மிஷனரிகள் ஒளியின் ஊழியரா இருளின் ஊழியரா? பாகம் 2
மேற்கு திசையில் ஐரோப்பாவுக்குள் செல்லுதல்
இயேசுவின் மிஷனரி வேலை நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், உலகமுழுவதுமுள்ள மக்களை கிறிஸ்தவத்தின் செய்தியுடன் சென்றெட்ட வேண்டும். (மத்தேயு 28:19; அப்போஸ்தலர் 1:8) இந்த உண்மை அப்போஸ்தலர் பவுலின் மூன்று மிஷனரி பயணங்களில் இரண்டாவது பயணத்தின் போது அவர் கண்ட ஒரு தரிசனத்தின் போது அழுத்தியுரைக்கப்பட்டது. அத்தரிசனத்தில் அவரிடம் “நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்ற வேண்டுகோள் கொடுக்கப்பட்டது.—அப்போஸ்தலர் 16:9, 10.
பவுல் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார், சுமார் பொ.ச. 50-ல் ஐரோப்பிய பட்டணமாகிய பிலிப்பியில் பிரசங்கிக்க சென்றார். லீதியாளும் அவளுடைய வீட்டாரும் விசுவாசிகள் ஆனார்கள். சபை ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டது. கிறிஸ்தவம் ஐரோப்பா முழுவதும் செய்த வெற்றி பவனியின் முதல் நிறுத்தமே அது. பின்பு பவுல் தானே இத்தாலியில் பிரசங்கித்தார், ஒருவேளை ஸ்பெயினிலும்கூட பிரசங்கித்திருக்கக்கூடும்.—அப்போஸ்தலர் 16:9-15; ரோமர் 15:23, 24.
இருப்பினும், பவுல் கிறிஸ்தவத்தின் ஒரே மிஷனரி அல்ல. ஆசிரியர் ஜே. ஹெர்பர்ட் கேய்ன் குறிப்பிடுவதாவது “சரித்திரத்தில் பெயர் குறிப்பிடப்படாத இன்னும் அநேக ஆட்கள் இருந்திருக்க வேண்டும் . . . அப்போஸ்தலரின் நடபடிகள் முழு விவரத்தையும் சொல்வதில்லை.”—பெந்தெகொஸ்தே முதல் தற்போது வரையுள்ள கிறிஸ்தவ மிஷன்களின் உலகளாவிய காட்சி.
எனினும் இயேசுவைப் பின்பற்றின மற்றவர்கள் எந்த அளவுக்கு அயல் நாடுகளில் மிஷனரிகளாக சேவித்தனர் என்பது நமக்குத் தெரியாது. தோமா இந்தியாவுக்கு சென்றதாகவும், சுவிசேஷகராகிய மாற்கு எகிப்துக்குச் சென்றதாகவும் உள்ள பாரம்பரிய நம்பிக்கைகளை உறுதிப்படுத்த முடியாது. ஆனால், கிறிஸ்துவின் உண்மை சீஷர்கள் அனைவருக்கும் மிஷனரி ஆவி இருந்தது என்பதையும் அவர்கள் அனைவரும் மிஷனரி வேலையைக் குறைந்தபட்சம் தங்கள் சொந்த தேசத்திலாவது செய்தனர் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். கேய்ன் குறிப்பிடுகிறபடி, “இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி (பெந்தெகொஸ்தே) கிறிஸ்தவ சர்ச்சின் துவக்கத்தையும் மிஷனரி இயக்கத்தின் ஆரம்பத்தையும் குறித்தது. ஏனெனில் அந்நாட்களில் சர்ச்சானது மிஷனரி வேலையினால் அறியப்பட்டது.”
