போதை மருந்துகள் ஏதேனும் நம்பிக்கை உண்டா?
போதை மருந்துகள் கள்ளத்தனமாக பயன்படுத்தப்படும் போக்கைக் கட்டுப்படுத்துவதற்கான எல்லா முயற்சிகளும் ஏன் தோல்வியடைந்துவிட்டன? ஒரே வார்த்தையில் சொன்னால்: பணம். போதை மருந்துகள் பெருத்த வியாபாரமாகும். இலாபங்கள் பல்லாயிரக் கோடியில் கணக்கிடப்படுகிறது.
ஐக்கிய மாகாணங்களில் போதைப் பொருட்கள் விற்பனையில் மொத்தம் வருவாய் மட்டும் 6,000 கோடி முதல் 12,000 கோடி டாலராகும். செலவுகளுக்காக 2,000 கோடி டாலர் ஒதுக்கப்பட்டாலும், 4,000 கோடி முதல் 10,000 கோடி டாலர் மொத்த இலாபமாக இருக்கிறது. “போதை மருந்து வியாபாரம் ஆண்டுக்கு 30,000 கோடி டாலராக உலகின் மிகப் பெரிய வியாபாரமாக இருக்கிறது” என்று உவர்ல்டு பிரஸ் ரிவ்யு (World Press Review) கூறுகிறது.
தங்களுடைய கைவசத்தில் இவ்வளவு பணம் இருப்பதால் போதை மருந்து வியாபாரிகள் மனிதனில் இருக்கும் அந்தப் பேராசையைப் பயன்படுத்தி தாங்கள் செய்ய நினைப்பதையெல்லாம் செய்வதற்குரிய சக்திபடைத்தவர்களாக இருக்கிறார்கள். “அவர்கள் தங்களுடைய பணத்தை எண்ணுவதில்லை—அதை நிறுக்கிறார்கள்,” என்றார் ஒரு போலீஸ் அதிகாரி. “அவர்கள் சாட்சிகளை விலைகொடுத்து வாங்கலாம்; அவர்களுக்கு வேண்டியவர்களையெல்லாம் வாங்கலாம்.” பொலிவியாவில் அதிகாரிகள் போதைப் பொருட்களுக்கு எதிராக சட்டம் இயற்றுவதைத் தவிர்த்தால் தேசத்தின் 380 கோடி டாலர் கடனையும் தான் தீர்த்துவிட முன்வருவதாக ஒரு போதை மருந்து வியாபாரி கூறியதாக அறிக்கை செய்யப்பட்டது.
மேற்கத்திய பகுதியின் கொக்கேன் மற்றும் மரியுவானா வியாபார மன்னர்கள் நன்கு ஸ்தபிக்கப்பட்ட ஆசியாவின் அபினிக் கர்த்தாக்கள் கொண்டிருந்த செல்வாக்கையும் மிஞ்சிவிட்டார்கள். “கைக்கூலி கொடுத்தும், தேவைப்படும் சமயத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்தியும் போதை மருந்து கோமக்கள் பொலிவியா முதல் பாஹாமாஸ் வரை ஊழலை ஈன்றிருக்கின்றனர்; ஒன்றுக்கு மேற்பட்ட தேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து மாற்று ஆட்சி கொண்டுவருமளவுக்கு அச்சுருத்தி வருகின்றனர்,” என்று டைம் பத்திரிகை அறிக்கை செய்கிறது. “நாட்டைவிட பலமான ஓர் அமைப்புக்கு எதிரானவர்கள் நாங்கள்,” என்கிறார் முன்னாள் கொலொம்பியாவின் அதிபர் பெலிசாரியோ பெட்டான்கர்.
