மிஷனரிகள் ஒளியின் ஊழியரா இருளின் ஊழியரா? பகுதி 4
“இருண்ட கண்டத்”துக்கு ஆவிக்குரிய வெளிச்சம்?
“ஆப்பிரிக்கா 100-க்கும் குறைவான வருடங்களுக்கு முன்பாக, இருண்ட கண்டம் என அழைக்கப்பட்டது. ஏனென்றால் அதன் பெரும்பகுதி ஐரோப்பியர்களுக்கு அறியப்படாதிருந்தது.” உலக புத்தக களஞ்சியம் (World Book Encyclopedia) இங்குக் குறிப்பிடுவது ஆப்பிரிக்க இருட்டு அல்ல, ஆனால் மாறாக, ஐரோப்பிய இருட்டாகும், அதாவது, பெரிதும் கண்டாராயப்படாத கண்டத்தைப் பற்றிய ஐரோப்பாவின் அறிவின்மை. ஆகவே ஆப்பிரிக்கா “ஒளியுள்ள” என்றர்த்தங்கொள்ளும் ஆப்ரீகா என்ற லத்தீன் பெயரிலிருந்து அதன் பெயரை வருவித்திருப்பதற்கு சாத்தியமிருக்கிறது என்பதில் எந்தவொரு முரண்பாடும் இல்லை.
என்றாலும், ஒரு கருத்தில், ஆப்பிரிக்கா இருட்டிலேயே இருந்தது. பைபிள் சத்தியஞ்சார்ந்த இருட்டாக அது இருந்தது. டானல்ட் காகன் என்ற கான்டர்பரியின் முன்னாள் ஆர்ச்பிஷப், ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் “இருநூறு வருடகாலத்தின் பெரும்பகுதியில் மேற்கத்திய சர்ச்சுகள் தங்கள் மனித சக்தி மற்றும் பண வளங்களைக் கொட்டியிருக்கிற இரண்டு பெரும்கண்டங்கள்,” என்று அழைக்கிறார்.
கிறிஸ்தவமண்டல மிஷனரிகளில் பலர் உண்மையுள்ளவர்களாகவே இருந்தார்கள். சிலர் தங்கள் வேலை நாட்டத்தில் தங்களையே உயிர் பலியாகச் செலுத்தியிருக்கின்றனர். ஆப்பிரிக்க வாழ்வில் அவர்களுடைய பாதிப்பு பெரிதளவாக இருந்தது. ஆனால், கிறிஸ்து செய்ததைப்போல, “நற்செய்தியின் வழியாய் ஒளிரச் செய்”து, இப்படியாக இருண்ட கண்டம் என்றழைக்கப்பட்டதன் ஆவிக்குரிய இருட்டைப் போக்கினார்களா?—2 தீமோத்தேயு 1:10, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.
உள்ளூர் மிஷனரிகள் வெளிச்சத்தின் முதல் மினுமினுப்புகளை அளிக்கின்றனர்
பதிவிலுள்ளபடி, ஆப்பிரிக்காவில் பிரசங்கம் செய்த முதல் கிறிஸ்தவன் ஓர் ஆப்பிரிக்க நபரே. இவர் ஓர் எதியோபிய மந்திரியாக அப்போஸ்தலர் 8-ம் அதிகாரத்தில் பைபிளில் குறிப்பிடப்படுகிறார். யூத மதத்தைத் தழுவியவராக, எருசலேமில் உள்ள ஆலயத்தில் வணக்கத்தை முடித்து, வீடு திரும்புகிற வழியில் பிலிப்பு அவரை கிறிஸ்தவத்துக்கு மாற்றினார். சந்தேகமேயில்லாமல், பூர்வ கிறிஸ்தவர்களின் வைராக்கியத்திற்கு இணங்க, இந்த எதியோபியன் பிற்பாடு தான் கேள்விப்பட்ட நற்செய்தியைச் சுறுசுறுப்பாகப் பிரசங்கித்து, தன்னுடைய சொந்த நாட்டில் ஒரு மிஷனரியாக ஆனார்.
