மதத்தின் கடந்த கால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 18: 15-ம் நூற்றாண்டு முதல்“கிறிஸ்தவர்களும்” “புறமதத்தினரும்” சந்தித்தபோது
“மதம் முழங்காலில் அல்ல, ஆனால் இருதயத்தில் இருக்கிறது”—D. W. ஜெரால்ட், 19-வது நூற்றாண்டு ஆங்கில நாடக ஆசிரியர்
ஆரம்பக் கால கிறிஸ்தவத்தின் தனிச்சிறப்புடைய அடையாளக் குறியான மிஷனரி ஊழியம், “சகல ஜாதிகளையும் சீஷராக்கும்”படியும் “பூமியின் கடைசி பரியந்தமும்” அவருக்கு சாட்சிகளாயிருக்கும்படியும் இயேசு கொடுத்த கட்டளைக்கு ஒத்திருந்தது.—மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8.
15-வது நூற்றாண்டில், கிறிஸ்தவமண்டலம் “புறமதத்தினரை” மதமாற்றும் ஒரு மிகப் பரந்த செயல் திட்டத்தில் இறங்கியது. அந்தச் சமயம் வரையாக இந்தப் “புறமதத்தினர்” என்னவிதமான மதத்தை அப்பியாசித்து வந்தனர்? பின்னர் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியது அவர்களுடைய இருதயத்தைத் தொட்டதா அல்லது சடங்கியல்பான பணிவில் தங்கள் முழங்கால்களில் விழும்படியாக மாத்திரமே அவர்களைச் செய்வித்ததா?
ஆப்பிரிக்காவில் சகாராவுக்கு தெற்கே 700 மனித இனப்பிரிவுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒவ்வொன்றும் அதன் சொந்த குல மதத்தைக் கொண்டிருந்தன. ஆனால் அதன் ஒத்தப் பண்புகள் அவைகளின் பொதுவான ஊற்றுமூலத்தை காட்டிக் கொடுத்துவிடுகின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பசிப்பிக் தீவுகளில், டஜன் கணக்கில் மற்ற அநேக பழங்குடி மதங்கள் காணப்படுகின்றன.
பெரும்பாலானவர்கள் ஓர் உன்னதமான கடவுளில் நம்பிக்கை வைத்தவர்களாக இருந்தபோதிலும் பல-தெய்வ வழிபாட்டு முறையில் பல சிறிய தெய்வங்களுக்கு இடமளிக்கின்றனர்—குடும்ப, குல அல்லது சமுதாய தெய்வங்கள். அமெரிக்கக் கண்டத்து மெக்ஸிகோ பழங்குடி இனத்தவரின் மதத்தைப் பற்றி செய்யப்பட்ட ஆய்வு 60-க்கும் மேற்பட்ட தனிவேறுபட்ட மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய தெய்வங்களின் பெயர்கள் பட்டியலைக் காண்பிக்கிறது.
ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் மிகத் “தொன்மையான” மதங்களிலுள்ள ஆட்கள், மோசக்காரன் என்றழைக்கப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட உருவில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சில சமயங்களில் இயலுலக அண்டத்தின் சிருஷ்டிகராகவும், மற்ற சமயங்களில் சிருஷ்டிப்பின் மறுதிட்ட அமைப்பாளருமாக விவரிக்கப்படும் இவர், கட்டாயமாவே கெட்ட நோக்கமுடையவராக இல்லாவிட்டாலும், சூழ்ச்சியாக ஏமாற்றும் இயல்புடையவராகவும் பேராசைமிக்கவராகவும் எப்போதும் கருதப்படுகிறார். வட அமெரிக்க நவாகோ இந்தியர்கள் அவர்தானே மரணம் செயல்படும்படிச் செய்ததாகச் சொல்கிறார்கள். ஓக்லாலா லாக்கோட்டா குலம், முதல் மனிதர்களுக்கு வேறு ஓரிடத்தில் மேம்பட்ட வாழ்க்கையை வாக்களிப்பதன் மூலம் அவர்கள் பரதீஸிலிருந்து துரத்தப்படுவதற்கு காரணமாயிருந்த தாழ்த்தப்பட்ட தூதன் என்பதாகக் கற்பிக்கிறது. மோசக்காரன் அடிக்கடி “சிருஷ்டிப்புக் கதைகளில்” “ஆன்மீக சிருஷ்டி கடவுளுக்கு எதிராக” செயலாற்றுகிறவனாய்த் தோன்றுவதாக மத கலைக்களஞ்சியம் சொல்லுகிறது.
