ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவமண்டலத்தின் அறுவடை
அல்ஜீரியாவை ஒரு “கிறிஸ்தவ தேசமாக” மாற்றும் சார்லஸ் லாவீஷ்ரீயின் கனவு—கனவாகவே இருந்திருக்கிறது. இன்று அல்ஜீரியாவின் மக்கள் தொகையில் 99 சதவீதத்தினர் முகமதியர்களாக இருக்கின்றனர், கிறிஸ்தவமண்டலம் வட ஆப்பிரிக்காவின் பெரும் பகுதிகளில் செல்வாக்கு இழந்து காணப்படுகிறது. கண்டத்தின் மீதமுள்ள பகுதியைப் பற்றியதென்ன?
“கிறிஸ்தவம், கறுப்பு ஆப்பிரிக்காவில், வளர்ந்துவரும் மீதமுள்ள தேசங்கள் அனைத்தையும்விட அதிகமான ஆட்களை மதம்மாற்றியிருக்கிறது,” என்பதாக J. H. கேன் கிறிஸ்தவ உலக சமயப்பரப்புக்குழுவின் ஒரு சுருக்கமான சரித்திரம் (A Concise History of the Christian World Mission) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இருப்பினும் மதம்மாறிய இவர்கள் உண்மையில் கிறிஸ்தவர்களா? “ஆப்பிரிக்க சர்ச்சில் ஒரு மிகப் பெரிய அபாயம் கிறிஸ்தவபுறமதத்துவமாகும்,” என்பதாக டாக்டர் கேன் ஒப்புக்கொள்கிறார். மேலுமாக “ஆப்பிரிக்க சர்ச்” என்ற சொற்றொடர்தானே தவறாக வழங்கும் பெயராகும். உண்மையிலேயே ஒவ்வொன்றும் அதனதன் சொந்த வணக்க முறையைக் கொண்ட ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க சர்ச்சுகள் இருக்கின்றன. ஏன்?
ஒற்றுமைக்கேட்டின் விதைகளை விதைத்தல்
மிஷனரிகள் கடல் மார்க்கமாக ஆப்பிரிக்காவுக்குப் பயணப்பட ஆரம்பிப்பதற்கு முன்பே ஒற்றுமைகேட்டின் விதைகள் விதைக்கப்பட்டிருந்தன. லண்டன் மிஷனரி சங்கம், பல்வேறு சர்ச்சுகளிலிருந்து உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டது, மிஷனரிகள் அவர்களுடைய நியமன இடங்களுக்குச் செல்லும் வழியிலேயே விறுவிறுப்பான கோட்பாடு சம்பந்தமான மோதல்கள் நிகழ்ந்தன. அவர்கள் தங்கள் சமயப்பரப்புக் குழுவின் பணியிடத்தில் குடியமைத்துக்கொண்ட பிற்பாடு மோதல்கள் நிச்சயமாகவே இன்னும் மோசமாகவிருந்தது.
“மிஷனரிகள் ஒருவரோடொருவரும் தங்களுடைய வெளிநாட்டு இயக்குநர்களோடும் கசப்பாக சண்டைப்போட்டுக்கொள்ள, பொதுவாக இது அவர்களுடைய சுவிசேஷ நோக்கங்களுக்கு கெடுதி விளைவிப்பதாக இருந்தது. . . . மிஷனரிகள் மதமாற்றஞ்செய்வதில் செலவிட்ட அதேயளவான நேரத்தையும் சக்தியையும் தங்கள் சண்டைகளைப் பற்றி எழுதிக்கொண்டிருப்பதில் செலவழித்ததாகத் தோன்றுகிறது,” என்பதாக கிறிஸ்தவ மிஷனரிகளும் வட ரோடீஷியாவின் தோற்றமும் 1880-1924 (Christian Missionaries and the Creation of Northern Rhodesia 1880-1924) என்ற தன்னுடைய புத்தகத்தில் பேராசிரியர் ராபர்ட் ராட்பெர்க் எழுதுகிறார்.
