போதை மருந்துகள் பிரச்னைகள் பெருகுகின்றன
போதை மருந்துகள் இந்நாளின் செய்திகளில் அதிகமாக இடம்பெறுகின்றன. போதை மருந்து பிரச்னை குறிப்பிடப்பட்டிராத தினசரியை அல்லது பத்திரிகையைக் காண்பது கடினம்: வெளிநாட்டுத் தூதுவர் ஒரு தேசத்துக்குப் போதை மருந்து எடுத்துச் சென்றதற்குப் பிடிபட்டார். போதை மருந்து கடத்தும் செயல்களில் ஈடுபட்டதற்காக ஒரு தேசீய தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிரபல விளையாட்டு வீரர் போதைமருந்து அருந்தும் பழக்கத்திலிருந்ததால் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்படுகிறார். அரசு அதிகாரிகள் ஒரு விமானத்தை அல்லது படகைத் திடீர் சோதனையிட்டு ஏராளமான போதைவஸ்துக்களைக் கைப்பற்றினர். பிரபல பொழுதுபோக்கு நட்சத்திரம் அளவுக்கதிகமாகப் போதைமருந்தைப் பயன்படுத்தியதால் மரித்தார். இரயில் விபத்தில் உட்பட்டிருந்த ஓர் இரயில் பொறியாளர் போதை மருந்தின் செல்வாக்கிலிருந்தது தெரியவருகிறது. போதை மருந்தின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதைத் தன் தேர்தல் பயணத்தின் தலையாய பிரச்னையாகக் கொள்கிறார் ஓர் அரசியல்வாதி. இப்படியாக இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
போதை மருந்து பிரச்னை அந்தளவுக்குப் பேச்சுப்பொருளாகிவிட்டதால் இரண்டாண்டுகளுக்கு முன் 24 தேசங்கள் ஒன்று சேர்ந்து போதை மருந்துகளை ஒழித்திட தீர்மானம் எடுத்தனர். அவர்கள் 5,046 டன் கொக்கோ இலையையும் 17,585 டன் மரியுவானா தாவரங்களையும் அழித்தனர்” என்று ஐ.மா.செய்திகளும் உலக அறிக்கையும் (U.S.News & World Report) அறிக்கைசெய்கிறது. “இருந்தாலும், தற்போதைய ஒழிப்புத் திட்டங்கள் உலக முழுவதும் கிடைத்திடும் போதை வஸ்துக்களைக் குறைத்திட போதாது என்பது [ஐ.மா.] அரசு பிரிவின் முடிவு.”
போதை மருந்துகளைக் கைப்பற்றுதல், கைதுசெய்தல் மற்றும் தண்டனை விதித்தல் அதிகரித்திருக்கிறது, ஆனால் அதே அளவில் கள்ளத்தனமாக போதை மருந்துகள் கிடைப்பதும் அதிகரித்திருக்கிறது. போதை மருந்துகள் சிறிய அளவில்தான் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்படுகிறது, அநேக இடங்களில் போதை மருந்துகளைப் பெறுவது முன்பு இருந்ததைவிட மிக எளிதாகவே இருக்கிறது. உதாரணமாக, 1986-ல் கொக்கேய்ன் தயாரிக்கும் உற்பத்திக் கூடங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், பொலிவியா, கொலொம்பியா, பெரு ஆகிய இடங்களில் கொக்கோ இலைகளின் உற்பத்தி 1986 மற்றும் 1987-ல் 10 சதவிகிதம் கூடுதலாக ஆனது. இப்பொழுது தெருக்களில் விற்பனை செய்யப்படும் கொக்கேய்ன் அதிக சுத்தமானதாகவும் விலையில் சரிவு கண்டுமிருக்கிறது—கூடுதலாகக் கிடைக்கிறது என்பதற்கு அத்தாட்சியளிப்பதாயிருக்கிறது.