பாபிலோனையும் எகிப்தையும் நினைப்பூட்டும் வகையில் ஒரு சில பழங்குடி மதங்கள் திரித்துவத்தைப் போதிக்கின்றன. காற்றின் ஆவியும் கடலின் ஆவியும் சந்திரனின் ஆவியும் ஒரு திரித்துவத்தை உண்டுபண்ணுகின்றன, இது “உண்மையில் எஸ்கிமோ சுற்றுப்புறத்தே உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது” என்பதாக தி எஸ்கிமோ புத்தகம் சொல்லுகிறது.
மனிதர்கள்—“ஆன்மீகமாக அழிக்கப்பட முடியாதவர்கள்”
மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோனால்ட் M. பெர்ன்ட், ஆஸ்திரேலியாவிலுள்ள தொன் முது மக்கள், வாழ்க்கை சுழற்சி “சரீரத்திலிருந்து முழுமையாக ஆன்மீக இயல்புடையதாக, மரணத்துக்குப் பின் தொடர்ந்து சென்று காலப்போக்கில் சரீர பரிமாணத்துக்குத் திரும்பிவிடுகிறது” என்பதாக நம்புகிறார்கள் என்று நமக்குச் சொல்கிறார். இது “மனிதர்கள் ஆன்மீக இயல்பில் அழிக்கப்பட முடியாதவர்கள்” என்று அர்த்தமாகிறது.
மரணத்துக்குப் பின் சாதாரண ஆட்கள் பேய்களாக மாறுகையில், முக்கியத்துவமுள்ள ஆட்கள் சமுதாயத்தின் காணக்கூடாத தலைவர்களாக கனப்படுத்தப்படவும் வேண்டிக்கொள்ளப்படவும் தகுதியுள்ளவர்களாக இருக்கும் மூதாதையரின் ஆவிகளாகவும் மாறிவிடுவதாக ஒரு சில ஆப்பிரிக்க இனத்தவர் நம்புகிறார்கள். மெலனீஸியாவின் மேனஸின் பிரகாரம், ஒரு மனிதனின் அல்லது நெருங்கிய இரத்த தொடர்புடைய உறவினனின் ஆவி குடும்பத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஆத்துமாக்களின் எண்ணிக்கை வரையறைக்குட்பட்டது, ஆகவே அவை, “முதலில் ஒரு மனிதனாகவும் அடுத்து ஓர் ஆவியாக அல்லது விலங்காக மாறிமாறி அவதரிப்பது அவசியமாக இருக்கிறது” என்பதாக ஒரு சில அமெரிக்க இந்தியர்கள் நம்பினார்கள். மத கலைக்களஞ்சியம் விளக்குகிறது: “மனித மரணம், ஒரு விலங்குக்காக அல்லது ஆவிக்காக ஓர் ஆத்துமாவை விடுவிக்கிறது. இது எதிர்மாறாகவும் நடைபெறுகிறது, இது, மனிதர்களையும் விலங்குகளையும் ஆவிகளையும் பரஸ்பர சார்புநிலையின் ஒரு சுழற்சியில் இணைக்கிறது.”
இதன் காரணமாகவே, ஆரம்பக் காலத்தில் ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டவர்கள் எஸ்கிமோ பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சிட்சிக்கத் தவறியதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அவர்களை “அம்மா” அல்லது “பாட்டி” போன்ற சொற்களாலும்கூட பேசினர். இது ஏனென்றால், அந்தப் பிள்ளைக்கு அந்த உறவினரின் பெயர் சூட்டப்பட்டிருக்கையில், எஸ்கிமோ தகப்பன் இயல்பாகவே “அவள் அவனுடைய மகனின் உடலுக்குள் இப்பொழுது இடம் மாறிவிட்டிருந்தாலும்கூட தன் பாட்டியை கடிந்துகொள்ளும் எண்ணத்திலிருந்து பின்வாங்கினான்” என்பதாக ஆசிரியர் எர்னஸ்ட் S. பர்ச் (இளையவர்) விளக்குகிறார்.
