ஜப்பானில் எல்லாவற்றிற்கும் ஒரு காலம்
ஜப்பான் விழித்தெழு! நிருபர் எழுதியது
ஓர் இளம் மனிதன் ஜப்பானின் கிராமப்புறத்திலிருந்து கல்லூரிப் படிப்புக்காக டோக்கியோ வந்தான். அங்கு அவன் ஓர் அழகிய அறிவுத்திறன் படைத்த பெண்ணைச் சந்தித்து அவளை விவாகம் பண்ண விரும்பினான். ஆனால் அவனுடைய தந்தை அவர்களுடைய காதல் சந்திப்புகளைக் கடுமையாக எதிர்த்ததினால் அவன் இந்தக் காதல் விவகாரத்தைக் கைவிடவேண்டியதாயிருந்தது. ஏன்? ஏனென்றால் ஜப்பானியரின் பரம்பரை நாள்காட்டியின்படி, அவன் பிறந்த தேதியும் அவள் பிறந்த தேதியும் ஒத்துப்போகவில்லை.
ஜூன் 13, 1985, காவற்கோபுர சங்கத்தின் ஜப்பான் கிளை எபினாவுக்கு அண்மையில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்துக்காக இரும்பு அமைப்பு சார்ந்த வேலையைத் தொடங்க திட்டமிட்டது. என்றபோதிலும் அந்த இரும்பு அமைப்பு நிறுவனம் குறிப்பிடப்பட்டிருந்த அந்தத் தேதியில் வேலையைச் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் ஜப்பானியரின் பரம்பரை நாள்காட்டியின்படி அது ஒரு “துரதிர்ஷ்ட நாள்.” ஜப்பானியர்கள் அறிவுதிறன் படைத்தவர்களும், சுறுசுறுப்பானவர்களும், கல்வியறிவில் சிறந்தவர்களும் என்பதில் சந்தேகம் இல்லை. என்றாலும், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நல்ல நேரம் என்பது அவர்களுடைய பாரம்பரியத்தில் ஆழமாக வேர்கொண்டிருக்கிறது. ஜப்பானில் ஒரு காரியத்தைச் செய்வதற்கும் செய்யாமலிருப்பதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. இப்படிப்பட்ட கண்டிப்பான மூடநம்பிக்கை சார்ந்த நேரம் பற்றிய கருத்து எப்படி தோன்றியது? நவீன ஜப்பானிய சமுதாயத்தில் வாழ்க்கை எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது? இதைப் பற்றி தெரிந்துகொள்வது நமக்கு எவ்விதத்தில் நன்மையாக இருக்கும்?
ஜப்பானியரின் பரம்பரைக் காலண்டர்
ஜப்பானில் மேற்கத்திய காலண்டர் பொதுப்பழக்கத்தில் இருந்த போதிலும், சீனாவில் பொ.ச. 604-ல் அமைக்கப்பட்ட ஒரு பூர்வீக சந்திரமாத நாள்காட்டி அதோடுகூட பயன்படுத்தப்படுகிறது. நேரத்தைக் கணக்குப்போடும் இந்த முறை 60 கொண்ட ஒரு காலவட்டத்தின் அடிப்படையிலானது; 10 விண்ணுலகம் சார்ந்த தண்டுகளும் 12 மண்ணுலகம் சார்ந்த கிளைகளும் என்றழைக்கப்படும் இரண்டு தொகுதிச் சின்னங்களின் முறைமாற்றத்தாலும் கோர்வையாலும் உருவானது.
ஜப்பானியரின் கருத்துப்படி, முதலில் குறிப்பிடப்பட்ட தொகுதி (பத்து தண்டுகள்) அகிலாண்டம் குறித்து ஜப்பானியர் வகுத்த எண்ணத்தின் அடிப்படயிலானது. அது பஞ்சபூதங்களாலானது—மரம், அக்கினி, பூமி, உலோகம், தண்ணீர்—ஒவ்வொரு அடிப்படைக்கூறும் இரண்டு அம்சங்களைக் கொண்டது: யாங் (ஆண், அல்லது நேர்நிலைத் தன்மைகளாகிய ஒளி, வெப்பம், காய்ந்த நிலை, செயல்படுதல்) மற்றும் யின் (பெண், அல்லது எதிர்நிலைத் தன்மைகளாகிய இருள், குளிர், ஈரம், செயலின்மை). அந்தப் 12 மண்ணுலகம் சார்ந்த கிளைகள் வரிசையாக 12 விலங்குகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது—எலி, எருது, புலி, முயல், வலுசர்ப்பம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி.
