உங்கள் மூளை—சிக்கலான அற்புதம்
“மனித மூளை பின்வரும் விடைகாணா விடுகதையை முன்வைக்கிறது: பச்சை முட்டை போன்ற தன்மையுடைய திசுக்களாலான உறுப்பு எப்படி உங்களுடைய ‘மனதுக்கு,’ நினைவுகளுக்கு, ஆள்தன்மைக்கு, ஞாபக சக்திக்கு, உணர்ச்சிகளுக்கு, சுயவுணர்வுக்கு காரணமாக இருக்க முடியும்?”—பேராசிரியர் சூசன் ஏ. கிரீன்ஃபீல்ட் எழுதிய மனித மனம் விவரிக்கப்படுகிறது என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து.
உங்கள் உடலின் இயக்கத்தை மூளையே கண்ட்ரோல் பண்ணுகிறது. நீங்கள் புதிய கருத்துகளை, ஏன் புதிய மொழிகளையும் கற்றுக்கொள்ள அது உதவுகிறது. உங்கள் வாழ்நாளில் நடந்த அநேக விஷயங்களை பதிவு செய்து வைத்து தக்க சமயத்தில் ஞாபகப்படுத்துகின்றது. இருந்தாலும் நரம்பு உயிரியல் நிபுணர் ஜேம்ஸ் பாவர் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறார்: “இந்த மூளை எப்படிப்பட்ட மெஷின் என்று எங்களுக்கு உண்மையிலேயே தெரியாது.” நரம்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் எஃப். தாம்ஸனும் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறார்: “இப்போது எங்களுக்கு தெரிந்திருப்பதைவிட இன்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.” மூளையின் புதிர்களை விடுவிப்பதில் அவ்வளவு ஆர்வம் இருப்பதால்தான் யு.எஸ். காங்கிரஸ் 1990-களை மூளையின் தசாப்தம் என்பதாக அறிவித்தது.
உங்கள் தலைக்குள் ஒரு நோட்டம்
செரிப்ரல் கார்ட்டெக்ஸ் அல்லது பெருமூளையின் கார்ட்டெக்ஸ் என்பதுதான் மூளையின் வெளிப்புற மடல்; மடிப்புகள் நிறைந்திருக்கும் இந்தப் பகுதி, சிகரம் வைத்தார்போல் கவர்ந்திழுக்கும் விஷயங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. (பக்கம் 4-ல் உள்ள படத்தையும் பக்கம் 8-ல் உள்ள பெட்டியையும் காண்க.) இப்படிப்பட்ட மடிப்புகள் நிரம்பிய, ஒரு இன்ச்சில் எட்டில் ஒரு பகுதியே பருமனான பழுப்பு அல்லது சாம்பல் நிறப்பொருளில்தான் (grey matter) மூளையின் சுமார் 75 சதவீத நியூரான்கள் (நரம்பு செல்கள்) புளிமூட்டையில் அடைத்ததைப்போல் இருக்கின்றன; இவை கிட்டத்தட்ட 1,000 கோடி முதல் 10,000 கோடி வரை இருக்கும். இந்தளவு பெரும் எண்ணிக்கையில் இவை இருப்பது தானே மூளையின் கடுஞ்சிக்கலான செயல்பாடுகளுக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அநேக நியூரான்களில் இருக்கும் பெரிய வால்போன்ற பாகம்தான் ஆக்ஸான் என்றழைக்கப்படுகிறது. ஒரு மரத்தின் கிளைகளைப்போலும், அதிலிருந்து சிறு கிளைகள் பிரிவதைப்போலும் தோற்றமளிக்கும் நார்கள் நியூரானில் இருக்கின்றன; அந்த நார்கள் டெண்ட்ரைட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. இவைதான் ஒரு நியூரான் மற்ற நியூரான்களோடு ஆயிரக்கணக்கில் தொடர்பு கொள்ளுவதற்கான ஏதுக்கள். நியூரான்கள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்வதேயில்லை. அவற்றிற்கு இடையே இருக்கும் பகுதி சைனேப்ஸ் என்றழைக்கப்படுகிறது; அந்த இடைவெளியில் ஒரு நியூரானிலிருந்து இன்னொரு நியூரானுக்கு சிறிய அளவில் ரசாயனங்கள் கடந்து செல்லும். இது ஏற்கெனவே புரியாப் புதிரான மூளையின் செயல்களை இன்னும் பிரமிக்க வைக்கும் அளவு சிக்கலாக்குகிறது.
“இன்று நாம் அறிந்த பிரபஞ்சத்திலிருக்கும் அணுக்களின் எண்ணிக்கையோ வெகு அதிகம். அவற்றோடு, மூளையில் இணைவதற்கு வாய்ப்புள்ள சைனேப்டிக் இணைப்புகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இவையே அதிகமாக இருக்கும்” என்று உங்கள் மூளையைப் பற்றி ஒரு நிபுணர் கணக்கு போட்டு சொல்கிறார்.
