இளைஞர் கேட்கின்றனர் . . .
அப்பாவும் அம்மாவும் எழுத்தறிவில்லாதவர்கள்—நான் அவர்களை எப்படி மதிக்கலாம்?
தாமஸ் எடிசன் மின்சார விளக்கைக் கண்டுபிடித்தவராக உலகெங்கும் அறியப்பட்டிருக்கிறார். அதுபோன்று பொருளுற்பத்திக்குப் பேரளவு உற்பத்தி உத்திகளை அறிமுகப்படுத்தியதற்காக ஹென்றி ஃபோர்டு உலகமெல்லாம் அறியப்பட்டிருக்கிறார். ஆனால் ஹென்றி ஃபோர்டும் தாமஸ் எடிசனும் முறையான கல்வி பெற்றவர்கள் அல்லர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அப்போஸ்தலராகிய பேதுருவும் யோவனும் ஆரம்பக் கிறிஸ்தவ சபையின் தூண்களாயிருந்தனர். அவர்கள் சத்தியத்தின் தைரியமுள்ள மற்றும் சொல்லாற்றல் வாய்ந்த பேச்சாளராயிருந்தனர். எனினும் மதம் சாராத பொதுக்கல்விக்கு வரும்போது, அவர்கள் “படிப்பறியாத சாதாரண மனிதர்” என சொல்லப்பட்டனர்.—அப்போஸ்தலர் 4:13, NW.
ஆம், சரித்திரத்தினூடே, முறையான கல்வி பெற்றிராவிட்டாலும் சிறந்த காரியங்களைச் சாதித்திருக்கும் ஆண்களும், பெண்களும் இருந்திருக்கின்றனர். எந்த ஒரு பகுத்துணர்வுள்ள நபரும், அதினிமித்தம் அவர்களை எவ்வகையிலும் குறைந்த மதிப்புக்குரியவர்களாகக் கருதமாட்டார். அப்படியெனில், தெளிவாகவே, மனிதனின் மதிப்புக்கும் மேன்மைக்கும் முறையான கல்வியைவிட இன்னுமதிகம் உள்ளது.
இது, முறையான கல்வி முக்கியமற்றது என்றோ, எழுதப் படிக்க இயலாமை ஒரு குறைபாடு அல்ல என்றோ சொல்லுவதற்கில்லை. பல நாடுகளில் உயர்நிலைப்பள்ளிச் சான்றிதழ் கொண்டிராத ஒரு நபர் வேலையைக் கண்டுபிடிப்பதில் அதிகச் சிரமப்படுகிறார். வாசிக்க இயலாத ஒருவர், நூல்களிலும், பத்திரிகைகளிலும் அடைப்பட்டுக்கிடக்கும் பரந்த அறிவுக் கருவூலத்திலிருந்து தகவலைப் பெற்றுக்கொள்ள முடியாது. எழுத்தறிவில்லாத ஒருவர் தன் பெயரைக் கையொப்பமிடவோ ஒரு படிவத்தை நிரப்பவோ கேட்கப்பட்டால் அவர் சங்கடப்படலாம்.
என்றாலும், ஒருவரது சொந்த பெற்றோரே எழுத்தறிவற்றவர்களாயிருந்தால் அப்பொழுது என்ன? ஆப்பிரிக்காவிலும் வளரும் நாடுகளிலும் கற்ற இளைஞர் வாசிக்கவோ, எழுதவோ இயலாத பெற்றோரைக் கொண்டிருப்பது அசாதாரணமல்ல. தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளிலுங்கூட சில இளைஞர் தங்கள் பெற்றோர் அனுபவிக்காத கவ்வியின் அனுகூலங்களைப் பெற்றிருக்கின்றனர். எவ்வாறிருப்பினும், இது உங்கள் விஷயத்தில் உண்மையாயிருந்தால், உங்கள் பெற்றோரைப் பற்றி எவ்விதம் உணருகிறீர்கள்? அவர்களுடைய கல்வியின்மையால் சங்கடப்படுகிறீர்களா? அல்லது, அதினும் மோசமாக, அவர்கள் அறியாமையுள்ளவர்கள், மரியாதைக்குத் தகுதியற்றவர்கள் என்று சில வேளைகளில் உணருகிறீர்களா? அவர்களுக்கு மரியாதை காண்பிப்பது ஏன் பொருத்தமாயிருக்கிறது?
