தாக்குகின்ற கணவன்மார்கள் அண்மையில் ஒரு நோட்டம்
மனைவியை அடிப்பவர்கள் அடிப்படையாக ஒரே விதமான உள்தோற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிபுணர்களின் ஏகமனதான கருத்து. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக சேவகர்கள் போன்றோர் இக்கருத்தினை ஒப்புக்கொள்கின்றனர்—இவர்களுடைய தொழில்கள் இவர்களை குடும்ப வன்முறயுடன் தினமும் தொடர்புக்குள் கொண்டுவருகிறது. ஒரு நீதிமன்ற அதிகாரி சொன்னதாவது: “தற்காதல் கோளாறு, அதாவது தன் சரீரத்தின் மேல் மாத்திரமே அன்புகாட்டுதல்—இதுதான் அவர்களின் பிரதான குணவிசேஷமாகும். தாக்குகின்றவனுக்கும் சிறு குழந்தைக்கும் உள்ள ஒற்றுமைகள் பிரமிப்பூட்டுகின்றது. கோபவெளியீடுகள் பற்றிய கதைகள் நான் வேலை சம்பந்தமாக தொடர்புக் கொள்ளும் ஒவ்வொரு பெண்ணாலும் சொல்லப்படுகின்றன. தன்னுடைய சொந்த தேவைகளை எப்படி கவனித்துக் கொள்ளலாம் என்பதன் அடிப்படையிலேயே தாக்குபவனால் உலகத்துடன் தொடர்புக் கொள்ள முடிகிறது.” இந்த அதிகாரி தாக்குபவனை “சோஷியோபதிக்” என்று முத்திரையிடுகின்றார், அதாவது தன்னுடைய செயல்களின் விளையை சீர்தூக்கிப் பார்க்க முடியாதவன்.
“தகாதவிதத்தில் தாக்கும் ஆண்கள் பொதுவாக ஒரு தாழ்ந்த சுயதோற்றத்தினால் துன்பப்படுகிறார்கள், இதே குணத்தைத் தங்களால் பாதிக்கப்படுகின்றவர்களிலும் உண்டுபண்ண முயலுகின்றனர் என்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது,” என்பதாக ஓர் எழுத்தாளர் சொன்னார். “சொந்தம் பாராட்டுதல், பொறாமை, பால்சம்பந்தப்பட்ட காரியங்களில் குறைவுபடுதல், மற்றும் தாழ்ந்த சுயமதிப்பு ஆகியவையே சாதாரணமாக பெண்களைத் தாக்கும் ஆண்களின் குறிப்பிடத்தக்க குணங்களாகும்” என்று ஒரு பத்திரிகைச் செய்தி கூறுகின்றது. மனைவியை தகாதவிதத்தில் நடத்துபவனின் இந்தத் தோற்றத்தை ஒத்துக்கொள்ளும் விதமாகவே ஒரு குறிப்பிடத்தக்க மனயியல் நிபுணர் மேலும் தன் கருத்தை கூட்டுகின்றார்: “தாக்குதலானது, குறைவுள்ள மனிதன் தன் ஆண்மையை நிரூபிக்க உபயோகிக்கும் ஒரு வழி.”
தகாத முறையில் நடந்துகொள்ளும் ஆண் தன் வாழ்க்கைத் துணையின்மேல் தன்னுடைய அதிகாரத்தைக் காட்டவும், கட்டுப்பாட்டை நிலைநாட்டவும் வன்முறையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது. மனைவியை தகாத முறையில் நடத்தும் ஒருவன் சொல்வதாவது: “நாங்கள் அடிப்பதை நிறுத்தினால் கட்டுப்பாட்டை இழக்கின்றோம். அதுவோ நினைக்கமுடியாததும் பொறுத்துக்கொள்ள முடியாததுமாகும்.”
