உங்கள் மூளை—எவ்வாறு செயல் புரிகிறது?
“நம் உடலிலேயே ஆராய்ச்சி செய்வதற்கு மிகவும் கடினமான அங்கம் மூளைதான். அதைத் தோளுக்கு மேல் உள்ள இந்தச் சிறிய பெட்டகத்தில் தூக்கிச் செல்லுகிறோம். ஆனால் இதை ஆராய்வதோ மிகக்கடினம்” என்று ஐக்கிய மாகாணங்களின் தேசிய மனநல நிறுவனத்தில் பணிபுரியும் மனநல மருத்துவர் ஈ. ஃபுல்லர் டாரி குறிப்பிடுகிறார்.
ஆகிலும், நம்முடைய ஐம்புலன்களும் மூளைக்கு அனுப்பும் தகவல்களை மூளை எவ்விதம் பகுத்து ஆய்வு செய்கிறது என்பதைப் பற்றி அதிகம் கற்றுக்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். கண்களால் காணும் காட்சிகளை மூளை எவ்வாறு ‘புரிந்துகொள்கிறது’ என்பதை இப்போது பார்க்கலாமா.
உங்களுடைய மனதின் கண்கள்
ஒளி உங்களது கண்ணின் வழியே ஊடுருவி கண்விழியின் பின்னே அமைந்துள்ள ரெட்டினா என்று அழைக்கப்படும் விழித்திரையில் விழுகிறது; விழித்திரையில் மூன்று செல் அடுக்குகள் இருக்கின்றன. ஒளி அந்த மூன்றாம் அடுக்குவரை ஊடுருவுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இந்த அடுக்கில்தான் குச்சிகள், கூம்புகள் என்று அழைக்கப்படும் வித்தியாசமான செல்கள் இருக்கின்றன. குச்சிகள், ஒளியின் பிரகாசத்தை உணரக்கூடியவை; கூம்புகள், வித்தியாசமான அலை நீளமுடைய ஒளியின் வண்ணங்களான சிவப்பு, பச்சை, நீலம் போன்றவற்றிற்கு ஏற்ப பிரதிபலிப்பவை. ஒளி, இந்தச் செல்களில் உள்ள நிறமிகளை வெளிறச் செய்கிறது. வெளிறிய இந்தச் செல் இரண்டாவது அடுக்கில் உள்ள செல்களுக்கும் அங்கிருந்து மேல் அடுக்கில் உள்ள செல்களுக்கும் தகவலை கடத்துகிறது. இந்த செல்களுக்கான ஆக்ஸான்கள் இணைந்து பார்வை நரம்பாகின்றன.
பார்வை நரம்புகளிலுள்ள லட்சக்கணக்கான நியூரான்கள் மூளையில் ஒரு சந்திப்பில் கூடுகின்றன, அதற்கு ஆப்டிக் கயாஸ்மா என்று பெயர். ஒவ்வொரு கண்ணிலும் உள்ள விழித்திரையின் இடது பக்கங்களிலிருந்து வரும் தகவல்களை எடுத்துச் செல்லும் நியூரான்கள் ஓரிடத்தில் சந்தித்து பின் இணைப்பாதையில் ஒருங்கே மூளையின் இடது பக்கத்தை நோக்கி செல்கின்றன. அதைப்போலவே, விழித்திரையின் வலது பக்கங்களிலிருந்து வரும் சமிக்கைகளை எடுத்துச் செல்லும் நியூரான்கள் ஒன்றாக சந்தித்து வலது பக்கத்தை நோக்கிச் செல்கின்றன. இந்தத் தகவல்கள் அடுத்ததாக, தலாமஸில் இருக்கும் ஒரு ரிலே மையத்தைப் போல் செயல்படும் பகுதியை அடைந்து அங்கிருந்து மூளைக்கு அனுப்பப்படுகின்றன. அத்தகவல்களை அங்குள்ள நியூரான்கள் மூளையின் பிற்பகுதியில் உள்ள பார்வைக்கான விஷுவல் கார்ட்டெக்ஸ் பகுதிக்கு அனுப்புகின்றன.
