உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 11/8 பக். 3-5
  • போதைக்கு முன் மண்டியிடும் உலகம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போதைக்கு முன் மண்டியிடும் உலகம்
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • போதைக் கடலின் பேரலை
  • போதையில் கிடைக்கும் பணமும் செல்வாக்கும்
  • போதையுடன் போராடி ஜெயிக்க முடியுமா?
    விழித்தெழு!—1999
  • கொள்ளையடிக்கும் கள்ளப்போதை
    விழித்தெழு!—1999
  • போதை மருந்துகள் ஏதேனும் நம்பிக்கை உண்டா?
    விழித்தெழு!—1989
  • போதை மருந்துகள் பிரச்னைகள் பெருகுகின்றன
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 11/8 பக். 3-5

போதைக்கு முன் மண்டியிடும் உலகம்

ஸ்பெய்னிலிருந்து விழித்தெழு! நிருபர்

அந்தப் பச்சை மழலை வீறிடுகிறது. இந்த ஆண் உயிர் ஸ்பெய்னிலுள்ள மாட்ரிட் நகர ஆஸ்பத்திரி ஒன்றில் தன் தாயின் வயிறெனும் சிறையிலிருந்து இப்பூமியின் மடியெனும் சிறைக்கு அப்போதுதான் புதிதாக இடம் மாறி வந்திருக்கிறது. நர்ஸுக்கோ கோபம் மூக்கைப் பொத்துக்கொண்டு வருகிறது. அவள் வீறிடும் குழந்தையை அமைதிப்படுத்த விரும்புகிறாள். ஆனால் அதுவோ தொடர்ந்து அடம்பிடிக்கிறது. அந்தப் பச்சிளங்குழந்தைக்கு ஏன் இந்த அவலம்? ஹெராயினிலேயே ஊறிப்போனதால் வந்த வினை! பற்றாக்குறைக்கு, முளைத்து மூன்று இலை விடாத இந்த ‘நாற்றுக்கு’ ஹெச்ஐவி பாசிடிவ் வேறு. அதன் அம்மா ஓர் அடிமை. ஹெராயினுக்கு முன் மண்டியிட்டவள்!

லாஸ் ஏஞ்சலிஸில் ஒரு தாய் கார் ஓட்டிச்சென்றாள். ஒரு தெருவில் தெரியாத்தனமாக நுழைந்துவிட்டாள். பார்த்தால், அது போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகளின் சாம்ராஜ்யம்! அங்கு அவளுக்கு அமோக வரவேற்பு! அவளை வரவேற்றவையோ சரமாரியாக சுடப்பட்ட குண்டுகள். அவளுடைய பெண்குழந்தை அதே இடத்தில் காலி!

ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் இருப்பது ஆப்கானிஸ்தான். அங்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு திண்டாடும் ஒரு ஏழை விவசாயி. வறுமைப் பிசாசை விரட்ட தன் வயலில் அபினிச் செடியை வளர்த்து அதற்குமுன் மண்டியிட்டு நிற்கிறான். மற்ற ஆண்டுகளைவிட அந்த வருடம் 25 சதவீதம் அதிக மகசூல். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து அந்த விவசாயியின் குடும்பம் நிம்மதியாக கஞ்சி குடிக்கும்; ஆனால் இந்த அழகிய அபினிச்செடிகள், ஹெராயினாக உருமாறுவதால் அதற்குமுன் மண்டியிட்டு அடிமையாய் வாழ்வோரின் உயிரையே குடிக்கும்.

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் கூச்ச சுபாவமுள்ள ஒரு டீனேஜ் பெண். சனிக்கிழமை இரவு டிஸ்கோ டான்ஸ் கிளப்பில் காலெடுத்து வைக்கிறாள். அந்த விடலைக் கூட்டத்தில் கலக்கவோ ஒரே கூச்சம். அப்படிப்பட்டவளை அடியோடு மாற்றிவிட்டது ஓர் அதிசய மாத்திரை. அதற்குப் பெயர் பரவச மாத்திரை. அவளுக்குத் தேவையான புதுத்தெம்பு கிடைத்துவிட்டது. அவள் அந்த மாத்திரையின் முன்பு ‘கைகட்டி’ நின்றாள். அந்த மாத்திரை, ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்ய நெதர்லாந்திலிருந்து கடத்தப்பட்டது. அதே சரக்கை உள்ளூர் கம்பெனிகளும் சளைக்காமல் தயாரித்தன. பரவச நிலையில் இருக்கும்போது அவள் கேட்கும் இசை தேனாய் தித்திக்கிறது; அவளின் கூச்சம் ‘கூரையில்’ தூக்கியெறியப்படுகிறது. தான் தங்கப் பதுமையாக ஜொலிப்பதுபோல் உணர்கிறாள்.

