உயிர்த்தெழுதலில் உங்கள் நம்பிக்கை எவ்வளவு உறுதியானது?
“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.”—யோவான் 11:25.
1, 2. யெகோவாவை வணங்கும் ஒருவர் உயிர்த்தெழுதலில் ஏன் நம்பிக்கை வைக்கிறார்?
உயிர்த்தெழுதலில் உங்கள் நம்பிக்கை எவ்வளவு உறுதியானது? மரண பயத்திற்கு எதிராக அது உங்களைப் பலப்படுத்துகிறதா? அன்பானவர்களை மரணத்தில் இழக்கும்போது அது உங்களுக்கு ஆறுதல் அளிக்கிறதா? (மத்தேயு 10:28; 1 தெசலோனிக்கேயர் 4:13) உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்ததன் காரணமாக பலப்படுத்தப்பட்டவர்களாய் அடிகளையும், நிந்தைகளையும், துன்புறுத்தலையும், சிறையிருப்பையும் சகித்திருந்த கடவுளுடைய முற்கால ஊழியர்களில் அநேகரைப்போல நீங்களும் இருக்கிறீர்களா?—எபிரெயர் 11:35-38.
2 ஆம், உயிர்த்தெழுதல் இருக்கும் என்பதைப் பற்றி யெகோவாவின் உண்மையான வணக்கத்தார் ஒருவருக்கு எந்தச் சந்தேகமும் இருக்கக்கூடாது. மேலும், அவர் தன் வாழ்க்கையை எவ்வாறு நடத்துகிறார் என்பதில் அவருடைய நம்பிக்கை செல்வாக்கு செலுத்தவேண்டும். கடவுளுடைய ஏற்ற காலத்தில் சமுத்திரமும், மரணமும், பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கும் என்ற எண்ணமே அற்புதகரமான ஒன்று. பரதீஸான பூமியில் என்றென்றும் வாழும் ஓர் எதிர்பார்ப்பு உயிர்த்தெழுப்பப்பட்ட இவர்களுக்கு இருக்கும்.—வெளிப்படுத்துதல் 20:13; 21:4, 5.
எதிர்கால வாழ்க்கையைப் பற்றி சந்தேகங்கள்
3, 4. மரணத்திற்கு பிறகு வாழ்க்கையைப் பற்றி அநேகர் இன்னமும் என்ன நம்பிக்கை வைத்திருக்கின்றனர்?
3 மரணத்திற்கு பிறகு வாழ்க்கை இருக்கிறதென நீண்ட காலமாக கிறிஸ்தவமண்டலம் போதித்திருக்கிறது. யு.எஸ். கேத்தலிக் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை கூறியது: “சமாதானமும் திருப்தியும், நிறைவேற்றமும் சந்தோஷமும் நிறைந்த மற்றொரு வாழ்க்கையில் நம்பிக்கை வைப்பதன் மூலம் இந்த வாழ்க்கையின் ஏமாற்றங்களையும் துன்பங்களையும் சகிக்க கிறிஸ்தவர்கள் காலம் காலமாக முயற்சி செய்திருக்கின்றனர்.” அநேக கிறிஸ்தவமண்டல நாடுகளில் மக்கள் மதத்தை நிராகரிப்பவர்களாகவும் அதைப் பற்றி ஓரளவு சந்தேகமுள்ளவர்களாகவும் மாறியிருந்தும், மரணத்திற்கு பிறகு ஏதோ ஒருவிதமான வாழ்க்கை இருக்கிறது என அவர்களில் அநேகர் நம்புகின்றனர். ஆனால் அவர்கள் உறுதியாக அறியாத அநேக காரியங்களும் இருக்கின்றன.
