அந்தப் படுகொலை அதைக் கடவுள் ஏன் அனுமதித்தார்?
அந்தப் படுகொலை அநேகருடைய விசுவாசத்தைத் தகர்த்திடுமளவுக்குப் பாதித்திருக்கிறது. யூதர்களும் சரி, யூதரல்லதவர்களும் சரி, அவர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்கிறார்கள்: கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால், அதை அவர் ஏன் அனுமதித்தார்? ‘மனிதன் மனிதனுடன் மனிதாபிமானமில்லாமல் நடந்துகொள்ளுகிறான்,’ என்று சொல்லிவிடுவது போதுமா? அல்லது அரசாங்கம் அங்கீகரிக்கும் கொலை அல்லது இனங்களைப் பூண்டோடு ஒழிப்பதில் “நாகரிகமான” பின்னணிகளையுடைய ஆண்களும் பெண்களும் எப்படி ஆதரிக்க, கற்பிக்க, பொறுத்துக்கொள்ள அல்லது சுறுசுறுப்பாகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடும் என்பதை விளக்கும் வேறு அம்சங்கள் உண்டா?
ஐக்கிய மாகாணங்களில் யூதர் பாதுகாப்புச் சமுதாய இயக்கம் அண்மையில் “பழமைப் பேணும் யூத மத நியமங்களின் அறிக்கை” ஒன்றைப் பிரசுரித்தது. அதில் அவர்கள் கூறுவதாவது: “தீயது இருப்பதுதானே எல்லாச் சமயத்திலும் விசுவாசத்துக்குப் பலமான இடையூறை ஏற்படுத்திவந்திருக்கிறது. ஆஸ்ச்விட்ஸ் மற்றும் ஹிரோஷிமாவால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் பயங்கர கொடுமைக்கு உட்படுத்தப்படுவதான இந்த இரண்டக நிலை நம்முடைய தலைமுறையில் புதியதோர் அச்சுறுத்தும் உண்மை நிலையை ஏற்றிருக்கிறது. நீதியும் வல்லமையுமுள்ள ஒரு கடவுள் இத்தனை அநேக அப்பாவிகளின் உயிர்கள் நிர்மூலமாக்கப்படுவதை எப்படி அனுமதிக்கக்கூடும் என்ற கேள்வி மதம் சார்ந்த மனச்சாட்சியைத் தொந்தரவு செய்கிறது, கற்பனையையும் கலக்குகிறது.”
மற்ற இலட்சக்கணக்கானோரைப் போல் யெகோவாவின் சாட்சிகள் புரிந்துகொள்ளும் விதத்தில் அந்தக் கேள்வியில் அக்கறையாயிருந்திருக்கின்றனர், ஏனென்றால் அவர்களுடைய உடன் விசுவாசிகளில் அநேகர் நாசி முகாம்களில் மாண்டிருக்கின்றனர். அப்படியிருக்கக், கடவுள் ஏன் தீமையைப் பொறுத்துவந்திருக்கிறார்?
சுயாதீனமும் அந்த விவாதமும்
மேற்கூறப்பட்ட அந்த யூத பிரசுரம் அந்தக் கேள்விக்கு ஒரு பகுதி பதிலைக் கொடுக்கிறது. அது சொல்வதாவது: “மனிதரைச் சுயாதீனத்துடன் படைத்திருப்பதன் மூலம், கடவுள் தம்முடைய சொந்த எதிர்காலச் செயலளவைக் கட்டுப்படுத்தியிருக்கிறார். மக்கள் தீமையையும் நன்மையையும் எதிர்ப்படும்போது, தவறானதைத் தெரிந்துகொள்ளும் சாத்தியம் இல்லையெனில், தெரிந்து கொள்ளுதல் என்ற அந்த முழு கருத்தும் அர்த்தமற்றதாகிவிடும். மனிதவர்க்கம் சுயாதீனம் அளிக்கப்பட்டிருப்பதைத் தெய்வீக அன்பின் ஒரு செயலாகக் காண முடிகிறது; நம்முடைய தீர்மானங்கள் மிகுந்த வருத்தத்தைக் கொண்டுவருவதாயிருந்தாலும், இது நம்முடைய சொந்த உத்தமத்திற்கும் வளர்ச்சிக்கும் இடமளிக்கிறது.”