ஒரு காட்சியைப் பற்றிய வித்தியாசமான தகவல்கள் இணையான பாதைகளில் செல்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் பின்வரும் தகவல்களை தற்போது அறிந்திருக்கின்றனர்: விஷுவல் கார்ட்டெக்ஸும் அதன் அருகிலுள்ள மற்றொரு பகுதியும் தபால் நிலையத்தைப் போல் செயல்படுகின்றன; நியூரான்கள் கொண்டுவரும் வித்தியாசமான தகவல்களை பிரிப்பது, சரியான இடத்திற்கு அனுப்புவது, தொகுப்பது போன்ற காரியங்கள் அங்கேதான் நிகழ்கின்றன. மூன்றாவது பகுதி பொருளின் வடிவத்தை, அதாவது அதன் முழு அளவையும் அதன் அசைவையும் எடைபோடுகிறது. நான்காவது பகுதி பொருளின் உருவத்தையும் நிறத்தையும் பிரித்தறிகிறது. ஐந்தாவது பகுதி, கண்களிலிருந்து வரும் தகவல்களை ஒரு மேப்பில் குறித்துக்கொள்வது போல் தொடர்ந்து செயல்படுகிறது; இதனால் ஒரு பொருள் நகர நகர அதன் தடத்தை விடாமல் பின்தொடருகிறது. கண்கள் அனுப்பும் காட்சியின் தகவல்களை இனம்பிரித்து உணர்ந்துகொள்ள கிட்டத்தட்ட 30 வித்தியாசமான பகுதிகள் செயல்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன! ஆனால் இவையெல்லாம் சேர்ந்து ஓர் உருவம் இன்னதென்பதை நீங்கள் புரிந்துகொள்ள எவ்வாறு உதவுகின்றன? உங்களது மனம் எப்படித்தான் “பார்க்கின்றது”?
மூளை “பார்க்கும்” விதம்
ஏராளமான தகவல்களை கண்கள் தொடர்ந்து மூளைக்கு அனுப்புகின்றன, ஆனால் அந்தத் தகவல்களை கார்ட்டெக்ஸ்தான் தொகுக்கிறது என்பது தெளிவு. உங்கள் கேமராவை உபயோகித்து ஒரு படம் எடுங்கள்; போட்டோவில் அந்த முழு காட்சியின் விவரமும் அப்படியே படமாகி இருக்கும். உங்கள் கண்களோ, அதே காட்சியைப் பார்க்கையில் சுற்றிலும் இருக்கும் பொருட்கள் தெரிந்தாலும் நீங்கள் எதன் மீது கவனம் செலுத்துகிறீர்களோ அதை மட்டுமே வடிகட்டி பார்க்கின்றன. இதை மூளை எவ்வாறு செய்கிறது என்பது ஒரு விளங்காப் புதிரே. காட்சித் தகவல்களைத் திரட்டி படிப்படியாக தொகுத்தமைக்கும் பகுதி என்று நம்பப்படும் பகுதிகளில் தகவல்களைக் குவிப்பதால்தான் தப்பாத ‘கழுகுப் பார்வையில்’ நோட்டமிட முடிகிறது என்று சிலர் நினைக்கின்றனர்; இதனால் நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ அதை ஏற்கெனவே அறிந்த தகவலோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் மூளை உதவுகிறது. உங்களுடைய கண்களுக்கு முன்பாகவே இருக்கும் ஒரு பொருளை பார்த்தும் அது மனதில் பதியவில்லை என்றால் அதற்குக் காரணம் உங்களது கவனத்தைக் கட்டுப்படுத்தும் நியூரான்கள் கிளர்ச்சி அல்லது பரபரப்பு அடையவில்லை என்று அர்த்தம் என்பதாக சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
