உலகத்தைக் கவனித்தல்
எய்ட்ஸ் நோய் கணிப்பு நிச்சயமில்லை
எய்ட்ஸ் நோய் நுண்மத்தைக் கொண்டிருப்பவர், அந்த நோய் நுண்மத்திற்குப் பிரதிபலிக்கும் விதத்தில் உடல் விருத்திசெய்யும் நோய் எதிர்பொருட்களைக் கணிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தரமான பரிசோதனை முறைகளில் நோய் நுண்மம் வெளிப்படுவதில்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். “இந்தக் கண்டுபிடிப்பு கவலையைக் கூட்டியிருக்கிறது, ஏனென்றால் எய்ட்ஸ் நோய் நுண்மத்துக்கு விலகியிருக்கிறார் என்று பொதுவாக பயன்படுத்தப்படும் பரிசோதனைகளுக்குப்பின் அறிவிக்கப்பட்ட சிலர் எய்ட்ஸ் நோய் நுண்மத்தை ஆபத்தான அளவுக்குக் கொண்டிருக்கிறார்கள், அதை மற்றவர்களுக்கும் கடத்தக்கூடும் என்பதைக் குறிப்பிடுவதாயும் இருக்கிறது,” என்று நியு யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. “இரத்தமேற்றுதலுக்குப் பயன்படுத்தப்படும் இரத்தத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு செயல்முறைகளினூடேயும் மாசுபட்ட சிறிதளவு இரத்தம் சென்றுவிடக்கூடும்.” எய்ட்ஸ் நோய் நுண்மம் பாதிக்கப்பட்ட திசுக்களைப் பழுதுபார்க்கும் செல்களில் ஒளிந்திருக்கக்கூடும், அல்லது நோய் எதிர்பொருளைப் பொதுவாக ஊக்குவிக்கும் T-4 செல்களில் தூங்கிக்கொண்டிருக்கக்கூடும் என்பதை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். எய்ட்ஸ் நோயாளிகளில் சிலர் ஓர் ஆண்டு அல்லது அதற்கும் அதிகமான காலம் வரை எய்ட்ஸ் நோய் நுண்மங்களுக்கு நோய் எதிர்பொருட்களை விருத்திசெய்யவில்லை என்பதை இது விளக்குவதாயிருக்கக்கூடும். ஆராய்ச்சியாளர்கள் உடனடியாகப் புதிய பரிசோதனை முறைகளைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட ஆரம்பித்தனர்.
அதற்கிடையில், அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையின்படி, “தேசத்தில் கிடைக்கும் இரத்தம் பொது மக்கள் நம்பச் செய்யப்படுவதைவிட அதிக மாசுபட்டதாக இருக்கிறது,” என்று கார்னெல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் உரிமைப்பாராட்டுகிறார். “இரத்தமேற்றப்படும் 10 பேரில் ஒருவருக்கு கல்லீரல் அழற்சி மற்றும் எய்ட்ஸ் உட்பட ஏதாவது ஒருவகை நோய் ஏற்படக்கூடும்,” என்று உறுதிப்பட கூறுகிறார். அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை டாக்டர் ஜோசப் ஃபெல்டுஷு மருத்துவ மாநாட்டில் கூறியதையும் குறிப்பிட்டது, அதாவது, “குறிப்பாக இரத்தமேற்றுதல் மூலம் எய்ட்ஸ் கடத்தப்படும் சாத்தியத்தின்பேரில் பொதுமக்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள்.” 40,000 யூனிட் இரத்தத்தில் ஒரு யூனிட் இரத்தம் கணிக்கப்படாத எய்ட்ஸ் நோய் நுண்மத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்று ஜார்ஜியாவிலுள்ள அட்லாண்டாவில் ஐ.மா. நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் கணக்கிட்டாலும், “இரத்தமேற்றுதல் மூலம் எய்ட்ஸ் நோய் கடத்தப்படும் ஆபத்து 2,50,000-க்கு ஒன்று என்றும் 10 இலட்சத்துக்கு ஒன்று என்றும் பொதுமக்களுக்கு பொய்க் கணக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.” நோய் எதிர்பொருட்களால் வஞ்சிக்கப்படவில்லை என்றாலும் 3,600 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட் இரத்தம் எய்ட்ஸ் நோய் நுண்மத்தைப் பெற்றதாயிருக்கக்கூடும் என்பது ஃபெல்டுஷுவின் ஆய்வுகளின் முடிவு.