ஐரோப்பாவின் கடைகோடிக்கு
யூதர்கள் ஒரே மெய்க் கடவுளை வணங்க வேண்டும் என்று நம்பினர். வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவின் மீது அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை வைத்தனர். எபிரெய வேதாகமத்தை கடவுளுடைய சத்திய வார்த்தையாக ஏற்றுக்கொண்டனர். எனவே, யூதர்கள் சிதறிப் போயிருந்த நாடுகளில் இருந்த குடிமக்கள் இப்படிப்பட்ட நம்பிக்கைகளை ஓரளவு அறிந்திருந்தனர். கிறிஸ்தவர்களும் யூதர்களும் பொதுவாகக் கொண்டிருந்த வணக்க அம்சங்களாய் இருந்தபடியால், கிறிஸ்தவத்தின் செய்தி, தோன்றிய போது, முழுவதும் புதியதாக இல்லை. கேய்ன் என்பவரின்படி, “கிறிஸ்தவ மிஷனரிகள் ரோம உலகு முழுவதும் பிரயாணம் செய்து நற்செய்தியைப் பிரசங்கித்து, சர்ச்சுகளை ஸ்தாபித்த போது இப்படிப்பட்ட காரணங்கள் பெரும் உதவியாக இருந்தன.”
யூதர்கள் இவ்வாறு சிதறிப் போனது கிறிஸ்தவ மதத்துக்கு வழியை தயாரித்தது. கிறிஸ்தவர்கள் மிஷனரி ஆவியைக் கொண்டிருந்ததால் கிறிஸ்தவ மதம் வெகு விரைவாகப் பரவியது. “பாமர மக்கள் நற்செய்தியைப் பிரசங்கித்தனர்.” என்று கேய்ன் சொல்லி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அவர்கள் எங்குச் சென்றாலும் தாங்கள் புதிதாகக்-கண்டடைந்த விசுவாசத்தைக் குறித்து நண்பரோடும், அயலகத்தாரோடும், தெரியாதவர்களோடும் சந்தோஷமாகப் பகிர்ந்து கொண்டனர்.” சரித்திர ஆசிரியர் வில் டூரன்ட் இவ்வாறு விளக்குகிறார்: “மதம் மாறியவர்களில் ஏறக்குறைய அனைவருமே கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்குத் தங்களை உத்தரவாதமுள்ளவர்களாக ஆக்கிக் கொண்டனர்.”
பொ.ச. 300-க்குள், கிறிஸ்தவ மதம் ஒரு மாசுபட்ட வடிவில் ரோம பேரரசு முழுவதும் பரவியது. இப்படிப்பட்ட மாசுபட்ட நிலை, மெய் வணக்கத்திலிருந்து விழுந்து போவது, முன்னுரைக்கப்பட்டுள்ளது. (2 தெசலோனிக்கேயர் 2:3-10) உண்மையில் விசுவாசத் துரோகம் ஏற்பட்டது. டூரன்ட் விளக்குகிறார்: “கிறிஸ்தவ மதம் புறமதங்களை அழிக்கவில்லை; அதை தனதாக ஏற்றுக்கொண்டது.”
கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொண்டவர்கள் மெய்க் கிறிஸ்தவத்திலிருந்து அதிகமாக விலகிச் சென்ற போது, அநேகர் மிஷனரி ஆவியை இழந்தனர். பிரிட்டனில் நான்காம் நூற்றாண்டு இறுதியில் கத்தோலிக்க பெற்றோருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவருக்கு மிஷனரி ஆவி இருந்தது. அவருடைய பெயர் பேட்ரிக். அவர் கிறிஸ்துவின் செய்தியை ஐரோப்பாவின் மேற்கு முனையிலிருந்து ஐயர்லாந்து வரை எடுத்துச் சென்றதாக பழங்கதைகளில் அறியப்பட்டிருக்கிறார். அவர் ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி, நூற்றுக்கணக்கான சர்ச்சுகளை ஸ்தாபித்தார்.