எது எப்படியிருந்தாலும் சரி, “தன்னுணர்வு” அல்லது ‘நான்’ என்ற உணர்நிலை, “மனம்” என்பவை எதை உட்படுத்துகின்றன என்பதை முடிவு செய்ய விஞ்ஞானிகள் படும்பாட்டோடு ஒப்பிடும்போது பார்வையை விவரிப்பதில் அவர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகள் ஒன்றுமேயில்லை. ஸ்கேன் செய்யும் முறைகளான மேக்னடிக் ரிசோனன்ஸ் இமேஜிங் (MRI), பாஸிட்ரான் எமிஷன் டொமோகிராபி (PET) போன்றவை விஞ்ஞானிகள் மனித மூளையை புரிந்துகொள்ள பெரிதும் கைகொடுத்து உதவுகின்றன. யோசனை செய்யும்போது மூளையில் ரத்தம் எந்த இடங்களுக்கு சிட்டாய் பாய்ந்தோடுகிறது என்பதை கவனித்து அவர்கள் எந்தப் பகுதி எதற்காக பயன்படுகிறது என்பதைப் பற்றி ஒரு நியாயமான முடிவிற்கு வந்தார்கள். அதன் அடிப்படையில் கார்ட்டெக்ஸின் வித்தியாசமான பகுதிகள் வார்த்தைகளை கேட்பதற்கும், வார்த்தைகளைப் பார்ப்பதற்கும், வார்த்தைகளை பேசுவதற்கும் பயன்படலாம் என்பது அவர்கள் கண்டறிந்த முடிவு. ஆகிலும் ஒரு எழுத்தாளர் பின்வரும் முடிவிற்குத்தான் வந்தார், “மனதைப் பற்றியும் ‘நான்’ என்ற தன்னுணர்வைப் பற்றியும் சொல்லப்படும் விஷயங்கள் மிகவும் சிக்கலானவை . . . யாரும் எதிர்பார்ப்பதைவிட சிக்கலானவை.” மூளையைப் பற்றிய இன்னும் ஏராளமான புதிர்கள் இனிதான் விடுவிக்கப்பட வேண்டும்.
மூளை வியக்கவைக்கும் கம்ப்யூட்டரா?
சிக்கலான நம் மூளையைப் புரிந்துகொள்ள அதை வேறொன்றோடு ஒப்பிடுவது உதவியாக இருக்கும். மத்திப 18-ம் நூற்றாண்டில் தொழில் புரட்சியின்போது மூளையை ஒரு இயந்திரத்தோடு ஒப்பிட்டு பேசுவது நாகரிகமாக கருதப்பட்டது. பிற்பாடு டெலிஃபோன் ஆப்ரேட்டர் உபயோகிக்கும் சுவிட்ச்போர்டு பிரபலமானபோது, தீர்மானங்களை செய்யும் ஆப்ரேட்டர் அதை இயக்கும் படுபிஸியான சுவிட்ச்போர்டுக்கு மூளையை ஒப்பிட்டனர். இப்போதோ கம்ப்யூட்டர்கள் படுசிக்கலான வேலைகளை “ப்பூ” என்று செய்வதால் அவற்றோடு மூளையை ஒப்பிடுகின்றனர். இப்படிப்பட்ட ஒப்பீடுகள் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை முழுமையாக விளக்குகின்றனவா?
