இந்தியாவின் புனித கங்கை இலட்சக்கணக்கானோரால் ஏன் வணங்கப்படுகிறது?
இந்தியாவிலுள்ள “விழித்தெழு!” நிருபர்
இந்தியாவில் அறியப்படுகிறபடி, கங்கை நதி அல்லது கங்கை, சரித்திரம் முழுவதிலும் உலகிலேயே மிகப் புனித நதியாக இந்துக்களால் போற்றப்பட்டுவருகிறது. பல நூற்றாண்டுகளாக, இலட்சக்கணக்கில் தொழுது கொள்பவர்கள் அதன் கரைக்குத் திரண்டு வந்திருக்கிறார்கள். மக்கள் ஏன் வருகிறார்கள்? அவர்கள் தேடுவது என்ன? இந்தக் கட்டுரையில் நதியை சுருக்கமாகப் பார்வையிடுவது பதிலைக் கண்டுபிடிக்க உதவி செய்யும்.
புனித ஸ்தலமாகிய ஹரிதுவாரில் இமயமலையடிவாரத்தின் அருகே, பளபளப்பான வெள்ளைநிற மெர்சிடஸ்-பென்ஸ் கார் ஒன்று குறுகலான தெருக்களின் வழியே ஒதுங்கிச் செல்கிறது. இது, கவனமாக சைக்கிள் ரிக்ஷாக்களையும் குதிரை வண்டிகளையும் ஸ்கூட்டர்களையும் பாதசாரிகளையும் முந்திக் கொண்டுச் செல்கிறது. கடைசியாக நகரின் முனையில் கங்கையை பார்வையிடக்கூடிய இடத்தில் வாகனம் வந்து நிற்கிறது.
நீரோட்டத்தின் திசையில் நதியின் தூய்மை வெகுவாக கெடுக்கப்பட்டிருந்த போதிலும் இங்கே ஹரிதுவாரில் கலப்பற்ற நீல-பச்சை நிறத் தண்ணீர்கள் மலைகளின் வழியாக கீழ்நோக்கி இறங்கிவந்து விழுவது கண்களுக்கு இனிய விருந்தளிப்பதாக இருக்கிறது. ஆனால் கார் இத்தனை தூரம் வந்திருப்பது அருமையான காட்சிகளை வெறுமென கண்டுகளிப்பதற்காக அல்ல.
காரின் கதவு திறக்க, பார்ப்பதற்கு நன்றாகப் படித்த, நவீன இந்திய குடும்பம் வெளியே வருகிறது. அம்மா தன்னுடைய சிவப்பு நிறப்புடவையை சரி செய்து கொள்ளும்போது, அவளுடைய தங்க வளையல்களிலும் கழுத்து மாலைகளிலும் சூரிய ஒளிப்பட்டு அவை பிரகாசமாக மின்னுகின்றன. அப்பா தன் காரைப் பூட்டிவிட்டு, நாகரீகப் பாணியில் ஜீன்ஸும் விளையாட்டு உடுப்புமாக உடுத்தியிருந்தப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்கிறார். பார்ப்பதற்கு அவர்கள் செல்வந்தர்களாக, மேலீடாகத் தோன்றுகிறபடி ஏழைகளை வாதிக்கும் கவலைகளிலிருந்து விடுபட்டவர்களாயும் அவர்கள் காட்சியளிக்கிறார்கள். என்றபோதிலும் மிகச் சாதாரணமான வசதியுள்ள மற்றவர்களைப் போலவே இவர்கள் கங்கா தேவியை, அவளுடைய சக்தியிலிருந்து நன்மையடையும் நம்பிக்கையுடன் அவளை வழிபட வந்திருக்கிறார்கள்.
