மிஷனரிகள் ஒளியின் ஊழியரா இருளின் ஊழியரா? பாகம் 6
இன்று உண்மையான சீஷர்களை உண்டுபண்ணுதல்
இயேசு கிறிஸ்து கட்டளையிட்டார்: ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுங்கள்.’ (மத்தேயு 28:19) எவரிமேன்ஸ் என்ஸைக்ளோப்பீடியா இந்தக் கட்டளை “ஒவ்வொரு தலைமுறையிலும் கிறிஸ்தவர்களால் நிறைவேற்றப்பட்டு வருகிறது,” என்பதாக சொன்னபோதிலும், “சிலசமயங்களில் குறைந்த அளவு உற்சாகத்தோடு மட்டுமே அது செய்யப்படுகிறது,” என்பதாகவும் அது சொல்கிறது. மிஷனரி மித் என்ற புத்தகம் கேட்கிறது: “மிஷனரி சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதா?”
இந்த வருடம் ஜனவரி மாதத்தில், நியூஸ்வீக் பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்தது: “போப் ஜான் பால் II ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தெருக்களுக்குக் கொண்டுசெல்கிறார்.” பத்திரிகை இவ்வாறு விளக்கியது: “மதம் மாறுகிறவர்களுக்காக மூலை முடுக்கெல்லாம் தேடிவரும்படி அவர் 350 பாமர சுவிசேஷகர்களை ரோமின் டிஸ்கோ நிலையங்களுக்கும், சிறப்பு அங்காடிகளுக்கும் சுரங்கப்பாதை நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தக் காரியம் சாம்பல் புதனன்று (பிப்ரவரி 16) ஆரம்பமாகிறது. அது வெற்றிபெறுமானால், போப் உலகம் முழுவதற்கும் சுவிசேஷகர்களை அனுப்பப்போகிறார்—கத்தோலிக்க மிஷனரிகளை போனஸ் அயர்ஸ் முதல் டோக்கியோ வரையாக கதவுகளைத் தட்டும்படி செய்விக்கும் ஒரு நடவடிக்கை.”
மறுபட்சத்தில், யெகோவாவின் சாட்சிகள் வெகு காலமாக சுவிசேஷ வேலை செய்யவேண்டிய கடமையைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 4:5) நிச்சயமாகவே, அனைவருமே மிஷனரிகளாக அயல் நாடுகளில் பிரசங்கித்துக்கொண்டில்லை. ஆனால் அவர்கள் எங்கிருந்தாலும் பிரசங்கிக்க முடியும், பிரசங்கிக்கவும் செய்கிறார்கள். இந்தக் கருத்தில், அவர்கள் அனைவரும் மிஷனரிகள்.
விசேஷித்த வகையான ஒரு பள்ளி
1940-களின் ஆரம்பத்தில், உவாட்ச் டவர் சொஸையிட்டி உதவி அவசரமாக தேவைப்படும் அயல் நாடுகளில் மிஷனரிகளாக சேவிப்பதற்காக அனுபவமுள்ள ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்கு ஒரு பள்ளியை நிறுவியது. ஆண்டுகள் கடந்துசெல்கையில் பாடத்திட்டம் சற்றே மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் பைபிள் படிப்பையும் முக்கியமான சுவிசேஷ வேலையை செய்து முடிப்பதையும் வலியுறுத்தும் அதனுடைய அடிப்படை இலக்கிலிருந்து அது ஒருபோதும் விலகியது கிடையாது.
புதிய பள்ளிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட பெயர் கிலியட், எபிரெயுவில் இதன் பொருள் “சாட்சிக் குவியல்” என்பதாகும். யெகோவாவுக்குக் கனத்தைக் கொண்டுவரும் வகையில் சாட்சிகளைக் குவிப்பதற்கு உதவுவதன் மூலம் நம்முடைய நாளில் நடைபெறும் என்பதாக இயேசு முன்னுரைத்த உலகளாவிய ஒரு பிரசங்க வேலையை நிறைவேற்றுவதில் கிலியட் இன்றியமையாத ஒரு முக்கிய பாகத்தை வகித்திருக்கிறது.—மத்தேயு 24:14.
