ஆத்துமாவுக்கு ஒரு மேம்பட்ட நம்பிக்கை
ரோம போர்வீரர்கள் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் யூத கலக சேனைகளின் கடைசி அரண்காப்பாகிய மசாடா மலைக்கோட்டைக்கு ஆக்ரோஷத்துடன் விரைந்தோடுகையில், தங்கள் எதிரிகளைக் கொடூரமாகத் தாக்கவும், போர்வீரர்களின் முழக்கங்களுக்கும், பெண்களின், பிள்ளைகளின் கூக்குரல்களுக்கும் தங்களைத் தயாராக்கிக்கொண்டார்கள். அதற்கு மாறாக, தீ ஜுவாலைகளின் படபடக்கும் ஓசையை மாத்திரம் கேட்டார்கள். எரிந்துகொண்டிருந்த கோட்டையைத் துருவி ஆராய்கையில், ரோமர்கள் அந்தப் பயங்கரமான உண்மையை அறிந்துகொண்டார்கள்: அவர்களுடைய எதிரிகள்—சுமார் 960 ஆட்கள்—ஏற்கெனவே மரித்திருந்தார்கள்! திட்டமிட்டப்படி, அந்த யூத போர்வீரர்கள் தங்களுடைய சொந்த குடும்பங்களையும், பிறகு ஒருவரையொருவரும் குத்திக்கொன்றார்கள். கடைசியாக இருந்த நபர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.a எது அவர்களை இந்தப் பயங்கரமான ஒட்டுமொத்த படுகொலைக்கும், தற்கொலைக்கும் வழிநடத்தியது?
அழியாத ஆத்துமாவில் வைத்த நம்பிக்கைத்தான் முக்கிய காரணியாக இருந்தது என்பதே சமகாலத்து வரலாற்று ஆசிரியர் ஜோசிபஸின் கருத்தாகும். மசாடாவில் ரோம ஆதிக்கத்தை எதிர்த்த வெறிகொண்ட யூதர்களின் தலைவரான எலியசார் பென் ஜார் தமது ஆட்களை, ரோமர் கைகளில் மரிப்பதைவிட அல்லது அடிமைகளாவதைவிட தற்கொலை செய்தல் அதிக கௌரவமாக இருக்கும் என்று முதலில் வற்புறுத்த முயன்றார். அவர்கள் தயங்கியதைப் பார்த்தவுடன், அவர் ஆத்துமாவைப்பற்றி உணர்ச்சி ததும்பும் பேச்சு ஒன்றில் இறங்கிவிட்டார். உடல் வெறுமனே ஆத்துமாவுக்கு ஒரு சுமையாகவும், ஒரு சிறையாகவும் இருப்பதாக அவர்களிடத்தில் அவர் சொன்னார். “ஆனால், அதனை பூமிக்கு இழுத்துவந்து, கூட்டில் அடைத்து வைத்த உடலிலிருந்து விடுதலை அடைந்தவுடன், அதனுடைய சொந்த இடத்திற்கே அந்த ஆத்துமா திரும்புகிறது, பிறகு உண்மையில் அது வானுலக இன்பத்தை அனுபவிக்கும் வல்லமையிலும், முழுமையான வரையறையற்ற வலிமையிலும் பங்குபெறுகிறது, கடவுளைப்போலவே மனித கண்களுக்குப் புலப்படாமல் நிலைத்திருக்கிறது” என்பதாக அவர் தொடர்ந்து கூறினார்.
அதன் பிரதிபலிப்பு? எலியசார் இந்தப் பாணியில் ஒரு விவரமான பேச்சை கொடுத்தப்பின், “கேட்டுக்கொண்டிருந்தோர் இடைமறித்து பேச ஆரம்பித்தார்கள், கட்டுக்கடங்காத உற்சாகத்தோடு, அந்தச் செயலை நிறைவேற்ற விரைந்தார்கள்” என்பதாக ஜோசிபஸ் அறிவிக்கிறார். ஜோசிபஸ் மேலும் கூறுகிறார்: “அதற்குக் கட்டுப்பட்டவர்களைப்போல் அவர்கள் விரைந்தோடினார்கள், செயலை நிறைவேற்றுவதில் மற்றவரைக்காட்டிலும் தான் முந்திகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்துடன் ஒவ்வொருவரும் இருந்தார்கள், . . . ஆகவே, தங்கள் மனைவிகளையும், தங்கள் பிள்ளைகளையும், தங்களையும் கொன்றுபோட தடுக்கமுடியாத ஆவல் அவர்களைப் பிடித்துக்கொண்டது.”
