குடும்பத்தில் வன்முறைக்கு ஒரு முடிவு
“வீட்டில் வன்முறையைத் தடுப்பதும் குடும்பத்தில் வன்முறையைக் குறைப்பதும் சமுதாயத்திற்கும் குடும்பத்திற்குமான அமைப்புமுறையில் பெரிய மாற்றங்களை உட்படுத்துகிறது.” —பிஹைன்ட் க்ளோஸ்ட் டோர்ஸ்.
மனித வரலாற்றில் முதல் கொலை சகோதரர்களை உட்படுத்தியது. (ஆதியாகமம் 4:8) அதிலிருந்து ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் எல்லா வடிவிலும் குடும்ப வன்முறையினால் பீடிக்கப்பட்டிருக்கிறான். ஏராளமான தீர்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அவற்றில் அநேகம், குறைபாடுகளுள்ளவையாய் இருக்கின்றன.
உதாரணமாக, மறுசீரமைப்புத் தங்களுடைய பிரச்னைகளை ஒப்புக்கொள்ளும் குற்றவாளிகளைத்தான் சென்றடைகிறது. மனைவியை அடிப்பதிலிருந்து திருந்திவரும் ஒருவர் இவ்வாறு புலம்பினார்: “[மறுசீரமைக்கப்படுகிற] எங்களில் ஒவ்வொருவருக்கும் வெளியில் அங்கு மூன்று ஆண்கள் ‘நீங்கள் மனைவியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும்’ என்று சொல்பவராக இருக்கின்றனர்.” எனவே துர்ப்பிரயோகிப்பவர் தன்னுடைய சொந்த சூழ்நிலையைக் கையாள கற்றுக்கொள்ளும் தேவையை உடையவராயிருக்கிறார். அவன் ஒரு துர்ப்பிரயோகிப்பவனாக ஏன் மாறினான்? தன்னுடைய சொந்த குறைகளைச் சரியாக்கிக்கொள்ள உதவியைப் பெறுவதனால் அவன் இறுதியில் தன்னுடைய பிரச்னையை மேற்கொள்ளலாம்.
ஆனால் சமூகநல திட்டங்களில் பணியாட்கள் போதாமை இருந்துவருகிறது. இவ்வாறு, ஐக்கிய மாகாணங்களில் நடந்த குழந்தைகள் கொலை வழக்குகளில் 90 சதவீதத்தில், கொலை நடப்பதற்கு முன்பே அபாயமான குடும்ப சூழ்நிலைமைகள் அறிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. ஆகவே, சமூகநல திட்டங்களும் காவல்துறை அமைப்புகளும் இதில் ஓரளவே சாதிக்கமுடியும். இன்றியமையாத வேறொன்று தேவைப்படுகிறது.
“புதிய ஆளுமை”
“தேவை என்னவென்றால் குடும்ப அங்கத்தினருக்கிடையில் உறவுமுறை மாற்றியமைக்கப்படுவதைவிட குறைவானதொன்றும் இல்லை,” என்று ஓர் ஆராய்ச்சிக் குழு கூறுகிறது. குடும்பத்தில் வன்முறை ஏதோ சரீரப்பிரகாரமான துர்ப்பிரயோகத்தின் ஒரு பிரச்னை மட்டுமல்ல; அது முதலாவதாக மனதின் ஒரு பிரச்னையாகும். அதன் விதைகள் குடும்ப அங்கத்தினர்—துணைவர், குழந்தை, பெற்றோர், உடன்பிறப்புகள்—ஒருவரைப்பற்றியொருவர் எவ்வாறு கருதுகின்றனர் என்பதில் விதைக்கப்படுகின்றன. இந்த உறவுமுறைகளை மாற்றியமைப்பதென்பது ‘புதிய ஆளுமை’ என்று பைபிள் அழைப்பதைத் தரித்துக்கொள்வதாகும்.—எபேசியர் 4:22-24; கொலோசெயர் 3:8-10.
