மிஷனரிகள் ஒளியின் ஊழியரா இருளின் ஊழியரா? பாகம் 5
ஒரு புதிய உலகுக்கு ஒரு புதிய செய்தி
மேற்கத்திய அரைக்கோளம் ஏறக்குறைய 16-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புதிய உலகம் என்று முதலில் அழைக்கப்பட்டது. கொலம்பஸ் 1492-ல் அதைக் “கண்டுபிடித்த”போது, மக்கள் அங்கு ஏற்கெனவே நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருந்ததையும் கண்டுபிடித்தார். ஆனால் அப்போது முதன் முறையாக அமெரிக்க இந்தியர்கள் பெயரளவிலான கிறிஸ்தவ மதத்தை ருசிபார்த்தனர். இது புதிய உலகத்துக்கு எதை அர்த்தப்படுத்தும்?
பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்க சர்ச் ஐரோப்பியர்களின் வாழ்க்கை மீது ஏறக்குறைய முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. அரசாங்க முயற்சி உட்பட, மனித முயற்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் அது தராதரங்களை வைத்து கட்டளைகளை உத்தரவிட்டது. சர்ச்சும் அரசாங்கமும் சேர்ந்து ஒத்துழைத்தது, சிலுவைப் போர்களைப் பிறப்பித்த ஒப்பந்தங்களும்கூட புதிய உலகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவந்தன.
பதினைந்தாம் நூற்றாண்டு இறுதிக்குள் ஸ்பானிய அரசர்கள் “ஸ்பானிய பேரரசு புதிய உலகின் இரட்சிப்புக்காக தெய்வீக உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவி” என்று புயுஅன்னஸ் ஏர்ஸ்-ல் உள்ள எடுகேசியன் டியாலஜிக்காவைச் சேர்ந்த சிட்னி H. ரூய் என்பவர் எழுதுகிறார். போப் ஆண்டவர் ஆட்சி அட்லான்டிக் பகுதியில் வடக்கு-தெற்கு என்ற கற்பனைக் கோட்டை வரைந்து, ஸ்பெய்னுக்கும் போர்த்துகலுக்கும் இடையே கண்டுபிடிப்பு உரிமையை பிரித்தது. ஸ்பெய்ன், போர்த்துகல் அரசாங்கங்கள் 1494-ல் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு இன்னும் மேற்கே அக்கோட்டை நகர்த்தினர். இவ்வாறு ஸ்பெய்ன் மத்திப மற்றும் தென் அமெரிக்காவின் அநேக பகுதிகளில் குடியேற ஆரம்பித்தது. போர்த்துகல் பிரேஸிலுக்குள் சென்றது, அதன் கிழக்குக் கரை இப்போது எல்லைக் கோட்டுக்கு கிழக்கே உள்ளது. ரூயின்படி, “நிலத்திற்கான உரிமை, உள்ளூர் மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டிய கடமையோடு இணைந்திருந்தது” என்று போப்பின் ஆணை அர்த்தப்படுத்தியதாக இரண்டு தேசங்களும் கூறின.
புதிய உலகை வென்று கீழ்ப்படுத்துதல்
கொலம்பஸ் 1493-ல் தன் இரண்டாவது கடற்பயணத்தில் உள்ளூர் மக்களை மதம் மாற்றுவதற்கென்று விசேஷமாக மதத் துறவிகளைத் தன்னோடு கூட்டிச் சென்றார். அப்போதிலிருந்து ஐரோப்பிய வீரர்களும் மிஷனரி பாதிரிகளும் புதிய உலகத்தை கைப்பற்றுவதில் ஒருவரோடொருவர் ஒத்துழைத்தனர்.
ஹெர்னன் கார்ட்டிஸ் 1519-ல் இப்போது மெக்ஸிகோ என்றழைக்கப்படும் இடத்தை அடைந்தார். அவரோடு ஒரு மதகுருவும் மற்ற பாதிரிகளும் சென்றனர். 50 வருடங்களுக்குள்ளாக மிஷனரிகளின் எண்ணிக்கை 800-ஆக உயர்ந்தது. இன்னும் 350 மிஷனரிகள் பெரு தேசத்தில் இருந்தனர், அதை பிரான்சிஸ்கோ பிசாரோ 1531-ல் சென்றடைந்தார்.
