மூளை “ஒரு கம்ப்யூட்டருக்கு மேலானது”
மற்றொரு சிறப்பு வாய்ந்த உறுப்பு மூளையாகும். இது நரம்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளோடு சேர்ந்து அநேகமாக மனிதன் உருவாக்கும் கம்ப்யூட்டர்களுக்கு ஒப்பிடப்படுகிறது. நிச்சயமாகவே கம்ப்யூட்டர்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனித செயல் திட்ட அமைப்பாளர்களால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட படிப்படியான உத்தரவுகளின்படி செயல்படுகிறது. என்றபோதிலும் மனித மூளைக்கு “கம்பி இணைத்தமைப்பதற்கும்” “செயல் திட்ட அமைப்பை தயாரிப்பதற்கும்” எந்தவித புத்திக்கூர்மையும் காரணமாயில்லை என்பதாக அநேகர் நம்புகின்றனர்.
உச்ச அளவு வேகத்தில் செயல்பட்டாலும், கம்ப்யூட்டர்கள் ஒரு சமயத்தில் ஒரே ஒரு தகவலையே கையாளுகின்றபோது மனித நரம்பு மண்டலத்தால் ஒரே சமயத்தில் இலட்சக்கணக்கான தகவல்களைத் தொகுக்க முடிகிறது. உதாரணமாக இளவேனிற் காலத்தில் உல்லாசமாகச் சுற்றித் திரிகையில் நீங்கள் அழகிய இயற்கை காட்சியை அனுபவிக்கவும், பறவைகளின் பாடலைக் கேட்கவும், மலர்களின் மணத்தை நுகரவும் முடிகிறது. இந்த இன்பமான உணர்ச்சிகள் அனைத்தும் ஒரே சமயத்தில் மூளைக்குக் கொண்டுச் செல்லப்படுகிறது. அதே சமயத்தில் உங்கள் கை கால்களிலுள்ள, உணர்ச்சி நரம்பு முடிச்சுகளிலிருந்து விநாடிக்கு விநாடி ஒவ்வொரு காலின் மற்றும் ஒவ்வொரு தசையின் நிலையைப் பற்றிய தகவல் இடைவிடாமல் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. முன்னால் பாதையிலிருக்கும் இடையூறுகளை கண்கள் கவனித்துக் கொள்கின்றன. இந்த எல்லா தகவலின் அடிப்படையிலும் ஒவ்வொரு படியும் தடங்கலின்றி எடுக்கப்படுவதை உங்கள் மூளை உறுதி செய்து கொள்கிறது.
இதற்கிடையில் உங்கள் மூளையின் கீழ்ப் பகுதி, சுவாசித்தல், இதயத்துடிப்பு இன்னும் மற்ற இன்றியமையாத வேலைகளை ஒழுங்குபடுத்துகிறது. ஆனால் உங்கள் மூளை இன்னும் அதிகத்தைக் கையாளுகிறது. நீங்கள் நடந்துசெல்கையில் உங்களால் பாடவும், பேசவும், இப்போதுள்ள காட்சிகளை கடந்த காலத்திலிருந்தவற்றோடு ஒப்பிடவும் அல்லது எதிர்காலத்துக்குத் திட்டங்களை தீட்டவும் முடிகிறது.
“மூளை ஒரு கம்ப்யூட்டரைவிட மேலானது. எந்த ஒரு கம்ப்யூட்டரும் தான் சலிப்பாயிருப்பதை அல்லது தன் திறமைகளை விரயம் செய்வதை உணர்ந்து புதிய ஒரு வாழ்க்கை முறையை துவங்க தலைப்பட முடியாது. ஒரு கம்ப்யூட்டர் தன்னுடைய சொந்த செயல் திட்ட அமைப்பில் தீவிர மாற்றங்களைச் செய்ய முடியாது; அது புதிய ஒரு திசையில் செல்ல ஆரம்பிக்கும் முன், மனித மூளையுள்ள ஒருவர் அதற்கு மறுபடியும் செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும். . . . ஒரு கம்ப்யூட்டரால் ஓய்வெடுக்கவோ அல்லது பகற்கனவு காணவோ அல்லது சிரிக்கவோ முடியாது. அது உணர்ச்சியை தோற்றுவிக்கவோ படைக்கும் திறமையை பெற்றுக் கொள்ளவோ முடியாது. அது உணர்வு நிலையை அனுபவிக்கவோ அல்லது கருத்தை உணர்ந்துக் கொள்ளவோ முடியாது; அது காதல் வயப்பட முடியாது” என்பதாக உடல் புத்தகம் (The Body Book) முடிக்கிறது.