1943-ல் கிலியட் பள்ளியின் முதல் வகுப்பினிடமாக பேசுகையில், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் அப்போதைய பிரெஸிடென்ட்டான நேதன் H. நார், இவ்வாறு சொன்னார்: “ராஜ்ய செய்தியை அறிவித்துக்கொண்டு ரோமப் பேரரசின் எல்லா பகுதிகளுக்கும் பிரயாணம்பண்ணின அப்போஸ்தலன் பவுல், மாற்கு, தீமோத்தேயு இன்னும் மற்றவர்கள் செய்ததுபோன்ற ஒரு வேலையைச் செய்வதற்கு நீங்கள் கூடுதலான தயாரிப்பு அளிக்கப்பட்டு வருகிறீர்கள். . . . இயேசுவும் அப்போஸ்தலரும் செய்ததுபோல உங்களுடைய முக்கியமான வேலை வீடு வீடாக ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே ஆகும்.”
முதல் வகுப்பு அதன் பயிற்சி காலத்தை முடித்தப்பின்பு, அதன் பட்டதாரிகள் ஒன்பது லத்தீன் அமெரிக்க தேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று வரையாக, 110-க்கும் அதிகமான தேசங்களிலுள்ள 6,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிலியட் பள்ளியில் பயிற்சிபெற்று, 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தீவு தொகுதிகளுக்கும் மிஷனரிகளாக அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
வித்தியாசமான வகையான மிஷனரிகள்
இத்தொடரின் முந்தைய கட்டுரைகள் கடந்த காலத்தில் கிறிஸ்தவமண்டல மிஷனரிகளின் நடவடிக்கைகளைப் பற்றிக் கூறின. கிரீன்லாந்துக்கு அனுப்பப்பட்டவர்களைப் போன்று அநேகர் பைபிளை அல்லது அதன் பகுதிகளைப் பிராந்திய மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தனர். இருந்தபோதிலும், இந்த ஆரம்பகால மிஷனரிகள் பைபிளை மக்களுக்குப் போதிப்பதைவிட அடிக்கடி மற்ற அக்கறைகளை உடையவர்களாக இருந்தனர்.
உதாரணமாக, ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் “கல்வி நிறுவனங்களிலும் பள்ளிகளிலும்,” ஈடுபாடுகொண்டவர்களாக இருந்தனர் என கொடன்ஷா என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஜப்பான் குறிப்பிடுகிறது. அது சொல்கிறது: “அநேக மிஷனரிகள் தங்கள் புலமையின் மூலமாக சிறப்புடையவர்களாய் காண்பித்திருக்கின்றனர்.” அவர்கள் பன்மொழி புலவர்களாக அல்லது இலக்கியம், மொழி, வரலாறு, தத்துவம், கிழக்கு ஆசிய மதங்கள் மற்றும் ஜப்பானின் நாடோடிக் கதைகள் போன்ற பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் பேராசிரியர்களாக ஆனார்கள். “தரும சிந்தையுள்ள மற்றும் சமூக நல நிறுவனங்களும்கூட மிஷனரி வேலையின் முக்கியமான பாகங்களாக இருந்தன,” என்பதாக என்ஸைக்ளோப்பீடியா மேலுமாகச் சொல்கிறது.
பொதுவாக மிஷனரிகள் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு முதல் இடம் கொடுக்கவில்லை. அடிக்கடி ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்திசெய்வதை வலியுறுத்துவதற்கு மாறாக சரீரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதையே வலியுறுத்தினார்கள். தனிப்பட்ட அக்கறைகளை நாடிச்செல்வது அவர்களுடைய மைய கவனத்திற்குரியதானது. இவ்விதமாகவே 1889-ல் ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட சர்ச் ஆஃப் இங்லண்ட் மிஷனரி ஒருவர் இன்று “ஜப்பானிய மலையேறும் கலையின் தந்தை” என்பதாகவே நன்கு அறியப்பட்டிருக்கிறார்.