ஆத்துமா அழியாமை என்னும் இந்தக் கோட்பாடு, மனிதன் கொண்டிருக்கும் மரணத்தைப்பற்றிய இயல்பான கருத்தை எப்படி முழுமையாக மாற்றக்கூடும் என்று விளக்குவதற்கு இந்தப் பயங்கரமான உதாரணம் உதவுகிறது. மரணத்தை மனிதனின் மிக மோசமான ஒரு சத்துருவாக அல்ல, ஆனால் மேம்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க ஆத்துமாவை விடுவிக்கும் வெறும் ஒரு வாசலாக நோக்கவேண்டும் என்று இதன்பேரில் நம்பிக்கையுள்ளவர்கள் போதிக்கப்படுகிறார்கள். ஆனால் ரோம ஆதிக்கத்தை எதிர்த்த வெறிகொண்ட அந்த யூதர்கள் ஏன் இவ்விதம் நம்பினார்கள்? தன்னுள் உணர்வுள்ள ஒரு ஆவியை மனிதன் கொண்டிருப்பதாகவும், மரணத்திற்குப்பின் தொடர்ந்து வாழ்வதற்காக அந்த ஆத்துமா தப்பித்து செல்வதாகவும் ஒருவேளை அவர்களின் பரிசுத்த எழுத்துக்களாகிய எபிரெய வேதாகமம் போதிக்கின்றதோ என பலர் ஊகிக்கலாம். அது உண்மைதானா?
எபிரெய வேதாகமத்தில் ஆத்துமா
சுருங்கக்கூறின் இல்லை என்பதே பதிலாக உள்ளது. மிகச் சரியாகவே, பைபிளின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில், ஆத்துமா என்பது நீங்கள் பெற்றிருக்கும் ஏதோ ஒன்று அல்ல, நீங்களே அதுவாக இருக்கிறீர்கள் என்று நாம் சொல்லப்படுகிறோம். நாம் முதல் மனிதனாகிய ஆதாமின் சிருஷ்டிப்பைப்பற்றி படிக்கிறோம்: ‘மனுஷன் ஜீவ ஆத்துமா ஆனான்.’ (ஆதியாகமம் 2:7) இங்கே ஆத்துமா என்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய வார்தையாகிய நெபெஷ், எபிரெய வேதாகமத்தில் 700 தடவைக்கும் அதிகம் வருகிறது, மனிதனின் ஒரு தனிப்பட்ட, ஆவியான, ஆன்மீகத்தின் பாகம் என்ற கருத்தை ஒருபோதும் ஒருமுறைக்கூட தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக, ஆத்துமா என்பது உறுதியான, பருப்பொருளான, சரீரமான ஒன்றாகும்.
உங்களுடைய சொந்த பைபிளில் பின்வரும் இடக்குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ள வசனங்களைப் பார்க்கவும், ஏனென்றால் அவை ஒவ்வொன்றிலும் எபிரெய வார்த்தையாகிய நெபெஷ் காணப்படுகிறது. ஆத்துமா ஆபத்தையும் அபாயத்தையும் எதிர்ப்படலாம், அது கடத்திச்செல்லவும்படலாம் (உபாகமம் 24:7; நியாயாதிபதிகள் 9:17; 1 சாமுவேல் 19:11, NW); பொருட்களைத் தொடலாம் (யோபு 6:7); இரும்பில் அடைக்கப்படலாம் (சங்கீதம் 105:18); புசிக்க ஆசைப்படலாம், உபவாசத்தால் உபத்திரவப்படலாம், பசியினாலும் தாகத்தாலும் மயக்கமடையலாம், சஞ்சலத்தின் விளைவாக இளைத்துப்போகும் வியாதியால் அல்லது தூக்கமின்மை வியாதியாலும்கூட துன்பப்படலாம் என்று அவை தெளிவாகவே காட்டுகின்றன. (உபாகமம் 12:20, NW; சங்கீதம் 35:13; 69:10; 106:15; 107:8; 119:28) வேறுவார்த்தையில் சொன்னால், உங்கள் ஆத்துமா என்பது நீங்களே, நீங்களாகவே இருக்கிறீர்கள் என்ற காரணத்தினால் உங்கள் ஆத்துமாவால் எதையும் அனுபவிக்க முடியும்.b
