கை ‘மிக நேர்த்தியான தனி ஆற்றல் படைத்த உறுப்பு’
அது அவசர சிகிச்சையைத் தேவைப்படுத்துவதாயிருந்தது. அந்த இளம் பெண் மருத்துவமனை நுழைவாயிலில் கிடந்தாள். மோட்டார் கைக்கிள் விபத்து ஒன்றில் அவளுடைய வலது காலின் முக்கிய தமனி துண்டிக்கப்பட்டுவிட்டிருந்தது. காயத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்த அறுவை மருத்துவக் கருவி எதுவும் கைவசமிருக்கவில்லை. மருத்துவர் என்ன செய்யக்கூடும்?
“நான் என்னுடைய கையை ஒரு பற்றுக் கருவியாக பயன்படுத்தினேன்,” என்பதாக கைகள் (Hands) என்ற தன்னுடைய புத்தகத்தில் பேராசிரியர் நேப்பியர் நினைவுபடுத்தி எழுதுகிறார். எவ்வளவு நன்றாக முடியுமோ அவ்வளவு நன்றாக கட்டை விரலாலும் ஆட்காட்டி விரலாலும் பற்றிக் கொண்டு அதை நிறுத்தினேன். கடைசியாக அங்கு கிடைத்த நூல் துண்டினால் தமனியைச் சுற்றிக் கட்டினேன். இரத்தம் பாய்வது நின்றது. . . . கைகளைத் தவிர வேறு எதுவும் அந்த அவசர நிலையை அத்தனை வேகமாகவும் திறமையாகவும் சமாளித்திருக்க முடியாது. அறுவை சிகிச்சையின் போது பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்ட விரல் எவ்விதமாக உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது என்பதை . . . வெகு சில நோயாளிகள் மட்டுமே உணருகின்றனர்.”
இப்படிப்பட்ட செயல்களைக் கட்டைவிரலின் சேண மூட்டின் உதவியில்லாமல் செய்வது கூடாத காரியமாகும். (படத்தைப் பார்க்கவும்.) அதன் வடிவமைப்பு, தோள்பட்டையிலுள்ள பந்துக் கிண்ண மூட்டைப் போலவே, அசைவுகளை அனுமதிக்கிறது. ஆனால் பந்துக் கிண்ண மூட்டைப் போலில்லாமல் சேண மூட்டுக்கு சுற்றியுள்ள தசை பிண்டங்களின் ஆதரவு தேவையில்லை. ஆகவே கட்டை விரலால், விரல் நுனிகளைச் சந்திக்கையில் மிக நுட்பமான செயல்களை செய்து முடித்திட முடிகிறது.
உங்கள் கட்டைவிரலை பயன்படுத்தாமல் ஒரு சிறிய பொருளை கையிலெடுக்க முயற்சி செய்து பாருங்கள். தென் ஆப்பிரிக்க மருத்துவர் ஒருவர் சொன்னதாவது: “அநேக நோயாளிகளின் காயமடைந்த கட்டை விரலுக்கு நான் கட்டுப் போட்டு அனுப்பியிருக்கிறேன். ஆனால் நோயாளிகள் திரும்ப வரும் போது, கட்டை விரல் தங்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை எண்ணிப் பார்த்ததேயில்லை என்று பொதுவாக என்னிடம் சொல்கிறார்கள்.”
