மிஷனரிகள்—ஒளியின் ஊழியரா இருளின் ஊழியரா? பகுதி 3
கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் அதெல்லாம் ஆரம்பித்த இடத்திற்கே திரும்புகின்றனர்
ஆசியா மனிதவர்க்கத்தின் ஆரம்ப வீடாக இருக்கிறது. அங்கேதான் சிருஷ்டிகர் மெய் வணக்கத்தை அறிமுகப்படுத்தினார். இருப்பினும் மானிடர்கள் அதற்குப் பின் விரைவில் ஞானமற்ற விதத்தில் பொய் மதத்தை அதனிடத்தில் வைத்தாலும், மெய் வணக்கம் இறுதியில் பண்டைய இஸ்ரவேலில் ஆசியாவிலும் பின்பு கிறிஸ்தவ மதத்திலும் அதன் தொடர்ச்சியைக் கொண்டிருந்தது. ஆகையால் கிறிஸ்தவமண்டல ஐரோப்பிய மிஷனரிகள் தங்கள் செய்தியை ஆசியாவுக்கு எடுத்துச் சென்றபோது, மனித வாழ்க்கையும் மெய் வணக்கமும் ஆரம்பித்திருந்த கண்டத்துக்கே சென்றனர். அவர்கள் ஒளியின் பிரதிநிதிகளாக ஆவார்களா அல்லது ஆழமான இருளின் பிரதிநிதிகளாக ஆவார்களா?—ஆதியாகமம் 2:10-17.
ஒரு கடவுள் அதிகமாக இருந்தால் என்ன அல்லது குறைவாக இருந்தால் என்ன?
கிறிஸ்தவ விசுவாசம் முதலில் எப்போது, எவ்வாறு இந்தியாவுக்கு வந்தது என்பதை நிச்சயத்தோடு தீர்மானிக்க முடியவில்லை. கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய தோமா கிறிஸ்தவ விசுவாசத்தை முதல் நூற்றாண்டில் இந்தியாவுக்கு எடுத்துச் சென்றார் என்று நான்காம் நூற்றாண்டு மத சரித்திர ஆசிரியர் யூசீபியஸ் சொல்கிறார். “கிறிஸ்தவ மதம்” அங்கே இரண்டாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளுக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர். ஆய்வுப்பயணம் செய்த போர்ச்சுகீசியர்கள் அங்கே 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்து சேர்ந்தபோது, “கிறிஸ்தவர்கள் இந்திய சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க மரியாதைக்குரிய குழுவாக ஆவதை” அவர்கள் கண்டனர்.—தி என்ஸைக்ளோப்பீடியா ஆப் ரிலிஜன்.
ஸ்பானிய பாதிரி பிரான்சிஸ் சேவியர் 1542-ல் இந்திய துணைகண்டத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் இயேசு நாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்க குழுவை நிறுவிய இக்னேஷியஸ் லயோலா என்பவரின் தோழர். அவர்கள் பொதுவாக ஜெஸ்யுட்டுகள் என்று அறியப்பட்டனர். சேவியர் “நவீன நாளைய மிகப்பெரிய ரோமன் கத்தோலிக்க மிஷனரி” என்று தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது, “கிறிஸ்தவ மதத்தை இந்தியா, மலே ஆர்ச்சிபெலேகோ, ஜப்பான் ஆகிய இடங்களில் ஸ்தாபிப்பதில் முக்கிய கருவியாக இருந்தார்” என்று அவரை அழைக்கிறது.
ஒப்பிடுகையில் சேவியரின் வாழ்க்கை குறுகியதாக இருந்தாலும்—அவர் 1552-ல் 46 வயதில் மரித்தார்—அவருடைய பத்து வருட மிஷனரி சேவை அதிக வேலைகள் நிரம்பியதாக இருந்தது. மிஷனரிகள் தாங்கள் சேவித்த மக்களின் பழக்கவழக்கங்களையும் மொழியையும் ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை உற்சாகப்படுத்தியதாக அறிக்கை செய்யப்படுகிறது.
முதல் புராட்டஸ்டன்ட் மிஷனரிகள் இந்தியாவுக்கு 1706-ல் வந்தனர், புறமதத்தினரை மதம் மாற்றுவதற்கு கிடைக்கக்கூடிய வள ஆதாரங்களை பயன்படுத்துவதில் கிறிஸ்தவர்களின் கடமைகளைக் குறித்து விசாரணை என்ற புத்தகத்தை வில்லியம் கேரி என்பவர் பிரசுரிப்பதற்கு 85 வருடங்கள் முன்பே அவர்கள் வந்தனர். இந்தப் புத்தகம் பிரசுரிக்கப்பட்டது “கிறிஸ்தவ சரித்திரத்தில் முக்கியமான கட்டம்” என்றழைக்கப்படுகிறது. அதை எழுதிய பின், கேரி 40 வருடங்கள் இந்தியாவில் மிஷனரியாக சேவித்தார்.
