பாகால்—வணக்கம் இஸ்ரவேலருக்கு வந்த பலப்பரிட்சை
கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. மூடநம்பிக்கைகளினால் ஏற்பட்ட பயமும் பாலியல் சம்பிரதாயங்களும் ஒருபுறம், விசுவாசமும் உண்மைத்தன்மையுமோ மறுபுறம். இரண்டுக்கும் இடையில் இஸ்ரவேலருக்கு வந்ததே பலப்பரிட்சை! இந்த ஜீவமரணப் போராட்டம் யெகோவாவின் வணக்கத்திற்கு எதிராக பாகால் வணக்கத்தை கிளப்பிவிட்டது.
எகிப்திலிருந்து தங்களை விடுவித்து வந்த மெய் கடவுளின் சார்பாக இஸ்ரவேல் தேசத்தார் விசுவாசத்தோடு உறுதியாய் நிற்பார்களா? (யாத்திராகமம் 20:2, 3) அல்லது தேசத்தை வளமுள்ளதாக ஆக்குவதாக வாக்குறுதியளித்த கானானியரின் இஷ்ட தெய்வமாகிய பாகாலிடம் அவர்கள் வழுவிப் போவார்களா?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆவிக்குரிய யுத்தம் இன்று நமக்கு முக்கியமானதாய் இருக்கிறது. ஏன்? “இவைகளெல்லாம் . . . உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினாரே. (1 கொரிந்தியர் 10:11) சரித்திரத்தில் முத்திரை பதித்த இந்தச் சண்டை விடுக்கும் முக்கிய எச்சரிக்கையைப் புரிந்துகொள்ள பாகால் யார் என்பதையும் பாகால் வணக்கம் எதை உட்படுத்தியது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பாகால் யார்?
சுமார் பொ.ச.மு. 1473-ல் இஸ்ரவேலர்கள் கானானில் காலடியெடுத்து வைத்தபோது பாகாலைப் பற்றி முதன்முதல் அறிந்தனர். கானானியர்கள் கணக்குவழக்கில்லாமல் அநேக கடவுட்களை வணங்கினர் என்றும் அக்கடவுட்களுக்கு தனித்தனி பெயர்களும் வெவ்வேறு குணங்களும் இருந்தபோதிலும் எகிப்தியக் கடவுட்களிலிருந்து வெகுவாய் வித்தியாசப்பட்டவையாய் இல்லை என்றும் அறிந்தனர். எனினும் பாகால், கானானியர்களின் விசேஷ கடவுள் என்று பைபிள் குறிப்பாக சொல்கிறது; அந்தப் பாகால் வெகு பிரபலமானவனாய் இருந்தான் என்பதை புதைபொருள் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. (நியாயாதிபதிகள் 2:11) மக்கள் வணங்கிய பிரதான கடவுளாக பாகால் இல்லாதபோதிலும் ஏறக்குறைய எல்லா கானானியர்களின் இதயத்தையும் கொள்ளைகொண்ட கடவுளாக அவன் இருந்தான். மழை, காற்று, மேகங்கள் ஆகியவற்றை அவன் அடக்கியாள முடியும் என்று மக்கள் நம்பினர்; அத்துடன், மலட்டுத் தன்மையிலிருந்தும் ஏன் மரணத்திலிருந்தும் தங்களையும் தங்கள் மிருகங்கள், பயிர்கள் அனைத்தையும் கட்டிக்காக்க அவனால் மட்டுமே முடியும் என்றும் அவர்கள் நம்பினர். தங்கள்மீது எப்போதும் பெரும் துன்பங்களை வருவித்து பழிவாங்கும் கானானியக் கடவுளாகிய மாட்-இடமிருந்து பாகாலின் காக்கும் கரங்கள் இல்லையேல் எதுவும் தங்களை தப்புவிக்க முடியாது என அவர்கள் ஆணித்தரமாக நம்பினர்.
