மரணத்திற்குப் பின் வாழ்க்கை—எவ்வாறு, எங்கே, எப்போது?
மானிடரின் மரணம் வாழ்க்கையை என்றென்றுமாக கட்டாயமாய் முடிவுக்குக் கொண்டுவருவதில்லை என்பதற்கான தம் தனிப்பட்ட உத்தரவாதத்தை மனிதனின் படைப்பாளரும் உயிரளிப்பவருமாய் இருப்பவர் அளிக்கிறார். கூடுதலாக, ஒரு குறுகிய காலப்பகுதி மறுபடியும் வாழ்வது மட்டுமல்லாமல், மறுபடியும் மரணத்தை ஒருபோதும் எதிர்ப்பட வேண்டிய எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வது கூடியகாரியம் என்பதை கடவுள் நமக்கு உறுதியளிக்கிறார்! அப்போஸ்தலனாகிய பவுல் அதைத் தெளிவாகவும் அதேசமயத்தில் நம்பிக்கையோடும் கூறினார்: ‘அந்த மனுஷனை [இயேசு கிறிஸ்து] மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் [கடவுள்] விளங்கப்பண்ணினார்.’—அப்போஸ்தலர் 17:31.
இது இன்னும் மூன்று அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்காமலேயே விடுகிறது: மரித்த ஒரு நபர் மறுபடியும் எவ்வாறு உயிருடன் வரமுடியும்? இது எப்போது நடைபெறும்? அந்தப் புதிய வாழ்க்கை எங்கே இருக்கும்? இந்தக் கேள்விகளுக்கு உலகமுழுவதிலும் பல்வேறு பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் மரணத்தின்போது மனிதர்களுக்கு என்ன நேரிடுகிறது என்பதை திருத்தமாக புரிந்துகொள்வதே இந்த விஷயத்தின் உண்மையை நிர்ணயிப்பதற்கு முக்கியமான திறவுகோலாகும்.
இதற்கு பதில் சாவாமையா?
எல்லா மனிதருடைய ஒரு பாகம் சாவாமையுள்ளது என்றும் அவர்களுடைய உடல்கள் மட்டும்தான் மரித்துப்போகும் என்றும் ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது. நீங்கள் நிச்சயமாகவே அப்படிப்பட்ட ஒரு உரிமை பாராட்டலை கேட்டிருப்பீர்கள். சாவாமையுள்ளது என்று உரிமை பாராட்டப்படும் இந்தப் பகுதி “ஆத்துமா” அல்லது “ஆவி” என்று பல்வேறு விதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல் மரித்த பிறகு அது தப்பிப்பிழைத்து வேறொரு இடத்தில் தொடர்ந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது. வெளிப்படையாகச் சொன்னால், அப்படிப்பட்ட நம்பிக்கை பைபிளிலிருந்து ஆரம்பமாகவில்லை. பண்டையகால எபிரெய பைபிள் கதாபாத்திரங்கள் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கைக்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர் என்பது உண்மையே, ஆனால் அவர்களிலிருந்து ஏதோவொரு சாவாமையுள்ள பாகம் தப்பிப்பிழைப்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. உயிர்த்தெழுதல் என்னும் அற்புதத்தின் மூலம் மறுபடியும் பூமியின்மீது எதிர்காலத்தில் உயிரோடு வருவதற்கான காலத்திற்காக அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தனர்.
மரித்தோர் எதிர்காலத்தில் உயிர்த்தெழுவர் என்பதன் பேரில் விசுவாசம் வைத்திருந்தோரில் கோத்திரப்பிதாவாகிய ஆபிரகாம் தலைசிறந்த முன்மாதிரியாய் இருக்கிறார். ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்கை பலியாக அளிப்பதற்கு மனமுவந்து முன்வந்ததை விவரித்து, எபிரெயர் 11:17-19 நமக்கு இவ்வாறு சொல்கிறது: “மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். . . . மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, . . . மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்,” ஏனென்றால் ஈசாக்கு பலியிடப்பட வேண்டும் என்று கடவுள் தேவைப்படுத்தவில்லை. பிற்பட்ட காலத்தில் (ஒரு ஆவி மண்டலத்தில் உடனடியாக வாழ்க்கையை தொடருவதற்குப் பதிலாக) அவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று இஸ்ரவேலர் மத்தியிலிருந்த ஆரம்பகால நம்பிக்கைக்கு கூடுதலாய் சான்றளித்து, தீர்க்கதரிசியாகிய ஓசியா எழுதினார்: “அவர்களை நான் பாதாளத்தின் [மனிதவர்க்கத்தின் பொதுவான பிரேதக்குழி] வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்.”—ஓசியா 13:14.