குடும்ப அங்கத்தினர் மத்தியில் ஒரு நல்ல உறவுமுறையை வளர்க்கும் கிறிஸ்துவைப்போன்ற ஆளுமையைத் தரித்துக்கொள்ள உதவும் குடும்பசம்பந்தமான சில பைபிள் நியமங்களை நாம் இப்போது ஆராய்ந்து பார்ப்போமாக.—மத்தேயு 11:28-30-ஐ பார்க்கவும்.
குழந்தைகளைப்பற்றிய நோக்குநிலை: ஒரு பெற்றோராக இருப்பது குழந்தையைப் பெற்றெடுப்பதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. இருப்பினும், விசனகரமாகவே, அநேகர் தங்களுடைய குழந்தைகளை ஒரு பாரமாகக் கருதுகிறார்கள். இதனால் பெற்றோராக தங்களுடைய பாகத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுக்க தவறுகின்றனர். இவர்கள் துர்ப்பிரயோகிகளாக ஆகக்கூடும்.
பைபிள் குழந்தைகளைக் “கர்த்தரால் வரும் சுதந்தரம்” என்றும் “பலன்” என்றும் அழைக்கிறது. (சங்கீதம் 127:4) அந்தச் சுதந்தரத்தைப் பேணுவதில் பெற்றோர் சிருஷ்டிகருக்குக் கடமைப்பட்டிருக்கின்றனர். குழந்தைகளை ஒரு சுமையாகக் கருதுபவர்களுக்கு, இந்த விஷயத்தில் புதிய ஆளுமையை வளர்த்துக்கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது.a
குழந்தைகளைப்பற்றிய நடைமுறையான எதிர்பார்ப்புகள்: குழந்தைகள் ஒரு வயதாயிருக்கும்போதே தவறானதிலிருந்து சரியானதைப் பிரித்துப்பார்க்கவேண்டுமென்று துர்ப்பிரயோகம் செய்யும் பல தாய்மார்கள் எதிர்பார்க்கின்றனர் என ஓர் ஆராய்ச்சி வெளிப்படுத்திற்று. இதில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் குழந்தை ஆறுமாதமாயிருக்கும்போதே அவ்வாறு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டனர்.
பைபிள் நாம் அனைவருமே அபூரணர்களாய்ப் பிறந்திருக்கிறோம் என காட்டுகிறது. (சங்கீதம் 51:5; ரோமர் 5:12) பகுத்துணர்வு பிறப்பிலிருந்தே சுதந்தரிக்கப்படும் ஒன்று என்பதாக அது சொல்வது கிடையாது. அதைவிட ஒரு நபரின் ‘நன்மைதீமையின்னதென்று பகுத்தறியும்’ பகுத்தறிவு ‘உபயோகிப்பதன் மூலமே பயிற்றுவிக்கப்படுகிறது,’ என்று சொல்கிறது. (எபிரெயர் 5:14) மேலும், ‘ஒரு குழந்தையின் சுபாவம்,’ பிள்ளையின் “மதியீனம்,” மற்றும் வளரிளமைப்பருவம் “மாயை” என்றெல்லாம் பைபிள் பேசுகிறது. (1 கொரிந்தியர் 13:11; நீதிமொழிகள் 22:15; பிரசங்கி 11:10) பெற்றோர் இந்தக் குறைபாடுகளையெல்லாம் புரிந்துகொண்டு, குழந்தையின் வயதுக்கும் திறமைக்கும் பொருத்தமானதற்கு அதிகமாக எதிர்பார்க்காமல் இருக்கவேண்டும்.
குழந்தைகளைச் சிட்சித்தல்: பைபிளில் கிரேக்க மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட “சிட்சை” என்ற வார்த்தையின் அர்த்தம் “கல்வி புகட்டு” என்பதாகும். ஆகையால் சிட்சையின் முக்கிய குறிக்கோள், வேதனையை உண்டாக்குவது அல்ல, ஆனால் பயிற்சியளிப்பது. இதில் அதிகத்தை அடிக்காமலேயே செய்யமுடியும். இருப்பினும் அடிப்பது சிலசமயங்களில் அவசியமானதாக இருக்கலாம். (நீதிமொழிகள் 13:24) பைபிள் கூறுகிறது: “நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்.” (நீதிமொழிகள் 8:33) மேலும், ஒருவன் “தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்” என்றும் “நீடிய சாந்தத்தோ”டே கடிந்துகொள்ளவேண்டுமென்றும் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 2:24; 4:2) இது கோபத்தில் திடீர்பாய்ச்சலையும் அடிப்பது தேவைப்படும்போதுங்கூட அளவுக்குமீறிய பலத்தை உபயோகிப்பதையும் தடைசெய்கிறது.
