அணுசக்தியின் பயமுறுத்தல்
எரிவாயுவால் சூழப்பட்ட தரையின் மீது நின்றுகொண்டு ஒரு மூடப்பட்ட மோட்டார் வண்டிகள் பழுது பார்க்குமிடத்தில் இருக்கும் இரண்டு பையன்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொருவரும் ஒரு தீப்பெட்டியைக் கொண்டிருக்கின்றனர் . . . இது, இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையில் இருக்கும் இன்றைய சூழ்நிலையை நன்கு விளக்கிக்காட்டுகிறது. பயன்படுத்தப்படுகையில் ஒன்றையொன்று அழித்துவிடுவதில் விளைவடையும் பயப்படத்தகுந்த அணு ஆயுதங்களை உற்பத்தியாக்கும் ஆயுத உற்பத்திச் சாலைகளை இருவரும் கொண்டிருக்கின்றனர். கெடுங்குறி காட்டும் வகையில் அவர்களது ஏவுகணைகள் கொல்வதற்குத் தயாராக நின்று கொண்டும், அவர்களது வழிகாட்டும் ஒழுங்குமுறையின் இயக்கவியலை விளக்கும் கருவி வேகமாக சுழன்று கொண்டும் இருக்கின்றன.
மரணத்தின் இத்தூதுவர்களில் ஆயிரக்கணக்கானவை காற்று புகாதபடி சிமெண்ட் கலவையால் கட்டப்பட்ட அறைகளில் தரையின் அடியில் மறைந்திருக்கின்றன. மேலும் நூற்றுக்கணக்கானவை நீர் மூழ்கிக் கப்பலின் அடித்தளத்தில் பதுங்கியிருக்கின்றன. இன்னும் அநேகம், ஜெட் விமானங்களிலுள்ள வேகமாய் அடித்துச் செல்லும் இறக்கை பாகத்தின் அடியில் இருக்கின்றன. இப்பேர்ப்பட்ட ஆயுதங்கள் எப்போதாவது உபயோகப்படுத்தப்படுகையில் என்ன நடக்கும் என்று பயமுறுத்தப்பட்ட உலகம் ஆச்சரியப்படுகிறது.
நான்கு பதக்கங்களை வென்ற இராணுவத் தளபதி ஒருவர் விடை அளிக்கிறார். ஓர் அணு ஆயுதப்போர் “சரித்திரத்திலேயே பல மடங்கு பேராபத்தைக் கொண்டுவரும் ஒன்றாயிருக்கும்” என்று கூறுகிறார். கூடுதலாக ஓர் அறிவியலறிஞர் கூறுகிறார்: “மனித சமுதாயமே அற்றுப்போகும் ஒரு மெய்யான ஆபத்து இருக்கிறது.”
ஒற்றை மயிரிழை ஒன்றால் தொங்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு வாளின் அடியில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் ‘டமோக்கில்ஸ்’ என்ற பெயருடைய ஒரு மனிதனைப்பற்றி பூர்வ கிரேக்கப் பழங்கதை ஒன்று கூறுகிறது. அந்த வாள் அணு ஆயுதங்களையும், டமோக்கில்ஸ் எல்லா மனிதவர்க்கத்தையும் நன்கு பிரதிநிதித்துவஞ் செய்யக்கூடும். சிலர் கூறுகின்றனர், வாளை அகற்றிவிடுங்கள், டமோக்கில்ஸ் பாதுகாப்பாயிருப்பான். ஆனால் அத்தகைய எதிர்பார்ப்பு நடப்பது போல் தோன்றுகிறதா? சமீப வருடங்களில் அடைந்துள்ள முன்னேற்றம் அநேகருக்கு நம்பிக்கை அளித்திருக்கின்றன:
மார்ச் 1983: ஐ.மா. ஜனாதிபதி ரீகன் அணு ஆயுதங்கள் “சக்தியற்றும் வழக்கில் இல்லாமலும்” போகும்படி அமைக்கப்பட்டுள்ள அறிவியல் ஆராய்ச்சியாகிய யுத்ததந்திரத்தின் தற்காப்பை ஆரம்பித்து வைத்தலைத் திட்டமிடுகிறார்.
ஜனவரி 1986: சோவியத்தின் தலைவர் மிக்கேல் கோர்பச்சேவ் இந்நூற்றாண்டின் இறுதிக்குள் எல்லா அணு ஆயுதங்களையும் நீக்கிவிடத் திட்டமிடுகிறார். அவர் பிறகு கூறுகிறார்: “ஆயுதத் தயாரிப்பை முடிவுக்குக் கொண்டு வருவது மட்டுமன்றி, பொதுவான மற்றும் முற்றிலுமான ஆயுதக் குறைப்பின் அளவிற்கு அதிகளவு ஆயுதக் குறைப்பைப் பற்றிய பேச்சிற்காகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.”
டிசம்பர் 1987: கோர்பச்சேவும் ரீகனும் ஏவுகணை குறைப்பிற்கான ஓர் உடன்படிக்கையில் கையொப்பமிடுகின்றனர். ஒரு செய்திக் குறிப்பின்படி, “அணு யுகத்தின் ஆரம்பத்திலிருந்து வல்லரசுகள் அணு ஆயுதங்களிலிருந்து வெறுமென விலகியிருப்பதற்கு மட்டுமன்றி, ஆனால் முறைகள் முழுவதையும் அகற்றி விடுவதற்காக ஒத்துக் கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.”
என்றபோதிலும் இச்சமீப முன்னேற்றங்கள் அணு ஆயுதங்கள் இல்லாத ஓர் உலகில் விளைவடைவது எந்தளவுக்கு இருக்கிறது? வெற்றியின் பாதையில் என்ன தடைகள் நிற்கின்றன? (g88 8⁄22)