4 டைம் பத்திரிகையில் ஒரு கட்டுரை கூறியது: “[மரணத்திற்கு பிறகு வாழ்க்கை] என்பதில் மக்கள் இன்னமும் நம்பிக்கை வைக்கின்றனர்: அது என்ன என்பதைப் பற்றிய அவர்களுடைய எண்ணம் மட்டும்தான் தெளிவில்லாமல் போயிருக்கிறது; அதைப் பற்றி தங்கள் பாஸ்டர்கள் அதிகமாக பேசுவதை அவர்கள் கேள்விப்படுவதில்லை.” முன்பு போலில்லாமல், மரணத்திற்கு பிறகு வாழ்க்கையைப் பற்றி மத ஊழியர் ஏன் குறைவாக பேசுகின்றனர்? மத அறிஞர் ஜெஃப்ரி பர்டன் ரஸல் கூறுகிறார்: “பிரபலமாயிருக்கும் சந்தேகம் என்னும் தடையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என [குருமார்] உணருவதன் காரணமாகத்தான் அவர்கள் அந்த விஷயத்தைத் தவிர்க்க விரும்புகின்றனர் என நான் நினைக்கிறேன்.”
5. எரி நரக போதனையை இன்று அநேகர் எவ்வாறு கருதுகின்றனர்?
5 அநேக சர்ச்சுகளில் மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது பரலோகத்தையும் எரி நரகத்தையும் உட்படுத்துகிறது. பரலோகத்தைப் பற்றி பேச குருமார் விரும்பவில்லை என்றால் நரகத்தைப் பற்றி பேச அவர்கள் இன்னும் அதிகம் தயங்குகின்றனர். செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரை கூறியது: “எரி நரகத்தில் நித்திய தண்டனையை நம்பும் சர்ச்சுகள்கூட இக்காலத்தில் . . . அந்த எண்ணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.” நரகம் என்பது ஓர் உண்மையான வதைக்கும் இடம் என மத்திப காலங்களில் போதிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான நவீனகால இறையியல் வல்லுநர்கள் இப்போது அவ்வாறு நம்புவதில்லை. மாறாக, நரகத்தைப் பற்றிய ஒரு “மனிதாபிமான” நோக்குநிலையையே அவர்கள் விரும்புகின்றனர். புதுமைவாதிகள் அநேகர் கூறுகிறபடி, நரகத்தில் இருக்கும் பாவிகள் சொல்லர்த்தமாக வதைக்கப்படுவதில்லை, ஆனால் “மதசம்பந்தமாக கடவுளிடமிருந்து பிரிந்திருப்பது” அவர்களை வதைக்கிறது.
6. பெருந்துன்பத்தை எதிர்ப்படுகையில் தங்கள் விசுவாசம் உறுதியாக இல்லை என்பதை சிலர் எவ்வாறு காண்கின்றனர்?
6 நவீனகால கருத்து உடையவர்களைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக சர்ச் போதகத்தின் வலிமையைக் குறைக்கின்றனர். சிலர் பிரபலமில்லாமல் போவதை வேண்டுமானால் அது குறைக்கலாம். ஆனால் சர்ச்சுக்கு செல்லும் கோடிக்கணக்கான உண்மையுள்ள ஆட்கள் எதை நம்புவது என அறியாமல் திணறும்படி அது செய்துவிடுகிறது. ஆகவே, மரணத்தை எதிர்ப்படும் அநேக சமயங்களில் தங்கள் விசுவாசம் குறைவுபடுவதை அவர்கள் காண்கின்றனர். கோரமான ஒரு விபத்தில் குடும்ப அங்கத்தினர்களில் அநேகரை இழந்த ஒரு பெண்ணின் மனப்பான்மையைப் போல அவர்கள் மனப்பான்மையும் இருக்கிறது. அவளுடைய மத நம்பிக்கை அவளுக்கு ஆறுதல் அளித்ததா என்று கேட்டபோது அவள் தயக்கத்துடன், “அப்படித்தான் நெனக்கிறேன்” என கூறினாள். ஆனால், அவளுடைய மத நம்பிக்கை அவளுக்கு உதவியது என அவள் நம்பிக்கையுடன் கூறியிருந்தாலும்கூட, அந்த நம்பிக்கைகளுக்கு உறுதியான ஆதாரமில்லை என்றால் என்ன நிரந்தரமான நன்மையைக் கொடுக்கும்? இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால், எதிர்கால வாழ்க்கையைப் பற்றி பெரும்பாலான சர்ச்சுகள் என்ன போதிக்கின்றனவோ அது பைபிள் போதிப்பதிலிருந்து மிகவும் வேறுபடுகிறது.