முதல் தண்டு முதல் கிளையுடன் இணைந்து மரம்–யாங் எலி என்ற கூட்டுடன் காலவட்டம் ஆரம்பமாகிறது. அடுத்து இரண்டாவது தண்டு இரண்டாவது கிளையுடன் இணைகிறது, அல்லது மரம்–யின் எருது கூட்டு இணைகிறது. அதைத் தொடருவதுதான் அக்கினி–யங் புலி, நெருப்பு–யின் முயல் போன்றவை. இந்த முறையில் அமையும் மொத்தக் கூட்டு 60, எனவேதான் 60-ஐ சார்ந்த காலவட்டமாயிருக்கிறது. நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஆகிய அனைத்துமே அதே 60-ஐ சார்ந்த காலவட்டத்தில் கணக்கிடப்படுகிறது. பொ.ச. 604 முதல் காலவட்டத்தை ஆரம்பித்துவைத்தது, அதுமுதல் ஒவ்வொரு 60 ஆண்டும் புதிய காலவட்டமாயிருந்தது. தற்போதைய காலவட்டம் 1984-ல் ஆரம்பமானது. எனவே 1988 என்னவாயிருக்கும்? அது காலவட்டத்தில் ஐந்தாவது வருடமாயிருக்குமாதலால் அது பூமி–யாங்–வலுசர்ப்பம் ஆண்டு.
“காலங்களை முடிவுசெய்யும்” பஞ்சாங்கம்
சோதிட தொடர்பின் காரணத்தால் அந்தக் காலவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் ஆதாரமற்ற மூடநம்பிக்கைகளுக்கடுத்த பொருள் கொண்டன. இந்தப் பல மூடநம்பிக்கைக்கடுத்த கருத்துக்களும் ஆசரிப்புகளும் ஓர் ஆண்டு பஞ்சாங்கத்தில் அச்சடிக்கப்பட்டன. இன்றுங்கூட, ஜப்பானியர் பலர் அனுதின வாழ்க்கையின் எல்லாவித நடவடிக்கைகளிலும் அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம், வெற்றி அல்லது தோல்வி ஆகியவற்றைத் தீர்மானிக்க ஜாதகம் பார்க்கின்றனர்.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வருடத்தில் பிறப்பவர்கள் அந்த ஆண்டு பிரதிநிதித்துவம் செய்யும் மிருகத்தின் தன்மைகளைக் கொண்டிருப்பார்கள் என்று இன்னும் அநேக ஜப்பானியர் நம்புகின்றனர். உதாரணமாக எலி சின்னத்தில் பிறப்பவர்கள் அமைதியிழந்தவர்களாகவும் கஞ்சத்தனமுள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது; எருது சின்னத்தில் பிறப்பவர்கள் பொறுமையாயும் காரியங்களை மெதுவாகச் செய்கிறவர்களாகவும் இருப்பார்கள். புலி, சிடுசிடு என்றும் முரட்டுத்தனமாகவும் இருப்பார்கள்; பாம்பு, சந்தேகிக்கிறவர்களாகவும் மற்றவர்களுடன் நல்லவிதத்தில் பழகாதவர்களாகவும் இருப்பார்கள். ‘ஓ, அவள் பாம்பு வருடத்தில் பிறந்தவள்—அதனால்தான் அவள் அப்படி இருக்கிறாள்!’ இது போன்ற கூற்றுகள் ஜப்பானில் சர்வசாதாரணமானவை.