காலம் செல்ல செல்ல, தேசத்தின் எல்லா பகுதிகளுக்குள்ளும் கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் சென்றனர். சிலாக்கியம் பெறாத கீழ் வகுப்பினர், குறிப்பாக ஜாதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், இந்து மதத்தில் மேலான எதிர்காலத்துக்கான நம்பிக்கையைக் கண்டடையாததால், கிறிஸ்தவமண்டல மதங்களிடமாக திரும்ப ஆரம்பித்தனர். என்றபோதிலும், இந்தப் போக்கை “அநேக மிஷனரிகளும், கல்விகற்ற இந்திய கிறிஸ்வத தலைவர்களில் பெரும்பான்மையரும் அங்கீகரிக்கவில்லை” என்பதாக தி என்ஸைக்ளோப்பீடியா ஆப் ரிலிஜன் குறிப்பிடுகிறது.
கிறிஸ்தவமண்டலத்தின் பலனற்றத் தன்மையை வெளிப்படுத்தி சரித்திர ஆசிரியர் வில் டூரன்ட் எழுதுகிறார்: “தன்னுடைய ஏழ்மையையும் பாழ்க்கடிப்பையும் அமைதியுடன் இவ்வளவு நீண்ட காலமாக பார்த்துக் கொண்டிருக்கும் கடவுட்களின் பேரில் இந்தியா எப்போதும் போல இன்றும் உறுதியாக நம்பி வருகிறது. . . . முரண்பாடான சமயக் கருத்துக்களும் அந்நிய தேவர்களும் அபாயகரமான அளவுக்கு பிரபலமானபோது அவர்கள் (பிராமணர்கள்) அவற்றை சகித்துக் கொண்டனர், பின்பு அவற்றை இடமகன்ற குகைபோன்ற இந்துமத நம்பிக்கைக்குள் ஏற்றுக் கொண்டனர்; ஒரு கடவுள் அதிகமாக இருப்பதோ அல்லது குறைவாக இருப்பதோ இந்தியாவில் பெரும் வித்தியாசம் எதையும் ஏற்படுத்த முடியாது.” மான்பிரெட் பார்ட்டெல் 1984-ல் பிரசுரிக்கப்பட்ட தன் புத்தகமாகிய தி ஜெஸ்யுட்ஸ்-ல் சொல்கிறார்: இந்தியர்கள் இறுதியில் இந்துமதத்தை உறுதியாகப் பற்றியிருந்தனர்; ஜெஸ்யுட்டுகளுக்கும், மொகலாயர்களுக்கும் பின்னும் இந்துமதம் தொடர்ந்து நிலைத்திருந்தது. இன்று, தன்னுடைய அதிகப்படியான தெய்வங்களை மேற்கத்திய கிறிஸ்தவ உலகிற்கு ஏற்றுமதி செய்வதாக தோன்றுகிறது.”
நிரந்தரமான அபிப்பிராயத்தை விட்டுச்செல்ல தவறுகின்றனர்
மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய சர்ச் என்று ஏற்கெனவே பிரிந்திருந்த பூர்வ கிறிஸ்தவம், ஐந்தாம் நூற்றாண்டின்போது இன்னும் கூடுதலாக பிளவுபட்டது. கான்ஸ்டான்டிநோப்பிளின் தலைவரான நெஸ்டோரியஸ் ஒரு சச்சரவில் சிக்கிக்கொண்டார், அது கிழக்கத்திய சர்ச்சான நெஸ்டோரியன் சர்ச்சிலிருந்து பிரிந்து போன ஒரு தொகுதி உருவாகுவதற்கு வழிநடத்தியது.
நெஸ்டோரியர்கள் மிஷனரி வேலைக்கு அழுத்தம் கொடுத்தனர். அவர்களுடைய மிஷனரிகளில் ஒருவரான அலோப்பென், நெஸ்டோரிய நம்பிக்கைகளை பொ.ச. 635-ல் சீனாவுக்குள் அறிமுகப்படுத்தினார். மறுபட்சத்தில், மேற்கத்திய சர்ச் 1294 வரை சீனாவை சென்றெட்டவில்லை, மான்டிகார்வினோவைச் சேர்ந்த ஜான் என்ற பிரான்சிஸ்கன் மதகுரு அங்கு ஒரு சங்கத்தை நிறுவினார்.