இந்த விஷயத்தை பொருத்தவரைக்கும் அடிப்படை அஸ்திவாரமே ஆட்டங்காணுகிறது; காரணம் மூளையும் கம்ப்யூட்டரும் இரு துருவங்கள், வித்தியாசமானவை. அடிப்படையில் மூளை இரசாயனத்தால் இயங்குகிறது, மின்சாரத்தால் அல்ல. ஏராளமான இரசாயன மாற்றங்கள் ஒவ்வொரு செல்லுக்குள்ளேயும் நிகழ்கின்றன; இது கம்ப்யூட்டரின் இயக்கத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமானதே. மேலும் இதைப்பற்றி பேராசிரியர் சூசன் ஏ. கிரீன்ஃபீல்ட், “யாரும் மூளையை புரோகிராம் செய்வதில்லை. அது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சாதகபாதகத்தை கணித்து தானாகவே செயல்படும் உறுப்பு” என்கிறார்; ஆனால் கம்ப்யூட்டரோ யாராவது ஒருவர் புரோகிராம் செய்தால்தான் இயங்கும்.
நியூரான்கள் ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும் முறையே அலாதியானது, ஆனால் பிரமிக்கத்தக்கது. அநேக நியூரான்கள் 1,000 அல்லது அதற்கும் அதிகமான சைனேப்டிக் தூண்டுதல்களுக்கு “செவிசாய்க்கின்றன.” இது எவ்வாறு என்பதை சற்றே புரிந்துகொள்ள உயிர் நரம்பியல் வல்லுநர் ஒருவரின் ஆராய்ச்சியை கவனிக்கலாம். நாம் எவ்வாறு வாசனைகளை பிரித்தறிகிறோம் என்பதை புரிந்துகொள்ள, நமது மூக்கிற்கு சற்றே மேலே அதன் பின்பகுதியில் அமைந்திருக்கும் மூளையின் கீழ்ப்பகுதியை ஆய்வு செய்தார். அவர் அதைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஒரு ஜியாமெட்ரிக் தேற்றத்தை நிரூபிப்பதோடு அல்லது பீத்தோவென் இசையை புரிந்துகொள்வதோடு இந்த வேலையை ஒப்பிட்டு பார்க்கும்போது இதை சுண்டுவிரலாலேயே செய்து முடிக்கலாம் என்று தோன்றலாம். ஆனால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய குறிப்பு, இதில் சுமார் 60 லட்சம் நியூரான்கள் உட்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றும் அருகில் இருக்கும் நியூரான்களிடமிருந்து கிட்டத்தட்ட 10,000 தகவல்களை பெற்றுக்கொள்கின்றன.”
இருந்தாலும், மூளையானது வெறும் நியூரான்களின் தொகுப்புதான் என்று சொல்லிவிட முடியாது; அதில் அடங்கியிருக்கிற விஷயங்கள் ஏராளம் ஏராளம். ஒவ்வொரு நியூரானுக்கும் அநேக கிலியல் செல்கள் இருக்கின்றன, அவைதான் மூளையை ஒன்றாக பிடித்திருக்கின்றன. இதோடு மற்ற இடங்களிலிருந்து வரும் மின்சாரம் அதோடு சம்பந்தப்படாத நியூரான்களுக்குள் கடத்தப்படாமல் இருப்பதற்கும் உதவுகின்றன, தொற்று நோய் பரவுவதை எதிர்த்துப் போரிடுகின்றன, ஒன்றாக இணைந்து பாதுகாப்பு வளையம் அமைத்து இரத்தம்-மூளை இடையே வேலியாக வாயில் காப்பாளனைப்போல் செயல்படுகின்றன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஏராளமான வேலைகளை கிலியல் செல்கள் செய்யலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் அனுமானம். “மின்னணுவியல் தகவல்களை எண்களாக மாற்றி செயல் புரியும் மனிதன் உருவாக்கிய கம்ப்யூட்டரை மூளையோடு ஒப்பிடுவது கொஞ்சமும் பொருந்தாது; அது ஜனங்களை வெகுவாக குழப்பிவிடலாம்” என்ற முடிவுக்கு எகானாமிஸ்ட் பத்திரிகை வந்தது.
ஆகவே இன்னொரு விளங்காப் புதிர் விடுவிக்கப்பட வேண்டிய நேரம் இதோ வருகிறது.