“வருங்கால உலகம்” மரணத்துக்குப் பின் மனிதர்களும் மிருகங்களும் சென்ற அந்த ஒரு சந்தோஷமான வேட்டைக் களம் என்று ஒருசில வட அமெரிக்க இந்திய குலத்தவரால் விளக்கப்பட்டது. அங்கே அவர்கள் அருமையான உறவினர்களோடு மீண்டும் இணைக்கப்பட்டார்கள், ஆனால் முன்னாள் விரோதிகளையும்கூட அங்கே எதிர்ப்பட்டார்கள். சில இந்தியர்கள், விரோதிகள் ஆவி உலகிற்குள் பிரவேசிப்பதைத் தடைசெய்யும் என்ற நம்பிக்கையில், தங்கள் விரோதிகளைக் கொன்ற பிறகு, அவர்கள் குடுமித் தோலைக் கீறி எடுத்தனர்.
பழங்குடி மதங்களில், மரணத்துக்குப் பின் ஏதோ ஒரு வகையான வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை மேலோங்கியிருப்பது, மனிதர்களுக்கு சாவாமையுள்ள ஓர் ஆத்துமா இருக்கிறது என்று கற்பிப்பதில் கிறிஸ்தவ மண்டலம் சரியாக இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. மெய் மதம் ஆரம்பத்தைக் கொண்டிருந்த அந்த ஏதேனில், கடவுள் மரணத்துக்குப் பின் வாழ்க்கையைப் பற்றி எதையும் சொல்லவில்லை; மரணத்துக்கு நேர் எதிர் மாறாக நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பை அவர் அளித்தார். மரணம் மேம்பட்ட ஒரு வாழ்க்கைக்கு நுழைவாயில் என்ற கருத்து சாத்தானால் வளர்க்கப்பட்டு பின்னால் பாபிலோனில் கற்பிக்கப்பட்டது.
மனித தேவைகளா அல்லது தெய்வீக அக்கறைகளா?
பழங்குடி மதங்களின் முக்கியத்துவம், தனிநபரின் பாதுகாப்பு அல்லது சமுதாய நலனின் மீது சாய்வதாக இருக்கிறது. இவ்விதமாக, ஆஸ்திரேலியாவின் தொன்முது மக்களின் மதத்தைக் குறித்து ரோனால்ட் பெர்ன்ட் இவ்விதமாக எழுதுகிறார்: “[அது] அன்றாட வாழ்க்கையில் மக்களின் மாறுபடுகின்ற அக்கறைகளை பிரதிபலித்தது. அது சமுதாய உறவுகள், மனித வாழ்வின் மீதான நெருக்கடி, நடைமுறையில் அழியாது தொடர்ந்து வாழ்ந்திருப்பதன் பேரிலான விஷயங்களில் கவனத்தை ஊன்ற வைத்தது.”
ஆன்மவாதம், உயிரிலாப் போலி உருவ வழிபாடு மற்றும் மந்திர சூனிய மதகுரு வழிபாடு என்றழைக்கப்படும் வணக்கமுறைகள் இப்படிப்பட்ட மனித தேவைகளை சமாளிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவை பல்வேறு வகைகளில் இணைந்தும், தீவிரத்தின் அளவில் வித்தியாசப்பட்டவையாகவும் பல்வேறு சமுதாயங்களிலும் காணப்படுகின்றன.
ஆன்மவாதம் சடப்பொருட்களான தாவரங்களுக்கும் கற்களுக்கும், இயற்கை நிகழ்ச்சிகளான இடிமின்னல் புயலுக்கும் நிலநடுக்கங்களுக்கும்கூட உணர்வுள்ள வாழ்வும், உள்ளே உறைந்திருக்கும் ஆவியும் இருப்பதாகக் கற்பிக்கிறது. உடலினின்று பிரியும் ஆவி உயிருள்ளவர்கள் மீது தீங்கு விளைவிக்கிற அல்லது நன்மை விளைவிக்கிற செல்வாக்கைச் செலுத்துகின்றது என்ற கருத்தையும்கூட இது உட்படுத்தக்கூடும்.
