போராயுதங்கள் இல்லாத ஓர் உலகம் உருவாகும் என்று என்ன நம்பிக்கை இருக்கிறது?
நெருக்குகின்ற பாரமான போரயுத வியாபாரம் நீக்கப்பட்டு பூமி முழுவதும் பெருமளவில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் போரயுதங்கள் எல்லாம் அகற்றப்பட்டால் அது எவ்வளவு பெரிய விடுதலையாக இருக்கும்! அப்பேர்ப்பட்ட ஒரு செயல் நிகழும் என்பதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? தேசங்கள் தங்கள் சுயதெரிவிலேயே அதைச் செய்ய மாட்டார்கள் என்று சரித்திரம் காட்டுகிறது. மேலுமாக, போர்த் தளவாடங்கள் வெறும் ஓர் அடையாளக் குறியே. ஒரு பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க அதன் வேர் போன்ற அடிப்படை காரணங்கள் கையாளப்பட வேண்டும். அந்த வேரைக் கண்டுபிடிக்க முடியுமா? முடிந்தால் யார் அதைக் கையாள முடியும்?
மனிதவர்க்கத்தின் மிகப்பெரிய சாபங்களில் ஒன்றான போரிலிருந்து போரயுத வியாபாரம் தன் ஊட்டத்தைப் பெறுகிறது. போரயுத வியாபாரத்திலிருந்து போர் வளரவில்லை. மாறாக, போரயுத வியாபாரம் போரிலிருந்து வளர்ந்தது. அப்படியானால் இந்தத் தீமையின் வேர் போரில் காணப்படுகிறதா? இல்லை, போரயுத வியாபாரம் செழிந்தோங்குவதற்கு போர் வெறும் ஒரு கிளையே. அந்தக் கிளை எங்கிருந்து தன் ஊட்டத்தைப் பெறுகின்றது?
போரை அறிவிப்பதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது? எல்லாத் தேசீய சட்டங்களும் அப்பேர்ப்பட்ட அதிகாரத்தை தங்கள் அரசாங்கங்களுக்குக் கொடுக்கின்றன. பொதுவாக அரசாங்கங்கள் தேசீய அக்கறைகளை பாதுகாப்பதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு போர்களைத் தொடங்குகின்றன. அரசாங்கங்கள் ஜனங்களால் ஆதரிக்கப்படுகின்றன. ஆகையால், நாட்டுப்பற்று, பொருளாதார போட்டி, பிராந்திய ஆதிக்கம் மற்றும் இனவெறி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இந்த முழு மானிட ஒழுங்குமுறயோடு இப்பிரச்னை சம்பந்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் இந்த ஒழுங்குமுறதான் பிரச்னைக்கு வேராக இருக்கிறதா? இல்லை. இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை அதன் ஊட்டச்சத்தை மறைந்திருக்கும் வேரிலிருந்து பெறுகிறது என்று உன்னிப்பான ஒரு பரீட்சை காட்டும், அந்த ஊற்றுமூலத்தை அநேக ஆட்கள் கவனியாமல் விடுகின்றனர்.
மறைந்திருக்கும் ஒரு வேர் வெளியரங்கமாக்கப்படுகிறது
அந்த வேர் பைபிளில் வெளியரங்கமாக்கப்படுகிறது. இந்தப் பண்டைய புத்தகம் ஒரு வல்லமையான ஆவி சிருஷ்டி சுயநலபேராவலினால் உந்தப்பட்டு கடவுளுக்கு எதிராக தன்னை உயர்த்திக் கொண்டான் என்று வெளிக்காட்டுகிறது. (யோபு 1:6-12; 2:1-7) அவன் (எதிராளி என்று பொருள்படும்) பிசாசாகிய (குற்றம் சாட்டுபவன், பழித்தூற்றுபவன் என்று பொருள்படும்) சாத்தான் என்று அழைக்கப்படுகிறான். அவன் மனித குடும்பத்திற்குள் பாவத்தையும் மரணத்தையும் அறிமுகப்படுத்தினான். (ஆதியாகமம் 3:1-7) ஆகையால், அவன் “ஒரு பொல்லாங்கன்” என்று அழைக்கப்படுகிறான். ஆபேல் மீது காயீன் செய்த மனித சரித்திரத்தில் முதல் மரண தாக்குதலை அவன் ஏவினான்.—1 யோவான் 3:12; ஆதியாகமம் 4:8.