பாலீடுபாடு சம்பிரதாயங்கள் பாகால் வணக்கத்தின் உயிர்நாடியாய் இருந்தன. பாகால் வணக்கத்தில் பயன்படுத்தப்பட்ட மத உருவச் சின்னங்களான புனித தூபிகள், புனித கம்பங்கள் ஆகியவை பாலியல் அர்த்தம் கற்பிப்பவையாய் அமைந்தன. தெளிவாகவே, புனித தூபிகள் என்பவை லிங்க உருவில் இருந்த பாறைகள் அல்லது செதுக்கப்பட்ட கற்களே. அவை பாகாலை பிரதிநிதித்துவம் செய்ததோடு பாலுறவில் ஆண்குறி சின்னத்தையும் குறித்தன. புனித கம்பங்கள் என்பவை மரத்தாலான பொருட்கள் அல்லது மரங்களே. அவை, அஷிரா எனப்பட்ட பாகாலின் மனைவியையும் பெண்குறி சின்னத்தையும் பிரதிநிதித்துவம் செய்தன.—1 இராஜாக்கள் 18:19, NW.
மற்றொன்று, ஆலய விபச்சாரமும் பிள்ளைகளை பலிசெலுத்துவதும் பாகால் வணக்கத்தில் இருந்த பிரபலமான அம்சங்கள். (1 இராஜாக்கள் 14:23, 24; 2 நாளாகமம் 28:2, 3) “கானானியர்களின் ஆலயங்களிலே விபச்சாரர்களும் விபச்சாரிகளும் (‘புனித’ ஆண்களும் பெண்களும்) இருந்தனர்; இன்னது என இல்லாமல் எல்லா விதமான பாலியல் காரியங்களும் மிதமிஞ்சிய அளவில் தறிகெட்டு நிகழ்ந்தன. இத்தகைய சம்பிரதாயங்களால்தான் ஏதோவொரு விதத்தில் பயிர்களும் மகசூலை வாரி வழங்கி, மந்தைகளும் கட்டுக்கடங்காமல் பெருகின என்று [கானானியர்கள்] நம்பினர்” என பைபிளும் புதைபொருள் ஆராய்ச்சியும் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. அது பெயருக்கு ஏதோ மத சம்பந்தமான சப்பைகட்டாக இருந்தாலும் இத்தகைய நெறிகெட்ட செயல்கள் அவ்வணக்கத்தாரின் உடல்பசிக்குத் தீனி போட்டன. அப்படியென்றால் பாகால் எப்படி இஸ்ரவேலரின் இதயங்களைக் கெடுத்தான்?
ஏன் கவர்ச்சியானது?
கட்டுப்பாடுகளே இல்லாத மதத்தைத்தான் பெரும்பான்மையான இஸ்ரவேலர்கள் விரும்பினர். பாகாலை வணங்குவதால் ஓய்வுநாளை ஆசரிப்பதையும், ஏராளமாய் இருந்த ஒழுக்கநெறி கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதையும் உட்படுத்திய நியாயப்பிரமாணச் சட்டங்களை அவர்களால் ஒதுக்கித்தள்ள முடிந்தது. (லேவியராகமம் 18:2-30; உபாகமம் 5:1-3) கானானியர் செல்வ செழிப்போடு வாழ்ந்ததைக் கண்டது தாங்களும் பாகாலை திருப்திப்படுத்த வேண்டும் என ஒருவேளை மற்றவர்களைத் தூண்டியிருக்கலாம்.
உயரமான மேடைகள் என்று அறியப்பட்ட கானானிய ஆலயங்கள் குறுங்கிளைகள் உள்ள மரங்கள் நிறைந்த காடுகள் அடங்கிய மலைகளில் இருந்தன; அங்கு நடந்த கருவள சடங்காச்சாரங்களுக்கு ஏற்ற வசீகரமான சூழலை அவை ஏற்படுத்திக் கொடுத்தன. கானானியரின் புனித ஸ்தலங்களுக்கு அடிக்கடி சென்று வருவதில் திருப்தியடையாத இஸ்ரவேலர்கள் சீக்கிரத்திலேயே தங்களுக்கென்று சொந்தமாக மேடைகளை உண்டுபண்ண ஆரம்பித்தனர். “அவர்களும் தொழுகைமேடுகள் எழுப்பி, ஒவ்வோர் உயர் குன்றிலும், பசுமரத்தின் அடியிலும், கல்தூண்களையும் [“புனித தூபிகளையும்,” NW] அசேராக் கம்பங்களையும் [“புனித கம்பங்களையும்,” NW] நிறுத்தினர்.”—1 இராஜாக்கள் 14:23, பொ.மொ.; ஓசியா 4:13.