உயிரிலாப் போலி உருவ வழிபாடு என்பது ஒரு போர்ச்சுகல் நாட்டு மொழியிலிருந்து வருகிறது. இது அதன் சொந்தக்காரர்களுக்கு பாதுகாப்பை அல்லது உதவியை அளிப்பதாக கருதப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை உடையதாகக் கருதப்படும் பொருட்களை விளக்க சில சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே மேற்கு ஆப்பிரிக்க மக்கள் தங்கள் மதத்தில் பயன்படுத்திய மந்திரங்களையும் தாயத்துக்களையும் பார்த்த போர்ச்சுகல் ஆய்வாளர்கள் அவைகளைக் குறிப்பதற்கு இந்தப் பதத்தை பயன்படுத்தினர். விக்கிரகாராதனையோடு நெருக்கமாக சம்பந்தப்பட்ட உயிரிலாப் போலி உருவ வழிபாடு அநேக உருவங்களை எடுத்துக் கொள்கிறது. உதாரணமாக ஒருசில அமெரிக்க இந்தியர்கள் இறக்கைகளுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதாகச் சொன்னார்கள். அவைகளை, வான்நோக்கி வேண்டுதல்களை அல்லது செய்திகளை “பறக்கவிடுவதில்” திறம்பட்ட கருவிகளாகக் கருதினர்.
மந்திர சூனிய மதகுரு வழிபாடு தங்குஸோ–மன்சூரியன் வார்த்தையிலிருந்து வருகிறது. இதன் பொருள் “தெரிந்திருக்கிறவர்” என்பதாகும். இது சுகப்படுத்தவும், ஆவிமண்டலத்தோடு தொடர்பு கொள்ளவும் கூடியவராகச் சொல்லப்பட்ட ஷாமான் என்ற மனிதரை மையமாகக் கொண்டிருக்கிறது. மாயமந்திரவாதி, பில்லிசூனிய மருத்துவர், சூனியக்காரன்—நீங்கள் எந்த வார்த்தையைப் பயன்படுத்த விரும்பினாலும்—அவன் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த அல்லது உற்பத்தி ஆற்றலை மீட்டுத் தருவதாக உரிமைப் பாராட்டுகிறான். ஒருசில தென் அமெரிக்க காட்டுவாழ் குலத்தினர் செய்வது போல, சிகிச்சையானது, உங்கள் உதடுகளில், மூக்கின் இரு துளைகளின் இடைப்பகுதியில் அல்லது புறச்செவியில் துளைப் போடுவதை, உங்கள் உடலில் வண்ணம் பூசுவதை அல்லது ஒருசில ஒப்பனைகளை நீங்கள் அணிவதை தேவைப்படுத்தலாம். அல்லது நீங்கள் ஒருவேளை புகையிலை மற்றும் கொக்கோ இலைகள் போன்ற கிளர்ச்சியூட்டும் மருந்துகளையும் மயக்க மருந்துகளையும் பயன்படுத்துமாறு சொல்லப்படலாம்.
கோட்பாட்டளவில் பலவீனமாக இருப்பதன் காரணமாக பழங்குடி மதங்கள் சிருஷ்டிகரைப் பற்றிய திருத்தமான அறிவை அளிக்கமுடியாது. தெய்வீக அக்கறைகளுக்கு மேலாக மனித தேவைகளை உயர்த்துவதன் மூலம், அவை அவருக்கு உரியதை அவரிடமிருந்து பறித்துவிடுகின்றன. ஆகவே கிறிஸ்தவமண்டலம் அதன் நவீன நாளைய மிஷனரி வேலையை ஆரம்பித்த போது கேள்வியானது: “கிறிஸ்தவர்கள்” “புறமத” இருதயங்களைக் கடவுளிடமாக நெருங்கிவரச் செய்ய முடியுமா?