அப்படியென்றால், அதன் அர்த்தம் ஆத்துமா உண்மையில் சாகும் என்பதா? ஆம். எபிரெய வேதாகமத்தில் மனித ஆத்துமாக்கள் அழியாதவை என்பதற்கு முரணாக, தவறிழைத்ததற்காக “கொல்லப்படும்” அல்லது மரணதண்டனை அளிக்கப்படும், மரணம் விளைவிக்கும்படி அடிக்கப்படும், கொலைசெய்யப்படும், அழிக்கப்படும், துண்டு துண்டாக பீறிப்போடப்படும் என்பதாகச் சொல்லப்படுகிறது. (யாத்திராகமம் 31:14; உபாகமம் 19:6; 22:26, NW; சங்கீதம் 7:2) “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று எசேக்கியேல் 18:4 சொல்கிறது. தெளிவாகவே, நாம் அனைவரும் பாவம் செய்வதால், மரணம் என்பது மனித ஆத்துமாக்களுக்கு ஒரு பொதுவான முடிவாக இருக்கிறது. (சங்கீதம் 51:5) பாவத்திற்கான தண்டனை மரணம் என்பதாக முதல் மனிதனாகிய ஆதாமுக்குச் சொல்லப்பட்டதே தவிர—ஆவி உலகிற்கும் அழியாமைக்கும் மாற்றப்படுவதாக அல்ல. (ஆதியாகமம் 2:17) அவன் பாவம் செய்தபோது, அறிவிக்கப்பட்ட தண்டனையானது: “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) ஆதாமும் ஏவாளும் மரித்தபோது, பைபிள் அடிக்கடி குறிப்பிடுவதைப்போல், அவர்கள் வெறுமனே ‘செத்த ஆத்துமாக்களாக’ அல்லது ‘பிரேதமான ஆத்துமாக்களாக’ ஆனார்கள்.—எண்ணாகமம் 5:2; 6:6, NW.
எபிரெய வேதாகமத்தின் ஆத்துமா என்பதைப்பற்றி அமெரிக்கானா கலைக்களைஞ்சியம் இவ்வாறு சொல்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை: “மனிதனைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் கருத்து ஒருமையான ஒன்று (a unity), ஆத்துமாவும் உடலும் ஒன்றுகலக்கும் ஒன்று (a union) அல்ல.” அது மேலும் கூறுகிறது: “நெபெஷ் . . . ஒருபோதும் உடலிலிருந்து தனியே செயல்படும் ஒன்று என புரிந்துகொள்ளப்படவில்லை.”
ஆகவே, உண்மையுள்ள யூதர்கள் மரணத்தை என்னவென்று நம்பினார்கள்? எளிதாக சொன்னால், உயிருக்கு எதிர்ச்சொல்லாக மரணம் இருக்கிறது என்று அவர்கள் நம்பினார்கள். ஆவி அல்லது உயிர் சக்தி மனிதனைவிட்டு பிரியும்போது என்ன நடக்கிறது என்பதை சங்கீதம் 146:4 சொல்கிறது: “அவன் ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.”c அவ்விதமே, ராஜாவாகிய சாலொமோன் மரித்தவர்கள் “ஒன்றும் அறியார்கள்” என்று எழுதினார்.—பிரசங்கி 9:5.
அப்படியென்றால், மசாடாவில் ரோம ஆதிக்கத்தை எதிர்த்த வெறிகொண்ட யூதர்களைப் போன்றே முதல் நூற்றாண்டு யூதர்கள் பலர் ஆத்துமா அழியாமையில் ஏன் அவ்வளவு உறுதியாய் நம்பினார்கள்?
