கண்விழி விறைப்பு நோய் பார்வையை தந்திரமாக மறைத்திடும் கள்வன்!
அவள் 60 வயதுகளின் ஆரம்பத்திலிருக்கும் கூர்மையான அறிவுள்ள சுறுசுறுப்பான பெண். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவள் தன்னுடைய சமையலறையில் மகிழ்ச்சியாக வேலை செய்து வந்திருக்கிறாள். அதன் ஒவ்வொரு அங்குலமும் அவளுக்கு அத்துப்படி.
ஆனால் இன்று, அவள் சமையல் மேடையில் வேலை செய்துகொண்டிருக்கையில், பின்னால் திரும்பி, திறந்து வைக்கப்பட்டுள்ள நிலைத்தட்டின் கதவில் தலையை மோதிக் கொள்கிறாள். ஞாபக மறதி எத்தனை ஆபத்தானது என்பதாக தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிறாள். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, புழக்கடை கதவருகிலுள்ள காலணிகளில் இடறி விழுகிறாள்.
இது ஞாபக மறதியுமல்ல, திடீரென ஏற்பட்டிருக்கும் ஒத்திசைவு குறைபாடுமல்ல. இது தந்திரமான கள்வன்—கண்விழி விறைப்பு நோய்—இந்தப் பெண்ணின் பார்வையை படிப்படியாக மறைத்து வருகிறது! இதற்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் முழு பார்வையும் மறைந்துவிடும். ஆனால் கண்விழி விறைப்பு நோய் தடை செய்யப்படவும் தவிர்க்கப்படவும் கூடும். எவ்விதமாக?
தனிச் சிறப்புக்குரிய உங்கள் கண்கள்
முதலாவதாக உங்கள் கண்களின் அமைப்பைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்வது அவசியமாகும். உங்கள் கண் கலங்கலில்லாத நீர்மப் பொருள் நிறைந்த ஒரு நூலிழை அமைப்புள்ள திசுக்களின் ஒரு கோளமாகும். ஒளியை ஊடுருவிச் செல்ல விடாத இந்தக் கோளத்தின் வெள்ளை பாகம் விழி வெளிப் படலமாகும். தெளிவான பகுதியான விழி வெண் படலத்தின் மூலமாக, உங்கள் கண்களுக்கு அவைகளின் வண்ணத்தைக் கொடுக்கும் மிக நுண்ணியதாக தோற்றமளிக்கும் திசுவாகிய விழித் திரைப் படலத்தை நீங்கள் காணமுடியும். கருவிழிப் படலத்தின் மையப் பகுதியிலுள்ள இருண்ட திறப்பாகிய கண்மணியின் மூலமாக ஒளி உங்கள் கண்களுக்குள் பிரவேசிக்கிறது.
உங்கள் கண்மணிக்குப் பின்னால் இருப்பது தெளிவான விழி லென்ஸாகும். சின்னஞ்சிறிய தசைகள், நீங்கள் காண்பதை உங்கள் கண்களுக்குப் பின்னாலுள்ள, ஒளியை ஏற்கத்தக்கவாறு அமைக்கப்பட்ட செல்களினாலான விழித்திரை மீது குவியச் செய்வதற்காக அதன் வடிவத்தை மாற்றுகிறது. இயங்குவதற்கு உங்கள் கண் உள்ளே தெளிவாகவும் அவைகளின் உருண்டை வடிவு நீடித்திருக்க உப்பியுமிருக்க வேண்டும்.
உங்கள் கண்கள் வெறுமையாக இல்லை. இடைவிடாமல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள தெளிவான பொருட்களை சிருஷ்டிகர் அதற்கு அளித்திருக்கிறார். கண்ணின் பெரும் பகுதி—லென்சுக்குப் பின் பக்கத்து அறை—ஒரு தெளிந்த கெட்டியான பாகு போன்ற பொருளான பின் கண் ரசத்தால் நிறைந்திருக்கிறது. பின் கண் ரசத்துக்கும் விழி படலத்துக்குமிடையேயுள்ள உங்கள் கண்ணின் முன் அறையில் அதன் பெயருக்கேற்ற தெளிந்த நீர்ப் போன்ற திரவமான முன் கண் ரசம் இருக்கிறது. நீர் கசிகிற உங்கள் கண்ணின் இந்தப் பாகத்தை விழித் திரைப் படலம் இரண்டு அறைகளாக பிரித்து வைக்கிறது: முன் பகுதி அல்லது முன்பக்க அறை மற்றும் பின்பகுதி அல்லது பின்பக்க அறை.
