ஜப்பான் அதன் உள்நாட்டுக் கடல் பகுதியைப் பாலத்தால் இணைக்கிறது
ஜப்பான் நாட்டு “விழித்தெழு!” நிருபர்
ஜப்பானின் செத்தோ உள்நாட்டுக் கடலைப் படகில் கடப்பதற்கு ஒரு மணிநேரம் எடுக்கும். ஆனால் ஏப்ரல் 10, 1988 அன்று செத்தோ ஒஹாஷி பாலம் திறக்கப்பட்டது. இது ஜப்பானின் பிரதான ஹொன்ஷு மற்றும் ஷிக்கொக்கு தீவுகளை இணைத்தது. இப்பொழுது இந்த உள்நாட்டுக் கடலை வாகனத்தில் கடந்து செல்ல 10 நிமிடங்கள்தான் எடுக்கிறது.
என்றபோதிலும், இந்த வசதி குறைந்த செலவில் ஏற்பட்டதன்று. இதை ஒரு முறை கடப்பதற்கான சாலைச் சுங்கம் 5,500 யென் (ஏறக்குறை ரூ.650). ஆனால் மொத்த செலவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அது குறைவே: 1,13,000 கோடி யென் (ரூ.13,050 கோடி) மற்றும் 17 உயிர்கள். மற்றும் அதைக் கட்டி முடிப்பதற்கு 10 ஆண்டுகள் அல்லது தொண்ணூறு இலட்சம் மனித நாட்கள் தேவைப்பட்டது. அந்தளவு செலவை செய்வதற்குத் தகுந்த காரணம் இருக்க வேண்டும்.
அந்த இரண்டு தீவுகளுக்கு இடையே போக்குவரத்து முன்னறிவிக்கப்படமுடியாத வானிலையின் தயவின்கீழ் இனிமேலும் இருக்க வேண்டிய அவசியமில்லை. 1955-ல் ஒரு படகு கவிழ்ந்து 168 உயிர்கள் இழக்கப்பட்டன. மேலும் பாலம் விவசாயத் தீவாகத் திகழும் ஷிக்கொக்கு தீவுக்கு ஓர் ஆசீர்வாதமாகத் திகழ்ந்தது, ஏனென்றால் இது ஜப்பானின் பிரதானத் தீவாகிய ஹொன்ஷுவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நபருக்கு 380 யென் (ஏறக்குறைய ரூ.45) செலவில் இரயிலில் கடப்பது சிக்கனமான முறையாக இருக்கிறது.
ஒரு பாலமாகக் குறிப்பிடப்பட்டாலும், அது உண்மையில் 5.8 மைல் நீளம் கொண்ட தொடர் பாலங்களாலான ஒரு பாலமாக இருக்கிறது. இது செத்தோ உட்நாட்டுக் கடலில் இடையிடையே அமைந்த ஐந்து தீவுகள் வழியே கடந்து செல்கின்றது. அது மூன்று தொங்கற் பாலங்களாலும், கம்பிவடத்தாலான இரண்டு பாலங்களாலும், ஒரு தாங்கமைவுப் பாலத்தாலும் அமைக்கப்பட்டு மேம்பாலத்தால் இணைக்கப்பட்ட ஒன்று. தொங்கற் பாலங்களில் ஒன்று, மினாமி பிஸான் செத்தோ ஒஹாஷி, உலகிலேயே மிக நீண்ட இரட்டையடுக்குத் தொங்கல் பாலமாகும். இது இரயில் பாதையையும் நெடுஞ்சாலையையும் கொண்டிருக்கிறது.
டோக்கியோவிலுள்ள ஹொன்ஷு–ஷிக்கொக்கு பால அதிகாரக் குழுவைச் சேர்ந்த திரு. டெட்சுவோ யமேனெ அதைக் கட்டியதன் பேரில் சில அக்கறைக்குரிய உட்குறிப்புகளை அளித்தார். அவர் அந்தப் பாலத்தைக் கட்டும் திட்டத்தில் பதிமூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பாலத்தின் உப கட்டிட அமைப்பின் கட்டிட மேற்பாவையாளராக இருந்தார்.