நினைவாற்றல் எவ்வாறு ஏற்படுகிறது?
நினைவாற்றலைப் பற்றி பேராசிரியர் ரிச்சர்ட் எஃப். தாம்ஸன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நாம் அறிந்திருக்கும் இன்றைய உலகில் இதுதான் மிகவும் வியக்கத்தக்க சமாச்சாரமாக இருக்க வேண்டும்.” இது மூளையின் வித்தியாசப்பட்ட பணிகளை உட்படுத்துகிறது. மூளையை ஆராய்ச்சி செய்யும் அநேகர் நினைவாற்றலை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர்: 1. அறிக்கை செய்வது, 2. செயல்முறை. செயல்முறையில்தான் திறமைகளும் பழக்கங்களும் உட்படுகின்றன. அறிக்கை செய்வதில் செய்திகளை சேமித்து வைப்பது அடங்கும். நினைவாற்றல்களின் தன்மை அது எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கு ஏற்ப, த பிரெய்ன்—எ நியூரோசயன்ஸ் பிரைமர் என்ற புத்தகம் இவ்வாறு வகைப்படுத்துகிறது: மிகவும் குறுகியகால நினைவு, அது சுமார் 100 மில்லி வினாடிகள் மட்டுமே இருக்கும்; குறுகியகால நினைவு இது சில வினாடிகள் இருக்கும்; வேலை செய்யும் நினைவாற்றல், அதில் சமீபத்திய அனுபவங்கள் அடங்கும்; நீண்டகால நினைவாற்றல், இதில் நன்றாக பயிற்சி செய்யப்பட்ட வார்த்தை தகவல்களும், அதேபோல் பயிற்றுவிக்கப்பட்ட இயங்குதசை சம்பந்தப்பட்ட திறமைகளும் அடங்கும்.
நீண்டகால நினைவாற்றலைப் பற்றி, இது மூளையின் முன்பக்கத்தில் அதன் கிரியைகளை ஆரம்பிக்கிறது என்கிறது ஒரு விவரிப்பு. நீண்டகால நினைவாற்றலில் சேமித்து வைக்க விரும்பும் தகவல்கள், மின்தகவல்களாக மூளையின் ஒரு பாகமான ஹிப்போகேம்ப்பஸ் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த இடத்தில் நீண்ட நாள் இயக்கம் என்ற ஏற்பாட்டின் மூலம் நியூரான்கள் தகவல்களை கடத்தும் திறமை அதிகரிக்கப்படுகிறது.—“இடைவெளியை கடப்பதற்கான பாலம்” என்ற பெட்டியைக் காண்க.
நினைவாற்றலுக்கு முக்கிய காரணம் மூளை அலைகள்தான் என நம்புகிறவர்கள் நினைவாற்றலைப் பற்றிய வித்தியாசமான கருத்தைக் கொடுக்கின்றனர். மூளையின் வழக்கமான மின்செயல்பாடுகள் கடிகார பென்டுலம்போல் சீராக ஆடுகின்றன என்பதாகவும் அவற்றை ஒரு முரசில் எழுப்பப்படும் சீரான ஓசைக்கு ஒப்பிடலாம் என்பதாகவும், அவைதாம் நினைவாற்றலை காப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர்; இவைதாம் சில குறிப்பிட்ட மூளை செல்கள் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தூண்டப்படுவதற்கு உதவுகின்றன என்பதும் அவர்கள் கருத்து.
