ஏன் புதிய கருத்துக்களை ஏற்கும் பண்புடையவராக இருக்க வேண்டும்?
மனக்குழப்பத்தின் திரை படிப்படியாக மேலெழுந்த போது, அமெரிக்க கடற்படைத் தளபதி மேத்யூ C. பெர்ரி, சுஸ்குவஹானா என்ற தம்முடைய கொடிக்கப்பலின் தளத்திலிருந்து ப்யூஜி மலையைப் பார்வையிட்டார். ஜப்பானைக் காண மிகவும் ஆவலாயிருந்த அவர், கடைசியாக, ஏழு மாதங்களுக்கும் மேலான கடற்பயணத்துக்குப் பின்பு 1853, ஜூலை 8-ம் தேதி அதை வந்தடைந்தார். தேசத்தைப் பற்றிக் கிடைக்கக்கூடியதாயிருந்த ஒவ்வொரு செய்தியையும் கடற்படைத் தளபதி படித்திருந்தார். ஏன்? ஏனென்றால், “வெளி உலகத்திலிருந்து தன்னிச்சையாகத் தன்னைப் பிரித்து வைத்துக் கொண்ட” இந்த நிலப்பகுதியை அவர் உலகுக்கு வெளிப்படுத்த எண்ணியிருந்தார்.
ஆம், தன்னிச்சையாக வெளி உலகத் தொடர்பின்றி தன்னைப் பிரித்து வைத்துக்கொண்டது! ஜப்பான் 200-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர், சீனா, கொரியா, ஆலந்து தவிர எல்லாத் தேசங்களோடும் வர்த்தக மற்றும் கலாச்சார பிணைப்புகளை துண்டித்துக் கொண்டுவிட்டிருந்தது. தேசம் அமைதிகுலைக்கப்படாத தன்னிறைவில் பின்னடைவுக் கண்டது. அந்த நிலையில், இது புதிய கருத்துக்களை ஏற்க மறுத்து, தங்களுடையதிலிருந்து வித்தியாசப்படும் அபிப்பிராயங்களைச் செவி கொடுத்துக் கேட்க மறுக்கும் அநேக தனிநபர்களை ஒத்திருந்தது. சில விதங்களில் இது ஆறுதலளிப்பதாக இருக்கக்கூடும், ஏனெனில் புதிய கருத்துக்கள் குழப்பமுண்டாக்குவதாகவும் பயமுறுத்துவதாகவுங்கூட இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட நிலை ஞானமானதா? சரி, ஜப்பானின் தனித்திருக்கும் கொள்கையின் விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஜப்பான் தனித்திருக்க வழிநடத்தியது என்ன?
ஜப்பான் காரணமின்றி தனித்திருக்க விரும்பவில்லை. 1549-ல் இயேசு நாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்க குழுவின் மிஷனரி ப்ரான்சிஸ் சேவியர், தன்னுடைய மதத்தைப் பரப்புவதற்காக ஜப்பான் வந்து சேர்ந்தார். ஒரு குறுகிய காலத்துக்குள், ரோமன் கத்தோலிக்க மத உணர்ச்சி தேசத்தில் பிரபலமானது. அந்தச் சமயத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர்கள் ஒரு புத்தமதப் பிரிவினரின் மதசம்பந்தமான கிளர்ச்சியை எதிர்ப்பட்டிருந்ததால் அதுவே கத்தோலிக்கர்கள் மத்தியிலும் நிகழக்கூடிய சாத்தியத்தை இவர்கள் கண்டார்கள். ஆகவே கத்தோலிக்க மதம் தடை செய்யப்பட்டது. தடையுத்தரவு கண்டிப்பாக அமல்படுத்தப்படவில்லை.
ஜப்பான் “தெய்வீகத்தன்மை வாய்ந்தது” என்பதாக உரிமைப்பாராட்டிய ஆட்சியாளர்கள் ஒரு “கிறிஸ்தவ” மதம் தங்கள் அமைப்பை அச்சுறுத்துவதை அனுமதிக்க மனமில்லாதவர்களாக இருந்தனர். அப்படியென்றால் கத்தோலிக்க மதத்தின் மீது போட்ட தடையுத்தரவை ஏன் அவர்கள் கண்டிப்போடு அமல்படுத்தவில்லை? ஏனென்றால் கத்தோலிக்க மிஷனரிமார்கள் போர்ச்சுகல் நாட்டு வியாபார கப்பல்களில் வந்திறங்கினார்கள். இந்தக் கப்பல்களினால் கிடைத்த இலாபங்களை அரசாங்கம் மிகவும் வாஞ்சித்தது. என்றபோதிலும் கத்தோலிக்கர்கள் ஜப்பானியர் மீது படிப்படியாக செல்வாக்கு செலுத்தக்கூடும் என்ற பயத்தைவிட ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர்களின் வியாபார ஆசை முக்கியத்துவத்தில் மேம்பட்டிருந்தது. இதன் காரணமாக, அயல்நாட்டு வியாபாரம், நாடுவிட்டுக் குடிபெயர்ந்து செல்லுதல் மற்றும் “கிறிஸ்தவர்கள்” மீது கட்டுப்பாட்டைக் கடுமையாக்கும் ஆணைகளை அவர்கள் பிறப்பித்தனர்.
