மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 11: பொ.ச.மு. 2–பொ.ச. 100 விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வழி
“மிகப்பெரிய உண்மைகள் மிக எளிமையானவை: மிகப் பெரிய மனிதர்களும் அவ்வாறே இருக்கிறார்கள்.”—19-வது நூற்றாண்டு பிரிட்டன் நாட்டு ஆசிரியர்கள் ஜூலியஸ் மற்றும் அகஸ்டஸ் ஹேர்
மக்கெதோனியா அரசன் மகா அலெக்ஸாண்டரின் மரணத்துக்குச் சுமார் 320 ஆண்டுகளுக்குப் பின்பு, ஒரு மாபெரும் உலக வெற்றிவீரன் பிறந்தார். லூக்கா 1:32, 33-ல் முன்னுரைக்கப்பட்டபடி அவர் அலெக்ஸாண்டரிலிருந்து இரண்டு முக்கிய வழிகளில் வித்தியாசப்பட்டவராக இருப்பார்: ‘அவர் உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.’ இயேசு கிறிஸ்துவே இந்த அரசராக இருந்தார். அவர் வெறுமென தூசு படிந்த சரித்திர புத்தகங்களின் பக்கங்களில் மாத்திரமல்லாமல் தொடர்ந்து வாழும்படியாக முன்தீர்மானிக்கப்பட்டவராக இருந்தார்.
இயேசு எளிமையான வாழ்க்கை வாழ்ந்த ஓர் எளிமையான மனிதராக இருந்தார். அவருக்குச் சொந்தமாக மாளிகைப் போன்ற ஒரு வீடு இருக்கவில்லை. அவர் தன்னைச் சுற்றி செல்வந்தர்களையும் செல்வாக்குமிக்கவர்களையும் கொண்டிருக்கவில்லை; பூமிக்குரிய விலைமதிப்புள்ள பொருட்களின் புதையல்களையும் அவர் கொண்டிருக்கவில்லை. இயேசு சுமார் பொ.ச.மு. 2-ல் அக்டோபரில் பெத்லகேம் என்ற ஒரு சிறிய கிராமத்தில் மிகவும் எளிமையான சூழ்நிலைமைகளின் கீழ் போலிப் பெருமை பாராட்டாத ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். அவருடைய வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எதுவும் நடைபறவில்லை. அவர் “யோசேப்பின் குமாரனென்று எண்ணப்”பட்டபடியால், தச்சுவேலையின் பயிற்சி பெற்றவராக இருந்தார்.—லூக்கா 3:23; மாற்கு 6:3.
இயேசு கடவுளுடைய குமாரன் என்ற கருத்தை ஏளனஞ்செய்பவர்கள்கூட அவருடைய பிறப்பு புதிய ஒரு சகாப்தத்தைத் திறந்து வைத்ததை மறுக்கமுடியாது. “கிறிஸ்தவம் வரலாற்றில் அதிக விரிவான மற்றும் பரவலான மதமாகிவிட்டிருக்கிறது” என்று கூறும் உலக கிறிஸ்தவ என்சைக்ளோப்பீடியாவின் கூற்றை எவரும் வெற்றிகரமாக எதிர்த்து வாதிடவும் முடியாது.
புதிய ஒன்றல்ல ஆனால் வித்தியாசமானது
கிறிஸ்தவம் முற்றிலும் புதிய ஒரு மதமாக இருக்கவில்லை. அது யெகோவா தேவனின் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தினால் ஊட்டிவளர்க்கப்பட்ட இஸ்ரவேலரின் மதத்தில் ஆழமாக வேர்கொண்டிருந்தது. இஸ்ரவேலர் ஒரு தேசமாவதற்கு முன்பாக யெகோவா வணக்கம் அவர்களுடைய முற்பிதாக்களாகிய நோவா, ஆபிரகாம் மற்றும் மோசயினால் கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. இது மிகப் பழமையான மதத்தின் தொடர்ச்சியாக, உண்மையில் ஆரம்பத்தில் ஏதேனின் அப்பியாசிக்கப்பட்ட சிருஷ்டிகரின் மெய் வணக்கமாக இருந்தது. ஆனால் இஸ்ரவேலின் தேசிய மற்றும் மதத் தலைவர்கள், பாபிலோனிய கருத்துகளைக் கொண்ட பொய் மதம் தங்கள் வணக்கத்தில் கலந்து அதைக் கறைபடுத்த அனுமதித்துவிட்டனர். உலக பைபிள் குறிப்பிடுகிறபடியே: “இயேசுவின் பிறப்பின் போது இருந்த யூத சபை மாய்மாலங்களால் கறைப்பட்டு, பெரிய எபிரெய தீர்க்கதரிசிகள் உரைத்த அடிப்படையான ஆவிக்குரிய சத்தியங்களை மங்கவைத்த சடங்குகளால் அது தாறுமாறாக்கப்பட்டிருந்தது.”