என்றபோதிலும், இந்த விதத்தில்தான் எதியோபியாவில் கிறிஸ்தவம் ஸ்தாபிக்கப்பட்டதா இல்லையா என்பதில் சரித்திராசிரியர்கள் முரண்படுகின்றனர். எதியோபிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் நான்காம் நூற்றாண்டு வரை சென்று காலக்கணக்கீடு செய்வதாகத் தோன்றுகிறது. அந்த நூற்றாண்டில் அலெக்ஸாந்திரியாவிலுள்ள காப்டிக் சர்ச்சின் பிஷப்பாகிய அதனேசியஸ், ஃபுரூமென்ஷியஸ் என்ற சீரியநாட்டைச் சேர்ந்த தத்துவம் பயிலும் மாணாக்கன் ஒருவரை எதியோபிய “கிறிஸ்தவர்”களுக்கு பிஷப்பாக நியமித்தார்.
காப்டிக் சர்ச், அதை ஆரம்பித்தவரும் முதல் தலைவருமாக இருந்தவரும் சுவிசேஷகனாகிய மாற்கு என்று உரிமைபாராட்டுகிறது. காப்ட் என்பது “எகிப்தியன்” என்பதற்கான கிரேக்க சொல்லிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரியப்படி, முதல் நூற்றாண்டு மத்திபத்திற்கு முன்பாக அவர் எகிப்தில் பிரசங்கம் செய்தார். என்னவானாலும், “கிறிஸ்தவம்” வட ஆப்பிரிக்காவுக்கு முன்கூட்டியே பரவியது, அப்போது ஆரிஜனிஸ், ஆகஸ்டின் போன்றவர்கள் பதவிக்கு வந்தார்கள். எகிப்திலுள்ள அலெக்ஸாந்திரியாவின் கிறிஸ்தவ சமய பள்ளியானது, கிறிஸ்தவ கல்விக்கு பேர்போன இடமாக ஆனது. இதன் முதல் தலைவர் பான்டீனஸ் என்பவர் ஆவார். ஆனால் பான்டீனஸுக்கு அடுத்துவந்த அலெக்ஸான்டிரியாவைச் சேர்ந்த க்ளெமென்ட் என்பவரின் காலத்திற்குள்ளாக, விசுவாசதுரோகம் அதன் பாதிப்பை ஏற்படுத்தியது தெளிவாகக் காணப்பட்டது. க்ளெமென்ட் என்பவர் “கிறிஸ்தவக் கொள்கையையும் பைபிளையும் கிரேக்க தத்துவத்தோடு ஒன்றுசேர்க்கவேண்டும் என்று பரிந்துபேசியதாக” மதக் களஞ்சியம் (The Encyclopedia of Religion) பகிரங்கப்படுத்துகிறது.
காப்டிக் சர்ச் மும்முரமான மிஷனரி சேவையில், விசேஷமாகக் கிழக்கத்திய லிபியாவில் இறங்கியது. நியூபியாவிலும் சூடானின் கீழ்நிலப்பகுதியிலும் செய்யப்பட்ட அகழாய்வுகளும் காப்டிக் செல்வாக்கை எடுத்துக்காட்டுகின்றன.
ஐரோப்பிய மிஷனரிகள் வருகின்றனர்
16-வது முதல் 18-வது நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பியர்கள் சிறிய அளவில் மிஷனரி வேலை செய்தனர். அப்போது கத்தோலிக்கர் ஓரளவு வெற்றிபெற்றார்கள். 19-வது நூற்றாண்டின் தொடக்கம் வரை புராட்டஸ்டன்ட் மதங்கள் இல்லை. அப்போது சியர்ரா லியோன் அவர்களுடைய மிஷனரிகள் சென்றெட்டிய முதல் மேற்கு ஆப்பிரிக்க நாடாக ஆனது. புராட்டஸ்டன்டினர் கத்தோலிக்கருக்கு ஈடாவதற்கு பிரயாசப்பட்டனரென்றாலும், இன்று, ஒருசில நாடுகளைத் தவிர, பெருமளவில் “கிறிஸ்தவ” மக்கள்தொகையை உடையதாகப் பெருமைபாராட்டும் ஒவ்வொரு ஆப்பிரிக்க நாடும் புராட்டஸ்டன்டினரைக் காட்டிலும் கத்தோலிக்கரை அதிகமாகக் கொண்டிருக்கிறது.