பூனைகளுக்குப் பதிலாக பாம்புகள்
கிரேத்தா தீவீல் மலைப்பகுதிகளில் வாழும் சிலர் தங்களுடைய வீடுகளில் பாம்புகளை வளர்க்கிறார்கள். ஏன்? சிலர் பூனைகளை என்ன காரணத்துக்காக வளர்க்கிறார்களோ அதே காரணத்துக்காக—எலிகளை விரட்ட. “பாம்புகளின் வகைகளில் பெரும்பான்மையானவை கிராம மக்களுக்கு அருஞ்சேவை புரிகின்றன,” என்கிறது எத்னாஸ் (Ethnos), கிரீஸிலுள்ள ஏத்தன்ஸ் செய்தித்தாள். “அவை பயிர்களைக் கொறி விலங்குகளிலிருந்து பாதுகாக்கின்றன, தீய விலங்கினங்களைத் தின்றுவிடுகின்றன, பூச்சிகளை ஒழித்துவிடுகின்றன.” இந்தப் பழக்கத்தை “ஓர் அபூர்வ பழக்கம்” என்று அழைக்கிறது.
இரத்தமேற்றுதல் சம்பந்தமாக ஆலோசனை
இரத்தமேற்றுதல் “குறைந்தளவாக வைக்கப்படவேண்டும்,” என்று ஐ.மா.தேசீய சுகாதார நிறுவனத்தின் ஓர் ஆய்வுக்குழு ஆலோசனை கூறியிருக்கிறது. முன்னேறிய அறுவை சிகிச்சை முறைகளைக் குறித்து சிந்திக்கும்போது, “இரத்தத்தின் பாரம்பரிய உபயோகங்களை மறுபரிசீலனை செய்யும்படி” சிபாரிசு செய்தது. இரத்தமேற்றுதல் மூலம் எய்ட்ஸ் நோய் கடத்தப்படும் ஆபத்தை முன்னிட்டு முதலாவது அரசாங்க எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. “இரத்தமேற்றுதலில் நோய்களையும் நோய்த் தடை அமைப்பில் மாற்றங்களையும் கொண்டு வரும் ஆதாரப்பூர்வமான ஆபத்து இருக்கிறது,” என்று தலைவர் டைபார் கிரீன்வால்ட் கூறினார். இரத்தமேற்றுதலின் மூலம் எய்ட்ஸ் நோய் கடத்தப்படுவதன் ஆபத்து சிறிதளவே என்று அந்தக் குழு கருதின போதிலும், “எதிர்காலத்தில் கூடுதலான கட்டுப்பாட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதிலிருக்கும் ஆபத்தின் அளவு குறைவதற்கில்லை,” என்று அந்த அறிக்கை எச்சரித்தது.
கொல்லும் கம்ப்யூட்டர்கள்
“அடுத்த நான்கு ஆண்டுகளில் குறைபாடான மைக்ரோசிப்ஸ் மூலம் ஏற்படும் ஒரு பயங்கரமான விபத்து ‘தவிர்க்கப்படமுடியாதது’ என்று அரசாங்க அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர்,” என்று லண்டனின் தி டைம்ஸ் அறிக்கை செய்கிறது. ஏன்? இராணுவ இயந்திரங்களில் குறைபாடான மைக்ரோசிப்ஸ் ஓரளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தப்பட்டிருப்பதை அண்மையில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அதுபோன்ற பலவீனங்கள் பொதுப்பணியில் பயன்படுத்தப்படும் மின் நிலையங்கள், விமானங்கள், கார்கள் போன்ற காரியங்களிலும் ஏற்படக்கூடும் என்று கம்ப்யூட்டர் நிபுணர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். பேரழிவுகளைத் தடுப்பதற்காக, பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர்கள் “கணிதத்தின் அடிப்படையில் அதன் அமைப்பில் குறைபாடில்லாமல் இருக்கும் முதல் மைக்ரோப்ராசஸரை” உருவாக்கியிருப்பதாக உரிமைப்பாராட்டுகின்றனர் என்று தி டைம்ஸ் கூறுகிறது.
