மனித சக்தி அதை நிறுத்த முடியுமா?
போராயுத வியாபாரிகள் ஏழைகளிடமிருந்து தேவையான பொருட்களையும் சேவைகளையும் பேரளவில் திருடிய போதும் மக்கள் ஏன் அதை நிறுத்துவதில்லை? எளிய விடை: போரயுத வியாபாரம் பணத்தையும் அதிகாரத்தையும் ஆட்டி வைக்கிறது. இந்தப் பெரிய வியாபாரத்தின் செயல்பரப்பு, அக்கறைகள் மேலும் முறைமைகள் ஆகியவற்றைப் பற்றிய பின்வரும் உண்மைகள் மனித சக்தி இதை ஏன் நிறுத்த முடியவில்லை என்பதை அறிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்யும்.
போராயுத வியாபாரத்தின் மூலம் அநேக ஆட்கள் வாழ்கின்றனர். இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து போரயுத வியாபாரம் இவ்வுலகின் மிக விரிவான சர்வதேச தொழிற்சாலையாக இருந்து வந்திருக்கிறது. இது உலக முழுவதிலும் 500 இலட்சம் ஆட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலையில் அமர்த்தியிருக்கிறது. கூடுதலாக, உலகின் காற்பங்கு அல்லது சுமார் 5,00,000 விஞ்ஞானிகள் இராணுவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதில் மிகப்பெரிய பொருளாதார அக்கறைகள் உட்பட்டிருக்கின்றன. 1960 முதல் உலகத்தின் தேசங்கள் போரயுதப் போட்டியில் 15.2 டிரில்லியன் டாலர்களை (1984-ல் 15,200,000,000,000 அமெரிக்க ஐக்கிய மாகாண டாலர்கள்) செலவிட்டிருக்கின்றன. மேலும் போரயுதங்களுக்கான தேவை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. உதாரணமாக, 1987-ல் இராணுவ செலவழிப்பு ஒரு நிமிடத்திற்கு 18 இலட்சம் டாலர்கள் என்ற ஒரு புதிய உச்ச நிலையை எட்டியது! 1987-ல் செய்யப்பட்ட இருபத்திரண்டு போர்களில் குறைந்த பட்சம் 22 இலட்சம் ஆட்கள் உயிரிழந்தனர்—பதிவு செய்யப்பட்ட சரித்திரத்தில் முன்னால் இருந்த எந்த வருடத்தையும்விட அதிகமான போர்கள் செய்யப்பட்டன!a ஈரானுக்கும் ஈராக்குக்கும் நிகழ்ந்த போர் சரித்திரப் பதிவுகளிலேயே மிக அதிக இரத்தம் சிந்துதலையும், அதிக வள ஆதாரத்தை அழித்த உள்நாட்டுப் போரக இருந்தது. இது உலக முழுவதிலுமிருந்து போரயுதங்களை பல வருடங்களாக உறிஞ்சியது.
சமாதானத்தைப் பற்றி அதிகமான பேச்சு இருந்த போதிலும், பூகோள இராணுவ செலவழிப்பு சுமார் 1 டிரில்லியன் டாலர்களை எட்டியது. உண்மையில், சமாதானத்தைக் காத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு செய்யும் செலவை போல் மூவாயிரம் மடங்கு இராணுவ படைகளுக்கு உலகம் செலவழிக்கிறது!
அநேக தேசங்கள் பூகோள போரயுத கடைத்தெருவின் முன் நின்று கொண்டிருக்கின்றன. இரண்டு வல்லரசுகள் உலகின் முதன்மையான போரயுத விற்பனையாளர்கள். பிரான்சு, பிரிட்டன், மேற்கு ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய போரயுத விநியோகஸ்தர்கள். கிரீஸ், ஸ்பயின் மற்றும் ஆஸ்டிரியா சமீபத்தில் அவர்களுடன் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
நடுநிலைமை வகிக்கும் தேசங்கள்கூட போரயுதங்களையும், இராணுவ தொழில் நுட்பத்தையும் விற்பனை செய்கின்றன. சமாதான நொபெல் பரிசு உதயமான இடமென்று புகழ்பெற்ற ஸ்வீடனும்கூட ஏற்றுமதி செய்வதற்கென போர் விமானங்கள், பீரங்கிகள் மேலும் வெடி மருந்துகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் உலகின் மிகவும் முன்னேற்றமடைந்த இரண்டு போரயுத நிறுவனங்களை கொண்டிருக்கிறது. மனித நல முயற்சிகளுக்கும், செஞ்சிலுவை சங்கத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டிருப்பதாக எண்ணப்படும் ஸ்விட்சர்லாந்தும் கூட சர்வதேச போரயுத வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்தக் கடுமையான போட்டிக்கு கூட்டும் வண்ணம் முன்னேற்றமடைந்து வரும் நாடுகளும் அதிகமான போரயுத உற்பத்தி செய்யும் நாடுகளாக ஆகி வருகின்றன.