எந்தப் பொருளுக்கும் எதிராக வைக்கப்படக்கூடிய கட்டைவிரலைக் கொண்ட மனித கை குறிப்பிடத்தக்க வகையில் எத்திசையிலும் இயங்குகின்ற ஒரு கருவியாகும். கை இல்லாவிட்டால், நீங்கள் எப்படி ஒரு கடிதம் எழுதுவீர்கள், நிழற்படம் எடுப்பீர்கள், ஓர் ஆணி அடிப்பீர்கள், தொலைப் பேசியை பயன்படுத்துவீர்கள் அல்லது ஊசியில் நூலைக் கோத்திடுவீர்கள்? கையிருப்பதால்தானே பியானோ வாசிப்பவர்கள் மிக நேர்த்தியான இசைப் பாடலை அதில் வாசிக்கவும், ஓவியர்கள் அழகிய படங்களைத் தீட்டவும், அறுவை மருத்துவர்கள் மிக நுட்பமான அறுவை சிகிச்சைகளைச் செய்யவும் முடிகிறது. “குரங்கினத்துக்கு இருக்கும் குட்டையான கட்டை விரலும் நீளமான விரல்களும் கைப்பழக்கத்தின் சம்பந்தமாக இடைஞ்சலாக இருக்கின்றது,” என்கிறது தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா.
மனிதனுடைய கைக்கும் குரங்கினுடையதற்கும் மற்றொரு முக்கியமான வித்தியாசமிருக்கிறது. மனித மூளையில் நான்கில் ஒரு பங்காக இருக்கும் செய்கை கார்டெக்ஸ் என்ற சாம்பல் நிற அடுக்கு உங்கள் கைகளின் தசைகளுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ உடலியல் பாடபுத்தகம் (Textbook of Medical Physiology) என்ற புத்தகத்தில் பேராசிரியர் கைட்டன், மனித செய்கை கார்டெக்ஸ், “கீழ்த்தரமான மிருகங்களினுடையதைவிட வெகுவாக வித்தியாசப்பட்டது” என்பதாகவும் “வெகுவாக கைத்திறமை தேவைப்படும் வேலைகளைச் செய்து முடிக்க கையையும் விரல்களையும் கட்டை விரலையும் பயன்படுத்த தனிச் சிறப்பு வாய்ந்த திறமை”யைக் கூடிய காரியமாக்குகிறது என்பதாகவும் விளக்குகிறார்.
மேலுமாக மனித நரம்பியல் வல்லுநர்கள் மனித மூளையில் “கைத் திறமைக்கான ஒரு பகுதி” என்று அவர்கள் அழைக்கும் மற்றொரு பகுதியைக் கண்டுப்பிடித்திருக்கிறார்கள். திறம்பட்ட கைகளுக்கு உணர்ச்சி நரம்பு முடிச்சுகள் தேவையாகும். இந்தச் சிறிய நரம்பு முடிச்சுகள், மனித கையில் விசேஷமாக கட்டை விரலில் ஏராளமாக உள்ளன. விழித்தெழு! பேட்டிக் கண்ட ஒரு மருத்துவர் இவ்விதமாகச் சொன்னார்: “மனிதர்கள் தங்கள் கட்டைவிரலின் நுனியில் கொஞ்சம் உணர்ச்சியை இழந்துவிட்டாலும்கூட அவர்கள் திருகு போன்ற சிறிய பொருட்களை சரியான இடத்தில் பொருத்துவதை கடினமாக காண்கிறார்கள்.” கும்மிருட்டிலும்கூட சரியான இடத்துக்கு உங்கள் கைகளை நகர்த்தும் மற்ற வகையான உணர்ச்சி நரம்பு முடிச்சுகளும் உங்கள் மேற்கைக்கு இருக்கின்றன. இதன் காரணமாகவே இரவில் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கையில், உங்கள் மூக்கை குத்திக் கொள்ளாமலே அதை சொறிந்துவிட முடிகிறது.
ஒரு டம்ளர் தண்ணீரை எடுக்க கையை நீட்டுவது போன்ற எளிய ஒரு செயலும்கூட விந்தைக்குரியதாக உள்ளது. உங்கள் பிடிப்பு மிகவும் பலவீனமாக இருந்தால் நீங்கள் டம்ளரை கீழே போட்டுவிடக்கூடும். உங்கள் பிடிப்பு மிகவும் இறுக்கமாக இருந்தால் நீங்கள் அதை உடைத்து உங்கள் விரல்களை வெட்டிக் கொள்ளலாம். சரியான அழுத்தத்தோடு அதை எப்படி உங்களால் பற்றிக் கொள்ள முடிகிறது? உங்கள் கையிலுள்ள, அழுத்தம் நரம்பு முடிச்சுகள் உங்கள் மூளைக்குச் செய்திகளை அனுப்புகிறது. இது, மறுபடியும், நீட்டப்பட்டுள்ள உங்கள் மேற்கையிலும் கையிலுமுள்ள தசைகளுக்குப் பொருத்தமான உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது.
