“மத துன்புறுத்தலின் பிரதான பலியாட்கள்”
மதத் துன்புறுத்தலானது வரலாறு முழுவதும் இருந்து வந்துள்ளது. காயீன் ஆபேலைக் கொலை செய்ததானது மத வேறுபாடுகளால் தூண்டிவிடப்பட்டது. கடவுள் ஆபேலின் பலியை ஏற்றுக் கொண்டு, தன்னுடையதை ஆதரவாக நோக்கவில்லை என்ற உண்மையைக் காயீன் விரும்பவில்லை. அவன் கோபங் கொண்டு முடிவில் தன் சகோதரனை கொலை செய்தான்.—ஆதியாகமம் 4:3–8.
இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்கள் துன்புறுத்தப்படுவார்கள், முக்கியமாக முடிவின் காலத்தில் அவ்விதமாகச் செய்யப்படுவார்கள் என்று சொன்னார். அவர் எச்சரித்தார்: “நீங்கள் . . . தண்டனைக்கும் கொலைக்கும் ஒப்புக் கொடுக்கப்படுவீர்கள். என்னிடம் நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தின் நிமித்தம் எல்லா ராஜ்யங்களின் மனுஷராலும் பகைக்கப்படுவீர்கள்.”—மத்தேயு 24:9, புதிய ஆங்கில பைபிள்.
பல ஆயிரம் ஆண்டுகளினூடாக பிரதான மதங்கள், மனிதர்மேல் தங்களுடைய ஏகபோக உரிமை அச்சுறுத்தப்படுவதைப் பார்த்த போது ஒன்றையொன்று துன்புறுத்தியிருக்கின்றன. கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்டுகள், இந்துக்கள், முகமதியர், யூதர்கள் இன்னும் மற்றவர்களும் பரஸ்பர இரத்தம் சிந்துதலில் ஈடுபட்டிருக்கின்றனர். வைதீகம், தவறாத சத்தியம், ஆத்துமாவின் இரட்சிப்பு என்பவற்றின் பெயரில் துன்புறுத்தலுக்கு நியாயங் கற்பிக்கப்பட்டுள்ளது. யூதர்கள் அவர்களுடைய மதம், இனம் இரண்டிற்காகவும் துன்புறுத்தப்பட்டனர். இந்த 20-வது நூற்றாண்டில் சில நாடுகளில், நாத்தீக கம்யூனிஸமானது, மதத்தை “மக்களின் ஓப்பியம்” என்பதாக கருதி அதற்கு எதிராக திரும்பியிருக்கிறது.
ஆகிலும், இந்த நூற்றாண்டில், ஒரு பிரிவினர், எல்லாப் பகுதியிலிருந்தும்—மதத்திலிருந்தோ அல்லது அரசியலிலிருந்தோ துன்புறுத்தலை அனுபவித்து வந்திருக்கின்றனர். அவர்கள் யார்? அவர்களுடைய உள்நோக்கங்கள் என்னவாக இருந்திருக்கின்றன?
“பிரதான பலியாட்கள்”
முன்னாள் வாட்டர்கேட் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்சிபால்ட் காக்ஸ் தான் சமீபத்தில் எழுதிய புத்தகமாகிய நீதிமன்றமும் அரசியல் சட்டமும் (The Court and the Constitution) (1987) என்பதில் எழுதுகிறார்: “இருபதாம் நூற்றாண்டில் ஐக்கிய மாகாணங்களில் மதத் துன்புறுத்தலின் பிரதான பலியாட்கள் யெகோவாவின் சாட்சிகளே.” இந்நிலையை தூண்டிவிட்டது எது? அவர் தொடர்ந்து எழுதுகிறார்: “அவர்களுடைய மதம் மாற்றும் வேலையும், எண்ணிக்கையும் துரிதமாக அதிகரித்தப் போது, 1930-களில் அவர்கள் மற்றவர்களின் கவனத்தைக் கவரவும் தடைகளுக்கு உட்படுத்தப்படவும் தொடங்கினர். பைபிளின் தெய்வீக வெளிப்படுத்தலுக்குக் கவனத்தை இழுத்து, உவாட்ச் டவர் பைபிள் அண்டு ட்ராக்ட் சொஸையிட்டியின் பிரசுரங்களை அளித்தும், சர்ச்சுகள், வியாபாரம் மற்றும் அரசியல் ஆகியவை சாத்தானின் உபகரணங்களாக இணைந்து செயல்படும் மூன்று அமைப்புகள் எனவும் அவர்கள் தெரு முனைகளில் நின்றும், வீடு வீடாகவும் பிரச்சாரம் செய்து பிரசங்கித்தார்கள்.”