உதாரணமாக, கபோனின் மக்கள்தொகையில் கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டுபவர்கள் 96 சதவீதமாவர். முதல் உலகப் போருக்குச் சற்று முன்பாக லூத்தரனாக இருந்த ஆல்பர்ட் ஷ்வைட்சர் என்பவர் மிஷன் ஆஸ்பத்திரி ஒன்றை நிறுவி, பின்னர் குஷ்டரோகி காலனி ஒன்றையும் கட்டினார். அவருடைய 40-ற்கும் மேற்பட்ட ஆண்டுகளடங்கிய புராட்டஸ்டன்ட் மிஷனரி சேவை நாட்டின்மீது பெரும் பாதிப்பைக் கொண்டிருந்தபோதிலும், கத்தோலிக்கர் 3-க்கு 1 என்ற வீதத்திற்கும் அதிகமாகப் புராட்டஸ்டன்டினரை இன்னும் விஞ்சுகின்றனர்.
என்றபோதிலும், புராட்டஸ்டன்டினர் அதிகமாக ஈடுபாடுகொண்டதால், ஆப்பிரிக்க மிஷனரி நடவடிக்கை உந்தலை பெற்றது. லீட்ஸ் பல்கலையைச் சேர்ந்த ஏட்ரியன் ஹேஸ்டிங்ஸ் விளக்குவது என்னவென்றால், “இந்தக் காலப்பகுதியின் [19வது நூற்றாண்டின் பிற்பகுதியின்] முக்கிய மரபுடைமையானது, பல்வேறு ஆப்பிரிக்க மொழிகளில் பைபிளை மொழிபெயர்க்கக்கூடிய குறிப்பிடத்தக்க துவக்கமாகும்.”
உள்ளூர் மொழியில் செய்யப்பட்ட பைபிள் மொழிபெயர்ப்புகள் “கிறிஸ்தவம்” பரவுவதற்கு ஆதாரமாகத் திகழ்ந்தன, முன்பு இது இல்லாதிருந்தது. ஆப்பிரிக்கர்களில் அநேகர் கனவுகளிலும் சொப்பன தரிசனங்களிலும் நம்பிக்கைவைத்து, நோய்கள் மாயமந்திரத்தின் காரணமாக உண்டாவதாக எண்ணி, பலதாரமணத்தை அப்பியாசித்து வந்தனர். உள்ளூர் மொழியில் பைபிளை வைத்திருப்பது, இந்த விஷயங்களில் வேதப்பூர்வ விளக்கத்தை அளிக்க கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு வாய்ப்பளித்தது. என்றபோதிலும், ஹேஸ்டிங்ஸ் பிரகாரம், “இந்த விஷயங்களில் ஆப்பிரிக்கர்கள் அடிக்கடி நம்பவைக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர்.” இதனால் வந்த விளைவு? “பத்தொன்பதாவது நூற்றாண்டு முடிவடைந்ததிலிருந்து சுயேச்சையான சர்ச்சுகள் பல எழும்பத் தொடங்கின, முதலில் தென் ஆப்பிரிக்காவிலும் நைஜீரியாவிலும் தொடங்கி, பின்னர் குறிப்பிடத்தக்க அளவுக்கு மிஷனரிகள் இருக்கிற இடங்களில், கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் எழும்பின.”