மரணத்திற்கு பிறகு வாழ்க்கை பற்றி கிறிஸ்தவமண்டலத்தின் கருத்து
7. (அ) பெரும்பாலான சர்ச்சுகளில் என்ன போதகம் பொதுவாக இருக்கிறது? (ஆ) அழியாத ஆத்துமா என்ற போதகத்தை இறையியல் வல்லுநர் ஒருவர் எவ்வாறு விவரித்தார்?
7 தங்கள் வேறுபாடுகள் மத்தியிலும் அநேகமாக கிறிஸ்தவமண்டலத்தின் எல்லா பிரிவுகளுமே, சரீர மரணத்தைத் தப்பிப்பிழைக்கும் ஓர் அழியாத ஆத்துமா மனிதர்களுக்கு இருக்கிறது என்பதில் ஒத்திருக்கின்றன. ஓர் ஆள் மரிக்கையில் அவருடைய ஆத்துமா பரலோகத்திற்கு செல்லலாம் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர். தங்கள் ஆத்துமா ஓர் எரி நரகத்திற்கோ உத்தரிக்கும் ஸ்தலத்திற்கோ செல்லலாம் என சிலர் பயப்படுகின்றனர். ஆனால், எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய அவர்களுடைய கருத்தில் அழியாத ஆத்துமாவின் எண்ணமே முக்கியமான ஒன்று. அழியாமையும் உயிர்த்தெழுதலும் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் இறையியல் வல்லுநர் ஆஸ்கார் குல்மான் இதைப் பற்றிக் கூறினார். அவர் எழுதினார்: “மரணத்திற்கு பிறகு மனிதனின் விதியைப் பற்றி புதிய ஏற்பாடு என்ன போதிக்கிறது என்று . . . ஒரு சாதாரண கிறிஸ்தவனிடம் இன்று நாம் கேட்டால், சிலரைத் தவிர மற்ற எல்லோருமே, ‘ஆத்துமா அழியாமை’ என்றுதான் சொல்வார்கள்.” குல்மான் மேலுமாக கூறினார்: “பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் இந்த எண்ணம் கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய தவறான எண்ணங்களுள் ஒன்று.” குல்மான் இதை முதலாவதாக கூறியபோது ஒரு பெருங்குழப்பம் ஏற்பட்டதென அவர் குறிப்பிட்டார். ஆனாலும் அவர் சொன்னது சரியே.
8. முதல் மனிதனுக்கும் மனுஷிக்கும் முன்பாக யெகோவா என்ன நம்பிக்கையை வைத்தார்?
8 மரித்தபிறகு பரலோகத்திற்கு செல்வதற்காக யெகோவா தேவன் மனிதர்களைப் படைக்கவில்லை. அவர்கள் மரிக்கவேண்டும் என்பதே அவருடைய ஆதிநோக்கம் கிடையாது. ஆதாமும் ஏவாளும் பரிபூரணராக படைக்கப்பட்டனர். மேலும் நீதியுள்ள சந்ததியால் பூமியை நிரப்பும் வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. (ஆதியாகமம் 1:28; உபாகமம் 32:4) கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போனால் மட்டுமே அவர்கள் மரிப்பர் என நம்முடைய முதல் பெற்றோரிடம் சொல்லப்பட்டது. (ஆதியாகமம் 2:17) தங்கள் பரலோக தகப்பனுக்கு கீழ்ப்படிந்திருந்தார்கள் என்றால், பூமியில் என்றென்றும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டே இருந்திருப்பர்.