துன்புறுத்தப்பட்ட, இக்கட்டுக்குள்ளான “கிறிஸ்தவர்கள்” உள்ளூர் மானிய நிலத் தலைவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த போது, அதுவே கடைசித் துரும்பாக இருந்தது. கிளர்ச்சியைக் கத்தோலிக்க மதப் பிரசாரத்தின் நேர் விளைவாகக் கருதி, ஜப்பானின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஷோகுன்கள் போர்ச்சுகல் நாட்டவரை வெளியேற்றி ஜப்பானியர்கள் வெளிநாடு செல்வதை தடுத்தனர். 1639-ல் இவ்வாணை பிறப்பிக்கப்பட்டது முதல் ஜப்பானின் தனித்திருக்கும் நிலை நிஜமானது.
ஜப்பானோடு தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரே மேற்கத்திய நாட்டவர், ஆலந்து நாட்டவரே. இவர்கள் அப்போது நாகசாகி துறைமுகத்திலிருந்த ஒரு சிறிய தீவாகிய டெஜிமாவில் ஜனநெருக்கத்தில் வாழ்ந்துவந்தனர். 200 ஆண்டுகளாக, மேற்கத்திய கலாச்சாரம் இப்பொழுது மீட்டுக் கொள்ளப்பட்டிருக்கும் டெஜிமாவின் மூலமாக மாத்திரமே பரவியது. ஒவ்வொரு ஆண்டும், தீவின் வர்த்தக இயக்குநர், வெளி உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கும் “ஆலந்து நாட்டு அறிக்கை” ஒன்றைச் சமர்ப்பித்தார். ஆனால் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஷோகுன்கள், இந்த அறிக்கைகளை வேறு எவரும் பார்த்துவிடாதிருப்பதை உறுதி செய்துகொண்டனர். ஆகவே கடற்படைத் தளபதி பெர்ரி 1853-ல் அவர்களுடைய கதவை வந்து அடித்துத் தள்ளும் வரையாக ஜப்பானியர் வெளி உலகத்தோடு தொடர்பின்றியே வாழ்ந்து வந்தனர்.
தனித்திருக்கும் கொள்கை கைவிடப்பட்டது
பெர்ரியின் கருப்பு நீராவிக் கப்பல்கள், எடோ விரிகுடாவினுள் புகையைக் கக்கிக் கொண்டு சென்றபோது, குழம்பிப் போன உள்ளூர் மீனவர்கள் இவைகள் நடமாடும் எரிமலைகள் என்பதாக நினைத்தனர். எடோவின் குடிமக்கள் (இப்பொழுது டோக்கியோ) கலவரமடைந்து, அநேகர் தங்கள் தட்டுமுட்டு சாமான்களோடு நகரத்தை விட்டு ஓடினர். இந்தப் புறப்பாடு அத்தனை பெரியதாக இருந்ததால், மக்களை அமைதிப்படுத்த அரசாங்கம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவது அவசியமானது.
கப்பற்படைத் தளபதி பெர்ரியின் ஏற்பாடாக இருந்த நீராவிக் கப்பல்கள் மாத்திரமல்ல, அவர் கொண்டுவந்திருந்த பரிசுகளாலும்கூட வெளி உலகம் தெரியாதிருந்த மக்கள் திகைப்படைந்தனர். ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொன்றுக்கு தந்தி மூலம் அனுப்பப்பட்ட செய்திகளால் ஆச்சரியத்தில் மூழ்கினர். பெர்ரியின் மேற்பார்வையின் கீழ் தொகுக்கப்பட்ட சீனா கடல்களுக்கும் ஜப்பானுக்கும் அமெரிக்கப் படையணிப் பிரிவின் சுற்றுப்பயணத்தின் கதை, “ஆறு வயது குழந்தையையும்கூட தாங்க இயலாத” மிகச் சிறிய உருவ தொடர்வண்டியின் மீது குதித்து மகிழ்வதைத் தவிர்க்கக்கூடாத ஜப்பானிய அதிகாரிகளைப் பற்றி சொல்கிறது. சீன நாட்டு ஆளும் வர்க்கத்திலிருந்த உயர்தரப்பணியாளர் ஒருவரும்கூட “அவருடைய தளர்த்தியான மேலங்கி காற்றில் பறக்க” கூரையைப் பிடித்துக் கொண்டார்.