ஆனால் வெகு முக்கியமாய் இந்தப் பாகால் வணக்கம் அவர்களுடைய உடல்பசிக்கு ‘கவர்ச்சிகரமான’ அழைப்புவிடுத்தது. (கலாத்தியர் 5:19-21) பெருவாரியான மகசூலும் எக்கச்சக்கமான மந்தைகளும் வேண்டும் என்ற ஆசை மட்டுமே அல்ல அதற்கு அப்பாலும் அவர்களுடைய சிற்றின்ப செயல்கள் சென்றன. காமம் பூஜிக்கப்பட்டது. காமத்தை வெகு அதிகமாய் தூண்டியெழுப்பும் விதத்தில் உடல் தோற்றங்களை உடைய அநேக சிற்றுருவச் சிலைகள் தோண்டியெடுக்கப்பட்டன; இவை போதுமே அதற்கு அத்தாட்சி அளிக்க. கட்டுப்பாடற்ற நடத்தையைத் தூண்டுவதற்கு விருந்தும் ஆட்டமும் பாட்டமும் அச்சாரமாயின.
இப்போது இந்தக் காட்சியை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அது இலையுதிர் காலத்தின் ஆரம்பம். இதமான இயற்கைச் சூழல். மூக்குமுட்ட விருந்துண்டு, திராட்சை ரசத்தால் வெறியேறிய அந்த வணக்கத்தார் நடனமாடுகின்றனர். கோடைகால ஓய்விலிருந்து பாகாலை துயிலெழுப்பி மழையை வருஷிக்கப்பண்ணும்படி அழைப்புவிடுக்கிறதாம் அவர்களுடைய அந்தக் கருவள நடனம். லிங்க உருவ தூபிகளையும் புனித கம்பங்களையும் சுற்றிச் சுற்றி அவர்கள் நடனமாடுகின்றனர். முக்கியமாக ஆலய விபச்சாரர்களும் விபச்சாரிகளும் நடனம் என்ற பெயரில் தங்கள் உடலில் ஏற்படுத்தும் அசைவுகள் கொழுந்துவிட்டெரியும் காமப்பசிக்கு எண்ணெய் ஊற்றுபவை, சிற்றின்பத்தனமானவை. இசை அவர்களை அப்படியே சொக்கவைக்கிறது; கூட்டத்தாரின் சீழ்க்கையோ இன்னும் இன்னும் என்று வெறித்தனமாக ஆடவைக்கிறது. இந்த நடனத்தின் உச்சக்கட்டமாக நடனக்காரர்கள் பாகாலின் வீட்டில் உள்ள அறைகளுக்கு ஒழுக்கயீனமான நடத்தையில் ஈடுபட செல்கின்றனர்.—எண்ணாகமம் 25:1, 2; ஒப்பிடுக: யாத்திராகமம் 32:6, 17-19; ஆமோஸ் 2:8.