மான்வெல் ஓர் ஏழை விவசாயி. அவனிடம் இருந்ததோ ஆண்டிஸ் மலைப்பகுதியை அடுத்த ஒரு சிறிய பண்ணையே. அதை வைத்துத்தான் அவன் வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டும். கொகெயின் செடிக்கு முன்பு ‘கைகட்டி’ நின்றதால் வாழ்க்கை வண்டியை எளிதாக ஓட்ட முடிந்தது. ஏனென்றால் அவன்தான் கொகெயினுக்கு முன் மண்டியிட்டுவிட்டானே! இச்செடியிடமிருந்து விடுதலைபெற நினைக்கிறான் இந்த ஏழை விவசாயி. ஆனால், அந்த ஏரியாவின் கொகெயின் உற்பத்தியைக் கண்காணிக்கும் கொடியவனிடம் கைகட்டி வாய்மூடி நிற்க வேண்டியுள்ளதே! அந்த சர்வாதிகாரியை நினைத்தாலே இந்த விவசாயி கதிகலங்கிப் போவான்.

பூகோளம் முழுவதையும் நாசமாக்கிவரும் போதையெனும் இக்கொள்ளைநோயால் வாட்டி வதைக்கப்படும் ஓரிருவரின் உதாரணங்களே இவை. a இவர்கள் போதைப் பொருட்களை விளைவித்தாலும்சரி, வாங்கினாலும்சரி, ஒரு பாவமும் அறியாமல் வேடிக்கை பார்த்தாலும்சரி, போதையெனும் அலை ஓயாமல் விடாப்பிடியாக இவர்கள் அனைவரையுமே அடித்துச்செல்கிறது.

போதைக் கடலின் பேரலை

ஐநா பொது செயலர் கோஃபி அன்னான் இந்த அலையின் கோபாவேசம் பற்றி குறிப்பிடுகிறார்: “போதைமருந்துகள் நம் சமுதாயங்களை சீரழிக்கின்றன; குற்றச்செயலைக் கருத்தரித்து அதைப் பெற்றெடுக்கின்றன; எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களை பரப்புகின்றன; நம் இளைஞர்களை கல்லறைக்கு அனுப்புவதோடு, நம் எதிர்காலத்தையும் காலாவதியாக்கி விடுகின்றன.” அவர் மேலும் கூறுவதாவது: “இன்றைய உலகில் போதைமருந்துகளுக்குமுன் மண்டியிடுபவர்களின் எண்ணிக்கை சுமார் 19 கோடி. இந்தக் கொள்ளைநோயை எதிர்க்கும் சக்தி எந்த நாட்டுக்கும் இல்லை. தத்தம் எல்லைக்குள் ராஜாங்கம் நடத்தும் இந்தக் கொடியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க எந்த நாட்டிற்குமே தைரியம் இல்லை. ஆகவே, உலகமுழுவதிலும் பரவியுள்ள இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொழிலை ஒழிக்க சர்வதேச அளவில் முயற்சி தேவை.”

போதாக்குறைக்கு, அண்மைக் காலத்தில் டிஸைனர் மருந்துகள் b வேறு தலைக்காட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த செயற்கை மருந்துகளை உட்கொள்வோர் ‘கிக்’கின் உச்சத்துக்கே ஏறிவிடவே இவை தயாரிக்கப்படுகின்றன. சொல்லப்போனால் எங்கும் இந்த டிஸைனர் மருந்துகளை மலிவாக உற்பத்தி செய்ய முடியும். ஆகவேதான் காவல்துறையே செய்வதறியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. அநேக நாடுகளில் இந்த செயற்கை போதைமருந்துகள், ‘சாதாரண பொருட்களை வாங்குவது போன்ற சமாச்சாரமாகிவிட்டன.’ ஆனால் இவற்றை “அடுத்த நூற்றாண்டில் சர்வதேச மனித சமுதாயம் வெல்லமுடியாத அச்சுறுத்தலாக” நோக்க வேண்டும் என்பதாக போதைமருந்துகளைக் கட்டுப்படுத்தும் ஐக்கிய நாட்டு கமிஷன் 1997-⁠ல் எச்சரித்தது.