நிலப்பகுதியை வென்று கைப்பற்றும் திட்டத்துக்குத் தேவையான தார்மீக அங்கீகாரத்தை உலகப்பிரகாரமான அதிகாரிகளுக்கு 1493-ல் போப் முத்திரையிட்டு அனுப்பிய கடிதங்கள் அளித்தன. குடியேற்றக் கோட்பாடு கடவுளுடைய சித்தம் என்று உணர்ந்ததால், கடவுளுடைய ஆதரவின் பேரில் சார்ந்திருக்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். பிரியப்படுத்துவதற்கு அதிக ஆர்வமாயிருந்த சர்ச் அதிகாரிகள் குடியேற்ற அமைப்பின் பேரில் அங்கீகாரம் அளிக்க ஒத்துழைத்தனர். உண்மையில், 17-ஆம் நூற்றாண்டில் போர்த்துகலில் பிறந்து, ஆனால் பிரேஸிலில் வளர்ந்து ஜெஸ்யுட்டாக இருந்த அன்ட்டோனியோ வீயரா குடியேற்ற அமைப்பை புகழ்ந்து பேசினார். அது இல்லாவிடில் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது முடியாத காரியமாய் இருந்திருக்கும் என்று கூறினார்.
தங்கள் மதத்தைப் பரப்புவதற்கு குடியேற்ற அமைப்பை கருவியாக பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை என்று மிஷனரிகள் கண்டனர். என்றபோதிலும், தம்மைப் பின்பற்றுபவர்கள் உலகத்தின் பாகமாயிருக்கக்கூடாது என்று இயேசு கூறிய உலகத்தின் முழு பாகமாக இது அவர்களை ஆக்கியது.—யோவான் 17:16.
மத மாற்றம் செய்தல்
ரூய் என்பவரின்படி, கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் முதலில் “இந்திய மதத்தின் பழைய சடங்குகளையும் அதிக வெளிப்படையாக செய்யப்படும் ஆசாரங்களையும் வேரோடு பிடுங்க” ஆரம்பித்தனர். அவர் கூடுதலாக சொன்னார்: “தேவைப்பட்ட போது வற்புறுத்துதல் பயன்படுத்தப்பட்ட போதிலும், அநேக இந்தியர்கள் சமாதானமான முறையில் பாதிரிகளின் நேரடியான அணுகுமுறை மூலம் மதம் மாற்றப்பட்டனர்.”
நிச்சயமாகவே, வற்புறுத்தி மதம் மாற்றுவது உண்மையில் சரியானதேயல்ல என்று சில மிஷனரிகள் நம்பினர். உதாரணமாக, ஒரு ஸ்பானிஷ் டொமினிக்கன் மிஷனரியும் பாதிரியுமாக இருந்த பார்ட்டாலாமே டி லாஸ் காசாஸ் என்பவர் கொடூரமான முறைகள் பயன்படுத்தியதைக் குறித்து கண்டனம் செய்தார். இந்தியர்கள் சார்பாக ஸ்பெய்னில் இருந்த அரசாங்கத்தோடு அவர் திரும்பத் திரும்ப மன்றாடினார். அதன் காரணமாக அரசாங்கம் “இந்தியர்களின் ஆதரவாளர்” என்ற பட்டத்தை அவருக்குக் கொடுத்தது. என்றபோதிலும் அவருடைய முயற்சிகளுக்கு பலவகையான பிரதிபலிப்புகள் இருந்தன. சிலர் அவரை சிலுவைப்போர் வீரர், தீர்க்கதரிசி, கடவுளுடைய ஊழியர், கனவியலாளர் என்று அழைத்திருக்கின்றனர்; மற்றவர்கள் அவரை துரோகி, மற்றவர்கள் மீது நம்பிக்கையற்றவர், ஆட்சியை கவிழ்ப்பவர், முற்காலத்து மார்க்சிஸ்ட் என்று அழைத்திருக்கின்றனர்.