எல்லாவற்றிலும் மிக அதிசயமான மூளை
யானைகளும் சமுத்திரத்தில் வாழும் சில பெரிய உயிரினங்களும் மனிதனுடையதைவிட அளவில் பெரியதாக இருக்கும் மூளைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் உடலின் அளவோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மனித மூளையே அனைத்தையும்விட பெரியதாகும். “கொரில்லா என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவிலுள்ள வாலில்லா குரங்கின் உடல் மனிதனுடையதைவிட பெரியதாக உள்ளது, ஆனாலும் அதனுடைய மூளை, அளவில் மனிதனுடைய மூளையில் நான்கில் ஒரு பங்காக மாத்திரமே இருக்கிறது” என்பதாக மூளை (The Brain) என்ற தன்னுடைய புத்தகத்தில் ரிச்சர்ட் தாம்சன் விளக்குகிறார்.
மனித மூளையிலுள்ள நரம்பு அணுக்களிடையே காணப்படும் வித்தியாசமான பாதைகள் எண்ணிலடங்கா. இது ஏனென்றால் நரம்பு அணுக்கள் அத்தனை பின்னல் இணைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு நரம்பு அணு நூறாயிரக்கணக்கான மற்றவற்றோடு இணைக்கப்பட்டிருக்கக்கூடும். “நம்முடைய நவீன மூளையினுள் இருக்கும் பின்னல் இணைப்புகளின் சாத்தியமான எண்ணிக்கை எல்லையற்றதே” என்கிறார் மனம் (The Mind) என்ற தன்னுடைய புத்தகத்தில் அந்தோணி ஸ்மித். “அறியப்பட்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தை உண்டுபண்ணும் மொத்த அணுக்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும்” என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி தாம்சன்.
ஆனால் இன்னும் அதிகமாக குறிப்பிடத்தக்கது வேறு ஒன்று உண்டு. மனிதர்கள் சிந்திப்பதையும் பேசுவதையும் கேட்பதையும் வாசிப்பதையும் எழுதுவதையும் கூடிய காரியமாக்கும் இந்த நரம்பு அணுக்களின் மாபெரும் பின்னல்வலை இணைக்கப்பட்டிருக்கும் விதமாக அது இருக்கிறது. இவை இரண்டு அல்லது அதற்கு அதிகமான மொழிகளில் செய்யப்படலாம். “மொழியே மனிதர்களுக்கும் மிருகங்களுக்குமிடையேயுள்ள முக்கியமான வித்தியாசம்” என்பதாக கார்ல் சாபாக் உயிருள்ள உடல் (The Living Body) என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஒப்பிடுகையில் மிருகங்களின் பேச்சுத் தொடர்பு எளிதாக உள்ளது. வித்தியாசமானது, “மற்ற மிருகங்களில் சப்தங்களை உண்டுபண்ணக்கூடிய திறமையில் மிகச் சிறிய முன்னேற்றமாக இல்லை—மனிதர்களை மனிதர்களாக்கும் அடிப்படைப் பொது பண்பாக இது இருக்கிறது, இது மூளையினுடைய அமைப்பில் காணப்படும் முக்கிய வித்தியாசங்களில் தெரிகிறது” என்கிறார் பரிணாமத்தை ஆதரிக்கும் கார்ல் சாபாக்.