15-ம் நூற்றாண்டில், ஸ்பய்னும் போர்ச்சுகலும் புதிய ஆய்வுப் பயணங்களிலும் குடியேற்ற விரிவாக்க முயற்சிகளிலும் இறங்கின. இந்தக் கத்தோலிக்க வல்லரசுகள் புதிய நிலங்களைக் கண்டுபிடித்த போது, உள்ளூர்வாசிகளை மதம் மாற்ற அவர்களுடைய புதிய “கிறிஸ்தவ” அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள சர்ச் வற்புறுத்த ஆரம்பித்தது. போப்பாண்டவரின் கட்டளை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் மிஷனரி உரிமைகளை போர்ச்சுகலுக்கு வழங்கியது. பின்பு, அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின்னர் ஆறாவது போப் அலெக்ஸாண்டரினால் மத்திய அட்லான்டிக்கில் ஒரு கற்பனை கோடு வரையப்பட்டது, மேற்கின் உரிமைகள் ஸ்பய்னுக்கும் கிழக்கின் உரிமைகள் போர்ச்சுகலுக்கும் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், புராட்டஸ்டன்டுகள் கத்தோலிக்கருக்கு எதிராக தங்கள் சொந்த நிலையை பாதுகாத்துக்கொள்வதில் அளவுக்கு அதிகமாக ஆழ்ந்து போனதால், அவர்கள் மற்றவர்களை மதம் மாற்றுவதைப் பற்றி சிந்திக்கவில்லை, புராட்டஸ்டன்டு சீர்திருத்தவாதிகளும் அவ்விதமாகச் செய்ய அவர்களைத் துரிதப்படுத்தவில்லை. லூத்தரும் மெலாங்தனும், உலகின் முடிவு அத்தனை சமீபமாயிருப்பதால் “புறமதத்தினரை” எட்டுவதற்கு அது மிகவும் பிந்திவிட்டதாக நினைத்திருக்க வேண்டும்.
என்றபோதிலும் 17-ம் நூற்றாண்டின் போது, பயட்டிஸம் (கடவுள் பற்றார்வத்தைப் புதுப்பிக்க தொடங்கி வைக்கப்பட்ட இயக்கம்) என்ற ஒரு புராட்டஸ்டன்டு இயக்கம் வளர ஆரம்பித்தது. சீர்திருத்தத்தின் ஓர் இயல்பான விளைவாக, இது சடங்குகளுக்குப் பதிலாக தனிப்பட்ட சமய அனுபவத்துக்கு முக்கியத்துவமளித்து, பைபிள் வாசிப்பையும் மதத்தில் ஈடுபாட்டையும் வலியுறுத்தியது. எழுத்தாளர் ஒருவர் விவரித்தது போல “கிறிஸ்துவின் சுவிசேஷம் தேவைப்படுகின்ற நிலையில் மனித இனம் இருக்கின்றது என்ற அதன் உள்ளறிவு” கடைசியாக 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புராட்டஸ்டன்டு மதம் மிஷனரி ஊழியத்துக்காக “கப்பலில்” ஏற உதவியது.
1500-ல், உலகில் ஐந்தில் ஒரு பங்காக இருந்தது, 1800-ல் கிறிஸ்தவர்களென உரிமைப்பாராட்டுகிறவர்களின் அளவு நான்கில் ஒரு பங்காகவும் 1900-க்குள் மூன்றில் ஒரு பங்காகவும் உயர்ந்திருக்கிறது. உலகில் மூன்றில் ஒரு பாகம் இப்பொழுது “கிறிஸ்தவமாக” இருந்தது!
அவர்கள் உண்மையில் கிறிஸ்தவ சீஷர்களை உண்டுபண்ணினார்களா?
பழங்குடி மதங்களில் காணப்படும் சத்தியத்தின் தடயங்கள், பாபிலோனிய பொய்யின் அநேக அம்சங்களினால் சரிஈடு செய்யப்படுகின்றன, ஆனால் இது விசுவாசதுரோக கிறிஸ்தவத்தின் விஷயத்திலும் சமமான அளவில் உண்மையாக இருக்கிறது. ஆகவே பொதுவாக இருந்த இந்தச் சமய பாரம்பரியம் “புறமதத்தினர்” “கிறிஸ்தவர்களாவதை” வெகு எளிதாக்கிற்று. அனைத்து இனத்தவரின் புராண இலக்கியம் என்ற புத்தகம் சொல்வதாவது: “அமெரிக்காவில் வேறு எந்தப் பகுதியிலும் மேயனைப் போன்று கிறிஸ்தவ சடங்குகளுக்கும் அடையாள அர்த்தங்களுக்கும் இத்தனை அநேக அல்லது இப்பேர்ப்பட்ட கருத்தைக் கவரும் ஒப்புடைமைகளை அளித்திருப்பதாகத் தெரியவில்லை.” சிலுவை வழிபாடும், சடங்குகளில் மற்ற ஒப்புடைமைகளும் “குறைந்தபட்ச கொள்கை பிணக்கோடு மதமாற்றத்தை ஊக்குவித்தது.”