விரைவில் ஐயர்லாந்து மிஷனரி வேலையைத் தலைமை தாங்கி நடத்தியது. கேய்ன் என்பவரின்படி: “அதன் மிஷனரிகள் தடையின்றி மிகுந்த வைராக்கியத்தோடு புறமதத்தினருக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினர்.” அப்படிப்பட்ட மிஷனரிகளில் ஒருவர் கொலம்பா, ஸ்காத்லாந்தை மாற்றுவதில் அவர் பெரும் பங்கை வகித்தார். ஏறக்குறைய பொ.ச. 563-ல், அவரும் 12 தோழர்களும் ஐயோனாவில் மத உறுதி பூண்டவர்கள் வாழ்வதற்கு ஓர் இடத்தை ஸ்தாபித்தார்கள். அது ஸ்காத்லாந்து மேற்கு கரைக்கு அப்பால் இருந்த ஓர் தீவு. அது மிஷனரி வேலைக்கு ஒரு மையமாக ஆனது. பொ.ச. 600-க்கு சிறிது காலத்துக்கு முன் கொலம்பா மரித்தார். ஆனால் அதற்குப் பின் 200 ஆண்டுகள், பிரிட்டிஷ் ஐல்ஸ், ஐரோப்பா தேசங்களில் இருந்த எல்லா பகுதிகளுக்கும் ஐயோனாவிலிருந்து மிஷனரிகள் தொடர்ந்து அனுப்பப்பட்டனர்.
கிறிஸ்தவ மதம் என்று உரிமை பாராட்டிக் கொண்ட மதம் இங்கிலாந்துக்குப் பரவிய பின்பு, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய சில ஆங்கிலேயர்கள் ஐயர்லாந்தைச் சேர்ந்தவர்களின் மிஷனரி ஆவியைப் பார்த்து அவர்களும் மிஷனரிகளாக ஆனார்கள். உதாரணமாக, பொ.ச. 692-ல், வடக்கு இங்கிலாந்தில் இருந்த ஆங்கிலோ-சாக்ஸன் இராஜ்யமாகிய நார்த்தும்பிரியா என்ற இடத்தில் இருந்து வில்லிபிரார்ட் என்பவரும், 11 தோழர்களும், நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பெர்க் போன்ற தேசங்களுக்கு முதல் ஆங்கிலேய மிஷனரிகளாக ஆனார்கள்.
எட்டாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில், போனிபஸ் என்ற முதல் ஆங்கிலேய பெனிடிக்ட் சபையின் துறவி ஜெர்மனியினிடமாக தன் கவனத்தைத் திருப்பினார். “நாற்பது வருடத்துக்கும் மேலாக போனிபஸ் செய்த சிறப்பு வாய்ந்த மிஷனரி வேலை, ஜெர்மனிக்கு அப்போஸ்தலன் என்ற பட்டப் பெயரை அவருக்கு வாங்கித் தந்தது, இருண்ட காலத்தின் மிகப்பெரிய மிஷனரியாக ஆதவற்கு உதவியது” என்று கேய்ன் சொல்கிறார். போனிபஸ் 70 வயதையும் தாண்டிய பிறகு, அவரும் 50 தோழர்களும் பிரிசிய அவிசுவாசிகளால் கொல்லப்பட்டனர்.
கத்தோலிக்க மதத்துக்கு ஆட்களை மாற்றுவதற்கு போனிபஸ் உபயோகித்த ஒரு வெற்றிகரமான முறையைப் பற்றி தி என்ஸைக்ளோப்பீடியா ஆப் ரிலிஜன் விவரிக்கிறது: “கிஸ்மர் என்ற இடத்தில் [ஜெர்மனி கட்டிங்கனுக்கருகில்], இடிமின்னல் தெய்வத்தின் பரிசுத்த கருவாலி மரத்தை வெட்டிப் போட அவர் துணிந்த போது . . . அங்கிருந்த ஜெர்மானியக் கடவுள் அவரைப் பழிவாங்காத [போது] அவர் பிரசங்கித்து வந்த கடவுள் மெய்க் கடவுள் என்பதும் அவரை மட்டுமே வணங்கி போற்ற வேண்டும் என்பதும் தெளிவாக இருந்தது.”