முன்பு கிடைத்த போதைமருந்துகளை ஒப்பிடும்போது, இப்புதிய போதைமருந்துகள் வீரியத்தில் சளைத்தவையல்ல. சுத்த கொகெயின் சாதாரண கொகெயினைக் காட்டிலும் ரொம்பவே வீரியமிக்கது. கஞ்சாவின் புதிய வாரிசுகள் c எங்கோ பறப்பது போல் உணரச்செய்யும் அதிகப்படியான கிக் ஏற்றும் திறனுடையவை. இவற்றுள் ஐஸ் என்று அழைக்கப்படும் புதிய டிஸைனர் மருந்துதான் எல்லாவற்றையும்விட அதிகளவில் நாசமாக்கும் தன்மையுடையது.

போதையில் கிடைக்கும் பணமும் செல்வாக்கும்

போதைமருந்துக்கு அடிமையானோர் சிறுபான்மையினரே; ஆனால், போதைமருந்துகளை உற்பத்தி செய்வதையும் அதை விநியோகிப்பதையும் முன்னின்று நடத்தும் முதலாளிகளாகிய ‘போதை முதலைகளுக்கு’ வாழ்வளிப்பதற்கு இவர்களது எண்ணிக்கை போதுமானது. எனவே இவர்கள் தாங்கள் நினைத்தபடி இந்த சாம்ராஜ்யத்தில் செல்வாக்கு செலுத்த முடியும். தரங்கெட்ட இந்தத் தனிமனிதர்கள் செய்யும் ஊழல்தான் சட்டவிரோதமான கடத்தல் தொழில். சொல்லப்போனால் இதுவே இவ்வுலகிலுள்ள மற்றெந்தத் தொழிலையும்விட அதிக லாபம்தரும் பெருந்தொழில். சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எடுத்துக்கொண்டால், அதில் வருடத்திற்கு சுமார் 8 சதவீதப் பணம், அல்லது சுமார் 1,60,000 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பது இந்தத் தொழிலில்தான். போதைப்பணம் உலகெங்கும் புழங்கிவருவதால், கும்பல்காரர்களுக்கு ஒரே குஷி; காவல்துறைக்கு ஊழல்செய்ய தோது; அரசியல்வாதிகளின் கைகளுக்கு லஞ்சம்; பயங்கரவாதத்திற்குப் பணம்​—⁠இவை அனைத்துக்குமே பஞ்சமில்லை.

இந்தப் பிரச்சினைக்கு முட்டுக்கட்டைதான் என்ன? உங்கள் வருவாய், உங்கள் பாதுகாப்பு, உங்கள் பிள்ளைகளுடைய உயிர்​—⁠இவற்றை இந்த போதைப் பொருள் வியாபாரம் எந்தளவு பாதிக்கிறது?

[அடிக்குறிப்புகள்]

a இக்கட்டுரைகளில் போதைமருந்துகள் என்று நாங்கள் குறிப்பிடுகையில், மருத்துவத்திற்கல்லாமல், சட்டவிரோதமாக கடத்தப்படுவதையே அர்த்தப்படுத்துகிறோம்.

b இவை போதைமருந்துகள்தான். ஆனால் சட்டவிரோதமான போதை அல்லது மயக்க மருந்துகளுக்கு விதித்துள்ள தடைகளிலிருந்து தப்பிப்பதற்காக அவற்றின் வேதியியல் அமைப்பில் சற்றே மாற்றம் செய்து தயாரிக்கப்படுகின்றன.

c கன்னாபிஸ் தாவரத்தின் பூக்களை காயவைத்து தயாரிப்பதிலிருந்து கிடைப்பதுதான் கஞ்சா என்ற போதைமருந்து. இதே தாவரத்திலிருந்து கிடைக்கும் ரெசின் ஹசீஷ் என்று அழைக்கப்படுகிறது. இவ்விரண்டுமே போதைமருந்தை உட்கொள்ளுபவர்களால் புகைக்கப்படுகின்றன.

[பக்கம் 4, 5-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகள்:

கன்னாபிஸ்—தாவரமும் (கஞ்சா) ரெசினும் (ஹசீஷ்)

ஹெராயின்

கொகெயின்

முக்கிய கடத்தல் மார்க்கத்தை அம்புக்குறிகள் காட்டுகின்றன

உலகளாவிய போதைமருந்து தயாரிப்பும் கடத்தலும்

[படத்திற்கான நன்றி]

ஆதாரம்: ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் உவர்ல்ட் ட்ரக் ரிப்போர்ட்

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

U.S. Navy photo

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்