தேசங்கள் இரண்டாவது உலக யுத்தத்தின் குழப்பத்தில் சிக்கியிருந்த பொழுது, சாட்சிகள் போரிடும் அரசாங்கங்களால் உற்சாகப்படுத்தப்பட்ட மூர்க்கத்தனமான தேசீய ஆவிக்குப் பலியாட்களாகவும் மதத்திற்காக உயிர்துறப்பவர்களுமானார்கள். சில தேசங்களில் பள்ளிகளில் கட்டாய கொடி வணக்கம் திணிக்கப்பட்டது. கட்டாய இராணுவ சேவை சட்டமாக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் இராயனுடையதை இராயனுக்குக் கொடுக்க வேண்டும் என ஒப்புக் கொண்டிருந்தபோதிலும்—அநேகமாக சில பிரிவினரே இவர்களைப் போல மனசாட்சிக்குட்பட்டு, தங்கள் வரிகளைச் செலுத்தி தங்கள் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களாக இருக்கிறார்கள்—கடவுளுக்குரியதாக அவர்கள் கருதும் வணக்கம், மிக உன்னதமான உத்தமத்தன்மை ஆகியவற்றை அவருக்குக் கொடுக்கின்றனர். ஒரு தேசத்தின் கொடி எந்தக் கொள்கைகளுக்காக நிற்கின்றதோ அவற்றை அவர்கள் மதித்தாலும் கொடி வணக்கமானது அவர்களுக்கு உருவ வழிபாட்டில் அடங்கிய ஒன்றாகும். ஐக்கிய மாகாணத்தில் 1930–40-ம் ஆண்டுகளில் இந்த நிலைநிற்கையானது அவர்களை பிரச்னைக்குள்ளாக்கியது.
கொடி வணக்கம் செய்ய மறுத்த நூற்றுக் கணக்கான பிள்ளைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பேராசிரியர் மேஸன் தன்னுடைய புத்தகமான ஹார்லான் ஃபிஸ்கி ஸ்டான்: சட்டத்தின் தூண் (Harlan Fiske Stone: Pillar of the Law) என்பதில் குறிப்பிடுகிறவிதமாகவே, “அவர்களுடைய மறுப்பதானது, அவர்கள் தேசபக்தி அற்றவர் என்றோ, தங்கள் தேசத்தை நேசிக்கவில்லை என்றோ அர்த்தங் கொள்ளவில்லை. கொடி வணக்கமானது அவர்கள் வேதாகமத்தைப் படிக்கும் போது, உருவாக்கப்பட்ட உருவங்களைப் பணிந்துக் கொள்ளக்கூடாது என்ற பைபிள் பூர்வமான தடையை மீறுவதையே குறிக்கின்றது.”
வழக்கு ஐக்கிய மாகாணங்களின் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 1940-ல் எட்டுக்கு ஒன்று என்ற வாக்களிப்பின்படி சாட்சிகளின் முறையீடு தள்ளுபடிச் செய்யப்பட்டது. அப்படியாக தனித்து, தைரியமாக அபிப்பிரயாயத்தில் மாறுபட்டவர் நீதிபதி ஹார்லான் ஃபிஸ்கி ஸ்டான். சிலர் எப்படி பிரதிபலித்தார்கள் என்று பேராசிரியர் மேஸன் விளக்குகின்றார்: “அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியனின் தலைவரான ஜான் ஹேய்னஸ் ஹோம்ஸ் என்பவர், ஸ்டானின் கருத்து வேறுபாடு, ‘அமெரிக்க வரலாற்றில் ஒரு மிக முக்கியமான கருத்து வேறுபாடாகக் கணக்கிடப்படும்’ என்று சொன்னார். பத்திரிகைகள் அதிக சாதகமாக பிரதிபலித்தன. நூற்று எழுபத்தியோரு முக்கிய பத்திரிகைகள் இம்முடிவு தவறென்று சரியாகவே கூறின. வெகு சிலவே அதை ஒப்புக்கொண்டன.” ஆனால் பின்பு என்ன நடந்தது?