சில மிஷனரிகள் வேறு முறைகளைப் பயன்படுத்தினர். விரும்பப்படுகிற விளைவைப் பெறுவதற்கு எந்த முறையைப் பயன்படுத்தினாலும் அது ஏற்கத்தக்கது என்று அவர்கள் எண்ணினர். ஜெர்மானிய இனங்களைச் சார்ந்தவர்களை மதம் மாற்றியதைக் குறித்து கேய்ன் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “ஒழுக்க அல்லது மத சம்பந்தமாக இணங்க வைப்பதற்குப் பதிலாக இது இராணுவ வெற்றியால் செய்யப்பட்டது.” அவர் கூடுதலாக சொல்கிறார்: “சர்ச்சுக்கும் தேசத்துக்கும் இடையே இருந்த பரிசுத்தமற்ற உறவு . . . ஆவிக்குரிய பலன்களைப் பெறுவதற்குச் சரீர சம்பந்தமான வழிகளைப் பயன்படுத்த சர்ச்சை தூண்டியது. இக்கொள்கை கிறிஸ்தவப் பணிகளில் ஏற்படுத்திய அழிவைக் காட்டிலும் அதிகமாக வேறு எதிலும் ஏற்படுத்தவில்லை, விசேஷமாக சாக்ஸன்கள் மத்தியில் . . . அட்டூழியங்கள் செய்யப்பட்டன.” மிஷனரிகள் ஸ்கான்டிநேயாவுக்குள் சென்ற போது, “அநேகமாக இடைப்பட்ட மாறுதல் சமாதானமாய் இருந்தது; நார்வேயில் மட்டும் பலாத்காரம் பயன்படுத்தப்பட்டது.”
பலாத்காரத்தை உபயோகித்தல்? அட்டூழியங்கள் செய்தல்? ஆவிக்குரிய பலன்களைப் பெறுவதற்கு சரீர சம்பந்தமான வழிகளைப் பயன்படுத்துதல்? வெளிச்சத்தின் ஊழியர்களாக சேவிக்கும் மிஷனரிகளிடமிருந்து இதைத் தான் நாம் எதிர்பார்க்க வேண்டுமா?
ஒரு பிளவுபட்ட வீட்டில் மிஷனரிகள்
ரோமிலும் கான்ஸ்டான்டிநோப்பிளிலும் அப்பியாசித்து வந்த கிறிஸ்தவ மதத்தின் இரண்டு பிரிவுகள், தனித்தனி மிஷனரி முகாம்களை நடத்தின. பல்கேரியாவை “கிறிஸ்தவமாக்க” அவர்கள் எடுத்த முயற்சிகள், மத சம்பந்தமாக பிளவுபட்டிருக்கும் ஒரு வீட்டில் நடக்கும் குழப்பத்தைப் போன்ற குழப்பத்துக்கு வழிநடத்தின. பல்கேரியாவின் அரசன், முதலாம் பாரிஸ், கிரேக்க ஆர்த்தடாக்சுக்கு மாறினார். பல்கேரிய சர்ச்சின் சுதந்திரத்தைக் கான்ஸ்டான்டிநோப்பிள் கடுமையாக தடை செய்ததைப் பார்த்து, அவர் மேற்கினிடமாக தன் கவனத்தைத் திருப்பி, ரோமைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஜெர்மன் மிஷனரிகளை அனுமதித்து, அவர்கள் அப்பியாசித்து வந்த கிறிஸ்தவ மதத்தைக் கொண்டு வந்தார். பொ.ச. 870-க்குள், கிழக்கத்திய சர்ச்சை விட மேற்கத்திய சர்ச் அதிக கண்டிப்பாக இருந்தது தெரிய வந்தது. ஆகையால் ஜெர்மானியர்கள் வெளியேற்றப்பட்டனர், பல்கேரியா கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸை தழுவிக் கொண்டது. மத சம்பந்தமாக சொல்ல வேண்டுமென்றால், அச்சமயத்திலிருந்து அது அவ்வாறே நிலைத்திருக்கிறது.