அவன் அறிந்திருக்க வேண்டும். கொலொம்பியாவில், கொக்கேய்ன் வியாபாரத்தை ஆண்டுவந்த போதை மருந்து கர்த்தாக்களாகிய மெடலின் கூட்டணியின் உறுப்பினர்கள், தங்களை எதிர்த்த அல்லது அவர்கள் மீது வழக்கு தொடர்ந்த அனைவருக்கும் எதிராக வன்முறைகொண்ட ஒரு செயல்திட்டத்தைக் கொண்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு நீதித்துறை மந்திரி, 21 நீதிபதிகள், ஒரு செய்தித்தாள் ஆசிரியர், ஒரு டஜனுக்கு மேற்பட்ட பத்திரிகை நிருபர்கள், அநேக இராணுவ வீரர்கள், காவல் துறையினரும் உள்ளடங்குவர். “குற்றச்செயல் தொகுதி ஒன்று பெரிய தேசத்தை இந்தளவுக்கு அச்சுறுத்த முடிந்தது இதற்கு முன்னிருந்ததில்லை,” என்று நியுஸ்வீக் (Newsweek) குறிப்பிடுகிறது. “கொலம்பியாவின் நீதிபதிகள் விசாரணை செய்ய பயப்படுகின்றனர்; காவல்துறையினர் கைது செய்ய பயப்படுகின்றனர். குற்றங்கண்டுபிடிக்க நினைக்கும் பத்திரிகை எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்துக்களை வெளிநாடுகளிலிருந்து எழுதுகிறார்கள், அங்கு தங்களுடைய உயிருக்காக தப்பியோடிய கொலம்பியருக்கு ஏராளமான துணை இருக்கிறது.”
போதைமருந்து கிடைப்பதற்கு எதிரான போர் தோல்விகண்டது
பணம் உட்படுவதால், போதை மருந்து கிடைப்பதை நிறுத்துவதற்கு செய்யப்பட்ட போர் தோல்விகண்டது. விவசாயிகள் கொக்கோ, மரியுவானா, அபினி தாவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து பயிர் செய்கின்றனர். இவைகளில் பொதுவாக விவசாயம் செய்யப்படும் தாவரங்களைப் பயிர் செய்வதில் கிடைக்கும் கூலியைவிட அதிகம் கிடைக்கிறது. அவர்களுக்கோ போதை மருந்து கர்த்தாக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைக் காப்பவர்களாவர். அநேக காவல் துறையினரும் சுங்க அதிகாரிகளும் மறு பக்கமாகப் பார்க்கிறார்கள். போதை மருந்துகள் கள்ளக்கடத்தல் செய்யப்படும் ஒவ்வொரு சமயமும் 50,000 டாலருக்கு மேல் தங்களுக்கு ஈட்டித்தருகிறது.
இந்தக் கவர்ச்சியான போதை மருந்து வியாபாரத்தில் இவற்றின் வியாபாரிகள் ஒன்பது அல்லது பத்து வயது பிள்ளைகளை பயன்படுத்துகின்றனர்: அவர்கள் தெருக்களில் சேர்க்கும் கிரேக் போதை மருந்தின் பயன்படுத்தப்பட்ட குப்பிகளுக்கு 25 சென்ட், காவல் துறையினர் வருவது குறித்து எச்சரிப்பதற்கு நாள் ஒன்றுக்கு 100 டாலர், போதை மருந்துகளை கொடுத்து வருவதற்கு நாள் ஒன்றுக்கு 300 டாலர், மற்றும் இளைஞராக வியாபாரம் செய்பவனுக்கு 3,000 டாலர் கிடைக்கிறது. தங்களுடைய பள்ளித் தோழர்கள் மத்தியில் விலையுயர்ந்த உடைகளும், தங்கச் சங்கிலிகளும், விலையுயர்ந்த கார்களும் வாங்குவதில் தங்களுடைய பணத்தை வீசியெறிவதன் மூலம் அவர்கள் மற்றவர்களையும் கவர்ந்திழுக்கின்றனர்.
பயங்கரவாதிகள் தங்களுடைய பணிகளை நடத்துவதற்கு வேண்டிய பணத்திற்கு போதை மருந்துகளை வழியாகப் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து அவர்கள் போதை மருந்து கடத்தற்காரர்களுக்குத் துணைநிற்கின்றனர். சில அரசியல் தலைவர்கள் பணம்பண்ணுவதற்கும் எதிரி அரசாங்கத்தை மட்டுப்படுத்துவதற்கும் போதை மருந்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். கைதுசெய்வதோ அல்லது வழக்குத்தொடரப்படுவதோ அவர்களுக்குத் தடையாக இல்லை. அவர்கள் பெற்றிடும் இலாபம் அவ்வளவு அதிகமாக இருப்பதால், ஒரு வியாபாரி அல்லது உழல் மிக்க அதிகாரி இல்லாமற் போகச் செய்யப்பட்டால், அவனுடைய இடத்தில் கூடுதலாக இரண்டு பேர் வருகின்றனர்.