கிலியட் பயிற்சிபெற்ற மிஷனரிகள் கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்தவர்களிலிருந்து முக்கியமான விதங்களில் வித்தியாசப்பட்டவர்களாக இருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகத்தின் 23-ம் அதிகாரம் இவ்விதமாக குறிப்பிடுகிறது: “கிலியட் பள்ளி மிஷனரி பட்டதாரிகள் மக்களுக்குப் பைபிளைக் கற்றுக்கொடுக்கிறார்கள். சர்ச்சுகளை ஏற்படுத்திவிட்டு தங்களிடம் மக்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் வீடு வீடாகச் செல்கிறார்கள் . . . , ஊழியங்கொள்வதற்கு அல்ல, ஊழியஞ்செய்வதற்காக செல்கிறார்கள்.”
கனி என்னவாக இருந்திருக்கிறது?
ஐரோப்பாவில் கிறிஸ்தவ சீஷர்களை உண்டுபண்ணுவதற்கு பல நூற்றாண்டுகளைக் கொண்டிருந்த கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் எந்தளவு வெற்றிகரமாக இருந்திருக்கின்றனர்? எ க்ளோபல் வியூ ஆஃப் கிறிஸ்டியன் மிஷன்ஸ் புத்தகம் பதிலளிக்கிறது: “ஐரோப்பாவிலுள்ள 16 கோடி மக்கள் எந்த ஒரு மதத்திலும் உறுப்பினராக இல்லை என்பது மதிப்பிடப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவத்தில் இன்னும் பற்று மாறாதிருப்பதாக உரிமைபாராட்டுகிறவர்கள் மத்தியிலும் வெகு சிலரே தங்கள் மதத்தை முக்கியமானதாக எடுத்துக்கொள்கிறார்கள். . . . ஐரோப்பாவை ஒரு கிறிஸ்தவ கண்டம் என்றழைப்பது முற்றிலும் தவறாகும்.”
ஆசியாவிலுள்ள நிலை என்ன? கொடன்ஷா என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஜப்பான் பதிலளிக்கிறது: “பொதுமக்கள் கருத்தில் கிறிஸ்தவம் இன்னும் . . . சாதாரணமான ஜப்பானிய மக்களுக்குப் பொருந்தாத ஒரு ‘அந்நிய’ மத நம்பிக்கையாகவே கருதப்படுகிறது. . . . கிறிஸ்தவ இயக்கம் ஜப்பானிய சமுதாயத்தின் புற எல்லையில்தானே இன்னும் இருக்கிறது.” ஆம், ஜப்பானில் 4 சதவீதத்துக்கும் குறைவானவர்களும், இந்தியாவில் 3 சதவீதத்துக்கும் குறைவானவர்களும், பாகிஸ்தானில் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்களும் சீனாவில் 0.5-க்கும் குறைவானவர்களுமே தங்களைக் கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டிக்கொள்பவர்கள்.
ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவமண்டலம் நூற்றாண்டுகளாக செய்த மிஷனரி ஊழியத்துக்குப் பின்பு, அங்கிருக்கும் நிலைமை என்ன? ரோமில் இவ்வாண்டு வசந்த காலத்தில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆயர்களின் கூட்டம் ஒன்றைப் பற்றிய அறிக்கையில், ஜெர்மன் மொழி பத்திரிகை ஃபோக்கஸ் இவ்வாறு அறிவித்தது: “ஆப்பிரிக்க மதங்களை இனிமேலும் புறமத விக்கிரகாராதனை என்பதாக கண்டனம் செய்வதற்கில்லை. இன்னும் வெளியிடப்படாத அதிகாரப்பூர்வமான ஆவணம் ‘பாரம்பரியமான ஆப்பிரிக்க மதங்களை’ தகுதியுள்ள இன்றியமையாத கூட்டாளிகளுக்குத் தகுதியுள்ள இடத்தில் வைக்கிறது. அவற்றின் உறுப்பினர்கள் மதிப்புக்குத் தகுதியானவர்கள். முற்காலங்களில் காட்டுமிராண்டித்தனமான இயல்புடையது என்பதாக கண்டனம் செய்யப்பட்ட மதங்கள் ‘மிகவும் உறுதியான நம்பிக்கையுடைய கத்தோலிக்கரின் வாழ்க்கைப் பாணியையும்கூட அடிக்கடி முடிவுசெய்திருப்பதை’ மதகுருமார் கூட்டம் அங்கீகரித்தது.”a
அமெரிக்காக்களில், கிறிஸ்தவ சீஷர்களை உண்டுபண்ணுவதற்கு நூற்றாண்டுக்கணக்கான காலத்தைக் கொண்டிருந்த பின்பு, கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் எவ்வளவு வெற்றிகரமாக இருந்திருக்கின்றனர்? மிஷன் டு தி உவார்ல்ட் புத்தகம் பதிலளிக்கிறது: “சமீப பத்தாண்டுகளில் மிகுதியான மிஷனரி ஊழியத்தின் மத்தியிலும் ‘லத்தீன் அமெரிக்கா’ இன்னும் ‘அசட்டைசெய்யப்பட்ட கண்டம்’ என்ற பட்டப்பெயருக்குத் தகுதியுள்ளதாகவே இருக்கிறது.” ஐக்கிய மாகாணங்களைப் பற்றி, “அமெரிக்க காட்சியில் மதம் எங்கும் பரவியிருந்தபோதிலும் சிறுபான்மையானோரே அதை முக்கியத்துவமுள்ளதாக எடுத்துக்கொள்கின்றனர். . . . வாக்கெடுப்பவர்களிடம் ஞாயிற்றுக்கிழமைகளை சர்ச்சில் செலவழிப்பதாக சொல்பவர்களில் பாதிப்பேர் உண்மையைச் சொல்லிக்கொண்டில்லை. . . . 18 மற்றும் அதற்கும் மேலான வயதுள்ள அமெரிக்கர்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு தங்கள் நோக்குநிலையில் முற்றிலும் மதசார்பற்றவர்களாக இருக்கின்றனர் . . . 19 சதவீதத்தினர் மாத்திரமே . . . ஒழுங்காக மதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.”
சுருக்கமாகச் சொன்னால், வறுமை, மோசமான உடல் ஆரோக்கியம், கல்வி அறிவில்லாமை ஆகிய பிரச்சினைகளைக் குறைக்கும் முயற்சியில், ஒரு தொகுதியாக, கிறிஸ்தவமண்டல மிஷனரிகள், அதிகபட்சமாக தற்காலிகமான பகுதியளவான பரிகாரத்தை மாத்திரமே கொண்டுவந்திருக்கும் மனித ஏற்பாடுகளையே வெளிப்படையாக ஆதரித்து வந்திருக்கின்றனர். மறுபட்சத்தில் உண்மையான கிறிஸ்தவ மிஷனரிகள் நிரந்தரமான மற்றும் முழுமையான பரிகாரத்தைக் கொண்டுவர இருக்கும் கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்திடமாகவே மக்களை வழிநடத்துகிறார்கள். அது வெறுமனே பிரச்சினைகளைக் குறைக்காது; ஆனால் அவற்றை தீர்த்துவைக்கும். ஆம், கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்துக்குப் பரிபூரண ஆரோக்கியம், உண்மையான பொருளாதார பாதுகாப்பு, அனைவருக்கும் பலன்தரும் வேலைசெய்வதற்கு முடிவில்லாத வாய்ப்புகள் மற்றும் முடிவில்லா வாழ்க்கையைக் கொண்டுவரும்!—சங்கீதம் 37:9-11, 29; ஏசாயா 33:24; 35:5, 6; 65:21-23; வெளிப்படுத்துதல் 21:3, 4.
கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் ‘சகல ஜாதிகளையும் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுத்ததற்கு’ சான்றாக கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டிக்கொண்டு எப்போதாவது மத ஆராதனைகளுக்குச் செல்பவர்களைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் இந்த மிஷனரிகள் ஞானஸ்நானம்பெற்ற இவர்களுக்கு ‘இயேசு கட்டளையிட்ட யாவற்றையும் கைக்கொள்ளும்படியாக’ கற்பிக்க தவறியிருக்கின்றனர் என்பதை உண்மைகள் காட்டுகின்றன.—மத்தேயு 28:19, 20.
என்றபோதிலும், உண்மைக் கிறிஸ்தவர்களின் கற்பிக்கும் வேலை கடவுளுடைய புதிய உலகிலும் தொடர்ந்து செய்யப்படும். கடவுளுடைய வழிகளில் போதிக்கப்பட வேண்டிய அவசியத்திலிருக்கும் லட்சக்கணக்கான உயிர்த்தெழுப்பப்பட்டவர்களையும் அது சென்றடையும். அப்போது, சாத்தானின் குறுக்கிடுதல் எதுவுமில்லாமல், கிறிஸ்தவர்கள் பல பத்தாண்டுகளாக தாங்கள் செய்துவந்திருப்பது போலவே சீஷர்களைத் தொடர்ந்து உண்டுபண்ணிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியான சிலாக்கியத்தை உடையவராய் இருப்பர்.
[அடிக்குறிப்புகள்]
a பக்கம் 18-ல் “ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச்” கட்டுரையைக் காண்க.
[பக்கம் 24-ன் பெட்டி]
அவர்கள் மக்களுக்கு எவ்விதமாக உதவியிருக்கின்றனர்
பின்வருபவை கிலியட் பயிற்சி பெற்ற மிஷனரிகளின் உதவியால் நன்மையடைந்துள்ளவர்களின் குறிப்புகள்.
“அவர்கள் விடாமுயற்சியும் தங்களுடைய தாயகத்தில் இருப்பதிலிருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்—சீதோஷ்ண நிலை, மொழிகள், பழக்க வழக்கங்கள், உணவு மற்றும் மதங்கள்—காரியங்களைப் பொறுத்துக்கொள்வதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவர்கள் தங்கள் நியமிப்பிலிருந்து விலகாதிருந்தார்கள், சிலர் மரணம் வரையாக அப்படி இருந்தார்கள். அவர்களுடைய நல்ல படிப்பு பழக்கங்களும் ஊழியத்தில் வைராக்கியமும் அதே காரியங்களை வளர்த்துக்கொள்ள எனக்கு உதவியது.”—J. A., இந்தியா.
“என்னோடு படிக்கையில் மிஷனரியின் காலந்தவறாமை என்னைக் கவர்ந்தது. என்னுடைய தப்பெண்ணங்களையும் அறியாமையையும் பொறுத்துக்கொள்வதில் அவர் குறிப்பிடத்தக்க தன்னடக்கத்தைக் காண்பித்தார்.”—P. T., தாய்லாந்து.
“என்னுடைய மனைவியும் நானும் மிஷனரி சாட்சிகள் காண்பித்த ஒழுக்கத்தூய்மையைப் போற்றினோம். அவர்களுடைய செயல் நடவடிக்கை முழுநேர சேவையை எங்களுடைய இலக்காக்கிக் கொள்ளும்படி செய்வித்தது. இன்று நாங்கள்தாமே மிஷனரிகளாக இருக்கும் சந்தோஷத்தை அனுபவித்து வருகிறோம்.”—A. K., ஜப்பான்.
“கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் சொகுசான வாழ்க்கையை நடத்தினார்கள். வேலைக்காரர்கள் வீட்டைச் சுத்தம்செய்து, சமைத்து, துவைத்து, தோட்ட வேலையைக் கவனித்து, காரை ஓட்டினார்கள். கிலியட் மிஷனரிகள் திறமையாக தங்களுடைய சொந்த வீட்டுவேலையைச் செய்துகொண்டு அதே சமயத்தில் உள்ளூர் மக்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி கற்றறியவும் உதவிசெய்வதைப் பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன்.”—S. D., தாய்லாந்து.
“மிஷனரி சகோதரிகள் சீதோஷ்ணம் 115 டிகிரி பாரன்ஹீட்டுக்குச் சென்றபோதிலும் மக்களைச் சந்திப்பதற்காக சைக்கிள்களில் சென்றனர். அவர்களுடைய உபசரிக்கும் குணமும் பாரபட்சமில்லாமையும், சகிப்புத்தன்மையும் சத்தியத்தைக் கண்டுணர எனக்கு உதவியது.”—V. H., இந்தியா.
“மிஷனரிகள் மேலானவர்களாக உணரவில்லை. அவர்கள் மனத்தாழ்மையோடு உள்ளூர் மக்களுக்கும் ஏழ்மையான வாழ்க்கை நிலைமைகளுக்கும் தக்கவாறு தங்களை அமைத்துக்கொண்டார்கள். அவர்கள் ஊழியஞ்செய்ய வந்திருந்தார்கள், ஆகவே ஒருபோதும் குறைகூறவில்லை, ஆனால் எப்பொழுதும் சந்தோஷமாகவும் மனநிறைவாகவும் காட்சியளித்தார்கள்.”—C. P., தாய்லாந்து.
“பைபிள் சத்தியங்களை அவர்கள் கலப்படம் செய்யவில்லை. என்றபோதிலும், உள்ளூர் மக்களை அவர்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தின் எல்லா அம்சங்களும் தவறு என்றோ மேற்கத்திய வழிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றோ உணரும்படியாகச் செய்யவில்லை. மற்றவர்களை அவர்கள் ஒருபோதும் தாழ்வானவர்களாக அல்லது தகுதியற்றவர்களாக உணரும்படி செய்தது கிடையாது.”—A. D., பாப்புவா நியூ கினீ.
“கிறிஸ்தவமண்டல மிஷனரிகளைப் போல் இல்லாமல், அவர்கள் என்னோடுகூட காலை மடித்து தரையில் உட்கார மனமுள்ளவர்களாக இருந்தார்கள். எங்களுடைய கொரிய பதார்த்தங்களைச் சாப்பிடவும் மனமுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களிடமாக எனக்கிருந்த பாசம் முன்னேறுவதற்கு எனக்கு உதவியது.”—S. K., கொரியா.
“நான் பத்து வயதில் இருந்தபோது பள்ளியிலிருந்து நடுப்பகலில் வந்துவிடுவேன். ஒரு மிஷனரி பிற்பகலில் தன்னோடு வெளி ஊழியத்துக்கு வரும்படியாக என்னை அழைத்தார். அவர் எனக்கு அநேக பைபிள் நியமங்களைக் கற்றுக்கொடுத்து யெகோவாவின் அமைப்புக்கு ஆழ்ந்த போற்றுதலை என் மனதில் பதியவைத்தார்.”—R. G., கொலம்பியா.
“நியமிப்புகளை விடாது பற்றிக்கொண்டிருக்கவும் குறைகூறாமல் செய்யப்பட வேண்டியதைச் செய்யவும் எனக்கு அவர்கள் கற்பித்தார்கள். மிஷனரிகளை எங்களிடம் அனுப்பியதற்காக யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகூறுகிறேன்.”—S. K., ஜப்பான்.
[பக்கம் 23-ன் படம்]
16 தேசங்களிலிருந்து வந்த கிலியட் பயிற்சி பெற்ற மிஷனரிகள் அண்மையில் நடந்த ஒரு மாநாட்டில் அனுபவங்களைக் கூறுகின்றனர்