ஆகவே, இயல்பாய் அமைந்திருக்கும் மனித சாவாமை என்ற கருத்து யூதருடைய சிந்தனை மற்றும் நம்பிக்கைக்குள் எப்போது வந்தது? “ஆத்துமா சாவாமையுள்ளது என்ற கோட்பாடு ஒருவேளை கிரேக்கரின் செல்வாக்கினால் யூத மதத்துக்குள் வந்திருக்கலாம்” என்று என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், கடவுள்பற்றுள்ள யூதர்கள் கிறிஸ்துவின் காலம்வரை எதிர்கால உயிர்த்தெழுதலின் பேரில் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருந்தனர், அதற்காக எதிர்பார்த்திருந்தனர். தன் சகோதரன் லாசருவின் மரணத்தின்போது மார்த்தாள் இயேசுவோடு கொண்டிருந்த சம்பாஷணையிலிருந்து நாம் இதைத் தெளிவாகக் காணலாம்: “மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் [“மரித்திருக்கமாட்டான்,” தி.மொ.]. . . . இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.”—யோவான் 11:21-24.
மரித்தோரின் நிலை
மறுபடியும் இந்த விஷயத்தில் ஊகிக்கவேண்டிய அவசியம் எதுவுமில்லை. மரித்தோர் “உறங்கிய நிலையில்,” உணர்வற்றவர்களாய், எந்தவொரு உணர்ச்சியோ அல்லது அறிவோ இல்லாத நிலையில் இருக்கின்றனர் என்பதே பைபிளின் எளிய சத்தியம். அந்தச் சத்தியம் சிக்கலான, புரிந்துகொள்வதற்கு கடினமாயிருக்கும் விதத்தில் பைபிளில் கொடுக்கப்பட்டில்லை. எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடிய இந்த வேதவசனங்களை சிந்தித்துப் பாருங்கள்: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 10) “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.”—சங்கீதம் 146:3, 4.
அப்படியென்றால், மரணத்தை உறக்கம் என்று இயேசு கிறிஸ்து ஏன் குறிப்பிட்டுப் பேசினார் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை அப்போஸ்தலனாகிய யோவான் பதிவுசெய்கிறார்: “அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொ[ன்னார்].”—யோவான் 11:11-14.
முழு நபரும் மரிக்கிறார்
மனித மரணம் என்பது வெறும் உடல் மாத்திரம் மரிப்பதல்ல, அந்த முழு நபரும் மரிப்பதை உட்படுத்துகிறது. தெளிவான வேதாகம கூற்றுகளின்படி, மரணத்திற்குப்பின் அவனுடைய உடலைவிட்டு தப்பிச்செல்லும் ஒரு சாவாமையுள்ள ஆத்துமாவை மனிதன் உடையவனாக இல்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும். ஓர் ஆத்துமா மரிக்கவே மரிக்கும் என்று வேதவசனங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசேக்கியேல் 18:4) “சாகாதிருத்தல்” அல்லது “சாவாமை” மானிடருள் இயற்கையிலே வந்துவிடுவதாக சொல்லப்படும் வார்த்தைகள் எங்குமே காணப்படவில்லை.