அநேக சமயங்களில், காரணமின்றி, தாக்குகின்ற கணவன் நியாயமற்ற விதத்தில் உரிமைப்பாராட்டுகிறவனாகவும் பொறாமைக் கொள்ளவும் செய்கின்றான். தன் மனைவிக்கும் தபால்காரன், பால்காரன், ஒரு நெருங்கிய குடும்ப நண்பன் அல்லது அவள் தொடர்புக் கொள்ளக்கூடிய யாராவது ஒருவருக்குமிடையே ஒரு காதல் தொடர்பை அவன் கற்பனை செய்து கொள்ளலாம். அவன் தன் மனைவியை மோசமாக நடத்தி, உடலில் வலியை ஏற்படுத்தினாலும் அவளைப் பிரிவதைக் குறித்தும் அவளை இழப்பதைக் குறித்தும் மிகவும் பயப்படுகின்றான். தகாத முறையில் நடத்தப்பட்ட மனைவி அவனை விட்டுப் போய்விடுவதாக பயமுறுத்தினால் அவன் அவளையும் தன்னையும் கொன்றுவிடுவதாக பயமுறுத்தலாம்.
அநேகமாக பொறாமையானது, மனைவி கருவுற்றிருக்கும் போது தன்னுடைய அவலட்சணமானத் தலையைத் தூக்கலாம். தன் மனைவியின் அன்பு தன்னிடமிருந்து வேறு பக்கமாக சென்றுவிடும், குழந்தையே அவளுடைய கவனத்தின் மையமாக இருக்கும் என்று காரியங்களைப் பற்றி அவன் பயமுறுத்தப்படுவதாக உணரலாம். தாக்கப்பட்ட பல பெண்கள் கணவனின் தகாத நடத்தையின் முதல் அறிகுறி தாங்கள் முதல்முறையாக கருவுற்றிருக்கும்போது தங்கள் கணவன்மார்கள் தீவிரமாக வயிற்றில் குத்தியதே என்று தெரிவிக்கின்றனர். “தன் சொந்த சரீரத்தை மட்டுமே நேசிக்கும் அவனது விசேஷ குணமானது உண்மையில் அந்தக் கருவைக் கொல்ல முயற்சிக்கும் நிலைமைக்கு அவனை கொண்டுவரக்கூடும்,” என்று ஒரு நீதிமன்ற அதிகாரி கூறுகின்றார்.
ஒரு வன்முறைச் சுற்று
தாக்கப்பட்ட பல மனைவிமார்களால் உறுதிப்படுத்தப்பட்ட விதமாகவே, அனுபவிக்கப்படும் வன்முறைச்சுற்று, மனைவியை அடிப்பவனின் தோற்றத்தின் மற்றொரு அம்சமாகும். முதல் கட்டத்தில் கணவன் தகாத சொற்களைக் கொண்டு வசைப்பாடுதலை மட்டுமே செய்யலாம். பிள்ளைகளை அவளிடமிருந்து பிரித்துவிடுவதாகவும் இனி அவள் அவர்களை பார்க்கவே முடியாது என்றும் அவன் பயமுறுத்தலாம். பயந்துகொண்டு அவள் எல்லாம் தன் தவறு என்று ஒப்புக்கொண்டு அவனுடைய தகாத நடத்தைக்கு அவள் பொறுப்பேற்கலாம். அவள் அவனுடைய கைப்பாவையாகிவிடுகிறாள். அவன் அதிக அதிகாரத்தைப் பெறுகின்றான். ஆனால் மேலும் அதிக செல்வாக்கை அவன் கொள்ள வேண்டும். இத்தகைய முதல் கட்டம் திருமணமான பின்பு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்—சில சமயங்களில் சில வாரங்களுக்குள்ளாகவே.
இரண்டாவது கட்டத்தில் வன்முறை வெடித்துக் கொண்டு வரலாம்—உதைத்தல், குத்துதல், கடித்தல், அவள் முடியை பிடித்து இழுத்தல், அவளை தரையில் எறிதல், பாலுறவுச் செயல்களில் பலவந்தமாக ஈடுபடுதல். முதல் முறையாக மனைவி தன்மேல் தவறில்லை என்று உணரலாம். அவள் இதற்கு காரணம் வெளியே உள்ள காரியமாக —வேலை செய்யுமிடத்தில் அழுத்தம், உடன் வேலையாட்களுடன் ஒத்துப் போகாமை—போன்றவையாக இருக்கலாம் என்று நிதானிக்கின்றாள்.