சில சமயங்களில் மிஷனரிகளின் சண்டைகள், போட்டி சமயப்பரப்புக்குழுக்கள் உருவாவதில் விளைவடைந்தது. கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் சமயப்பரப்புக் குழுக்கள் மதம் மாறுகிறவர்களுக்காக மூர்க்கமாக போட்டிப் போட்டுக்கொண்டனர். இதே ஒற்றுமையின்மை அவர்கள் மதம் மாற்றியவர்கள் மத்தியிலும் கட்டாயமாகவே பிரதிபலிக்கப்படவிருந்தது. காலப்போக்கில், லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் சமயப்பரப்புக்குழு சர்ச்சுகளை விட்டுவிட்டு தங்கள் சொந்த சர்ச்சுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
“தன்னாட்சியுரிமையை வற்புறுத்தும் ஆப்பிரிக்க கிளைச் சர்ச்சுகளை ஆப்பிரிக்கா முழுவதிலும் காணமுடிகிறது . . . மொத்தமாக இந்த இயக்கத்தில் சுமார் ஏழாயிரம் தனித்தொகுதிகள் இருக்கின்றன,” என்பதாக மிஷனரி சரித்திராசிரியர் டாக்டர் கேன் எழுதுகிறார். முரணான நம்பிக்கைகளையுடைய மிஷனரிகளின் மத்தியிலிருந்த போட்டி மனப்பான்மை மட்டுமே இதற்கு ஒரே காரணமாயில்லை. “வெள்ளையரின் உயர்வுமனப்பான்மைக்கு எதிராக ஏற்பட்ட மனக்கசப்பே கறுப்பர் சீர்திருத்தத்துக்கு” மற்றொரு காரணம் என்பதாக மிஷனரிகள் (The Missionaries) என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜியோஃபிரி மூர்ஹொஸ் விளக்குகிறார்.
கிறிஸ்தவர்களா அல்லது ஐரோப்பிய இனவெறியரா?
“மிஷனரிகளுக்கு உயர்வுமனப்பான்மை இருந்தது,” என்பதாக டாக்டர் கேன் ஒப்புக்கொள்கிறார். “கிறிஸ்தவ மதம் ஐரோப்பிய கலாச்சாரத்தோடும் ஐரோப்பிய தலைமைத்துவத்தோடும் இணைந்தே செல்லவேண்டும், என்று அவர்கள் நம்பினர்,” என்பதாக ஆப்பிரிக்க கிறிஸ்தவம் (African Christianity) என்ற தன்னுடைய புத்தகத்தில் ஏட்ரியன் ஹேஸ்டிங்ஸ் எழுதுகிறார்.
பிரெஞ்சு மனிதரான சார்லஸ் லாவீஷ்ரீ இக்கருத்தைக் கொண்டிருந்த ஒரு மிஷனரி தலைவராக இருந்தார். மற்றொருவர், தென் ஆப்பிரிக்காவில் லண்டன் மிஷனரி சங்கத்தின் சமயப்பரப்புக்குழுக்களின் கண்காணிப்பாளராக இருந்த ஜான் பிலிப். “நம்முடைய மிஷனரிகள் . . . பிரிட்டிஷ் அக்கறைகள், பிரிட்டிஷ் செல்வாக்கு மற்றும் பிரிட்டிஷ் பேரரசை விரிவுபடுத்தி வருகிறார்கள். மிஷனரி, நாகரீகமற்ற பழங்குடியினர் மத்தியில் மதம் மாறுகிறவர்களைத் தேட ஆரம்பிக்கும் இடங்களிலெல்லாம் குடியேற்ற அரசாங்கத்துக்கு எதிராக பழங்குடியினரின் தப்பெண்ணங்கள் மறைந்துவிடுகிறது; செயற்கையான தேவைகளை உருவாக்குவதன் மூலம் குடியேற்ற நாடுகள்மீது அவர்களுடைய சார்புநிலை அதிகரிக்கிறது; . . . தொழிற்சாலை, வாணிபம் மற்றும் வேளாண்மை திடீரென்று முளைத்தெழும்புகிறது; அவர்கள் மத்தியிலிருந்து வரும் உண்மையாக மதம் மாறிய ஒவ்வொருவரும் . . . குடியேற்ற அரசாங்கத்தின் ஆதரவாளராகவும் நண்பராகவும் ஆகிவிடுகிறார்,” என்பதாக 1828-ல் அவர் பெருமைப்பட்டுக்கொண்டார்.