ஹரி கி பெளரி என்ற ஆற்றினுடைய புனித ஸ்நன இறங்கு துறையின் அருகில், அவர்கள் தங்கள் காலணிகளைக் கழற்றி நதிக்குப் போகும் படிகட்டுகளில் இறங்குகிறார்கள். ஒரு கணத்தில் வண்ண வண்ணப் புடவைகளின் மத்தியிலும் மாநிலத்தின் சிறப்பாடைகளின் மத்தியிலும் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து போகிறார்கள். இங்கு எந்த ஒரு குறிப்பிட்ட நாளிலும் செல்வந்தர்களும் ஏழைகளுமாகிய இந்திய மக்களின் ஒரு பிரதிநிதித்துவ தொகுதி கங்கைக் கரைக்கு வருகிறது. உலகெங்கிலும் இருப்பதுபோலவே அவர்கள் அடிப்படையான ஆவிக்குரிய ஒரு தேவையினால் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.
புனித சடங்குகளும் அச்சமற்ற பக்தியும்
ஸ்நானப் பகுதியில், யாத்திரிகர்கள் கங்கை பூஜை (வணக்கம்) சடங்குகளைச் செய்வதில் உதவுவதற்காக பூசாரிகள் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பூக்களைப் படைத்து வழிப்பாட்டு வாசகங்களைப் (ஸ்லோகங்களை) பாடுகிறார்கள். பின்னர் பூசாரி சிவப்பு அல்லது மஞ்சள் நிறப் பசையாலான ஒரு பொட்டு அல்லது திலகத்தை வழிபடுகிறவர்களின் நெற்றியில் இடுகிறார். அடுத்து நிகழ்வது அச்சமற்ற பக்தியின் குறிப்பிடத்தக்க வெளிக்காட்டு.
நவம்பர் மாத நாளின் குளிர்ச்சியான, வேகமாகப் பாய்ந்துவரும் தண்ணீர்கள் யாத்திரிகர்களை பயமுறுத்தி நிறுத்திவிடுவதில்லை. தைரியமாக, சிறுவர்களும் வயதானவர்களும் கடுங்குளிரான நதிக்குள் பிரவேசிக்கிறார்கள். வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே கிட்டும் பாக்கியம் என்பதாக நினைத்துக் கொண்டு கங்கையின் நீர் தங்கள் உடல்களை உணர்ச்சியுறச் செய்ய அவர்கள் அனுமதிக்கிறார்கள். எச்சரிக்கையுள்ள பெற்றோரின் அணைப்பிலுள்ள சிறு குழந்தைகளும்கூட நீரில் அமுக்கி எடுக்கப்படுகிறார்கள். ஸ்நனம் செய்தவர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு ஆனால் மனநிறைவுடன் சூரியக் கடவுளாகிய சூரியாவுக்கு முன்னால் குளிர்காய வெளியே வருகிறார்கள். பின்னால் அவர்கள் ஹரிதுவாரிலுள்ள ஏராளமான கோவில்களில் சிலவற்றிற்குச் செல்வர் அல்லது நீரோட்டத்துக்கு எதிர் திசையில் 16 மைல்களுக்கு அப்பாலுள்ள ரிஷிகேசத்துக்குச் செல்வர். அங்கே கங்கைக் கரையில் வரிசையாக ஆசிரமங்கள் காணப்படுகின்றன. அயல் நாட்டவர் தியானத்துக்கும் யோக ஆராய்ச்சிக்கும் இவ்விடத்துக்குத் திரண்டு வருகிறார்கள்.
