உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 11/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கண்கெடும் முன்!
  • இனிய கனவின் எதிரி!
  • மூளையை புகழ்வதா முயற்சியை புகழ்வதா?
  • தீ வைத்த காகம்
  • துப்பாக்கி ‘எடுப்பவன்’ துப்பாக்கியால்!
  • “ஆமைகளின் ஹைவே”
  • பெருகும் குழந்தை போராளிகள்
  • வயதானவர்களும் ‘வலை’யில்
  • எய்ட்ஸ்—நோய்களில் நெ.1
  • டென்ஷன் அம்மா—டென்ஷன் பாப்பா
  • கிளாக்கோமா—பார்வையைப் பறிக்கும் திருடன்
    விழித்தெழு!—2004
  • கண்விழி விறைப்பு நோய் பார்வையை தந்திரமாக மறைத்திடும் கள்வன்!
    விழித்தெழு!—1989
  • எய்ட்ஸ் அதற்குத் துக்ககரமாக பலியாகும் குழந்தைகள்
    விழித்தெழு!—1992
  • எய்ட்ஸ் நோய்க்கடத்திகள்—எத்தனை பேர் மரிக்கக்கூடும்?
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 11/22 பக். 28-29

உலகை கவனித்தல்

கண்கெடும் முன்!

“2,00,000 கனடா நாட்டவர்களுக்கு கிளாக்கோமா (கண் அழுத்த நோய்) உள்ளது. ஆனால் இந்நோய் தங்களுக்கு இருக்கிறது என்ற உண்மை பாதிபேருக்குத்தான் தெரியும்” என்கிறது தி பிரின்ஸ் ஜார்ஜ் சிட்டிசன் செய்தித்தாள். இந்த கிளாக்கோமா என்ற நோய், கண்ணுக்கு பின்புறம் உள்ள செல்களை மெல்ல அழித்துவிடுவதால், குருடாவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. இதனால் மெல்ல மெல்ல பக்க பார்வை (peripheral vision) குறையும். இந்நோய் முற்றும்போது நேர் பார்வையும் (central vision) போய்விடும். இந்நோயால் பாதிக்கப்படும் பலர் மருத்துவம் பார்ப்பதில்லை. ஏனென்றால் இதனால் வலி ஏதும் இருக்காது. அதோடு வாகனம் ஓட்ட முடியும், படிக்க முடியும், பெரும்பாலான வேலைகளை செய்ய முடியும். வயதானவர்களுக்கும், பரம்பரையில் இந்நோய் உள்ளவர்களுக்கும், 40 வயதுக்கு மேலான கருப்பு இனத்தவர்களுக்கும், கண்ணில் உயர் அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்நோய் பீடிக்கும் அபாயம் அதிகம் என்கிறது கனடா நாட்டின் கிளாக்கோமா ரிசர்ச் சொஸைட்டி. “பெரும் அபாயத்தில் இருக்கும் மக்களில் பாதிபேராவது தங்களுடைய டாக்டரிடம் சென்றால், [குருடாவதை] பாதிக்கு பாதி தடுத்துவிடலாம். முன்கூட்டியே நோயை கண்டுபிடித்து மருத்துவம் செய்தால் பார்வையை காப்பாற்றிவிடலாம்” என்கிறார் டாக்டர் நீரு குப்தா. இவர் டோரான்டோவிலுள்ள செயின்ட். மைக்கேல் மருத்துவமனையில் கிளாக்கோமா பிரிவில் டைரக்டராக இருக்கிறார்.

இனிய கனவின் எதிரி!