யூத விசுவாசத்தோடு ஒட்டவைக்கப்பட்ட மனித சிக்கல்களோடு ஒப்பிட இயேசுவின் போதகங்களில் எளிமை சிறப்பு அம்சமாக இருந்தது. கிறிஸ்தவத்தின் மிக அதிக சுறுசுறுப்பான முதல் நூற்றாண்டு மிஷனரிகளில் ஒருவனான பவுல் கிறிஸ்தவத்தின் முக்கிய குணங்களைப் பற்றி பேசுகையில் இதைக் காண்பித்தான்: “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.” (1 கொரிந்தியர் 13:13) மற்ற மதங்களும்கூட “விசுவாசம், நம்பிக்கை, அன்பு” பற்றி பேசுகின்றன, என்றபோதிலும் கிறிஸ்தவம் வித்தியாசமாக இருக்கிறது. எவ்விதமாக?
யாரில் மற்றும் எதில் விசுவாசம்?
சிருஷ்டிகராக வருணிக்கப்பட்டிருக்கும் “தேவனிடத்தில் விசுவாசமாயி”ருக்க வேண்டியதன் அவசியத்தை இயேசு அழுத்திக்கூறினார். (யோவான் 14:1; மத்தேயு 19:4; மாற்கு 13:19) ஆகவே, பிரபஞ்சம் எப்போதுமே இருந்துவருவதாகச் சொல்லி, சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்தை நிராகரிக்கும் சமண சமயத்திலிருந்தும் புத்த சமயத்திலிருந்தும் கிறிஸ்தவம் வித்தியாசப்படுகிறது. மேலுமாக கிறிஸ்து “ஒன்றான மெய் தேவனை”ப் பற்றி பேசியதால், பேரெண்ணிக்கையான மெய் தேவ, தேவதைகளைக் கற்பித்த பாபிலோன், எகிப்து, கிரீஸ் மற்றும் ரோமிலிருந்த மதங்களில் அல்லது இன்னும் அவ்விதமாகக் கற்பித்துக்கொண்டிருக்கும் இந்து மதத்தில் அவர் நம்பிக்கை வைக்கவில்லை.—யோவான் 17:3.
“தம்மை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு”, “இழந்துபோனதைத் தேட”, ‘அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்’ கொடுப்பது தெய்வீக நோக்கமாயிருந்ததை இயேசு விளக்கினார். (மாற்கு 10:45; லூக்கா 19:10; யோவன் 3:16; ரோமர் 5:17–19 ஒப்பிடவும்.) பாவத்தை நிவிர்த்தி செய்து கொள்வதற்கு பலிக்குரிய மரணத்தில் நம்பிக்கை, முதலாவது பாவமோ அல்லது சுதந்தரித்துக்கொள்ளப்பட்ட பாவமோ இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஷின்டோவிலிருந்து வித்தியாசப்படுகிறது.
ஒரு மெய் விசுவாசம் மாத்திரமே இருப்பதாக இயேசு கற்பித்தார். அவர் புத்திமதி கூறியதாவது: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13, 14) இம்ப்பீரியல் ரோம் புத்தகம் சொல்வதாவது: “[ஆரம்ப] கால கிறிஸ்தவர்கள் தாங்கள் மாத்திரமே சத்தியத்தை உடையவர்களாய் இருப்பதாகவும் மற்ற எல்லா மதங்களும் . . . பொய்யானது என்பதாகவும் அழுத்தமாகக் கூறினர்.” எல்லா மதங்களிலும் நன்மையைக் காணும் இந்து–புத்தமத மனநிலையிலிருந்து இது தெளிவாகவே வித்தியாசப்படுகிறது.
என்னவிதமான நம்பிக்கை?