பேராசிரியர் காக்ஸ் தன்னுடைய குறிப்பைத் தொடருகிறார்: “சாட்சிகளைத் துன்புறுத்துவதானது அதிகரித்தது. சிலப் பகுதிகளில், குறிப்பாக டெக்ஸாஸில் கொடி வணக்கம் செய்ய மறுத்ததற்காக சாட்சிகள் கலககும்பல்களால் தாக்கப்பட்டனர், ‘நாசி ஏஜென்டுகள்’ என்று பிடித்து வைக்கப்பட்டனர்.” மெய்ன் என்ற இடத்தில் ஒரு ராஜ்யமன்றம் எரிக்கப்பட்டது. இல்லினாஸில் ஒரு நகரத்தில், அந்நகர ஜனங்கள் அனைவரும் சேர்ந்துக் கொண்டு “அறுபது சாட்சிகளைத் தாக்கத் திரும்பினர்.” அதிகாரிகள் என்ன செய்தனர்? “பெரும்பாலும் காவல் துறை செயல்படாதிருந்தது அல்லது சுறுசுறுப்பாக இதில் பங்கு பெற்றது.” பேராசிரியர் மேஸன் குறிப்பிடும்விதமாகவே, “முதல் கொடி வணக்க வழக்கில் நீதிமன்றத்தின் முடிவே இந்த வன்முறை அலைக்கு நேரடியான காரணம் என்பதாக நீதித்துறை கண்டுள்ளது. எனவே மனித மனங்களின் போராட்டத்தில் நீதிமன்றமே ஓர் ஆயுதமாக ஆனது.”
குறிப்பிடத்தக்க ஒரு திடீர் திருப்பம்
கொடூரமான துன்புறுத்தல் இருந்தபோதிலும் சாட்சிகளின் பிள்ளைகள், விசுவாசமுள்ள மூன்று எபிரெயர்களைப் போன்று தேசீய சின்னத்தை வணங்க மறுத்தனர், இவர்களுடைய காரியத்தில் அது கொடியாக இருந்தது. (தானியேல், அதிகாரம் 3) உவாட்ச் டவர் சங்கத்தின் சட்டத்துறை தொடர்ந்து கொடி வணக்க வழக்குகளை மேல் விசாரணை நீதிமன்றங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. உண்மையில், “சமூக சுதந்திரங்களில் ஏற்படும் சட்ட பிரச்னைகளைத் தீர்க்க அவர்கள் செய்யும் உதவிக்காக அவர்கள் ஒரு தர்ம ஸ்தபனத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்று நீதிபதி ஸ்டான் குறிப்பிடும் அளவு யெகோவாவின் சாட்சிகள் தங்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.”—ஹார்லான் ஃபிஸ்கி ஸ்டான்: சட்டத்தின் தூண், பக்கம் 598.
பின்பு ஜுன் 14, 1943 அன்று (கொடி நாள்) ஐக்கிய மாகாண உச்ச நீதிமன்றம் ஓர் அசாதாரண நடவடிக்கை எடுத்தது. வேறு ஒரு கொடி வணக்க வழக்கில் (வெஸ்ட் வெர்ஜீனியா ஸ்டட் போர்டு ஆப் எட்யுகேஷன் பார்னெடுக்கு எதிரான வழக்கு) சாட்சிகள் குற்றமற்றவர்கள் என்று அவர்களை விடுவித்தது. அதே நாளில் யெகோவாவின் சாட்சிகளை உட்படுத்திய மற்றொரு வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு குறிப்பிட்டனர்: “சாட்சிகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில், பொல்லாத கெட்ட நோக்கத்துடன் தேசத்திற்கும் நாட்டிற்கும் எதிரடையான செயலைத் தூண்டும் அல்லது பரிந்துரைக்கும் விதமாக உள்ளது என்று உரிமை பாராட்டவோ நிரூபிக்கவோ இல்லையெனினும் அது (எழுத்து வடிவ சட்டம்) வழக்குத் தொடர்பவர்கள் மீது (சாட்சிகள்) சட்டத்தை உபயோகிக்கும் விதமானது அவர்களை தண்டிக்கிறது. . . . எங்களுடைய முடிவின்படி அத்தகைய தகவலின் பேரில் குற்றத்திற்கான தண்டனையை திணிக்க முடியாது.”