பைபிளில் “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்படும் எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகளின் பேரில் ஆர்வத்தைத் தூண்டும் இந்தப் பின்னணியைப் புதிய கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) அளிக்கிறது: “பழைய ஏற்பாட்டில் ஆத்துமா என்பது நெபெஷ், புதிய ஏற்பாட்டில் [சைக்கீ] . . . அநேகமாக மூச்சுவிடுதல் என்னும் அர்த்தத்தை அளிக்கும் மூல வார்த்தை நெபெஷ் என்பதிலிருந்து வருகிறது, இவ்வாறாக . . . உயிரோடிருப்பவரையும் மரிப்பவரையும் மூச்சுதான் வேறுபடுத்துவதால், நெபெஷ் உயிரை அல்லது தன்னை அல்லது வெறுமனே தனி உயிரை அர்த்தப்படுத்தியது. . . . பழைய ஏற்பாட்டில் உடல் என்றும் ஆத்துமா என்றும் இருகூறாதல் [இரு பகுதிகளாக பிரித்தல்] கிடையாது. இஸ்ரவேலன் காரியங்களைத் தெளிவாகவும், அவற்றின் முழுமையோடும் பார்த்தான்; எனவே அவன் மனிதரை நபர்களாக கருதினானே தவிர கூட்டுப்பொருளாகக் கருதவில்லை. நெபெஷ் என்னும் சொல் நமது வார்தையில் ஆத்துமா என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், ஆத்துமா என்பது உடலிலிருந்து அல்லது தனிநபரிலிருந்து வேறுபட்ட ஒன்று என்று ஒருபோதும் அர்த்தப்படுத்துவதில்லை. . . . புதிய ஏற்பாட்டில் [சைக்கீ] என்ற சொல் நெபெஷிற்கு இணையான சொல்லாகும். இது உயிரின் மூலத்தை, உயிரையே அல்லது உயிர் ஜீவியை அர்த்தப்படுத்தலாம்.”
இவ்வாறாக, முன்பு உயிரோடு இருந்த நபர் அல்லது உயிரோடு இருந்த ஆத்துமா மரணத்தின்போது உயிர் வாழ்வதை நிறுத்திவிடுவது உங்களால் புரிந்துகொள்ள முடியும். உடலை புதைப்பதனால் மெல்லமெல்ல அல்லது எரிப்பதனால் விரைவாக உடலானது திரும்பவும் “மண்ணுக்கு” போகிறது அல்லது பூமியின் மூலக்கூறுகளாக ஆகிறது. யெகோவா ஆதாமிடத்தில் கூறியதாவது: “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) அப்படியென்றால், மரணத்திற்குப் பின் வாழ்க்கை எவ்வாறு சாத்தியம்? இது எவ்வாறென்றால், மரித்தவர்களை கடவுள் தமது சொந்த நினைவில் வைத்துள்ளார். மனிதர்களைப் படைப்பதற்கு அதிசயமான வல்லமையும் திறமையும் யெகோவா கொண்டுள்ளார், எனவே தனிநபரின் வாழ்க்கை முறையின் ஒரு பதிவை தம் நினைவில் வைத்து அவரால் பாதுகாக்கமுடியும் என்ற காரியமானது ஆச்சரியமாக இருக்கவேண்டியதில்லை. ஆம், அந்த நபர் மீண்டும் வாழ்வதற்கான எல்லா எதிர்பார்ப்புகளும் கடவுளிடம் சார்ந்துள்ளன.
“ஆவி” என்ற சொல்லின் கருத்தும் இதுவே, அது அதனைத் தந்த மெய்க்கடவுளிடத்திற்கு திரும்பிச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. இதனுடைய இறுதியான விளைவை விவரிக்கையில், பிரசங்கி புத்தகத்தின் ஏவப்பட்ட எழுத்தாளர் விளக்குகிறார்: ‘மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகிறது.’—பிரசங்கி 12:7.
கடவுள் மாத்திரம் ஒருவரை உயிருடன் உண்டாக்க முடியும். ஏதேன் தோட்டத்தில் கடவுள் மனிதனைப் படைக்கையில், அவனுடைய நாசியில் “ஜீவசுவாசத்தை” ஊதினார், ஆதாமின் நுரையீரல்களைக் காற்றினால் நிரப்புவதோடுகூட, உயிர்சக்தியை அவனுடைய உடலிலுள்ள எல்லா செல்களுக்கும் உயிர்ப்பூட்டும்படி யெகோவா செய்தார். (ஆதியாகமம் 2:7) இந்த உயிர்சக்தியைப் பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்குக் கருவுறுதல், பிறப்பு என்ற அடுத்தடுத்த நிகழ்வின் மூலம் கடத்த முடியுமாதலால் மனித உயிரை பெற்றோர்களின் மூலம் பெற்றுக்கொண்டபோதிலும், அது பொருத்தமாக கடவுளுக்கே உரியது.