கிறிஸ்தவர்களின் நம்பிக்கை, அவருடைய அரசாங்கம் உலகப் பிரச்னைகளைத் தீர்த்துவிடும் என்ற சிருஷ்டிகரின் வாக்குத்தத்தத்தின் மீது ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே பொ.ச. 29-ல் இயேசுவின் ஊழியகாலத்தின் ஆரம்பம் முதற்கொண்டு, அவர் “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று” என்ற “சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்பதாக மக்களை உற்சாகப்படுத்தினார். (மாற்கு 1:15) சான்டோகியோ போன்ற கிழக்கத்திய மதங்களைப் போல இல்லாமல், கிறிஸ்தவ நம்பிக்கைக் கைகூடிவருவதற்கு ஒரு வழியாக தேசப்பற்றை இயேசுவின் போதகம் வலியுறுத்தவில்லை. உண்மையில், அவர் அரசியலில் பிரவேசிக்கவேண்டும் என்ற எல்லா யோசனையையும் மறுத்துவிட்டார். (மத்தேயு 4:8–10; யோவன் 6:15) “மேசியாவைக் கொண்டுவர மனிதவர்க்கம் கடவுளுக்குச் சுறுசுறுப்பாக உதவி செய்யவேண்டும்” என்பதாக சில யூதர்கள் முடிவுசெய்தது போல அவர் செய்யவில்லை என்பது தெளிவாக இருக்கிறது.
நீதியுள்ள நிலைமைகளின் கீழ் பூமியின் மீது நித்திய ஜீவனை அனுபவித்துக் களிக்கும் எதிர்பார்ப்பும்கூட கிறிஸ்தவ நம்பிக்கையில் அடங்கியிருக்கிறது. (மத்தேயு 5:5; வெளிப்படுத்துதல் 21:1–4 ஒப்பிடவும்.) இது கிரகித்துக்கொள்வதற்கு எளியதாகவும் சுலபமாகவும் இல்லையா? நிர்வாணா என்ற புத்தமத பொதுக் கருத்தினால் மனம் இருளடைந்து கிடக்கும் அநேகருக்கு இது அவ்விதமாக இல்லை. மனிதவர்க்கத்தின் நம்பிக்கைகள் என்ற புத்தகத்தின்படி இது “அழிவுறுதல் அல்ல” ஆனால் “இடை ஓய்வு” என்பதாகக் குறிப்பிடப்படுகிறது. உண்மையில் நிர்வாணா என்பது “வருணிக்கப்பட முடியாதது” என்பதாக இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது.
அன்பு—யாருக்கு மற்றும் எவ்வகையானது?
“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் (யெகோவாவிடத்தில், NW) உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக” என்பதே பிரதானக் கற்பனை என்பதாக இயேசு சொன்னார். (மாற்கு 12:30) தெய்வீக அக்கறைகளை புறக்கணித்து மனிதரின் இரட்சிப்புக்கு முதலிடம் கொடுக்கும் மதங்களிலிருந்து எத்தனை வித்தியாசமானது. முக்கியத்துவத்தில் இரண்டாவது இடத்தைப் பெறுவது அயலானிடமாக உடன்பாடான அன்பு என்பதாக இயேசு சொன்னார். “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாக அவர் அறிவுரைக் கூறினார். (மத்தேயு 7:12; 22:37–39) ஆனால் இது எவ்விதமாக கன்ஃபூசிய மதத்தின் எதிர்மறயான போதகத்திலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை கவனியுங்கள்: “நீங்கள் எதை உங்களுக்கு விரும்புவதில்லையோ அதை அவர்களுக்கும் செய்யாதிருங்கள்.” என்ன வகையான அன்பை மேன்மையானதாகக் கருதுகிறீர்கள், மக்கள் உங்களுக்குத் தீங்கு செய்வதைத் தடைசெய்யும் வகையா அல்லது உங்களுக்கு நன்மைசெய்ய அவர்களைத் தூண்டுகிற வகையா?
“உண்மையில் மாபெரும் மனிதனாக இருப்பவருக்கு முதல் சோதனை அவருடைய மனத்தாழ்மையாகும்,” என்பதாக 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் ஜான் ரஸ்கின் குறிப்பிட்டார். தம்முடையத் தகப்பனின் பெயரிலும் நற்கீர்த்தியிலும் அக்கறையுடையவராயும், இரண்டாவதாக மனிதருக்காகவும், தாழ்மையுடன் தம்முடைய ஜீவனை அளிப்பதில், இயேசு கடவுளிடமாகவும் மனிதனிடமாகவும் அன்பைக் காண்பித்தார். தேவத்துவத்தை விரும்பிய மகா அலெக்ஸாண்டரின் தன்னிலூன்றிய நாட்டத்திலிருந்து எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது. கோலியரின் என்சைக்ளோபீடியா இவனைப் பற்றி சொல்வதாவது: “அவன் அடிக்கடி ஆபத்துக்குள்ளாக்கின தன்னுடைய வாழ்நாள் முழுவதிலுமாக, அவனுடைய மரணத்துக்குப் பின்பு தன்னுடைய மக்களுக்கு என்ன நேரிடும் என்பதைப் பற்றி எப்போதாவது சிந்தனை செய்ததற்கு எந்த அத்தாட்சியும் இல்லை.”