இந்தியாவின் மக்கள்தொகை ஏறுகிறது
இந்தியாவின் மக்கள் தொகை 80 கோடியை எட்டிவிட்டது,” என்று தி நியு யார்க் டைம்ஸ் கூறுகிறது, “மற்றும் தேசத்தின் பிறப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட தவறியது குறித்து உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.” எட்டு ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையில் 12 கோடி அதிகரித்திருக்க, 110 கோடி மக்களுடன் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகிய சீனாவை இந்தியா முந்திவிடும். இந்தப் பெருக்கம் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் வறுமையை ஒழிப்பதற்குமான அரசாங்கத்தின் முயற்சிகளைத் தடை செய்திருக்கிறது. “பெருகிவரும் எண்ணிக்கையினரைப் போதிய அளவுக்கு கவனிக்க முடியாத வகையில் வீடுகள் இல்லாத, தண்ணீர் இல்லாத, பள்ளிகள் இல்லாத, உடல் நல வசதிகள் இல்லாத” நிலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது என்று சுகாதார குடும்ப நலத் துறை மந்திரி சரோஜ் கர்ப்பாடே எச்சரித்தார்.
கடலில் ஐந்து மாத அலைக்கழிப்பு
கடலில் சகிப்புத்தன்மை சம்பந்தமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு புதிய பதிவைக் கண்டது. ஐந்து கோஸ்டா ரிக்கா மீனவர்கள் பசிபிக் மகா சமுத்திரத்தில் ஐந்து மாதங்கள் அலைக்கழிக்கப்பட்டனர். அவர்கள் எட்டு நாள் மீன் பிடிப்பு பயணத்தை மேற்கொண்டபோது இரண்டு வாரமாகப் பலமாய் வீசிய புயலில் சிக்கினார்கள். அவர்களுடைய ரேடியோவும் அடித்துச்செல்லப்பட்டது. 30 அடி படகு கடலில் தூரமாகக் கொண்டுசெல்லப்பட்டது, அவர்களுடைய இயந்திர எண்ணையும் தீர்ந்துவிட்டது. மழை தண்ணீரை சேகரித்து வைத்தும், மீன் மற்றும் ஆமைகளை உணவாகக் கொண்டு உயிர்ப்பிழைத்தனர். ஒரு ஜப்பானிய டூனா கப்பல் அவர்களை ஹானலூலூவுக்குக் தென் கிழக்கே 700 மைல் தூரத்தில், அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்து 3,600 மைல் தூரத்தில் மீட்டது. அவர்கள் அது வரை வேறு கப்பல்களைப் பார்க்கவில்லை. சூரிய உஷ்ணத்தால் முகங்கள் கருத்திருந்தன, மூட்டுகளில் வீக்கம் காணப்பட்டன. இவை தவிர அவர்கள் ஆச்சரியப்படக்கூடிய வகையில் நல்ல ஆரோக்கியத்தில் காணப்பட்டார்கள்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இன்னொரு உயிர்ச்சேதம்
இரண்டாம் உலக மகா யுத்தம் இன்னொரு உயிர்ச்சேதத்துக்குக் காரணமாயிருந்திருக்கிறது. கெய்ரோவுக்கு வடமேற்கில் ஏறக்குறைய முன்னூறு மைல்களுக்கு அப்பால் மெர்சா மாட்ரூ மாநிலத்தில் ஒரு சுரங்கம் வெடித்து ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் காயமுற்றனர். போரிலிருந்து நூறாயிரக்கணக்கான சுரங்கங்கள் எகிப்தின் மேற்கத்திய பாலைவனப் பகுதிகளில் புதைந்துகிடப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் பிரிட்டிஷ் சார்ந்த நாடுகளும் ஜெர்மனி சார்ந்த நாடுகளும் 1942 மற்றும் 1943-ல் போரிட்டனர்.
எறும்பு உற்பத்தி செய்த பூச்சிக்கொல்லி
கறையான்களையும் வெட்டுக்கிளிகளையும் ஒழித்திட இருக்கும் புதிய முறை விஞ்ஞானிகள் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி ஒரு சிறிய கருப்பு எரும்பினால்—மோனோமோரியம் பிறப்புக்கூற்றைச் சேர்ந்த எறும்பினால் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது—மிகச் சிறிய அளவு மருந்து போதுமானது. “பூச்சியின் மீது ஒரு சொட்டு விஷம், ஒரு சில நொடிகளில் சாவு பின்தொடருகிறது,” என்று பிரஞ்சு தினசரி அறிக்கை செய்கிறது. பூச்சிகள் மனிதன் உற்பத்தி செய்திருக்கும் பூச்சிக்கொல்லிகளைப் போல் இல்லாமல், எறும்பு விஷம் கொண்டு சிகிச்சை அளிக்கும்போது, அதைத் தடுப்பதற்கு வேண்டிய திறம்பட்ட ஒரு முறையை விருத்திசெய்வதாக தெரியவில்லை. அந்த விஷம் ஏற்கெனவே வேதியல் ரீதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எறும்பு உற்பத்தி செய்த விஷத்தைப் போல மனிதனால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மருந்தை உற்பத்தி செய்ய ஒரு கூடம் ஆயத்தமாகிறது.