வழக்கு மன்றத்தின் பேச்சாளரான நீதிபதி ஜாக்ஸன், கமாலியேலைப் போல ஞானத்துடன் தன்னுடைய கருத்தையும் வெளியிட்டார்: “நம்முடைய அரசியல் சட்டமாகிய நட்சத்திரக் கூட்டத்தில் ஏதாவது ஒரு நிலையான நட்சத்திரம் இருக்குமாயின், அது என்னவென்றால் எந்த ஓர் உயர் அல்லது சிறிய அதிகாரியும் அரசியல், தேசீயம், மதம் அல்லது கருத்து வேறுபாட்டுக்கு உட்பட்ட வேறு காரியங்கள் ஆகியவற்றில் பழமையானது என்று ஒரு காரியத்தை செய்யும்படி குறிப்பிடவோ, அல்லது குடிமக்களை வார்த்தை அல்லது செயல் மூலமாக அவர்களுடைய விசுவாசத்தை ஒப்புக் கொள்ளும்படி கட்டுப்படுத்தவோ முடியாது என்பதே.” இந்த முடிவானது “வழக்கு மன்றத்தின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு திடீர் திருப்பமாகும்” என்று அழைக்கப்படுகிறது.—அப்போஸ்தலர் 5:34, 38, 39 ஒப்பிடவும்.
சாட்சிகள் கொடியை வணங்கவேண்டுமென்று சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்பது ஏன் நியாயமுள்ளதாக இருக்கின்றது? பேராசிரியர் காக்ஸ் விளக்குகிறார்: கோபிட்டிஸ் மற்றும் பார்னெட் ஆகிய பிள்ளைகளுக்கு (சாட்சிகள்) இழைக்கப்பட்ட குற்றமானது, அவர்கள் நம்பாத ஓர் அரசியல் வைதீக கோட்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று அரசு கட்டுப்படுத்தியதே.” சாட்சிகள் செய்த காரியமெல்லாம், “மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், தேவனுக்குக் கீழ்ப்படிவது நலம்” என்ற வேதாகமக் கொள்கையை பின்பற்றியதே.—அப்போஸ்தலர் 5:29.
சிறுபான்மையினர் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?
இந்த வழக்குகள் குறித்து தன்னுடைய ஆய்வில் காக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க கேள்வியை எழுப்புகிறார்: “கொடியை வணங்க மறுக்கும் மிகச் சிறுபான்மையினரின் மத சுதந்திரம் பற்றியோ அல்லது குழப்பமுண்டாக்கும் வைராக்கியத்துடன் பிரசங்கிக்கும் யெகோவாவின் சாட்சிகள் போன்றோரின் வாய்ப்புகளைப் பாதுகாக்கும்படியோ நாம் ஏன் கவலைப்படவேண்டும்? அவர் பதிலளிக்கிறார்: “ஒன்று நமது சமுதாயத்தின் கெளரவம் தனிப்பட்டவரின் கெளரவத்தின் பேரில் சார்ந்திருக்கிறது. இந்தக் கெளரவம் பழமைவாதிகளுக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை மறுக்கிறவர்களுக்கும் ஆகிய இருவருக்குமே உரிய ஒன்றாகும். அடுத்ததாக இன்று அரசு யெகோவாவின் சாட்சிகளின் பேச்சை மெளனமாக்கிவிடுகிறதென்றால் . . ., நாளை நம்முடையதாக இருக்கலாம்.”