என்றபோதிலும், உண்மையில், இத்தாலிய ஜெஸ்யுட்டான மாட்டியோ ரெட்சி என்பவர் 1580-களில் வந்து சேரும் வரை சீனாவில் மிஷனரி வேலை ஆரம்பிக்கவில்லை. புராட்டஸ்டன்ட் மதம் சீர்திருத்த இயக்கத்துக்குப் பிறகு ஐரோப்பாவில் பலமாக நிலைநாட்டப்பட போராடிக்கொண்டிருக்கையில், கத்தோலிக்க மதம் ஐரோப்பாவுக்கு வெளியே ஆட்களை மதம் மாற்றுவதற்கு சுறுசுறுப்பாக தேடிக்கொண்டிருந்தது. கத்தோலிக்க மதப்பற்றுள்ள போர்ச்சுகல் ஸ்பெயின் போன்ற தேசங்களில் நடந்த ஆய்வுப்பயண முகாம்கள் சர்ச் எடுத்த முயற்சிகளுக்கு உதவியது.
17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டு மிஷனரிகள் ஓரளவு வெற்றி பெற்றனர் ஏனென்றால், “[அவர்களில்] அநேகர் (விசேஷமாக ஜெஸ்யுட்டுகள்) பெரும் சகிப்புத்தன்மையுள்ள மனநிலையை வளர்த்துக்கொண்டனர்” என்று தி கேம்பிரிட்ஜ் ஹிஸ்டரி ஆப் சைனா குறிப்பிடுகிறது. சீன சரித்திரத்தின் பேராசிரியரான ஹான்ஸ் H. A. பீலன்ஷ்டைன் விரிவாக விளக்குகிறார்: “கிறிஸ்தவ மதத்துக்கும் கன்பூசிய மதத்துக்கும் இடையே உள்ள ஒத்த தன்மைகளை [ஜெஸ்யுட்டுகள்] அழுத்திக் காண்பித்தனர், கிறிஸ்தவ கடவுளைச் சீனர்களின் பரலோக கொள்கைக்குச் சமப்படுத்தி பேசினர், மூதாதையர் வணக்கத்துக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. சில இடங்களில் ஏன் ஜெஸ்யுட்டுகளால் மதம் மாற்ற முடிந்தது, ஆனால் அவர்கள் ஏன் நிரந்தரமான அபிப்பிராயத்தை விட்டுச்செல்லவில்லை என்பதை இது விளக்குகிறது.”
கிறிஸ்தவமண்டல மதங்களை 1724-ல் சீன பேரரசர் வெளிப்படையாக பழித்துரைத்து அநேக அயல்நாட்டு மிஷனரிகளை வெளியேற்றினார். சந்தர்ப்பம் கிடைக்கையில், கத்தோலிக்க மிஷனரிகள் சீனாவுக்கு திரும்பினர். புராட்டஸ்டன்ட் மிஷனரிகள் அவர்களோடு சேர்ந்துகொண்டனர், ராபர்ட் மாரிசன் என்பவர் 1807-ல் லண்டன் மிஷனரி சங்கத்திலிருந்து முதலாவதாக வந்து சேர்ந்தார். அவர் தன் நம்பிக்கைகளைப் பரப்புவதற்காக மட்டும் ஒரு கல்லூரியை நிறுவாமல், மேற்கத்திய கலாச்சாரத்துக்கு சீனாவை அறிமுகப்படுத்தவும், கிழக்கத்திய கலாச்சாரத்துக்கு மேற்கத்திய மாணவர்களை அறிமுகப்படுத்தவும்கூட அவர் அதை நிறுவினார். வில்லியம் மில்னே என்பவரின் உதவியோடு 1819-க்குள் மாரிசன் முழு பைபிளையும் மொழிபெயர்த்து முடித்துவிட்டார்.