மூளை வித்தியாசமான நினைவாற்றல்களை வித்தியாசமான பகுதிகளில் சேமித்து வைப்பதாகவும், எந்தப் பகுதி எந்த வேலைக்கு முக்கிய கவனம் செலுத்துகிறதோ அந்த இடத்தில் அதற்கொத்த நினைவாற்றல்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மூளையின் சில பகுதிகள் நிச்சயமாகவே நினைவாற்றலுக்குக் காரணமாக இருக்கின்றன. மூளைத் தண்டிற்கு அருகில் உள்ள வாதுமைப் பருப்பு அளவுள்ள நரம்பு செல்களின் தொகுப்பு அமிக்டாலா என்றழைக்கப்படுகின்றன; இவைதான் பயத்தைப் பற்றிய நினைவாற்றல்களை பகுத்து ஆய்வு செய்கின்றன. மூளையின் சாம்பல் நிறப்பகுதியின் பாகமான பேசல் கேங்கிளியா என்றழைக்கப்படும் பகுதி, பழக்கவழக்கங்களையும் நடைமுறையான திறமைகளை வளர்த்துக்கொள்வதையும் கட்டுப்படுத்துகிறது. மூளையின் அடிபாகத்தில் அமைந்திருக்கும் செரிபெல்லம் என்ற சிறுமூளை பழக்கத்தினால் கற்றுக்கொள்ளும் திறமைகளையும், அனுபவத்தால் ஏற்படும் இயல்பான எதிர்த்தூண்டுதலையும் கட்டுப்படுத்துகிறது. சைக்கிள் ஓட்டுவதற்கு எவ்வாறு பேலன்ஸ் செய்வது போன்ற திறமைகள் இங்குதான் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
மூளை எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றிய நம் சுருக்கமான ஆய்வில் மூளையின் பின்வரும் வியத்தகு பணிகள் விளக்கப்படவில்லை: அது எவ்வாறு நேரத்தைக் கணிக்கிறது, ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதில் அதற்கு இருக்கும் தாகம், அதன் சிக்கலான இயங்குதசை திறமைகள், உடலின் நரம்பு மண்டலத்தையும் முக்கிய பாகங்களையும் நிர்வகிக்கும் திறமை, வலியை சமாளிப்பது போன்றவை. அதுமட்டுமா, மூளையின் இரசாயன ‘தூதர்கள்’ நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் மூளையையும் எவ்வாறு இணைக்கின்றனர் என்ற விஷயங்கள் இப்போதும் தொடர்ந்து ஆய்வில் இருக்கின்றன. “இவற்றில் காணப்படும் சிக்கல்கள் நம்ப முடியாத அளவிற்கு அதிகமானவை. எனவே, இந்த சிக்கல்களை என்றாவது விடுவிக்கத்தான் முடியுமா” என்பதுதான் நரம்பியல் விஞ்ஞானி டேவிட் ஃபெல்டனின் கேள்வி.
மூளையின் அநேக செயல்பாடுகளில் உள்ள புதிர்கள் இன்னமும் புரியாப் புதிராகவே இருந்தாலும் இந்த அதிசயப்பட வைக்கும் உறுப்பால் செய்யப்படும் பணிகள் கொஞ்சம்நஞ்சமல்ல. இதனால்தான் நாம் யோசிக்கிறோம், தியானிக்கிறோம், கற்றுக்கொண்டதை மறுபடியும் நினைவுபடுத்திப் பார்க்கிறோம். மனித மூளையா கொக்கா? அப்படியென்றால் நாம் எவ்வாறு மூளையை சிறந்த முறையில் உபயோகிக்கலாம்? இதற்கு நம் முடிவான கட்டுரை பதிலளிக்கும்.
[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]
இடைவெளியை கடப்பதற்கான பாலம்
ஒரு நியூரான் தூண்டப்படும்போது அதன் ஆக்ஸானில் ஒரு செய்தி காற்றாய் பறக்கிறது. அது நியூரானின் முடிவில் இருக்கும் பல்பு போன்ற பகுதியை அடைந்தபின், அங்கே இருக்கும் சிறு உருண்டைகளைப் போன்ற பைகள் (சைனேப்டிக் வெஸிகிள்ஸ்) அந்த பல்போடு ஒட்டிக்கொள்ள செய்கிறது. இந்தப் பைகளுக்குள் ஆயிரக்கணக்கான நியூரோடிரான்ஸ்மிட்டர் மூலக்கூறுகள் உள்ளன. பிறகு அதற்குள் ‘உறங்கும்’ நியூரோடிரான்ஸ்மிட்டர்களை ‘தட்டியெழுப்பி’ அவற்றை சைனேப்ஸ் என்ற இடைவெளியை கடக்க செய்கிறது.