கிரேக்கர் செல்வாக்கு
இந்தக் கருத்தை பைபிளிலிருந்து அல்ல, ஆனால் கிரேக்கர்களிடமிருந்து யூதர்கள் பெற்றார்கள். பொ.ச.மு. ஏழாம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்தக் கோட்பாடு, புதிரான கிரேக்க மதத்தின் கருத்து வேறுபாட்டுக் குழுக்களிடமிருந்து கிரேக்க தத்துவத்திற்குச் சென்றதாகத் தெரிகிறது. கெட்ட ஆத்துமாக்கள் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கையில் தண்டனையைப் பெறும் என்ற கருத்து அதிக ஆர்வத்தைத்தூண்டுவதாய் நீண்டகாலம் இருந்துவந்திருந்தது, அந்தக் கருத்து நிலைநாட்டப்பட்டு, பரவியது. ஆத்துமாவின் துல்லியமான இயல்பின் பேரில் தத்துவஞானிகள் முடிவின்றி விவாதித்தார்கள். மரிக்கும் சமயத்தில் ஆத்துமா கேட்கக்கூடிய அளவில் ரீங்காரம்போன்ற மென்னொலியையும், கிறீச்சொலியையும் அல்லது சலசலப்பொலியையும் எழுப்பி விரைவாக இடம்பெயர்ந்து செல்கிறது என்பதாக ஹோமர் உரிமைபாராட்டினார். ஆத்துமா உண்மையில் எடையைக் கொண்டிருப்பதாகவும், ஆகவே அது ஒரு மிகச் சிறிய அளவையை உடைய பொருள் என்றும் கிரேக்க தத்துவஞானிகள் கூறினார்கள்.d
ஆனால், பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டின் கிரேக்க தத்துவஞானி பிளேட்டோவே ஆத்துமா அழியாமையைப்பற்றி வாதிட்டவரில் மிகப் பெரியவராக ஒருவேளை இருந்திருக்கலாம். அவருடைய ஆசான் சாக்கரட்டீஸின் மரணத்தைப்பற்றிய அவரது விவரிப்பு, பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு மசாடாவில் ரோம ஆதிக்கத்தை எதிர்த்த வெறிகொண்ட யூதர்களின் நம்பிக்கைகளை அதிகளவில் ஒத்திருந்ததை வெளிக்காட்டியது. ஆஸ்கார் குல்மேன் என்ற அறிஞர் சொல்வதைப்போல், “சாக்கரட்டீஸ் எவ்வாறு முழுமையான சாந்தியோடும் நிதானத்தோடும் தனது மரணத்தைத் தழுவுகிறார் என்பதைப் பிளேட்டோ நமக்குக் காட்டுகிறார். சாக்கரட்டீஸின் மரணம் ஓர் அழகான மரணம். இதில் மரண திகில் ஒன்றும் காணப்படவில்லை. சாக்கரட்டீஸால் மரணத்திற்கு பயப்படமுடியவில்லை, ஏனென்றால், அது உண்மையில் நம் உடம்பிலிருந்து நம்மை விடுவிக்கிறது. . . . மரணம் என்பது ஆத்துமாவின் நெருங்கிய நண்பன். அவ்வாறே அவர் போதிக்கிறார்; ஆகவே தனது போதனைக்கு அற்புதமான இசைவோடு அவர் மரிக்கிறார்.”
தெளிவாகவே, அது மெக்கபியர் காலத்தில், கிறிஸ்து பிறப்பதற்கு முன் இரண்டாம் நூற்றாண்டில்தான் கிரேக்கர்களிடமிருந்து யூதர்கள் இந்தப் போதனையை ஒன்றிணைக்க துவங்கினார்கள். பொ.ச. முதல் நூற்றாண்டில் வலிமையான யூத மத தொகுதியினர்—பரிசேயர் மற்றும் யூதத்துறவியர்—இந்தக் கோட்பாட்டை தழுவிக்கொண்டார்கள் என்பதாக ஜோசிபஸ் நமக்குக் கூறுகிறார். அநேகமாக அந்தச் சகாப்தத்தில் இயற்றப்பட்டிருக்கும் சில கவிதைகள் அதே நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன.
இருப்பினும், இயேசு கிறிஸ்துவைப் பொறுத்தமட்டில் என்ன? இந்தக் கருத்தை அவரும் அவரைப் பின்பற்றியவர்களும் கிரேக்க மதத்திலிருந்து அவ்விதமே போதித்தார்களா?