9. (அ) மனிதனுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறதா? (ஆ) மரிக்கையில் அந்த மனிதனுக்கு என்ன நேரிடுகிறது?
9 என்றபோதிலும், வருத்தகரமாக ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படிய தவறினர். (ஆதியாகமம் 3:6, 7) அதன் மோசமான விளைவுகளை அப்போஸ்தலன் பவுல் விவரிக்கிறார்: “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12) பூமியில் என்றென்றும் வாழ்வதற்கு பதிலாக ஆதாமும் ஏவாளும் மரித்தனர். அதற்கு பிறகு என்ன நடந்தது? அவர்கள் பாவத்தின் காரணமாக, எரியும் ஒரு நரகத்தில் போடப்படும் அழியாத ஆத்துமாக்கள் அவர்களுக்கு இருந்தனவா? ஆதாமும் ஏவாளும் மரித்தபோது அவர்கள் முழுமையாக மரித்துப்போனார்கள். கடைசியில், யெகோவா ஆதாமிடம் கூறியிருந்ததைப் போலவே அவர்களுக்கு நடந்தது: “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.”—ஆதியாகமம் 3:19.
10, 11. ஆத்துமாவைப் பற்றி பைபிள் போதிப்பதைக் குறித்து டான் ஃபிளெமிங்கின் பைபிள் அகராதி எதை ஒப்புக்கொள்கிறது, மேலும் பைபிள் போதிப்பதுடன் இது எவ்வாறு ஒத்திருக்கிறது?
10 டான் ஃபிளெமிங் என்பவரின் ஹிந்தி பைபிள் அகராதி அடிப்படையில் இதை ஒப்புக்கொள்கிறது. ஆத்துமா பற்றி கலந்தாலோசிக்கும் ஒரு கட்டுரையில் அது கூறுகிறது: “ஆத்துமா, சரீரத்திலிருந்து தனியாக இருக்கும் ஒன்று என பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் கருதவேயில்லை. அவர்களுக்கு ஆத்துமா (நெஃபெஷ்) என்பது உயிரைக் குறித்தது. மனிதர்களும் மிருகங்களும் நெஃபெஷ்தான், அதாவது ‘உயிரிகள்.’ ‘மனிதன் ஜீவ ஆத்துமா (பிராணி) ஆனான்’ என்று மொழிபெயர்ப்பதன் மூலம், பைபிளின் பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் அதிக குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. (ஆதியாகமம் 2:7) ஆரம்பத்திலுள்ள வேதவசனங்களில் இருப்பதைப்போலவே, மற்ற மொழிபெயர்ப்புகள் இதை உயிருள்ள பிராணி என்று மொழிபெயர்க்கின்றன. (ஆதியாகமம் 1:21, 24)” அது மேலுமாக கூறுகிறது: பைபிளில், “மனிதனுக்கு உயிரில்லாத உடல் மேலும் உடலில்லாத பிராண் இருக்கிறது என நாம் நினைத்துக் கொள்ளக்கூடாது. மாறாக அவன் ஒரே யூனிட்தான். இந்த நெஃபெஷ், ‘ஆள்’ என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.” இப்படிப்பட்ட ஒளிவுமறைவின்மை புத்துயிரளிக்கிறது. ஆனால் சர்ச்சுக்கு போகிறவர்கள் இந்த உண்மைகளைப் பற்றி ஏன் அறிந்தில்லை என்று ஒருவர் நியாயமாகவே யோசிக்கலாம்.