மனித மூளையின் அதிசயமான அமைப்பு ஒரு கைத்தொழிலில் தேர்ச்சிப் பெறவோ, ஓர் இசைக் கருவியை இயக்க கற்றுக் கொள்ளவோ மற்றொரு மொழியில் தேர்ச்சிப் பெறவோ அல்லது வாழ்க்கைக்கு இன்பத்தைக் கூட்டும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவோச் செய்வதன் மூலம் மூளையினுடைய உள்ளார்ந்த ஆற்றலை நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொள்ள தூண்டியிருக்கிறது. “நீங்கள் ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்ளுகையில் உங்கள் நரம்பு அணுக்களை புதிய ஒரு வழியில் இணைக்க கற்றுக் கொடுக்கிறீர்கள். . . . நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் மூளையை பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவு அதிக திறமையுள்ளவராக நீங்கள் ஆவீர்கள்” என்பதாக மனித உடல் (The Human Body) என்ற புத்தகத்தில் மருத்துவர்கள் R. ப்ரன் மற்றும் B. ப்ரன் எழுதுகிறார்கள்.
யாரால் உண்டாக்கப்பட்டது?
உச்ச அளவில் இத்தனை ஒழுங்காக அமைக்கப்பட்டதும் ஒழுங்குள்ளதுமான கை, கண் மற்றும் மூளை போன்றவை தற்செயலாக வந்திருக்க முடியுமா? கருவிகளை, கம்ப்யூட்டர்களை, ஒளி உணர்வு பிலிம்களை கண்டுபிடித்ததற்காக மனிதன் பாராட்டப்படவேண்டுமானால், எத்திசையிலும் இயங்கும் கை, கண் மற்றும் மூளை ஆகியவற்றை உண்டுபண்ணியதற்காக நிச்சயமாகவே எவரோ ஒருவர் கனம்பண்ணப்பட வேண்டும். “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” என்பதாக பைபிளில் சங்கீதக்காரன் சொன்னான்.—சங்கீதம் 139:1, 14.
நம்முடைய மனமார்ந்த முயற்சி இல்லாமலே மனித உடலில் அநேக அதிசயமான வேலைகள் நடைபெறுகின்றன. வர இருக்கும் இந்தப் பத்திரிகையின் பிரதிகள் ஆச்சரியத்தைத் தரும் இந்தச் செயல்பாடுகள் சிலவற்றையும், நாம் என்றுமாக வாழ்க்கையை அனுபவித்துக் களிக்கும் பொருட்டு வயோதிபமும் வியாதியும் மரணமும் மேற்கொள்ளப்பட முடியுமா என்பதைப் பற்றியும் கலந்தாராயும்! (g88 6⁄8)
[பக்கம் 10-ன் பெட்டி]
அதிசயமான உங்கள் நரம்பு அணுக்கள்
ஒரு நரம்பு அணு என்பது அதன் எல்லா செயல்முறைகளையும் உள்ளிட்ட நரம்பு செல்கள் ஆகும். உங்கள் நரம்பு மண்டலத்தில் அநேக வித்தியாசமான நரம்பு அணுக்கள் உள்ளன. இவை மொத்தமாக சுமார் 500 பில்லியனாக இருக்கிறது. சிலவை உடலின் பல பாகங்களிலிருந்து உங்கள் மூளைக்குத் தகவலை அனுப்பும் உணர்ச்சி நரம்பு முடிச்சுகளாக இருக்கின்றன. உங்கள் மூளையின் உயரிடத்திலுள்ள நரம்பு அணுக்கள் ஒரு வீடியோ பதிவுக் கருவியாக செயல்படுகிறது. உங்கள் கண்களிலிருந்தும் காதுகளிலிருந்தும் வரும் தகவலை அவற்றால் நிரந்தரமாக சேமித்து வைக்கமுடிகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உங்களால் இந்தக் காட்சிகளையும் ஒலிகளையும், மனிதனால் உண்டுபண்ணப்படும் எந்த இயந்திரத்தாலும் பதிவு செய்ய முடியாத சிந்தனைகளோடும் மற்ற உணர்ச்சிகளோடும்கூட மீண்டும் மனதுக்கு கொண்டு வர முடிகிறது.