மரியாதை ஏன் தகுதியாய் இருக்கிறது
இத்தகைய எதிர்மறையான உணர்ச்சிகள் அவ்வப்போது, உங்களைப் பாதிக்கிறதெனில், உங்கள் பெற்றோரை நீங்கள் மதிக்க வேண்டும் என்பது கடவுள் தேவைப்படுத்தும் காரியம் என்ற உண்மையைச் சிந்தித்துப் பார்ப்பது உங்களுக்கு உதவக்கூடும். எபேசியர் 6:2, 3 கட்டளையிடுகிறது: “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனையாயிருக்கிறது.” கனம் செலுத்துவதை, ஓர் அகராதி, ‘மரியாதையுடன் நடத்துவது’ என விளக்குகிறது. உங்கள் எதிர்கால வாழ்க்கை எதிர்பார்ப்புகள் உங்கள் பெற்றோருக்கு மரியாதை செலுத்துவதின்பேரில் சார்ந்திருக்கிறதென்பதையும் கவனியுங்கள். அவர்களுக்கு அவமரியாதை காண்பிப்பது, கடவுளுக்கு அவமரியாதை காட்டுவதாயிருக்கிறது.
என்னவாயிருந்தாலும், உங்களுக்கு உயிரைக் கொடுத்ததற்கு உங்கள் பெற்றோருக்கு நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள். தங்களால் முடிந்த அளவுக்கு அவர்கள் உங்களுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை அளிக்கின்றனர்—பல வளரும் நாடுகளில் இது ஒரு கடினமான பணியாகும்—மேலும் வரக்கூடிய வருடங்களிலும் தொடர்ந்து அவ்வாறு செய்து கொண்டிருப்பர் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் பெற்றோரின் நேரம், கனிவான கவனிப்பு, அன்பான வழிநடத்துதல் ஆகியவற்றின்மேல் எந்த ஒரு விலைச்சீட்டையும் போட முடியாது. கல்வியின் சில அனுகூலங்களை அவர்கள் கொண்டிராததால், அவர்கள் சிறுமைப்படுத்தப்பட வேண்டுமா? எழுத்தறிவுள்ளவரோ இல்லாதவரோ, அவர்கள் உங்கள் பெற்றோர்.
நீங்கள் பெற்றிருக்கும் எந்த முறையான கல்விக்கும் பல வேளைகளில் தங்களையே தியாகம் செய்து, ஆதரவளித்திருப்பவர் உங்கள் பெற்றோரே. அது உங்கள் போற்றுதலைத் தூண்ட வேண்டாமா?
பெற்றோர் பெற்றிருக்கும் கல்வி
உண்மையில் உங்கள் பெற்றோர் ஒருவேளை உங்களைவிட அதிகம் கற்றவராக இருக்கக்கூடும். ஒரு நபர் தன் வாழ்க்கை முழுவதையும் மேலே கட்டுவதற்கான ஒரு பரந்த அடித்தளத்தை முறையான பள்ளிப்படிப்பு அளிக்கிறது. ஆனால், அது வாழ்க்கையில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் உங்களுக்குக் கற்பிப்பதில்லை.
கானா தேசத்தில் ஒரு பழக்கமான முதுமொழி: “ஒரு வயதுவந்தவர் ஒரு முறை குழந்தையாயிருந்தவர், ஆனால் ஒரு குழந்தை ஒருபோதும் ஒரு வயதுவந்தவராக இருந்ததில்லை.” நீங்கள் ஒரு புத்தகத்திலிருந்து பெற முடியாத ஒன்றை உங்கள் பெற்றோர் கொண்டிருக்கின்றனர்: வாழ்க்கை அனுபவம். நீங்கள் எப்போதாவது ஒரு வேலையைக் கொண்டவராக, விற்பனைச் சீட்டுகளுக்குரிய பணத்தைச் செலுத்தி, சிறிய பிள்ளைகளைப் பராமரித்து அல்லது ஒரு குடும்பத்தை ஏற்று நடத்தியிருக்கிறீர்களா? இக்காரியங்களில் உங்கள் பெற்றோர் ஏற்கெனவே பலவருட அனுபவத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றனர்.