கடவுளிடமாகவும் மனிதனிடமாகவும் தமக்கிருந்த அன்பைத் தெளிவாக்கும் வகையில், இயேசு, இந்தியாவில் அவருடைய காலத்தில் வாழ்ந்தவரைப் போலில்லாமல், சாதி அமைப்பை ஆதரிக்கவில்லை. மக்களால் விரும்பப்படாத அரசர்களுக்கு எதிராகப் போரயுதங்களை எடுக்கத் தங்கள் உறுப்பினர்களை அனுமதித்த யூத பிரிவுகளைப் போலில்லாமல், இயேசு, “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்” என்பதாகத் தம்மைப் பின்பற்றியவர்களை எச்சரித்தார்.—மத்தேயு 26:52.
விசுவாசம் கிரியைகளினால் நிரூபிக்கப்படுகிறது
விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்போடு பூர்வ கிறிஸ்தவத்தின் முன்னீடுபாடு நடத்தையில் காண்பிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள், பாவமுள்ள மனிதவர்க்கத்துக்குரிய “பழைய மனுஷனைக் களைந்து”போட்டு “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்”ளும்படியாக சொல்லப்பட்டார்கள். (எபேசியர் 4:22–24) இதை அவர்கள் செய்தார்கள். இங்கிலாந்து நாட்டு அரசியல் விஞ்ஞானி முன்னாள் ஹரால்ட் J. லஸ்கி பின்வருமாறு சொன்னது அக்கறையூட்டுவதாக இருக்கிறது: “ஒரு சமயக்கோட்பாட்டின் சோதனையானது, அதை ஏற்றுக்கொள்பவர்கள் அதை அறிவிக்கும் திறமையாக இல்லை; அன்றாடவாழ்க்கையின் வழக்கமான சுழற்சியில் அவர்களுடைய நடத்தையை மாற்றுவதற்குரிய அதன் திறமையே அதன் சோதனையாக இருக்கிறது.”—(தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.) 1 கொரிந்தியர் 6:11 ஒப்பிடவும்.
அசைக்கமுடியாத விசுவாசத்தினால் நல்ல ஆதாரமுள்ள நம்பிக்கையினாலும் ஊக்குவிக்கப்பட்டு, மெய்யான அன்பினால் உந்துவிக்கப்பட்டு, ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் இயேசு பரத்துக்கு ஏறிப்போவதற்கு முன்பாகக் கொடுத்த கடைசிக் கட்டளைக்குக் கீழ்ப்படிய ஒப்புக்கொண்டார்கள்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
பொ.ச. 33-ன் போது, எருசலேமில் ஒரு மேலறையில் கூடியிருந்த 120 கிறிஸ்தவ சீஷர்கள் மேல் கடவுளுடைய பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது. கிறிஸ்தவ சபை பிறந்துவிட்டிருந்தது.a அதன் உறுப்பினர்கள் அற்புதகரமாக அந்நாளில் அந்நிய பாஷைகளைப் பேசுவதற்குரிய திறமையளிக்கப்பட்டனர். இதன் காரணமாக மற்ற நாடுகளிலிருந்து எருசலேமுக்கு ஒரு பண்டிகையில் ஆஜராயிருப்பதற்காக வந்திருந்த யூதர்களிடமும் யூத மதத்திற்கு மதம்மாறியவர்களிடமும் அவர்களால் பேசமுடிந்தது. (அப்போஸ்தலர் 2:5, 6, 41) என்ன விளைவோடு! ஒரே நாளில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் 120-லிருந்து 3,000-க்கு தாவியது!