விசுவாசித்து நடவாமல் கண்டு நடந்தனர்
இத்தகைய சிற்றின்பத்தனமான வணக்கமே பெரும்பாலானோரை கவர்ந்திழுக்க காரணமான போதிலும் பாகால் வணக்கத்தினிடமிருந்த பயமும் இஸ்ரவேலரை அதனிடமாக வரவழைத்தது எனலாம். இஸ்ரவேலர்கள், யெகோவாவிலிருந்த விசுவாசத்தை இழந்தனர்; இறந்தவர்களைப் பற்றிய பயமும், எதிர்காலத்தைப் பற்றிய குழப்பமும், மாயமந்திரத்தின் மேல் இருந்த வசீகரமும் ஆவியுலகக் கோட்பாட்டில் ஈடுபட அவர்களை இருகரம் நீட்டி அழைத்தது; இவையனைத்தும் ஒழுக்கயீனத்தின் படுமோசமான பழக்கவழக்கங்களில் அவர்களை மூழ்கடித்தன. மூதாதையர் வணக்கத்தில் கானானியர்கள் இறந்தவர்களின் ஆவியை எப்படி வழிபட்டார்கள் என்பதை தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா விவரிக்கிறது: “விருந்துகள் . . . குடும்ப கல்லறையில் அல்லது பிணக்குழிமேட்டில் நடத்தப்பட்டன; இவற்றில் இறந்தவர் கலந்துகொள்வதாக கருதப்பட்ட சம்பிரதாயப்படி போதையேற குடிப்பதும் பாலுறவும் (ஒருவேளை முறைதகாப் புணர்ச்சியும்) நடைபெற்றன.” இத்தகைய இழிவான ஆவியுலகக் கோட்பாட்டில் ஈடுபட்டது தங்கள் கடவுளாகிய யெகோவாவிடமிருந்து அவர்களை வெகுதூரம் கொண்டுசென்றது.—உபாகமம் 18:9-12.
விசுவாசித்து நடவாமல் கண்டு நடப்பதை விரும்பிய இஸ்ரவேலர்களுக்கு சிலைகளும் அதோடு தொடர்புடைய சம்பிரதாயங்களும் கிரங்க வைப்பவையாய் இருந்தன. (2 கொரிந்தியர் 5:7, NW) கண்காணா கடவுளாகிய யெகோவாவின் அதிசயிக்கத்தக்க அற்புதங்களை கண்ணாரக் கண்டபிறகும் எகிப்திலிருந்து வெளியேறிய பெரும்பாலான இஸ்ரவேலர்கள், தாங்கள் பார்த்து பின்பற்றுவதற்கு ஏதேனும் தேவை என நினைத்தனர். (யாத்திராகமம் 32:1-4) பாகாலுடைய சிலைகள் போன்ற காண முடிந்தவற்றையே அவர்களுடைய சந்ததியினரில் சிலர் வணங்க விரும்பினர்.—1 இராஜாக்கள் 12:25-30.
வெற்றி யாருக்கு?
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு சற்று முன்பு மோவாபின் சமவெளியை இஸ்ரவேலர் அடைந்ததிலிருந்து பாபிலோனுக்கு கைதிகளாக கொண்டு செல்லப்படும் வரை அவர்களுக்கு வந்த பலப்பரிட்சை பல நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்தது. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன. சிலசமயங்களில், பெரும் எண்ணிக்கையான இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு பற்றுமாறாதவர்களாக நிரூபித்தனர்; ஆனால் அடிக்கடி அவர்களுடைய மனம் பாகாலை நாடியது. அவர்கள் தங்களைச் சுற்றியிருந்த புறமத ஆட்களோடு வைத்திருந்த கூட்டுறவே இதற்கு முக்கியக் காரணம்.
இராணுவத் தாக்குதலில் தோல்வியைத் தழுவிய கானானியர்கள், இரகசியமான விதங்களில் தாக்குதலைத் தொடர்ந்தனர். கூட இருந்தே குழிபறிக்கும் நோக்கத்தில் இஸ்ரவேலர்களோடு சேர்ந்தே அவர்கள் வாழ்ந்தனர்; தங்கள் மேல் வெற்றி சிறந்தவர்கள் தங்கள் கடவுட்களையும் வணங்க அழைப்பு விடுத்தனர். இந்தப் போக்கை தைரியசாலிகளாக இருந்த கிதியோன், சாமுவேல் போன்ற நியாயாதிபதிகள் தடுத்தனர். “அந்நிய தேவர்களையும் . . . விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்” என சாமுவேல் ஜனங்களுக்குப் புத்திமதி கூறினார். சாமுவேலின் புத்திமதிக்கு கொஞ்ச காலத்திற்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிந்து, “பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள்.”—1 சாமுவேல் 7:3, 4; நியாயாதிபதிகள் 6:25-27.