ஏறக்குறைய அதே சமயத்தில், மேற்கத்திய மிஷனரிகள் “கிறிஸ்தவ மதத்தை” ஹங்கேரி தேசத்துக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். “கிறிஸ்தவத்தைச்” சேர்ந்த இரு பிரிவுகள், கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் பிரிவுகள் போலந்தில் ஆதரவைத் தேடிக் கொண்டிருந்தன. தி என்ஸைக்ளோப்பீடியா ஆப் ரிலிஜன்-படி, “போலந்து மக்களின் சர்ச் பொதுவாக மேற்கின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது, ஆனால் அதே சமயத்தில் குறிப்பிடத்தக்க கிழக்கத்திய செல்வாக்கும் இருந்தது.” லித்துவேனியா, லாட்வியா, எஸ்டோனியாவும் கூட “மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பிரிவுகளுக்கு இடையே இருந்த போட்டியில் சிக்கின, அதோடு சேர்ந்து அதன் எல்லா சர்ச் சம்பந்தமான விளைவுகளுடன்.” 11-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 12-ஆம் நூற்றாண்டு முற்பகுதியிலும் பின்லாந்து “கிறிஸ்தவ மதத்தை” தழுவிக்கொண்ட பிறகு, தன்னை அதே கிழக்கு-மேற்கு பலப்போட்டியில் கண்டது.
ஒன்பதாம் நூற்றாண்டின் போது, தெசலோனிக்கேயாவில் இருந்த ஒரு பிரபலமான கிரேக்க குடும்பத்திலிருந்து இரண்டு சகோதரர்கள், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இருந்த ஸ்லாவிய பகுதியினருக்கு பைசான்டைன் “கிறிஸ்தவ மதத்தை” கொண்டு வந்தனர். கான்ஸ்டன்டைன் என்றும் அழைக்கப்பட்ட சிரில், மித்தோடிஸ் ஆகியோர் “ஸ்லாவியர்களுக்கு அப்போஸ்தலர்கள்” என்று அறியப்படலானார்கள்.
சிரிலின் சாதனைகளில் ஒன்று, ஸ்லாவியர்கள் தங்கள் மொழியை எழுதுவதற்கு அவர் எடுத்த முயற்சியாகும். அதன் எழுத்துத் தொகுதி, எபிரெய மற்றும் கிரேக்க எழுத்துக்களின் பேரில் சார்ந்துள்ளது. சிரிலின் எழுத்துத் தொகுதி என்று அறியப்படுகிறது, ரஷ்ய, யூக்ரேனிய, பல்கேரிய, செர்பிய மொழிகளில் அது இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு சகோதரர்களும், புதிதாக எழுதப்பட்ட மொழியில் பைபிளின் சில பாகங்களை மொழிபெயர்த்தனர். மேலும் ஸ்லாவிய மொழியிலும் பொதுவழிபாட்டுமுறைச் சுவடியை அறிமுகப்படுத்தினர். பொதுவழிபாட்டுமுறை சுவடியை லத்தீன், கிரேக்கு, எபிரெய மொழிகளில் வைக்க வேண்டும் என்று விரும்பிய மேற்கத்திய சர்ச்சின் கொள்கைக்கு இது முரணாக இருந்தது. ஆசிரியர் கேய்ன் சொல்கிறார்: “கான்ஸ்டான்டிநோப்பிள் வணக்கத்தில் வட்டார மொழியைப் பயன்படுத்தும் பழக்கத்தை உற்சாகப்படுத்தியது, ஆனால் ரோம் அதை கண்டனம் செய்தது. அது ஒரு புதுக் கருத்து மாற்றமாக, முன்னோடி மாதிரியை வைத்தது. பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளின் நவீன, தைரியமான மிஷனரி முயற்சியில் அது முழுமையாக வளர்ச்சியடைந்தது.”
பத்தாம் நூற்றாண்டின் முடிவுக்குள், இப்பொழுது இருக்கிற முன்னாள் சோவியத் யூனியனின் பிராந்தியங்களுக்குள்ளும்கூட பெயரளவேயான கிறிஸ்தவ மதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. யூக்ரேன், கீவ்-ன் இளவரசர் வாலோடிமர் பொ.ச. 988-ல் முழுக்காட்டப்பட்டார் என்று பாரம்பரியம் சொல்கிறது. யூத மதம், இஸ்லாம் ஆகியவற்றுக்கு பதிலாக அவர் “கிறிஸ்தவ” மதத்தின் பைசான்டைன் வழியை தேர்ந்தெடுத்தார். நம்பிக்கை, சத்தியம் அடங்கிய செய்தியின் காரணமாக அல்ல, ஆனால் அதன் கவர்ச்சியூட்டும் சடங்குகளுக்காக என்று சொல்லப்படுகிறது.