மாலைக்குள் யாத்திரிகர்கள் விசேஷமான பூஜைக்காக ஸ்நனப் பகுதிக்கு திரும்பிவருகிறார்கள். குடும்பங்களும் தம்பதிகளும் பச்சை இலைகளாலான சிறிய படகுகளோடு வருகிறார்கள். இதில் பொன் வண்ண மலர்கள், வாசமுள்ள ரோஜா மலர் இதழ்கள், ஒரு திரியைக் கொண்ட களிமண்ணாலான ஒரு சிறிய கிண்ணம் வைக்கப்பட்டுள்ளது. ஓர் இளம்ஜோடி, தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு ஒன்றாகச் சேர்ந்து பிராத்தனைச் செய்து, திரியை ஏற்றித் தங்கள் படகை பாய்ந்துவரும் தண்ணீர்களில் அமைதியாக மிதக்கவிடுகிறார்கள். அநேக விவாகமான புதிய தம்பதிகளைப் போலவே அவர்கள் ஆரோக்கியமான ஒரு மகன் பிறக்க கங்கையின் ஆசியை வேண்டிக்கொண்டிருக்கலாம். வேண்டுதல்களைச் செய்து கொண்டபின் மற்றவர்களும் அதேவிதமாக தங்கள் படகுகளை மிதக்க விடுகிறார்கள். விரைவில், அசைந்தாடும் விளக்குகளையுடைய படகுத் தொகுதி பலமான நீரோட்டத்தில் கீழ்நோக்கி அடித்துச் செல்லப்படுகிறது.
திடீரென்று மாலை நேரத்தின் அமைதி, கணீரென ஒலிக்கும் கோவில்மணிகளின் ஓசையில் கலைந்துவிடுகிறது. பூசாரிகள் நதியின் ஓரத்தில் சுடரொளி வீசும் விளக்குகளைக் கையில் பிடித்து அசைத்து, கங்கையை போற்றிப் பாடுகையில் மணியோசை சில நிமிடங்களுக்கு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. இவ்விதமாக தொழுகையும் பக்தியுமாக மற்றொரு நாள் முடிவு பெறுகிறது.
“உங்கள் தாயின் மார்பில் குடித்தல்”
கேள்விக்கிடமின்றி கங்கை, நதிகளில் ஈடிணையற்றதாக இருக்கிறது. ஆனால் இதற்குக் காரணம் அதன் இயற்கைப் பண்புகளல்ல. உலகில் சுமார் 30 நதிகள் இதைவிட நீளமானவை, இந்தியாவிலேயே பிரம்மபுத்திராவும் சிந்து நதியும் மிகப் பெரியவையாகும். என்றபோதிலும், பனிக்கட்டிகளிலிருந்து உருவாகும் அதனுடைய அடக்கமான ஆரம்பத்திலிருந்து வங்கக் கடலில் பாய்ந்துவந்து விழும் வரையாக, கங்கை முழு 1,678 மைல் நீளத்துக்கும் வணங்கப்படுகிறது. தேசத்திலுள்ள 80 கோடி மக்களில் மூன்றில் ஒரு பங்கு, கங்கை நதிப் பள்ளத்தாக்கில் வசித்துவருகிறார்கள். இவர்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் விவசாயத்துக்காகவும் இந்த நதியையே சார்ந்திருக்கிறார்கள். வேறு எந்த நதியைக் காட்டிலும் கங்கை இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.
ஆகவே இந்து மதத்தில் நம்பிக்கையுடையவர்களுக்குக் கங்கை, கங்கை மாதாவாக அல்லது கங்கைத் தாயாக இருக்கிறது. இந்த நதி தன்னுடைய பிள்ளைகளுக்கு உணவூட்டி அவர்களுடைய சரீரத்தையும் ஆன்மாவையும் சுத்திகரிக்கும் ஓர் உண்மையுள்ள தாயாக கருதப்படுகிறாள். ஆகவே இந்தியக் கவி துளசிதாஸ் கங்கையைப் பக்தி முக்தி தேயினி என்று வருணித்தார். அதாவது இரட்சிப்பையும் பொருளாதார சந்தோஷங்களையும் கொடுக்கிறவள். அவளிலிருந்து குடிப்பது, “உங்கள் தாயின் மார்பில் குடித்தல் போன்றிருக்கிறது” என்பதாக ஒரு பக்தர் குறிப்பிட்டார். இப்படிப்பட்ட எண்ணங்கள் நதிக்கும் அதைத் தொழுதுகொள்கிறவர்களுக்குமிடையேயுள்ள நெருக்கமான உறவை பிரதிபலிக்கிறது. இந்தப் பிணைப்பு அத்தனை பலமாக இருந்ததன் காரணமாக, கடந்த காலத்தில் யாத்திரிகள் அதன் தண்ணீர்களில் வேண்டுமென்றே முழுகிவிடுவதன் மூலம் தங்களை ‘உயிர் பலியாக’ தயக்கமின்றிக் கொடுத்திருக்கின்றனர்.