ஆத்துமாவைப்பற்றிய பூர்வ கிறிஸ்தவர்களின் கருத்து
கிரேக்கர்கள் கருதியதைப்போல் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஆத்துமாவை கருதவில்லை. உதாரணத்திற்கு, இயேசுவினுடைய நண்பர் லாசருவின் மரணத்தை சிந்தித்துப்பாருங்கள். மரணத்தின்போது சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் விரைந்து இடம்பெயர்ந்து செல்லக்கூடிய ஓர் ஆத்துமாவை ஒருவேளை லாசரு உடையவராக இருந்திருந்தால், யோவான் 11-ம் அதிகாரத்தின் விவரப்பதிவு வேறுவிதமாக இருந்திருக்காதா? ஒருவேளை லாசரு பரலோகத்தில் உயிரோடும், நன்றாகவும், உணர்வோடும் இருந்திருந்தால் நிச்சயம் இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடத்தில் சொல்லியிருப்பார்; அதற்குமாறாக, எபிரெய வேதாகமத்திற்கு இசைவாக லாசரு தூங்கிக்கொண்டிருப்பதாகவும், உணர்வற்று இருப்பதாகவும் அவர்களிடத்தில் கூறினார். (வசனம் 11) தமது நண்பர் ஒருவேளை அருமையான புதிய வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தால் இயேசு நிச்சயம் மகிழ்ந்திருப்பார்; அதற்குப்பதிலாக, இந்த மரணத்தின் காரணமாக அவர் பொதுப்படையாகவே அழுவதை நாம் காண்கிறோம். (வசனம் 35) ஒருவேளை லாசருவின் ஆத்துமா பரலோகத்தில் இருந்திருந்தால், மகிழ்ச்சிகரமான அழியாமையின் களிப்பில் பங்குபெற்றுக்கொண்டிருந்தால், வியாதிப்படும், மரணம் அடையும் மனிதவர்க்கத்தின் மத்தியில் இன்னும் சில வருடங்கள் வாழ்வதற்காக, அபூரண சரீர உடலில் “சிறைவைக்க” அவரை திரும்பவும் கூப்பிடும் அளவுக்கு இயேசு ஒருபோதும் அவ்வளவு கொடியவராக இருக்கமாட்டார்.
விடுவிக்கப்பட்ட, உடலினின்று பிரிந்து ஓர் ஆவியாக இருந்த தனது அந்த அருமையான நான்கு நாட்களைப்பற்றி ஆர்வமூட்டும் கதைகளோடு லாசரு மரணத்திலிருந்து திரும்பினாரா? இல்லை, அவர் அவ்வாறு வரவில்லை. சொல்லால் விவரிக்க முடியாத ஒன்றாக அந்த மனிதனின் அனுபவம் இருந்ததே இதற்குக் காரணம் என்று ஆத்துமா அழியாமையில் நம்பிக்கையுள்ளவர்கள் பிரதிபலிக்கலாம். ஆனால் அந்த விவாதம் நம்பவைப்பதில் தோல்வியடைகிறது; பார்க்கப்போனால், குறைந்தபட்சம் தான் பெற்ற அனுபவம் விவரிக்க முடியாத ஒன்று என்பதையாவது தனது அன்பானவர்களிடத்தில் சொல்லியிருந்திருக்கலாம், லாசரு சொல்லியிருக்கமாட்டாரா என்ன? மாறாக, மரித்திருக்கையில் எந்தவொரு அனுபவமும் கொண்டிருந்ததாக லாசரு எதுவும் சொல்லவில்லை. இதை யோசித்துப்பாருங்கள்—வேறு எதைக்காட்டிலும் மனித ஆர்வத்தின் முக்கிய பொருளாக இருக்கும் ஒரு காரியத்தின் பேரில்—மரணம் எப்படி இருக்கும் என்பதன் பேரில் அமைதியாக இருத்தல்! அந்த அமைதியை ஒரே ஒரு வழியில் மாத்திரம் விளக்க முடியும். சொல்வதற்கு ஒன்றுமில்லை. மரித்தவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், உணர்வற்றிருக்கிறார்கள்.
