இளைஞர் கேட்கின்றனர் . . .
கிறிஸ்தவ கூட்டங்கள் ஏன் அவற்றிற்குப் போக வேண்டும்?
“என்னுடைய பெற்றோர் என்னைச் சர்ச்சுக்குப் போகச் செய்தார்கள்” என்கிறான் சூரினாம் தேசத்திலுள்ள கிறிஸ்டியான் என்ற ஓர் இளைஞன். “வீட்டில் இருந்துவிடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் மழைப் பெய்ய வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பேன்.” அவன் மென்மையாக சிரித்துக் கொண்டே “ஆனால், திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மாத்திரமே மழை பெய்வதுபோல் இருந்தது” என்று சொல்கிறான்.
“விரைவில் எனக்குச் சர்ச் ஆராதனைகள் போதுமென்றாகிவிட்டது. அதிலிருந்து வெளியேற ஒரு வாய்ப்பை நான் கண்ட போது, அதை பிடித்துக் கொண்டேன்.”
கிறிஸ்டியான் நிச்சயமாகவே ஒரு விதிவிலக்கல்ல. உலகம் முழுவதிலும் குருமார், மத சம்பந்தமான ஆராதனைகளில் இளைஞர்களுக்கு அக்கறையில்லாதிருப்பது குறித்து வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள். பசிபிக் தீவாகிய டோங்காவிலுள்ள ஒரு திருச்சபை குரு சைமோட் வீயா சொல்வதாவது: “சர்ச்சுக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை . . . குறைந்துக் கொண்டே போகிறது.”
ஆனால் முக்கிய சர்ச்சுகள், இளைஞர்களை கவர்ந்திழுப்பதில் தோல்வியுறுவது ஏன்? சர்ச்சுகளின் உலக குழு உறுப்பினர் லாரீன் டெவி ஒப்புக் கொள்வதாவது: “மிகவும் முக்கியமானத் தேவை கல்வியாகும் . . . இறைமையியல் கல்வி அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதை சர்ச்சுகள் கற்றுக் கொள்ள வேண்டும்.”
“அதுவே சரி” என்று கிறிஸ்டியான் ஒப்புக் கொள்கிறான். “அநேக இளைஞர்கள் தெளிவான பைபிள் கல்விக்காக ஆவலுள்ளவர்களாயிருக்கின்றனர். என்றபோதிலும், அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, சர்ச்சுகள் பழைய சடங்குகளிலேயே ஒன்றிப் போயிருக்கின்றன.” 13 வயது ஆனி மேலுமாகச் சொல்கிறாள்: “சர்ச்சில் பாடல்கள் அதிகமாகவும் படிப்பு குறைவாகவும் இருக்கின்றது.” 18 வயது பார்பரா அதேவிதமாகவே சர்ச்சில் கல்வி குறைவுப்படுவதைக் குறித்து வருத்தப்பட்டுக் கொண்டாள். “ஒரு நாள் கோடுகளைக் கொண்ட இயேசுவின் படத்தை பாதிரி என்னிடம் கொடுத்து அதற்கு வர்ணம் தீட்டச் சொன்னார். அது தான் அன்றைய ஆராதனையாக இருந்தது” என்று அவள் நினைவுபடுத்திச் சொல்கிறாள்!
அப்படியானால் அநேக இளைஞர்கள் சர்ச் ஆராதனைகளைக்குறித்து ஏமாற்றமடைந்திருப்பதுக் குறித்து ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் இது மத சம்பந்தமான எல்லாக் கூட்டங்களுமே நேரத்தை வீணாக்குவது என்று அர்த்தமாகுமா? இதற்கு எதிர் மாறாக, இங்கே குறிப்பிடப்பட்ட எல்லா இளைஞர்களும் மத சம்பந்தமான கூட்டங்களுக்கு மறுபடியுமாக போக ஆரம்பித்து விட்டார்கள்! காரணம்? ஐ.மா. கத்தோலிக் என்ற பத்திரிகை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிவித்ததை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்: “பெரும்பாலான கத்தோலிக்க திருச்சபை வட்டாரங்கள் ஒரு வருடம் முழுவதிலும் கொடுக்கும் கல்வியைவிட அதிகத்தை . . . எந்த ஒரு ராஜ்ய மன்றமும் ஒரே மாதத்தில் அளித்துவிடுகிறது.”
ராஜ்ய மன்றங்கள்—புத்துயிரளிக்கும் வகையில் வித்தியாசமானவை
ராஜ்ய மன்றங்கள்? ஆம் இவை இந்தப் பத்திரிகையை விநியோகிப்பவர்களாகிய யெகோவாவின் சாட்சிகள் கூடும் இடங்களாகும். சூரினாம் தேசத்தில் செய்யப்பட்ட சுற்றாய்வு ஒன்று, அங்கு கூட்டங்களுக்கு வரும் ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் 12-க்கும் 20-க்கும் இடைப்பட்ட வயதினர் என்பதைக் காண்பித்தது! இதுவே மற்ற அநேக தேசங்களிலும் உண்மையாயிருக்கிறது—ராஜ்ய மன்றங்களில் நடைபெறும் கிறிஸ்தவக் கூட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் ஆஜராயிருக்கின்றனர்.