11 சர்ச்சுக்கு போகிறவர்களுக்கு, மரணத்தைத் தப்பிப்பிழைத்து துன்பப்படும் எதுவும் மனிதனுக்குள் இல்லை என்ற எளிய பைபிள் சத்தியம் போதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் எவ்வளவு அதிகமான கவலையையும் பயத்தையும் தவிர்த்திருக்கலாம். இது, கிறிஸ்தவமண்டலம் போதிப்பதிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தாலும் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் ஞானியாகிய சாலொமோன் கூறியவற்றிற்கு முற்றிலும் இசைவாக இருக்கிறது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; [இந்த வாழ்க்கையில்] இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே [மனிதவர்க்கத்தின் பொது பிரேதக்குழியிலே] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”—பிரசங்கி 9:5, 10.
12. அழியாத ஆத்துமாவைப் பற்றிய போதகத்தை கிறிஸ்தவமண்டலம் எங்கிருந்து பெற்றது?
12 பைபிள் கூறுவதிலிருந்து அவ்வளவு வித்தியாசமான ஒன்றை கிறிஸ்தவமண்டலம் ஏன் போதிக்கிறது? ஆரம்பகால சர்ச் பிதாக்கள் அழியாத ஆத்துமாவில் நம்பிக்கை வைப்பதற்கான ஆதாரத்தை பைபிளில் அல்ல ஆனால் “கவிஞர்கள், தத்துவஞானிகள் மற்றும் கிரேக்க எண்ணத்தின் பாரம்பரியத்தில் கண்டனர் . . . பின்னர் அந்த ஞானிகள், பிளேட்டோ அல்லது அரிஸ்டாட்டிலின் தத்துவங்களை உபயோகிக்க தெரிவு செய்தனர்” என்று நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. அழியாத ஆத்துமாவில் நம்பிக்கை உட்பட, “பிளேட்டோனிய மற்றும் நவீன பிளேட்டோனிய எண்ணம்” கடைசியில் “கிறிஸ்தவ இறையியலின் முக்கிய போதகத்தில்” சேர்க்கப்பட்டது என்றும் கூறுகிறது.
13, 14. புறமத கிரேக்க தத்துவஞானிகளால் அறிவொளியூட்டப்படும்படி எதிர்பார்ப்பது ஏன் நியாயமற்றது?
13 மரணத்திற்கு பிறகு வாழ்க்கை போன்ற அடிப்படையான நம்பிக்கையைப் பற்றி கற்றுக்கொள்ள, கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டுகிறவர்கள் புறமத கிரேக்க தத்துவ ஞானிகளிடம் போயிருக்க வேண்டுமா? நிச்சயமாகவே இல்லை. கிரீஸிலுள்ள கொரிந்துவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் பவுல் கூறினார்: “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.” (1 கொரிந்தியர் 3:19, 20) பூர்வ கிரேக்கர்கள் விக்கிரக வணக்கத்தாராக இருந்தனர். அப்படியானால், அவர்கள் எப்படி சத்தியத்தின் ஊற்றுமூலமாக இருக்கமுடியும்? கொரிந்தியர்களிடம் பவுல் கேட்டார்: “தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.”—2 கொரிந்தியர் 6:16.
14 ஆரம்பத்தில், பரிசுத்த சத்தியங்கள் இஸ்ரவேல் தேசத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன. (ரோமர் 3:1, 2) பொ.ச. 33-க்கு பிறகு, முதல் நூற்றாண்டிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ சபையின் மூலம் கொடுக்கப்பட்டன. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பற்றி பேசுகையில் பவுல் கூறினார்: “நமக்கோ தேவன் [தம்மிடம் அன்புகூருகிறவர்களுக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் காரியங்களை] தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்.” (1 கொரிந்தியர் 2:10; வெளிப்படுத்துதல் 1:1, 2-ஐயும் காண்க.) கிறிஸ்தவமண்டலத்தின் போதகமாகிய ஆத்துமா அழியாமை என்பது கிரேக்க தத்துவத்திலிருந்து பெறப்பட்டது. அது, இஸ்ரவேலுக்கு அல்லது முதல் நூற்றாண்டிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ சபைக்கு கடவுளால் வெளிப்படுத்தப்படவில்லை.