நிச்சயமாகவே, இன்று ஆப்பிரிக்காவிலுள்ள தெற்கத்திய சஹாராவில், 3,20,00,000-க்கும் மேற்பட்ட மதத்தார் அடங்கிய சுமார் 7,000 புது மத இயக்கங்கள் இருக்கின்றன. மதக் களஞ்சியம் பிரகாரம், “கிறிஸ்தவ மிஷனரி பிரயாசங்களோடு தீவிரமான தொடர்பு இருக்கும் பகுதிகளில் விசேஷமாக, இந்த இயக்கங்கள் எழும்பியிருக்கின்றன.” தெளிவாக, மிஷனரிகள் தங்கள் மதத்துக்கு மாறியவர்களை ‘ஒரே கர்த்தரிலும், ஒரே விசுவாசத்திலும், ஒரே ஞானஸ்நானத்திலும்’ ஒருமுகப்படுத்த தவறினர், இத்தகைய மிஷனரி வேலையைப் பற்றித்தான் பவுல் பேசினார்.—எபேசியர் 4:5.
ஏன்? மேலே குறிப்பிடப்பட்ட மூலம் இதற்கு விளக்கமளிக்கிறது. இது ஏனென்றால், “கிறிஸ்தவத்தின் முகப்புரைகளாலும் விளைபயன்களாலும் உள்ளூரில் மதம் மாறியவர்களை ஏமாற்றியதும் . . . , இனப்பிரிவினைத் தழுவிய கிறிஸ்தவத்தில் அறியப்பட்ட பிரிவுகளாலும் உள்ளூர் தேவைகளை பூர்த்திசெய்யாமையும் [மற்றும்] சமூக, கலாச்சார தடைகளை தகர்த்து சமுதாய உணர்வை உண்டாக்க மிஷன் கிறிஸ்தவம் தவறியதாலுமாகும்.”
இந்த “இருண்ட கண்டத்”தின்மீது கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் அளித்த ஆவிக்குரிய “வெளிச்ச”த்தின் அளவு மிகவும் குறைவாயிருந்தது. ஆதலால் பைபிள் அறியாமையென்னும் இருட்டை நீக்குவது அவ்வளவு சுலபமாக இல்லை.
காலனியாட்சியின் ஊழியரா?
கிறிஸ்தவ மிஷனரிகளில் சிலர் நல்ல காரியங்களை சாதித்தனரென்பது வாஸ்தவமான காரியமானாலும், மதக் களஞ்சியம் இதை ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயநிலையில் உள்ளானது: “மிஷனரிகள் காலனியாட்சி பொறுப்பேற்பை ஊக்குவித்தும் ஆதரவு தரவும் செய்தார்கள், அப்போது கிறிஸ்தவமும் காலனியாட்சி ஆதிக்கமும் தங்கள் நோக்கத்தில் ஒன்றியிருப்பது போல சில சமயம் தோன்றக்கூடும். நவீன எதிர்-காலனியாட்சி ஏதோவொரு நியாயத்தால், ஆப்பிரிக்காவிலுள்ள கிறிஸ்தவத்தைக் காலனியாட்சிக்கு உடந்தையாயிருப்பதாக அடிக்கடி முத்திரையிட்டிருக்கிறது.”
உலக சரித்திர காலின்ஸ் அட்லஸ் (The Collins Atlas of World History) இதன்பேரில் உட்பார்வை அளிக்கிறது. அது என்ன விளக்கம் தருகிறதென்றால் “காலனியாட்சியானது, உள்ளார்ந்த காரணத்தையும் மக்களாட்சிக் கொள்கைகளையும் பழங்குடிகளாக எண்ணப்பட்ட உள்நாட்டு குடிகளுக்கு அறிவியலின் மற்றும் மருத்துவத்தின் நன்மைகளையும் கொண்டுவரும்” என்ற நம்பிக்கையால் தூண்டப்பட்டனர். மேலும் தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வதாவது: “ரோமன் கத்தோலிக்க மிஷன்களுக்கு காலனியாட்சியிலிருந்து விலக்கிவைத்துக்கொள்வது கடினமாயிருந்திருக்கின்றன. மேலும் அநேக மிஷனரிகள் இந்த விலக்குதலை விரும்பவில்லை.”
