மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதின் எதிர்காலம்
பகுதி 14: பொ.ச. 622 முதல்கடவுளுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிதல்
“இந்தத் தூதர்களில் சிலரை மற்றவர்களுக்கு மேலாக நாம் உயர்த்தியிருக்கிறோம்.” அல்-பக்காரா (சூரா 2) வசனம் 253, குரானிலிருந்துa
எல்லாம் வல்ல, அன்பான ஒரு கடவுளை நம்பும் ஜனங்கள் அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்பட்டிருப்பதன் ஞானத்தை ஏற்றுக்கொள்கின்றனர். தெய்வீக அறிவு ஒப்படைக்கப்பட்ட தூதர்களின் மூலம் அவர் அளித்திருக்கும் வழிநடத்துதலை அவர்கள் போற்றுகின்றனர். இந்தத் தூதர்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பெரிய உலக மதங்களால் அறியப்பட்டிருக்கின்றனர். உதாரணமாக, இஸ்லாமை பின்பற்றும் 8,000 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், யூதேய-கிறிஸ்தவ ஆட்களாக ஆதாம், நோவா, ஆபிரகாம், மோச, தாவீது மற்றும் இயேசுவை கடவுளின் பெரிய தீர்க்கதரிசிகளாக நோக்குகின்றனர். ஆனால் ஏழாவது நபர்-முகமது தீர்க்கதரிசி மற்ற எல்லாத் தூதர்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டிருக்கிறார் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இஸ்லாம் என்ற பெயர் அர்த்தமுள்ளதாயிருக்கிறது இது கீழ்ப்படுத்துதல் அல்லது சரணடைதல் என்பதை குறிப்பதால்-இந்தச் சூழமைவில், அல்லாவின் சித்தத்திற்கும் சட்டத்திற்கும் கீழ்ப்படுத்துதல் என்று அர்த்தப்படும். இம்முறையில் கீழ்ப்படியும் அல்லது சரணடையும் ஒரு நபர், இஸ்லாம் என்ற வார்த்தையின் வினைச் சொல்லுக்கு ஒத்த சொல்லான “முஸ்லிம்” என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறார். முஸ்லிம்கள் அல்லா ஒருவருக்கே கீழ்ப்பட்டிருக்க வேண்டும். அல்லா என்பது தனிப்பட்ட பெயராக நோக்கப்படுகிறது. இது “அந்தக் கடவுள்” என்ற அர்த்தமுள்ள அல்-இலா என்ற அரேபிய வார்த்தைகளின் சுருக்கம். இப்பெயர் குரானில் சுமார் 2,700 தடவைகள் காணப்படுகிறது.
இஸ்லாமின் பிரதான தீர்க்கதரிசி
இஸ்லாமை நிறுவியவர் முகமது பின் அப்துல்லா (அப்துல்லாவின் மகன்) சுமார் பொ.ச. 570-ம் ஆண்டில் சவுதி அரேபியா, மெக்காவில் பிறந்தார். உள்ளூரின் பல தெய்வ நம்பிக்கைகளையும், சடங்குகளையும் குறித்து அவர் திருப்தியற்றவராக இருந்தார். யூத மதத்தின் பேரிலும் அல்லது கிறிஸ்தவத்தின் பேரிலும் தனக்கு எந்த நாட்டமும் இருந்ததாக அவர் உணரவில்லை என்று தோன்றுகிறது. H.M. பாகில், ஒரு முஸ்லிம் நூலாசிரியர் விளக்குகிறார்: “கிறிஸ்துவின் ஆதி போதனைகளிலிருந்து கிறிஸ்தவம் வெகு தூரம் விலகிவிட்டதால், பிறகு அல்லா தன் ஆதி திட்டத்தின் பாகமாக தன் கடைசி தீர்க்கதரிசி, முகமதை இந்த எல்லா மாற்றங்களையும் மீண்டும் கொண்டுவர மீட்பியக்க ஆதரவாளராக அனுப்பினார்.”