72 சதவிகித இத்தாலிய மக்கள், அதாவது நான்கு கோடிக்கு மேலானோர், பகலில் பேரிரைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று இத்தாலி நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறுகிறது. இவ்வாறு அதிக நேரம் பயங்கர சத்தத்திற்கு ஆளாகும்போது தீய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதய துடிப்பு அதிகரிப்பு, தமனி அழுத்தங்களில் வேறுபாடு, மூச்சு இரைப்பு கோளாறு, இரைப்பை வீக்கம், தலைசுற்றல், வாந்தி ஆகியவை ஏற்படும் என்று கொரீரே டேல்லா செரா என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. பெரிய நகரங்களில் வாகனங்களால் ஏற்படும் இரைச்சல், சாதாரண தூக்கத்தையும் கெடுக்கிறது. நகர்புறங்களில் இரவு நேர இரைச்சலை கணக்கிட்டால் அது, 70 டெசிபெல்லுக்கு மேல் உள்ளது. அது ஆழ்ந்த தூக்கத்தை கெடுத்து, கனவையும் கெடுத்துவிடும். லேகம்பைன்டெ என்ற இத்தாலிய சுற்றுச்சூழல் அமைப்பின் சயன்டிபிக் டைரக்டராக இருக்கும் லூஸியா வான்டியுரி இவ்வாறு கூறுகிறார்: ‘பெரும் நகரங்களில் வாழும், 1.8 கோடி மக்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இரவும் 30 நிமிட தூக்கம் கெடுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது, அப்படியென்றால் ஒவ்வொரு நபருக்கும் வருடத்திற்கு 22 நாட்கள் தூங்காத இரவுகள்.”

மூளையை புகழ்வதா முயற்சியை புகழ்வதா?

பிள்ளைகளின் அறிவை புகழுதல் நல்லது என்று பெற்றோர்கள் பலர் நினைக்கிறார்கள். ஆனால், இவ்வாறு புகழ்வது, பிள்ளைகளின் ஊக்கத்தையும், எதிர்கால செயல்திறனையும் பாதிக்கும் வாய்ப்பிருப்பதை புதிய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுவதாக அறிவிக்கிறது நியூயார்க்கின் கொலம்பியா யுனிவர்சிட்டியின், கொலம்பியா மெகஸின். ஆகவே, பிள்ளைகளின் கடின உழைப்பை புகழ்வது நல்லது. அது வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்குத் தேவையான திறனை அதிகரிக்கும் என்கிறார் பேராசிரியை காரெல் டிவெக். “பிள்ளைகளின் அறிவை புகழும்போது, மற்றவர்களைவிட ஸ்மார்ட்டா காட்டிக்கொள்ளவே முழு கவனத்தையும் செலுத்துகிறார்கள். இப்படி புத்திசாலியாக தோன்றுவதற்காக, கற்கவேண்டிய முக்கிய விஷயத்தை கோட்டைவிடுவார்கள்” என்கிறார் டிவெக். ஆனால், பிள்ளைகளின் உழைப்பை புகழும்போது, “விடாமுயற்சி” என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் வாழ்வார்கள். அநேகமாக அவர்கள் கற்பதிலும், தோல்வியை சரிசெய்வதிலும் தங்களது கவனத்தை செலுத்துவார்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “ஆகவே, இத்தகைய பிள்ளைகள் கற்கவேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் என்ற பட்டத்தை தியாகம் செய்துவிடுவார்கள். எதையும் தாங்கும் [இதயம்] படைத்தவர்களாய், தோல்வி கண்டு துவண்டுவிட மாட்டார்கள்” என்கிறார் டிவெக்.