சில மிஷனரிகள் ஒரு வித்தியாசமான ஒளியைக் கொண்டு வருவதற்கு தங்களை அர்ப்பணித்தனர். மருத்துவர் பீட்டர் பார்க்கர் சீனாவுக்கு சென்ற முதல் மருத்துவ மிஷனரியாக இருந்தார். மருத்துவ மிஷனரி சங்கத்தை கான்ட்டனில் 1838-ல் ஒழுங்கமைப்பதற்கு உதவி செய்தார். கல்வி சம்பந்தமான நாட்டங்கள், சமுதாயத் தொண்டுகள் அல்லது சமூக பிரச்னைகளைத் தீர்ப்பது போன்றவற்றுக்கு மற்ற மிஷனரிகள் தங்களையே அர்ப்பணித்தனர். தி கேம்பிரிட்ஜ் ஹிஸ்டரி ஆப் சைனா என்பதன்படி, மிஷனரிகள் செய்த சில மொழிபெயர்ப்பு வேலைகள் “கிறிஸ்தவ மதத்தை சீன மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி கட்டியெழுப்பாமல், சீனாவை ஐரோப்பா கூடுதலாக புரிந்துகொள்வதற்கு ஏற்றதாக இருந்தது.”
கிறிஸ்தவ ஐக்கியம், சகோதரத்துவம் ஆகியவற்றில் சீனர்களுக்கு முன்மாதிரியாயிருப்பதில் கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் தவறினர். புராட்டஸ்டன்ட் மதத்தினர் விசேஷமாக பிரிவுற்று இருந்தனர். நான்கு பத்தாண்டுகளில் மிஷனரிகளின் எண்ணிக்கை 189-லிருந்து 3,445 ஆக உயர்ந்தது. 1905-க்குள் 60-க்கும் மேற்பட்ட மிஷனரி சங்கங்கள் ஒவ்வொன்றும் கிறிஸ்தவ போதனையைப் பற்றிய தங்கள் சொந்த விளக்கங்களைப் பரப்பிக் கொண்டிருந்தன. கிறிஸ்தவ மதம் உண்மையில் இருக்கவேண்டிய மாதிரியைப் பற்றி கத்தோலிக்க மிஷனரிகளும்கூட சாதகமல்லாத நிலையை அளித்தனர். “ஆட்களை மதம் மாற்றுவதற்காக உள்ளூர் அரசியல் மற்றும் நீதி சம்பந்தமான விஷயங்களில் குறுக்கிடும் பழக்கம் பரவலாக இருந்தது” என்று தி கேம்பிரிட்ஜ் ஹிஸ்டரி ஆப் சைனா குறிப்பிடுகிறது.
வேறு இடங்களில் மதம் மாற்றுவதற்கு ஆட்களைத் தேடுதல்
ஆய்வுப்பயணம் செய்த பெர்டினன்ட் மெகல்லன் என்ற போர்ச்சுகீசியர் 1521-ல் பிலிப்பைன் தீவுகளில் முதலில் வந்திறங்கி ஒரு நூற்றாண்டுக்குப் பின், அங்கிருந்த கத்தோலிக்க மிஷனரிகள் ஏறக்குறைய 20 இலட்சம் ஆட்களை முழுக்காட்டியிருந்தனர். இன்று, பிலிப்பைன் தீவுகளின் ஜனத்தொகையில் 84 சதவீதம் ரோமன் கத்தோலிக்கர். சர்ச் ஏற்படுத்தியிருக்கும் கல்வித் திட்டம் இந்த வெற்றியை விளங்கிக்கொள்ள நிச்சயமாகவே உதவுகிறது. ஆனால் கவனியாது விடக்கூடாத மற்றொரு காரணம், “மதம் மாறியவர்கள் தங்கள் அநேக மத நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் தொடர்ந்து கொண்டிருக்கும்படி மிஷனரிகள் அனுமதித்தனர்” என்று ஓர் எழுத்தாளர் சொல்கிறார்.
சர்ச் மற்ற இடங்களில் அவ்வளவு வெற்றியடையவில்லை. உதாரணமாக, ஜப்பானில் இருக்கும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 0.3 சதவீதம். கொரியா குடியரசின் ஜனத்தொகையில் 6 சதவீதத்தினர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜப்பான் முதன் முதலாக 1542-ல் ஐரோப்பியர்களோடு தொடர்பு கொண்டது. ஜெஸ்யுட் மிஷனரியான பிரான்சிஸ் சேவியரும் அவருடைய தோழர்கள் சிலரும் 1549-ல் சிநேகப்பான்மையோடு வரவேற்கப்பட்டனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் விரைவில் தணிய ஆரம்பித்தது, ஏனென்றால் ஜப்பானிய தலைவர்கள், “ஐரோப்பிய மிஷனரி வேலையானது ஸ்பானிய அரசன் அரசியல் அதிகாரம் பெற்றுக்கொள்வதற்கு முன்னோடியாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்க ஆரம்பித்ததாக” சரித்திர பேராசிரியர் J. மேசன் ஜென்ட்ஸ்லர் எழுதுகிறார்.