விழித் திரைப் படலத்துக்குப் பின்னால் சிலியாத் தசைகள் இடைவிடாமல் இந்த நீர்மப் பொருளை உண்டுபண்ணிக் கொண்டே இருக்கிறது. இந்த நெகிழ்ச்சிப் பொருள் ஓரளவு அழுத்தத்தின் கீழிருக்கிறது. இந்த அழுத்தம் உங்கள் உடலின் இயற்கையான மாற்றங்களால் வேறுபடுகிறது. நெகிழ்ச்சிப் பொருள் படிப்படியாக உங்கள் கண்மணியின் வழியாக முன்பக்க அறைக்குள்ளும் பின்னர் உங்கள் விழித்திரைப் படலத்தின் விளிம்புக்குள்ளும் செல்கிறது. அங்கிருந்து திசுக்களின் ஒரு பின்னல்வலை வழியாக வடிமான பள்ளத்தில் வந்து விழுகிறது.
ஆனால் கண்மணியில், பின்னலமைப்பில் அல்லது பள்ளத்தில் ஏதாவது ஒரு நிலைமை தடங்கலை ஏற்படுத்திவிட்டால் அப்போது என்ன? உட்பாய்வு வெளி நோக்கிய ஓட்டத்தைவிட அதிகமாகிவிடும் போது அழுத்தம் உருவாக ஆரம்பிக்கிறது. முன் கண் ரசம், பின் கண் ரசத்தை நெருக்குகிறது. பின் கண் ரசம் இரத்தக் குழாய்களையும் பின்புறத் திரையின் ஒளி வாங்கி செல்களையும் கூடுதலான வேகத்தோடு நெருக்குகிறது.
இந்தச் செல்களிலிருந்து வரும் நரம்பு நார்கள் பொதுவாக பார்வை பீடம் என்றழைக்கப்படும் கிண்ண வடிவு கண் நரம்பு முனைகளை உண்டு பண்ண கண்ணுக்குப் பின்னால் ஒன்று சேருகின்றன. இந்தப் பீடத்தினுள்ளே பார்வை செல்கள் இல்லாததால் அங்கு ஒரு சிறிய பார்வையற்ற புள்ளி இருக்கிறது. அழுத்தம் கூடும் போது இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மிருதுவான இளஞ் சிவப்பு நிற பார்வை பீடம் வெளிறிப் போய் சமமாயில்லாமலாகி விடுகிறது. கிண்ணம் போன்ற அதன் மையப் பகுதியின் ஆழம் மிகுதியாகி அது அகலமாகிறது. இரத்தம் இல்லாததால் பார்வை செல்கள் கூருணர்வு திறமையை இழந்து அழிந்துவிடுகின்றன. பார்வையற்ற புள்ளி வளர்ந்து காட்சி பரப்பு சுருங்கி விடுகிறது. பல ஆண்டுகளினூடே, மாற்றமுடியாத இந்தச் சேதம் படிப்படியாக அதிகமாகிறது.
மிகப் பரவலாயுள்ளது—கவனிக்கப்படாமலிருக்கிறது
தீவிர திறந்த–கோண கண்விழி விறைப்பு நோய், மிகையான நெகிழ்ச்சிப் பொருளின் வெளியேற்றம் படிப்படியாக குறைவுபடுவதால் ஏற்படுவதாகும். இதுவே 70-லிருந்து 95 சதவிகித கண்விழி விறைப்பு நோய்க்குக் காரணமாக இருக்கிறது. இந்நோயுள்ளவர்களால் நன்றாக பார்க்கவும் வாசிக்கவும் முடிகிறது. ஏனென்றால் கடைசியாகவே அவர்களுடைய கண்களின் நடுப் பகுதியிலுள்ள செல்கள் பாதிக்கப்படுகின்றன. ஆரம்ப கட்டங்களில் எந்த புற குறிகளும் தெரிவதில்லை.