தீ வைத்த காகம்

ஜப்பானில் காமாஸ்ஷி என்ற இடத்தில் நடந்த இரு தீ விபத்துக்களில் காகங்கள் தீ வைத்திருக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. கல்லறைக்கு பக்கத்தில் உள்ள புதர்களில் தீப்பிடித்தது. அதை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள், காகங்களால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்பதற்கு ஆதாரத்தை கண்டெடுத்தனர். செய்தித்தாள் நைக்கா ஷிம்பான் தரும் விளக்கம்: “கல்லறைக்கு முன் படைக்கப்பட்ட கேக்குகளை காகங்கள் தூக்கிக்கொண்டு சென்றன. கொஞ்சநேரத்திற்குள், அவை பறந்து சென்ற திசையில் நெருப்பு பிடித்தது. கல்லறையில் கொளுத்தி வைத்திருந்த சில ஊதுவர்த்திகளும் காணவில்லை. தீ மூண்ட இடத்தில் மெழுகுவர்த்திகள் கிடைத்தன. அநேகமாக காகங்கள்தான் கீழே போட்டிருக்கும்.” இது நடத்து ஒருவருடத்திற்கு பிறகு, அதே இடத்தில் மலைப்பக்கத்தில் மறுபடியும் தீ மூண்டதை டெய்லி யோமீயுரீ செய்தித்தாள் குறிப்பிட்டது. அங்கேயும் தீயணைப்பு வீரர் ஒருவர், எரிந்துகொண்டிருக்கும் அட்டைப்பெட்டியை காகம் ஒன்று தூக்கிக்கொண்டு போய், பக்கத்தில் உள்ள ஆற்றில் போடுவதை பார்த்தார். தீ மூண்ட இடத்திற்கு பக்கத்தில் எரிந்துபோன அட்டைப்பெட்டி இருந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தார்கள். தீ வைத்த காகங்களுக்கு தீவட்டி எங்கே கிடைத்திருக்கும்? பக்கத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில், நெருப்பு சட்டியில், காலியான உருளைக்கிழங்கு சிப்ஸ் பெட்டிகளை கொளுத்தியிருக்கிறார்கள்.

துப்பாக்கி ‘எடுப்பவன்’ துப்பாக்கியால்!

“காரில் மக்களை கடத்தும் கயவர்கள், தற்காப்புக்காக துப்பாக்கி வைத்திருப்போரை, துப்பாக்கி இல்லாதவர்களைவிட நான்கு மடங்கு அதிகம் கொல்கிறார்கள்” என்கிறது தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் நெட்டல் விட்னஸ். “தற்காப்புக்காக துப்பாக்கிகளை வைத்திருந்து, அவற்றை உபயோகிக்க கிடைக்கும் வாய்ப்பைவிட, அவற்றை கொள்ளையர்கள் பறிக்கும் வாய்ப்பே நான்கு மடங்காக இருந்தது” என்று மேலும் அவ்வறிக்கை கூறியது. போலீஸ் நிலயத்திலுள்ள பதிவை ஆராய்ந்தபோது, 12 சதவிகித கடத்தல் கேஸ்களில், கடத்தல்காரர்கள் தாங்கள் கடத்தியவர்களை சுட துப்பாக்கியை பிரயோகித்திருக்கிறார்கள். ஆனால் மீதி 73 சதவிகித கேஸ்களில், கடத்தப்பட்ட நபர்கள் தங்களை காத்துக்கொள்ள துப்பாக்கிகளை எடுத்தபோது, கடத்தல்காரர்கள் துப்பாக்கியை பிரயோகித்துள்ளனர். ஆகவே, ஆராய்ச்சியாளர் ஆன்டனி ஆல்ட்பெக்கர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்: “துப்பாக்கி இருந்தால் நீங்கள் வேண்டுமென்றால் பாதுகாப்பாக உணரலாம். ஆனால் உண்மையில் அது பாதுகாப்பு அல்ல.”

“ஆமைகளின் ஹைவே”