முகமது சடங்குகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் அரேபிய சுவையூட்டினார். எருசலேமும் அதன் ஆலயத்திற்கும் பதிலாக மெக்கா மற்றும் அதன் பரிசுத்த கோயில், காபா வைக்கப்பட்டது. சனிக்கிழமை யூதர்களுக்கும், ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவர்களுக்கும் என்பதற்கு பதிலாக வெள்ளிக்கிழமை சமூக ஜெப தினமாக ஆக்கப்பட்டது. மோச அல்லது இயேசுவுக்கு பதிலாக, இப்பொழுது முகமது கடவுளுடைய பிரதான தீர்க்கதரிசியாக நோக்கப்பட்டார்.
ஏறக்குறைய 40 வயதாகும்போது முகமது தான் கடவுளுடைய தூதராக அழைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். முதலில் அவர் தன் நம்பிக்கைகளை உறவினர்களோடும், நண்பர்களோடும் பகிர்ந்து கொண்டார், பின்பற்றுபவர்களை படிப்படியாக ஒரு தொகுதியாக அமைத்தார். “நாடு விட்டு பிற நாட்டிற்கு செல்லுதல்” என்பதற்கு அரேபிய வார்த்தையான ஹிச்ரா என்றழைக்கப்படும் சம்பவம் நடந்தபோது, அதாவது அவர் மெக்காவிலிருந்து மெதினாவுக்கு குடியேறியபோது, இஸ்லாமிய காலப்பகுதி உண்மையில் பொ.ச. 622-ல் ஆரம்பமானது. ஆக, முஸ்லிம் தேதிகள் A.H. (அன்னோ ஹெகிரே, குடிபெயர்ந்த வருடம்) என்பதாக கொடுக்கப்பட்டுள்ளது.
மெதினாவில் இருந்த யூதர்களை தனது புதிய மதத்திற்கும் மேலும் தீர்க்கதரிசியாக அவருடைய பாகத்திற்கும் இணங்க வைப்பதற்கு முகமது முயற்சி செய்தார். ஆனால் இணங்குவித்தல் தோல்வியடைந்தது. அவர்கள் அவரை எதிர்த்தனர். மேலும் அவருடைய எதிரிகளோடு மெக்காவிலும் மெதினாவிலும் மறை சதித் திட்டமிட்டனர். காலப்போக்கில் யூதர்களின் முக்கியமான தொகுதிகள் வெளியே விரட்டப்பட்டனர், குரைஸா என்ற இனம் அதன் ஆண்களை சாகடிப்பதன் மூலமும், பெண்களையும் பிள்ளைகளையும் அடிமையாக்குவதன் மூலமும் அழிக்கப்பட்டது.
பெரும்பகுதியான அரேபிய தீபகற்பம் போல இறுதியாக மெக்கா சமாதானமாக 8 A.H. (பொ.ச. 630)-ல் எடுத்துக் கொள்ளப்பட்டது. முகமதின் மரணத்திற்கு சில பத்தாண்டுகளுக்குப் பின், மரபுரிமையின் பேரில் இருந்த கருத்து மாறுபாடு உள்நாட்டு சண்டைக்கு வழிநடத்தியது, அதற்கு எதிர்விளைவு, இஸ்லாமாக இல்லாத தொகுதிகளையும் கருத்துக்களையும் சமுதாயமானது ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளும் நிலையை மேற்கொண்டது.
வெறும் ஒரு மதத்தைவிட மேலானது
இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை முறையாக இருக்கிறது, அரசு, அதன் சட்டங்கள், அதன் சமூக நிலையங்கள், அதன் பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்குவதால் அது வெறுமென ஒரு மதம் மட்டுமல்ல. 600 ஆண்டுகளுக்கும் மேலாக “இஸ்லாம் உலகின் அதிக சவாலான மதமாக, அதன் மிகப் பலமான அரசியல் வலிமையாக, அதன் மிக முக்கியமான பண்பாடாக இருந்தது” என்று ஆரம்ப இஸ்லாம் என்ற புத்தகம் ஏன் சொல்கிறது என்பதை இது விளக்குகிறது.