அன்றியும் ஒருவருடைய உய்த்துணரும் திறன்கள் “நன்மை தீமையின்னதென்று பகுத்தறியத்தக்கதாகப் பயிற்றுவிக்கப்படுவது,” வெறுமென வாசிப்பதாலும் படிப்பதாலும் அல்ல, ஆனால் “பழக்கத்தின் மூலம்” என்று பைபிள் எபிரெயர் 5:14-ல் (NW) காட்டுகிறது! எனவே, உங்கள் பெற்றோர் நேர்மையான வழிநடத்துலை உங்களுக்குத் தரவும், மதிப்பீடுகளை உங்களுக்குப் புகட்டவும் செய்யும் நிலையில் இருக்கிறார்கள். இது குறிப்பாக உங்கள் பெற்றோர் கடவுள் பயமுள்ளவராயிருந்தால் இவ்வாறிருக்கிறது.
அனுபவத்தில் உங்களுடைய பெற்றோருக்கு இருக்கும் அனுகூலம் ஒரு குடும்பத்தைப் பராமரிக்கும் வயதை நீங்கள் அடைந்தால்கூட குறைவதில்லை என்பது அக்கறைக்குரியது! நீதிமொழிகள் 23:22 கூறுகிறது: “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.” இந்த அறிவுரை இளம் பிள்ளைகளுக்கல்ல, ஆனால் வயதாகும் பெற்றோரையுடைய வயதுவந்தவர்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. ஆம், ஒருவர் வயதுவந்தவராயிருந்தாலும்கூட, அனுபவத்தின் மூலம் அவர்கள் பெற்றுள்ள ஞானத்தை மதிப்பவர்களாக, அவரது பெற்றோருக்கு செவிகொடுப்பது ஞானமானது. பெற்றோர் எழுத்தறிவில்லாதவராக இருக்கலாம், ஆனால் அவர்கள் அறிவுரை மதிப்பற்றவை என்று பொருள்படாது.
எழுத்தறிவில்லாதவர்கள், ஆனால் வெற்றிகண்டவர்கள்
எழுத்தறிவில்லாத பெற்றோரால் வளர்க்கப்பட்ட இளைஞரின் உண்மை வாழ்க்கை அனுபவங்கள் முன்கூறப்பட்டதை நன்கு சித்தரிக்கின்றன. குவாபெனா, கானாவிலுள்ள இளைஞன், எழுத்தறிவில்லாத தாயைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்: “அவள் சிட்சிப்பதில் உறுதியாயிருந்தாள். என்னுடைய நன்மைக்காக, என்னில் அவள் புகட்டிய மதிப்பீடுகளுக்கான போற்றுதலினால் நான் அவளை அதிகமாக நேசிக்கிறேன். மூத்த சகோதரிகள் வெற்றியுள்ள மனைவிகளாக இருக்கிறார்கள். இதற்கான பாராட்டின் குறிப்பிடத்தக்க பங்கை என் தாய் எடுத்துக்கொள்ளலாம்.”
மறுபுறம், ரெஜினால்டு, எழுத்தறிவில்லாத அவனுடைய தாத்தாவால் வளர்க்கப்பட்டான். ரெஜினால்டு நினைவுகூருகிறான்: “அவரது முதிர்ச்சியான முரணற்ற வழிநடத்துதல்கள், என் வாழ்வில் வெகு சீக்கிரத்திலேயே அதிகக் கவனத்தை உட்படுத்தும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள உதவியது.”
குவாசி என்பவன் கானா நாட்டைச் சேர்ந்த மற்றொரு இளைஞன். இவனுடைய தாய் ஒரு முறையான கல்வியின் பயனை ஒருபோதும் பெற்றிராதவள். இது அவளை ஓர் அனுகூலமற்ற நிலையில் வைத்ததா? இல்லை. குவாசி நினைவுகூருகிறான்: “நான் என் தாயை அவளது மன ஆற்றலுக்காக எப்போதுமே வியந்து போற்றியிருக்கிறேன். அவள் ஒரு வியாபாரி; மேல்நிலைப் பள்ளியில் எனது ஆரம்ப வருடங்களின்போது, எந்தச் சமயத்திலாவது அவள் சில கணக்குகளைப் போட விரும்பினால், நான் எழுதுகோலையும் காகிதத்தையும் நாடவேண்டியிருக்கும், அவளோ மனதிலேயே கணக்குப்போட்டுவிடுவாள். பல தடவைகள் சரியான விடைகளை முதலில் பெறுவது அவள்தானே!”
உங்கள் பெற்றோருக்கு உதவியாயிருங்கள்!
