அந்தப் படுகொலையில் மாண்டவர்கள் திரும்ப வருவார்களா?
அந்தப் படுகொலையில் மாண்ட இலட்சக்கணக்கான பலியாட்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? கடவுள் இந்த நாசிய பலியாட்களின் சார்பாக ஏதாவது நீதியின் உன்னதச் செயலை நடப்பிப்பாரா?
எபிரெய வேதாகமம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடவுளுடைய உத்தமத் தீர்க்கதரிசிகளையும் ஊழியர்களையும் பலப்படுத்திய ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது. அது மரித்த நபரைத் தப்பி உயிர்வாழும் ஓர் அழிவற்ற ஆத்துமா பற்றிய பூர்வ கிரேக்கரின் நம்பிக்கையைச் சார்ந்ததா? அவ்விதம் இருப்பதற்கில்லை, ஏனென்றால் எபிரெய எழுத்துக்களும் போதனைகளும் கிரேக்க தத்துவம் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.
மனித ஆத்துமா அழிவுள்ளது
ஆதியாகமத்திலுள்ள எபிரெய பதிவு முதல் மனிதனின் சிருஷ்டிப்பைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் [எபிரெயு, லெனெஃபெஷ்].” (ஆதியாகமம் 2:7) 1917-ம் ஆண்டு யூதர் பிரசுர சங்கத்தின் மொழிபெயர்ப்பு லெனெஃபெஷ் என்ற பதத்திற்கு “உயிருள்ள ஆத்துமா” என்று சொல்லுகிறது. எனவே, ஓர் ஆத்துமா அல்லது நெஃபெஷ் உயிருள்ள ஒன்று, ஒரு பிராணி, அது மிருகமாகவும் இருக்கலாம் அல்லது மனிதனாகவும் இருக்கலாம்.
எபிரெய வேதாகமத்தில் நெஃபெஷ் என்ற பதத்துடன் சாவாமை அல்லது அழியாமை இணைத்துச் சொல்லப்படுவதில்லை. உண்மை என்னவெனில், “அழியாமை” என்ற வார்த்தை எபிரெய வேதாகமத்தில் காணப்படவுமில்லை. மாறாக, நெஃபெஷ் ஓர் ஆள், உயிருள்ள ஆத்துமா என்று எபிரெய பைபிள் குறிப்பிடுகிறது. (எசேக்கியேல் 18:4, 20) எனவே மரணம் ஓர் உயிருள்ள ஆத்துமாவாக ஒரு மனிதனின் முடிவாக, குறைந்தது தற்காலிக முடிவாகவாவது இருக்கிறது. சங்கீதக்காரனாகிய தாவீது விவரித்துள்ளபடி அது ஒரு முழுமையான செயலற்ற நிலை, ஓர் ஆழ்ந்த தூக்கத்திற்கு ஒப்பானது: “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரண நித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.”—சங்கீதம் 13:3.
அந்த எளிய கருத்தைப் பின்பற்றி, எபிரெய வேத வசனங்கள் நமக்குச் சொல்வதாவது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய், நீ போகிற பாதாளத்திலே [மனிதவர்க்கத்தின் பொது பிரேதக் குழி] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 10) வேதனையிலிருந்த யோபுவின் உணர்ச்சிகளுக்கு இசைவாய் இது இருக்கிறது: “நான் . . . கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன? நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.” (யோபு 3:11, 15) “பழமைப் பேணும் யூத மத நியமங்களின் அறிக்கை” உரிமைப்பாராட்டுவது போல் யோபு மரணத்திற்குப் பின் ஓர் அழியா ஆத்துமாவாக “உணர்வுடன் உயிரோடு” இருப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டில்லை.
அப்படியென்றால் மரணம் முழுவதுமாக மறக்கப்படுவதை அர்த்தப்படுத்துகிறதா? இன்று வாழும் மக்களில் வெகு சிலரே தங்களுக்கு முன் இருந்த ஐந்து அல்லது பத்து சந்ததியினரின் பெயர்களை நினைவில் கொண்டிருக்க முடிய, கடவுளைப் பற்றியதென்ன? அவர் அவர்களை ஞாபகத்தில் கொண்டிருக்கிறாரா? அவர்களை ஞாபகத்தில் கொண்டிருப்பாரா? நாசி துன்புறுத்தலின் இலட்சக்கணக்கான பலியாட்களை அவர் நினைத்தருளுவாரா? அர்த்தமற்ற போர்களில் மரித்திருக்கும் இலட்சக்கணக்கானவர்களை? கடவுள் மரித்தோரை ஞாபகத்தில் கொண்டிருக்க முடியும் என்று தானியேல் நம்பினான். மரித்தவர்களின் உயிர்த்தெழுதல் இருக்கும் என்று அவனுடைய தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டியது, ஏனென்றால் அவன் சொன்னான்: “பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.”—தானியேல் 12:2.