தீவிரமான கண்விழி விறைப்பு நோய் மறைவாகவே வளர்ச்சியடைகையில் சில ஆட்கள் களைப்படையவும் அல்லது நீர் கசிகிற கண்களைப் பற்றி லேசாக குறைப்பட்டுக் கொள்ளவோ அல்லது தங்களுக்குப் புதிய கண்ணாடி அவசியம் என்றோ நினைக்கலாம். பின்னர், ஒளியைச் சுற்றி ஓர் ஒளி வட்டத்தையும் கண்ணைச் சுற்றி வலி இருப்பதையும் கவனிக்கலாம். ஆனால் அநேகருக்கு, இந்தப் பார்வை இழப்பு விளக்க முடியாத “அசெளகரியத்தை” உண்டுபண்ணும் வரை முன்னறிவிப்பு இருப்பதில்லை. இறுதியில் மையப் பார்வையும்கூட கவனிக்கத்தக்க வகையில் மங்கி விடுகிறது. அதற்குள் கண்விழி விறைப்பு நோய் அந்த நோயாளியின் பார்வையில் பெரும்பகுதியை மறைத்து விடுகிறது.
கூரான அல்லது மூடிய–கோண கண்விழி விறைப்பு நோய் ஐக்கிய மாகாணங்களிலுள்ள சுமார் 10 சதவிகிதத்துக்குக் காரணமாயுள்ளது. இது அடிப்படையில் வயதானவர்களுக்கு வரும் நோயாக உள்ளது. இது ஏனென்றால் நம்முடைய விழி லென்ஸ்கள் வயதாகையில், விசேஷமாக கண் படலம் இருக்கையில் விரிவடைகின்றன. விழி வெண் படலத்துக்கும் விழித் திரைப் படலத்துக்குமிடையே ஆழமில்லாத முன்புற கண் அறையையும் குறுகிய கோணத்தையுமுடைய கண்களில், விரிவடைந்த விழி லென்ஸ்கள், கண்மணியின் வழியாக வரும் முன் கண் ரசத்தை தடை செய்ய படிப்படியாக முன்னேறிச் செல்கிறது. விழித் திரைப் படலத்துக்குப் பின்னால் அழுத்தம் உருவாகிறது. இது முன்னோக்கிப் புடைத்துக் கொண்டிருக்க, கோணமும் பள்ளமும் இருக்கும் ஓரத்தில் வடிமான பின்னல் வலை மூடிக் கொள்கிறது.
மூடிய-கோண கண்விழி விறைப்பு நோய் பொதுவாக நாள்பட்டதாய் இருப்பதில்லை. ஆனால் அது கவலைக்குரியதாக உள்ளது. அழுத்தம் படிப்படியாக உருவாவதற்குப் பதிலாக, திடீரென்று தாங்கமுடியாத வலி ஏற்பட்டு சில சமயங்களில் பார்வை மங்கி குமட்டலும் வாந்தியும் ஏற்படுகிறது. இது உண்மையில் ஒரு மருத்துவ நெருக்கடியாகும்! 48-லிருந்து 72 மணி நேரங்களுக்குள் அழுத்தம் தணிக்கப்படாவிட்டால் வடிகட்டும் பின்னல் வலை நிரந்தரமாக சேதமடைய இது பார்வை நரம்பு சரி செய்ய முடியாத வகையில் பழுதாகிவிட வழிநடத்துகிறது.
மற்ற வகையான கண்விழி விறைப்பு நோய்களில், நரம்பு நாளப் பின்னல், வீக்கத்தினாலும், நோயினாலும் அல்லது விழித்திரைப் படலத்திலிருந்து வந்த உதிரி நிறமியினால் அடைக்கப்படலாம். கண்ணை ஊதுவது போன்ற புற அதிர்ச்சி, கண்விழி விறைப்பு நோயை உண்டுபண்ணலாம். சில பிள்ளைகள் கண்விழி விறைப்பு நோயோடே பிறக்கிறார்கள். அவர்களுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மற்றவர்களைப் போல அவர்களால் பார்க்க அல்லது வாசிக்க முடியாமலிருப்பதால், தவறாக அவர்களுக்குப் படிப்பு வரவில்லை என்ற எண்ணமும்கூட ஏற்பட்டுவிடலாம்.
மிக முக்கியமானது—ஆரம்ப கால நோய் நிர்ணயம்
கண்விழி விறைப்பு நோயைப் பற்றி நல்ல செய்தி என்னவென்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு ஆரம்பத்திலேயே நோய் நிர்ணயம் செய்யப்பட்டால் அவர்கள் குணப்படுத்தப்படலாம். ஒழுங்கான கண் பரிசோதனை, விசேஷமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிக முக்கியம்.