“போதை மருந்து உற்பத்தியும் கடத்துவதும் எதிர்பாராதவிதத்தில் பெருத்த வியாபாரமாக இருக்கிறது, உலக முழுவதும் போதை மருந்து துர்ப்பிரயோகம் தொடர்ந்து உயருகிறது,” என்று மார்ச் மாதத்தில் ஐ.மா. தேசீய துறை பொதுப்படையாக அறிக்கை செய்தது. “அரசியல் அதிகாரிகள் மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளின் ஊழல், இலஞ்சம், கடத்துதல் சார்பாக தலையிடுதல், வன்முறை, தேசங்களில் போதை மருந்து கடத்தி விற்பனைச் செய்யும் ஆட்களின் எண்ணிக்கை ஆள்பலத்தையும், துப்பாக்கியையும், பணத்தையும் மிஞ்சி விட்டனர் என்ற வெளிப்படையான உண்மை போதை மருந்து உற்பத்தியையும் கடத்தலையும் நிறுத்துவதற்கான அனைத்துலக முயற்சிகளை ஒன்றுமில்லாததாக்கிவிடுகிறது.” அப்படியிருக்க நம்பிக்கை எங்கே?
தேவையைக் குறைப்பது விடையா?
போதை மருந்தின் தேவைப் பாகத்தைக் குறைப்பதில் விடை இருக்கிறது என்பதாகச் சிலர் நினைக்கின்றனர். மற்ற வியாபாரங்களைப்போன்றே, சர்வதேச போதை மருந்து வியாபாரம் இருப்பு–தேவை என்ற அடிப்படையில் செயல்படுகிறது. போதை மருந்துகளுக்கான குறையாத் தேவை இல்லாமலிருந்தால் போதை மருந்து கிடைக்கப்பெறாமல்போகும். என்றபோதிலும், எச்சரிப்புகளின் மத்தியிலும், கூடுதல் கல்வி இருந்தபோதிலும், ‘போதை மருந்துகள் வேண்டாம்,’ என்று கோரப்பட்டும், அதன் உபயோகம் கேள்விக்கிடமின்றி தொடருகிறது. அதைவிட மோசமான காரியம், அது பரவுகிறது.
“உலக முழுவதுமுள்ள மற்ற தேசங்கள் இப்பொழுதுதான் இதில் இணைய ஆரம்பிக்கின்றன,” என்று டைம் குறிப்பிடுகிறது. “அமெரிக்காவின் போதை மருந்து கலாச்சாரம் ஐரோப்பிய மற்றும் ஆசிய இளைஞருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. புள்ளிவிவரங்கள் கிடைப்பது அரிதாயிருந்தாலும், போதை மருந்தின் உபயோகம் உலகமுழுவதும் பரவுவதாய்த் தெரிகிறது, விசேஷமாக ஐ.மா.வுக்குப் போதை மருந்துகளை ஏற்றுமதி செய்யும் தேசங்களில் அப்படியிருக்கிறது.” அண்மைக் காலங்களில் பொலிவியா போதை மருந்தின் உபயோகத்தில் உயர்வைக் கண்டிருக்கிறது. கொக்கோ மெல்லுவதற்கும் தேனீருக்கும் பயன்படுத்துவதற்காக அங்கு சட்டப்பூர்வமாக விளைவிக்கப்படுகிறது என்றாலும், இளைஞரில் அதிகமான எண்ணிக்கையினர் கொக்கேய்னின் புகைக்கும் ஒரு வகை போதைப் பொருளும் நச்சுத்தன்மையும்கொண்டதுமான பசுக்கோவுக்கு அடிமையாகின்றனர். அபினி மற்றும் ஹெராய்னுக்கு தெற்கு மற்றும் வடக்குப் பகுதியிலுள்ள வியட்னாம் இளைஞர்கள் அடிமைப்பட்டுவருவது ஆச்சரியமான உயர்வைக் கண்டதாக வியட்னாம் அறிக்கை செய்துள்ளது. மொத்தத்தில் உலகமுழுவதும் ஏறக்குறைய 4 கோடி மக்கள் சட்டத்துக்கு விரோதமாக போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அறிக்கைகள் காண்பிக்கின்றன.