உண்மையிலேயே, முகமதின் மரணத்திற்குப் பின் ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே ரோம பேரரசு அதன் உச்சக் கட்டத்தில் இருந்ததைவிட, பெரிதான அரேபிய பேரரசு இந்தியாவிலிருந்து குறுக்காக வட ஆப்பிரிக்கா வழியாக ஸ்பயின் வரை பரவியிருந்தது. புதிய கண்டுபிடிப்புகளை இடமாற்றி அனுப்புவதற்கு உதவி செய்து, மேற்கத்திய நாகரீகம் செல்வம் பெறச் செய்யுமளவுக்கு சட்டம், கணிதம், வானியல், சரித்திரம், இலக்கியம், பூகோளம், தத்துவம், கட்டிடக்கலை, மருத்துவம், இசை, சமூக விஞ்ஞானம் ஆகிய துறைகளுக்கு முதன்மையான பங்களிப்பு செய்தது.
சீக்கிரத்தில் எரிந்து போகும் எரிநட்சத்திரம் போன்று
“முகமதின் பிரசங்கத்தின் நேரடியான விளைவாக அரேபிய படையெடுப்புகள் இருந்தன” என்று உலக சரித்திரத்தின் காலின்ஸ் அட்லஸ் கூறுகிறது. இஸ்லாமிய விரிவாக்கத்திற்கு மற்ற காரணங்களும் தங்கள் பங்கை செய்தன. உதாரணமாக, பைசான்ந்திய கிறிஸ்தவர்களுக்கும், பெர்சிய சோரஸ்டியர்களுக்கும் இடையே நிகழ்ந்த மத சண்டை, அரேபிய படை முன்னேற்றத்திற்கு இருவரையும் குருடாக்கியது.
நெடுந்தொலைவாக பரவியுள்ள பேரரசை மதத்தின் மூலம் பிடித்து வைக்க கடுமுயற்சி செய்வது ஒன்றும் புதிதானது இல்லை. ஆனால் “முஸ்லிம்கள் குரானில் முடிவான மற்றும் மறுக்க முடியாத சத்திய கூற்று இருப்பதாக நம்பினர்” என்று நூலாசிரியர் டெஸ்மண்ட் ஸ்டுவர்ட் விளக்குகிறார். அவர்கள் தன்னிறைவு உள்ளவர்களாகி, “அறிய வேண்டிய மதிப்புள்ளவைகள் எல்லாமே ஏற்கெனவே அறிந்தாகிவிட்டன, மேலும் முஸ்லிம்கள் அல்லாதவர்களின் கருத்துக்கள் எக்காரணத்தாலும் ஒரு பொருட்டல்ல என்று நம்பினர்.” மாற்றங்கள் “பிடிவாதமாக எதிர்க்கப்பட்டன.”