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அஷேன்சியன் குட்டி தீவுக்கு, 10,000 பச்சைநிற ஆமைகள் குஞ்சு பொரிப்பதற்காக வருடந்தோறும், டிசம்பர் மாதம் வருகின்றன. பிரேசிலில் உள்ள ரெசிபி என்ற நகரின் கடலோரமே இந்த ஆமைகள் உணவுத்தேடி வசிக்கும் பகுதி. இப்பகுதிக்கும் அஷேன்சியன் தீவுக்கும் “ஆமைகளின் ஹைவே” இருப்பதை செயற்கைகோள் தடயத்தின் (satellite tracking) மூலம் பிரிட்டிஷ், இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இதை லண்டனில் வெளியாகும் தி டைம்ஸ் தெரிவிக்கிறது. அவற்றின் இனப்பெருக்க காலம் ஏழு மாதம். அது முடிந்ததும், வந்த வழியே மறுபடியும் பிரேசிலை நோக்கி புறப்படுகின்றன. முதல் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லா ஆமைகளும் ஒன்றாக திரண்டு செல்கின்றன. பிறகு மெல்ல மெல்ல பிரிந்து, அவற்றிற்கு உணவு கிடைக்கும் வசிப்பிடங்களை நோக்கி செல்கின்றன. ஆனால் பொரிந்து வெளியே வரும் ஆமை குஞ்சுகளுக்கு அவ்வளவாக பலம் இருக்காதே, எப்படி அவற்றால் பிரேசில் வரை, அதாவது 2,000 கிலோமீட்டர் தூரம் நீந்தி வர முடியும்? அட்லாண்டிக் பெருங்கடலிலும், கரீபியன் கடலிலும் நீருக்கடியில் உள்ள மின்னோட்டத்தை கண்டு, அதில் மிதந்தபடி, வழியில் அகப்படும் ஜல்லி மீன்களையும், மிதக்கும் நுண்ணுயிரிகளையும் வாயில் போட்டு, சாப்பிட்டப்படி வரும். ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்குப்பின், பிரேசிலை தங்கள் வசிப்பிடமாக ஆக்கிக்கொள்ள அவை ஒவ்வொன்றும் தனி வழிகளை அமைத்துக்கொள்வதாக நம்பப்படுகிறது. சுமார் 20 வயது ஆனதும், அஷேன்சியன் தீவுக்கு இனப்பெருக்கம் செய்வதற்காக ஆமைகள் திரண்டு செல்லும் நீண்ட பயணத்தில் இவை சேர்ந்துகொள்ளும்.

பெருகும் குழந்தை போராளிகள்

“குழந்தை போராளிகளை போர்களில் ஈடுபடுத்தும் செயல் அதிகரித்துள்ளது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் இருந்த 2,50,000 என்ற எண்ணிக்கை, இன்று 30,00,000-ஐ எட்டிவிட்டது” என்று அறிவிக்கிறது கோ பிட்வின் என்ற பிரசுரம். இது ஐக்கிய நாடுகளின், அரசாங்கம் சாரா இணை சேவை நிறுவனம் வெளியிடும் பிரசுரம். இளம் போராளிகள் அல்லது போர்வீரர்கள் உலகம் முழுவதிலும் தற்போது நடைபெறுகிற 30 போர்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு வயதே நிரம்பிய குழந்தைகளும் உண்டு என்பது ஜீரணிக்க முடியாத உண்மை. ஐநா-வின் செகரட்டரி ஜெனரலை சேர்ந்த, குழந்தைகள் மற்றும் ஆயுத போட்டியின் விசேஷ பிரதிநிதி ஓல்ரா உட்டுன்னு. இவர் கூறியதாவது: “கட்டாயப்படுத்தி குழந்தைகளை போரில் ஈடுபடுத்துகிறார்கள். இவர்களை கடத்திக்கொண்டு வந்து அல்லது இரணுவத்தில் சேர்த்து, குழந்தை போர்வீரர்களாக ஆக்குகிறார்கள். பெரியவர்களுக்கு இருக்கும் அதே பகைமை உணர்ச்சியோடு வன்முறையில் ஈடுபட இவர்களை கட்டாயப்படுத்துகிறார்கள்.” பெருகிவரும் குழந்தை போராளிகளின் எண்ணிக்கையை குறைக்க, “போரில் சேர கட்டாய வயது 18 என்று உயர்த்த வேண்டும். இதற்கு குறைந்த வயதில் சேர்த்துக்கொண்டால், போர் குற்றம் என்று அறிவிக்க வேண்டும்” என்ற யோசனையை ஐக்கிய நாட்டு சங்கத்தின் குழந்தைகள் நிதி நிறுவனம் ஆதரிப்பதாக 1998 உண்மைகளும் புள்ளி விவரங்களும் என்ற ஆங்கில பிரசுரம் கூறுகிறது.

வயதானவர்களும் ‘வலை’யில்

“மக்களுடைய புள்ளிவிவரங்களை அளிக்கும் நவீன வெப்சைட்டில், பெரியவர்கள் [50 வயதை அல்லது அதை தாண்டியவர்கள்] முன்பு நினைத்ததைவிட, நிறையவே இன்டர்நெட்டை உபயோகிக்கிறார்கள்” என்று அறிவிக்கிறார் ZDNet நிருபர் மரியா செமினரியோ. இந்த சர்வேயை நடத்தி முடித்த நிறுவனத்தின் பிரஸிடென்ட் டிம். இவர் கூறுகிறார்: “வலைப்பின்னலை [இன்டர்நெட்டை] ஏதோ தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள் மாத்திரம் உபயோகிக்க முடியும் என்ற நிலை மாறி, இதை உபயோகிக்கும் பொது ஜனத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதற்கு இது [சர்வே] சான்று.” உதாரணத்திற்கு, இப்போது அமெரிக்காவில் மாத்திரம் 50 வயதை தாண்டியவர்களில் 40 சதவிகிதத்தினர் ஹோம் கம்ப்யூட்டர்களை வைத்திருக்கிறார்கள். இவர்களில் 70 சதவிகிதத்தினர் வலைப்பின்னலை உபயோகிக்கிறார்கள் என்று தெரியவந்தது.

எய்ட்ஸ்—நோய்களில் நெ.1

“உலகில் உள்ள உயிர்கொல்லி தொற்று நோய்களில் முதலிடம் வகிப்பது எய்ட்ஸ்” என்கிறார் பீட்டர் பையோ. இவர் ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் புரோகிராம் நிர்வாக இயக்குநர். 1997-⁠ல், உலகின் கொடிய உயிர்க்கொல்லி நோய்களின் வரிசையில் எய்ட்ஸ் ஏழாவது இடத்தில் இருந்ததாக சயன்ஸ் பத்திரிகை அறிவிக்கிறது. 1998-⁠ல், மாரடைப்பு (ischemic heart) நோய், மூளை (cerebrovascular) நோய், கடும் ஆஸ்துமா (acute lower respiratory) நோய் ஆகிய தொற்றாத நோய்களை தவிர, மற்ற எல்லா நோய்களையும் எய்ட்ஸ் பின்னுக்கு தள்ளிவிட்டது. ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ்தான் நெம்பர் ஒன் உயிர்க்கொல்லி நோய். அங்கு இது, தொற்றாத நோய்களையும் மிஞ்சிவிட்டது. கடந்த வருடம், ஆப்பிரிக்காவில் மட்டும் சுமார் 18,30,000 பேர் எய்ட்ஸால் உயிர் இழந்தனர். இந்த எண்ணிக்கை மலேரியா வந்து இழந்த உயிர்களைவிட இரு மடங்கு அதிகம். ஆப்பிரிக்கா கண்டத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் உயிர்க்கொல்லி நோய் மலேரியா.

டென்ஷன் அம்மா—டென்ஷன் பாப்பா

கர்ப்பிணி பெண் அதிக டென்ஷனாக இருந்தால், அது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பயங்கரமாக பாதிக்கும் என்று அறிவிக்கிறது நேஷனல் போஸ்ட். இது கனடா நாட்டு செய்தித்தாள். லெக்ஸிங்டன், கென்டிக்கியிலுள்ள, கென்டிக்கி மருத்துவ பல்கலைக்கழகம். இங்குள்ள பாதிக் வாடாவா என்பவர் கூறியதாவது: கர்ப்பப்பையில் இருக்கும் சூழலே “குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தாய் அதிக டென்ஷனாக இருந்தால், குழந்தைக்கு நோய் வரும் அபாயம் அதிகம்.” மேலும் இவ்வாறு டென்ஷனாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு “முழு வளர்ச்சியடையாத குழந்தைகள் பிறக்கும்” வாய்ப்புள்ளது என்கிறது அந்த அறிக்கை. “ரிலாக்ஸா செய்யப்படும் உடற்பயிற்சி கர்ப்பிணி பெண்களின் டென்ஷனை குறைக்க உதவும், அவர்களுடைய இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். அது கர்ப்பப்பையில் குழந்தைக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்” என்று ஆலோசனை தருகிறார்கள் தெற்கு காரோலினாவிலுள்ள, கெலிமசன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்