இந்த பைபிள் நியமங்களின் நோக்குநிலையில், உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய சிட்சை போதிக்கிறதா, அல்லது அது வெறுமனே புண்படுத்துவதனால் கட்டுப்படுத்துகிறதா? என்னுடைய சிட்சை சரியான நியமங்களைப் புகட்டுகிறதா வெறுமனே பயப்படுத்துகிறதா?’
பெரியவர்களுக்கான நடத்தை கட்டுப்பாடு: தான் முழு “கட்டுப்பாட்டையும் இழந்து” தன் மனைவியை அடித்ததாக துர்ப்பிரயோகம் செய்பவர் ஒருவர் சொன்னார். அம்மனிதன் தன் மனைவியை எப்போதாவது கத்தியால் குத்தியதுண்டா என்று ஓர் ஆலோசகர் கேட்டார். “நான் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டேன்!” என்று அந்த மனிதன் பிரதிபலித்தார். அம்மனிதன் தான் ஒரு வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் செயல்பட்டுக்கொண்டிருந்தார், ஆனால் அவை தகுந்த வரம்புகளாக இல்லாததுதான் பிரச்னை என்று புரிந்துகொள்ள உதவிசெய்யப்பட்டார்.
உங்களுடைய வரம்புகள் எங்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளன? ஒரு முரண்பாடு உருவாகுமானால் அது துர்ப்பிரயோகத்தில் முடிவதற்கு முன் நிறுத்துகிறீர்களா? அல்லது நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து கூச்சலிடவும் அவமானப்படுத்தவும் தள்ளவும் சாமான்களை எறியவும் அல்லது தாக்கவும் தொடங்குகிறீர்களா?
இப்புதிய ஆளுமை மனச்சம்பந்தமான துர்ப்பிரயோகத்துக்கோ சரீரப்பிரகாரமான வன்முறைக்கோ இடங்கொடாத ஒரு கண்டிப்பான வரம்பைக்கொண்டதாய் இருக்கிறது. “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்,” என்று எபேசியர் 4:29 சொல்கிறது. வசனம் 31 மேலும் கூறுகிறது: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும் (சீற்றம், NW), கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.” “சீற்றம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை “உணர்ச்சிவசப்படும் சுபாவ”த்தைக் குறிக்கிறது. ஆர்வமூட்டும்விதமாகவே, குழந்தை துர்ப்பிரயோகம் செய்பவர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் தனித்தன்மை “உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் திகைப்பூட்டுமளவு குறைவுபடுவதாகும்” என்று நச்சுப் பெற்றோர் (Toxic Parents) என்ற புத்தகம் குறிக்கிறது. இந்தப் புதிய ஆளுமை சரீரப்பிரகாரமான மற்றும் வார்த்தையினாலான உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் கண்டிப்பான வரம்புகளை நிர்ணயித்திருக்கிறது.
சந்தேகமின்றி, இந்தப் புதிய ஆளுமை மனைவிக்கும் மேலும் கணவனுக்குங்கூட பொருந்துகிறது. அவள் தன்னுடைய துணைவனை கோபமூட்டாதிருக்க முயற்சியெடுக்கவேண்டும். மாறாக குடும்பத்தைப் பராமரிக்க அவன் எடுக்கும் முயற்சிகளுக்குப் போற்றுதல் காண்பித்து அவனோடு ஒத்துழைக்கவேண்டும். மேலும் இருவரும் இருவராலுமே கொடுக்கமுடியாததை—பரிபூரணத்தை—மற்றவரிடமிருந்து, வற்புறுத்திக் கேட்கக்கூடாது. அதற்குப்பதிலாக, 1 பேதுரு 4:8-ல் சொல்லப்பட்டுள்ளதை இருவருமே பொருத்தவேண்டும். அது சொல்கிறது: “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.”