அதன் விளைவாக, 11-வது நூற்றாண்டுக்குள் பேரரசு ஏற்கெனவே கீழ் நோக்கிச் சரிந்து கொண்டிருந்தது. “வானில் குறுக்காக ஒளிவிட்டு செல்லும் எரிநட்சத்திர . . . தன் ஆற்றலின் காரணமாகவே விரைவில் தேய்ந்து விடுவதற்கு” ஸ்டுவர்ட் அதை ஒப்பிடுகிறார். ஆக, ஒரு சகோதரத்துவ கருத்தை உருவாக்கி, கடவுளிடம் தனிப்பட்ட அணுகுமுறையில் எளிதான வழியை அளித்த இம்மதம், ஒரு காலத்தில் தான் உருவாக்குவதற்கு உதவி செய்த அந்தப் பேரரசை உண்மையில் கீழே வீழ்த்துவதற்கு காரணமாய் இருந்தது. ஒரு காலத்தில் பேராசை அதன் எழுச்சி எவ்வளவு விரைவாக இருந்ததோ, அதன் மறைவு அவ்வளவு திடீரென நிகழ்ந்தது. பேரரசு மரித்துப் போனது, ஆனால் அதன் மதமோ தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தது.b
உண்மையான கீழ்ப்படிதல், கடவுள், அவருடைய சட்டங்கள் மற்றும் அவருடைய பிரதிநிதிகளுக்குக் கீழ்ப்படிவதையும் உட்படுத்துகிறது. முகமது அரேபியாவிலுள்ள அரேபிய இன குழுக்களை இணைப்பதில் வெற்றியடைந்தார், அவரையும் குரானையும் மையமாகக் கொண்ட இஸ்லாமிய சமுதாயத்தை (உம்மா) நிறுவினார். அது ஒரு மத மாநிலமாக இருந்தது. ஒரு தலைவரின் கீழ் அவர்களை சகோதரர்கள் ஆக்குவதற்கு கீழ்ப்படிதல் உதவியது. அரேபிய இன குழுக்களின் விரோதிகளோடு சண்டையிடுகையில், வாள் உபயோகிப்பதை இஸ்லாம் அனுமதித்தது. இந்த வாள் அவர்கள் பேரரசையும் மற்றும் அவர்கள் மதத்தையும் விரிவாக்க உதவியது. முகமது மரித்தபோது, வன்முறையான வித்தியாசங்கள் எழும்பின. இவைகள் முதலில் அரசியலாக இருந்தன. ஒரு கலிபா, ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கேள்வியிலிருந்து எழும்பியது. தங்கள் சகோதரர்களை வாள்களைக் கொண்டு சண்டையிடுவதற்கு இது அநேகரை உந்துவித்தது. மதம் அரசாங்கத்தோடு இரண்டறக் கலந்ததானது சமுதாயத்தைப் பிரித்தது. “கீழ்ப்படிதல்” ஒரு தலைவரின் கீழ் ஆட்களை ஒன்று சேர்க்கமுடியவில்லை.
முகமது தானே இஸ்லாமில் 72 முரணான தனிப்பிரிவுகள் உருவாகுவதை முன்னரே கண்டார் என்று பாரம்பரியம் சொல்லுகிறது. ஆனால் இன்று சில அதிகாரிகள் அநேக நூற்றுக்கணக்கானவைகளைப் பற்றி பேசுகின்றனர்.
ஷியா மற்றும் சுன்னி என்பவை இரண்டு பெரிய பிரிவுகளாவன. என்றபோதிலும், ஒவ்வொன்றும் பல உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 முஸ்லிம்களிலும், சுமார் 83 பேர் சுன்னியாகவும், சுமார் 15 பேர் ஷியாவைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர், மற்றவர்கள் பல்வேறு சமயப் பிரிவுகளான ட்ரூஸ், கருப்பு முஸ்லிம்கள், இஸ்லாமை புத்த மதம், இந்து மதம் மற்றும் உள்ளூர் மதங்களோடு கலக்கும் இன்டோனீஸியாவைச் சேர்ந்த அபன்கன்ஸ் போன்றவற்றை சேர்ந்தவர்களாயிருக்கின்றனர்.
ஷியா சிறுபான்மையரின் ஓர் அம்சம், மதமும் குரானும் மறைவான அர்த்தங்களை கொண்டிருக்கின்றன என்ற அதன் நம்பிக்கை. ஆனால் ஷியா உட்பிளவு மரபுரிமை கேள்வியின் பேரில் உண்மையில் எழும்பியது. ஷியாக்கள் (“கட்சிக்காரர்” என்றர்த்தங்கொள்ளும் ஒரு வார்த்தை “அலியின் கட்சிக்காரர்களைக்” குறித்து) மரபு வழியை அடிப்படையாகக் கொண்ட உரிமை என்ற ஒரு கொள்கையைப் பற்றியிருந்தனர், அதாவது ஆளுவதற்கான உரிமை, முகமதின் அத்தை மகனும், மருமகனுமான அலிக்கும் அவனுடைய வழி தோன்றியவர்களுக்கும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று உரிமை பாராட்டிக் கொண்டனர்.