ஐரோப்பிய அரசாங்கம் குடியேற்ற நாடுகளின் விரிவாக்கத்துக்கு மிஷனரிகளை பயனுள்ள முகவர்களாக கருதியது குறித்து ஆச்சரியம் ஏதுமுண்டா? மிஷனரிகளைப் பொருத்த வரையில், ஆப்பிரிக்காவில் குடியேற்ற நாட்டினரின் வெற்றிகளை அவர்கள் வரவேற்றனர். எடின்பர்க்கில் 1910 மிஷனரி மாநாட்டில் அவர்கள் அறிவித்த வண்ணமாகவே: “மிஷனரி குறிக்கோளுக்கும் அரசாங்க குறிக்கோளுக்குமிடையே வேறுபடுத்திக் காட்டும் கோட்டை வரைவது எப்போதும் சாத்தியமற்றதாக இருக்கும்.”
ஆப்பிரிக்காவில் அரசர்களாக ஆண்டனர்
தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள சில மிஷனரிகள் குடியேற்ற நாடுகளின் இராணுவ வலிமையைச் சார்ந்திருந்தனர். கிராமவாசிகள் மிஷனரி அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்துக்காக கரையோரப் பட்டணங்கள் சில சமயங்களில் பீரங்கிப் படைத்தாங்கிய பிரிட்டிஷ் போர்க்கப்பல்களால் அழிக்கப்பட்டன. வெஸ்லி என்பவர் துவங்கிய கிறிஸ்தவ சமயப் பிரிவைச் சேர்ந்த, மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருந்த டென்னிஸ் கெம்ப் என்ற ஒரு மிஷனரி 1898-ல் “காலாட்படையும் கப்பற்படையும் இன்று கடவுளால் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையைத்” தெரிவித்தார்.
தங்களை நிலைநிறுத்திக்கொண்ட பின்னர், மிஷனரிகள் சில சமயங்களில் பழங்குடித் தலைவர்களின் மதச்சார்பற்ற அதிகாரத்தைப் பறித்துக்கொண்டனர். “லண்டன் மிஷனரிமார்கள் தங்கள் தேவாட்சிக்குரிய சட்டத்தைக் காத்துக்கொள்ள பலாத்காரத்தை அடிக்கடி பயன்படுத்தினர். தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்த அவர்கள் பிரியமாக பயன்படுத்திய கருவி சிக்கோட்டி, பதப்படுத்தப்பட்ட நீர்யானைத் தோலினால் செய்யப்பட்ட ஒரு நீளமான சாட்டையாகும். அதைக்கொண்டு ஆப்பிரிக்கர்கள் தாராளமாக எந்த ஒரு சாக்கை வைத்தும் அடித்து நொறுக்கப்பட்டார்கள்,” என்று பேராசிரியர் ராட்பெர்க் எழுதுகிறார். “மதம் மாறிய ஓர் ஆப்பிரிக்கர், உகாண்டாவில் தலைவர் போட்ரி என்று அறியப்பட்டிருந்த ஓர் ஆங்கலிக்கன் மிஷனரி ஆராதனையின்போது, தாமதமாக வந்த ஆப்பிரிக்க மக்களை அடிப்பதற்காக அடிக்கடி மேடையிலிருந்து கீழே இறங்கிவந்ததை நினைவுகூருவதாக” டேவிட் லாம்ப் ஆப்பிரிக்கர்கள் (The Africans) என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
இப்படிப்பட்ட செயல்களினால் அதிர்ச்சியடைந்த ஜேம்ஸ் மேக்கே என்ற ஒரு மிஷனரி லண்டன் மிஷனரி சங்கத்தின் இயக்குநர்களிடம் புகார் செய்தார். “கடவுளுடைய அன்பின் நற்சுவிசேஷத்தைத் தங்களுக்குக் கொண்டுவரும் வெள்ளையர்களாக கருதப்படுவதற்குப் பதிலாக, நாம் அறியப்பட்டும் பயத்திற்குரியவர்களாகவும் இருக்கிறோம்,” என்று அவர் எச்சரித்தார்.