கழுத்தறுக்கும் வியாபாரப் போட்டி
எல்லா வியாபாரிகளும் அவர்களுடைய பொருட்களே (அவை கார்களானாலும், மின்சார சவரன் கத்திகளானாலும் அல்லது துடைப்பங்களானாலும்) மிகச் சிறந்தது என்று விளம்பரங்கள் மூலம் ஆட்களை நம்பும்படி செய்ய விரும்புகின்றனர். அதே விதமாக போரயுத வியாபாரிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் ஆயுதங்களின் உயிரை எடுக்கும் திறமையைப் பகட்டான முழுவண்ண வாணிப பத்திரிகைகளில் விளம்பரம் செய்கின்றனர்.
காலை செய்தித்தாளில் இவ்விதமாகச் சொல்லும் ஒரு விளம்பரத்தை நீங்கள் வாசித்தால் எப்படிப் பிரதிபலிப்பீர்கள்: “சாகடிக்கும் ஓர் ஏவுகணைக்காக தேடிக் கொண்டிருக்கிறீர்களா? RBS 70 அதிக ஆற்றல் வாய்ந்த வெடிமருந்தை அடைத்து வைத்திருக்கிறது”? அல்லது பீரங்கி வண்டியை தாக்கும் ஓர் ஆயுதத்தைப் பற்றி மற்றொரு விளம்பரம்: “ஓர் அடி நிச்சயமான சாவு! . . . அதை எதுவும் நிறுத்த முடியாது”?
இப்பேர்ப்பட்ட விளம்பரங்கள் சாதாரண செய்தித் தாள்களில் பிரசுரிக்கப்பட்டால் அது ஆட்களைக் கலங்க வைக்கும். ஆனால் போரயுத வியாபார பத்திரிகைகளில் அவை திரளாக காணப்படுகின்றன. ஆனால் எதிரிக்கும் அதே விதமான சாகடிக்கும் தன்மையுள்ள துல்லியமாய் தாக்கக்கூடிய முழுமையான தொழில் நுட்பம் வாய்ந்த ஆயுதங்கள் அளிக்கப்படுகின்றன என்று எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. இந்த ஆயுதங்கள் எப்படி உபயோகப்படுத்தப்படும் என்றும் இந்தப் பயங்கரமான போரயுதங்களால் படைத் துறையில் இல்லாத பொது மக்கள்—கடைசியில் இவற்றை “பயன்படுத்துபவர்கள்”—எப்படிப் பாதிக்கப்படுவார்கள் என்றும் எங்கும் சொல்லப்படுவதில்லை.
சந்தேகத்திற்குரிய வியாபாரம்
பெரும்பாலான போரயுத நடவடிக்கைகள் அரசாங்கங்களுக்கிடையே நடைபெற்றாலும் இந்த வியாபாரம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. ஒரு தனிப்பட்ட அறிக்கை சொல்கிறது: “ஒரு பெரிய வியாபார இணை அமைப்பு கள்ளத்தனமாகவும், அங்கீகரிக்கப்பட்ட வாயில்கள் வழியாகவும் வேலை செய்கிறது. பெரும்பாலும் இரகசியமாக அரசாங்கங்கள் தங்கள் சுய அக்கறைகளையே தொடருகின்றன.”
அநேக ஆயுத உற்பத்தியாக்கும் நாடுகள் போர் செய்யும் தேசங்களுக்கு இராணுவ ஏற்றுமதி செய்வதைக் குறித்து கண்டிப்பான சட்டங்களை விதித்திருந்த போதிலும் அவர்களுடைய போரயுதங்கள் போர்க்களத்திற்கு தொடர்ந்து சென்று கொண்டே இருக்கின்றன. ஸ்டக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வரும் அறிக்கை ஏன் என்று விளக்குகிறது: “சட்டப்பூர்வமான ‘வெண்ணிற’ போரயுத வியாபாரத்திற்கும் மேலும் ‘சாம்பல்’, ‘கறுப்பு’ நிற போரயுத வியாபாரத்திற்கும் இடையே உறுதியான தடுப்புகள் இல்லை. போரயுதத்தை விற்கும் எந்த நாடும் எப்படி, யாருக்கு எதிராக அல்லது யாரால் இந்தப் போரயுதங்கள் உபயோகப்படுத்தப்படும் என்பதை முழுமையாய் கட்டுப்படுத்த முடியாதென தோன்றுகிறது.” நியுஸ் வீக் அறிக்கை போரயுத வியாபாரத்தைக் குறித்து முன்னறிவிக்கிறது: “அநேக தேசங்கள் போரயுத விற்பனை போட்டியில் நுழையும்போது போரயுத விற்பனையின் மேல் தடைகள் வீழ்ச்சியடையும்.”