“எல்லாவற்றிலும் அதிக சிரமமாயிருந்த காரியம், கடலடியில் பாலத்துக்கான அடித்தளம் அமைப்பது,” என்கிறார் திரு. யமேனெ. “கீழ்க்கடலில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பாறைப் படுகைகளை உடைத்து உடைசல்களை அள்ளிடும் ஓர் இயந்திரத்தைப் பயன்படுத்தினோம். பின்பு, அடித்தளத்துக்கு பத்து மாடி கட்டிடங்களின் உயரத்துக்குப் பெரும் பேழைகள் கப்பற்கட்டும் துறைமுகங்களில் செய்யப்பட்டு, பாலம் கட்டப்படும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு கடல் நீருக்குள் அமிழ்த்தப்பட்டன. அந்தப் பெரும் பேழைகளில் கற்களைப் போட்டு சென்சுரி என்ற புதிதாக திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட ஒரு கலவை இயந்திரத்தைப் பயன்படுத்தி அவற்றில் கலவை நிரப்பினோம்.”
ஆட்கள் மிகக் கடுமையான சீதோஷணநிலையில் வேலை செய்யவேண்டியதாயிருந்தது. “ஆழ்கடலில் ஏறக்குறை 50 மீட்டர் ஆழத்தில் பாலத்துக்கான அடித்தளத்தைப் போட வேண்டியிருந்தது,” என்று தொடருகிறார் திரு. யமேனெ. “அதோடுகூட, கட்டிடப் பகுதியில் அலைகள் மிகக் கடுமையாக இருந்தன, ஐந்து முடிச்சுகள் என்ற கணக்கில் இருந்தன. இது மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் அடிக்கும் காற்றின் சூழ்நிலையில் வேலைசெய்வதைக் குறித்தது. பள்ளங்களும் புதைக்கப்பட்ட பேழைகளும் அலைகளின் கொந்தளிப்பு இல்லாத சமயத்தில் கண்காணிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் தண்ணீரின் கீழ் எதையும் பார்க்க முடியாத நிலை. 10 அல்லது 20 மீட்டர் தூரத்தில் நீங்கள் எதையும் பார்க்க முடியாது. ஆய்வு செய்யப்படவேண்டிய பகுதிகளுக்குத் தண்ணீரின் கீழ் எடுத்துச்செல்லப்படும் பிரகாசமான விளக்குகளைப் பயன்டுத்தி, 50 சென்டிமீட்டர் தூரத்திலிருந்து படங்களையும், வீடியோ படங்களையும் எடுத்தோம்.”
இந்தப் பாலம் செத்தோ உள்நாட்டுக் கடல் தேசீய பூங்காவில் அமைவதால் சுற்றுபுறக் காட்சிக்கு இந்தப் பாலம் மொத்தத்தில் எந்தளவுக்கு இசைவுடையதாயிருக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டியதாயிருந்தது. “அந்த முழு நில அமைப்பின் கலை கற்கள் படிப்படியாக அமைக்கப்பட்ட ஒரு ஜப்பானிய தோட்டமாகும்,” என்றார் அந்தப் பாலத்தின் அமைப்பைத் திட்டமிடுவதில் பணியாற்றிய பேராசிரியர் டொஷியாக்கி ஓஹ்டா.
வேறொரு விதமான ஒத்திசைவும் நிறைவேற்றப்பட்டது. மார்ச் 1988-ல் கடலுக்குக் கீழே அமைக்கப்பட்ட செய்க்கன் சுரங்கப்பாதையும் திறக்கப்பட்டது. இது ஜப்பானின் வடக்கு எல்லையிலுள்ள ஹொக்கைதோவை ஹொன்ஷுவுடன் இணைத்தது. இப்பொழுது செத்தோ ஒஹாஷி பாலம் திறக்கப்பட்டிருக்க, ஜப்பானிய நான்கு பிரதான தீவுகளாகிய ஹொக்கைதோ, ஹொன்ஷு, ஷிக்கொக்கு மற்றும் குயூஷு தீவுகளை இணைக்கும் கடைசி இணைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது. இப்படியாக ஜப்பானிய மக்களின் நீண்ட கால கனவு நனவாகியிருக்கிறது. (g89 2/22)