சாவி, பூட்டு என்றழைக்கப்படும் சிக்கலான ஓர் அமைப்பு மூலம் நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் அடுத்த நியூரான்களில் உள்ள தகவல் மையங்களை திறக்கவோ மூடவோ பயன்படுகின்றன. இதனால் மின்சாரத்தால் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் அடுத்த நியூரானுக்குள் செல்கின்றன; இது இன்னும் அதிக இரசாயன மாற்றம் ஏற்பட்டு ஒரு மின்சார கிளர்ச்சி ஏற்படுத்துவதையோ தொடர்ந்து மின்சார செயல்பாட்டை மட்டுப்படுத்துவதையோ உட்படுத்துகிறது.
நியூரான்கள் தொடர்ச்சியாக கிளர்ச்சியூட்டப்பட்டு, நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் சைனேப்ஸ் என்ற இடைவெளியில் அடிக்கடி கடந்து சென்றால் நீண்டகால இயக்கம் என்ற நிலை ஏற்படுகிறது. இதனால் சில நியூரான்கள் அருகருகே இழுக்கப்படுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். செய்தி அனுப்பப்பட்டதை உறுதிசெய்ய செய்தியைப் பெற்ற நியூரான் செய்தி அனுப்பிய நியூரானுக்கு சமிக்ஞை அனுப்புவதாக சிலர் நம்புகிறார்கள். இதனால், இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு சூட்டோடு சூடாக அதிகளவிலான புரோட்டீன்களை உற்பத்தி செய்கின்றன; இவை நியூரோடிரான்ஸ்மிட்டர்களாக செயல்படுகின்றன. இவை அந்த இரண்டு நியூரான்களுக்கு இடையே உள்ள பாலத்தை இன்னும் பலமாக்குகின்றன.
மூளையில் அடிக்கடி இணைப்புகள் மாறுவதும், தேவைக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக்கொள்ளும் தன்மையும் மூளைக்கு இருப்பதால் பின்வரும் வழக்குச் சொல் வர காரணமளிக்கிறது: “அதை உபயோகி இல்லையேல் இழந்துவிடுவாய்.” ஆகவே ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைக்கவேண்டுமென்றால் அடிக்கடி அதை திரும்பத் திரும்ப நினைவுபடுத்திப் பார்க்கும் ‘பயிற்சி’ அவசியம்.