பைபிள் சாத்தானை “இந்த ஒழுங்குமுறையின் கடவுள்” என்றும், பூகோள அரசியல் ஆட்சி அமைப்பிற்கு ‘வல்லமை, சிங்காசனம், மேலும் பேரளவான அதிகாரம்’ ஆகியவற்றைக் கொடுக்கும் பெரிய “வலுசர்ப்பம்” என்றும் கூறி அவன் வேடத்தைக் கலைக்கிறது. “பிசாசு . . . ஆதி முதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்” என்று இயேசு கிறிஸ்து தைரியமாக குறிப்பிட்டுக் காட்டினார். மேலும் அவனை “இந்த உலகத்தின் அதிபதி” என்றும் விவரித்தார்.—2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்துதல் 12:9; 13:1, 2; யோவன் 8:44; 14:30.
என்றபோதிலும், உயிரை எடுக்கும் இந்த வேர் என்றென்றைக்கும் நிலைத்திராது. மனித சரித்திரத்தில் இந்த அழிவுகால பகுதி சாத்தானின் ஒழுங்குமுறையின் கடைசி நாட்கள் என்று பைபிள் ஆராய்ச்சி அடையாளம் காட்டுகிறது, அப்படியானால் அவனுக்கும் அவனுடைய தந்திரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதற்கு “கொஞ்சக் கால மாத்திரம்” மீதமிருக்கிறது என்று அது அர்த்தப்படுத்தும். சாத்தானிய பாதிப்பிலிருந்து விடுதலைக்கான ஏற்பாடு இயேசுவின் அப்போஸ்தலனாகிய யோவனால் அடையாள மொழியில் விவரிக்கப்படுகிறது: “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக் கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டி வைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும் வரைக்கும் அது ஜனங்களை மோசம் போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின் மேல் முத்திரை போட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக் காலம் விடுதலையாக வேண்டும்.”—வெளிப்படுத்துதல் 12:12; 20:1-3.
போராயுத பாரத்தை நீக்குதல்
வேரானது செயலற்றதாய் ஆக்கப்படுகையில் அதனுடைய எல்லாக் கெட்ட செல்வாக்கும் முடிவுபெறும். இந்த ஆயிரம் ஆண்டு சமாதான சகாப்தம் பூமியில் கூடிய காரியமாக்க சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா தானே ஒடுக்குகிற போரயுத பாரத்தை நீக்குவார்: “பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய (யெகோவாவுடைய, NW) செய்கைகளை வந்து பாருங்கள். அவர் பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:8, 9.
இலட்சக்கணக்கான ஆட்கள் அப்பேர்ப்பட்ட சமாதானமான நிலைமைகளின் கீழ் வாழ்வதற்கு ஏற்கெனவே தயாராகிக் கொண்டிருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் பின்வரும் இந்தத் தீர்க்கதரிசனத்தை ஏற்கெனவே நிறைவேற்றுகின்றனர்: “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (ஏசாயா 2:4) ஆகையால், அவர்கள் எந்த வகையான போரயுத வியாபாரத்திலும் பங்கு கொள்வதில்லை. இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் போன்று அவர்கள் அரசியல் பிரச்னைகளில் கண்டிப்பான நடுநிலைமையைக் கடைப்பிடிக்கின்றனர், உலகியல் சார்ந்த போர் அல்லது மோதல்களில் என்ன நேர்ந்தாலும் பங்குகொள்வதில்லை.—யோவான் 17:16.
நிறைவேற்றப்பட்ட பைபிள் தீர்க்கதரிசனங்களின்படி, போருக்காக ஓர் ஆயுதமும் உருவாக்கப்படாத காலம், பூமியின் எல்லா வள ஆதாரங்களும் அதில் குடியிருப்போரின் நலனுக்கென உபயோகப்படுத்தப்படும் காலம் அருகாமையில் உள்ளது. சமாதானத்தின் பிரபு, பூமியனைத்திற்கும் ராஜா இயேசு கிறிஸ்து இதை உறுதியளிக்கிறார்: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.” ஆகையால், களிகூருங்கள்! போரயுதமே இல்லாத ஓர் உலகம் விரைவில் உண்மையாகும்!—சங்கீதம் 72:12-14. (g89 6/8)
[பக்கம் 10-ன் படங்கள்]
யுத்தமேயில்லாத காலம் வெகு சமீபித்திருக்கிறது. யுத்தம் இருப்பதற்கு பதிலாக, பூமி சமாதானமுள்ள பரதீஸாக மாறும்
[படத்திற்கான நன்றி]
U.S. Marine Corps photo
Tahiti Tourist Promotion Board