பழைய சடங்குகளை வேரோடு பிடுங்கும் இலக்கு பின்னர் கைவிடப்பட்டது. கிறிஸ்தவர்கள் என்ற பெயரை உள்ளூர்வாசிகள் ஏற்றுக்கொள்வதற்கு அழுத்தம் கொடுத்த பின்னர், அவர்கள் தங்கள் புறமத நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் தொடர்ந்து கடைப்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு, “பெருவில் இருந்த சியரா இந்தியர்கள் மத்தியில் அநேக இந்திய பண்டிகைகள் மறந்துபோன பெரு நாட்டு இனத்தவரின் நம்பிக்கைகளை உடைய பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்கின்றன,” என்று மனிதனும் புராணக்கதையும் மந்திரமும் (ஆங்கிலம்) என்ற பத்திரிகை சொல்கிறது. மெக்ஸிக இந்தியர்கள் கிறிஸ்தவத்தை “தங்களுடைய ஆவிக்குரிய சடாங்காச்சார தேவைகளுக்கு இணக்கமாயிருந்த அம்சங்களிலிருந்து தெரிந்துகொண்டு அவற்றை தங்கள் முற்பிதாக்களின் நம்பிக்கைகளின் அம்சங்களோடு கலந்து விட்டனர்” என்று லத்தீன் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் சரித்திரம் (ஆங்கிலம்) விளக்குகிறது.
இலட்சக்கணக்கான உள்ளூர் அமெரிக்கர்கள் ஞானஸ்நானம் பெற்றனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட “கிறிஸ்தவம்” வெறுமனே மேலோட்டமானதாகவே இருந்தது. பலமான விசுவாசத்தைக் கட்டுவதற்கு கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கருத்துக்களை அவர்களுக்குப் போதிக்க நேரம் செலவிடப்படவில்லை. லத்தீன் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் சரித்திரம் குறிப்பிடுகிறது: “உற்சாகத்துடன் புதிய விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதைப் போல் வெளிப்புறத் தோற்றத்துக்கு தோன்றிய இந்தியர்கள் தொடர்ந்து தங்கள் பழைய விக்கிரகங்களைப் பூஜித்து வந்தனர் என்பதற்கு திடுக்கிட வைக்கும் அறிகுறிகள் இருந்தன.” உண்மையில், சில இந்தியர்கள் ஒருவேளை “கிறிஸ்தவ கடவுள்” செவிகொடுக்கத் தவறினால் தங்களுக்கு உதவுவதற்கென்று “கிறிஸ்தவ” பீடங்களுக்கு பின்னால் பொய் மத விக்கிரகங்களை வைத்திருந்தனர் என்று அறிக்கை செய்யப்பட்டிருந்தது. பலதார விவாகம் போன்ற வெகு காலமாக வேரூன்றியிருந்த பழக்கங்களைக் கைவிடுவதிலும் அவர்கள் தயக்கத்தைக் காண்பித்தனர்.
ரோமன் கத்தோலிக்க குருவர்க்க அங்கத்தினர்கள் “கிறிஸ்தவ” மிஷனரிகளிடம் எதிர்பார்க்கப்படுவதைப் போன்று எப்போதும் நடந்துகொள்ளவில்லை. குருவர்க்கத்தினரிடையே பிணக்கங்கள் அடிக்கடி நேர்ந்தன. விசேஷமாக ஜெஸ்யுட்டுகளின் கொள்கைகள் மற்றும் செயல்களின் காரணமாக அவர்கள் அடிக்கடி குறைகூறப்பட்டனர். உண்மையில் 1759-ல் அவர்கள் பிரேஸிலை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர்.