முதியோருக்கு மரியாதை: “வயதானவர்களுக்கு மரியாதை காண்பித்து அவர்களைக் கனப்படுத்துங்கள்,” என லேவியராகமம் 19:32 சொல்கிறது. (டுடேஸ் இங்கிலீஷ் வெர்ஷன்) ஒரு வயதான பெற்றோர் உடல்நலமின்றி இருக்கும்போதோ ஒருவேளை அதிகத்தை வற்புறுத்திக் கேட்கும்போதோ இது ஒரு சவாலாக இருக்கலாம். ஒன்று தீமோத்தேயு 5:3, 4 பெற்றோரைக் “கனம்” பண்ணுவதையும் அவர்களுக்குப் “பதில் நன்மைகளைச்” செய்வதைப்பற்றியும் பேசுகிறது. இது நிதி ஏற்பாடுகளையும் மரியாதையையும் உட்படுத்தக்கூடும். நாம் உதவியற்ற குழந்தைகளாக இருந்தபோது நம்முடைய பெற்றோர் நமக்குச் செய்த எல்லாவற்றிற்காக, அவர்களுக்குத் தேவைப்படும்போது நாம் அதேபோல கவனம்செலுத்தவேண்டும்.
உடன்பிறந்தோரிடையே போட்டிமனப்பான்மையை வெல்லுதல்: காயீனுடைய விரோதம் தன்னுடைய தம்பி ஆபேலைக் கொல்ல வழிநடத்துமுன்பே, அவன் “பாவம் உன் வாசற்படியில் படுத்திருக்கும். அது உன்னை ஆள விரும்புகிறது, ஆனால் நீ அதை மேற்கொள்ளவேண்டும்,” என எச்சரிக்கப்பட்டான். (ஆதியாகமம் 4:7, TEV) உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியும். “நீங்கள் ஒருவரையொருவர் அன்பு செய்வதனால், ஒருவரையொருவர் தாராளமாக தாங்கி” பொறுமையாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.—எபேசியர் 4:2, பிலிப்ஸ்.
நம்பிக்கையோடு தெரிவிக்கக் கற்றுக்கொள்ளுதல்
குடும்பத்தில் வன்முறைக்குப் பலியான அநேகர் அமைதியாக துன்பப்படுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் டாக்டர் ஜான் ரைட் வற்புறுத்துகிறார்: “தாக்கப்படும் பெண்கள் தகுதிவாய்ந்த ஒரு மூன்றாம் ஆளிடமிருந்து உணர்ச்சிசம்பந்தமான மற்றும் சரீரப்பிரகாரமான பாதுகாப்பைத் தேடவேண்டும்.” துர்ப்பிரயோகப்படுத்தப்பட்ட எந்தக் குடும்ப அங்கத்தினருக்கும் இதே நியமம் பொருந்துவதாயிருக்கிறது.
சிலசமயங்களில் பலியாள் ஒருவர், வேறொரு தனிநபரிடம் நம்பிக்கையோடு தெரிவிப்பதைக் கடினமாகக் காண்கிறார். எப்படியிருந்தாலும், சமூகத்தில் மிகநெருங்கிய ஒரு தொகுதியிடம்—குடும்பத்தில்—வைத்திருந்த நம்பிக்கைதான் வேதனைக்கு வழிநடத்தியிருக்கிறது. இருப்பினும், “சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் [நெருக்கமாய்ச், NW] சிநேகிப்பவனுமுண்டு,” என்பதாக நீதிமொழிகள் 18:24 கூறுகிறது. அப்படிப்பட்ட நண்பனைக் கண்டுபிடித்துப் புத்திக்கூர்மையாய் அவனிடம் நம்பிக்கையோடு தெரிவிக்கக் கற்றுக்கொள்ளுவதே தேவையான உதவியைப் பெறுவதில் மதிப்புள்ள ஒரு படியாகும். சந்தேகமின்றி துர்ப்பிரயோகம் செய்பவருங்கூட உதவியைப் பெறும் தேவையிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் யெகோவாவின் சாட்சிகளாகிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் புதிய ஆளுமையைத் தரித்துக்கொள்ளும் சவாலை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் மத்தியில் முன்பு குடும்பத்தில் வன்முறை குற்றத்தைச் செய்தவருமுண்டு. மீண்டும் தவறிழைக்கும் மனப்போக்கை எதிர்த்துச் செயல்புரிவதற்கு “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும்,” உதவும்படி பைபிளைத் தொடர்ந்து அனுமதித்துக்கொண்டிருக்கவேண்டும்.—2 தீமோத்தேயு 3:16.