மரித்தோருக்கு உண்மையான நம்பிக்கை
15. இயேசுவின்படி, மரித்தவர்களுக்கு என்ன உண்மையான நம்பிக்கை இருக்கிறது?
15 அழியாத ஆத்துமா இல்லையென்றால் மரித்தவர்களுக்கு என்ன உண்மையான நம்பிக்கை இருக்கிறது? முக்கிய பைபிள் போதகமும் உண்மையிலேயே அற்புதகரமான தெய்வீக வாக்குறுதியுமான உயிர்த்தெழுதலே அது. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” என இயேசு தம்முடைய தோழியான மார்த்தாளிடம் கூறும்போது உயிர்த்தெழுதல் நம்பிக்கையை முன்வைத்தார். (யோவான் 11:25) இயேசுவில் நம்பிக்கை வைப்பது, அழியாத ஓர் ஆத்துமாவில் அல்ல, மாறாக உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பதாகும்.
16. உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பது ஏன் நியாயமானது?
16 இதற்கு முன்பு சில யூதர்களிடம் பேசுகையில் உயிர்த்தெழுதலைப் பற்றி இயேசு கூறியிருந்தார்: “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்.” (யோவான் 5:28, 29) இங்கே இயேசு விவரிப்பது, சரீரத்தின் மரணத்தைத் தப்பிப்பிழைத்து நேராக பரலோகத்திற்கு செல்லும் ஓர் அழியாத ஆத்துமாவிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக அல்லது ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிரேதக்குழியில் இருந்த மக்கள் எதிர்காலத்தில் ‘வெளியே வருவதாகும்.’ அது மரித்த ஆட்கள் மறுபடியும் உயிர் பெறுவதாகும். முடியாத ஒன்றா? “மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற” கடவுளுக்கு முடியாததல்ல. (ரோமர் 4:17) மரித்தவர்கள் மறுபடியும் உயிருக்கு வருவதைப் பற்றிய எண்ணத்தை சந்தேகவாதிகள் ஏளனம் செய்யலாம். ஆனால், “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறர்” என்ற உண்மையோடு அது கச்சிதமாக பொருந்துகிறது.—1 யோவான் 4:16; எபிரெயர் 11:6.
17. உயிர்த்தெழுதல் மூலம் கடவுள் எதை நிறைவேற்றுவார்?
17 “மரணபரியந்தம் உண்மையாயிரு[ந்த]” ஆட்களைக் கடவுள் மறுபடியும் உயிருக்கு கொண்டுவரவில்லை என்றால் வேறு எவ்வாறு அவர்களுக்கு பலனளிக்க முடியும்? (வெளிப்படுத்துதல் 2:10) அப்போஸ்தலன் யோவான் எழுதியதை கடவுள் நிறைவேற்றவும் உயிர்த்தெழுதல் உதவுகிறது: “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.” (1 யோவான் 3:8) ஏதேன் தோட்டத்தில், நம்முடைய முதல் பெற்றோரை பாவத்திற்குள்ளும் மரணத்திற்குள்ளும் வழிநடத்தியபோது, சாத்தான் முழு மனிதவர்க்கத்தின் கொலைகாரனாக ஆனான். (ஆதியாகமம் 3:1-6; யோவான் 8:44) இயேசு, தம்முடைய பரிபூரண ஜீவனை ஈடான மீட்கும் பொருளாக கொடுத்தபோது சாத்தானுடைய கிரியைகளை அழிக்க ஆரம்பித்தார். இதன் மூலம், வேண்டுமென்றே ஆதாம் கீழ்ப்படியாமல்போனதன் விளைவாக மனிதவர்க்கம் சுதந்தரித்த பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கும் வழியை இயேசு திறந்து வைத்தார். (ரோமர் 5:18) ஆதாமுடைய பாவத்தின் விளைவாக மரிப்பவர்களை உயிர்த்தெழுப்புவது, சாத்தானுடைய கிரியைகளை மேலும் அழிப்பதாக இருக்கும்.