சவுலுக்கும் தாவீதுக்கும் பின் ஆட்சிக்கு வந்த சாலொமோன் தன் வாழ்நாளின் பின்னான காலத்தின் அந்நிய கடவுட்களுக்கு பலிகளைச் செலுத்தினார். (1 இராஜாக்கள் 11:4-8) இஸ்ரவேலையும் யூதாவையும் அரசாண்ட மற்ற ராஜாக்களும் அதே விதமாக பாகாலுக்கு அடிபணிந்தனர். இருந்தபோதிலும், உண்மையுள்ள எலியா, எலிசா போன்ற தீர்க்கதரிசிகளும் யோசியா போன்ற ராஜாக்களும் பாகால் வணக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர். (2 நாளாகமம் 34:1-5) இதோடு மட்டுமல்லாமல், இஸ்ரவேலின் வரலாற்றில் இந்தக் காலப்பகுதி முழுவதுமே யெகோவாவுக்கு உண்மையாய் நிரூபித்தவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஆகாப்பும் யேசபேலும் வாழ்ந்த சமயத்தில் பாகால் வணக்கம் கொடிகட்டிப் பறந்தது; ஆனாலும், ‘பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களை’ உடைய ஏழாயிரம்பேர் அங்கிருக்கத்தான் செய்தார்கள்.—1 இராஜாக்கள் 19:18.
இறுதியாக, பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பிய யூதர்கள் பாகாலை வணங்கினார்களா, இல்லையா என்பதை அறிய பதிவேதும் இல்லை. ஆனால், எஸ்றா 6:21-ல் குறிப்பிடப்பட்டுள்ளவர்களைப் போல் எல்லாருமே, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு” விலகினர்.
பாகால் வணக்கம் கற்றுத்தந்த பாடம்
பாகால் வணக்கம் சுவடு தெரியாமல் மறைந்து போய்விட்டதென்னவோ உண்மை; ஆனால் அந்தக் கானானிய மதமும் இன்றைய சமுதாயமும் ஒருவிஷயத்தில் ஒத்துப்போகின்றன—காமத்தை பூஜித்தலில். பாலுணர்வை உசுப்பிவிடும் காற்று நாலாபுறமும் இருந்து நம்மை மூச்சுத் திணற வைக்கின்றன. (எபேசியர் 2:2) “[“காண முடியாத சக்தியாகிய,” ஃபிலிப்ஸ்] இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என பவுல் எச்சரிக்கிறார்.—எபேசியர் 6:12.
சாத்தானின் அந்தக் “காண முடியாத சக்தி” ஆவிக்குரிய விதமாக ஜனங்களை அடிமைப்படுத்தி வைக்க பாலியல் ஒழுக்கயீனத்தை பரப்புகிறது. (யோவான் 8:34) எதையும் அனுபவிக்க தடையேதுமில்லாத இன்றைய சமுதாயத்தில், பாலுறவு ஆசைகள் அன்றைய கருவள சம்பிரதாயம் போல் நடத்தப்படுவதில்லைதான்; ஆனால் சுயதிருப்திக்காக அல்லது மனம்போனபோக்கில் எதையும் ருசிப்பது சர்வசாதாரணம். அதற்கு சாதகமான சூழலும் சுண்டியிழுப்பதாக இருக்கிறது. பொழுதுபோக்கு, இசை, விளம்பரம் வாயிலாக பாலுணர்வுக்கு வித்திடும் செய்திகள் மக்களின் மனதிலும் சிந்தனையிலும் நிரம்பி வழிகின்றன. இந்தத் தாக்குதலுக்கு கடவுளுடைய ஊழியர்கள் ஆளாகாமல் தப்பித்துக்கொள்வது முடியாத காரியம். சொல்லப்போனால், கிறிஸ்தவ சபையிலிருந்து சபை நீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் இப்படிப்பட்ட பழக்கங்களின் வலையில் வீழ்ந்துபோனவர்களே. இத்தகைய ஒழுக்கயீனமான விஷயங்களை வெறுத்து ஒதுக்கினால்தான் கிறிஸ்தவர்கள் கறைபடாமலிருப்பார்கள்.—ரோமர் 12:9.