அங்கு நடைபெறும் கூட்டங்கள் தன்னை ஏன் கவர்ந்தது என்பதை கிறிஸ்டியான் விளக்குகிறான்: “பைபிள் எவ்வளவு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் கண்ட போது அது என்னைக் கவர்ந்தது. சொல்லப்பட்ட அனைத்துக்கும் அதிலிருந்து ஆதாரம் காண்பிக்கப்பட்டது. கூட்டங்கள் பள்ளியைப் போல இருந்தன!” ஆம், ராஜ்ய மன்றத்தில் வாசிப்பதிலும் போதிப்பதிலும் பைபிளைப் பொருத்துவதிலும் கிறிஸ்தவர்களைப் பயிற்றுவிக்கும் ஐந்து வாராந்தரக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அங்கு நடைபெறும் கூட்டங்கள், சர்ச் ஆராதனையிலிருந்து புத்துயிரளிக்கும் வகையில் வித்தியாசமாயிருப்பதை நீ காண்பாய்.
இருந்தாலும், அநேக இளைஞர்கள் எந்த வகையான ஒரு பள்ளியைப் பற்றிய எண்ணத்தையும் விரும்பாதவர்களாக இருக்கின்றனர். கிறிஸ்தவப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளும்கூட கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போற்றுதலை இழந்து அவை ‘சலிப்பாயிருப்பதாக’, ‘நீளமாக’ இருப்பதாக குறைகூறி அல்லது தொலைக்காட்சியைப் பார்ப்பது போன்ற வேறு காரியங்களைச் செய்வது அதிக சுவாரசியமாக இருப்பதாக சொல்லக்கூடும். அப்படியென்றால் கிறிஸ்தவ கூட்டங்களில் ஆஜராயிருக்க ஓர் இளைஞன் பொழுதுபோக்கிலிருந்தும் பள்ளி வேலையிலிருந்தும் ஏன் நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்?
கூட்டங்கள்— “விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்க” ஒரு கருவி
அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு சமயம் “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” என்பதாக எழுதினான். (எபிரெயர் 11:6) இதன் காரணமாக அவன் “விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாய்” நிலைத்திருக்கும்படி கிறிஸ்தவர்களைத் துரிதப்படுத்தினான். (தீத்து 2:2) இந்தப் புத்திமதி இன்று இளைஞர்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதா? நிச்சயமாகவே இருக்கிறது! 15 வயது பெண் ஒருத்தி இவ்விதமாகச் சொல்கிறாள்: “இளைஞர்களுக்கே வாழ்க்கை அதிக கடினமாக இருக்கிறது என்பதாக நான் சில சமயங்களில் யோசிப்பதுண்டு. வேசித்தனஞ் செய்யும், போதை மருந்து எடுக்கும், குடிக்கும் ஆட்களைச் சுற்றி நாங்கள் இருக்கிறோம்.” உடன் கிறிஸ்தவர்களிடமிருந்து ‘உன்னையே நீ பிரித்துக் கொள்வதன்’ மூலம் இந்த சக்தியுள்ள செல்வாக்குகளை நீ எதிர்த்திட முடியுமா? (நீதிமொழிகள் 18:1) நிச்சயமாக முடியாது.
ஆகவே கிறிஸ்தவ கூட்டங்கள் இன்றியமையாத ஒரு தேவையை பூர்த்தி செய்கின்றன. அவை “விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ள”வனாய் நிலைத்திருக்கும்படி உனக்கு உதவி செய்கின்றன! இரண்டாவது நூற்றாண்டு விசுவாசியான டெட்ரூலியன் சொன்னதாவது: “எங்கள் பரிசுத்த எழுத்துக்களை வாசிப்பதற்காக நாங்கள் ஒன்றுகூடி வருகிறோம் . . . பரிசுத்த வார்த்தைகளைக் கொண்டு எங்கள் விசுவாசத்தை பேணி வளர்க்கிறோம்.” அதேவிதமாகவே இன்று ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்கள் ‘உங்கள் விசுவாசத்தை பேணி வளர்த்து’ உங்களைப் பலப்படுத்தக்கூடும். அப்படியென்றால் கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு கட்டளைக் கொடுக்கப்பட்டிருப்பதுக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக் கடவோம், . . . சிலர் செய்வது போல நாமும் நம்முடைய கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடாதிருப்போமாக.”—எபிரெயர் 10:23–25, புதிய ஆங்கில பைபிள்.