இந்தப் புதிய சாட்சிகளுக்கு, புதிய ஆளுமையைத் தரித்துக்கொள்வது தொடர்ந்திருக்கும் ஒரு காரியமாக இருக்கிறது. ஏனென்றால் கொலோசெயர் 3:10 அது ‘புதிதாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறது. எனவே தொடர்ந்த முயற்சி தேவைப்படுகிறது. நன்றிதெரிவிக்கக்கூடிய வகையிலே, யெகோவாவின் சாட்சிகள் திரளான ஆவிக்குரிய ‘சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள், பிள்ளைகள்’ ஆகியோரின் ஆதரவைக் கொண்டிருக்கின்றனர்.—மாற்கு 10:29, 30; மற்றும் எபிரெயர் 10:24, 25-ஐயும் பாருங்கள்.
மேலும், உலகமுழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சுமார் 70,000 சபைகளில் எல்லாம், ‘காற்றுக்கு ஓர் ஒதுக்காகவும், புயல்மழைக்கு ஒரு புகலிடமாகவும்’ விளங்குகிற பிரியமுள்ள கண்காணிகள் இருக்கின்றனர். அவர்களுடைய ‘கண்களும் காதுகளும் மக்களின் தேவைகளுக்குத் திறந்திருக்கும்.’ (ஏசாயா 32:2, 3, TEV) எனவே புதிய யெகோவாவின் சாட்சிகளும், அதிக அனுபவமுள்ளவர்களும், புதிய ஆளுமையைத் தரித்துக்கொள்ள உழைக்கும்போது கிறிஸ்தவ சபைகளில் ஆச்சரியமான ஓர் உதவியின் தேக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இரக்கமுள்ள கண்காணிகள்
யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் உள்ள கிறிஸ்தவ கண்காணிகளிடத்தில் மக்கள் ஆலோசனைக்காக வரும்போது, எல்லாருக்கும் பட்சபாதமில்லாமல் செவிகொடுக்கும்படி இந்தக் கண்காணிகள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். எல்லாருக்கும், குறிப்பாக வினைமையான துர்ப்பிரயோகத்திற்குப் பலியானோருக்கு, அதிக இரக்கமும் புரிந்துகொள்ளுதலும் காட்டும்படியாக அவர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.—கொலோசெயர் 3:12; 1 தெசலோனிக்கேயர் 5:14.
உதாரணமாக, தாக்கப்பட்ட ஒரு மனைவி முரட்டுத்தனமாகக் காயப்படுத்தப்பட்டிருக்கமுடியும். பல தேசங்களில் அதே தாக்குதலைக் குடும்பத்திலல்லாத வெளியுள்ள ஒருவரிடமாக நடத்தியிருந்தால், துர்ப்பிரயோகம் செய்தவர் சிறைக்குச் செல்லவேண்டியிருந்திருக்கும். ஆகவே அந்தப் பலியாள், பாலின துர்ப்பிரயோகத்தைப்போன்ற மற்ற எல்லா வகையான துர்ப்பிரயோகத்திற்குப் பலியானோரைப்போலவே, அளவுகடந்த தயையுடன் நடத்தப்படவேண்டும்.
மேலும், கடவுளுடைய சட்டங்களுக்கு எதிராக குற்றம் இழைத்தவர்களிடமிருந்து கணக்குக் கேட்கப்படவேண்டும். இவ்வாறு சபை சுத்தமாகவும் வைக்கப்படுகிறது, குற்றமற்ற மற்ற ஆட்களும் பாதுகாக்கப்படுகின்றனர். மிக முக்கியமாக, கடவுளுடைய ஆவியின் ஊற்றுதல் தடைசெய்யப்படுவதில்லை.—1 கொரிந்தியர் 5:1-7; கலாத்தியர் 5:9.