அலியும் அவருடைய வழி தோன்றியவர்களும் இம்மாம்கள், முழுமையான ஆவிக்குரிய அதிகாரமுடைய தலைவர்கள். எவ்வளவு இம்மாம்கள் இருந்தனர் என்பதன் பேரில் கருத்து வேறுபாடு இருக்கிறது, ஆனால் பன்னிரண்டு ஷியா என்றழைக்கப்படும் மிகப் பெரிய ஷியா தொகுதியில் 12 இம்மாம்கள் இருந்ததாக நம்புகின்றனர். பொ.ச. 878-ல், 12-வது இம்மாம் “ஒளிந்து கொண்டார்” அதாவது, உலக முடிவில் திரும்பி வந்து நீதியான இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவுவேன் என்று வாக்களித்துவிட்டு பின்னர் மறைந்துவிட்டார்.
முகமதின் பேரன், ஹீசேனின் புனித உயிர்த் தியாகத்தை ஷியா முஸ்லிம்கள் ஆண்டுதோறும் நினைவு விழாவாக கொண்டாடுகின்றனர். நூலாசிரியர் ரஹ்மான் குறிப்பிடுகிறார்: “இந்நிகழ்ச்சியில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடகத்தோடு குழந்தைப் பருவத்திலிருந்து போஷிக்கப்பட்டால், ஒரு ஷியா முஸ்லிம் ஆழ்ந்த துயரமும், அநீதியுமான கருத்தை வளர்த்து புனித உயிர்த் தியாகம் செய்வதை குறிக்கோளாக உருவாக்கக்கூடும்.”
ஒற்றுமையின்மைக்கு அத்தாட்சிகள்?
கொலம்பியாவின் உலக சரித்திரம் குறிப்பிடுகிறது “கிரேக்க தத்துவமும், வாதமுறையும் ஒன்பதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதானது ஒரு தெளிவான இஸ்லாமிய தத்துவத்திற்கு (ஃபால்சஃபா) வழிவகுத்தது. இஸ்லாமின் பகுத்தறிவு கொள்கை சார்ந்ததும், சமய நூல் சார்ந்த மனநிலையில் அது தொலைதூர செயல் விளைவை ஏற்படுத்தியது. . . . காலம் கடந்தபோது இஸ்லாமே ஒரு மதமாகவும், வாழ்க்கை முறையாகவும் அதன் ஐக்கியத்தை பாதிக்கும் மிக ஆழ்ந்த மாற்றங்களை அனுபவித்தது.”
உதாரணமாக, இஸ்லாமிய இறைமை இணைவுப் பண்பிற்கு மேற்கத்திய பதம் சுபிஸம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தோன்றி விரைவில் ஒரு மாபெரும் மத இயக்கமாக உருவாகியது. 12-வது நூற்றாண்டுக்குள் சுபி சகோதரத்துவங்கள் மிகவும் பரவலாயிருந்தன. சுபி துறவிமடம், மசூதிக்கு ஏறக்குறைய சம முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. சுபிசத்தில் உள்ள பழக்கங்கள் ஒருமுகச் சிந்தனை திறங்களால் தூண்டப்பட்ட ஆழ்ந்த அறிதுயில் நிலை அல்லது வெறியூட்டப்பட்ட நடனம், வாய்பாடுகள் பாடுவது, அற்புதங்களில் நம்பிக்கை, புனிதர்களை வழிபடுதல் ஆகியவற்றை உட்படுத்தும்.