உலகப் போர்கள்
“சண்டைசெய்வதும் அது வெளிகொணர்ந்த எல்லா காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சிகளும் பயனற்றதாகவும் பொல்லாப்பானதாகவும் இருப்பதாக [ஆப்பிரிக்கர்கள்] ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எல்லா சமயத்திலும் மற்றும் கண்டிப்பாகவும் சொல்லப்பட்டுவந்தார்கள்,” என்பதாக மிஷனரிகள் (The Missionaries) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. பின்னர் 1914-ல் முதல் உலகப் போர் ஐரோப்பாவின் கிறிஸ்தவ தேசங்கள் என்றழைக்கப்பட்டவற்றுக்கிடையே துவங்கினது.
“ஒவ்வொரு தேசத்தையும் சேர்ந்த மிஷனரிகள் மகா யுத்தத்தில் ஈடுபட இணங்கும்படி செய்விக்கப்பட்டனர்,” என்பதாக மூர்ஹொஸ் விளக்குகிறார். வெட்கக்கேடாக, மிஷனரிகள் மதம்மாறிய ஆப்பிரிக்கர்களை ஒரு பக்கத்தை சேர்ந்துகொண்டு அதை ஆதரிக்கும்படி துரிதப்படுத்தினர். சில மிஷனரிகள், ஆப்பிரிக்க பட்டாளத்தை போர்க்களத்துக்குகூட வழிநடத்திச் சென்றனர். போரின் பாதிப்பு, கிறிஸ்தவ சமயப்பரப்புக்குழுக்களின் சரித்திரம் (History of Christian Missions) என்ற புத்தகத்தில் பேராசிரியர் ஸ்டீவன் நீலினால் நன்கு வெளிப்படுத்தப்படுகிறது: “கிறிஸ்தவத்துக்கும் நாகரீகத்துக்கும் ஏகபோகத் தனியுரிமை முழங்கிய ஐரோப்பிய தேசங்கள், குருட்டுத்தனமாகவும் குழம்பிய நிலையிலும் தங்களை பொருளாதாரத்தில் வறுமையிலும் குறைந்தபட்ச நல்லொழுக்கம்கூட இல்லாதவர்களாகவும் விட்டுச்செல்லவிருந்த உள்நாட்டுப் போரில் அவசரப்பட்டு ஈடுபட்டது.” “இரண்டாவது உலகப் போர் முதலாவது ஏற்கெனவே நிறைவேற்றியிருந்ததை முடிவுக்கு கொண்டுவந்தது. ஐரோப்பிய நாகரீக உலகின் நன்னெறி மாய்மாலம் போலியானது என்பது காண்பிக்கப்பட்டது; ‘கிறிஸ்தவமண்டலம்’ வெறும் ஒரு பழங்கதையே என்பது வெளிப்படுத்தப்பட்டது. அது இனிமேலும் ‘கிறிஸ்தவ ஐரோப்பிய நாகரிக உலகைப்’ பற்றி பேச முடியாததாக ஆனது.”
கறுப்பர் சீர்திருத்த இயக்கம் முதல் உலகப் போருக்குப் பின் தீவிரமடைந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளைப் பற்றிக்கொண்டிருந்த ஆப்பிரிக்கர்களைப் பற்றி என்ன? அவர்களுக்கு அதற்குப் பின் பைபிளிலிருந்து சத்தியம் போதிக்கப்பட்டதா?