திருமணத்தைப்பற்றிய கடவுளுடைய நோக்குநிலை
மக்கள் யெகோவாவின் சாட்சிகளாகும்போது, கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கான நியமங்களைப் பின்பற்றுவதாக அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். குடும்பத்தை உண்மை வணக்கத்தில் வழிநடத்த, ஆண் அதன் தலைவனாக நியமிக்கப்பட்டிருக்கிறான் என கற்றுக்கொள்கின்றனர். (எபேசியர் 5:22) ஆனால் மனைவியை முரட்டுத்தனமாக நடத்தவோ, அவளுடைய ஆளுமையை நொறுக்கவோ, அவளுடைய விருப்பங்களை அசட்டை செய்யவோ தலைமைத்துவம் அனுமதிப்பதில்லை.
அதற்கு மாறாக, கடவுளுடைய வார்த்தை “[தங்கள்] மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும். தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான், தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே. . . . [ஆனால் அவன், NW] தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்,” என்பதாகக் கணவர்களுக்குத் தெளிவாகக் கூறுகிறது. (எபேசியர் 5:25, 27, 28, 29) உண்மையில், மனைவிகள் “கனம்” செய்யப்படவேண்டும் என்று கடவுளுடைய வார்த்தை தெளிவாகக் கூறுகிறது.—1 பேதுரு 3:7; இவற்றையும் பாருங்கள்: ரோமர் 12:3, 10; பிலிப்பியர் 2:3, 4.
நிச்சயமாகவே வார்த்தைகளைக்கொண்டோ சரீரப்பிரகாரமாகவோ துர்ப்பிரயோகம் செய்தால், எந்தக் கிறிஸ்தவ கணவனும் தன் மனைவியை மெய்யாக நேசிப்பதாக அல்லது அவளைக் கனப்படுத்துவதாக உண்மையிலேயே வாதாடமுடியாது. அது மாய்மாலமாகும், ஏனென்றால் கடவுளுடைய வார்த்தை இவ்வாறு கூறுகிறது: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.” (கொலோசெயர் 3:19) விரைவில், அர்மகெதோனில் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு விரோதமாக கடவுளுடைய நியாயத்தீர்ப்பு வரும்போது, கடவுளுடைய ஆட்சியை எதிர்ப்பவர்களுக்குச் சம்பவிக்கப்போகிற அதே முடிவுதான் மாய்மாலக்காரர்களுக்கும் நேரிடும்.—மத்தேயு 24:51.
தெய்வபயமுள்ள ஒரு கணவன் தன் மனைவியைத் தன் சொந்த சரீரத்தைப்போல் நேசிக்கவேண்டும். தன் சொந்த சரீரத்தை அடித்து, தனக்குத்தானே முகத்தில் குத்தி, அல்லது முரட்டுத்தனமாக தன்னுடைய சொந்த முடியைப் பிடித்து இழுத்துக்கொள்வானா? மற்றவருடைய முன்னிலையில் தன்னைத்தானே ஏளனம் செய்து தரக்குறைவாகப்பேசி வசைபாடுவானா? உள்ளதைச் சொன்னால், அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிற ஒருவன் புத்தி சுவாதீனமற்றவனாகக் கருதப்படுவான்.
ஒரு கிறிஸ்தவ ஆண் தன் மனைவியைத் தாக்கினால், அது கடவுளுடைய பார்வையில் அவனுடைய மற்ற எல்லா கிறிஸ்தவ நடவடிக்கைகளும் மதிப்பில்லாமல் போகச்செய்கிறது. “அடிக்கிறவ”னொருவன் கிறிஸ்தவ சபைகளில் பொறுப்புகளைப் பெறுவதற்குத் தகுதியானவனல்ல என்பதை ஞாபகத்தில் வையுங்கள். (1 தீமோத்தேயு 3:3; 1 கொரிந்தியர் 13:1-3) சந்தேகமின்றி, இதேபோன்று தன்னுடைய கணவனிடத்தில் நடந்துகொள்கிற எந்த மனைவியும் கடவுளுடைய சட்டங்களை மீறுகிறாள்.