சரீரமும் அழியாத ஆத்துமாவும்
18. இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்ற பவுலின் கூற்றுக்கு கிரேக்க தத்துவஞானிகளில் சிலர் எவ்வாறு பிரதிபலித்தனர், ஏன்?
18 அப்போஸ்தலன் பவுல் அத்தேனே பட்டணத்தில் இருந்தபோது, சில கிரேக்க தத்துவஞானிகள் அடங்கிய ஒரு கூட்டத்தாரிடம் நற்செய்தியைப் பிரசங்கித்தார். ஒரே உண்மையான கடவுளைப் பற்றியும் மனந்திரும்பும்படி அவர் அழைப்புவிடுத்ததைப் பற்றியும் பவுல் பேசுவதைக் கேட்டனர். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது? இவ்வாறு சொல்வதன் மூலம் பவுல் தன் பேச்சை முடித்தார்: “[கடவுள்] ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப் பண்ணினார்.” அந்த வார்த்தைகள் சலசலப்பை ஏற்படுத்தின. “மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள்.” (அப்போஸ்தலர் 17:22-32) இறையியல் வல்லுநர் ஆஸ்கார் குல்மான் கூறுகிறார்: “ஆத்துமா அழியாமையில் நம்பிக்கை வைத்த கிரேக்கர்களுக்கு, உயிர்த்தெழுதலைப் பற்றிய கிறிஸ்தவ போதகத்தை ஏற்றுக்கொள்வது மற்றவர்களைக் காட்டிலும் அதிக கடினமாக இருந்திருக்கும். . . . சாக்ரடீஸ், பிளேட்டோ போன்ற பெரிய தத்துவஞானிகளின் போதகத்தை, புதிய ஏற்பாட்டுடன் எவ்விதத்திலும் ஒத்திசைவுக்குள் [இணக்கமாக] கொண்டுவர முடியாது.”
19. அழியாத ஆத்துமா என்ற போதகத்தோடு உயிர்த்தெழுதல் போதகத்தை இணைக்க கிறிஸ்தவமண்டலத்தின் தத்துவஞானிகள் எவ்வாறு முயற்சி செய்தனர்?
19 இருந்தாலும், அப்போஸ்தலரின் மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட பெரிய விசுவாச துரோகத்திற்குப்பின், கிறிஸ்தவ போதகமாகிய உயிர்த்தெழுதலை அழியாத ஆத்துமா என்ற பிளேட்டோவின் நம்பிக்கையோடு இணைக்க இறையியல் வல்லுநர்கள் கடினமாக பிரயாசப்பட்டனர். காலப்போக்கில் சிலர், புதுவிதமான ஒரு தீர்வைக் கண்டனர்: மரணத்தின்போது ஆத்துமா சரீரத்திலிருந்து பிரிக்கப்படுகிறது (சிலர் சொல்கிறபடி “விடுதலையாகிறது”). ஆர். ஜெ. குக்கின் உயிர்த்தெழுதல் போதகத்தின் அடிப்படைக் கூறுகள் (ஆங்கிலம்) என்பதின்படி, நியாயத்தீர்ப்பு நாளில் “ஒவ்வொரு சரீரமும் அதனதன் ஆத்துமாவோடு மறுபடியும் சேர்க்கப்படும், ஒவ்வொரு ஆத்துமாவும் அதனதன் சரீரத்தோடு சேர்க்கப்படும்.” எதிர்காலத்தில், சரீரம் அதன் அழியாத ஆத்துமாவோடு சேர்க்கப்படுவதே உயிர்த்தெழுதல் என்று சொல்லப்படுகிறது.
20, 21. உயிர்த்தெழுதல் பற்றிய சத்தியத்தை யார் இடைவிடாமல் கற்பித்து வந்திருக்கின்றனர், இது அவர்களுக்கு எவ்வாறு பயனளித்திருக்கிறது?