அரசாங்கங்களுக்கிடையில் உள்ள இந்தச் சர்வதேச போரயுத வியாபாரத்தின் நிழலின் கீழ், தனிப்பட்ட விற்பனையாளர்களின் படை ஒன்று உலகம் முழுவதிலும் இயங்குகிறது. உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்களில் தொடர்புகளை அவர்கள் வைத்திருக்கின்றனர். இதில் பெரிய போரயுத தொழிற்சாலைகள் நியமித்திருக்கும் விற்பனையாளர்கள், போரயுதத்தையே தொடத இடைப்பட்ட வியாபாரிகள் அல்லது ஏஜென்டுகள் போரயுதங்களுக்காக போத மருந்துகளை பண்டமாற்றம் செய்யும் கடத்தல்காரர்கள், மேலும் தகா வழியில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் ஆகியோர் இருக்கின்றனர்.
பணத்தைப் பெறுவதற்கான அவசரத்தில் சில போரயுத நிறுவனங்கள் எதையும் செய்ய தயங்குவதில்லை. போரயுத வியாபாரத்தை விசாரணை செய்யும் அந்தோணி சாம்சனின் படி அவர்கள் செய்ததாக குற்றம் சாட்டப்படும் சில மறைவான சூழ்ச்சிகள் பின்வருமாறு:
1. போர் பயத்தை தூண்டுதல், மேலும் தங்கள் சொந்த தேசங்களையே போரில் ஈடுபட்டிருப்பதைப் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உந்துவித்து போரயுதங்களை அதிகரித்தல்.
2. அரசாங்க அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அளவில் இலஞ்சம் கொடுத்தல்.
3. பல்வேறு தேசங்களின் இராணுவ ஏற்பாடுகளைக் குறித்து பொய்யான அறிக்கைகளை பரப்பி போரயுத செலவைத் தூண்டுவித்தல்.
4. செய்திப்பரப்பு சாதனங்கள் மூலம் பொது மக்களின் கருத்தை மாற்றியமைத்தல்.
5. ஒரு தேசத்திற்கு விரோதமாக மற்றொரு தேசத்தைத் தூண்டுதல்.
6. சர்வதேச நிறுவனங்களை அமைத்து போரயுதங்களின் விலையை அதிகரித்தல்.
இருந்தபோதிலும், போரயுத வியாபாரம் எப்பொழுது இருந்ததையும்விட அதிகமாக செழித்தோங்குகிறது. இந்த வல்லமையான போரயுத அங்காடியை ஒருவராலும் மூட முடியவில்லை. இரண்டு மிகப்பெரிய சர்வதேச சமாதான அமைப்புகளான சர்வதேச சங்கமும், அதன் பின் தொடர்ந்து வந்த ஐக்கிய நாட்டு சங்கமும் அதனுடைய ஓர் அங்கத்தின நாட்டையும்கூட ‘பட்டயங்களை மண்வெட்டிகளாக’ மாற்றும்படி செய்ய முடியவில்லை. போரயுத வியாபாரம் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் உலக விவகாரங்களோடு அவ்வளவு நெருக்கமாய் பிணைக்கப்பட்டிருப்பதால் இது மனித சக்தியினால் நிறுத்த முடியாது என்று அநேக ஆட்கள் உணருகின்றனர். அப்படியென்றால், அதைச் செய்வதற்கு வல்லமையான சக்தி ஏதாவது இருக்கிறதா? (g89 6/8)
[அடிக்குறிப்புகள்]
a ஒரு வருடத்தில் ஆயிரம் அல்லது அதற்கு அதிகமான மரணங்களை விளைவித்த போர்கள் என கணக்கிடப்பட்டவை.
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
நடுநிலைமை வகிக்கும் நாடுகளும்கூட போராயுதங்களையும் இராணுவ தொழில் நுட்பத்தையும் விற்பனை செய்கின்றனர்
[பக்கம் 7-ன் படங்கள்]
போராயுத வியாபாரிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் சாவுக்கேதுவான ஆயுதங்களை பகட்டான, முழு வண்ண வாணிப பத்திரிகைகளில் விளம்பரம் செய்கின்றனர்