கலாத்தியர் 5:19-21 “பகைகள், விரோதங்கள், . . . கோபங்கள்” போன்றவற்றைக் கடவுளால் கண்டனம் செய்யப்பட்ட கிரியைகளுக்குள் உட்படுத்தி, “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என மேலும் கூறுகிறது. இவ்வாறு ஒருவருடைய துணைவரையோ பிள்ளைகளையோ தாக்குவது ஒருபோதும் நியாயப்படுத்தமுடியாது. வழக்கமாகவே அது நாட்டின் சட்டத்துக்கு எதிரானதாகும், மேலும் நிச்சயமாக கடவுளுடைய சட்டத்திற்கு எதிரானது.
கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டிக்கொண்டு, இன்னும் தாக்குபவர்களாக இருப்பவர்களைப்பற்றி கூறும்போது, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுரம் பத்திரிகை இந்தக் காரியத்தின்பேரில் ஒரு வேதப்பூர்வமான நோக்குநிலையை இவ்வாறு விளக்குகிறது: “கிறிஸ்தவன் என்று உரிமைபாராட்டுகிற ஆனால் திரும்பத் திரும்ப மனந்திரும்புதலின்றி கோபப்பட்டு வன்முறையில் ஈடுபடுகிற எவனொருவனும் சபைநீக்கம் செய்யப்படக்கூடும்,” சபையிலிருந்து புறம்பாக்கப்படக்கூடும்.—மே 1, 1975, பக்கம் 287 (ஆங்கிலம்); 2 யோவான் 9, 10-ஐ ஒப்பிடுங்கள்.
கடவுளுடைய சட்டம் அனுமதிப்பது
கடவுள் தம்முடைய சட்டங்களை மீறுபவர்களை முடிவில் நியாயந்தீர்ப்பார். அதுவரை, வன்முறை குற்றத்தைச் செய்பவர் போக்கை மாற்றாமல் தொடர்ந்து தாக்கும்போது, தொடர்ந்து தாக்கப்படுகிற கிறிஸ்தவ துணைவர்களுக்குக் கடவுளுடைய வார்த்தை என்ன ஏற்பாடுகளை வைத்திருக்கிறது? குற்றம் செய்யாத பலியாட்கள் தொடர்ந்து தங்களுடைய சரீரப்பிரகாரமான, மனச்சம்பந்தமான, மற்றும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை, ஒருவேளை தங்களுடைய உயிரையே, ஆபத்திற்குள்ளாக்கக் கடமைப்பட்டிருக்கின்றனரா?
குடும்பத்தில் வன்முறையைப்பற்றி குறிப்பிடும்போது, கடவுளுடைய வார்த்தை எதை அனுமதிக்கிறது என்பதைப்பற்றி காவற்கோபுரம் (ஆங்கிலம்) இவ்வாறு கூறுகிறது: “பவுல் அப்போஸ்தலன் அறிவுரை கூறுகிறார்: ‘மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.’” அந்தக் கட்டுரை தொடர்ந்து சொல்கிறது: “துர்ப்பிரயோகம் தாங்கமுடியாத அளவுக்குப் போனால் அல்லது உயிரே ஆபத்திற்குள்ளானால், விசுவாசியான துணை ‘பிரிந்து போவதைத்’ தெரிந்துகொள்ளலாம். ஆனால் காலப்போக்கில் ‘ஒப்புரவாதலுக்கு’ முயற்சி எடுக்கவேண்டும். (1 கொரிந்தியர் 7:10-16) எனினும், ‘பிரிந்து போவது’தானே மணவிலக்குக்கும் மறுமணத்திற்கும் வேதப்பூர்வ ஆதாரங்களைக் கொடுப்பதில்லை; இன்னும், ஒரு சட்டப்பூர்வமான மணவிலக்கு அல்லது ஒரு சட்டபூர்வமான பிரிவு மேலுமான துர்ப்பிரயோகத்திலிருந்து ஓரளவுக்குப் பாதுகாப்பைத் தரலாம்.”—மார்ச் 15, 1983 (ஆங்கிலம்), பக்கங்கள் 28-9; நவம்பர் 1, 1988 (ஆங்கிலம்) பிரதியின் பக்கங்கள் 22-3-ஐயும் பாருங்கள்.