மனித நினைவாற்றலும் இன்னும் ஒரு புதிராகவே இருந்து வருகிறது. இது நரம்பு அணுக்கள் இணையும் விதத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகும். “சராசரி மூளை செல் இன்னும் மற்ற 60,000 செல்களோடு இணைகிறது; ஆம் சில செல்கள் சுமார் 250 கோடி மற்ற செல்களோடு இணைகின்றன. . . . மிகப் பெரிய என்சைக்ளோப்பீடியாவிலுள்ளவற்றைவிட—சுமார் 20 அல்லது 30 பெரிய புத்தகங்கள்—குறைந்தபட்சம் ஆயிரம் மடங்கு அதிகமான தகவலை மனித மூளை அதன் நரம்பு செல்களை இணைக்கும் பாதையில் தேக்கி வைக்கமுடியும்” என்பதாக உயிருள்ள உடல் (The Living Body) என்ற புத்தகத்தில் கார்ல் சாபாக் விளக்குகிறார்.
ஆனால் ஒரு நரம்பு அணு எவ்விதமாக மற்றொன்றுக்குத் தகவலைக் கடத்துகிறது? எளிய ஒரு நரம்பு மண்டலத்தைக் கொண்ட அநேக உயிரினங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அநேக நரம்பு செல்களைக் கொண்டிருக்கின்றன. இவ்விதமாக இருக்கையில், ஒரு மின்ஆற்றல் தூண்டுதல் ஒரு நரம்பு அணுவிலிருந்து மற்றொன்றுக்குப் பாலத்தைக் கடந்துச் செல்கிறது. கடந்துச் செல்லுதல் மின் ஆற்றல் முகுளத் தொடர்பு என்றழைக்கப்படுகிறது. இது வேகமாகவும் எளிமையாகவும் இருக்கிறது.
விநோதமாகத் தோன்றிய போதிலும், மனித உடலிலுள்ள பெரும்பாலான நரம்பு அணுக்கள் வேதியல் முகுளத் தொடர்பு மூலமாக செய்திகளை கடத்துகின்றன. இந்த படிப்படியான அதிக சிக்கலான முறை பாலமில்லாத ஓர் ஆற்றை அடைந்து தோணியிலேற்றிச் செல்ல வேண்டிய ஓர் இரயிலினால் விளக்கப்படலாம். மின்ஆற்றல் தூண்டுதல் ஒரு வேதியியல் முகுளத் தொடர்பை அடையும் போது இரண்டு நரம்பு அணுக்களை ஒரு பிளவு பிரித்து வைப்பதால் அது தடைப்படுகிறது. இங்கே அறிவிப்பு குறிகள் வேதியல் பொருள் இட மாற்றத்தால் “தோணியிலேற்றிச்” செல்லப்படுகிறது. நரம்பு தூண்டுதல்களை கடத்துவதற்கு ஏன் இந்தச் சிக்கலான மின்ஆற்றல் வேதியல் முறை?
வேதியல் முகுளத் தொடர்பில் அநேக நன்மைகள் இருப்பதை விஞ்ஞானிகள் காண்கிறார்கள். அது தகவல் ஒரு வழியில் மாத்திரமே கடந்துச் செல்வதை உறுதியளிக்கிறது. மேலுமாக இது பிளாஸ்டிக் என்று வருணிக்கப்படுகிறது. ஏனென்றால் அதன் செயல் அல்லது அமைப்பு வெகு எளிதில் மாறிவிடலாம். இங்கே சிக்னல்கள் சிறிது மாற்றியமைக்கப்படலாம். உபயோகத்தின் மூலமாக சில வேதியல் முகுளத் தொடர்புகள் வளமுள்ளவையாகையில் உபயோகிக்கப்படாததால் மற்றவை மறைந்துவிடுகின்றன. “மின்ஆற்றல் முகுளத் தொடர்புகள் மாத்திரமே உள்ள நரம்பு மண்டலத்தில் கற்றுணர்வதும் நினைவாற்றலும் வளர்ச்சியடைய முடியாது” என்பதாக மூளை (The Brain) என்ற தன்னுடைய புத்தகத்தில் ரிச்சர்ட் தாம்சன் குறிப்பிடுகிறார்.