வன்முறையின் வெளிப்பாட்டைத் தொடர்ந்து உடனடியாக அவன் மனஸ்தாபப்படுவதைக் கண்டு, அவள் கணவன் மீது இரக்கப்பட்டு ஆறுதலடைகிறாள். அவன் இப்பொழுது சுற்றின் மூன்றாவது கட்டத்தில் இருக்கிறான். அவள் மேல் அவன் வெகுமதிகளைப் பொழிகின்றான். அவளுடைய மன்னிப்புக்காக கெஞ்சுகின்றான். இது மீண்டும் நடவாது என்று அவன் அவளுக்கு வாக்களிக்கின்றான்.
ஆனால் அது மீண்டும் மீண்டுமாக நடக்கவே செய்கிறது. இனிமேல் இரக்கம் காண்பிக்கப்படுவதில்லை. இப்பொழுது இது ஒரு வாழ்க்கைமுறையாகவே ஆகிவிட்டது. பிரிந்து செல்வதாக அவள் பயமுறுத்தினால், அவளை கொன்றுவிடுவதாக அவன் பயமுறுத்துகிறான். அவள் இப்பொழுது அவனுடைய முழு செல்வாக்கின்கீழ் இருக்கின்றாள். மனைவியை அடிப்பவனால் முன்பு குறிப்பிடப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள்: “நாங்கள் அடிப்பதை நிறுத்தினால், கட்டுப்பாட்டை இழக்கிறோம். அதுவோ நினைக்கவே முடியாதது.”
மற்றுமொரு ஒற்றுமை
எப்பொழுதும் மனைவியை தகாதவிதத்தில் நடத்துபவன், அடிகளைக் தூண்டியதாக தங்கள் துணைவிகளையே குற்றம் சாட்டுவர். தாக்கப்பட்ட பெண்களுக்கான சேவையின் நிகழ்ச்சி நிர்வாகி அறிவிப்பதாவது: “‘நீ இதைச் சரியாகச் செய்யவில்லை, அதனால்தான் நான் உன்னை அடிக்கிறேன்’ அல்லது ‘இரவு உணவு தாமதமாகிவிட்டது, அதனால்தான் நான் உன்னை அடிக்கிறேன்’ என்பதாக தகாது நடத்துபவன் தன் பெண் துணையிடம் கூறுவான். இது எப்பொழுதும் அவளுடைய தவறுதான். உணர்ச்சிகளின் மேல் இத்தகைய தாக்குதல் வருடக் கணக்காகத் தொடரும்போது, அந்தப் பெண் அதை நம்பும்படி மூளைச் சலவை செய்யப்படுகிறாள்.”
ஒரு மனைவி, அவள் செய்த தவறினால் அந்தத் தாக்குதல்களைத் தூண்டுவதாக அவள் கணவனால் சொல்லப்பட்டாள். “வன்முறையானது அதிகரிக்க, சாக்குப்போக்குகளும் அவ்விதமாகியது. மேலும் இது எப்பொழுதும், ‘பார், நீ என்னை என்ன செய்ய வைத்துவிட்டாய். இக் காரியங்களை நான் செய்யும்படி நீ ஏன் விரும்புகின்றாய்?’”