ஜப்பானிய கதவுகள், அடுத்த ஆண்டில் பெர்ரியின் இரண்டாவது விஜயத்தின் போது முழுவதுமாக திறந்துவிடப்பட்டன. அழுத்தத்துக்கு விட்டுக்கொடுத்து அரசாங்கம் தேசத்தை திறந்து வைத்தது. ஜப்பானை வெளி உலகத் தொடர்பின்றி காத்துக் கொள்ள விரும்பிய கடும் பிற்போக்காளர்கள் பயங்கரவாதத்தின் உதவியை நாடி, அரசாங்கத்தின் முதல் மந்திரியைக் கொலை செய்து அயல்நாட்டவரைத் தாக்கினார்கள். ஒருசில நில பிரபுக்கள் அயல்நாட்டு கப்பற்படையின் மீது குண்டுவீச்சு நடத்தினர். ஆனாலும் அவர்களுடைய தாக்குதல் கடைசியாக குறைந்து, பேரரசர் ஆட்சிப்பொறுப்பை டோக்காவா என்ற ஷோகுனிடமிருந்து மீண்டும் பெற்றார்.
ஜப்பானிய கதவை பெர்ரி திறப்பதற்குள், மேற்கத்திய நாடுகள் தொழில்புரட்சியை ஏற்கெனவே அனுபவித்துவிட்டிருந்தன. ஜப்பான் தனித்திருந்ததால் அவள் மிகவும் பின்தங்கிவிட்டிருந்தாள். தொழில் வளர்ச்சி கண்ட தேசங்கள் நீராவி சக்தியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தன. 1830-களுக்குள் நீராவி என்ஜீன்களும் நீராவி சக்தியால் இயங்கிய இயந்திரங்களும் சாதாரண உபயோகத்திலிருந்தன. ஜப்பானின் தனித்திருக்கும் கொள்கை தொழில் துறையில் அதனை வெகுவாக பின்தங்கியிருக்கச் செய்தது. இது ஐரோப்பாவுக்கு சென்ற முதல் ஜப்பானியக் குழுவால் வெகுவாக உணரப்பட்டது. 1862-ல் லண்டனில் நடத்தப்பட்ட ஒரு பொருட்காட்சியில், ஜப்பானியர் காட்சிக்கு வைத்தவை காகிதத்தாலும் மரத்தாலுமானவையாக இருந்தன. சங்கடமாக உணர்ந்த ஒரு பிரதிநிதியின்படி, “பழங்காலக் கடையில் காட்சிக்கு வைக்கப்படுபவைப்” போன்று அவை இருந்தன.
ஐரோப்பாவிலும் ஐக்கிய மாகாணங்களிலுமிருந்த ஜப்பானியக் குழுவினர் தங்கள் தேசத்தை தொழில்மயமாக்க வேண்டிய அவசரத் தேவையை உணர்ந்து நவீன கண்டுபிடிப்புகளையும் கருத்துக்களையும் ஆவலோடு அறிமுகஞ் செய்து வைத்தனர். பெர்ரியின் முதல் விஜயத்துக்கு அறுபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின், அவரோடு கப்பற்படையிலிருந்த கடைசி நபர் ஜப்பானுக்குச் சென்று, “வெறும் அறுபதே ஆண்டுகளில் ஜப்பானின் முன்னேற்றம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது” என்றார்.
ஆகவே ஜப்பானின் தனித்திருக்கும் கொள்கை, வளர்ச்சிக்கான அவளுடைய வாய்ப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தியது. புதிய கருத்துக்களுக்குத் தன் கதவுகளைத் திறந்தது, தேசத்துக்குப் பல வழிகளிலும் பிரயோஜனமாயிருந்தது. ஆனால், இன்று ஜப்பானிலுள்ள சிலர், தனி நபர்கள் “மனதின் பிரகாரமாக தனித்திருப்பதைக்” குறிப்பிட்டு இது தீர்க்கப்பட வேண்டியப் பிரச்னை என்கிறார்கள். ஆம் புதிய கருத்துக்களை ஏற்க மறுக்கும் மனச்சாய்வு நவீன ஜப்பானியர்களுக்கு மாத்திரமல்ல, ஆனால் எல்லா மனிதர்களுக்குமே ஒரு சவாலாக இருக்கிறது. உங்களைப் பற்றியும் “மனதின் பிரகாரமாகத் தனித்திருப்பதுப்” பற்றியும் என்ன? அப்போது 1850-களில் ஜப்பான் செய்தது போல புதிய கருத்துக்களை ஏற்கும் பண்புடையவராக இருப்பதிலிருந்து நீங்கள் நன்மையடைவீர்களா? (w89 1/15)