1614-ல் “மிஷனரிகள் தேசத்துக்கு விரோதிகள் என்று தடைசெய்யப்பட்டனர், பேரரசரின் ஆட்சி எல்லையில் கிறிஸ்தவ மதம் இனிமேலும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என்று பேரரசர் கட்டளையிட்டார் . . . புதிய மதத்தைக் கைவிட்டுவிட மறுத்தவர்கள் இலட்சக்கணக்கில் சிலுவையில் அறையப்பட்டனர் . . . அதிக விரிவான திகிலூட்டும் காரியங்கள் மிஷனரிகளுக்கென்று ஒதுக்கிவைக்கப்பட்டன . . . அவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர் அல்லது வாட்டப்பட்டனர், உறுப்புக்கள் துண்டிக்கப்பட்டன, விஷப்பாம்புகள் நிறைந்த குழிகளுக்குள் எறியப்பட்டனர்,” இன்னும் மற்ற அட்டூழியங்கள் உட்பட.—தி ஜெஸ்யுட்ஸ்.
கத்தோலிக்க மதம் 1784-ல் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புராட்டஸ்டன்ட் மதம் ஒரு நூற்றாண்டுக்குப் பின் அறிமுகப்படுத்தப்பட்டது. புராட்டஸ்டன்ட் மதம் “அதிக விரைவாக வளர்ந்தது ஏனென்றால், அமெரிக்க மிஷனரிகள் சுவிசேஷத்தை மட்டுமல்ல ஆனால் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டு வந்தனர்” என்று டைம் பத்திரிகை விளக்குகிறது. மத போதனையின்றி பிற வழிகளில் மதம் மாற்றும் இக்கொள்கை இன்னும் பழக்கத்தில் உள்ளது. சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியர் சன் பன் ஹோ என்பவர் இவ்வாறு சொல்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது: “பொருளாதார ஆசீர்வாதங்களை அழுத்திக் காண்பித்த அந்தச் சர்ச்சுகள், முக்கியமான பிரிவுகளைக் காட்டிலும் அதிவேகமாக வளர்ந்துள்ளன.”
எதிர்காலம் எதை வெளிப்படுத்தும்
கடந்தகால கிறிஸ்தவமண்டல மிஷனரிகளை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்? அவர்கள் பிரதிநிதித்துவம் செய்தது இயேசு அறிமுகப்படுத்திய சுத்தமான வணக்கமுறை அல்ல. என்றாலும், அவர்களில் அநேகர் சந்தேகமின்றி உண்மை மனதுள்ளவர்களாய் இருந்தனர். எதுவாக இருந்தாலும், அவர்கள் பைபிளை அநேக மொழிகளில் மொழிபெயர்த்தனர், சில பைபிள் கொள்கைகளையாவது கற்பித்தனர்.
இருண்ட கண்டம் என்றழைக்கப்பட்ட ஆப்பிரிக்காவுக்குச் சென்ற கிறிஸ்தவமண்டல மிஷனரிகளைப் பற்றியென்ன? எமது அடுத்த இதழில் “‘இருண்ட கண்டத்துக்கு’ ஆவிக்குரிய வெளிச்சம்” என்ற கட்டுரையில் இதைக் குறித்து வாசியுங்கள்.
[பக்கம் 23-ன் பெட்டி]
சீன பைபிளில் “யெகோவா”
19-ஆம் நூற்றாண்டு மிஷனரியும் மொழிபெயர்ப்பாளருமான ஜான் W. டேவிஸ் இவ்வாறு நியாயங்காட்டிப் பேசினார்: “ஏதாவது ஒரு குறிப்பிட்ட வசனத்தில் எபிரெய மொழியில் பரிசுத்த ஆவி யெகோவா என்று சொல்லுகிறது என்றால், மொழிபெயர்ப்பாளர் ஏன் ஆங்கிலம் அல்லது சீன மொழியில் யெகோவா என்று சொல்லுவதில்லை? இந்த இடத்தில் நான் யெகோவா என்று பயன்படுத்துவேன், மற்றொரு இடத்தில் அதற்குப் பதிலாக வேறொன்றைப் போடுவேன் என்று சொல்வதற்கு மொழிபெயர்ப்பாளருக்கு என்ன அதிகாரம் உள்ளது? . . . மொழிபெயர்ப்பில் யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்துவது தவறு என்றால், பின்னர் ஏன் ஏவப்பட்ட எழுத்தாளர் மூல உரையில் பயன்படுத்தினார்?”