போப்பின் 37-வது பயணம்
நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின்படி, அசாதாரண காரியமே போப் ஜான் பால் II-ன் 37-வது வெளிநாட்டு பயணத்தின் ஓர் அம்சமாக இருந்ததாய்த் தெரிகிறது. பெராகுவேவில் ஒருவேளை போப்பின் பேச்சுக்கு கைதட்டல் மிகக் குறைவாகவே கேட்டது. அதிபர் “படைப்பெருந் தலைவர் ஆல்ஃப்ரெடோ ஸ்ட்ரோஸ்னர் . . . நான்கு அல்லது ஐந்து முறை கைதட்டினார்,” அதிபரின் அரண்மனையில் கூடியிருந்த அரசு அதிகாரிகளும் வெளிநாட்டுப் பிரமுகர்களும் அதையேச் செய்தனர். உருகுவே போப்புடன் “மிகக் குறைந்த நேர சந்திப்பையே” கொண்டிருந்திருந்தது. பள்ளி மாணவி மரியா பெளலா லோலினா ஒரு வாழ்த்துதல் மட்டும்தான் சொல்ல முடிந்தது: “உருகுவேயின் அனைத்து மக்கள் சார்பிலும் நாங்கள் இந்த மலர்களை அளிக்கிறோம்.” அதைத் தொடர்ந்து மலர்களைக் கையில் பிடித்தவண்ணம் மயங்கி விழுந்தாள். பொலிவியா அநேகமாய் ‘ஒரு போப் நடத்திய மிக உயர்ந்த பூசையைப் பார்த்தது.’ லா பாஸாவுக்கு அண்மையில் எல் ஆல்டோவில் இருந்த அந்த மேடை கடல் மட்டத்துக்கு 13,450 அடி உயரத்தில் இருந்தது. அதற்கு “பூமா தேவிக்கும்” சூரியனுக்கும் கத்தோலிக்க நம்பிக்கைகளுடன் கலந்து பக்தி காண்பிக்கும் இன்னொரு தொகுதி வந்திருந்தது. “போப் அவர்களுக்கு என்னவாயிருக்கிறார் என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை,” என்று அவர்களுடைய குரு ஜோஸ் இரியார்டே கூறினார்.
சுயமாய் மருந்தெடுத்தல்
“அமெரிக்காவிலுள்ள பொதுமக்கள், ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருந்து இருக்கிறது—எல்லாவற்றுக்குமே சிகிச்சை உண்டு” என்பதாக நம்புவதாக கார்னல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஹார்வே க்லீன் கூறுகிறார். அங்கீகரிக்கப்பட்ட மருந்து வகைகளில் 725 மட்டுமே இருக்க, ஏறக்குறைய 3,00,000 மருந்துகளும் வைட்டமின்களும் மருத்துவர் சீட்டு இல்லாமலேயே கடையில் நேரடியாக வாங்க முடிகிறது. விளம்பரத்தால் தூண்டுவிக்கப்பட, அமெரிக்கர்கள் தங்களுடைய உடல் நலத்தை மேம்படுத்தும் முயற்சியில் கடந்த ஆண்டு 120 கோடி டாலர் செலவழித்தனர்—1982 முதல் 43 சதவிகிதம் உயர்வு. என்றபோதிலும் ஆபத்துகள் இருக்கின்றன. “முழுவதும் பாதுகாப்பான மருந்து என்று மனிதன் அறிந்த மருந்துகள் எதுவும் இல்லை,” என்கிறார் அமெரிக்க மருத்துவ கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் S. டாட், “பாமர மக்கள் சரியானதை நிதானிக்கும் நிலையில் இல்லை.” பல மருந்துகள் எடுக்கும்போது விசேஷ கவனம் தேவைப்படுகிறது, ஏனென்றால் இரண்டு மருந்துகள் சேரும்போது அவை ஆபத்தாக இருக்கக்கூடும். மருந்து பற்றிய தகவலையும் எச்சரிப்பையும் கவனமாக வாசிக்க வேண்டும், சந்தேகம் ஏற்படும் சமயங்களில் நிபுணர்களின் ஆலோசனையை நாட வேண்டும். (g88 10⁄8)