக்களோடு கடைசியாக இணைந்து மரங்களின் சாவுக்காக அமில மழை குற்றஞ்சாட்டப்படுவதற்கு மேலாக ஓசோன் இருக்கிறது என்று அநேகர் உணருகிறார்கள். தி எக்கானாமிஸ்ட் குறிப்பிட்டது: “மரங்கள் [ஜெர்மனியில்] முதிர்ச்சியடைவதற்கு முன்னால் அமில மழையினால் அல்ல ஆனால் ஓசோனால் கொல்லப்படுகிறது. உறைபனி, அமில மூடுபனி அல்லது வியாதியின் மூலமாக மரண அதிர்ச்சி கொடுக்கப்பட்டாலும் ஓசோனே மரங்களை வடுபட செய்கிறது.” மேலும் ஐரோப்பாவில் என்ன ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதோ அது பிற கண்டங்களின் நிலைமைகளை கண்ணாடிப்போல் நிழலிட்டுக் காட்டுவதாக இருக்கிறது. “கலிஃபோர்னியாவின் தேசீய பூங்காக்களின் மரங்கள் மிக தொலைவிலுள்ள லாஸ் ஆன்ஞ்சலீஸிலிருந்து வரும் காற்றுத் தூய்மைக் கேட்டினால் நாசமடைந்து கொண்டுவருகின்றன,” என்று நியு சயன்டிஸ்ட் அறிக்கையிட்டது.
என்றபோதிலும், ஒரு படுமோசமான தூய்மைக்கேட்டின் வகை பூமியை மாசுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது நம்முடைய கோளத்தின் நிலம், நீர் மேலும் காற்று இவைகளின் சடப்பொருள் சார்ந்த தூய்மைக்கேட்டில் அடிப்படை காரணக்கூறாக இருக்கிறது.
ஒழுக்கத் தூய்மைக்கேடு
ஜனங்களின் தோற்றத்தினால் ஏமாற்றப்படுவது இலகுவாக இருக்கிறது. இதை இயேசு கிறிஸ்து உயிர்சித்திரம் போன்று விளக்கினார். அவருடைய நாளின் மதத்தலைவர்களிடத்தில் பேசும்போது, அவர் சொன்னார்: “உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும். உள்ளேயோ . . . சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.” (மத்தேயு 23:27) ஆம், ஒரு நபர் நல்ல தோற்றமுடைய, வெளியில் கவர்ச்சிகரமாகவும்கூட தோன்றலாம், ஆனால் அவனுடைய பேச்சும் நடத்தையும் அவனுடைய உண்மையான சீரழிந்த ஆள்தன்மையை வெளிப்படுத்தலாம். இன்று இந்த ஒழுக்கத் தூய்மைக்கேடு பரவியுள்ளது என்பதைச் சொல்லுவதற்கு வேதனையாக இருக்கிறது.
ஒழுக்கத் தூய்மைக்கேடு போத மருந்து துர்ப்பிரயோகத்தை உட்படுத்துகிறது. இது ஒருபோதும் இல்லாதளவிற்கு பெருகி உள்ளது. பாப் நட்சத்திரங்கள், மேடை மற்றும் திரை வழிப்பாட்டுக்குரிய தெய்வங்கள், மற்றும் மதிக்கப்படத்தக்க வர்த்தகர்கள், தெளிவாகவே போத மருந்துகளில் சார்ந்திருப்பதினால் அவதூறின் இலக்குகளாக மாறியிருக்கிறார்கள். ஒழுக்கத் தூய்மைக்கேடு பாலுறவு ஒழுக்கக்கேட்டையும்கூட உட்படுத்துகிறது. இது பிளவுப்பட்ட குடும்பங்கள், விவாகரத்து, கருச்சிதைவுகள், எய்ட்ஸின் கொடிய தண்டனை உட்பட, பாலுறவினால் கடத்தப்படும் நோய்களின் வளரத் தொடங்கும் தொற்றுநோய்கள்கூட காரணமாயிருக்க முடியும்.