சாட்சிகளாக இருக்கும் இளைஞர்களே இந்த அபாயத்தை அதிகம் எதிர்ப்படுகின்றனர்; அவர்களைக் கவர்ந்திழுப்பவற்றில் பெரும்பாலானவை காமத்தை தூண்டும் விஷயங்களே. அதைவிட கொடுமை என்னவென்றால் தங்கள் சகதோழர்களின் அழுத்தத்தை எதிர்த்து சமாளிப்பதுதான். (நீதிமொழிகள் 1:10-15-ஐ ஒப்பிடுக.) உதாரணமாக, பெருமளவு ஆட்கள் கும்மாளம்போடும் கேளிக்கைக் கூட்டங்களில்தான் எத்தனையோ பேருக்கு பிரச்சினையே உருவாகிறது. பூர்வ பாகால் வணக்கத்தில் இருந்ததைப் போலவே, இசை, நடனம், பாலுறவு வசீகரம் ஆகியவற்றின் கலவை மக்களை கிறங்கிவிழச் செய்கிறது.—2 தீமோத்தேயு 2:22.
“வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்?” என சங்கீதக்காரன் கேட்டார். “உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே” என அவரே பதிலளித்தார். (சங்கீதம் 119:9) கானானியரோடு நெருக்கமான சகவாசத்தை இஸ்ரவேலர்கள் வைத்துக்கொள்ளக்கூடாது என கடவுளுடைய நியாயப்பிரமாண சட்டம் கட்டளையிட்டதுபோல, மோசமான கூட்டுறவுகளால் வரும் ஆபத்துக்களைக் குறித்து பைபிளும் நம்மை எச்சரிக்கிறது. (1 கொரிந்தியர் 15:32, 33) ஒழுக்க சம்பந்தமாக தரங்கெட்டவை என தான் அறிந்த சிற்றின்பக் கவர்ச்சிகளுக்கு புறமுதுகைக் காட்டுவதன் மூலம் இளம் கிறிஸ்தவன் தன் முதிர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுகிறான். உலகம் போகும் போக்கை நாமும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை; இதில் உண்மையுள்ள எலியாவைப் போல் நாம் இருக்கலாம்.—1 இராஜாக்கள் 18:21; மத்தேயு 7:13, 14-ஐ ஒப்பிடுக.
“நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவ”த்தால் விசுவாசத்தை இழக்காமல் இருப்பது கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு எச்சரிக்கை. (எபிரெயர் 12:1) அநேக இஸ்ரவேலர்கள் இன்னமும் யெகோவாவின் மேல் நம்பிக்கை வைத்திருந்தனர்; ஆனாலும் பாகாலே கடவுள் எனவும் அவனே தங்கள் பயிர்களை பாதுகாத்து, தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வான் எனவும் எதிர்பார்த்தனர். யெகோவாவின் ஆலயம் இருக்கும் எருசலேம் வெகு தூரத்திலிருக்கிறது என்றும் அவருடைய சட்டங்களை கைக்கொள்வதென்பது நடைமுறைக்கு ஒத்துவராததென்றும் அவர்கள் நினைத்தார்கள்போலும். பாகால் வணக்கம் இதைச் செய், அதைச் செய்யாதே என எதையும் திட்டவட்டமாக அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை, அதோடு பின்பற்ற வெகு சௌகரியமாகவும் இருந்தது. பாகாலுக்கு தூபங்காட்ட அவர்கள் வேறெங்கும் செல்ல வேண்டாம், அவர்கள் வீட்டின் மாடியே அதற்குத் தோதாக இருந்தது. (எரேமியா 32:29) ஏதோ சில சடங்காச்சாரங்களில் கலந்துகொள்வதன் வாயிலாக அல்லது யெகோவாவின் பெயரில்கூட பாகாலுக்கு காணிக்கைகளை செலுத்துவதன் வாயிலாக அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாகால் வணக்கத்தை தழுவியிருக்கலாம்.