ஆம், ஒரு பிரபலமற்ற சிறுபான்மையினரின் வணக்க சுதந்திரம் அடக்கப்படுவதானது, எல்லா குடிமக்களின் மற்ற சுதந்தரங்கள் அடக்கப்படுவதற்கு வழிநடத்தும் ஒரு சிறு ஆரம்பமாக இருக்கலாம். ஆனால் இதில் அக்கறையைத் தூண்டும் மற்றொரு காரியம் உண்டு என்று போராசிரியர் காக்ஸ் குறிப்பிடுகிறார்:
“அடக்குமுறையினால் தள்ளிப்போடப்படக்கூடிய அல்லது முழுமையாக இழந்துவிடப்படக்கூடிய சத்தியத்தை இந்த மிகச் சிறுபான்மையினர் கண்டு அடையலாம் என்ற உணர்வில் இது ஓரளவு சார்ந்திருக்கிறது.” அடக்குமுறையின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் சத்தியங்களில் ஒன்று யெகோவாவின் சாட்சிகளால் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. அது சமாதானம், இரட்சிப்பு ஆகியவற்றிற்கு மனித சமுதாயத்தின் ஒரே நம்பிக்கை, கிறிஸ்து இயேசுவினால் வரும் கடவுளுடைய ராஜ்ய அரசாங்கம் என்பதேயாகும்.—தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10.
“குழப்பமுண்டாக்கும்” கிறிஸ்தவர்கள்
சாட்சிகளைக் “குழப்பமுண்டாக்குபவர்கள்” என்று காக்ஸ் குறிப்பிடும்போது, ஆரம்ப கால கிறிஸ்தவ சீஷர்களை, அவர்களை எதிர்ப்பவர்கள் எப்படி வருணித்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். “உலகமுழுவதும் குழுப்பமுண்டாக்கிய இந்த மனிதர்கள் இப்பொழுது இங்கு வந்துள்ளனர் . . . இவர்கள் இயேசு என்றழைக்கப்படும் வேறொரு ராஜா இருக்கின்றார் என்று ராயனுடைய கட்டளைகளை எதிர்க்கின்றனர்.” (அப்போஸ்தலர் 17:6, 7, புதிய சர்வதேசீய மொழிபெயர்ப்பு) பல நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் தங்களை இதே போன்ற நிலையில் தான் கண்டிருக்கின்றனர்! ஏன் அப்படி? ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட அதே காரணங்களுக்காகத்தான்—தங்களுடைய ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவிடமும் அவருடைய ராஜ்யத்தினிடமும் அவர்களின் பற்றுறுதிக்காக.
சாட்சிகளின் வெற்றிகரமான பிரசங்க வேலையானது பழமைவாதிகளான குருவர்க்கத்தை உலகபிரகாரமான அதிகாரிகளின் உதவியை நாட தூண்டியிருக்கிறது. இது பவுலின் வெற்றிகரமான ஊழியத்துக்குப் பின்னால் நடந்ததற்கு ஒத்திருக்கின்றது: “ஆனால் யூதர்கள் பொறாமையினால், ஜனங்களில் கீழ்த்தரமான சிலரை நியமித்து, கலகத்தை உண்டுபண்ணி, நகரத்தைக் கொந்தளிப்பிற்குள்ளாக்கினர். அவர்கள் யாசோனையும், சபை அங்கத்தினர் வேறு சிலரையும் நியாயாதிபதியின் முன் இழுத்து வந்தனர்.”—அப்போஸ்தலர் 17:5, 6, புதிய ஆங்கில பைபிள்.