கண் அழுத்தத்தை சோதிக்க ஒரு வழிமுறையாவது, மருத்துவர் உங்கள் கண்களை மருந்து துளிகள் மூலம் மயக்கமடையச் செய்து பின்னர் விழி வெண் படலத்தின் மேல் குரல் விசை மானி என்ற கருவியை மெல்ல அழுத்துவார். விழி வெண் படலத்தினுள் மெல்ல விசை செலுத்தப்படுவதன் மூலம் குரல் விசை மானி உங்கள் கண்களுக்குள் உள்ள அழுத்தத்தை அளக்கிறது. இதுவே கண்விழி விறைப்பு நோய்க்கு அடிப்படையான பரிசோதனை. ஆனால் இது கண்விழி விறைப்பு நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த எப்போதும் போதுமானதாக இல்லை.
நடுத்தர வயது பெண் ஒருத்தி “என் கண்களில் ஏதோ ஒன்று உள்ளது என நான் நினைத்தேன்” என்று சொன்னாள். “கண்ணிமையின் மயிர் வரிசை என் கண்களை உறுத்துகின்றது என நான் நினைத்ததால் அவைகளை பிடுங்கினேன். பின்னர் என் உச்சந் தலையில் கூச்ச உணர்வை உணர்ந்தேன். என் கண்கள் வலிக்க ஆரம்பித்தன.” அவள் குடும்ப மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டாள். கண் மருத்துவர் கண்ணின் அழுத்தத்தை சோதித்தார். பின்னர் அவள் நரம்பியல் வல்லுநரால் பரிசோதிக்கப்பட்டாள். நோய்க்குறிகள் அனைத்தும் நரம்பு மண்டல நிலைமையுடன் சம்பந்தப்பட்டவை என அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்.
அவளும் அவளின் கணவனும் மற்றொரு கண் மருத்துவரிடம் இரண்டாவது அபிப்பிராயம் கேட்டார்கள். அவர் அவளை அநேக முறைகளில் சோதனை செய்தார். தூண்டுதல் சோதனையாக—ஒரே நேரத்தில் அரை லிட்டர் தண்ணீரைக் குடிக்கச் செய்தார். அவளின் நோய்க்குறிகள் வெளிப்படும்படியாக இப்படிச் செய்தார். அவளின் கண் அழுத்தத்தை அதிகரிக்க இவ்விதம் செய்தார். மோசமான கண் விழி விறைப்பு நோய் அவளுக்கு உள்ளது என்பதை அவர் நிர்ணயித்தார். அவளின் கண் பார்வை காப்பாற்றப்பட்டது.
ஏன் முதல் கண் மருத்துவர் கண்விழி விறைப்பு நோய் என்று நோய் நிர்ணயம் செய்யவில்லை? ஒரு காரியம் கண் அழுத்தம் நாள் முழுவதும் மாதம் முழுவதும் மாறிக் கொண்டேயிருக்கும். மற்றொன்று சாதாரண கண் அழுத்தத்திலும்கூட கண்விழி விறைப்பு நோயின் விளைவுகள் அனுபவிக்கப்படக்கூடும். தொடர்ச்சியான சோதனைகள் மட்டுமே கண்விழி விறைப்பு நோயை நிச்சயமாக நிலைநிறுத்த முடியும்.
ஒரு கண் அறுவை நிபுணர் இவ்விதம் சொன்னார்: “கண்விழி விறைப்பு நோயை நிர்ணயம் செய்ய மூன்று முக்கிய வழிகள் உண்டு. அவைகள், கண் அழுத்தம், கண் நரம்பு தெரிவது, பார்க்கக்கூடிய பகுதியாகும். இந்த மூன்றுமே அசாதாரணமாக இருந்தால் ‘இது கண்விழி விறைப்பு நோயில் எவ்வகையைச் சேர்ந்தது? என்பதாக நாம் கேட்க ஆரம்பிக்கலாம்.”
கண்விழி விறைப்பு நோய் என்று நோய் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டால் கண் மருத்துவர் உங்கள் விழித் திரைப் படலத்தின் மேல் ஓரப் பகுதியை சோதனை செய்யக்கூடும். வெளி அறைகளின் ஆழத்தை அளக்கக்கூடும். உங்கள் கண்களை பெரும்பாலும் பாதிக்கும் உங்களின் பொது உடல்நலனைக் குறித்து அவர் கேள்விகள் கேட்கக்கூடும். உதாரணமாக உயர் இரத்த அழுத்தம். ஒரு மருத்துவர் இவ்விதம் சொன்னார்: “தன் வம்ச வழியில் கண்விழி விறைப்பு நோயுள்ள ஒருவர் தன் இரத்த அழுத்தத்தைக் குறைக்க சிகிச்சை செய்துகொள்ளும் முன்னர் தன் கண்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால் உயர் இரத்த அழுத்தம் கண் அழுத்தத்தை உயர்த்துகிறது. பாதிக்கப்பட்டவர் கண்களின் உறுத்துதலால் வேதனைப்படுகிறார். இரத்த அழுத்தமும் கண்களின் அழுத்தமும் ஒரு சுழற்சியில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு செல்கின்றன.
