கடினமாக வேலை செய்வது மகிழ்ச்சியைத் தருகிறதா?
“சொல்லப்போனால், ஒரு மனிதனுக்கு வேலைதானே எல்லாமாக இருக்கிறது, அல்லவா?” என்றார் ஜப்பானிய வர்த்தக உலகில் ஒரு பெரும் புள்ளியாகத் திகழும் பன்பெய் ஆட்சுக்கி. அவர் ஏன் கோடை விடுமுறை எடுக்க விரும்பவில்லை என்பதை விளக்கிக்கொண்டிருந்தார். மோசமான விளைவுகளை ஏற்படுத்திய போருக்குப் பின் ஜப்பானை மீண்டும் கட்டிய ஜப்பானியரின் கருத்தையே அவருடைய வார்த்தைகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த தளபதி பெர்ரி நீண்ட காலமாக தனிமையில் ஒதுங்கியிருந்த ஜப்பானுக்கு வழியைத் திறந்துவிட்டது முதல் ஜப்பானியர் சுருசுருப்பாக உழைக்கும் மக்களாகக் கருதப்பட்டுவந்திருக்கின்றனர். கடினமான உழைப்பாளிகளாயிருப்பதில் அவர்கள் பெருமைப்படுகின்றனர்.
என்றபோதிலும், ஜப்பானியர் அளவுக்கு மிஞ்சி கடினமாக வேலை செய்பவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றனர்; தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில் இதுவே ஓர் ஆண்டுக்கு அதிகமான வேலை நேரத்தைக் கொண்டிருக்கிறது. வேலை வெறியர் என்ற அந்த எண்ணத்தை எடுத்துப்போட ஜப்பான் அரசு முயன்றுவருகிறது. “‘இவ்வளவு கடினமாக வேலை செய்வதை நிறுத்துங்கள்’ என்று அரசுத் தொழிலாளர் துறை கூறுகிறது,” என்று ஒரு செய்தித்தாள் வாசிக்கிறது. 1987 கோடை விடுமுறைக்கான அதன் ஊக்குவிப்பு வாசகத்தில், “விடுமுறை எடுப்பது உங்கள் ஆற்றலுக்கு அத்தாட்சி,” என்று சொல்லுமளவுக்குச் சென்றது. வேறுவார்த்தையில், அரசு, “ஏன் இவ்வளவு கடினமாக வேலை செய்ய வேண்டும்?” என்று தேசத்தை நோக்கிக் கேட்பதாயிருக்கிறது.
உண்மைதான், ஜப்பானிலுள்ள எல்லாருமே தங்களை அர்ப்பணித்துக் கடினமாக வேலை செய்பவர்கள் அல்லர். புதிதாக வேலைக்குச் சேர்ந்த 7,000 பேரை உட்படுத்திய ஒரு சுற்றாய்வு 7 சதவீதம் மட்டுமே ஒரு வேலையைத் தனிவாழ்க்கைக்கு மேலாகக் கருதுவதை வெளிப்படுத்தியது. இந்தப் போக்கு மற்ற நாடுகளிலும் காணப்படுகிறது. ஜெர்மனியில் 18 முதல் 29 வயது வரம்புக்குட்பட்டவர்களில் 19 சதவீதத்தினர் மட்டுமே கைம்மாறு கருதாமல் வேலையில் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கின்றனர் என்று ஆலன்ஸ்பாஷர் இன்ஸ்டிட்யூட் ஃபர் டெமஸ்கோப்பி கண்டுபிடித்தது.