நியூரான்களால் நிறைந்த கார்ட்டெக்ஸ்தான் மூளையில் கொடிகட்டிப் பறக்கும் பாகமாக இருந்தாலும் அதற்குக் கீழே இருக்கும் பாகங்களைப் பற்றியதென்ன? உதாரணத்திற்கு கார்ப்பஸ் கலோஸம் உங்களது இடது, வலது அரையுருண்டை வடிவ பெருமூளையின் பாகங்களை இணைக்கிறது. உங்களது மூளை பெற்றுக்கொள்ளும் பெரும்பாலான தகவல்கள் யாவும் அருகில் உள்ள தலாமஸ் (உள் அறை என்று அர்த்தப்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது) வழியே கடத்தப்படுகிறது. இதோடு சேர்ந்து ஹைப்போதலாமஸ் (கிரேக்க மொழியில் உள் அறைக்கும் கீழே) இருக்கிறது; இதுதான் உங்களது ரத்த அழுத்தத்தையும் உடலின் வெப்பத்தையும் கருமமே கண்ணாக சீராக்குகிறது. இதோடு சேர்ந்து நீட்டிக்கொண்டிருப்பதுதான் பிட்யூட்டரி சுரப்பி. இந்தத் தலைமை சுரப்பியே உங்களது நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ‘தலைவன்.’ இது ஹார்மோன்கள் என்றழைக்கப்படும் ரசாயனங்களை சுரக்கின்றது; இவை உடலில் உள்ள மற்ற சுரப்பிகள் சுரக்கும் ரசாயனங்கள் எல்லாவற்றையும், ‘உன் குடுமி என் கையில் என்பதுபோல்’ கட்டுப்படுத்துகின்றன. உங்களது ஒவ்வொரு அசைவைப் பற்றிய தகவல்களையும் ஒழுங்குபடுத்தும் ‘சேவகன்’ தான் அதையடுத்து இருக்கும் பான்ஸ். அதையடுத்து, மூச்சு விடுவது, ரத்த ஓட்டம், இருதயத்தின் இயக்கம், உணவு செரித்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மெடுல்லா என்றழைக்கப்படும் முகுளம் இருக்கிறது. இப்படிப்பட்ட உறுப்புகள், சத்தம் போடாமல் காரியத்தில் கண்ணாய் அனைத்துப் பணிகளையும் செய்து முடிக்கின்றன; ஆனால் அவை அங்கிருப்பதையே நீங்கள் உணருவதில்லை!
இவ்வளவு வித்தியாசமான பாகங்கள் இருக்கும்போது மூளை எவ்வாறு செயலாற்றுகிறது? எவ்வாறு உங்கள் மூளையை நன்கு உபயோகித்து கோடி நன்மை பெறலாம்? சாத்தியமான பதில்களை தெரிந்துகொள்ள அடுத்த இரண்டு கட்டுரைகள் உதவும்.
[பக்கம் 4-ன் பெட்டி]
நமக்கு இன்னும் பெரிய தலை ஏன் அவசியமில்லை
“இரண்டு கைமுஷ்டிகளை அருகருகே வைத்தால் எந்த அளவு இருக்குமோ அதுவே மனித மூளையின் அளவு; மூளையின் செரிப்ரல் கார்ட்டெக்ஸ் மாத்திரம் மடிப்பில்லாமல் வழவழவென்றிருந்திருந்தால், அது ஒரு கூடைப்பந்தின் அளவிற்கு இருந்திருக்கும்.”—பேராசிரியர் சூசன் ஏ. கிரீன்ஃபீல்ட்
[பக்கம் 4, 5-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மூளையின் சில பாகங்கள் உட்புற பாகங்கள்
செரிபெல்லம்
இதன் பொருள் “சிறு மூளை.” மூளையின் பின்பக்க அடியில் காணப்படும் ஒரு பாகம்
உண்மையான அளவு படத்தில் காட்டப்பட்டிருக்கிறது
செரிப்ரம்
மூளையில் இருக்கும் பெரிய வட்டவடிவ பாகம். இதுதான் மண்டையோட்டில் அதிக இடத்தை நிரப்புகிறது
உற்புற பாகங்கள்
கார்ப்பஸ் கலோஸம்
பெருமூளையின் இரண்டு அரையுருண்டை கோளங்களை இணைக்கும் நரம்பு நார்களின் தொகுதி
செரிப்ரல் கார்ட்டெக்ஸ்
பெருமூளையின் இரண்டு அரையுருண்டைக் கோளங்களையும் மூடியிருக்கும் மெல்லிய மேல்பரப்பு
ஹைப்போதலாமஸ்
உடலின் தானியங்குப் பணிகள் சிலவற்றைக் கட்டுப்படுத்துகிறது
தலாமஸ்
கார்ட்டெக்ஸில் பார்வைக்கான பகுதி
பிட்யூட்டரி சுரப்பி
மெடுல்லா
பான்ஸ்
[படத்திற்கான நன்றி]
பேராசிரியர் சூசன் ஏ. கிரீன்ஃபீல்ட், 1996-ல் எழுதிய மனித மனம் விவரிக்கப்படுகிறது என்பதன் அடிப்படையில்