இந்தக் கருத்து எபிரெய வேதாகமத்தின் பதிவுகளுக்கு இணங்க இருக்கிறது. ஆரம்பமுதல், மனிதவர்க்கம் தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தைப் பெற்றிருக்கிறது—ஆதாம், ஏவாள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமலிருக்கத் தெரிந்துகொண்டதும் சரி (ஆதியாகமம் 3:1–7) அல்லது காயீன் தன்னுடைய சகோதரனைக் கொல்வதற்குத் தெரிந்துகொண்டதும் சரி. (ஆதியாகமம் 4:2–10) பூர்வ இஸ்ரவேலருக்கு முன்பும் யெகோவா ஒரு தெரிவை வைத்தார்: “இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன். . . . ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொள்.”—உபாகமம் 30:15, 19.
ஆனால் அந்த யூதரின் கூற்றில் ஒரு முக்கியமான உண்மை கவனத்திற் கொள்ளப்படவில்லை. கடவுளுக்கு எதிராகக் கலகஞ் செய்தவனும், பின்னால் உத்தம யோபுவுக்குக் கஷ்டத்தை ஏற்படுத்தியவனுமாகிய அதே ஆள் இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறான், பேய்த்தனமான கொடிய தெரிவுகளால் மனிதரின் மனங்களை தவறான திசையில் மாற்ற, இது சில சந்தர்ப்பங்களில் கான்சன்ட்ரேஷன் முகாம்களிலும், வாதனையிலும், மொத்தக் கொலையிலும் விளைந்திருக்கிறது. அவன் யோபு புத்தகத்தில் கலகக்கார தேவ தூதரில் ஒருவன், சாத்தான், எதிரி என்று மிகத் தெளிவாக அடையாளங்காட்டப்பட்டிருக்கிறான்.—யோபு 1:6; 2:1, 2.
சாத்தானுடைய செல்வாக்கும் அவன் அளிக்கும் தெரிவுகளும் இன்றைய உலகத்தை மோசமான வழியில் திருப்பி, வன்முறைக்கு வழிநடத்தியிருப்பதோடு வாழ்க்கைக்கும் ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் மதிப்பைக் குறைத்துவிட்டிருக்கிறது. கடவுளுடைய ராஜ்ய ஆட்சி நம்பிக்கையிலிருந்து மனிதவர்க்கத்தைத் திசைத்திருப்பும் எந்தக் காரியமும், அது அரசியல் தத்துவங்களானாலும், இனம் மற்றும் மதப் பிரிவுகளானாலும், போத மருந்து துர்ப்பிரயோகமானாலும், அளவுகடந்த இன்ப நாட்டமானாலும், மனித தெய்வங்களானாலும்—இவை அனைத்துமே சாத்தானின் நோக்கத்தை நிறைவேற்றுவதாயிருக்கின்றன. இந்தப் பொல்லாங்கன் பூமியினிடமாகத் தள்ளப்படும்போது “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” என்று பைபிள் முன்னுரைத்ததில் ஆச்சரியமில்லை! 1914 முதல் நாம் அந்த வன்மையான கோபத்தின் காலப்பகுதியில் வாழ்ந்துவந்திருக்கிறோம்.—வெளிப்படுத்துதல் 12:12.
மனிதவர்க்கம் கடவுளுடைய ஆட்சிக்கு அல்லது அவருடைய எதிரியாகிய சாத்தானுடைய ஆட்சிக்குத் தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்ளும் தெரிவை கொண்டிருந்தது, இன்னும் கொண்டிருக்கிறது. இந்தத் தெரிவு கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே இருந்துவந்திருக்கும் 6,000 வருடத்திற்குப் பின் செல்லக்கூடிய ஒரு நீண்ட கால விவாதத்தைக் குறிப்பதாயிருக்கிறது. ஆனால் இந்த விவாதத்தைத் தீர்ப்பதற்கு யெகோவா தேவன் ஒரு கால வரம்பை வைத்திருக்கிறார் என்று பைபிள் குறிப்பிடுகிறது—1914 முதல் மனிதவர்க்கம் இந்தச் சாத்தானிய ஒழுங்குமுறையின் முடிவு காலத்தில் வாழ்ந்துவந்திருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1–5, 13.