அப்படியானால், தர்க்கரீதியாக, மக்களாட்சியை ஆதரித்து, மேற்கத்திய அறிவியல் மற்றும் மருத்துவ முன்னேற்றத்தை எந்தளவுக்கு கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் புகழ்ந்தார்களோ அந்தளவுக்கு அவர்கள் காலனியாட்சியின் ஊழியராகத் தங்களை காட்டிக்கொண்டார்கள். மக்கள் எப்பொழுது காலனியாட்சி அதிகாரங்களின் பொருளாதார, அரசியல்பூர்வ, சமூக அமைப்புமுறைகளைப் பற்றிய மனப்பிராந்தியை விட்டொழித்தார்களோ, ஐரோப்பிய மதங்களிலிருக்கிற நம்பிக்கையையும் அதோடு இழந்தார்கள்.
பிரசங்கித்தல்—முதலிடமா?
ஆப்பிரிக்காவிலுள்ள புராட்டஸ்டன்ட் மிஷனரிகளைப் பற்றிய பேச்சு எடுக்கும்போதெல்லாம், சாதாரணமாக டேவிட் லிவிங்ஸ்டன் என்பவரின் பெயர் அடிபடுகிறது. 1813-ல் ஸ்காட்லாந்தில் பிறந்த இவர், மருத்துவ மிஷனரியாகி ஆப்பிரிக்கா முழுவதும் பரந்தளவில் சுற்றுப்பயணஞ்செய்தார். “இருண்ட கண்டத்”திற்கான ஆழ்ந்த அன்பும் கண்டுபிடிப்பு கிளர்ச்சியும் அவருக்கு மேலுமான உந்தலை அளித்தன. தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, “கிறிஸ்தவமும் வியாபாரமும் நாகரிகமும், ஆப்பிரிக்காவை திறந்துவைக்கும் திரித்துவம் என்று அவர் உத்தேசித்ததாக” கூறுகிறது.
லிவிங்ஸ்டனின் சாதனைகள் அநேகம். என்றபோதிலும், தெளிவாகவே, சுவிசேஷத்தை பிரசங்கிப்பது அவருடைய முதலிடமாக இல்லை. “தெற்கத்திய, மத்திப, கிழக்கத்திய ஆப்பிரிக்காவில்—முன்பு எந்தவொரு ஐரோப்பியனும் அடிக்கடி போகாத இடங்களில்”—அவர் செய்த 30 ஆண்டு மிஷனரி வேலையை பிரிட்டானிக்கா இப்படியாக தொகுத்துரைக்கிறது: “லிவிங்ஸ்டன் தனக்கு முன்பாகவோ பின்பாகவோ வாழ்ந்த எந்தவொரு நபரைக் காட்டிலும் மேற்கத்தியர் ஆப்பிரிக்கர்களிடம் கொண்டிருந்த மனப்பான்மைகளில் அதிக செல்வாக்கு செலுத்தியிருக்கக்கூடும். அவருடைய புவியியல் சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த, மருத்துவம் சார்ந்த, சமூகம் சார்ந்த கண்டுபிடிப்புகள் இன்னும் ஆய்விலிருக்கிற சிக்கலான அறிவுத் தொகுப்பை அளித்தன. . . . இந்த நவீன உலகில் முன்னேறுவதற்கான ஆப்பிரிக்கனின் திறமையைப் பற்றி லிவிங்ஸ்டன் மனப்பூர்வமாக நம்பினார். இந்தக் கருத்தில், அவர் ஆப்பிரிக்காவிலுள்ள ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு மாத்திரம் முன்னோடியாகத் திகழாமல், ஆப்பிரிக்க தேசியத்துக்கும் முன்னோடியாக திகழ்ந்தார்.” ஆப்பிரிக்கர்களுக்கு லிவிங்ஸ்டன் அதிக இரக்கத்தைக் காட்டினார்.