உண்மையில், வாலோடிமர் தன் அரசியல் அக்கறைகளைச் சேவிப்பதற்காக புதிய மதத்தை ஏற்றுக்கொண்டார் என்பது அவர் மதம் மாறிய காலம் காண்பிக்கிறது. இவ்வாறு ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் சரித்திரம் முழுவதும் இடைவிடாமல் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் ஒரு பாரம்பரியத்தைத் துவக்கி வைத்தது” என்று கீப்பிங் தி ஃபெய்த்ஸ்—ரிலிஜன் அன்ட் ஐடியாலஜி இன் தி சோவியத் யூனியன் என்ற புத்தகம் சொல்கிறது. பிறகு அப்புத்தகம் தெளிவான கருத்து ஒன்றை சேர்த்துக் கொள்கிறது: “பொதுவாக அரசாங்கத்தின் அக்கறைகளைச் சேவிப்பதற்கு சர்ச் விரும்பியிருக்கிறது, சர்ச்சின் அக்கறைகளுக்கு மாறாக அரசாங்கம் நடந்துகொண்ட போதிலும்கூட.”
வாலோடிமர் தன் குடிமக்கள் கிறிஸ்தவர்களாக முழுக்காட்டப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்; இவ்விஷயத்தில் அவர்களுக்கு வேறு எந்தத் தெரிவும் இல்லை. “ஆர்த்தடாக்ஸ் மதத்தை நாட்டு மதமாக ஏற்றுக்கொண்டதிலிருந்து, பழங்குடி மக்களான ஸ்லாவிய இனத்தவரின் பாரம்பரிய மத பழக்கவழக்கங்களை வேரோடு பிடுங்குவதற்கு அவர் ஓர் திட்டத்தை மேற்கொண்டார்” என்று பால் ஸ்டீவ்ஸ் சொல்கிறார். உதாரணமாக, மக்கள் முன்பு புறமத கடவுட்களுக்குப் பலி செலுத்தி வந்த இடங்களில் அவர் சர்ச்சுகளைக் கட்டினார். பால் ஸ்டீவ்ஸ் கூடுதலாக சொல்கிறார்: “மீதமாயிருந்த புறமத பழக்கவழக்கங்கள் அநேக நூற்றாண்டுகளாக நிலைத்திருந்தன. இறுதியில் அவை ரஷிய மத வாழ்க்கைக்குள் நீக்கப்படாமல், முழுவதுமாக இணைக்கப்பட்டன.”
இந்த ஆட்டங் கொடுத்த அஸ்திபாரத்தின் மத்தியிலும், ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் மிஷனரி வேலையை ஆதரித்தது. செயின்ட் வாலோடிமரின் ஆர்த்தடாக்ஸ் இறைநூல் போதனைக்கூடத்தைச் சேர்ந்த தாமஸ் ஹாப்கோ சொல்கிறார்: “பேரரசின் கிழக்கத்தியப் பகுதிகள் குடியேற்றப்பட்டு, நற்செய்தி பரவிய போது, சர்ச்சின் வேதவசனங்களும் சேவைகளும் அநேக சைபீரிய மற்றும் அலாஸ்க மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.”
மும்முரமாக்கப்பட்ட மிஷனரி வேலை
பதினாறாம் நூற்றாண்டு கிறிஸ்தவ மதச் சீர்திருத்த இயக்கம், ஐரோப்பா முழுவதும் ஆவிக்குரிய தீக்கொழுந்தை எரிய வைத்தது. மதத்தின் பேரில் பொதுமக்களின் அக்கறையை மீண்டும் எழுப்புவதற்கு புராட்டஸ்டன்ட் மதத்தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழியைக் கடைப்பிடித்த போது, மும்முரமாக்கப்பட்ட “கிறிஸ்தவ” மிஷனரி வேலைக்கு அஸ்திவாரம் போடப்பட்டது. மார்ட்டின் லூத்தர் ஜெர்மன் மொழியில் பைபிளை மொழிபெயர்த்தது குறிப்பிடத்தக்கது. வில்லியம் டின்டேல் மற்றும் மில்ஸ் கவர்டேல் என்பவர்களால் பைபிள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர், 17-ஆம் நூற்றாண்டில், கடவுட்பற்றைப் புதுப்பிப்பதற்கு லூத்தரன் சர்ச் ஜெர்மனியில் ஓர் இயக்கத்தைக் துவக்கியது. அது பைபிள் படிப்பையும் தனிப்பட்ட மத அனுபவத்தையும் அழுத்திக் காண்பித்தது. தி என்ஸைக்ளோப்பீடியா ஆப் ரிலிஜன் விரிவாக சொல்கிறது: “கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி மனிதவர்க்கத்துக்கு தேவை என்பதை அது கண்டதன் காரணமாக, அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு மிஷனரி பணிகளை ஆரம்பித்து, அது விரைவில் விரிவாகும்படி செய்தது.”