20 இந்தக் கோட்பாடே முக்கிய சர்ச்சுகளின் அதிகாரப்பூர்வ போதகமாக இன்னமும் இருக்கிறது. இறையியல் வல்லுநர் ஒருவருக்கு அப்படிப்பட்ட கருத்து நியாயமாக தோன்றினாலும் சர்ச்சுக்கு செல்லும் அநேகர் அதை அறியாதிருக்கின்றனர். அவர்கள் மரிக்கையில் நேரடியாக பரலோகத்திற்குச் செல்வதாகத்தான் நம்புகின்றனர். இதன் காரணமாகத்தான் மே 5, 1995 காமன்வீல் வெளியீட்டில் எழுத்தாளர் ஜான் கார்வி குற்றஞ்சாட்டினார்: “[மரணத்திற்கு பிறகு வாழ்க்கை பற்றிய] பெரும்பாலான கிறிஸ்தவர்களின் நம்பிக்கை நவீன பிளேட்டோ தத்துவத்தைப் போலத்தான் இருக்கிறதே அல்லாமல் எந்த விதத்திலும் உண்மைக் கிறிஸ்தவத்தைப் போலில்லை. மேலும் அதற்கு எந்த பைபிள் பூர்வமான ஆதாரமும் இல்லை.” உண்மையில், பைபிளுக்கு பதிலாக பிளேட்டோவை மாற்றீடு செய்ததால் கிறிஸ்தவமண்டலத்தின் குருமார் தங்களுடைய மந்தைகளுக்கு பைபிள் பூர்வமான உயிர்த்தெழுதல் நம்பிக்கை அற்றுப்போகும்படி செய்திருக்கின்றனர்.
21 மறுபட்சத்தில், யெகோவாவின் சாட்சிகள் புறமத தத்துவங்களை நிராகரித்து உயிர்த்தெழுதல் பற்றிய பைபிள் போதகத்தை நம்புகின்றனர். அப்படிப்பட்ட போதகம் அறிவொளியூட்டுவதாகவும், திருப்தியளிப்பதாகவும், ஆறுதலளிப்பதாகவும் இருப்பதைக் காண்கின்றனர். பூமிக்குரிய நம்பிக்கை உள்ளவர்களுக்கும் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும் எதிர்பார்ப்பு உள்ளவர்களுக்கும் உயிர்த்தெழுதலைப் பற்றிய பைபிளின் போதகம் எவ்வளவு உறுதியானது என்றும் எவ்வளவு நியாயமானது என்றும் பின்வரும் கட்டுரைகளில் காண்போம். அந்தக் கட்டுரைகளை சிந்திப்பதற்கான முன் தயாரிப்பாக, கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபத்தில் 15-ம் அதிகாரத்தை நீங்கள் கவனமாக வாசிக்கும்படி உங்களை உந்துவிக்கிறோம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ உயிர்த்தெழுதலில் உறுதியான நம்பிக்கையை நாம் ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்?
◻ ஆதாமுக்கும் ஏவாளுக்கும் முன்பாக யெகோவா என்ன எதிர்பார்ப்பை வைத்தார்?
◻ கிரேக்க தத்துவத்தில் சத்தியத்தைத் தேடுவது ஏன் நியாயமற்றது?
◻ உயிர்த்தெழுதல் ஏன் நியாயமான ஒரு நம்பிக்கை?
[பக்கம் 10-ன் படம்]
நம்முடைய முதல் பெற்றோர் பாவம் செய்தபோது பூமியில் நித்திய ஜீவனோடு வாழும் நம்பிக்கையை இழந்தனர்
[பக்கம் 12-ன் படம்]
ஆத்துமா அழியாமையில் பிளேட்டோவின் நம்பிக்கை, சர்ச் வல்லுநர்கள் மீது செல்வாக்கு செலுத்தியது
[படத்திற்கான நன்றி]
Musei Capitolini, Roma