மனைவியைத் தகாது நடத்திப் பின் திருந்திய ஒருவன், அவனுடைய தந்தையும்கூட மனைவியைத் தாக்குகின்றவன், சொல்வதாவது: “என் தந்தையால் தான் தவறு செய்ததை ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது. தன்னுடைய செயல்களுக்காக அவர் ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொண்டாதோ அல்லது மன்னிப்புக் கேட்டதோ கிடையாது. அவர் எப்பொழுதும் தன்னால் பாதிக்கப்பட்டவளையே குற்றம் சாட்டுவார்.” அந்த மகனும் ஒப்புக்கொள்வதாவது: “அவள் தாக்கப்பட்டதற்கு என் மனைவியையே நான் குற்றப்படுத்துவேன்.” வேறொருவர், “15 வருடங்களாக நான் என் மனைவியை அவள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதற்காக தகாத வகையில் நடத்தினேன். நான் செய்வது எவ்வளவு மோசமானது என்பதை நான் பைபிள் படிக்கத் துவங்கும்வரை உணரவில்லை. இப்பொழுது அது என் வாழ்க்கையில் ஒரு மோசமான ஞாபகம். அதை நான் மறக்க முயலுகிறேன். ஆனால் அது எப்பொழுதும் அங்கே இருக்கின்றது.”
தந்தையும் மகனும், இருவரும் மனைவியை அடிப்பவர்களாக இருக்கும் விவரம் அபூர்வமானதன்று. மாறாக, தாக்குகின்ற கணவன்மார்களின் பொதுவான தோற்றம் இதுவே. மனைவியை அடிப்பதானது தன் குடும்பத்தில் 150 வருடங்களுக்கு முன் செல்கின்றது, தந்தையிடமிருந்து மகனுக்கு என்று கடத்தப்பட்டு இருக்கின்றது என்று அந்த மகன் ஒப்புக் கொள்கின்றான். குடும்ப வன்முறைக்கு எதிராக தேசீய கூட்டமைப்பின்படி, “குடும்ப வன்முறைக் காட்சிகளைக் காணும் பிள்ளைகளில், 60 சதவிகிதம் பையன்கள் கடைசியில் தாக்குபவர்களாகவும், 50 சதவிகிதம் பெண்கள் பாதிக்கப்படுபவர்களாகவும் ஆகின்றனர்.”
ஒரு செய்தித்தாள் எழுத்தாளர் சொல்வதாவது: “அந்தப் பிள்ளைகள் தாக்குதலில் ஈடுபடாமல் போனாலும், வெளிப்படையாக எந்தச் சேதமுமின்றி காணப்பட்டாலும், அவர்கள் என்றும் மறக்கமுடியாத ஒன்றை கற்றுக் கொள்கின்றனர்: அதாவது பிரச்னைகளையும் அழுத்தங்களையும் வன்முறையான வழிகளில் கையாளுவது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியது.”
தங்கள் தந்தைகள், தங்கள் தாய்களை அடிப்பதைக் கண்ட பையன்கள் பல சமயங்களில் தங்கள் தாய்களின் மேல் தீவிரமாகத் திரும்புகின்றனர் அல்லது தங்கள் சகோதரிகளை கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர் என்று தாக்கப்பட்ட பெண்களுக்கான புகலிடத்தை நடத்துபவர்கள் கூறுகின்றனர். ஒருவர் சொன்னதாவது: “இது குழந்தைகளின் விளையாட்டுத்தனமன்று, உண்மையில் வேண்டுமென்று நோக்கத்துடன் செய்யப்படுவது.” கோபத்தைக் கையாள தங்கள் பெற்றோர் வன்முறையை உபயோகிப்பதைக் கண்ட பிள்ளைகள் அதையே தங்கள் தெரிவாகக் காண்கின்றனர்.
சிறு பெண்கள் “சர்க்கரையினாலும், வாசனைப் பொருட்களினாலும் மற்றும் இன்பமான எல்லாவற்றாலும்” செய்யப்பட்டிருக்கின்றனர் என்று குழந்தைகளுக்கான ஒரு பாட்டு கூறுகின்றது. இந்தச் சிறு பெண்கள், இவர்களின்றி வாழமுடியாது என்று கணவன்மார்கள் குறிப்பிடும் மனைவிகளாகவும் தாய்மார்களாகவும் வளருகின்றனர். அப்படியானால் நிச்சயமாகவே, நீதியானது, மனைவியைத் தாக்குவதற்கு எதிராக உள்ளது, ஆனால் யாருடைய நீதி—மனிதனுடையதா அல்லது கடவுளுடையதா? (g88 11⁄22)