மருத்துவர் தொடர்ந்து சொல்லும் போது, “எனக்கு தெரிந்த பெண்மணி உயர் இரத்த அழுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள். அவள் கண்கள் அவளை வருத்தின. எனவே ஒரு கண் மருத்துவர் அழைக்கப்பட்டார். அவள் அவளின் கண்விழி விறைப்பு நோயை லேசர் அறுவை சிகிச்சையின் மூலம் சீக்கிரமாக குணப்படுத்தினார். உடனடியாக அவளின் கண் அழுத்தம் குறைந்தது. பின் இரத்த அழுத்தமும் குறைந்தது.” மருத்துவர்கள் அவளின் இரத்த அழுத்தத்தை முதலில் குறைத்திருந்தால் அவள் குருடாகி விட்டிருப்பாள். அவள் கண்களின் அதிக திரவ அழுத்தம் அவளின் பார்வை நரம்புகளுக்கு இரத்த ஓட்டத்தை தடை செய்திருக்கும்.
சிகிச்சையில் முன்னேற்றங்கள்
கண்விழி விறைப்பு நோயின் சிகிச்சை முறைகள் எல்லாமே கண்மணியின் உள்ளிருக்கும் அழுத்தத்தைக் குறைத்து பார்வை நரம்பு பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. சமீப காலங்களில் இந்தச் சிகிச்சை முறைகளில் மகத்தான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திறந்த கோண கண்விழி விறைப்பு நோய்க்குச் சிகிச்சை முறையாவது, பெரும் பாலும் தினமும் கண் சொட்டு மருந்து உபயோகிப்பதும், முன் கண் ரசம் உற்பத்தியைக் குறைப்பதற்கு அல்லது வெளியேறுதலை அதிகரிப்பதற்கு உள்ளுக்கு மருந்து கொடுப்பதுமாகும். அறுவை சிகிச்சை சில சமயங்களில் தேவைப்படுகிறது. புற நோயளிகளாக வகைப் படுத்தப்படுகிறவர்களுக்கு, ஒரு வித லேசர் சிகிச்சை வடிகட்டுதலை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துகிறது. பெரும்பாலான நோயாளிகளின் விஷயத்தில் 25 சதவிகிதம் அளவுக்கு அழுத்தத்தைக் குறைக்கிறது.
மூடிய–கோண கண்விழி விறைப்பு நோய்க்கு மருத்துவம் தற்காலிகமான விடுதலையைக் கொடுக்கிறது. விழித் திரைப் படலம் திறக்கப்படுதல் என்ற முறையின் மூலம் எப்போதும் அழுத்தம் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறது. இன்று இவை சில நிமிடங்களில் செய்யப்படக்கூடும். கண் மருத்துவர் ஒவ்வொரு கண்ணையும் சொட்டு மருந்து மூலம் மயக்கமடையச் செய்து, சிறிய, ஆனால் தெரியக்கூடிய சிறு ஓட்டைகளை லேசர் மூலம் விழி வெண்படலத்தில் செய்கிறார். எப்போதும் அறுவை நிபுணர் தான் செய்யக்கூடிய முதல் திறப்பிலிருந்து திரவம் வேகமாக வருவதைப் பார்க்கக்கூடும்.
மிக அரிதான கண்விழி விறைப்பு நோயின் மாதிரிகளையும் சிகிச்சை செய்ய விசேஷ அறுவை நுணுக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாளம் சார்ந்த கண் விழி விறைப்பு நோயில் அதிகமான இரத்தக் குழாய்கள் வடிவமான பின்னல் வலையை அடைத்துவிடுகின்றன. கண் அறுவை நிபுணர் லேசரைக் கொண்டு திரவம் உற்பத்தி செய்யும் பகுதியின் ஒரு பாகத்தை அழிக்கிறார் அல்லது பின்னல் வலையைக் கடந்துப் போக திரவத்தை அனுமதிக்கும்படி சின்னஞ்சிறிய குழாய்களை அமைக்கிறார். கேட்காத சப்தம், உறையவைத்தல் அல்லது லேசர் வழிகளை பயன்படுத்தி விழிப்படலத்தின் ஓரங்களை அமைதியற்றிருக்கச் செய்கிறார். குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் காரணமாக தடையாக இருக்கும் இரத்தக் குழாய்கள் சுருங்கும். கண் விழி விறைப்பு நோயாளிகளில் ஒரு சிறிய சதவிகிதமானவர்கள் மட்டுமே குணப்படுத்த முடியாதவர்களாகின்றனர்.