உண்மைதான், கல்வி சில அனுகூலங்களை உங்களுக்கு அளிக்கிறது. ஆனால் உங்கள் பெற்றோரைத் தாழ்வாக நடத்துவதற்கு இது காரணமல்ல. ஓர் இளைஞராக இயேசு கிறிஸ்து தம்முடைய பெற்றோரைவிட ஒப்பற்றவிதத்தில் அனுகூலமான நிலையில் இருந்தார். அவர் பரிபூரணமாயிருந்தார். எனினும், பைபிள் பதிவு, “அவர் அவர்களுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்திருந்தார்,” எனக் காட்டுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, உங்கள் திறமைகளை உங்கள் பெற்றோர் பயன்படும் வகையில் எவ்வாறு உபயோகிக்க முடியும் என்பதை நீங்கள் யோசித்ததுண்டா? உதாரணமாக, தபால்கள், செய்தித்தாள், பைபிள், பைபிள் சார்ந்த பிரசுரங்கள் ஆகியவற்றை அவர்களுக்கு வாசித்துக் காட்டுவதை அவர்கள் போற்றக்கூடும்; அல்லது, அவர்கள் சார்பாக நீங்கள் கடிதங்கள் எழுதுவது அல்லது படிவங்களைப் பூர்த்தி செய்வதிலிருந்து அவர்கள் பயன்பெறக்கூடும்.
யெகோவா தேவன் தமது மக்களுக்கு உதவும்போது “யாவருக்கும் சம்பூரணமாய் ஒருவரையும் கடிந்துகொள்ளாமல் கொடுக்கிறார்” என்பதை நினைவிற்கொள்ளுங்கள். (யாக்கோபு 1:5) வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டால், அவரது உதவி நமக்கு தேவையாயிருந்தது என்பதற்காக அவர் ஒருபோதும் நம்மை முட்டாள்களாக உணரச் செய்யமாட்டார். எனவே, உங்கள் பெற்றோருடன் பணிவான, கனிவான விதத்தில் நீங்கள் நடந்துகொள்ளும்போது, உங்கள் உதவியை அவர்கள் அநேகமாக ஏற்றுக்கொள்ளக்கூடும்.
வாசிப்பதும், எழுதுவதுமாகிய திறமைகள் கிறிஸ்தவ சபையில் மிகவும் பயன்படுவதால், கிடைக்கக்கூடிய பல்வேறு கல்வித்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள உங்கள் பெற்றோருக்கு பணிவடக்கத்துடன் ஊக்கமளிக்கலாம். அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், அநேக நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றம் அநேக சமயங்களில் கற்பிக்கும் மையமாக பயன்படுத்தப்படுகிறது. அங்கே அளிக்கப்படும் கல்விமுறையைப் பயன்படுத்திக்கொள்ள தூண்டப்படுவதற்கு அவர்களுக்கு தேவைப்படக்கூடியதெல்லாம், உங்களிடமிருந்து ஒரு தயவான ஊக்கமளிக்கும் சொல்.
சில ஆப்பிரிக்க நாடுகளில் தங்கள் பெற்றோரை அடக்கம் செய்வதற்கு விலையுயர்ந்த ஒரு சவப்பெட்டியைக் கொடுப்பதன் மூலம் தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக அவர்களுடைய மரணம் வரையாக பிள்ளைகள் காத்திருக்கிறார்கள். அவர்கள் உயிரோடிருக்கும்போதே அவர்களுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுவது எத்தனை உயர்ந்தது! அவர்கள் இளமையாய் இருந்தபோது, சில வாய்ப்புகளை இழந்தனர் என்று சங்கடப்படாதீர்கள். அவர்களது பொது கல்வியின் இழப்பை ஈடுசெய்யும் பண்புகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். சொல்லிலும், செயலிலும், எப்போதும் அவர்களுக்கு மரியாதைக் காட்டுங்கள். அவர்களோடு கருத்து வேறுபாடு கொண்டாலும், “கீழ்ப்படிய தயாராயிருங்கள்.” வாசிக்கும் எழுதும் திறமையைவிட மிக அதிகத்தைக் குறிக்கும் உங்கள் பெற்றோரின் அனலான ஆர்வம், அன்பு மற்றும் ஞானத்தைப் போற்றிக் காத்துக்கொள்ளுங்கள். (g89 12/22)
[பக்கம் 21-ன் படம்]
பெற்றோர் எழுத்தறிவின் திறமைகளில் குறைவுபட்டாலும் ஆலோசனைப் பெறுவதற்கான சிறந்த ஊற்றுமூலங்களாக இருக்கக்கூடும்