ஆகவே, பைபிள் மரணத்தை ஆத்துமாவின் ஒரு நண்பனாகவும், உயிர் வாழ்க்கையின் பல படிகளுக்கு இடையே இடம்பெயர்வதற்கான சடங்காகவும் அறிமுகப்படுத்துகிறதா? இல்லையே! அப்போஸ்தலனாகிய பவுலைப்போன்ற உண்மை கிறிஸ்தவர்களுக்கு மரணம் ஒரு நண்பனாக இருக்கவில்லை; அது ‘கடைசிச் சத்துருவாக’ இருந்தது. (1 கொரிந்தியர் 15:26) கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்ததன் விளைவாகவும், பாவத்தின் நேரடியான விளைவாகவும் மரணம் இருப்பதால், கிறிஸ்தவர்கள் அதனை இயற்கையான ஒன்று என்பதாக அல்ல, ஆனால் பயங்கரமான, இயற்கைக்கு முரணான ஒன்று என்பதாக நோக்குகிறார்கள். (ரோமர் 5:12; 6:23) மனிதவர்க்கத்திற்கான கடவுளுடைய ஆதி நோக்கத்தின் பாகமாக அது ஒருபோதும் இருக்கவில்லை.
இருப்பினும், ஆத்துமாவின் மரணத்துக்கு வரும்போது உண்மை கிறிஸ்தவர்கள் நம்பிக்கை ஏதும் இல்லாதவர்களாக இல்லை. உயிர்த்தெழுதல்தான் மரித்த ஆத்துமாக்களுக்கான நம்பிக்கை என்பதை நமக்கு உண்மையில் படமாகக் காட்டக்கூடிய பைபிளின் விவரப்பதிவுகள் பலவற்றில் லாசருவின் உயிர்த்தெழுதலும் ஒன்றாகும். இரு வகையான உயிர்த்தெழுதலைப்பற்றி பைபிள் போதிக்கிறது. கல்லறையில் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதவர்க்கத்தின் மிகத் திரளானவர்களுக்கு, நீதிமான்களாக இருந்தாலும் சரி அல்லது அநீதிமான்களாக இருந்தாலும் சரி இங்கே பூமியில், பரதீஸில் நித்திய வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கை இருக்கிறது. (லூக்கா 23:43; யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) “சிறுமந்தையே” என்று இயேசு குறிப்பிட்ட ஒரு சிறு தொகுதியினருக்குப் பரலோகத்தில் ஆவியாட்களாக அழியாத வாழ்க்கைக்கு உயிர்த்தெழுதல் இருக்கிறது. இவர்களில், கிறிஸ்துவின் அப்போஸ்தலரும் அடங்குவர், அவர்கள் கிறிஸ்து இயேசுவுடன் சேர்ந்து மனிதவர்க்கத்தின்மீது ஆளுகைசெய்து, அவர்களைப் பரிபூரணநிலைக்குத் திரும்பவும் நிலைநாட்டுவார்கள்.—லூக்கா 12:32; 1 கொரிந்தியர் 15:53, 54; வெளிப்படுத்துதல் 20:6.
அப்படியென்றால், ஏன் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் உயிர்த்தெழுதலை போதிக்காமல், ஆனால் மனித ஆத்துமா அழியாமையைப் போதிப்பதை நாம் காண்கிறோம்? 1959-ன் சமயத்தில், ஹார்வார்டு தியாலஜிக்கல் ரிவ்யு என்ற பத்திரிகையில் இறைமையியல் வல்லுநர் வெர்னர் யெக்கர் கொடுத்த பதிலை சிந்தித்துப்பார்க்கவும்: “கிறிஸ்தவ கோட்பாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய உண்மை என்னவென்றால், கிறிஸ்தவ இறைமையியலின் தந்தையாகிய ஆரிகன், அலெக்சாண்டரியா பள்ளியில் பிளேட்டோவின் கோட்பாட்டை போதிக்கும் ஒரு தத்துவஞானியாக இருந்தார். ஆத்துமாவைப்பற்றிய முழு போதனைகளின் தொகுப்பை பிளேட்டோவினிடத்திலிருந்து எடுத்து கிறிஸ்தவ கோட்பாட்டினுள் சேர்த்துவிட்டார்.” ஆகவே நூற்றாண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் என்ன செய்தார்களோ அதை அப்படியே சர்ச் செய்தது! அவர்கள் கிரேக்க தத்துவத்தை ஆதரித்து வேதாகம போதனைகளைக் கைவிட்டனர்.
கோட்பாட்டின் உண்மையான மூலங்கள்
ஆத்துமா அழியாமை கோட்பாட்டை தற்காக்க, இப்போது சிலர் கேட்கக்கூடும், உலகின் இத்தனை அநேக மதங்களால் அதே கோட்பாடு ஏதேனும் ஒரு வகையில் ஏன் போதிக்கப்படுகிறது? இவ்வுலகின் மதம் சார்ந்த சமுதாயங்களில் ஏன் இந்தப் போதனை இவ்வளவு பரவலாக இருக்கிறது என்பதற்குச் சரியான காரணத்தை வேதாகமம் அளிக்கிறது.
‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என்று பைபிள் நமக்குச் சொல்கிறது மற்றும் சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்று குறிப்பாக அடையாளம் காட்டுகிறது. (1 யோவான் 5:19; யோவான் 12:31) தெளிவாகவே, இவ்வுலக மதங்கள் சாத்தானுடைய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டவையாக இருக்கவில்லை. அதற்கு மாறாக, அவை இன்றைய உலகின் தொல்லைக்கும் சச்சரவுக்கும் பெரும் பங்கை அளித்திருக்கின்றன. ஆத்துமா என்ற விஷயத்தின்பேரில், சாத்தானுடைய எண்ணத்தையே அவை மிகத் தெளிவாய் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது. அது எப்படி?
முதலாவதாக சொல்லப்பட்ட அந்த முதல் பொய்யைச் சற்று நினைத்துப்பாருங்கள். தமக்கு எதிராக அவர்கள் பாவம் செய்தால் அதன் விளைவு மரணமாக இருக்கும் என்று கடவுள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சொல்லியிருந்தார். ஆனால் சாத்தான் ஏவாளுக்கு உறுதியளித்தான்: “நீங்கள் சாகவே சாவதில்லை.” (ஆதியாகமம் 3:4) உண்மையில், ஆதாமும் ஏவாளும் மரிக்கவே செய்தார்கள்; கடவுள் சொல்லியதைப்போல் அவர்கள் மண்ணுக்குத் திரும்பினார்கள். ‘பொய்க்குப் பிதாவாக’ இருக்கும் சாத்தான் தன்னுடைய முதல் பொய்யை விட்டுவிடவில்லை. (யோவான் 8:44) பைபிள் கோட்பாட்டிலிருந்து விலகிச்செல்லும் அல்லது நேரடியாகவே அதனை புறக்கணிக்கும் எண்ணற்ற மதங்களில் இன்னமும் அதே கருத்து பரவியிருக்கிறது: ‘நீங்கள் சாகவே சாவதில்லை. உங்கள் உடல் அழியலாம், ஆனால் உங்கள் ஆத்துமா வாழ்ந்துகொண்டேயிருக்கும், என்றென்றும்—கடவுளை போலவே!’ ஆர்வத்தைத்தூண்டும் விதத்தில், சாத்தான் ஏவாளிடத்தில், அவள் “கடவுளை போல்” இருப்பாள் என்பதாகக் கூறினானே!—ஆதியாகமம் 3:5, NW.
பொய்களின்மீதோ மனித தத்துவங்களின்மீதோ அல்லாமல் சத்தியத்தை ஆதாரமாக கொண்ட நம்பிக்கையைப் பெற்றிருப்பது எவ்வளவு நன்மையானது. அழியாத ஆத்துமாவின் இருப்பிடத்தைப்பற்றி கவலைப்படுவதற்கு மாறாக, நமது மரித்த அன்பானவர்கள் கல்லறையில் உணர்வற்றவர்களாய் இருக்கிறார்கள் என்று திடநம்பிக்கையுடன் இருப்பது எவ்வளவு நன்மையானது! மரித்தோரின் இந்த உறக்கம் நம்மை அச்சுறுத்தவோ துயரில் ஆழ்த்தவோ தேவையில்லை. ஒரு விதத்தில், மரித்தவர்கள் பாதுகாப்பாக ஓய்வெடுக்கும் இடத்தில் இருப்பதாக நாம் கருதலாம். ஏன் பாதுகாப்பு? ஏனென்றால், மரித்தவரில் எவரை யெகோவா நேசிக்கிறாரோ அவர்கள் ஒரு விசேஷமான கருத்தில் பிழைத்திருக்கிறவர்களாக பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (லூக்கா 20:38) அவர்கள் அவரது நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அது உண்மையிலேயே ஆறுதலான எண்ணமாக இருக்கிறது, ஏனென்றால் அவரது நினைவுக்கு எல்லையே கிடையாது. எண்ணற்ற கோடானுகோடி அருமையான மனிதர்களை உயிருக்குக் கொண்டுவரவும், அவர்களுக்கு பரதீஸ் பூமியில் நித்தியத்திற்கும் வாழ வாய்ப்பை கொடுக்கவும் ஆர்வமாக அவர் இருக்கிறார்.—யோபு 14:14, 15-ஐ ஒப்பிடுக.