மனம் (The Mind) என்ற தன்னுடைய புத்தகத்தில் விஞ்ஞான எழுத்தாளர் ஸ்மித் விளக்குகிறார்: “நரம்பு அணுக்கள் வெறுமென தூண்டப்பட்டோ அல்லது தூண்டப்படாமலோ இருப்பதில்லை. . . . ஆம் அல்லது இல்லை என்பதைக் காட்டிலும் அதிகமான இன்றியமையாத தகவலை அனுப்ப அவை திறமையுள்ளதாக இருக்க வேண்டும். அவை அடிக்கடி விட்டுவிட்டோ அல்லது எப்போதாவதோ அவ்விதமாக ஆணியை அடிக்கும் சுத்திகள் இல்லை. அவை இதற்கொப்பான செயலை ஒரு தச்சனின் கருவிகள், திருப்புளி, இடுக்கிகள், குறடுகள், மரச்சம்மட்டி—சுத்திகள் ஆகியவற்றோடு செய்து முடிக்க வேண்டும். . . . பாதையினூடே ஒவ்வொரு நரம்பு தூண்டுதலும் முகுளத் தொடர்புகளைத் தவிர வேறு எங்கும் மாற்றப்படுவதில்லை.”
வேதியல் முகுளத் தொடர்பில் கூடுதலான நன்மை இருக்கிறது. ஒரு மின் ஆற்றல் முகுளத் தொடர்பைவிட குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்கிறது. மனித மூளையில் ஏன் அத்தனை முகுளத் தொடர்புகள் இருக்கின்றன என்பதை இது விளக்குவதாக உள்ளது. விஞ்ஞானம் (Science) பத்திரிகை, 1,00,00,000,00,00,000—நூற்றுக்கணக்கான பால்வீதி மண்டலங்களிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையைத் தருகிறது. “நம்முடைய மூளைகள் அடிப்படையில் மின்ஆற்றல் இயந்திரங்களாக இல்லாமல் வேதியல் இயந்திரங்களாக இருப்பதன் காரணமாகவே நாம் நாமாக இருக்கிறோம்” என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி தாம்சன். (g88 6⁄8)
[பக்கம் 12-ன் பெட்டி]
உங்கள் மூளைக்கு ஏன் அவ்வளவு இரத்தம் தேவை?
ஒரு நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்பாக ஒருவேளை நீங்கள் உங்கள் கால்விரல்களை தண்ணீரில் அமிழ்த்துவீர்கள். தண்ணீர் குளிர்ந்ததாக இருக்குமானால் உங்கள் தோளில் காணப்படும் சிறிய நரம்பு அணுக்கள் குளிர்ச்சியை விரைவாக உணரச் செய்கின்றன. ஒரு விநாடிக்குள் உங்கள் மூளை தட்ப வெப்ப நிலையை பதிவு செய்துவிடுகிறது. வலியை உணரும் நரம்பு அணுக்கள் இன்னும் அதிக வேகமாக தகவலை அனுப்பி வைக்க முடியும். ஒரு சில நரம்பு தூண்டுதல்கள் மணிக்கு 225 மைல்கள் வேகத்தை எட்டுகின்றன—உதைப்பந்தாட்டக் களத்தில் ஒரு பந்து ஒரு விநாடிக்கு உருண்டோடும் நீளத்துக்கு இது ஒப்பிடப்படலாம்.
ஆனால் மூளை எவ்விதமாக உணர்ச்சிகளின் செறிவை உணர்ந்து கொள்கிறது? ஒரு வழியானது, நரம்பு அணு கிளர்ச்சியடையும் எண்ணிக்கையின் மூலமாக; சில விநாடிக்கு ஆயிரம் அல்லது அதிகமாகவும் கிளர்ச்சியடைகின்றன. மூளையிலுள்ள நரம்பு அணுக்களின் மத்தியில் ஏற்படும் தீவிரமான, நடவடிக்கை விசைக்குழாய்களும் ஆற்றல் உற்பத்தி நிலையங்களும் இல்லாவிட்டால் சாத்தியமற்றதாக இருக்கும்.