விரைவில் கடவுளுடைய ராஜ்ய ஆட்சி எல்லாத் தீமையையும் அதைத் தெரிந்துகொள்கிறவர்களையும் அழித்துவிடும். நன்மை செய்வதைத் தெரிந்து கொள்கிறவர்கள் ஒரு பரிபூரணமான, தூய்மையான பூமியில் கடவுளுக்குக் கீழ்ப்படிதலை உட்படுத்தும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள்.—வெளிப்படுத்துதல் 11:18; 21:3, 4.
“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
இந்தப் பூமிக்கும் அதன் கீழ்ப்படிதலுள்ள குடிமக்களுக்கும் கடவுள் நோக்கங்கொண்டிருக்கும் எதிர்காலம் கடந்த காலத்தின் பாரமான காரியங்களை நம் நினைவுகளிலிருந்து நீக்கிவிடும்: “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.”—ஏசாயா 65:17.
எனவே கடவுளுடைய ஆட்சி பூமி முழுவதையும் நிரப்பும்போது, மனிதர் ஏற்கெனவே அனுபவித்திருக்கும் துன்பங்கள் எதுவாயிருந்தாலும், அவை அவர்களுடைய மனதுகளிலிருந்து மறைந்துவிடும். அந்தச் சமயத்தில் கடந்த காலக் கொடுங்கனாக்களை மகிழ்ச்சி நிரப்பிவிடும். ஏனென்றால் பைபிள் நமக்கு வாக்களிக்கிறபடி, “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4, 5.
துன்பங்களை ஏற்படுத்துகிறவர்களை, அவர்கள் மனிதராக இருந்தாலும் சரி, பிசாசுகளாக இருந்தாலும் சரி, அவர்களைத் தம்முடைய சர்வவல்லமையினால் நீக்கிப்போடும் காலம் சமீபமாயிருக்கிறது என்று பைபிள் தெளிவாகக் காண்பிக்கிறது. நீதிமொழிகள் 2:21, 22 பின்வருமாறு கூறுகிறது: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்.” ஆம், கடவுள் “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்.” (வெளிப்படுத்துதல் 11:18) அது கடைசியாகப் பிசாசாகிய சாத்தானையும் உட்படுத்தும்.
துன்மார்க்கர் இந்தப் பூமியைக் கெடுத்துக்கொண்டிருப்பதற்கு இனிமேலும் அனுமதிக்கமாட்டார்; அல்லது தீயவர்கள் தங்களுடைய உடன் மனிதரை வாதிப்பதையும் துன்புறுத்துவதையும் சிறை செய்வதையும் அனுமதிக்கமாட்டார். அவருடைய நீதியான சட்டங்களுக்கு இசைவாக நடப்பதைத் தெரிந்து கொள்ளாத எவரும் பொறுத்துக்கொள்ளப்படமாட்டார்கள். கடவுளுடைய சித்தத்தையும் சட்டத்தையும் மதிக்கும் ஆட்கள் மட்டுமே தொடர்ந்து வாழ்வார்கள்.
4,000 ஆண்டுகளுக்கு முன்பு “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும்” கடவுள் கண்டார். மகா பிரளயத்தைக் கொண்டுவருவதன் மூலம் அவர் செயல்பட்டார். (ஆதியாகமம் 6:5) கடவுள் மறுபடியும் நடவடிக்கை எடுப்பதற்கு கூடுதல் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் கடவுளுக்கு உரிய துதியை நாம் இப்பொழுது ஏறெடுப்போமானால், நித்திய ஜீவன் நம்முடைய சந்தோஷமான பங்காக இருக்கும்.—ஏசாயா 65:17–25; யோவன் 17:3; 1 தீமோத்தேயு 6:19.
என்றபோதிலும், அந்தப் படுகொலைக்குப் பலியாட்களானவர்கள் உட்பட பிரேதக்குழிகளில் மரித்திருக்கும் இலட்சக்கணக்கானோரைப் பற்றியதென்ன? அவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? அவர்கள் மறக்கப்படுவார்களா? (g89 4/8)