எதிர்காலத்தில் பூமிக்குரிய வாழ்க்கைக்கான ஓர் உயிர்த்தெழுதல் இருக்கிறது என்று உத்தமத் தீர்க்கதரிசிகளும் பூர்வ இஸ்ரவேல் அரசர்களும் உண்மையிலேயே நம்பினார்கள். மரணத்திற்குப் பின்பு உருவில்லாத ஓர் அழியா ஆத்துமாவாக சுற்றிக்கொண்டிருப்பது பற்றிய எந்த ஒரு கருத்தையும் அவர்கள் கொண்டில்லை. பூமியில் பரிபூரண ஜீவனைப் பெறுவதற்கான உயிர்த்தெழுதல் அதே நம்பிக்கை இன்றும் பொருந்துகிறது. அது நமக்கு எப்படித் தெரியும்?
அந்தப் படுகொலை பலியாட்களுக்கு நம்பிக்கை
1,900 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு யூத போதகர் இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை மக்கள் முன் வைத்தார். அவர் சொன்னார்: “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள [ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ள, NW] அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும். அப்பொழுது நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” (யோவான் 5:28, 29) “ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ளவர்கள்” என்ற தொடர் அவற்றிலிருப்பவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு பூமியில் ஜீவனடைய நிலைநாட்டப்படும் அந்த நாள் வரை அவர்கள் கடவுளுடைய ஞாபகத்தில் வைக்கப்படுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.
எனவே, ஐக்கிய மாகாணங்களிலுள்ள பழமைப் பேணும் யூத மதம் வெளியிட்ட “நியமங்களின் அறிக்கை” இந்தக் கருத்தில் உண்மையாக இருக்கிறது: “ஓலம் ஹா–பா-வின் (மரணத்துக்குப் பின் ஒரு வாழ்க்கை) உருவம், நாம் கல்லறையிலே கைவிடப்பட மாட்டோம், நாம் மறக்கப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கக்கூடும்.” கடவுளுடைய அன்புக்குரிய தயை மற்றும் நீதி எதைக் குறிக்கிறதென்றால், உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சியின் கீழ் நித்திய ஜீவனைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை உடையவர்களாயிருப்பர்.
எனவே, இந்த அனைத்து காரியங்களும் அந்தப் படுகொலையின் பலியாட்களாகிய இலட்சக்கணக்கான யூதர்களையும் ஸ்லவியரையும் மற்ற பலியாட்களையும் எவ்விதம் பாதிக்கிறது? அவர்கள் கடவுளுடைய ஞாபகத்தில் இருக்கின்றனர், உயிர்த்தெழுதலுக்குக் காத்துக்கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அவர்களுக்கு முன் இருக்கும் தெரிவு—ஜீவனை முன்னிலையில் கொண்டிருக்கும் கடவுளுக்குக் கீழ்ப்படிதல் அல்லது ஆக்கினைத்தீர்ப்பை முன்னிலையில் கொண்டிருக்கும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமை. அந்த இலட்சக்கணக்கானோர் சரியானதைத் தெரிந்துகொள்வார்கள் என நாம் நம்புகிறோம்!
யூதராக இருந்தாலுஞ்சரி, யூதரல்லாதவராக இருந்தாலுஞ்சரி, மரித்தோருக்கு இருக்கும் இந்த நம்பிக்கை குறித்து நீங்கள் இன்னும் அதிகமாக அறிய விரும்புவீர்களானால், உங்கள் பிராந்தியத்திலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொள்ளுங்கள், அல்லது 256 பக்கங்களைக்கொண்டிருக்கும் படங்களுடன்கூடிய நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களுக்கு எழுதுங்கள் (ரூ.30). (g89 4/8)
[பக்கம் 20-ன் படம்]
ஓர் உயிர்த்தெழுதல் இருக்கும் என்றும் “முந்தினவைகள் மனதிலே தோன்றுவதுமில்லை” என்றும் பைபிள் வாக்களிக்கிறது.—ஏசாயா 65:17