இந்தச் சூழ்நிலைகளில் ஒரு பலியாள் என்ன செய்ய தேர்ந்தெடுக்கிறாரோ அது அவருடைய தனிப்பட்ட தீர்மானமாக இருக்கவேண்டும். “அவனவன் [அல்லது அவளவள்] தன்தன் பாரத்தைச் சுமப்பானே [சுமப்பாளே].” (கலாத்தியர் 6:5) அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை அவளுக்காக வேறு யாரும் எடுக்கமுடியாது. அவளுடைய ஆரோக்கியம், உயிர், மற்றும் ஆவிக்குரிய தன்மை போன்றவற்றை அச்சுறுத்துகிற துர்ப்பிரயோகஞ்செய்யும் கணவனிடத்திற்குத் திரும்பிச் செல்லும்படி யாரும் அவளை வற்புறுத்தக்கூடாது. அது மற்றவர்கள் தங்களுடைய விருப்பத்தை அவள்மீது திணிக்க முயன்றதால் இல்லாமல், அவளுடைய சொந்த தெரிவாகவும், அவளுடைய சொந்த விருப்பமாகவும் இருக்கவேண்டும்.—பிலேமோன் 14-ஐ பாருங்கள்.
குடும்பத்தில் வன்முறைக்கு ஒரு முடிவு
குடும்பத்தில் வன்முறை, பைபிள் கடைசிநாட்கள் என்று முன்னறிவித்த காலத்தின் உருமாதிரியாய் இருக்கிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொண்டிருக்கின்றனர். அந்நாட்களில் அநேகர் “துர்ப்பிரயோகிப்பவர்களாயும்,” “இயற்கை அன்பு இல்லாதவர்களாயும்,” “கொடுமையுள்ளவர்களாயும்” இருப்பார்கள். (2 தீமோத்தேயு 3:2, 3, தி நியூ இங்கிலீஷ் பைபிள்) இக்கடைசி நாட்களுக்குப் பிறகு, அமைதி நிலவும் ஒரு புதிய உலகிற்குள் வழிநடத்திச் செல்வதாகக் கடவுள் வாக்குக்கொடுக்கிறார். அங்கு மக்கள் “அச்சமின்றி வாழ்வார்கள்; அவர்களை மிரட்டுவார் யாரும் இருக்கமாட்டார்கள்.”—எசேக்கியேல் 34:28, கத்தோலிக்க பைபிள்.
அந்த ஆச்சரியகரமான புதிய உலகில், குடும்பத்தில் வன்முறை என்றென்றைக்கும் ஒரு கடந்தகால காரியமாகவே இருக்கும். “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
எதிர்காலத்திற்கான பைபிளின் வாக்குகளைப்பற்றி அதிகம் கற்றுக்கொள்ளும்படி நாங்கள் உங்களைத் துரிதப்படுத்துகிறோம். உண்மையில், பைபிளின் நியமங்களை உங்கள் குடும்ப சூழமைவில் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம் இப்போதுங்கூட நீங்கள் பலன்களை அறுவடை செய்யலாம். (g93 2/8)
[அடிக்குறிப்புகள்]
a திறம்பட்ட பெற்றோராவதற்கு அநேக நல்ல ஆலோசனைகள், உவாட்ச் டவர் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல், என்ற புத்தகத்தின் “பிள்ளைகளை உடையவர்களாயிருப்பது—ஒரு பொறுப்பும் பலனுமாம்,” “பெற்றோராக நீங்கள் வகிக்கவேண்டிய பாகம்” மற்றும் “குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்” போன்ற 7 முதல் 9 அதிகாரங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 10-ன் படங்கள்]
குடும்ப சச்சரவுகளைத் தீர்க்க பைபிள் நியமங்கள் உதவுகின்றன
[பக்கம் 13-ன் படம்]
ஒரு தகுதிவாய்ந்த நண்பரிடம் பலியாட்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கும் தேவையிருக்கிறது