சில மிஷனரிகள் அடிமை வியாபாரத்தை ஆதரித்தார்கள் அல்லது குறைந்தபட்சம் அனுமதித்தார்கள் என்றாலும், அவ்வாறு அவர்கள் ஒரு தொகுதியாகச் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டுவது அநியாயமாக இருக்கும். ஆனால் அநேகர் காட்டிய இரக்கம், பாரபட்சமின்மையும் சமநிலையும் சார்ந்த கடவுளுடைய தராதரங்களை கடைப்பிடிக்கும் விருப்பத்தினால் தூண்டப்பட்டதா அல்லது நபர்களின் நலனின்பேரில் உள்ள தனிப்பட்ட அக்கறையின் காரணமாக சாதாரணமாக எப்போதும் வரும் உணர்ச்சிகளினால் அதிகமாகத் தூண்டப்பட்டதா என்று கடந்த கால நிகழ்ச்சிகளை பார்த்து தீர்மானிப்பதும் கஷ்டந்தான்.
என்றபோதிலும், பின்கூறப்பட்டது பெரும்பான்மையான மிஷனரிகள் வைத்த முதன்மைகளோடு ஒத்துப்போவதாயிருக்கும். யாராலுமே “அவர்களுடைய மனிதாபிமான வேலை பதிவை ஈடுசெய்ய முடியாது” என்று ஆப்பிரிக்கர்கள் பார்த்தபடி ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவம் (Christianity in Africa as Seen by Africans) என்ற புத்தகம் ஒப்புக்கொள்கிறது. ஆனால் ஆஸ்பத்திரிகள் கட்டுவதும் பள்ளிகள் கட்டுவதும், கடவுளுடைய அக்கறைகளை நாடுவதற்கென்று கடவுளுடைய வார்த்தையை பிரசங்கிப்பதைவிட மனிதனுடைய மாம்சப்பிரகாரமான தேவைகளை முன்வைத்ததையே அர்த்தப்படுத்தின. சில மிஷனரிகள் வியாபார மையங்களையும் ஸ்தாபித்தனர். அதிகப்படியான ஐரோப்பிய சரக்குகளை அனுபவிக்க இது ஆப்பிரிக்கர்களுக்கு உதவியது. இவ்வாறு தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தினர்.
விளங்கத்தக்கதாக, கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் கூடியதாக்கின பொருளாதார நன்மைகளுக்கு இன்று ஆப்பிரிக்கர்களில் அநேகர் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். ஏட்ரியன் ஹேஸ்டிங்ஸ் குறிப்பிடுகிற பிரகாரம்: “மிஷனரிகளைக் குறித்தும் சர்ச்சுகளைக் குறித்தும் மிக அதிகமாகக் குறைகூறுபவர்களாக இருந்தபோதிலும், ஆப்பிரிக்க அரசியல்வாதிகள் துணைக் கல்விக்கான அவர்கள் ஆற்றிய உதவிக்காக நன்றி செலுத்தாமலிருப்பதே கிடையாது.”
“உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால் . . ”
ஹேஸ்டிங்ஸ் பிரகாரம், சமீப நூற்றாண்டுகள் வரையாக ஆப்பிரிக்கா, “கிறிஸ்தவம் நிலையான சாதனை புரிய தவறிய கண்டமாக” திகழ்ந்தது. நிச்சயமாகவே, 18-ம் நூற்றாண்டின் மத்திபத்திற்குள்ளாக, கத்தோலிக்க மிஷன்கள் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டிருந்தன, இதனால் “இத்தகைய பெரியளவில் தவறு” எப்படி சாத்தியமானது என J. ஹெர்பர்ட் கேன் என்ற ஆசிரியரை வினவும்படி செய்தது. ஒரு காரணம் என்னவெனில், மிஷனரிகள் மத்தியில் இறப்பு வீதம் உயர்ந்திருந்தது. இன்னொரு காரணம் போர்த்துகல் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாகும். கத்தோலிக்க மிஷனரிகள் யாவரும் போர்த்துகல் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், இது “கிறிஸ்தவ மதத்தை பற்றி அதிகெட்ட அபிப்பிராயத்தை அளித்தது.” ஆனால் “அதிக பொருத்தமாகவும் ஒருவேளை மிகவும் மறுக்க முடியாததாகவும் இருந்தது என்னவெனில், அவசரப்பட்ட ‘மதம் மாற்றஞ்செய்தல்களிலும்’ பெரும் எண்ணிக்கையான முழுக்காட்டுதல்களிலும் விளைவடைந்த மேற்பூச்சான மிஷனரி முறைகளாகும்,” என்று கேன் கூடுதலாகச் சொல்கிறார்.