கூட்டங்கள்—மகிழ்ச்சி தருவதாயும் கவர்ச்சியாயும் இருப்பவை
ஆனால் வெகுவாக முன்னேறியுள்ள இந்தத் தொழில் நுணுக்க சகாப்தத்தில், அநேக இளைஞர்கள் வெறுமென கற்பிக்கப்படுவதை அல்ல, ஆனால் மகிழ்விக்கப்படுவதை எதிர்பார்க்கிறார்கள். ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்கள் விரிவான மேடை படைப்புகள் அல்ல என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஆனால் இது நிகழ்ச்சி நிரல் சுவையற்றது, சுவாரஸ்யமற்றது என்பதை அர்த்தப்படுத்தாது. இதைச் சிந்தித்துப் பாருங்கள்: ஓர் உணவை அனுபவித்து உண்ணும்படிச் செய்வது எது? சத்துள்ள பல்வகையான உணவை மனோகரமான சூழ்நிலையில் மனதுக்குப் பிடித்த தோழர்களோடு உண்பதுதான் அல்லவா? ஆம், அனுபவித்துக் களிப்பதற்கு இந்தத் தேவைகளை நிச்சயமாகவே கிறிஸ்தவ கூட்டங்கள் பூர்த்தி செய்கின்றன.
சத்துள்ளதும் பல்சுவையுள்ளதும்: ஐந்துக் கூட்டங்களில் சமநிலையான ஆவிக்குரிய உணவு பரிமாறப்படுகிறது—குடும்ப வாழ்க்கையைப் பற்றிய புத்திமதியிலிருந்து தீர்க்கதரிசனங்களை ஆராய்தல் வரையாக அது இருக்கிறது. பல்சுவை? ஆம் பேச்சுகளுக்கும் குழுவின் கலந்துரையாடலுக்குமிடையே பேட்டிகளும் உயிர்துடிப்புள்ள நடிப்புகளும் இடம் பெறுகின்றன. 15 வயது நிரம்பிய ஜானட் தான் சென்ற முதல் கூட்டத்தைப் பற்றி சொன்னதை நினைவுப்படுத்திச் சொல்கிறாள்: “பாதி கூட்டத்தில் நான் என் அம்மாவிடம் ‘வீட்டுக்குப் போகலாம்’ என்றேன். உட்கார்ந்துக் கொண்டிருந்தது எனக்குக் களைப்பாக இருந்தது. ஆனால் பின்னர் மேடையிலிருந்து வயதானவர்களும் இளைஞர்களுமாக மாறி மாறி பேச ஆரம்பித்தார்கள். எனக்கு இது மிகவும் பிடித்தது. நான் கடைசி வரையாக இருந்துவிட்டு வந்தேன்.”
மனதுக்குப் பிடித்த தோழர்கள்: நிக்காராகுவாவில் முதல் முறையாக கூட்டத்துக்குச் சென்று வந்த இளம் பெண் கரோலினா சொன்னதாவது: ‘இளம் உறுப்பினர்கள் என் மனதை கவர்ந்துவிட்டார்கள். அவர்கள் சிநேகத்துடனும் மரியாதையுடனும் இருந்தார்கள்.’ ஆம் ராஜ்ய மன்றத்தில் “நன்மையான இன்பமான தோழமை”யை நீ காணலாம். (சங்கீதம் 133:1) 16 வயது நிரம்பிய அனித்தா சொல்கிறாள்: “ராஜ்ய மன்றத்தில் உண்மையான நண்பர்களை நான் கண்டுபிடித்தேன்.”
மனோகரமான சூழ்நிலை: “சில சமயங்களில் ஒரு பிரச்னையைக் குறித்து நாள் முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பேன்” என்கிறான் 14 வயது சைமன். “ஆனால் ராஜ்ய மன்றத்தில், அதை நான் மறந்துவிடுகிறேன். எனக்குள் சமாதானமாக உணருகிறேன்.” கிறிஸ்தவக் கூட்டங்கள் கடவுளுடைய ஆவியாகிய சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பிரதிபலிக்கின்றன. (பிலிப்பியர் 4:4–7) அநேக சர்ச்சுகளின் ஆடம்பரமான வடிவமைப்புக்கும், அமைதியான செயற்கை புறமலர்ச்சிக்கும் எதிர்மாறாக, ராஜ்ய மன்றங்கள் வடிவமைப்பில் எளிமையாகவும் மனோகரமான ஒரு சூழ்நிலைமையை ஊக்குவிப்பதாகவும் இருக்கின்றன. இளம் பார்பரா சொல்வதாவது: “ராஜ்ய மன்றத்தில் நான் பழக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருப்பதாக உணருகிறேன்.”