இன்று, நம்முடைய 20-ஆம் நூற்றாண்டில் நாத்திக கம்யூனிஸத்தையும் சர்வாதிபத்திய கருத்துப்போக்குகளையும் தடுத்து நிறுத்துவதற்கு, போதுமான அளவு பலமான கிறிஸ்தவ விசுவாசத்தையும் நம்பிக்கையையும் ஐரோப்பாவில் மதம் மாறியவர்களில் வளர்ப்பதற்கு கிறிஸ்தவ மிஷனரிகள் தவறியது விசனகரமானது என்பதைக் காண முடிகிறது. சில தேசங்களில் கம்யூனிஸம் வீழ்ந்து போனதிலிருந்து, மிஷனரிகள் தங்கள் வேலையைப் புதுப்பித்திருக்கின்றனர், ஆனால் ரோமன் கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் கத்தோலிக்கர், புராட்டஸ்டன்டினர் ஆகியோர் தாங்கள் உரிமைபாராட்டிக் கொள்ளும் கிறிஸ்தவ விசுவாசத்தில் ஐக்கியப்பட்டவர்களாக இல்லை.
ரோமன் கத்தோலிக்க க்ரோயேஷியர்களும் ஆர்த்தடாக்ஸ் செர்பியர்களும், கிறிஸ்தவமண்டல மிஷனரி பலன்களின் பாகமாக ஆகின்றனர். பிளவுபட்ட வீடாக இருப்பதற்கு கிறிஸ்தவ மண்டலத்தின் மீதுள்ள இழுக்கை விட மோசமானதொரு பிளவு வேறு எது இருக்கக்கூடும்? எப்படிப்பட்ட கிறிஸ்தவ “சகோதரர்கள்” முதலில் தங்கள் துப்பாக்கிகளை ஒருவருக்கு விரோதமாய் ஒருவர் உயர்த்தவும், பின்னர் ஒன்றுசேர்ந்து தங்கள் துப்பாக்கிகளைக் கிறிஸ்தவரல்லாத அயலார் மீது திருப்பவும் முடியும்? போலி கிறிஸ்தவர்கள் மட்டுமே அப்படிப்பட்ட கிறிஸ்தவமற்ற நடத்தைக்காக குற்ற உணர்வுள்ளவர்களாக இருக்க முடியும்.—மத்தேயு 5:43-45; 1 யோவான் 3:10-12.
எல்லா கிறிஸ்தவமண்டல மிஷனரிகளுமே பொருத்தமான தகுதி பெற தவறியிருக்கின்றனரா? அவர்கள் ஆசியாவில் நிறைவேற்றியவற்றைக் காண்பதன் மூலம் நாம் நம்முடைய விசாரணையைத் தொடருவோம். எமது அடுத்த இதழில், “அவையனைத்தும் ஆரம்பித்த இடத்துக்கு கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் திரும்பச் செல்லுகின்றனர்” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் கட்டுரையை வாசியுங்கள்.
[பக்கம் 21-ன் படம்]
புறமத கடவுட்கள் சக்தியற்றவை என்பதை போனிஸ் நடைமுறைப்படுத்திக் காட்டினார் என்று சொல்லப்படுகிறது
[படத்திற்கான நன்றி]
Picture from the book Die Geschichte der deutschen Kirche und kirchlichen Kunst im Wandel der Jahrhunderte