உள்ளூர் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் சுபிக்கள் ஏற்றுக்கொண்டனர். துருக்கியர்கள் தங்கள் மந்திர சூனிய பழக்கங்களை விடாது வைத்திருந்தனர், ஆப்பிரிக்கர்கள் தங்கள் மருத்துவ ஆட்கள், இந்தியர்கள் தங்கள் இந்து மற்றும் இந்துவுக்கு முன்னால் இருந்த புனிதர்களையும், தெய்வங்களையும், இன்டோனீஸியர்கள்—புதிய என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்வது போல்—தங்கள் “இஸ்லாமிய பழக்கங்களின் மேல் விரிப்பின் அடியில் இஸ்லாமுக்கு முன்னிருந்த நிலையையும் விடாது இருந்தனர்.”
19-வது நூற்றாண்டு மத்தியில் இரானில் ஷியா இஸ்லாமிலிருந்து பஹாய் மதம் உருவானது, சமீப காலங்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உட்குழு. மற்றொன்று அஹமதியா என்றழைக்கப்படும் சுன்னி உட்பிரிவு 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் உருவானது, தீர்க்கதரிசியாக தானே அறிவித்துக் கொண்ட மிர்சா குலாம் அஹமத், முகமதின் வெளிக்காட்டாகவும், திரும்பி வந்த இயேசு எனவும், இந்து கிருஷ்ணாவின் அவதாரம் எனவும் உரிமை பாராட்டிக் கொண்டார். அவர் இயேசு கொல்கதாவில் மரணத்திலிருந்து தப்பிய பின்னர் இந்தியாவுக்கு ஓடி 120-வது வயதில் மரணமடையும்வரை இருந்தார் என்று கற்பித்தார்.
குரானைப் பற்றி தனது விளக்கவுரையில் முஸ்லிம் நூலாசிரியர் S. அபுல் அலா மென்துதி சொல்கிறார்: “அல் பக்காரா வெளிப்படுத்தப்பட்ட சமயத்தில், (இந்தக் கட்டுரையின் தலைப்பில் மேற்கோளாக காட்டப்பட்டிருக்கும் சூரா) எல்லா விதமான மாய்மாலக்காரர்களும் தோன்ற ஆரம்பித்தனர்.” இதில் “முஸ்லிம்கள் (முனாபிக்குவின்) (மாய்மாலக்காரர்கள்) . . . இஸ்லாமின் சத்தியத்தைப் பற்றி அறிவுத் திறனோடு நம்பினர். ஆனால் தங்கள் முந்தைய சம்பிரதாயங்களை விட்டுக் கொடுப்பதற்கு அவர்களுக்கு போதிய ஒழுக்க சம்பந்தமான தைரியம் இல்லை.”
ஆகையால் ஆரம்பத்திலிருந்தே முகமது விரும்பிய விதத்தில் அல்லாவுக்கு கீழ்ப்பட்டிருப்பதில் பின்பற்றினவர்களில் அநேகர் தெளிவாக தவறினர். ஆனால் மற்றவர்கள் கீழ்ப்படிந்தனர். இவர்கள் கொடுத்த சவாலை நீக்க கிறிஸ்தவ மண்டலம் “பட்டயத்தை எடுக்க” தவறவில்லை. இது எமது ஏப்ரல் 8 இதழில் விவரிக்கப்படும். (g89 7/22)
[அடிக்குறிப்புகள்]
a முஸ்லிம் எழுத்தாளர்கள் விரும்பும் “குரான்” (பொருள், “மனப்பாட ஒப்புவிப்பு”) என்ற எழுத்துக்கூட்டை நாங்கள் இங்கு உபயோகிக்கிறோம். மேற்கத்திய உச்சரிப்பாகிய “கொரானை” அல்ல.
b இஸ்லாம் கண்டிப்பாக ஓர் அரேபிய மதம் என்ற பொது எண்ணம் தவறானது. இன்றுள்ள முஸ்லிம்களில் அநேகர் அரேபியர் அல்ல. முஸ்லிம் மக்கள் நிறைந்த தேசமான இன்டோனீஸியா 150 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்டிருக்கிறது.