இலட்சியமான இந்தக் காட்சி இன்று புதியத் தன்மையையும் வெளிப்புறத் தோற்றத்தையும் ஏற்றுவருகிறது. செழித்தோங்கிவரும் நகரங்களைக் கடந்து, வளைந்து நெளிந்து வருவதால் கங்கை, ஒரே சீராக நுழைந்து கொண்டிருக்கும் கழிவு நீரையும் வேதியற் பொருட்களையும் உறிஞ்சிக் கொள்கிறது. இந்நிலையைக்குறித்து வருந்தும் பொதுத்துறை பொறியாளர் ஒருவர் இவ்விதமாகக் குறிப்பிட்டார்: “ஏழைகள் வெறுமென நதியில் தங்களை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள்; பணக்காரர் தொழில்துறை கழிவுப்பொருட்களை அதற்குள் எறிகிறார்கள், மதப்பற்றுள்ளவர்கள் தங்கள் சடலங்களை அதற்குள் எறிகிறார்கள்.” ஒவ்வொரு நாளும் நதிக்குள் குறைந்தபட்சம் பத்தாயிரம் சடலங்கள் எறியப்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. என்றபோதிலும் வார்நாசி நகரில் (பனாரஸ்) உற்சாகமாக ஸ்நனம் செய்பவர்கள், அருகாமையில் சுடுகாடுகளிலிருந்து மிதந்துவரும் சிதைவுகளைப் பொருட்படுத்தாது இப்பொழுது கருமைத் தோய்ந்த பழுப்பு நிறத்திலிருக்கும் தண்ணீரில் மதச்சடங்காக மூழ்கி எழுகிறார்கள். ஆர்வத்தோடு துணிந்து அச்சமன் செய்கிறார்கள். இது சூரிய வணக்கத்தின் பாகமாகக் கங்கையின் நீரைக் கொஞ்சம் விழுங்குவதாகும்.
“நான் சாகும்வரை தொடர்ந்து புனித முழுக்கை எடுத்து வருவேன்,” என்பதாக கங்கையின் அருகே வாழும் ஒரு விஞ்ஞானி சொன்னார். “ஆனால் ஒவ்வொரு சமயமும் நான் அச்சமனை செய்கிறபோது, . . . எனக்குள் பயங்கரமான ஒரு போரட்டம் ஏற்படுகிறது.” இந்தக் கூற்றின்பேரில் குறிப்புச் சொல்வதாய் இந்திய பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது: “ஒரு விஞ்ஞானியாக தான் விழுங்கும் தண்ணீர் தூய்மைக் கெடுக்கப்பட்டது என்பதைப் பேராசிரியர் மிஷ்ரா அறிவார். ஆனால் மகாந் வீரபத்ரா மிஷ்ராவால் கங்கையின் புனித நீரைக் குடிக்காமல் இருக்கவே முடியாது. ஒருவேளை கங்கையினிடமாக இந்துக்களின் உணர்ச்சிகளுக்கு இதைவிட மேன்மையான ஓர் உதாரணம் இருக்க முடியாது.”
இந்து வணக்கத்தார் கங்கையின் மீது ஏன் அத்தனை பக்தியாக இருக்கிறார்கள்? பழங்கதையில் தோன்றும் புராணத்தையும் அதன் தண்ணீர்களுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் சக்தியையும் அறியாதவர்களுக்கு இப்படிப்பட்ட பக்தி ஒரு புதிராகவே இருக்கக்கூடும். இதில்தானே மக்களின் மீது கங்கை கொண்டிருக்கும் மறை ஆற்றலின் பிடிப்பின் இரகசியம் இருக்கிறது.