யெகோவாவின் சாட்சிகள், பல நாடுகளில் போர் காலத்திலும் அமைதிக் காலத்திலும் அநீதியான துன்புறுத்தலினால் வேதனைப்பட்டிருக்கின்றனர். பல சமயங்களில் மதத் தலைவர்களே சாட்சிகளின் நடவடிக்கைகளைத் துண்டிக்கும்படி அப்போது ஆட்சியிலிருக்கும் பெரிய மனிதர்களிடம் தங்களுக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகைய துன்புறுத்தல்களை அதிகரித்திருக்கின்றனர். கத்தோலிக்க ஸ்பய்ன் தேசத்தில், 1950-லிருந்து 1970-க்கு இடைப்பட்ட காலத்தில் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டதானது இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும். தனிமையில் தங்களுடைய வீட்டில் பைபிள் படித்ததற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள் வேட்டையாடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டனர், சிறையிலிடப்பட்டனர். கிறிஸ்தவ நடுநிலைமையை மேற்கொண்டதற்காக நூற்றுக்கணக்கான இளம் ஆண்கள் ஒவ்வொருவரும் பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ராணுவச் சிறையில் கழித்தனர்.a
பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் சீனார் மார்டின்-ரெடோரிடில்லோ பின்வருமாறு கூறுமளவுக்கு ஸ்பய்னில் யெகோவாவின் சாட்சிகளின் நிலைமை அந்த அளவு தனித்து நின்றது: “ஒருவர் பத்து வருட நீதி சாஸ்திரத்தைப் படிக்கும்போது, பொது ஒழுங்கை முன்னிட்டு மத நடத்தையைப் பாதிக்கும் அரசின் நடவடிக்கையின் சம்பந்தமாக ஓர் உண்மை நிச்சயமாகவே அவரின் கவனத்தைக் கவர்கின்றது: அது என்னவெனில் கிட்டத்தட்ட எல்லா வழக்குகளிலும் உட்பட்டவர்கள் ஒரே ஒரு மதப்பிரிவின் அங்கத்தினர் . . . ‘யெகோவாவின் சாட்சிகள்.’”
துன்புறுத்தல் சாட்சிகளை தடை செய்வதில் தோல்வியடைகிறது
1970-லிருந்து யெகோவாவின் சாட்சிகள் ஸ்பய்னில் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை அனுபவித்துவந்திருக்கின்றனர். அன்று சுறுசுறுப்பாக இருந்த 10,000 பேருக்குப் பதிலாக இன்று சுமார் 73,000 பேர் சுமார் 1,000 சபைகளுடன் கூட்டுறவுக் கொண்டிருக்கின்றனர். முன்னேற்றத்தில் இதேப் போன்ற ஒரு வேகம் ஐக்கிய மாகாணத்தைக் குறித்ததிலும் உண்மையாக உள்ளது. பேராசிரியர் காக்ஸ் குறிப்பிடும் காலத்தில் (1930–1940) ஐக்கிய மாகாணத்தில் சுமார் 40,000-லிருந்து 60,000 சாட்சிகளே இருந்தனர், உலகம் முழுவதிலும் சுமார் 1,15,000 பேர்களே இருந்தனர். ஆனால் இன்று ஐக்கிய மாகாணங்களில் 7,97,000 சாட்சிகளும் உலகம் முழுமையுமாக 57,000 சபைகளுடன் கூட்டுறவுக் கொண்டுள்ள சுமார் 35,00,000 பேர்கள் உள்ளனர். துன்புறுத்தல் அவர்களுடைய உலகளாவிய படிப்பிக்கும் வேலையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதில் தோல்வியடைந்துள்ளது.
துன்புறுத்தலை எதிர்ப்படும்போது சாட்சிகள் கொடுக்கக்கூடிய பதில் ஒன்றே ஒன்றுதான்: “தேவனுக்குச் செவிக்கொடுப்பதைப் பார்க்கிலும் உங்களுக்குச் செவிக்கொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப் பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடதே.”—அப்போஸ்தலர் 4:19, 20. (g88 6⁄8)
[அடிக்குறிப்புகள்]
a ஸ்பேய்னில் நடத்த இந்தத் துன்புறுத்தலைப் பற்றிய விவரமான அறிக்கைக்கு 1978 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகத்தில் பக்கங்கள் 164–247 பார்க்கவும்.
[பக்கம் 22-ன் படம்]
கொடியை வணங்க மறுப்பது அவமதிப்பதாகாது என்பதாக நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கின
[படத்திற்கான நன்றி]
Office of the Curator, The Supreme Court of the United States
[பக்கம் 23-ன் படம்]
நீதிபதி ஸ்டோன் மாத்திரமே 1940 உச்ச நீதி மன்ற தீர்ப்பில் யெகோவாவின் சாட்சிகளின் நிலைநிற்கையை ஆதரித்தார்
[பக்கம் 24-ன் படம்]
பெரும்பாலான வாக்களிப்பின் மூலம், இந்த நீதிபதிகள் கொடி வணக்கப் பிரச்னையில் சாட்சிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினர்