பைபிளின் கருத்து
நீங்கள் பத்து கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமா?
கடவுளுடைய விரல்கள் கற்பலகையின் மீது எழுதும் போது அது பொ.ச.மு. 1513-ம்a ஆண்டாக இருந்தது. அது முதற்கொண்டு பத்து கற்பனைகள் மனிதர்களால் நகல் எடுக்கப்பட்டு உலகம் முழுவதிலும் பரப்பப்பட்டு வந்திருக்கிறது. இலட்சக்கணக்கானோர் அவைகளை வாசித்திருக்கிறார்கள். அநேகருக்கு மனப்பாடமாக அவைத் தெரியும். ஒருவேளை வேறு எந்தச் சட்ட தொகுப்பும் இப்படிப்பட்ட மிகப் பரவலான கவனத்தைப் பெற்றுக் கொண்டிருக்க முடியாது. 1988-ல் அதனுடைய 3,500-வது ஆண்டுநிறைவில் எழும் கேள்வியானது: நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக பத்து கற்பனைகள் இன்னும் அமுலில் இருக்கின்றதா?—யாத்திராகமம் 20:1–17; 31:18.
அவை யாருக்காக கொடுக்கப்பட்டன?
இஸ்ரவேலர் என்றழைக்கப்பட்ட ஜனத்துக்கு கடவுள் பத்து கற்பனைகளைக் கொடுத்தார். இந்த ஒரு தேசத்திடமே தாம் பேசியதை அவர் தம்முடைய ஆரம்ப வார்த்தைகளில் தெளிவுபடுத்தினார்: “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்பட பண்ணின உன் தேவனாகிய யெகோவா நானே.” பத்து கற்பனைகள் தேசீய சட்ட தொகுப்பின் பாகமாக இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தன என்பதை இது சுட்டிக்காண்பிக்கிறது.—யாத்திராகமம் 20:2.
கிறிஸ்தவர்களுக்குக் கடத்தப்பட்டதா?
ஆனால் பத்து கற்பனைகள் எப்பொழுதும் அமுலிலிருந்து இஸ்ரவேலராக இல்லாதவர்களுக்கும் கூட பொருந்தும் வகையில் எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் இயல்புடையதாய் இருக்கின்றதா? இல்லை, பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு கிறிஸ்தவ சபை அமைப்பாக உருவானபோது இந்தச் சட்டத் தொகுப்பு அதற்குக் கடத்தப்படவில்லை. ஏன்? ஏனென்றால் “கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 10:4) அது எதை அர்த்தப்படுத்துகிறது?
இதை விளக்குவதற்கு 1912-ல் திறந்த வெளியில் உயரம் தாண்டி குதித்தலில் உலக சாதனை 6 அடி 7 அங்குலமாக இருந்தது. எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1987-ல் சாதனை 7 அடி 11 1⁄2 அங்குலமாக இருந்தது. ஆனால் இரண்டு கம்பங்கள் தாங்கி நிற்கும் ஒரு கோலின் மீது ஒரு மனிதனால் எவ்வளவு உயரம் வரை தாண்டி குதிக்க முடியும் என்பதில் இறுதியான ஒரு வரம்பு இருக்க வேண்டும். இந்த வரம்பை சென்றெட்டும் மல்லன் உயரம் குதித்தலில் எல்லா உலக சாதனைகளுக்கும் ஒரு முடிவைக் கொண்டுவருவான். அவனே அவைகளின் “முடிவாயிருப்பதாகவும்”கூட சொல்லப்படலாம். இப்பொழுது பத்து கற்பனைகளுக்கு இது எவ்விதமாக பொருந்தக்கூடும்?
பத்து கற்பனைகளையும் அதோடுகூட 600-க்கும் மேற்பட்ட மற்ற சட்டங்களையும் பிரமாணங்களையும் உள்ளடக்கிய “நியாயப்பிரமாணத்தைக்” கடவுள் திட்டமிட்டு அதை இஸ்ரவேலருக்குக் கொடுத்தபோது, அவர் இறுதியான இலக்கை அல்லது பரிபூரணத்தின் தராதரத்தை வைத்தார். அவர் கோலை, சொல்லப் போனால் உயரமான நிலையில் வைத்தார். இந்தத் தெய்வீக நியாயப்பிரமாணம் ஒழுக்கத்தின் மிக உயரமான தராதரமாக இருந்தபடியால், ஒரு பரிபூரண மனிதனால் மட்டுமே அதை எட்ட முடிந்தது. பிரசங்கி 7:20 சொல்வதாவது: “ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.”