புராட்டஸ்டன்ட் மிஷனரிகளின் வருகை பெரும் மாற்றங்கள் எதையும் செய்துவிடவில்லை. மிஷனரி அணிகள் அதிகரிக்க ஆரம்பித்தபோது பெயரளவான கிறிஸ்தவத்துக்கே உரிய ஒற்றுமையின்மையும் வளர ஆரம்பித்தது. புராட்டஸ்டன்டினர் ஏகாதிபத்திய கொள்கையை வளர்த்து வருவதாக கத்தோலிக்கர்கள் குற்றம் சாட்டினர்; பொய் மத நம்பிக்கைகளைப் பரப்பி மக்களை ஏழ்மையில் வைத்திருப்பதற்கு காரணம் கத்தோலிக்கர்கள் என்று புராட்டஸ்டன்டினர் குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டுகளில் அதிக உண்மையும் இருந்தது. கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற தவறினர்.
தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன்-படி புதிய உலகம் முழுவதிலும் “ஸ்பானிய, பிரெஞ்சு, ஆங்கிலேய அரசுகளின் குடியேற்ற முயற்சிகளின் கரமாக மத மாற்றங்கள் முன்னேற்றுவிக்கப்பட்டன.” ஸ்பெய்னும் போர்த்துகலும் லத்தீன் அமெரிக்காவின் பேரில் கவனத்தை செலுத்துகையில் பிரான்ஸும் பிரிட்டனும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் மற்றும் கனடா என்று பின்பு மாறிய நாடுகளில் அதிகமாய் ஈடுபட்டிருந்தன.a
லத்தீன் அமெரிக்காவிலுள்ள மிஷனரிகளைப் போன்று பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் மிஷனரிகளும் தவறான முன்னுரிமைகளை வைத்து அரசியல் விவகாரங்களில் சிக்கிக் கொண்டனர். இவ்வாறாக, தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் குறிப்பிடுகிறபடி, “கனடாவில் பிரெஞ்சு சகாப்தம் முடிவடையும் சமயத்தில் மிஷனரிகள் இந்தியர்களை மதமாற்றம் செய்வதைக் காட்டிலும் பிரான்ஸுக்கு பற்றுமாறா தன்மையுள்ளவர்களாக ஆக்குவதில் அதிக வெற்றியடைந்தனர்.”
கடவுளுக்காகவா அல்லது தங்கத்துக்காகவா?
பண்டைய ஆரம்பகால ஸ்பானிய வெற்றி வீரர்களால் பின்தொடரப்பட்ட இலக்கு “கடவுளுடைய ராஜ்யத்தை விரிவாக்குவதே” என்று சிலர் கூறலாம். ஆனால் மேம்பட்ட உண்மைத்தன்மையுடன் லத்தின் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் சரித்திரம் சொல்கிறது: “எல்லாவற்றையும்விட தங்கத்தையே அவர்கள் விரும்பினர்.” இந்தியர்கள் மதம் மாற்றப்பட்டவுடன் “தங்கத்தைப் பெருமளவில் மனத்தாழ்மையோடு கொண்டுவந்து அர்ப்பணித்து விடுவர்” என்று எண்ணப்பட்டது.
இவ்வாறாக கிறிஸ்தவமண்டல மிஷனரிகளில் சிலர் தீய நோக்குடைய ஆட்களின் மனமுவந்த கருவிகளாக தாங்கள் ஆகும்படி அனுமதித்து விட்டனர். இதை முதலாவது கண்டுணர்ந்த ஐரோப்பியர்களில் ஒருவர், முன்பு குறிப்பிடப்பட்ட பார்ட்டாலாமே டி லாஸ் காசாஸ் ஆவர். அவர் 1542-ல் எழுதியதை தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா மேற்கோளாகக் குறிப்பிடுகிறது: “இத்தனை எண்ணிலடங்கா ஆட்களை கிறிஸ்தவர்கள் ஏன் கொன்று அழித்தனர் என்பதற்குக் காரணம் தங்கத்துக்கான அவர்களுடைய ஆசையும் வெகு குறுகிய காலத்துக்குள் பணக்காரர்களாக ஆகிவிட வேண்டும் என்ற விருப்பமுமே.”
