தாக்கப்படும் மனைவிகள் மூடியிருக்கும் கதவுகளின் பின்னால் ஒரு நோட்டம்
மனைவியை அடிப்பது அதிர்ச்சித் தரும் விதத்தில் ஒரு சாதாரணமான சம்பவமாக இருக்கிறது. இன்றைய உளவியல் (Psychology Today) என்ற பத்திரிகை, “பத்து பெண்களில் ஒரு பெண் தன் மணவாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில், அவளுடைய கணவனால் மோசமாக (அடிக்கவோ, உதைக்கவோ, கடிக்கவோ அல்லது இன்னும் மோசமாகவோ) தாக்கப்படுகிறாள்,” என்று அறிக்கை செய்கிறது. ஓர் ஆண்டுக்குப் பின்பு குடும்ப உறவுகள் (Family Relations) என்ற பத்திரிகை, “ஐக்கிய மாகாணங்களில் இரண்டு பெண்களில் ஒரு பெண் வீட்டில் வன்முறையை அனுபவிக்கிறாள்,” என்று குறிப்பிட்டு, இந்தப் பிரச்னை இன்னும் அதிகரிப்பதை சுட்டிக் காட்டுகின்றது. 1987-ல் வெளியான அறிக்கையின்படி கானடாவில், பத்தில் ஒரு பெண் தாக்கப்படுகிறாள். மற்ற நாடுகளிலும் மதிப்பீடானது ஏறக்குறைய இந்த அளவிலேயே உள்ளது.
நியு யார்க் மாவட்ட வழக்கறிஞர், தாக்கப்படும் மனைவிகளின் இந்தப் பிரச்னைக்கு மேலும் சாட்சியங்களைக் கூட்டுகின்றார். “அமெரிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையானது தொற்று நோய்க்கு ஈடாகப் பரவியுள்ளது. ஒவ்வொரு 18 வினாடியிலும் ஒரு துணைவி அடிக்கப்படுகின்றாள் என்றும் ஒவ்வொரு வருடமும் 60 லட்சம் பெண்கள் தாக்கப்படுகின்றனர் என்றும் குற்ற விசாரணைக் குழு கணக்கிட்டுள்ளது.” “கற்பழிப்பு, பொருளுக்காக தாக்குதல் மற்றும் வாகன விபத்து ஆகியவற்றின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் பெண்களைவிடவும் மனைவியை அடித்தலின் காரணமாக காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்படும் பெண்கள் அதிகம்” என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 பெண்கள் வருடந்தோறும் கொல்லப்படுகின்றனர்.
மனைவி தகாத முறையில் நடத்தப்படுவதானது, நன்கு காக்கப்பட்ட ஓர் இரகசியமாக இருந்தால், தாக்குகின்ற கணவனுக்கு நெருங்கியவர்கள், அதாவது அவனுடைய சிறந்த நண்பர்கள், உடன் வேலை செய்வோர், வீட்டுக்கு வெளியே உள்ள குடும்ப அங்கத்தினர்கள் போன்றோர் அவன் மனைவியை அடிப்பவன் என்று ஒருபோதும் சந்தேகப்படாமல் இருக்கலாம். அவன் பல சமயங்களில் இலட்சிய முன்மாதிரியாக உயர்வாக நோக்கப்படும் அளவு தன்னுடைய வேலையிலும் சமுதாயத்திலும் செயல்படலாம். அடிப்பவர்களில் பலர், மதுபானக் கடையிலோ, தெருவிலோ, வேலை செய்யும் இடத்திலோ நடக்கும் சண்டையிலிருந்து விலகி நடந்து செல்வர். தேவையிலிருப்போருக்குத் தான் அணிந்திருக்கும் சட்டையைக்கூட கொடுப்பவர் பலர்.
எனினும் தங்களுடைய திருமண துணைவியின் விஷயத்திலோ, ஒரு சிறிய காரியம்கூட அவர்களைத் தீவிரமான கோபத்திற்குக் கொண்டுவிட்டுவிடும்—நேரத்துக்கு தயார் செய்யப்படாத உணவு, பிடிக்காத உணவு, அவன் விரும்பாத விதத்தில் அமைந்த அவளுடைய உடை, தொலைக்காட்சியில் அவள் ஒரு நிகழ்ச்சியை பார்க்க விரும்பும்பொழுது அவன் வேறு ஒன்றைப் பார்க்க விரும்புவது. தாக்கப்பட்ட மனைவிகளின் மேல் நடத்தப்பட்ட ஒரு பிரிட்டிஷ் ஆராய்ச்சியானது, அந்த அடிகளுக்கு முன்னால் எந்தவித விவாதங்களும் நடைபெறவில்லை என்று வெளிப்படுத்துகிறது. பல நிகழ்ச்சிகளில் அடிகளானது, “மிக சாதாரணமான காரியங்களாகிய, மனைவி முட்டையின் மஞ்சள் கருவை உடைத்துவிடுதல் அல்லது குதிரை வால் என்ற தலை அலங்காரம் செய்து கொள்ளுதல்” போன்றவற்றால் தொடங்கி வைக்கப்படுகின்றன என்று அறிக்கைகள் காட்டுகின்றன.