ஆகவே அந்தக் கோல்—கடவுளுடைய நீதியான தராதரம்—அபூரணமான இஸ்ரவேலருக்கு அல்லது யூதர்களுக்குத் தாண்டமுடியாத உயரத்திலிருப்பதாக இருந்தது. ஏன்? கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகிறான்: “வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி [மேசியா அல்லது கிறிஸ்து] வருமளவும் அது [நியாயப்பிரமாணம்] அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்”டிருக்கிறது. (கலாத்தியர் 3:19) நியாயப்பிரமாணத்தின் மூலமாக, யூதர்கள் தங்களுடைய சொந்த கிரியைகளால் நீதிமான்களாக அறிவிக்கப்படும் இலக்கை அடையமுடியாதபடி அவர்கள் அனைவரும் அபூரணமான பாவிகள் என்பதைக் கடவுள் யூதர்களுக்குக் காண்பித்தார்.
அந்தக் கோலை தாண்டக்கூடியவர் ஒருவர் மாத்திரமே இருந்தார்: வர இருந்த வாக்குப்பண்ணப்பட்ட மேசியா அல்லது கிறிஸ்து. ஆகவே எல்லாச் சமயத்துக்குமாக அதைத் தாண்டக்கூடிய கடைசி வீரனுக்காக அல்லது மேசியாவுக்காக எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கையில் அந்த உயர்ந்த தராதரம், குறியாகக் கொள்வதற்குரிய ஒன்றாக யூதர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டது.
“கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிறது”
இதற்கிசைவாக பவுல் கலாத்தியர் மூன்றாம் அதிகாரம் வசனம் 24-ல் தொடர்ந்து சொல்வதாவது: “நாம் [அவர் மேல் வைக்கும்] விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.” பைபிள் காலங்களில் ஓர் உபாத்தி, ஒரு பிள்ளையை அதன் ஆசிரியரிடம் அழைத்துச் செல்பவராகவும் பிள்ளைக்குக் கற்பிக்கவும் அதை சிட்சிப்பவராகவும் இருந்திருக்கக்கூடும்.
பத்து கற்பனைகளும் மற்ற பிரமாணங்களும் இவ்விதமாக மேசியாவுக்காக அவர்களை ஆயத்தம் செய்து அவரிடமாக அழைத்துச் செல்வதாக இருந்தன. இயேசு வந்து, அவர்கள் மத்தியில் வாழ்ந்து, நியாயப்பிரமாணத்துக்கு பரிபூரணமாக கீழ்ப்படிந்தவராக மரித்த போது, அவர் “நியாயப்பிரமாணத்தின் முடிவாயிரு”ந்தார். அப்போது கடவுள் அந்தக் கோலை நீக்கி யூதர்களுக்கு அதைவிட மேம்பட்ட ஒன்றை அளித்தார். இப்பொழுது அவர்கள் கடைசியாக, “இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்க”ப்பட முடியும்.—ரோமர் 3:24.
பவுல் மேலும் சொல்வதாவது: “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்”கிறீர்கள். “ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.”—ரோமர் 6:14; கலாத்தியர் 5:18.
நீங்கள் எதற்குக் கீழ்ப்படிய வேண்டும்
இப்பொழுது கிறிஸ்தவர்கள் “நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள்” அல்ல என்பதால், எல்லா ஒழுக்க கட்டுப்பாடுகளினின்றும் அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டார்களா? நிச்சயமாக இல்லை. பவுல் காண்பித்தபடி கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்கள். அது ஒருவரை பாவத்துக்குள் கொண்டு செல்வதில்லை. பத்து கற்பனைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாவங்களுக்கு விலகியிருக்கும்படியாக அது அவர்களை துரிதப்படுத்துகிறது. உதாரணமாக நீங்கள் 1 கொரிந்தியர் 6:9, 10-ஐ வாசிப்பீர்களேயானால் பத்து கற்பனைகளில் சிலவற்றிற்கு ஒத்திருக்கும் அநேக பல கிறிஸ்தவ சட்டங்களை காண்பீர்கள். அவை விக்கிரகாராதனையையும், விபச்சாரத்தையும் திருட்டையும் இச்சையையும் தடை செய்யும் சட்டங்களாகும்.
பத்து கற்பனைகளுமடங்கிய பழைய சட்டத் தொகுப்பை இந்த இரண்டு கட்டளைகளில் கிறிஸ்து சுருக்கமாகச் சொன்னார்: “உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.” மேலும் “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:37–39, NW) இவைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்க முயற்சி செய்து, குறைவுபடுகையில் மன்னிப்பு கேட்டு, கிறிஸ்துவின் மீட்பில் விசுவாசத்தை அப்பியாசித்தால் கடவுளிடமிருந்து தகுதியற்ற தயவையும் நித்திய ஜீவனுக்காக அவருடைய அங்கீகாரத்தையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.—2 தெசலோனிக்கேயர் 2:16. (g88 5⁄8)
[அடிக்குறிப்புகள்]
a விவரங்களை உவாட்ச் டவர் சொஸையிட்டி பிரசுரித்திருக்கும் Aid to Bible Understanding என்ற புத்தகம், பக்கம் 333-ஐப் பார்க்கவும்.