ஆப்பிரிக்க மூதாதைய நம்பிக்கைகள்
மரித்த தங்கள் மூதாதையரை சாந்தப்படுத்த குறிசொல்லுகிறவர்களைத் தகவல் கேட்பது போன்ற ஆப்பிரிக்க மதசம்பந்தமான பழக்கவழக்கங்களை கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் கண்டனம் செய்தனர். அதே சமயத்தில், மிஷனரிகள், எல்லா மனிதர்களுக்கும் சாவாமையுள்ள ஆத்துமா உண்டென்று ஆணித்தரமாகச் சொன்னார்கள். அவர்கள் மரியாள் மற்றும் “புனிதர்களின்” வழிபாட்டையும்கூட ஊக்குவித்தனர். இந்தப் போதனைகள், மரித்துப்போன தங்கள் மூதாதையர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்ற ஆப்பிரிக்க நம்பிக்கையை ஊர்ஜிதப்படுத்தியது. மேலுமாக சிலுவை போன்ற மதசம்பந்தமான உருவங்களை வழிபடுவதன் மூலம் தீய சக்திகளிலிருந்து பாதுகாப்புக்கு ஒரு வழிமுறையாக ஆப்பிரிக்க தாயத்து உபயோகத்தை மிஷனரிகள் நியாயப்படுத்தினர்.
பேராசிரியர் C. G. பேய்டா, வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவம் (Christianity in Tropical Africa) என்ற தன்னுடைய புத்தகத்தில் விளக்குகிறார்: “ஓர் ஆப்பிரிக்கன் சர்ச்சில் ‘வேறு புகலிடம் எனக்கில்லை,’ என்று உற்சாகமாக பாடிவிட்டு, அதே சமயம் தன் உடம்பில் ஒரு தாயத்தை அணிந்துகொண்டோ அல்லது தான் எந்த ஒரு கொள்கையையும் கடைப்பிடிக்கத் தவறிய உணர்வில்லாமல் சர்ச்சைவிட்டு நேராக குறிசொல்லும் ஒருவனிடம் போகவோ கூடும்.”—உபாகமம் 18:10-12 மற்றும் 1 யோவான் 5:21 ஒப்பிடவும்.
அநேக மிஷனரிகள் ஆப்பிரிக்கர்களிடம், புறமதத்தைச் சேர்ந்த அவர்களுடைய முன்னோர் நரக அக்கினியில் வாதிக்கப்பட்டு வருவதாகவும் இவர்கள் கிறிஸ்தவ போதனைகளை ஏற்க மறுத்தால் அதே கதி இவர்களுக்கும் ஏற்படும் என்றும் சொன்னார்கள். ஆனால் நித்திய வாதனை என்ற கொள்கை, மிஷனரிகள் பெரும் முயற்சி எடுத்து ஆப்பிரிக்க மொழிகளில் மொழிபெயர்த்த அதே பைபிளின் தெளிவான கூற்றுகளுக்கு முரணாக உள்ளது.—ஆதியாகமம் 3:19; எரேமியா 19:5; ரோமர் 6:23.
உண்மையில் பாவமுள்ள மனித ஆத்துமாக்கள் மரிக்கின்றன என்றும் “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்,” என்றும் பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4) பைபிள் சத்தியத்தை கேட்க வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு, “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழு”தலில் சேர்த்துக்கொள்ளப்படும் எதிர்பார்ப்பு இருக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) உயிர்த்தெழுப்பப்படும் இப்படிப்பட்டவர்கள் இரட்சிப்புக்காக கடவுளின் ஏற்பாட்டைக் குறித்து கற்பிக்கப்படுவர். பின்னர், அவர்கள் கடவுளுடைய அன்புக்கு போற்றுதலோடு பிரதிபலிப்பார்களேயானால், அவர்கள் பரதீஸிய பூமியின்மீது நித்திய ஜீவனால் பலனளிக்கப்படுவர்.—சங்கீதம் 37:29; லூக்கா 23:43; யோவான் 3:16.