அந்த ஜாதகத்தின்படி, அக்கினி–யங்–குதிரை ஆண்டில் பிறக்கும் பெண்கள் (காலவட்டத்தில் 43-வது) தலைகனம் பிடித்தவர்களாகவும், தங்களுடைய கணவர்களைக் கொன்றுவிடும் சுபாவமுள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. இதனால், மக்கள், குறிப்பாக கிராமப்புரவாசிகள் அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் பிள்ளைகளைக் கொண்டிருப்பதைத் தவிர்க்கின்றனர். இதனால் பள்ளி வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை அதிகக் குறைவாக இருக்கும். இப்படியாக அக்டோபர் 1985-ல் அசாஹி ஷிம்பன் என்ற தினசரி “இடநெருக்கடியுள்ள பள்ளிகளின் நொடிப்பு உயருகிறது” என்ற தலையங்கத்தின் கீழ் விளக்கியதாவது, 1966-ல் (ஓர் அக்கினி–யாங்–குதிரை ஆண்டு) ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை எப்பொழுதும் இருந்ததைவிட வெகுவாகக் குறைந்திருந்தது. அந்த ஆண்டில் பிறந்த பிள்ளைகள் பொதுவாக 1984, 1985-ல் பள்ளிகளை ஆதரித்திருப்பார்கள்.
அந்தக் காலவட்டத்தின் சில நாட்கள் நல்ல நாட்களாக அல்லது யோகமான நாட்களாகக் கருதப்படுகின்றன, மற்றவை நேரெதிராகக் கருதப்பட்டது. இதில் கோமிநிச்சி, அல்லது ஐந்து கல்லறை தினங்கள் உட்படுகின்றன. இந்த நாட்களில் பூமியின் அமைதி குலைக்கப்பட அல்லது அசைவிக்கப்படக்கூடது. அநேகர் இந்நாட்களில் ஈமச்சடங்கு செய்வதைத் தவிர்க்கின்றனர், ஏனென்றால் எவருமே ஐந்து கல்லறைகளைக் கொண்டிருக்க, அதாவது ஐந்து பேரை அடக்கம் செய்யும் நிலைக்குள்ளாவதை விரும்புவதில்லை. எந்த ஒரு பெரிய காரியத்தையும் செய்வதற்கு முன்னால், காரியங்களைக் குறித்து நிச்சயமாயிருக்க, ஒருவர் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும் என்றிருக்கின்றனர்.
காலண்டரும் ஜாதமும் மிக முக்கியமாக விவாகங்களில் முக்கிய பங்கை வகிக்கின்றன. திருமணமாகும் ஒவ்வொரு பத்து தம்பதிகளில் ஆறு தம்பதிகள் தங்களுடைய திருமணம் “காதல் திருமணம்” என்று சொன்னாலும், பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள் ஜப்பானில் இன்றும் பொதுவாகக் காணப்படுகிறது, ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அதிக அக்கறைக்குரிய காரியமாயிருக்கிறது. ஜாதகம் திருமண நேரத்தைக் குறிப்பிடுவதோடுகூட, விவாகப் பொருத்தமுடையவர்கள் யாவர் என்பதையுங்கூட கூறுகிறது. உதாரணமாக, எலி ஆண்டில் (1948, 1960, 1972) பிறந்த ஒருவர் வலுசர்ப்பம் ஆண்டில் (1952, 1964, 1976), குரங்கு ஆண்டில் (1956, 1968, 1980), அல்லது எருது ஆண்டில் (1949, 1961, 1973) பிறந்த ஒருவருக்கு விசேஷமாகப் பொருத்தமுடையவராயிருப்பார். “காதல் திருமணங்களில்கூட,” பிறந்த ஆண்டு “பொருத்தமுடைய” ஒருவரை மட்டுமே விவாகம் செய்யும்படியான அழுத்தம் உறவினரிடமிருந்துதான் வருவதாயிருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு “முடிவுசெய்யப்பட்ட” முறையின் பாதிப்புகள்
அறியப்படாததற்கான பயமும் அதிர்ஷ்டத்தை நாடுதலும் பூர்வீக ஜப்பானியர் வாழ்க்கை வழியில் ஒரு பலமான பிடியைக் கொண்டருந்தது. ஆனால் நவீன ஜப்பானில் கல்வியறிவு 100 சதவிகிதத்தை எட்டிய போதிலும், தொழில் நுட்பம் முன்னேறிய நிலையிலிருக்கிற போதிலும் மூடநம்பிக்கையின் பலமான பிடி குறையவில்லை.