சுமார் 450 ஆண்டுகளாக ஒழுங்காக கிறிஸ்தவர்களால் பலாத்காரமாகக் கொண்டுசெல்லப்பட்டு அடிமைகளாக சேவிக்கும் பொருட்டு புதிய உலகுக்கு கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க மக்களாலும்கூட “குறைந்தபட்ச கொள்கை பிணக்கோடு” மதத்தை மாற்றிக்கொள்ள முடிந்தது. “கிறிஸ்தவர்கள்” மரித்துப் போன ஐரோப்பிய “புனிதர்களை” வணங்கியதன் காரணமாக, “புறமத கிறிஸ்தவர்கள்” ஆப்பிரிக்க மூதாதைய ஆவிகளை வணங்கியதற்கு எதிராகப் பேசுவதற்கு என்ன இருந்தது? இதன் காரணமாக மதத்தின் கலைக்களஞ்சியம் குறிப்பிடுவதாவது: “பில்லிசூனியம் . . . , மேற்கு ஆப்பிரிக்க மதங்களிலிருந்து ஒன்றாக இணைக்கப்பட்ட பொதுச் சமய சமரச மதம், மாந்திரீகம், கிறிஸ்தவ மதம் மற்றும் மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகள் . . . , பெயரளவில் கத்தோலிக்கர்களாக இருப்பவர்கள் உட்பட ஹேத்தியிலுள்ள அநேக மக்களுடைய உண்மையான மதமாக ஆகிவிட்டிருக்கிறது.”
கிறிஸ்தவ உலக சமயபரப்புக் குழுவின் சுருக்க அகராதி, லத்தீன் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸின் மதமாற்றம் வெகுவாக மேலீடானது என்றும் “இந்தப் பகுதிகளின் கிறிஸ்தவம் இன்று மூடநம்பிக்கையாலும் அறியாமையாலும் ஒவ்வொரு பாகமும் பாதிக்கப்பட்டதாயுமுள்ளது.” அமெரிக்கக் கண்டத்து மெக்ஸிக்கோ பகுதியின் பழங்குடி இனத்தவருக்கும், மாயாவினருக்கும், இன்காஸ்களுக்கும் “‘மதமாற்றம்’ வெறுமென தங்கள் பலதெய்வ கோயிலுக்குள் இன்னுமொரு தெய்வத்தைக் கூட்டுவதாக இருந்தது.”
கானா மற்றும் கோடி டி லவோரின் அக்கான் மக்களைப் பற்றி, இயற்வரலாற்றின் பீபாடி அருங்காட்சியகத்தின் மிச்சேல் கில்பர்ட் சொல்வதாவது: “பாரம்பரிய மதம் தொடர்ந்திருப்பதற்கு காரணம் பெரும்பாலான மக்களுக்கு இதுவே கருதிய பயனைத்தரும் மத அமைப்பாக, உலகத்துக்குத் தொடர்ந்து பொருள்தரும் ஒன்றாக உணரப்படுகிறது.”
சிம்பாப்வே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த M. F. C. போர்டில்லான், ஷோனா மத உறுப்பினர் மத்தியில், “மதத்தின் மாறுகின்ற இயல்பைக்” குறித்து பேசி இவ்விதமாக விளக்கினார்: “கிறிஸ்தவத்தின் பல்வேறு தோற்றங்கள், பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு மரபுகளோடு சேர்ந்து அனைத்தும் மதசம்பந்தமான விடைகளின் ஒரு தொகுதியை உண்டுபண்ண, ஒருவர் அந்நேரத்தின் தேவையைப் பொறுத்து, அவளோ அல்லது அவனோ தெரிவு செய்து கொள்ள முடியும்.”