உயிர்த்தெழுதல்—ஒரு மகிழ்ச்சியான காலம்
பரிசுத்த வேதாகமத்தில் ஆதாரமே இல்லாத மறுபிறப்புடன் உயிர்த்தெழுதலை குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒரு நபர் இறந்துவிட்டால், அவர் ஒரு தடவை, அதற்கு மேற்பட்ட தடவைகள் அடுத்தடுத்த வாழ்க்கைக்கு மீண்டும் பிறக்கிறார் என்பதே மறுபிறப்பு கொள்கையின் நம்பிக்கை ஆகும். ஒருவரது முந்தைய வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில், அவர் வாழ்நாளில் என்ன பதிவை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறதோ அதனை சார்ந்தே அவர் உயர்ந்த நிலை அல்லது தாழ்ந்த நிலையில் வாழ்க்கையை அடைவதாக சொல்லப்படுகிறது. இந்த நம்பிக்கையின்படி, ஒருவர் ஒருவேளை ஒரு மனிதனாக அல்லது ஒரு மிருகமாக “மீண்டும் பிறக்கலாம்.” அது பைபிள் போதிப்பதிலிருந்து முற்றிலும் முரணாக இருக்கிறது.
“உயிர்த்தெழுதல்” என்ற வார்த்தையானது ஆனாஸ்டாஸிஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, “மறுபடியும் எழுந்து நிற்பது” என்பது அதன் நேர் பொருளாகும். (“மரித்தோரின் மீட்டுயிர்ப்பு” என்று அர்த்தங்கொள்ளும் டெக்கியாத் ஹம்மெத்திம் என்ற எபிரெய வார்த்தைகளோடு கிரேக்க மொழியின் எபிரெய மொழிபெயர்ப்பாளர்கள் ஆனாஸ்டாஸிஸை மொழிபெயர்த்திருக்கின்றனர்.) உயிர்த்தெழுதல், அந்த நபரின் வாழ்க்கை மாதிரியை மீண்டும் செயல்படுத்துவதை உட்படுத்துகிறது, அந்த வாழ்க்கை மாதிரியைக் கடவுள் தம்முடைய நினைவில் தக்க வைத்திருக்கிறார். அந்தத் தனிநபருக்கு கடவுள் கொண்டுள்ள சித்தத்தின்படி, அந்த நபர் மனித அல்லது ஆவி உடலில் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறார்; எனினும் தான் மரித்தபோது கொண்டிருந்த அதே ஆளுமையையும் நினைவுகளையும் உடைய அவரது சொந்த தனித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்கிறார்.
ஆம், பைபிள் இரண்டு வகையான உயிர்த்தெழுதலைப்பற்றி கூறுகிறது. ஒன்று, ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையானோருக்கு ஆவி உடலுடன், பரலோகத்திற்கு உயிர்த்தெழுதல். இயேசு கிறிஸ்து அத்தகைய உயிர்த்தெழுதலை பெற்றார். (1 பேதுரு 3:18) தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களின் மத்தியில் தெரிந்தெடுக்கப்படும் ஆட்களும் அத்தகைய உயிர்த்தெழுதலை அனுபவிப்பார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். இது உண்மையுள்ள அப்போஸ்தலரிடமிருந்து ஆரம்பமாகும்; அவர்களுக்கு அவர் வாக்களித்தார்: “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். . . . நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” (யோவான் 14:2, 3) காலத்திலும் தரத்திலும் முதன்மையாக இருப்பதனால் இதனை பைபிள் ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என்று குறிப்பிடுகிறது. இவ்வாறாக, பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவோரை வேதவசனங்கள் தேவனுடைய ஆசாரியர்களாகவும் கிறிஸ்து இயேசுவுடன் ஆளுகை செய்யும் ராஜாக்களாகவும் விவரிக்கின்றன. (வெளிப்படுத்துதல் 20:6) ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கே இந்த ‘முதலாம் உயிர்த்தெழுதல்,’ உண்மையுள்ள ஆண்களின் மற்றும் பெண்களின் மத்தியிலிருந்து வெறுமனே 1,44,000 பேர் மாத்திரம் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்பதாக வேதவசனங்களே வெளிப்படுத்துகின்றன. தங்களுடைய விசுவாசத்தை மற்றவர்களிடம் சாட்சி பகருவதில் சுறுசுறுப்பாக இருந்தவர்களாய், யெகோவா தேவனுக்கும் கிறிஸ்து இயேசுவுக்கும் தங்களது உத்தமத்தை மரணம் வரை நிரூபித்தவர்களாய் இருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 14:1, 3, 4.