சீக்கிரத்தில் நீங்கள் பார்க்கவேண்டிய அவசியமில்லாமலே டம்ளர் உங்கள் உதட்டின் மீது மென்மையாக பதிந்துவிடுகிறது. இதற்கிடையில் உங்கள் கவனம் தொலைக் காட்சி நிகழ்ச்சியிலோ அல்லது நண்பர்களிடம் பேசுவதிலோ ஊன்றியிருக்கலாம். “டம்ளர் உங்கள் முகத்தில் வந்து மோதாமல் உதட்டுக்கு உயர்த்தப்படும் உண்மைதானே, விரித்து நீட்டப்பட்ட உங்கள் கையின் கூர்மையான எடை பற்றிய உணர்வுக்குப் புகழ் மாலையாக இருக்கிறது. டம்ளரின் எடை குறையும் போது டம்ளர் வாயிலேயே இருப்பது செய்தி எத்தனை துல்லிபமாக அனுப்பப்படுகிறது என்பதைக் காண்பிக்கிறது,” என்று ஆய்வுக்குரிய உடல் (The Body in Question) என்ற தன்னுடைய புத்தகத்தில் டாக்டர் மில்லர் குறிப்பிடுகிறார்.
மனித கையானது ஆலோசிக்கும் திறம்படைத்த ஆட்களை வியப்படையச் செய்திருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை! “வேறு எந்த ஒரு சான்றும் இல்லாத நிலையில் கடவுள் இருப்பதை என்னை நம்பச் செய்வதற்கு கட்டைவிரல் மாத்திரமே போதுமானது,” என்பதாக பிரபல விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் எழுதினார். “நம்மால் மனிதனைச் சந்திரனில் இறங்கச் செய்ய முடியும். ஆனால் நம்முடைய எல்லா இயந்திரயியல் மற்றும் மின்அணுவியலின் விந்தைச் செயல்கள் மத்தியிலும், உணரவும் அதே சமயம் அழைக்கும் அடையாளம் காட்டவும் முடிகின்ற ஒரு செயற்கை கையை நம்மால் உண்டு பண்ண முடியாது” என்பதாக பேராசிரியர் நாப்பியர் சொல்கிறார். மனிதனுடைய கை “மிகவும் நேர்த்தியான திறமையுள்ள உயிரியல் உறுப்பு” என்றும் மற்ற எல்லா பால் குடி உயிரின தொகுதியிலிருந்து அவனை வேறுபடுத்திக் காண்பிக்கும்” ஒன்றாகவும் இருப்பதாக தி நியு என்சைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. (g88 6⁄8)
[பக்கம் 5-ன் படங்கள்]
கட்டைவிரலின் சேணமூட்டை விரல்களின் அதற்கொப்பான மூட்டுகளோடு ஒப்பிடுகையில் தனிச் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது
[பக்கம் 6-ன் படங்கள்]
விரல்களுக்கு நேர்முகமாய்த் தன்னை அமைத்து செயல்படவல்ல கட்டைவிரலைக் கொண்ட மனித கை குறிப்பிடத்தக்க வகையில் எத்திசையிலும் இயங்குகின்ற ஒரு கருவியாகும்
[பக்கம் 6-ன் படங்கள்]
உங்கள் கையிலும் மேற்கையிலுமுள்ள உணர்ச்சி நரம்பு முடிச்சுகள், சிக்கலான செயல்களைப் பொருத்தமாக இணைக்க உங்கள் மூளைக்கு உதவுகிறது