“உலகிலேயே தொழில்துறையில் முன்னேறிய எந்த ஒரு நாட்டையும்விட ஐக்கிய மாகாணங்கள் தாமே இளைஞரில் கள்ளப் போதை மருந்தின் உபயோகம் பெருத்து காணப்படும் இடமாக இருக்கிறது. மற்றும் மிக சிறிய வயதில் போதை மருந்து பயன்படுத்தும் காரியமும் முன்பிருந்ததைவிட அதிகரித்திருக்கிறது,” என்று இன்றைய நடத்தை (Behavior Today) என்ற பத்திரிகையின் அறிக்கை ஒன்று கூறுகிறது. தங்களுடைய வாழ்நாளில் போதை மருந்தைப் பயன்படுத்திய உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 20-களின் இடையிலிருப்போரின் எண்ணிக்கை 80 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் போதை மருந்துகளுக்கு அடிமையாகியிருப்பவர்கள் 12 இலட்சம் பேர். 23 இலட்சத்துக்கும் அதிகமானோர் பொழுதுபோக்குக்காக போதை மருந்துகள் அருந்துகிறவர்கள்.
போதை மருந்து கொள்ளை நோயிலிருந்து மற்ற நாடுகள் விதிவிலக்கல்ல. சோவியத் தினசரி பிராவ்டா (Pravda) உள்துறை அமைச்சர் அலெக்ஸாந்தர் விலாகோவ் கூறியதை மேற்கோள் காண்பித்தது: “போதை மருந்துக்கு அடிமையாதலுக்கும் அது சம்பந்தப்பட்ட குற்றச்செயலுக்கும் எதிரான போராட்டம் உள்துறை மந்திரிசபையின் முக்கிய செயல்திட்டங்களில் ஒன்றாக ஆகியிருக்கிறது.” சோவியத் வீக்லி (Soviet Weekly) என்ற பத்திரிகையில் அறிக்கை செய்தபடி, “கடந்த இரண்டு ஆண்டுகளில் போதை மருந்து சம்பந்தப்பட்ட வழக்குகள் 80,000 சோவியத் மக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்தது,” மற்றும் அவற்றுக்கு அடிமைகளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அது 1,31,000 பதிவு செய்யப்பட்ட போதை மருந்து உபயோகிப்பாளர்களுடன் ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது.”
ஹங்கேரியில் 30,000 முதல் 50,000 போதை மருந்து அருந்தும் ஆட்கள் இருப்பதாகவும், போலந்தில் 2,00,000 முதல் 6,00,000 வரையுமாகவும், அவர்களில் பெரும்பான்மையினர் 25 வயதுக்குட்பட்டவர்களாகும் என்றும் சொல்லப்படுகிறது. பாக்கிஸ்தானில் அபினிக்கு அடிமையானவர்கள் 3,13,000 பேர் என்றும் ஹெராய்ன் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் 1,50,000 பேர் என்றும் பாக்கிஸ்தான் கூறுகிறது. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சர் ஜாக் ஸ்டுவர்ட் க்ளார்க் முன் நிதானிப்பின்படி, மேற்கு ஐரோப்பாவில் கொக்கேய்ன் போதைப் பொருளைத் தவறாமல் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை 1990-க்குள் முப்பது முதல் நாற்பது இலட்சத்தை எட்டக்கூடும். ஸ்பய்னில் ஏற்கெனவே 60,000 முதல் 80,000 கொக்கேன் உபயோகிப்பாளர்கள் இருக்கிறார்கள்.
போதை மருந்து பிரச்னை அவ்வளவு அதிகமாக வளர்ந்துவிட்டதால் அது “சில தேசங்களின் பாதுகாப்பையே ஆபத்துக்குள்ளாக்கும்” நிலையிலிருப்பதாக ஐக்கிய நாடுகள் ஆய்வு காண்பிக்கிறது.
போதை மருந்துகள் ஏன் இவ்வளவாய் வெட்ட வெளிச்சத்திலிருக்கிறது. ஆம், மக்கள் ஏன் போதை மருந்துகள் எடுக்கிறார்கள்? உயர்ந்துகொண்டுபோகும் போதை மருந்து பிரச்னையைக் கட்டுப்படுத்துவதற்கான பெரிய அளவான முயற்சிகள் ஏன் தோல்வியடைந்துவிட்டன? வளரும் போதை மருந்து தொல்லைக்கு முடிவுகட்ட என்ன செய்யப்படலாம்? (g88 12⁄8)