வேலையில் விருப்பமில்லாத இளைஞருக்கு ஒப்பிடுகையில், மற்ற இடங்களிலிருந்து ஜப்பானுக்கு வந்திருக்கும் ஆட்கள் அதிகக் கடினமாக வேலைசெய்கிறவர்களாக இருக்கின்றனர். டோக்கியோவில் ஒரு முதலாளி கடுமையான உழைப்பை உட்படுத்திய வேலைகளைச் செய்யும் தன்னுடைய அல்ஜீரிய சிப்பந்திகளைக் குறித்துப் பெருமையாகப் பேசுகிறார். அவர் சொல்லுகிறார்: “ஜப்பானியர் இப்படிப்பட்ட வேலைக்கு விண்ணப்பம் செய்ய மாட்டார்கள், அப்படி விண்ணப்பித்தாலும் அவர்கள் உடனடியாக வேலையை விட்டுவிடுவார்கள்.” இல்லை, கடினமாக வேலைசெய்யும் ஜப்பானியர்கூட இயல்பாகவே ஊக்கமாய் உழைப்பவர்கள் அல்ல. மக்கள் கடினமாக வேலை செய்யும் போது, அதில் பலமான செயல் நோக்கம் இருக்கவேண்டும்.
கடினமாக வேலை செய்வதற்குக் காரணங்கள்
“செல்வம், வாழ்க்கையில் நிலையான தன்மை, உடைமைகள் மற்றும் உலகில் முன்னேறிச்செல்லுதல்”—கடினமாக வேலைசெய்யும் ஜெர்மானியர் இதைத்தானே நாடுகின்றனர் என்கிறது ஜெர்மன் வாராந்தர பத்திரிகை “டெர் ஸ்பீகீல் (Der Spiegel). ஆம், பொருளாதாரச் செல்வத்தைப் பெற்று ஓரளவு நிலையான வாழ்க்கை வாழும் நோக்கத்தோடு பலர் கடினமாக உழைக்கின்றனர். மற்றவர்கள் “உலகில் முன்னேற வேண்டும்” அல்லது தான் பணியாற்றும் நிறுவனத்தின் ஏணியில் படிப்படியாக ஏறிச்செல்ல வேண்டும் என்ற எண்ணம்படைத்தவர்கள். இப்படிப்பட்ட இலக்குகளை அடைந்திடுவதற்கான போட்டியைப் பேணிய கல்வி முறையால் பலமாக உந்துவிக்கப்படும் பலர் தொழில்மயமான சமுதாயத்தின் செக்காலையில் சிக்கிக் கொள்கின்றனர்—தங்கள் உடலைக் கெடுத்துக்கொள்கின்றனரே தவிர இலக்கை அடைவதில்லை.
என்றபோதிலும் பணமும் அந்தஸ்தும் தானே மக்கள் கடினமாக வேலை செய்வதற்கு ஒரே காரணமாக இல்லை. சிலர் வேலைக்காக வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு வேலைதானே எல்லாமாக இருக்கிறது. மற்றவர்கள் தங்களுடைய வேலையை அனுபவிக்கிறார்கள். “ஆவிக்குரிய காரியங்களை நாடிச்செல்லுதல் முற்றிலும் நெருக்கப்படுமளவுக்கு என்னுடைய ஆய்வுக்கூடத்தில் நான் செய்துகொண்டிருந்த காரியத்தில் ஆழ்ந்துவிட்டேன்,” என்று ஒப்புக்கொள்கிறார் ஹருவோ.
மற்றும் பிரயோஜனமான காரியங்களுக்கு, மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் அவர்களுடைய நலன் கருதும் காரியங்களுக்கும் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களும் உண்டு. அவர்கள் உயிர்களைக் காப்பதற்காகக் கடினமாக வேலை செய்கிறார்கள். உதாரணமாக, தீ அணைக்கும் பணியாளர் தன்னுடைய தீ அணைக்கும் இயந்திரத்தை நல்லநிலையில் வைத்துக்கொள்வதற்காக நாள்தோறும் கடினமாக வேலைசெய்கிறார்.
ஆனால் கடினமாக வேலைசெய்வதற்கு இவையனைத்தும் தகுந்த காரணங்களா? அவை மகிழ்ச்சிக்கு வழிநடத்துமா? ஆம், எந்த வேலை உங்களை உண்மையிலேயே மகிழ்விக்கக்கூடும்? (w89 7/15)