[பக்கம் 27-ன் பெட்டி]
இஸ்லாமை நன்கு புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு உதவ
இஸ்லாமின் ஐந்து தூண்கள், முஸ்லிம்கள் ஒரு முறையாவது வெளிப்படையாக ஷாஹுதா என்றறியப்படும் விசுவாச அறிக்கையை செய்ய வேண்டும் என்று சொல்கிறது.—“கடவுளைத் தவிர வேறு கடவுளில்லை; முகமது கடவுளின் தீர்க்கதரிசி”; ஒரு நாளில் ஐந்து தடவை ஜெபங்கள் சொல்லுங்கள்; சக்கத் செலுத்துங்கள், இது கட்டாயம் செலுத்த வேண்டிய ஒரு வரி, இது இப்பொழுது பொதுவாக தானே முன்வந்து கொடுக்கும் அடிப்படையில் சேர்க்கப்படுகிறது; ஒன்பதாவது மாதமாகிய ரமதான் மாதத்தின்போது, சூரியன் உதயமாவதிலிருந்து சூரியன் மறையும் வரை உபவாசம் இருங்கள்; பணவசதி இங்குமேயானால் ஒரு தடவையாவது மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செல்லுங்கள்.
“ஜிஹத்” (“பரிசுத்த போர்” அல்லது “பரிசுத்த போராட்டம்”) கரிஜி உட்பிரிவினரால் ஆறாவது தூணாக நோக்கப்படுகிறது, ஆனால் பொதுவாக முஸ்லிம்களால் அல்ல. அதன் நோக்கம், புதிய என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது, “தனிப்பட்ட ஆட்களை இஸ்லாமுக்கு மதம் மாற்றுவது அல்ல, ஆனால் சமுதாயங்களின் கூட்டு விவகாரங்களின் மீது அரசியல் கட்டுப்பாட்டை பெற்று, இஸ்லாமின் நியமங்களின்படி அவைகளை நடத்துவது.” குரான் அப்பேர்ப்பட்ட “பரிசுத்த போரை” அனுமதிக்கிறது: “அல்லா தடைவிதித்திருக்கும் எந்த ஆளையும், நீதியான காரணத்தை தவிர்த்து எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் கொலை செய்யக்கூடாது.”—சூரா 17:33.
இஸ்லாமிய கோட்பாடு மற்றும் சட்டத்தின் முக்கியமான ஊற்றுமூலங்கள் கால் நூற்றாண்டு காலப்பகுதியாக எழுதப்பட்ட குரான்; சுன்னா (பாரம்பரியங்கள்); இஜ்மா (சமுதாயத்தின் முழு ஒற்றுமை); கியாஸ்; (தனிப்பட்டவரின் எண்ணம்). ஷரியா, முழுமையான மத, அரசியல், சமூக, வீடு மற்றும் முஸ்லிம்களின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட இஸ்லாமிய சட்டத் தொகுப்பேடு. பொது சகாப்தம் எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளின் போது ஒழுங்குபடுத்தப்பட்டது.
மெக்கா, மெதினா, எருசலேம் என்ற வரிசையில் முக்கியத்துவம் பெற்ற இஸ்லாமின் மூன்று பரிசுத்த இடங்களாகும்: மெக்கா, அதனுடைய புனித இடமாகிய காபாவின் காரணத்தால், அது ஆபிரகாம் கட்டினதாக பாரம்பரியம் சொல்கிறது; மெதினா, முகமதின் மசூதி அங்கு அமைந்திருக்கிறது; மேலும் எருசலேம், ஏனெனில் அங்கிருந்து முகமது பரலோகத்திற்கு ஏறிச் சென்றார் என்று பாரம்பரியம் சொல்கிறது.
[பக்கம் 28-ன் வரைப்படம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அதன் உச்சநிலையில் இஸ்லாமிய பேரரசு காணப்பட்ட விதம்