போதை மருந்து பிரச்னை எந்த ஒரு தேசத்தின் கட்டுப்படுத்தும் திறமையையும் கடந்ததாகிவிட்டது என்பது இன்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. அப்படியென்றால், சகல தேசங்களும் ஒன்றுசேர்ந்து இந்தத் தற்போதைய வாதையைக் கட்டுப்படுத்துமா? இந்தக் கள்ள போதை மருந்து வியாபாரத்தில் முக்கியமாக இருக்கும் பேராசை மற்றும் இலாப சிந்தைகளைக் கவனிக்கும்போது அப்படிப்பட்ட முழு அளவான ஒற்றுமை பெரும்பாலும் கூடாத காரியம்—இதில் ஒத்துவராத அரசியல் வித்தியாசங்களைக் குறிப்பிடுவதற்கில்லை. சில தேசங்கள் போதை வியாபாரத்தைச் செய்துவந்த போதிலும் அவை தங்களுடன் அரசியல் நட்பைக் கொண்டிருப்பதால் அவற்றுக்கு எதிராக சில அர்த்தமுள்ள தடுப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் பின்வாங்குகின்றன. அத்துடன், பல இலட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்காக இந்தப் போதை மருந்து வியாபாரத்தை நம்பியிருக்கின்றனர். “போதை மருந்து வியாபாரம் ஒரே இரவில் இல்லாமற்போனால், அப்பொழுது முழுக்க வீழ்ச்சியுறும் நாடுகளும் உண்டு,” என்கிறது உவர்ல்டு பிரஸ் ரிவ்யூ.
நம்பிக்கை எங்கே இருக்கிறது
அதிகாரிகள் போதை மருந்து துர்ப்பிரயோகத்தைக் குறைக்கவும், காலப் போக்கில் தற்போதைய போதை மருந்து நாட்டத்தை அதிகபட்சமாக மெதுமெதுவாக குறைக்கவும் செய்யலாம். என்றபோதிலும் போதை மருந்து மொத்தமாக தீர்த்துக்கட்டப்படுவது ஆதாரமுள்ள நம்பிக்கையாக இருக்கிறது. அது பைபிள் வாக்குறுதியில் காணப்படுகிறது. “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9; ஆபகூக் 2:14) ‘தீங்கு அல்லது கேடு செய்வதில்லை’ என்பது போதை மருந்துகளால் ஏற்படும் எல்லா வேதனைமிகுந்த பிரச்னைகளையும் உட்படுத்துகிறது.
ஆனால் காரணம் என்ன என்பதைக் கவனியுங்கள்: “பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” போதை மருந்திலிருந்து பாதையை முற்றிலும் திருப்பி வருவதற்கு பலமான உள்ளத் தூண்டுதல் அவசியம். அவரைப்பற்றியதும் அவருடைய வழிகளைப்பற்றியதுமான திருத்தமான அறிவின் பேரில் சார்ந்த யெகோவா தேவன் மீதுள்ள அன்பும், அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆசையும் அநேகரைப் போதை மருந்துகளின் செல்வாக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள உதவியிருக்கிறது. ஆஞ்சலோவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆஞ்சலோவுக்கு இப்பொழுது 60 வயது. 1964 முதல் போதை மருந்து பயன்படுத்தியதாக ஒரு நீண்ட சரித்திரத்தைக் கொண்டிருந்தான். போதை மருந்துகளுக்கு அவன் நண்பர்களாலும் உறவினர்களாலும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தான். ஆஞ்சலோ மரியுவானாவுடன் ஆரம்பித்து, கொக்கேய்ன், ஹாஷிஷ், மோபின், “ஐந்து நட்சத்திர திரவம்” (LSD) வரை சென்றான். “நான் அடிக்கடி உயரத்துக்குச் சென்றுவிடுவதுண்டு,” என்கிறான் ஆஞ்சலோ. “நான் போதை கொண்ட ஒவ்வொரு நாளும் நான் உயரத்திலிருந்தேன். நான் உலகத்தை சுற்ற முடியும் என்று உணர்ந்தேன். என்னுடைய தலை சுழன்றுகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் விண்வெளி வீரர்கள் சந்திர மண்டலத்துக்குப் போய்க்கொண்டிருந்தனர். நான் அதற்கும் அப்பால் செல்ல விரும்பினேன்.”