நரம்பு அணு கிளர்ச்சியடையும் ஒவ்வொரு முறையும் மின்னோட்டமுள்ள அணுக்கள் உயிரணுவினுள் பாய்கின்றன. சோடியம் துகள் என்றழைக்கப்படும் இவை தேங்கிவிட அனுமதிக்கப்படுமேயானால் நரம்பு அணு படிப்படியாக கிளர்ச்சியடையும் திறமையை இழந்துவிடும். பிரச்னை எவ்விதமாக தீர்க்கப்படுகிறது? “ஒவ்வொரு நரம்பு அணுவும் சுமார் பத்து இலட்சம் விசைக்குழாய்களை—ஒவ்வொன்றும் உயிரணு சவ்வின் மீது ஒரு மெல்லியதான புடைப்பாகவும்—ஒவ்வொரு விசைக்குழாயும் நொடிக்கு 130 போட்டாஷியம் துகள்களுக்குச் சுமார் 200 சோடியம் துகள்களை மாற்றம் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றன” என்கிறார் மனம் (The Mind) என்கிற புத்தகத்தில் விஞ்ஞான எழுத்தாளர் அந்தோணி ஸ்மித். நரம்பு அணுக்கள் ஓய்வாக இருக்கையிலும்கூட விசைக்குழாய்கள் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கின்றன. ஏன்? உயிரணுவில் கசிந்து வரும் சோடியம் துகள்களையும் கசிந்து வெளியேறும் போட்டாஷியம் துகள்களையும் சமப்படுத்துவதற்காக.
விசைக்குழாய்கள் தொடர்ந்து வேலை செய்வதற்கு இடைவிடாமல் சக்தி அவற்றிற்கு வழங்கப்படுவது அவசியமாயிருக்கிறது. சக்தி ஒவ்வொரு செல்லிலும் சிதறுண்டு கிடக்கும் சிறிய மைட்டோகாண்டிரியா அல்லது ஆற்றல் உற்பத்தி நிலையத்திலிருந்து வருகிறது. சக்தியை உற்பத்திச் செய்ய ஒவ்வொரு ஆற்றல் உற்பத்தி நிலையத்துக்கும் இரத்தத்திலிருந்து கிடைக்கும் பிராணவாயுவும் சர்க்கரையும் அவசியமாயிருக்கிறது. உங்கள் மூளைக்கு அவ்வளவு இரத்தம் தேவையாய் இருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. “மொத்த உடல் எடையில் அது 2 சதவிதிதமாகவே இருந்தபோதிலும் அது 16 சதவிகித இரத்த சப்ளையைப் பெற்றுக்கொள்கிறது . . . மூளை திசு, தசை திசுவைக் காட்டிலும் பத்து மடங்கு இரத்தத்தை பெற்றுக் கொள்கிறது” என்று மூளை (The Brain) என்ற தன்னுடைய புத்தகத்தில் ரிச்சர்ட் தாம்சன் விளக்குகிறார்.
அடுத்த முறை தண்ணீரின் வெப்பத்தை நீங்கள் உணருகையில் உங்கள் மூளையிலுள்ள கோடான கோடி விசைக் குழாய்களுக்கும் ஆற்றல் உற்பத்தி நிலையங்களுக்காகவும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள். இவை அனைத்து செயல்களும் சாத்தியமாயிருப்பதற்குக் காரணம் இரத்தத்தால் எடுத்துச் செல்லப்படும் பிராண வாயுவும் சர்க்கரையுமே.
[பக்கம் 9-ன் படம்]
மனித மூளை ஒரே சமயத்தில் இலட்சக்கணக்கான சிறுசிறு தகவல்களை தொகுக்கின்றது. நீங்கள் அசையும்போது உங்கள் கை கால்களிலுள்ள உணர்ச்சி நரம்பு முடிச்சுகள் ஒவ்வொரு கையின் மற்றும் தசையின் விநாடிக்கு விநாடி நிலையைப் பற்றிய தகவலை உங்கள் மூளைக்குக் கொண்டு செல்கின்றன
[பக்கம் 11-ன் படம்]
மூளையானது ஒரு கம்ப்யூட்டரைவிட மிக அதிக சிக்கலானதும் அநேக விஷயங்களில் ஆற்றலுள்ளதாகவும் இருக்கிறது