இயேசு தம்முடைய பிரசங்கிப்பைப் பெரும்பாலும் யூதர்களோடு மட்டுப்படுத்திக்கொண்டார். ஆனால் பெந்தெகொஸ்தேவுக்குப் பின் விரைவில், கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பேதுரு, பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை கடைப்பிடித்த சமாரியர்களுக்கும், பின்னால் பொ.ச. 36-ல் யூதரல்லாத அனைவருக்கும் “மார்க்க”த்தைத் திறந்துவைக்கப் பயன்படுத்தப்பட்டான். பவுல் “புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக” மாறி மூன்று மிஷனரி பிரயாணங்களை மேற்கொண்டான். (ரோமர் 11:13) இவ்விதமாகச் சபைகள் ஸ்தபிக்கப்பட்டுப் பெருகின. “விசுவாசத்தைப் பரப்புவதில் அவர்களுடைய வைராக்கியம் தங்குதடையற்றதாக இருந்தது” என்பதாகக் கிறிஸ்துவிலிருந்து கான்ஸ்டன்டைன் வரையாக புத்தகம் சொல்லுகிறது. மேலுமாக அது சொல்வதாவது: “கிறிஸ்தவ சாட்சிக்கொடுத்தல் மிகப்பரவலாயும் பயனுள்ளதாகவும் இருந்தது.” காற்று தீயைப் பரவச்செய்வது போலவே, கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டது எதிர்மாறாக செய்தி பரவுவதற்கே உதவியாக இருந்தது. பைபிள் புத்தகமாகிய அப்போஸ்தலர் நடபடிகள், கிறிஸ்தவத்தின் இளமைப்பருவத்தின் போது நடைபெற்ற கட்டுப்படுத்தப்பட முடியாத கிறிஸ்தவ ஊழியத்தைப் பற்றிய கிளர்ச்சியூட்டும் சரித்திரத்தைக் கொடுக்கிறது.
‘எனக்குத் தெரிந்த கிறிஸ்தவம் அதுவல்ல!’
கிறிஸ்தவத்தின் ஆரம்பநாட்களைப் பற்றிய வருணனையைக் கேட்டப்பிறகு இதுவே உங்கள் பிரதிபலிப்பாக இருக்கிறதா? பலமான விசுவாசத்தைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, கிறிஸ்தவர்களென உரிமைப் பாராட்டிக் கொள்கிற அநேகர் சந்தேகம் நிறைந்தவர்களாக, எதை நம்புவது என்பதாக அநிச்சயமாய் இருப்பதை நீங்கள் காண்கிறீர்களா? நம்பிக்கைக்குப் பதிலாக அவர்களில் அநேகர் பயத்தின் பிடியிலும், எதிர்காலத்தைக் குறித்து அநிச்சயமாகவும் இருப்பதைக் காண்கிறீர்களா? மேலும் 18-ம் நூற்றாண்டச் சேர்ந்த ஆங்கில வசைப்பா கவிஞர் ஜோனத்தான் ஸ்விஃப்ட், “வெறுப்புக்கொள்வதற்கு போதுமான மதத்தை நாம் கொண்டிருக்கிறோமேயல்லாமல், ஒருவரையொருவர் நேசிக்கச் செய்வதற்கு போதுமானதை நாம் கொண்டில்லை” என்பதாக அவர் குறிப்பிட்டவண்ணமாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்களா?
இந்த எதிர்மறையான வளர்ச்சியைக் குறித்து பவுல் முன்னுரைத்தான். “கொடிதான ஓநாய்கள்”—பெயரளவில் மாத்திரமே கிறிஸ்தவத் தலைவர்கள்—“எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்வார்கள்.” (அப்போஸ்தலர் 20:29, 30) இது எவ்வளவு தூரம் சென்றெட்டுவதாக இருக்கும்? எமது அடுத்தக் கட்டுரை விளக்கும். (g89 6/8)
[அடிக்குறிப்புகள்]
a வெளியில் இருப்பவர்களுக்கு கிறிஸ்தவம் “மார்க்கம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. “முதல்முதல் அந்தியோகியாவிலே [ஒருவேளை 10-லிருந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னால்] சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.”—அப்போஸ்தலர் 9:2; 11:26.
[பக்கம் 23-ன் படம்]
ஒரு கிறிஸ்தவனுக்கு ஜீவனுள்ள கடவுளில் விசுவாசம் இருக்கிறது
[பக்கம் 24-ன் படம்]
கிறிஸ்தவ நம்பிக்கை மீட்கப்பட்ட பூமிக்குரிய பரதீஸை முன்னோக்கிப் பார்க்கிறது
[பக்கம் 24-ன் படம்]
கிறிஸ்தவ அன்பு மற்றவர்கள் கடவுளைச் சேவிப்பதற்கு உதவி செய்வதில் பாரபட்சமற்றதாக இருக்கிறது