ஆக்ஸான்
நியூரான்களை இணைத்து சிக்னல்களை எடுத்துச் செல்லும் நார் போன்ற பாகம்
டெண்ட்ரைட்டுகள்
நியூரான்களை இணைக்கும் சிறிய, அநேக கிளைகள் போன்ற இணைப்புகள்
நியூரைட்டுகள்
நியூரானிலிருந்து கிளம்பும் விரல்களைப் போன்ற அமைப்புகள். இவற்றில் ஆக்ஸான், டெண்ட்ரைட்டுகள் என இருவகை உண்டு
நியூரான்கள்
நரம்பு செல்கள். மூளையில் சுமார் 1,000 கோடியிலிருந்து 10,000 கோடி நியூரான்கள் இருக்கின்றன. அவை “ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான சில வேளைகளில் ஆயிரக்கணக்கான மற்ற செல்களோடு இணைக்கப்பட்டிருக்கின்றன”
நியூரோடிரான்ஸ்மிட்டர்கள்
நரம்பின் செய்தியை ஒரு நியூரானிலிருந்து மற்றொன்றிற்கு கடத்துகையில் இடையில் இருக்கும் சைனேப்டிக் இடைவெளியைக் கடக்க உதவும் இரசாயனங்கள்
சைனேப்ஸ்
செய்தியை அனுப்பும் நியூரானுக்கும் செய்தியை பெற்றுக்கொள்ளும் நியூரானுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி
[படத்திற்கான நன்றி]
1996-ல் பேராசிரியர் சூசன் ஏ. கிரீன்ஃபீல்ட் எழுதிய மனித மனம் விவரிக்கப்படுகிறது என்ற புத்தகத்தின்படி
CNRI/Science Photo Library/PR
[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]
மனிதருக்கே உரிய தன்னிகரற்ற திறமைகள்
மூளையில் மொழிக்கான பகுதிகள் என்று அழைக்கப்படும் குறிப்பிட்டப் பகுதிகள், நேர்த்தியாக தகவல்களை மனிதர்கள் பரிமாறிக்கொள்ள உதவுகின்றன. மூளையின் இடது அரையுருண்டை கோளத்தில் வெர்னிக் பகுதி (1) என்ற இடத்தில் நாம் என்ன சொல்ல விரும்புகிறோமோ அது ஒழுங்கமைக்கப்படுவதாக தோன்றுகிறது. இது புரோக்கா பகுதி (2) என்றழைக்கப்படும் இடத்திற்கு தகவலை அனுப்புகிறது; இந்த இடத்தில் இலக்கண சட்டங்கள் சேர்க்கப்படுகின்றன. அடுத்ததாக, அருகில் இருக்கும் இயங்குதசை பகுதிகளில் தூண்டுதல்கள் வந்து சேர்கின்றன; இவைதாம் முகத்தில் உள்ள தசைகளை கட்டுப்படுத்துகின்றன. எனவே நம்மால் சரியான வார்த்தைகளைப் பேச முடிகிறது. இதோடுகூட இப்பகுதிகள் மூளையின் பார்வைக்கான பகுதியோடு இணைப்பை ஏற்படுத்துகின்றன, எனவே நம்மால் வாசிக்க முடிகிறது; அதேபோல் கேட்பதற்கான பகுதியோடு இணைப்பை ஏற்படுத்துவதால் நம்மால் கேட்டு, புரிந்துகொண்டு, மற்றவர்கள் கேட்பதற்கு பதிலளிக்க முடிகிறது. மேலும், பிரயோஜனமான எண்ணங்களை பசுமரத்தாணி போல் சேமித்து வைக்கும் நினைவாற்றல் மையம் அல்லது நினைவாற்றல் பேங்க்கோடு இணைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மூளையின் பகுதிகளுக்கு ஒரு பயணம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் பின்வருமாறு அறிவிக்கிறது: “மனிதனையும் மிருகத்தையும் நூல்பிடித்தார்போல் பிரித்துக்காட்டும் விஷயம் என்னவென்றால் வித்தியாசமான திறமைகளைக் கற்றுக்கொள்ளும் ஆற்றல், உண்மைகளையும் சட்டங்களையும் புரிந்துகொள்ளுதல், உலகத்தில் தன்னைச் சுற்றியுள்ள சடப்பொருட்களைப் பற்றி மட்டுமல்ல மற்றவற்றையும் முக்கியமாக மற்ற ஜனங்களைப் பற்றியும் அவர்களுடைய நடத்தைக்கான காரணங்களையும் தெரிந்துகொள்ளும் ஆற்றல் ஆகியவையே.”
[பக்கம் 7-ன் படம்]
மூளையின் வித்தியாசமான பகுதிகள், நிறம், உருவம், அளவு, வடிவம், ஒரு பொருளின் அசைவு ஆகியவற்றை கணக்கிடுகின்றன
[படத்திற்கான நன்றி]
Parks Canada/ J. N. Flynn