ஏன் யெகோவா கானானியரையும் இஸ்ரவேலரையும் துரத்தினார்
“மமற்றவர்களைக் குறைக்கூறுவதை நான் பெரிதும் விரும்புகிறேன்—அது எனக்கு அத்தனை மகிழ்ச்சியைத் தருகிறது” என்பதாக ஒரு மனிதன் சொன்னான். யெகோவா தேவனை குறைகூற விரும்புகிறவர்கள் இப்படிப்பட்ட ஒரு மனநிலையோடு எத்தனை மேம்பட்ட நிலையிலிருப்பதாக உணர வேண்டும்! உயர் அந்தஸ்திலுள்ள விமர்சகர்கள், யெகோவாவை வழக்கமாக கொலை வெறிக்கொண்ட யூதர்களின் குல தெய்வம் என்பதாகக் குறிப்பிடுகிறார்கள். பாதிரியார் ஒருவர் அவரை ஒரு கீழ்த்தரமான கொடுமைக்காரர் என்பதாக வெளிப்படையாகக் கண்டனம் செய்தார். இப்படியாக பெயரிட்டு அழைப்பதற்கு நியாயங் கற்பிக்க, மேட்டிமையுள்ள விமர்சகர்கள், யூதர்களுக்குக் கொடுப்பதற்காக யெகோவா கானானியர்களை அவர்களுடைய தேசத்திலிருந்து துரத்தியதை எடுத்துக் காட்டுகிறார்கள்.
இப்படிப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான அறியாமையாக இருக்கிறது. யெகோவாவின் சார்பாக பேசுகிறவனாக, மோச கடவுளுடையக் காரணத்தை யூதர்களுக்குத் தெளிவுப்படுத்தினான்: “உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும் உன் தேவனாகிய கர்த்தர் (யெகோவா, NW) அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.”—உபாகமம் 9:5.
கானானியர்களின் துன்மார்க்கமே அவர்கள் துரத்தப்பட காரணமாயிருந்தது. பாகால் அவர்களுடைய முக்கிய தெய்வமெனவும் அவனுடைய மனைவியாகிய அஸ்தரோத் அவர்களுடைய முக்கிய பெண் தெய்வமெனவும் அடையாளங் காண்பித்தப் பிறகு ஹாலியின் பைபிள் கையேடு, திருத்திய பதிப்பு சொல்வதாவது: “பாகால் மற்றும் அஸ்தரோத்தின் ஆலயங்கள் பொதுவாக சேர்ந்தே இருந்தன. பெண் ஆசாரியர்கள், ஆலய வேசிகளாக இருந்தனர். ஆண்புணர்ச்சிக்காரர் ஆலய ஆண் வேசிகளாக இருந்தனர். பாகால், அஸ்தரோத் இன்னும் மற்ற கானானிய தெய்வங்களின் வணக்கத்தில் வரம்புக்கடந்த சிற்றின்ப கேளிக்கைக் கூத்தாட்டங்கள் உட்பட்டிருந்தன; அவர்களின் ஆலயங்கள் கீழ்த்தரமான குற்றங்களுக்கு மைய இடங்களாக இருந்தன.”—பக்கம் 166.
கானானிய காலங்களின் இந்த “உயர்வான இடங்கள்” ஒன்றின் சிதைவில், புதைப்பொருள் ஆய்வாளர்கள், “பாகாலுக்குப் பலி செலுத்தப்பட்ட பிள்ளைகளின் பிணங்களைக் கொண்ட ஜாடிகளை பெரும் எண்ணிக்கையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த முழு இடமும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இடுகாடாக நிரூபித்தது.” மேலுமாக இங்கே, “சிற்றின்ப உணர்ச்சிகளை வளர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட, நாகரீகமின்றி பெரிதுப்படுத்தப்பட்ட பாலுறுப்புகளைக் கொண்ட அஸ்தரோத்தின் உருவங்களும் பதக்க வில்லைகளும் பேரளவான எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டன. ஆகவே கானானியர்கள் மதசம்பந்தமான ஒரு சடங்காக, ஒழுக்கமற்ற கட்டுப்பாடில்லாத சிற்றின்ப நுகர்வின் மூலமாகத் தங்கள் கடவுட்களின் முன்னிலையில் வணங்கினார்கள்; பின்னர் தங்கள் முதல் பேறான பிள்ளைகளைக் கொல்லுவதன் மூலம் இதே கடவுட்களுக்கு அவர்களைப் பலியாகச் செலுத்தினார்கள்.”—பக்கங்கள் 166, 167.