ஆனால் போதை மருந்துகள் மாயக்காட்சிகளையும், குண மாறாட்டத்தையும், சமுதாயத்திலிருந்து பிரிந்திருப்பதையும், தற்கொலை செய்யும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. “மார்ச் 79-ல், நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன்,” என்கிறான் ஆஞ்சலோ. “எனக்கு மாயக்காட்சிகள் ஏற்பட்டன, தற்கொலை செய்ய விரும்பினேன். ஆனால் நான் மரிக்கும்போது எங்கே போவேன் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்றிருந்தேன். என்னுடைய வீட்டுக்குச் சில சாட்சிகள் வந்தார்கள். பைபிளைப் படிப்பதிலிருந்து, போதை மருந்து எடுப்பது கடவுளுடைய சட்டத்துக்கு எதிரானது—நம்முடைய உடல் கடவுளுக்குரியது, 2 கொரிந்தியர் 7:1 குறிப்பிடுகிறபடி, நாம் அதை ‘அசுசிப்படாதபடி’ வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்.”
அவன் போதை மருந்துகளிலிருந்து எவ்விதம் விடுதலைப் பெற்றான்? “பைபிள் படிப்பும் அதோடுகூட ஜெபிப்பது, முழுமனதாய் ஜெபிப்பது,” என்கிறான் ஆஞ்சலோ. “போதை மருந்துகளை விட்டுவிடுவதற்கு உங்களுக்கு உறுதியும் தீர்மானமும் தேவை. அது எவ்விதத்திலும் அவ்வளவு எளிதல்ல. ஆனால் யெகோவா என் இருதயத்தை அறிந்திருக்கிறார் என்ற உணர்வு எனக்கு இருந்தது. நீதிமொழிகள் 3:5, 6 காண்பிக்கிறபடி, நான் அவரைச் சார்ந்திருக்க முடியும். என்னை நேர் பாதையில் அமைத்தது யெகோவா தாமே என்பதை நான் தனிப்பட்ட விதத்தில் உணருகிறேன், அவர் எனக்குள் இருந்த அந்த நச்சரிக்கும் ஆசையை அறிந்திருந்தார்.”
ஆஞ்சலோவைப் போன்று, இன்னும் பலர் பலமான உள்ளத் தூண்டுதல், கடவுளில் விசுவாசம், அவருடைய உதவிக்காக அவரைச் சார்ந்திருத்தல், மற்றும் அக்கறையுள்ள அன்பான கூட்டாளிகளின் ஆதரவால் இந்தக் கொடிய போதை மருந்து அருந்தும் பழக்கம் முறிக்கப்பட முடியும் என்பதை உணர்ந்திருக்கின்றனர். ஆனால் “அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?” என்று பைபிள் ரோமர் 10:14-ல் கேட்கிறது. கடவுளைப்பற்றிய “திருத்தமான அறிவை”யும் போதை மருந்துகளுக்கு விலகிய ஒரு புதிய உலகில் நித்திய ஜீவனைக் கண்டடையும் நிச்சய நம்பிக்கையையும் பெற்றிட இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்கள் உங்களுக்கு உதவியளிக்க மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்பார்கள்.—பிரசங்கி 1:17; ரோமர் 15:4. (g88 12⁄8)
[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]
“போதை மருந்து வியாபாரம் ஆண்டுக்கு 30,000 கோடி டாலராக, உலகின் மிகப் பெரிய வியாபாரமாக இருக்கிறது”
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
போதை மருந்து துர்ப்பிரயோகத்திலிருந்து விடுதலைப் பெறுவதற்குப் பலமான உள்ளத்தூண்டுதல் அவசியம்