இந்த ஒழுக்கத் தூய்மைக்கேட்டின் வேரில் சுயநலம் இருக்கிறது. சுயநலம் மனிதவர்க்கத்தை அதிகமாக தொல்லைப்படுத்தும் உடல் தூய்மைக்கேட்டின் அடிவேரிலும் இருக்கிறது. பிரேசிலிலுள்ள சாவோ பாலோ மாகாணத்தின் எய்ட்ஸ் சிகிச்சையில் உட்பட்ட டெரேசா கிளிமான் இந்தப் பிரச்னையை அடையாளங்காட்டினார்: “[எய்ட்ஸைத்] தடுப்பது என்பது உயர்ந்த அபாய தொகுதியினர் மத்தியில் நடத்தையில் ஒரு மாற்றத்தை உட்படுத்துகிறது, இது மிகவும் கடினம்.” ஜனத்தின் பெரும்பான்மையோர் தங்களுடைய நடவடிக்கைகள் எவ்விதம் பிறரை பாதிக்கின்றன என்று சிந்திப்பதற்கு பதிலாக, தாங்கள் விரும்புவதெதுவோ அதையே செய்ய வற்புறுத்துகிறார்கள். இதன் விளைவாக, ஒழுக்கத் தூய்மைக்கேடு இலக்கியம், பொழுதுபோக்கு மற்றும் மனித பண்பாட்டின் முழுவதிலும் பரவியிருக்கிறது.
சிந்திக்கும் ஜனங்களுக்கு, அநேக நிகழ்கால சரீர மற்றும் ஒழுக்க தூய்மைப்படுத்தும் முயற்சிகள் ஒரு மூடலைக் காட்டிலும் வேறொன்றாகவும் தோன்றவில்லை. சரீர மற்றும் ஒழுக்கத் தூய்மை நிலவியிருக்கும் ஒரு பூமிக்கான நம்பத்தகுந்த எதிர்பார்ப்பு ஒன்று இருக்கிறதா என்று நீங்கள் நியாயமாகவே ஆச்சரியப்படலாம். சோர்வடைய வேண்டாம். தூய்மைக்கேட்டின் முடிவு அருகாமையில் இருக்கிறதென்று பைபிள் நமக்கு சொல்லுகிறது! (g90 5⁄8)
[அடிக்குறிப்புகள்]
a அந்திராக்ஸ் என்பது தோலின்மேல் சிறு தழும்புகளுள்ள சீழ்புண்ணை உண்டுபண்ணும் பிராணிகளின் தொற்று நோய் அல்லது மனிதனில் நுரையீரல் தொற்று நோயாகும்.
b EEC என்பது ஐரோப்பாவின் பொருளாதார சமுதாயம், அல்லது பொது சந்தையைக் குறிக்கிறது.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
காலத்தின் அழிவிளைவுகளைக் காட்டிலும் மோசமானது
மூலப்பொருள்களிடமிருந்து தடைகாப்பின்றி பல ஆண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கல் செதுக்கு உருவத்தின் முகம் வெறும் மரண முகமூடி அணிந்திருப்பதுபோல் காட்சியளிக்கிறது. காற்றுத் தூய்மைக் கேட்டின் அரித்துத் தின்னும் பாதிப்பு காலத்தின் அழிவிளைவுகளைக் காட்டிலும் மோசமானதாக இருக்கிறது. ஐக்கிய மாகாணத்திலுள்ள செனெக்ட்டடியின் நகர மன்றம் முதல் இத்தாலியிலுள்ள வெனிஸ்ஸின் பிரபலமான பெரிய மாளிகைகள் வரையுள்ள உலக முழுவதுமுள்ள பெரிய கட்டிடங்கள் அவைகளைக் கழுவும் திரவமழையின் அரித்தழிக்கும் அரிப்பால் நாசமடைந்திருக்கின்றன. ரோமின் நினைவுச் சின்னங்கள் ஒருமுறை தொட்டவுடன் தூளாகின்றன என அறிக்கை செய்யப்படுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் கடந்த 30 ஆண்டுகளாக கிரீஸின் புகழ்பெற்ற பார்த்தீனன் சேதத்தினால் நாசமடைவதாக நம்பப்படுகிறது. இப்படிப்பட்ட அழிவு அநேக சுற்றுப்புறச் சூழல் ஆக்கக்கூறுகளின் கலவையால் பாதிக்கப்படுகிறது. அவை தட்பவெப்ப நிலை, காற்று, ஈரத்தன்மை மற்றும் கட்டிடங்களின் சுவர்களில் நுண்ணுயிர்கள் வாழ்வதால் ஏற்படுகின்றன. உயிரற்ற பொருட்களுக்கு இப்படிப்பட்ட விளைவுகளென்றால் ஜீவராசிகளின் மேல் ஏற்படும் தூய்மைக்கேட்டின் பாதிப்பு என்னவாக இருக்கும்?
[படம்]
லண்டனில் ஒரு கிறிஸ்தவக் கோவிலில் கல்செதுக்கு