ஹாலி பின்னர் கேட்கிறார்: “கடவுள் ஏன் கானானியரை அடியோடு அழித்துவிடும்படியாக இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார் என்பதாக இனிமேலும் நாம் யோசிக்கிறோமா? இப்படிப்பட்ட அருவருப்பான ஒழுக்கத்தையும் ஈனச் செயல்களையும் கொண்டிருந்த ஒரு நாகரீகத்துக்கு இனிமேலும் தொடர்ந்திருக்க எந்த உரிமையும் இருந்ததா? . . . கானானியப் பட்டணங்களின் இடிபாடுகளைத் தோண்டியெடுக்கும் புதைப்பொருள் ஆய்வாளர்கள், அவர்களை அவர் அழித்ததற்கும், முன்னதாகவே ஏன் அழிக்கவில்லை என்பதாக யோசிக்கிறார்கள்.”—பக்கம் 167.
J.B. ரோதர்ஹாமின் மொழிபெயர்ப்பாகிய தி எம்ஃபசைஸ்ட் பைபிள், பக்கம் 259-ல் சொல்வதாவது: “இவர்களைப் போன்று பூமியின் தூய்மையைக் கெடுக்கிறவர்களையும் மனிதவர்க்கத்தைக் கறைப்படுத்துகிறவர்களையும் அழிப்பதற்கு மகா உன்னதமானவருக்கு உரிமை இல்லை என்று யார் சொல்லுவார்?”
கானானியர் ஏன் வெளியேற்றப்படுகிறார்கள் என்பதை யெகோவா இஸ்ரவேலருக்குச் சொன்னார்: “இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.” பின்னர் அவர் இஸ்ரவேலருக்கு மனந்திறந்து இந்த எச்சரிப்பைக் கொடுக்கிறார்: “ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டு போகிற தேசம் உங்களைக் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.”—லேவியராகமம் 18:24-26; 20:22.
குறிப்பு தெளிவாக இருக்கிறது. கானானியர்கள் அவர்களுடைய வேசித்தனம், அவர்களுடைய ஓரினப்புணர்ச்சி மற்றும் குழந்தைகளின் இரத்தஞ்சிந்துதல் போன்ற அவர்களுடைய படுமோசமான ஒழுக்கங்கெட்ட நடத்தையால், தேசத்தின் தூய்மையைக் கெடுத்துவிட்டதன் காரணமாக ஒழித்துக் கட்டப்பட்டார்கள். இஸ்ரவேலர் இந்தக் கானானிய மதமாகிய பாகால் வணக்கத்தைப் பார்த்து பின்பற்றுவார்களேயானால், அவர்களும்கூட தள்ளப்பட்டுப் போவர்கள்.
இஸ்ரவேலர் அதைப் பார்த்து நிச்சயமாகவே பின்பற்றினர். இஸ்ரவேலர் தேசத்தில் குடியிருந்த சமயத்தில் அமைத்த நில அடுக்குப் படிவங்களில், புதைப்பொருள் ஆய்வாளர்கள் அஸ்தரோத்தினுடைய ஆலயத்தின் இடிபாடுகளைத் தோண்டியெடுக்கையில், “இந்த ஆலயத்திலிருந்து ஒருசில காலடி தொலைவுக்கு அப்பால், ஒரு கல்லறையையும், இந்த ஆலயத்தில் பலி செலுத்தப்பட்ட பச்சிளங் குழந்தைகளின் பிணங்களைக் கொண்ட அநேக ஜாடிகளையும் தோண்டியெடுத்திருக்கின்றனர் . . . பாகால் மற்றும் அஸ்தரோத்தின் தீர்க்கதரிசிகள் சிறு பிள்ளைகளை கொலைச் செய்ய அதிகாரம் பெற்ற கொலைக்காரர்களாக இருந்தனர்.”—ஹாலியின் பைபிள் கையேடு, பக்கம் 198.
மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட யெகோவாவின் சட்டம் இப்படிப்பட்ட இயல்புக்கு முரணான பாலுறவுகளை திட்டவட்டமாக தடைச் செய்திருந்தது. லேவியராகமம் 20:13 சொன்னதாவது: “ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்.”
மோசேயின் நியாயப்பிரமாணம் உபாகமம் 23:17, 18-ல் பின்வருமாறும்கூட சொன்னது: “இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது. வேசிப்பணயத்தையும் நாயின் கிரயத்தையும் [புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள் அடிகுறிப்பு: “பையன் வேட்கையர், விசேஷமாக ஒரு பையனோடு ஆசனவாயில் பாலுறவுக் கொள்பவன்.”] எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் [யெகோவாவின், NW] ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] அருவருப்பானவைகள்.”
யெகோவா இஸ்ரவேலை எச்சரிக்க தீர்க்கதரிசிகளை அனுப்பினார்: “கர்த்தர் [யெகோவா, NW] உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரையும் ஏற்கெனவே அனுப்பிக் கொண்டேயிருந்தும் நீங்கள் கேளாமலும், கேட்கும்படிக்கு உங்கள் செவிகளைச் சாயாமலும் போனீர்கள்.” (எரேமியா 25:4) மாறாக இஸ்ரவேலர், “உயர்ந்த சகல மேட்டின் மேலும் பச்சையான சகல மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள். தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் [புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள் அடிகுறிப்பு, “ஆண்மையில்லாத மனிதர்கள்”] இருந்தார்கள். கர்த்தர் [யெகோவா, NW] இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள்.”—1 இராஜாக்கள் 14:23, 24.