சந்தேகமின்றி, பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுவோருக்கு, மரித்தவர்கள் உயிர்த்தெழுவது மட்டற்ற மகிழ்ச்சியின் காலமாக இருக்கும். ஆனால் மகிழ்ச்சி அத்துடன் முடிந்துவிடுவதில்லை, இங்கு இதே பூமியில் வாழ்வதற்கு உயிர்த்தெழுவதும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவை தப்பிப்பிழைக்கும் அளவில்லாத எண்ணிக்கையானோரோடு உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் சேர்ந்துகொள்வர். குறைந்த எண்ணிக்கையான, பரலோக வாழ்க்கைக்காகத் தகுதியடையோரைத் தரிசித்தப்பின், அப்போஸ்தலனாகிய யோவான் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்” அடங்கிய ஒரு தரிசனம் கொடுக்கப்பட்டார். இதே பூமியில் கோடிக்கணக்கானோர் ஒருவேளை நூற்றுக்கோடிக்கணக்கானோர் மீண்டும் உயிர் பெறுகையில் அது எத்தகைய ஒரு மகிழ்ச்சியான காலமாக இருக்கும்!—வெளிப்படுத்துதல் 7:9, 16, 17.
அது எப்போது?
இன்று உலக நிலைமை இருப்பதுபோல்—சண்டையாலும் இரத்தஞ்சிந்துதலாலும், தூய்மைக்கேட்டாலும் வன்முறையாலும் நிறைந்திருக்கும் ஒரு பூமியில் ஒருவேளை மரித்தோர் உயிர் பெற்றுவருகையில், எந்தவொரு ஆனந்தமும் மகிழ்ச்சியும் குறுகிய காலத்திற்கு உரியதாகிவிடும். கூடாது, “புதிய பூமி” அமைக்கப்படும்வரை உயிர்த்தெழுதல் காத்திருக்க வேண்டும். இதுவரையாக இந்தப் பூமியைப் பாழாக்குவதற்கும் அதன் பழமையான அழகை கெடுப்பதற்கும் திடத்தீர்மானமாய் இருப்பதோடு, அதன் குடிமக்களுக்குச் சொல்லி மாளமுடியாத துயரைக் கொண்டுவந்த ஆட்களையும் நிறுவனங்களையும் அகற்றி சுத்தம் செய்யப்பட்டிருக்கும் ஒரு பூகோளத்தைத் கற்பனைசெய்து பாருங்கள்.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 11:18.
தெளிவாகவே, மனிதவர்க்கத்தின் பொது உயிர்த்தெழுதலுக்கான காலம் இன்னும் முன்னால் இருக்கிறது. இருப்பினும், நற்செய்தி என்னவென்றால், அது நீண்ட தூரத்தில் இல்லை. உண்மைதான், இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்காக அது காத்திருக்க வேண்டும். இருப்பினும், “மிகுந்த உபத்திரம்” திடீரென்று நிகழுவதற்கும், அர்மகெதோன் என பொதுவாக அறியப்படும் “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில்” உச்சநிலையை அடைவதற்கும் காலம் அருகில் இருக்கிறது என்பதைத் திரளான அத்தாட்சி நிரூபிக்கிறது. (மத்தேயு 24:3-14, 21; வெளிப்படுத்துதல் 16:14, 16) இந்த இன்பகரமான கோளமாகிய பூமியிலிருந்து எல்லா பொல்லாத்தனத்தையும் அகற்றுவதில் இது விளைவடையும். அதனைப் பின்தொடர்ந்து, கிறிஸ்து இயேசுவின் ஆயிர வருட ஆட்சி வரும், அப்போது இந்தப் பூமி படிப்படியாக ஒரு பரதீஸ் நிலைமைக்குக் கொண்டுவரப்படும்.