இந்த மகத்தான சத்தியங்களைக் கற்பிப்பதற்குப் பதிலாக, கிறிஸ்தவமண்டலம் பொய் போதனைகளாலும் மத மாய்மாலத்தாலும் ஆப்பிரிக்கர்களைத் தவறாக வழிநடத்தியிருக்கிறது. நிச்சயமாகவே, ஆப்பிரிக்காவில் குடியேற்ற நாடுகளின் வெற்றியில் கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் வகித்திருக்கும் பங்குக்கு பைபிளில் எந்த ஆதாரமுமில்லை. மாறாக, இயேசு தம்முடைய ராஜ்யம், “இந்த உலகத்தின் பாகமல்ல,” என்றும் தம்மை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்கள் “இவ்வுலகத்திற்குரியவர்களாக” இருக்கமாட்டார்கள் என்றும் சொன்னார். (யோவான் 15:19; 18:36) பூர்வ கிறிஸ்தவர்கள் உலக அரசாங்கங்களுக்கு அல்ல, இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தானாதிபதிகளாக இருந்தார்கள்.—2 கொரிந்தியர் 5:20.
ஆகவே, அதிர்ச்சித்தரும் ஒற்றுமைகேடு, அவநம்பிக்கை மற்றும் “கிறிஸ்தவபுறமதத்துவம்” ஆகியவற்றால் வேறுபடுத்திக் காண்பிக்கப்படும் கிறிஸ்தவமண்டலத்தின் ஆப்பிரிக்க அறுவடை மொத்தத்தில் மகிழ்ச்சியற்ற ஒன்றாகவே இருக்கிறது. ஆப்பிரிக்காவின் அநேக “கிறிஸ்தவ” பகுதிகளைத் தனிப்படுத்திக் காட்டும் வன்முறை, “சமாதானப்பிரபு”வின் போதனைகளுக்கு இசைவாக இல்லை. (ஏசாயா 9:6) ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவமண்டலத்தின் வேலையின் கனி, இயேசு தம்மை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்களைக் குறித்துச் சொன்ன வார்த்தைகளுக்கு நேர் எதிர்மாறாக இருக்கிறது. பரலோகத் தகப்பனிடம் தம்முடைய ஜெபத்தில் இயேசு “என்னை நீர் அனுப்பினதை அறியும்படி . . . ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்க” வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.—யோவான் 17:20, 23; 1 கொரிந்தியர் 1:10.
ஆப்பிரிக்காவில் எல்லா மிஷனரி வேலையும் தோல்வியாகவே இருந்திருக்கிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? ஆப்பிரிக்காவிலும் உலகம் முழுவதிலும் மெய் கிறிஸ்தவ மிஷனரி வேலையின் நேர்த்தியான பலன், பக்கம் 10-ல் துவங்கும் கட்டுரைகளில் கலந்தாலோசிக்கப்படும்.
[பக்கம் 6-ன் படம்]
ஜான் பிலிப் போன்ற கடந்த நூற்றாண்டு மிஷனரி தலைவர்கள், ஐரோப்பிய நாகரிகமும் கிறிஸ்தவமும் ஒன்றே என நம்பினர்
[படத்திற்கான நன்றி]
Cape Archives M450
[பக்கம் 7-ன் படம்]
கிறிஸ்தவமண்டல மிஷனரிகள், சாவாமையுள்ள ஆத்துமா போன்ற வேத ஆதாரமற்ற போதனைகளைப் பரப்புவதன் மூலம் ஆப்பிரிக்க மூதாதையர் நம்பிக்கைகளை ஊக்குவித்தனர்
[படத்திற்கான நன்றி]
Courtesy Africana Museum, Johannesburg