ஏசாயா தீர்க்கதரிசி அவர்களை எச்சரித்ததாவது: “நீ உயரமும் உன்னதமுமாக மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய். கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னான உன் ஞாபகக் குறியை [பாலுறுப்பு உருவம்] வைக்கிறாய்; நீ என்னை விட்டுப் போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி அவர்களோடே உடன்படிக்கை பண்ணினாய்; அவர்களுடைய மஞ்சத்தைக் [ஆண் பாலுறுப்பு] காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறார்.”—ஏசாயா 57:7, 8, ஓர் அமெரிக்க மொழிபெயர்ப்பு.
பெண்கள் பாலுறுப்பு உருவங்களைச் செய்து அவைகளோடு உறவுக் கொண்டனர். நாம் வாசிக்கிற விதமாகவே: “உனக்கு ஆண் சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம் பண்ணி”னார்கள். (எசேக்கியேல் 16:17, ரோதர்ஹாம்) அல்லது ஓர் அமெரிக்க மொழிபெயர்ப்பு சொல்லுகிறபடியே: “அதோடு நீ வேசியாக செயல்பட்டாய்.”
இஸ்ரவேலர் மெய் வணக்கத்தையும் பொய் வணக்கத்தையும் கலந்துவிட்டார்கள். சீனாய் மலையில் அவர்கள் பொன் கன்றுக்குட்டியை வணங்கி ஒழுக்கங்கெட்ட செயல்களை நடப்பித்து அதே சமயத்தில் அவர்கள் “கர்த்தருக்குப் [யெகோவாவுக்கு, NW] பண்டிகை” என்றழைக்கப்பட்டதைக் கொண்டாடினார்கள். (யாத்திராகமம் 32:5, 6) பல நூற்றாண்டுகளுக்குப் பின் அவர்கள் இன்னும் பொய்யை மெய்யோடு கலந்துகொண்டிருந்தார்கள். எலியா தீர்க்கதரிசி இதற்காக அவர்களைக் கண்டனம் செய்து சொன்னதாவது: “‘நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் [யெகோவா, NW] தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்’ என்றான். ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.” (1 இராஜாக்கள் 18:21) மனாசே சீர்த்திருத்தங்களைச் செய்த பின்பு, அந்நிய தெய்வங்களை அகற்றி, யெகோவாவுக்குச் சமாதான பலிகளையும் ஸ்தாத்திர பலிகளையும் செலுத்தினான். என்றபோதிலும் 2 நாளாகமம் 33:17 சொல்கிறவிதமாகவே: “ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டு வந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே (யெகோவாவுக்கென்றே, NW) அப்படிச் செய்தார்கள்.”
பல நூற்றாண்டுகளாக, இஸ்ரவேலர் யெகோவாவின் மெய் வணக்கத்தைப் பாகால் வணக்கத்தோடு கறைப்படுத்தி பின்னால் அப்போஸ்தலனாகியப் பவுல் கேள்வி வடிவில் குறிப்பிட்ட நியமத்தை மீறினார்கள்: “தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?” (2 கொரிந்தியர் 6:16) ஆகவே பொ.ச.மு. 740-ல் இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யம் அசீரியர்களால் சிறைப்பட்டுபோனது, பொ.ச.மு. 607-ல் யூதாவின்இரண்டு கோத்திர ராஜ்யம் பாபிலோனியர்களால் சிறைப்பட்டுபோனது. கானானியர்கள் செய்தது போலவே இரண்டு தேசங்களும் தேசத்தின் தூய்மையைக் கெடுக்க, கானானியர்கள் தேசத்திலிருந்து கக்கிப் போடப்பட்டதுபோல, இரண்டு தேசங்களும் கக்கிப் போடப்பட்டன.
இன்று தேசங்களைப் பற்றியதென்ன? அவர்களுடைய சர்ச்சுகள் ஒழுக்கயீனத்தால் கறைப்பட்டிருக்கின்றனவா? அவர்கள் தேசத்தின் தூய்மையைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்களா? அவர்களும்கூட தேசத்திலிருந்து கக்கிப் போடப்படுவார்களா? (g89 1/22)
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“பாகால் மற்றும் அஸ்தரோத்தின் தீர்க்கதரிசிகள் சிறு பிள்ளைகளின் அதிகாரம் பெற்ற கொலைக்காரர்களாக இருந்தனர்”
[பக்கம் 5-ன் படம்]
பிள்ளைகளின் பிணங்களைக் கொண்ட ஜாடிகள்