விசுவாசத்தை இழந்து ஜீவனுள்ள கடவுளிடமிருந்து எப்படி நாம் மெல்ல மெல்ல விலகிப்போக வாய்ப்பிருக்கிறது? (எபிரெயர் 3:12) ஒருகாலத்தில் கூட்டங்களுக்குச் செல்வதற்கும் மாநாடுகளில் கலந்துகொள்வதற்கும் நமக்கிருந்த ஆர்வம் போகப் போக தணிந்துபோயிருக்கலாம். ஆவிக்குரிய விதமாக ‘ஏற்றவேளையிலே போஜனங்கொடுத்து’ வரும் யெகோவாவின் ஏற்பாடுகளின்மீதுள்ள நம்பிக்கை குறைவுபடுவதை அத்தகைய போக்கு காட்டிக்கொடுத்துவிடும். (மத்தேயு 24:45-47) இவ்வாறு வலுவிழக்கையில், “ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்”டிருக்கும் நம் பிடி தளர்ந்துபோகலாம் அல்லது ஒருவேளை பொருள் சம்பந்தமான நாட்டம் மேலிட அனுமதிப்பதாலோ அல்லது ஒழுக்கக்கேட்டாலோ பிளவுபட்ட இதயத்தை வளர்த்துக்கொள்ளலாம்.—பிலிப்பியர் 2:14; ஒப்பிடுக: சங்கீதம் 119:113, பொ.மொ.
நம் உத்தமத்தில் உறுதியாய் இருத்தல்
இன்று நாமும் இதே போன்ற பலப்பரிட்சையை எதிர்ப்படுகிறோம் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். நாம் யெகோவாவுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்வோமா அல்லது ஒழுக்கசம்பந்தமாக இந்த உலகம் பின்பற்றும் தான்தோன்றித்தனமான போக்கில் வழிமாறிப் போவோமா? கானானியரின் அருவருப்பான பழக்கவழக்கங்களில் இஸ்ரவேலர்கள் வசீகரிக்கப்பட்டது போலவே இன்று சில கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் வெட்கம்கெட்ட செயல்களில் ஈடுபடும்படி கவர்ந்திழுக்கப்படுவது வேதனையை ஏற்படுத்துகிறது.—ஒப்பிடுக: நீதிமொழிகள் 7:7, 21-23.
“கண்ணுக்குப் புலப்படாதவரைக் கண்ணால் பார்ப்பவர் போன்று உறுதியாய் இருந்த” மோசேயைப் போல நாமும் இருந்தால் இத்தகைய ஆவிக்குரிய வீழ்ச்சியை தாராளமாக தவிர்க்கலாம். (எபிரேயர் 11:27, பொ.மொ.) நாம், ‘விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராட வேண்டு’மென்பது உண்மைதான். (யூதா 3) நம்முடைய தேவனுக்கும் அவருடைய நியமங்களுக்கும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பதன் மூலம் பொய் வணக்கம் முற்றிலும் இல்லாமல் துடைத்தழிக்கப்படும் காலத்தை எதிர்நோக்கி இருக்கலாம். அப்போது பாகால் வணக்கத்தை யெகோவாவின் வணக்கம் ஓரங்கட்டியது; இப்போதோ, “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” காலம் சீக்கிரத்தில் வரவிருக்கிறது.—ஏசாயா 11:9.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
கீஸரின் இடிபாடுகளில் காணப்படும் பாகால் வணக்கத்தில் பயன்படுத்தப்பட்ட புனித தூபிகள்
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Musée du Louvre, Paris