யெகோவாவின் அனைத்து வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேறுவதைப்போலவே, உயிர்த்தெழுதலின் அந்த அற்புதமான நாள் வரும். (ஏசாயா 55:10, 11) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைச் சற்று யோசித்துப்பாருங்கள்: “ஆனால் உமது மரித்தோர் பிழைப்பார்கள், அவர்களது தேகங்கள் மீண்டும் எழும்பும். பூமியில் உறங்கிக்கொண்டிருப்போர் விழித்து, ஆனந்தமாய் கெம்பீரிப்பார்கள்; உமது பனி ஒளிவீசும் பனியைப்போல் இருக்கும், நீண்டகாலமாக மரித்திருப்போரை பூமி பிறப்பித்து கொண்டுவரும்.” (ஏசாயா 26:19, தி நியூ இங்கிலிஷ் பைபிள்) ஆகவே, கல்லறையில் தூங்கிக்கொண்டிருப்போர், ஒரு குழந்தை அதன் தாயின் கர்ப்பத்தில் பாதுகாப்பாக இருப்பதைப்போல் இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் ‘பிறக்க’ இருக்கிறார்கள், பரதீஸிய பூமியில் மீண்டும் உயிருக்குக் கொண்டுவரப்படுவார்களே!
இதைக்காட்டிலும் மேம்பட்ட நம்பிக்கை இருக்க முடியுமா என்ன?
[அடிக்குறிப்புகள்]
a தகவலின்படி மறைவிடத்தில் இரண்டு பெண்களும் ஐந்து பிள்ளைகளும் தப்பித்துக்கொண்டார்கள். பிற்பாடு அந்தப் பெண்கள் சிறைபிடித்த ரோமர்களிடத்தில் விவரங்களைக் கூறினார்கள்.
b “ஆவி” என்பதற்கான ரூவாக் என்ற எபிரெய வார்த்தையின் அர்த்தம் “மூச்சு” அல்லது “காற்று” என்பதாகும். மனிதர்களோடு தொடர்புபடுத்துகையில், அது உணர்வுள்ள ஆவி ஆளை குறிப்பிடுவதில்லை, ஆனால் அதற்கு மாறாக, தி நியூ இன்டர்நேஷனல் டிக்ஷனரி ஆஃப் நியூ டெஸ்ட்மென்ட் தியாலஜி சொல்வதைப்போல், “தனிநபரின் உயிர் சக்தியை” குறிப்பிடுகிறது.
c இத்தகைய விசித்திரமான ரீதியில் சிந்தித்தது இவர் மாத்திரம் அல்ல. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், எண்ணற்ற ஆட்களுடைய ஆத்துமாக்களின் எடையை மரிப்பதற்குச் சற்று முன்பிருந்த அவர்களின் எடையிலிருந்து மரித்த உடனே இருந்த எடையிலிருந்து கழிப்பதன் மூலம் எடைப்போட்டதாக ஒரு விஞ்ஞானி உண்மையில் உரிமைபாராட்டினார்.
d உண்மையில் அதிக விரிவான அர்த்தத்தில் உபயோகிக்கப்படும் பல வார்த்தைகளைப்போன்றே, நெபெஷ் என்ற வார்த்தையும்கூட அர்த்தத்தில் பல நுட்பமான வித்தியாசங்களைக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, விசேஷமாக ஆழமான உணர்வுகளைக் குறிப்பிடுகையில், அது உள்ளான ஆளைக் குறிப்பிடலாம். (1 சாமுவேல் 18:1) ஒரு ஆத்துமாவாக ஒருவர் அனுபவிக்கும் உயிரையும்கூட அது குறிப்பிடலாம்.—1 இராஜாக்கள் 17:21-23.
[பக்கம் 7-ன் படம்]
மசாடாவில் ரோம ஆதிக்கத்தை எதிர்த்த வெறிகொண்ட அந்த யூதர்கள், மரணம் தங்களது ஆத்துமாக்களை விடுவிக்கும் என்பதாக நம்பினார்கள்