ஆனால் மேலீடானத்தன்மை, அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் பலதெய்வ வழிபாடும் “புறமத கிறிஸ்தவர்களின்” தனித்தன்மையாக விளங்குமென்றால், அவர்கள் கிறிஸ்தவத்தைவிட பாரம்பரிய மதங்கள் கருதிய பயனை அளிப்பதாக நோக்கினால், மதத்தை வசதியாக அல்லது சூழ்நிலைக்கேற்ற ஒரு விஷயமாக மாத்திரமே கருதி சூழ்நிலையின் தூண்டுதலைப் பொறுத்து ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல அவர்களை அனுமதிக்குமேயானால், கிறிஸ்தவமண்டலம் உண்மையான கிறிஸ்தவ சீஷர்களை உண்டுபண்ணியிருக்கிறது என்பதாக நீங்கள் சொல்வீர்களா?
சீஷர்கள் இல்லையென்றால் அவர்கள் யார்?
உண்மைதான், கிறிஸ்தவமண்டல மிஷனரிமார்கள் எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்விபுகட்டுவதற்காக நூற்றுக்கணக்கான பள்ளிகளை நிறுவியிருக்கின்றனர். வியாதியஸ்தரை குணப்படுத்த மருத்துவமனைகளை கட்டியிருக்கின்றனர். ஓரளவுக்கு பைபிளுக்கும் அதன் நியமங்களுக்கும் அவர்கள் மரியாதையை வளர்த்திருக்கின்றனர்.
ஆனால் “புறமதத்தினர்” கடவுளுடைய வார்த்தையின் திடமான ஆவிக்குரிய உணவால் போஷிக்கப்பட்டிருக்கிறார்களா அல்லது விசுவாசதுரோக கிறிஸ்தவத்தின் அப்பத்துணுக்குகளாலா? “புறமத” நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் களையப்பட்டுவிட்டனவா அல்லது “கிறிஸ்தவ” போர்வையில் வெறுமென மூடப்பட்டிருக்கின்றனவா? சுருங்கச் சொன்னால், கிறிஸ்தவமண்டல மிஷனரிமார்கள் கடவுளுக்காக இருதயங்களை வசப்படுத்தியிருக்கின்றனரா அல்லது வெறுமென “புறமத” முழங்கால்களை “கிறிஸ்தவ” பலிபீடங்களுக்கு முன்பாக பணிந்துகொள்ளும்படியாக வற்புறுத்தியிருக்கின்றனரா?
விசுவாசதுரோக கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுகிறவன், அறியாமையான தன் கடந்த கால பாவங்களோடு, மாய்மால கிறிஸ்தவத்தின் புதிய பாவங்களைக் கூட்டி, இப்படியாக தன் குற்றப்பழியின் சுமையை இரட்டிப்பாக்கிக் கொள்கிறான். இதன் காரணமாக கிறிஸ்தவமண்டலத்துக்கு இயேசுவின் வார்த்தைகள் பொருத்தமானவையாக உள்ளன: “ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது உங்களிலும் இரட்டிப்பாய் அழிவுக்கு அவனை பக்குவமாக்குகிறீர்கள்.”—மத்தேயு 23:15, பிலிப்ஸ்.
கிறிஸ்தவமண்டலம் கிறிஸ்தவ சீஷர்களை உண்டுபண்ணும் சவாலில் தெளிவாகவே தோல்வியடைந்துவிட்டிருக்கிறது. உலக மாற்றத்தின் சவாலை அவள் மேம்பட்ட வகையில் எதிர்ப்பட்டிருக்கிறாளா? எமது அடுத்த இதழில் “கிறிஸ்தவமண்டலம் உலக மாற்றத்தோடு போரடுகிறது” என்ற கட்டுரை அந்தக் கேள்விக்கு விடையளிக்கும். (g89 9/22)
[பக்கம் 17-ன் படம்]
டொமினிகன் குடியரசில் இந்த உண்மையான கிறிஸ்தவ மிஷனரிமார்கள் முழங்கால்களை அல்ல, ஆனால் இருதயத்தை சென்றெட்டுகிறார்கள்