வானத்திலிருந்து இறங்கியது—ஏன்?
இந்துக்களின் தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் எந்த மற்ற கதைகளையும் போலவே கங்கையைப் பற்றிய புராணமும் மிக விளக்கமாக புனைந்து கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. நுட்ப விவரங்கள் வித்தியாசப்படுகின்றன, ஆனால் சுருக்கமான கதை இவ்விதமாகச் செல்கிறது:
சகாரா அரசனின் 60,000 மகன்களை கபிலா என்ற சாது கொன்றுவிட்டார். கங்கா தேவி வானத்திலிருந்து இறங்கிவந்து அவர்களைச் சுத்திகரித்து சாபத்திலிருந்து விடுவித்தாலொழிய அவர்களுடைய ஆத்துமாக்கள் பூமியில் என்றுமாக அலைந்துதிரிந்து கொண்டிருக்கக் கண்டனம் செய்யப்பட்டிருந்தன. பாகிரதி என்ற மற்றொரு அரசன் செய்த நோன்பின் காரணமாக, கங்கை பூமிக்குவர கடவுளாகிய சிவனின் முடியாகிய பனிமூடிய இமயமலையில் சிக்கிக்கொண்டாள். அங்கிருந்து அவள் சமுத்திரம் நோக்கி விரைய, அவளுடைய தண்ணீர்கள் சகாரா அரசனின் 60,000 மகன்களின் ஆத்துமாக்களையும் புனிதமாக்கி பரதீஸுக்கு அவர்களைக் கொண்டு சென்றது.
ஏன் இலட்சக்கணக்கானோர் கங்கைக்குச் சென்று பல நூற்றாண்டுகளாக அங்கு வழிபட்டுவருகிறார்கள் என்பதற்கு பதில் இங்கே இருக்கிறது. கங்கை அவளை வணங்குகிறவர்களின் கருத்துப்படி, விடுவிக்கவும், தூய்மைப்படுத்தவும், சுத்திகரிக்கவும், குணப்படுத்தவும் அவளுக்குச் சக்தி உண்டு. பிரம்மாந்தப்புராணா என்ற பூர்வ இந்து இலக்கிய ஏடு சொல்வதாவது: “கங்கையின் தூய்மையான நீரோட்டத்தில் பக்தியாக ஒரு முறை ஸ்நனம் செய்பவர்களுடைய கோத்திரங்கள் நூறாயிரக்கணக்கான ஆபத்துகளிலிருந்து அவளால் பாதுகாக்கப்படுகிறார்கள். தலைமுறை தலைமுறையாகச் சேர்ந்துவரும் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. வெறுமென கங்கையில் ஸ்நனம் செய்வதால் ஒருவர் உடனடியாக தூய்மையடைகிறார்.” மேலுமாக கங்கையின் நீரைக் குடிப்பதன் மூலம் சாவாமை அடையப்படுவதாகச் சொல்லப்படுகிறது. கங்கையில் உயிர்விடுவதும், அதன் கரையில் எரிக்கப்படுவதும், ஒருவரின் அஸ்தி நதியில் கலக்கப்படுவதும் நித்திய பேரின்பத்துக்கு வழிநடத்துவதாகக் கருதப்படுகிறது. அழியாமையுள்ளதாக நம்பப்படும் ஆத்துமா கடைசியாக இளைப்பாறுதல் அடைந்து, தெய்வத்தோடே இரண்டற கலக்கும்படிக்கு, மறுபிறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
எல்லாத் தேசத்தாருக்கும் பிணிநீக்கம் அருகாமையிலிருக்கிறது
ஆவிக்குரிய சுத்திகரிப்புக்கும் துன்பத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்குமான ஆசை எல்லா இடங்களிலுமுள்ள மனிதர்களுக்கு அடிப்படையானதாகத் தோன்றுகிறது. உலகின் மற்றப் பகுதிகளில், இப்படிப்பட்ட இரட்சிப்பு அல்லது முக்தி வேறு வழிகளில் தேடப்படுகிறது. சிலர் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் ஒரு மதகுருவினிடம் தங்கள் பாவங்களை அறிக்கைச் செய்து பின்னர் தேவைப்படும் பிராயச்சித்தஞ் செய்யக்கூடும். மற்றவர்கள் பிராத்தனைகள், பரிசுத்த வேதங்களை வாசிப்பது, பலிகள், பரிசுகளும் பிச்சையும் கொடுப்பது அல்லது தன்னல மறுப்பு மூலம் ஒரு மனிதன் தன் தவறுகளிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு மரணத்துக்குப் பின்பு, நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இத்தனை முரண்பட்ட கருத்துக்கள் இருக்கையில் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையைக் காண ஏதாவது நிச்சயமான ஒரு வழியுண்டா?