ஐரோப்பிய வெற்றியாளர்கள் ஆவிக்குரிய ஒளியூட்டும் விஷயத்தில் அதிகத்தைக் கொண்டு வரவில்லை. ஜேம்ஸ் A. மிக்கனெர் தன் புத்தகமாகிய மெக்ஸிகோ-வில், கார்ட்டிஸ் மெக்ஸிகோவின் மீது படையெடுத்தபோது, “காட்டுமிராண்டிகளால் அது நிரம்பியிருந்ததைக் கண்டதாகவும் அவர்களுக்கு அவர் நாகரீகத்தையும் கிறிஸ்தவ மதத்தையும் அளித்ததாகவும்” கிறிஸ்தவ அப்பாலஜிஸ்டுகள் கூறுவதாக சொல்கிறார். இருப்பினும் மெக்ஸிக இந்தியர்கள் பொ.ச. 900-லும்கூட “காட்டுமிராண்டிகளாக இல்லை, ஆனால் அவர்கள் தங்களுடைய அற்புதமான நாகரீகத்தைக் காத்துக்கொள்வதில் அத்தனை கவலையீனமாக ஆகிவிட்டபடியால், உண்மையான காட்டுமிராண்டிகள் அவர்களை மேற்கொள்ள அனுமதித்து விட்டனர்” என்று மிக்கனெர் கூறுகிறார். சில பெயர் கிறிஸ்தவர்களே இந்த “உண்மையான காட்டுமிராண்டிகள்.”
தயாரிக்கும் வேலை
கிறிஸ்தவ மண்டல மிஷனரிகள், “சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. (மத்தேயு 28:19, 20) புதிதாக மதம் மாறியவர்கள் கடவுளுடைய ஆவியின் கனிகளைப் பிறப்பிக்கும்படி போதனையளிக்கப்படவில்லை. அவர்கள் ஒரே விசுவாசத்தில் ஒற்றுமையாய் இல்லை.
உண்மை மனதோடு வேலை செய்த கிறிஸ்தவமண்டல மிஷனரிகளும்கூட கிறிஸ்தவத்தை விட்டு வழுவிய ஒரு முறையையே பரப்ப முடிந்தது. புதிய உலகத்தின் மீது வீசப்பட்ட வெளிச்சம் உண்மையில் மங்கலாகவே இருந்தது. ஆயினும் பைபிளை ஓரளவு அறிமுகப்படுத்துவதன் மூலம் கிறிஸ்தவமண்டலத்தின் மிஷனரிகள் இயேசு முடிவின் காலத்தில் நடந்தேறும் என்று தீர்க்கதரிசனமாய் உரைத்த ஓர் அத்தியாவசிய மிஷனரி ஊழியத்துக்கு தயாரிப்பு வேலையை செய்தனர். (மத்தேயு 24:14) இது கிறிஸ்தவ சரித்திரத்திலேயே இதுவரை நடந்திராத அதிவெற்றிகரமான தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு வேலையாக இருந்து, எல்லா தேசத்து மக்களுக்கும் பயனளிக்கும். அதைக் குறித்து, “இன்று உண்மையான சீஷர்களை உண்டுபண்ணுதல்” என்ற எமது அடுத்த இதழில் வெளிவரும் கட்டுரையை வாசியுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஸ்பானிய செல்வாக்கு நிச்சயமாகவே ஃப்ளாரிடாவிலும் இப்போது ஐக்கிய மாகாணங்களாக இருக்கும் பகுதியின் தென்மேற்கு மற்றும் தூர மேற்கு பிராந்தியங்களிலும் விசேஷமாக கலிபோர்னியாவிலும் செலுத்தப்பட்டது.
[பக்கம் 21-ன் படம்]
ஐரோப்பிய வெற்றிவீரர்களோடு மிஷனரிகள் அமெரிக்காக்களுக்கு வந்தனர்
[படத்திற்கான நன்றி]
From the book Die Helden der christlichen Kirche