மரித்த மனிதர்களுடைய உயிர்த்தெழுதல் இந்த ஆயிர வருட ஆட்சியின்போது நடைபெறும் என்பதாக பைபிள் வெளிப்படுத்துகிறது. இயேசு பூமியிலிருக்கையில் கொடுத்த அந்த வாக்குறுதி அப்போது நிறைவேற்றமடையும்: “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்; உயிர்த்தெழுந்து . . . புறப்படுவார்கள்.”—யோவான் 5:28, 29, NW.
உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் தாக்கம்
உயிர்த்தெழுதல் என்னும் இந்த எதிர்பார்ப்பு—மரித்தோர் மீண்டும் உயிர் பெற்றுவரும் ஒரு காலம்—எதிர்காலத்திற்கான எத்தகைய ஓர் அருமையான நம்பிக்கை! ஆ, அது நம்மை முதுமையின் தீவிரத்தையும் வியாதியையும் எதிர்பாராத கடுந்துயரங்களையும் துக்கத்தையும் வாழ்க்கையின் அன்றாட அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் எதிர்ப்பட எவ்விதம் உற்சாகப்படுத்துகிறது! அது மரணத்தின் வேதனையை எடுத்துப் போடுகிறது. அதாவது துக்கத்தை முற்றிலுமாக அகற்றுவதல்ல ஆனால் அத்தகைய எதிர்கால நம்பிக்கை இன்றி இருக்கும் ஆட்களிடமிருந்து நம்மைத் தனியே பிரிக்கிறது. உயிர்த்தெழுதலின் ஆறுதலளிக்கும் இந்தத் தாக்கத்தைப் பின்வரும் வார்த்தைகளில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒத்துக்கொண்டார்: “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.”—1 தெசலோனிக்கேயர் 4:13, 14.
கிழக்கத்திய நாட்டைச் சேர்ந்த யோபு கூறிய மற்றொரு கூற்றின் சத்தியத்தை நாம் ஒருவேளை ஏற்கெனவே அனுபவித்திருக்கலாம்: “[மனிதன்] அழுகிப்போகிற வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்து போவான். ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.” (யோபு 13:28–14:2) வாழ்க்கையின் நிச்சயமற்றத்தன்மையையும் ‘காலமும் எதிர்பாரா நிகழ்வும்’ நம்மில் எவருக்கும் நேரலாம் என்னும் கொடிய மெய்ம்மையை நாமும்கூட அறிந்தவர்களாக இருக்கிறோம். (பிரசங்கி 9:11, NW) நிச்சயமாகவே, நம்மில் எவரும் மரணத்தை எதிர்ப்படவேண்டும் என்ற எண்ணத்தை மகிழ்ந்து அனுபவிக்க மாட்டோம். இருப்பினும், மிதமிஞ்சிய மரண பயத்தை எடுத்துப்போட உயிர்த்தெழுதலின் நிச்சயமான நம்பிக்கை உதவுகிறது.
எனவே, உற்சாகமடையுங்கள்! மரணத்தில் நிகழும் உறக்கத்தையும் கடந்து, உயிர்த்தெழுதல் என்னும் அற்புதத்தின் மூலம் உயிர் பெற்று வருவதை நோக்குங்கள். முடிவில்லா வாழ்க்கைக்கான எதிர்கால எதிர்பார்ப்பை நம்பிக்கையோடு எதிர் நோக்குங்கள், இதனோடுகூட அத்தகைய ஆசீர்வாதமான காலம் சமீப எதிர்காலத்தில் என்று அறிவதன் மகிழ்ச்சியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.