பூர்வீகப் புத்தகமாகிய பரிசுத்த எழுத்தாகிய பைபிளும்கூட மனிதவர்க்கத்தின் ஆவிக்குரிய சுத்திகரிப்பையும் குணப்படுத்தலையும் பற்றி ஒரு நதியோடு சம்பந்தப்படுத்திப் பேசுவது அக்கறைக்குரியதாக இருக்கிறது. தீர்க்கதரிசியும் எழுத்தாளனுமாகிய யோவன் தேவனுடைய சிங்காசனத்திலிருந்து “ஜீவத்தண்ணீருள்ள நதி” புறப்பட்டு வருகிற காட்சியைக் கண்டான். அதன் இருக்கரையிலும் ஸ்நனம் செய்பவர்களுக்கு பதிலாக, “ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவான” கனிதரும் விருட்சங்களைக் கண்டான்.—வெளிப்படுத்துதல் 22:1, 2.
அடையாள அர்த்தத்தில், பைபிள் இங்கே சிருஷ்டிகர் மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் என்றுமாக விடுவித்து நித்திய ஜீவனை அளிப்பதற்கு செய்திருக்கும் மகத்தான ஏற்பாட்டைக் குறித்துப் பேசுகிறது. இந்த ஏற்பாட்டின் கீழ் கங்கை நீரில் நீராடியிருக்கும் இலட்சக்கணக்கானோரும், கங்கையை ஒருபோதும் பார்த்திராத இலட்சக்கணக்கானோரோடுகூட சமீப எதிர்காலத்தில் பாவத்திலிருந்து சுத்திகரிப்படைந்து மரணத்திலிருந்து விடுவிக்கப்படும் வாய்ப்பைக் கொண்டிருப்பர்.a (g89 3/22)
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பத்திரிகையை பிரசுரிப்பவர்களிடம் கிடைக்கும் மரணத்தின் மேல் வெற்றி—உங்களுக்குச் சாத்தியமா? சிறு புத்தகத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 17-ன் படம்]
எண்ணற்ற ஆலயங்கள் மற்றும் கோயில்களுக்கிடையில் எல்லா வகையான ஆட்களும் கங்கையில் ஸ்நானம் செய்ய வருகிறார்கள்
[பக்கம் 17-ன் படம்]
நதியின் ஓரத்தில், பூசாரி ஒருவர் கங்கை பூஜை அல்லது வணக்கத்தின் சடங்குகளைச் செய்ய ஒரு பெண்மணிக்கு உதவி செய்கிறார்
[பக்கம் 18-ன் படம்]
ஹரிதுவாரிலுள்ள அநேக ஆலயங்களில் ஒன்றில் காணப்படும் இந்து தெய்வங்களும் பெண் தெய்வங்களும்
[பக்கம் 19-ன் படம்]
இளம் பெண்ணொருத்தி தன் இலைப் படகை கங்கையில் மிதக்கவிட தயாராகிறாள்