கற்றுக் கொள்வதற்குரிய ஓர் இடம்
ஆனால் சூழ்நிலைமையைக் காட்டிலும் அதிக முக்கியமானது, ராஜ்ய மன்றத்தில் ஒரு கூட்டத்துக்குப் போவதன் மூலம் நீ என்ன கற்றுக் கொள்கிறாய் என்பதே. உதாரணத்துக்கு ஐந்து கூட்டங்களில் ஒன்றாகிய தேவராஜ்ய ஊழியப் பள்ளியைச் சிந்தித்துப் பார். பொது மக்களிடம் பேசும் திறைமையில் கிறிஸ்தவர்களைப் பயிற்றுவிப்பதற்காக இது 1943-ல் ஸ்தபிக்கப்பட்டது. உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அனைத்து சபைகளிலும் ஸ்தபிக்கப்பட்டுள்ள இது ஒரு பன்னாட்டுப் பள்ளியாகும். இது சம கல்வி வாய்ப்பினை அளிக்கிறது. மாணாக்கர்கள் பையன்களாக இருந்தாலும் அல்லது பெண்களாக இருந்தாலும், கருப்பராக இருந்தாலும் அல்லது வெள்ளையராக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அல்லது ஏழைகளாக இருந்தாலும் அதே பயிற்றுவிப்பை—இலவசமாக பெற்றுக் கொள்கின்றனர்!
முக்கிய பாட புத்தகம் பைபிளாகும். கற்றுக் கொடுப்பதில் தேர்ச்சிப் பெற்ற மனிதர்கள், பைபிள் தகவலை எவ்விதமாக சேகரித்து, அதை தயார் செய்து பின்னர் அதை சம்பாஷணை முறையில் அளிக்கலாம் என்பதை மாணாக்கருக்குக் கற்றுத் தருகிறார்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளி கைட் புத்தகம் (Theocratic Ministry School Guidebook)a என்ற தலைப்புள்ள புத்தகமும்கூட பள்ளியின் சம்பந்தமாக பயன்படுத்தப்படுகிறது. அதன் 38 படிப்புகளில் “ஒரு பேச்சு சுருக்கத்தைத் தயாரித்தல்”, “கருத்து அழுத்தமும் ஏற்றத்தாழ்வும்” போன்ற தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவை சரியான சொல்நடையையும் உச்சரிப்பையும் தொகுப்பையும் கற்பிக்கின்றன. டெரி என்ற பெயருள்ள இளம் பெண், இந்தப் புத்தகத்தை அவளுடைய பேச்சு வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்த போது, அவர் மற்ற மாணவர்களிடம் சொன்னார்: “ஐந்து வாரங்கள் வகுப்பு முடிந்தப் பிறகு, கடைசியாக ஒரு பேச்சு வகுப்பை எவ்விதமாக நடத்துவது என்பதன் பேரில் ஒரு புத்தகத்தை எனக்கு இவள் தருகிறாள்!”
ஒரு தொகுதிக்கு முன்னால் எழுந்து நின்று பைபிளை—திறமையுடனும் தகுதியுடனும் கற்பிக்க முடிவதை கற்பனை செய்துப் பார்! ராஜ்ய மன்றத்தில் நடத்தப்படும் கூட்டங்களுக்குச் செல்வதால் உனக்குக் கிடைக்கும் நன்மைகளில் இது ஒரு நன்மையாக இருக்கிறது. அதோடுகூட நீ அங்கு அனுபவிக்கப் போகும் சிறப்பான கூட்டுறவையும் சேர்த்துக் கொள். கடவுளிலும் அவருடைய குமாரனிலும் உன்னுடைய விசுவாசத்தை ஊட்டி வளர்ப்பதற்கு ஒழுங்காக கூட்டங்களுக்குச் செல்வது ஏன் அத்தனை இன்றியமையாதது என்பதை நீ எளிதில் உணரமுடியும். “விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்” என்பதாக இயேசு நமக்கு நினைப்பூட்டுகிறார்.—யோவான் 3:36.
அப்படியென்றால் சுருக்கமான இந்த ஆய்வுக் கூட்டங்களுக்குச் செல்ல நீ இன்னும் ஆரம்பிக்காவிட்டால், அவ்விதமாகச் செய்ய ஆரம்பிப்பதற்கு உன் ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் நீ ஏற்கெனவே கூட்டங்களுக்குச் செல்பவனாக இருந்தால் உன்னைப் பற்றி என்ன? அப்பொழுது கேள்வியானது, நீ இந்தக் கூட்டங்களிலிருந்து எதிர்பார்க்கிறபடி அத்தனை அதிகத்தை பெற்றுக் கொண்டிருக்கிறாயா? (g88 6⁄8)
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 15-ன் படம்]
ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்கள் இளைஞர்கள் சுறுசுறுப்பாக பங்குகொள்ளுவதற்கு வாய்ப்பளிக்கிறது