உங்கள் பார்வையை நீங்கள் எப்படி காத்துக் கொள்ள முடியும்
நோய்த்தடுப்பு கவனிப்பு முக்கியமானது. இரண்டு வருடத்துக்கு ஒரு முறை உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். 40 வயதுக்கு மேற்பட்டவராயிருந்தால் உங்கள் வம்சா வழியில் குறைகளிலிருந்தால், சர்க்கரை வியாதி, பார்வை மறைத்தல், கண் பொங்குதல், கிட்டப் பார்வை இரத்தக் குழாய் வியாதிகள், கண்விழி விறைப்பு நோய் போன்ற குறைகளிலிருந்தால் வருடத்துக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளுதல் அவசியம்.
நோய்க்குறிகளை கவனிப்பதை எளிதான காரியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடனடியாக கண் மருத்துவரை பார்க்க வேண்டும்.
இரண்டாவது அபிப்பிராயம் பெற்றுக்கொள்ள வேண்டும். சந்தேகமிருந்தால் நண்பர்களுக்கு தெரிந்த கண் மருத்துவர்களைப் பற்றியும், நவீனமான கருவிகளை இந்த மருத்துவர்கள் வைத்திருக்கிறார்களா என்பதையும் அவர்களின் பரிசோதனை முறை முழுமையானதா என்பதையும் கேளுங்கள்.
கண்விழி விறைப்பு நோய் உங்களுக்கு உள்ளது என்று நோய் நிர்ணயம் தெரிவிக்கிறதா? உங்கள் மருத்துவரின் ஆலோசனைகளை கவனமாக பின்பற்றுங்கள். கண்விழி விறைப்பு நோயை கட்டுப்படுத்துவது தோல்வியடைய முதன்மையான காரணம், நோயாளி ஆலோசனையை பின்பற்ற தவறுவது தான் என்று ஒரு மருத்துவ பத்திரிகை சொன்னது.
சந்திப்பு திட்டத்தை தவறவிடாதீர்கள். கண்விழி விறைப்பு நோயாளிகள் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சோதிக்கப்படவேண்டும் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் கண்கள் இந்த நேரத்தில் அதிக மாற்றத்துக்குள்ளாகக்கூடும். மேலுமாக, அநேக ஆட்களுக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு இந்தச் சொட்டு மருந்துகள் வேலை செய்வதில்லை. அடிக்கடி புதிய மருந்தினை மாற்ற வேண்டியுள்ளது.
மருந்துகளை ஏற்பதைக் குறித்து உண்மையுள்ளவர்களாயிருங்கள். முடிவு தேதி கடந்தவைகளை உபயோகிக்காதீர்கள். நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளைக் குறித்து மருத்துவரிடம் சொல்லுங்கள். விசேஷமாக இருதய நோயிருந்தால். கண்விழி விறைப்பு நோயிருப்பது, கண் மருத்துவரின் பெயர், மருந்துகளின் பெயர், மருந்துகள் உட்கொள்ளும் அளவு இவைகள் குறித்த அட்டையை எப்போதும் எடுத்துச் செல்லுங்கள்.
நினைவில் வைக்கவும்: என்ன செய்யப்பட வேண்டும் என்று நாம் தெரிந்துகொண்டிருந்தால், மேலும் நம்மை காத்துக்கொள்வதில் ஊக்கமுள்ளவர்களாக இருந்தால், கண்விழி விறைப்பு நோய் பெரும்பாலும் தோற்கடிக்கப்படக்கூடும். (g88 5⁄8)
[பக்கம் 15-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பின் கண் ரசம்
முன் கண் ரசம்
கண்மணி
விழி வெண்படலம்
விழித் திரைப் படலம்
விழி லென்ஸ்
சிலியா தசைகள்
பார்வை பீடம்
விழித் திரை
விழி வெளிப் படலம்
[பக்கம் 17-ன் படம்]
கண் மருத்துவர் கண்விழி விறைப்பு நோய்க்காக பரிசோதனை செய்கிறார்