மனைவியை அடித்த ஒரு கணவன் “அவள் படுக்கைத் துணிகளில் சிக்கிக் கொண்டதால் தான் தூண்டப்பட்டதாக” ஒப்புக் கொள்கின்றான். “தூண்டப்பட்டேன்” என்று அவன் கூறுவது, அவளை படுக்கையிலிருந்து உதைத்துக் கீழே தள்ளி மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவு அவள் தலையைத் தரையில் மோதியதை அர்த்தப்படுத்துகிறது. பல வருடங்களாக அடிகளால் துன்பப்பட்ட, தகாத முறையில் நடத்தப்பட்ட ஒரு மனைவி கூறுகின்றாள்: “ஒரு நிகழ்ச்சியானது [நான்] சாப்பாட்டு மேஜையில் ஒரு குறிப்பிட்ட பொருளை வைக்க மறந்து போவதால்கூட தூண்டப்படலாம்.”
மணமாகி மூன்றரை ஆண்டுகளாகிய ஒரு மணப்பெண் தன்னுடைய மணவாழ்க்கையில் 60 தடவைகள் அடிக்கப்பட்டிருப்பதாக கணக்கிடுகிறாள். அவள் சொல்கிறாள்: “என்னுடைய நண்பர்களை அவருக்குப் பிடிக்கவில்லை. படிப்படியாக நான் அவர்களைப் பார்ப்பதை நிறுத்தினேன்.” கடைசியில் அவளுடைய குடும்பத்தைப் பிடிக்கவில்லை என்பதால் அவர்களைப் பார்ப்பதையும் நிறுத்திக் கொண்டாள். “அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயலுவது, மறுபடியும் அடிப்பதற்குப் போதுமான காரணமாக இருந்தது” என்று அவள் விளக்குகிறாள். தகாத முறையில் நடத்தப்பட்ட மற்றொரு மனைவி சொல்கிறாள்: “கடைசியில், இரவு உணவுக்கு என்ன செய்யலாம், தட்டுமுட்டு சாமான்களை எப்படி வைக்கலாம் என்று என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் என்னவாக இருக்க வேண்டும் என்று நான் அவரையே கேட்டேன்.”
மனைவியை அடிப்பதானது, அநேகமாக, மாலையிலோ, இரவிலோ அல்லது வார இறுதியிலோ நடக்கின்றது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதன் விளைவாக, பலமாக அடிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அவளுடைய சொந்த மருத்துவரைவிடவும் மருத்துவமனையின் அவசரக்காலப் பணியாளர்களே சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. பல சமயங்களில் தாக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்காகக் காட்டும் காயங்கள், முக்கியமாக தலையிலும், முகத்திலும், இரத்தம் கசியும் காயங்களை உட்படுத்துவதாக இருக்கின்றன. உட்காயங்களும் இருக்கின்றன—மூளையில் சிறிய பாதிப்பு, செவிப்பறையில் ஓட்டை மற்றும் மனைவி கருவுற்றிருந்தால் வயிற்றில் காயங்கள். பல சமயங்களில் கழுத்து நெறிக்கப்பட்டதற்கான குறிகள் கழுத்தில் காணப்படக்கூடியதாக இருக்கின்றன. பல நிகழ்ச்சிகளில், உடைந்த தாடைகள், கைகள், கால்கள், விலா மற்றும் தோள் எலும்புகள் சரிசெய்யப்பட வேண்டியிருக்கின்றன. ஏனைய பாதிக்கப்பட்டோர், தீக்கின்ற திரவங்கள் அல்லது அமிலத்தினால் உண்டான காயங்களுக்காக தீப் புண்களுக்கான சிகிச்சைக் கூடத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.
தாக்குகின்ற கணவன்மார்களைக் குறித்து ஓர் எழுத்தாளர் கூறுகின்றார்: “இந்த ஆட்கள் உண்மையிலேயே அதிக பயங்கரமானவர்கள். அவர்கள் பெண்களை அவர்களுடைய அறையில் பூட்டி வைக்கின்றனர், அவர்களுடைய எலும்பை உடைக்கின்றனர், அவர்களை முடமாக்குகின்றனர். கத்தியால் அவர்களை வெட்டுகின்றனர், மருந்துகளை அவர்கள் மேல் பிரயோகிக்கின்றனர். அவர்களை முகத்தில், வயிற்றில், மார்பில் குத்துகின்றனர். தங்களுடைய துப்பாக்கிகளை அவர்கள் தலைக்குக் குறிவைக்கின்றனர்—மேலும் அவர்களைக் கொல்கின்றனர்.” படுக்கைகளுடன் கட்டி வைக்கப்பட்ட மனைவிகளைப் பற்றியும், மின்சாரக் கம்பிகள் துண்டிக்கப்பட்டு உபயோகமற்றதாக்கப்பட்ட கார்கள் பற்றியும் அவள் ஓடிப்போக முயன்றால் அவளையும் அவள் பிள்ளைகளையும் கொன்றுவிடுவதாக பயமுறுத்தல்கள் பற்றியும் அறிக்கைகள் இருக்கின்றன. இந்தச் சோகங்கள் முடிவற்றவையாக இருக்கின்றன.
அடிக்கடி நிகழக்கூடிய உடல்சம்பந்தப்பட்ட தாக்குதலுடன் கூட மேலுமாக பயமுறுத்தல்கள், குற்றச்சாட்டுகள், வசைகள், மனச்சோர்வு, பயங்கரத் தோற்றங்கள் மற்றும் தொடர்ந்த தூக்கமின்மை ஆகியவையும் உண்டு.
அவளை நேசிக்கிறேன், அவளில்லாமல் வாழமுடியாது என்று அடிக்கடி அவளைப்பற்றி கூறும் தன்னுடைய மணவாழ்க்கைத் துணையின் மேல்—வருத்தம் தரும் தாக்குதலை நடத்துகின்ற அந்த மனிதன் எப்படிப்பட்டவன்? அடுத்த கட்டுரையில் அவனுடைய தோற்றம் பற்றி காண்போம். (g88 11⁄22)