ஆப்பிரிக்கர்கள் தங்களுடைய மதங்களை மிஷனரிகளின் கொள்கைகளால் மாற்றீடு செய்யும்படி உந்துவிக்க கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் தவறினார்கள். மதமாற்றம், நம்பிக்கைகளையும் நடத்தையையும் அவசியம் மாற்றுவதாக இல்லாமல் மத லேபல்கள் மாற்றுவதையே அர்த்தப்படுத்தியது. நடல் பல்கலையைச் சேர்ந்த எளனர் M. பிரெஸ்டன்-வைட் குறிப்பிடுகிறார்: “ஜூலு படைப்பியல் கொள்கைகள் ஜூலு கிறிஸ்தவ எண்ணத்துடன் எண்ணிறந்த மறைமுகமான வழிகளில் புகுத்தப்பட்டிருக்கின்றன.” மேலும் சான் டியகோவிலுள்ள கலிபோர்னியா பல்கலையைச் சேர்ந்த பென்னெட்டா ஜுல்ஸ்-ரோஸெட் என்ன சொல்கிறாரென்றால் நவீன ஆப்பிரிக்க மதங்கள் “ஆப்பிரிக்க பாரம்பரிய மதத்தின் கொள்கைகளைக் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்கின்ற புகுத்தப்பட்ட மதங்களோடு கலப்படையச் செய்கின்றன.”
சங்கீதம் 119:130 பிரகாரம், “உம்முடைய [கடவுளுடைய] வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.” கடவுளுடைய வசனத்தை பிரசித்தப்படுத்துவதற்கு முதலிடம் கொடுப்பதில் கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் பெரும்பாலும் தவறியதனிமித்தம், அவர்களால் என்ன வெளிச்சத்தை அளிக்க முடியும்? பேதைகள் உணர்வுள்ளவர்களாகாதபடி அப்படியே இருந்துவந்தார்கள்.
கடந்த நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மிஷனரிகள் அளித்த ‘வெளிச்சமாகிய’ “நற்கிரியைகள்” இருட்டிலிருந்த உலகிலிருந்து உற்பத்தியானது. அவர்கள் உரிமைபாராட்டியபோதிலும், மெய்யான வெளிச்சத்தை வீசிக்கொண்டில்லை. இயேசு சொன்னார்: “உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!”—மத்தேயு 6:23.
இதற்கிடையில், புதிய உலகமாகிய அமெரிக்காக்களில் இருந்த மிஷனரிகள் எவ்வாறு வாழ்க்கையைத் தள்ளினார்கள்? எங்கள் தொடர் கட்டுரையில் ஐந்தாம் பகுதி இதற்கு விடையளிக்கும்.
[பக்கம் 25-ன் படம்]
வேலை நாட்டத்தில், மிஷனரிகளில் சிலர் தங்களையே உயிர் பலியாக செலுத்தியிருக்கின்றனர்
[படத்திற்கான நன்றி]
From the book Die Heiligkeit der Gesellschaft Jesu
[பக்கம் 26-ன் படம்]
லிவிங்ஸ்டன் போன்ற கிறிஸ்தவமண்டல மிஷனரிகள், பிரசங்க வேலைக்கு எப்போதும் முதலிடம் கொடுக்கவில்லை
[படத்திற்கான நன்றி]
From the book Geschichte des Christentums