அரசின் கல்வித்துறையால் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின் முடிவின்படி, பிரதிபலித்த பெரியவர்களாகிய 6,373 பேரில் 33 சதவிகிதத்தினர் “நல்ல நாள்,” “கெட்ட நாள்” குறித்து அவை “நிச்சயமாகவே உண்மை” என்றனர், 44 சதவிகிதத்தினர் “உண்மையாக இருக்கலாம்” என்றனர். திருமணத்தில் ஜாதக பொருத்தம் குறித்ததில் 23 சதவிகிதத்தினர் “நிச்சயமாகவே உண்மை” என்றனர், 36 சதவிகிதத்தினர் “உண்மையாக இருக்கலாம்” என்றனர். அது கடந்த காலத்துக்குரிய காரியமாயிருப்பதற்கு மாறாக, பொது ஆய்வில் பாதி முதல் முக்கால் பாக மக்கள் இன்னும் அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிய மதம் என்ற புத்தகம் குறிப்பிடுகிறபடி, “அது மக்களுடைய வாழ்வின் ஒரு பாகமாயிருக்கிறது.”
ஆனால் அப்படிப்பட்ட நம்பிக்கைகள் மக்களை எவ்விதத்தில் பாதிக்கிறது? மூடநம்பிக்கைகளுக்கடுத்த கருத்துக்களை அப்படியே பின்பற்றுவதால் ஒரு நபர் தனிப்பட்ட காரியங்களின்பேரில் சிந்திக்கும் மற்றும் நிதானிக்கும் திறமையை இழக்க ஆரம்பிக்கக்கூடும். ஜாதகத்தின் கூற்றுகள், ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள் எவ்வளவு நியாயமற்றதாயும் தர்கரீதியாக இல்லாதிருந்தாலும், வாழ்க்கையில் தான் எடுக்க வேண்டிய தெரிவுகள் அனைத்தின்மீதும் செல்வாக்குடையதாயிருக்கிறது. இப்படியாக விரைவில், ஜாதகம் இல்லாமல் தான் எந்தக் காரியத்தையும் தீர்மானிக்க முடியாத நிலையில் தன்னைக் காண்பான்.
“முடிவுசெய்யப்பட்ட காலங்களில்” மற்றும் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, வாழ்க்கை விதியின்பேரில் சார்ந்திருக்கிறது என்ற நம்பிக்கையை வளர்க்கிறார். கையெடுத்தக் காரியம் அல்லது ஏதோ ஒரு காரியம் வெற்றிபெறாவிட்டால், துரதிர்ஷ்டம் அல்லது நேரம் சரியில்லை என்று சொல்லிவிடுவது மிகவும் எளிது. தோல்விக்கு உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக, ஒருவர் அதிர்ஷ்டம் தேடி அதிலேயே தொடருகிறார். இதிலும் அவர் ஏமாற்றம் அடையும்போது, முதலிடத்தில் வெற்றி தனக்கானதல்ல என்று சொல்லிமுடித்துவிடுகிறார். இப்படிப்பட்ட விஷமம் கொண்ட காலவட்டம் மக்களை மூடநம்பிக்கைகளிலும் பயத்திலும் மேலும் மேலுமாக அடிமையாக்கிவிடுகிறது.
ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? ஆம், நிச்சயமாக. ஜப்பானில் 1,25,000-ற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் பின்வரும் பைபிள் வாக்குத்தத்தத்தை அனுபவித்திருக்கிறார்கள்: “சத்தியத்தை அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) இது மூடநம்பிக்கைகளுக்கு அடிமைப்பட்டிருத்தலிலிருந்தும் விடுதலையை உட்படுத்துகிறது. பைபிள் படிப்புதானே அவர்களைத் தெளிந்த யோசனைக்கும், தன்னம்பிக்கை கொள்வதில் முன்னேற்றம் காண்பதற்கும் மகிழ்ச்சியான ஓர் எதிர்கால நம்பிக்கைக்கும் இவற்றின் விளைவாக மகிழ்ச்சிக்கும் வழிநடத்தியிருக்கிறது. (g88 7⁄22)
[பக்கம் 23-ன் படங்கள்]
விவாகத் துணைவர்களும் விவாக நாட்களும் ஜாதகப் பொருத்தம் பார்த்து தெரிவு செய்யப்படுகின்றன