என் பிள்ளை பள்ளிக்குப் போக வேண்டுமா?
இந்தப் பக்கத்திலுள்ள வார்த்தைகளை உங்களால் வாசிக்க முடியவில்லை என்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்ய முடிகிறதா? நாட்டின் ஆட்சிமொழியே உங்களுக்கு தெரியாதென்றால் எப்படி இருக்கும்? ஒருவேளை உலக வரைபடத்தில் உங்களுடைய தாய்நாட்டை கண்டுபிடிக்க தெரியவில்லை என்றால்? எக்கச்சக்கமான பிள்ளைகள் இந்த நிலையில்தான் இருக்கப்போகிறார்கள். உங்களுடைய பிள்ளை?
உங்கள் பிள்ளை பள்ளிக்கு செல்ல வேண்டுமா? தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பல நாடுகள் கட்டாயப்படுத்துகின்றன; பெரும்பாலும் இலவச கல்வியையும் வழங்குகின்றன. பிள்ளையின் உரிமைகள் சம்பந்தமான ஒப்பந்தம் பள்ளிப் படிப்பை ஓர் அடிப்படை உரிமையாக கருதுகிறது. மனித உரிமைகளின் சர்வதேச உறுதிமொழியும் அவ்வாறே குறிப்பிடுகிறது. ஆனால், சில நாடுகளிலோ இலவச கல்வி அமலில் இல்லை; இதனால் பெற்றோர்களின் தலையில் பண சுமை விழுகிறது. ஆகவே, பள்ளிக்கு அனுப்பியோ வேறு வழிகளிலோ பிள்ளைகளை படிக்க வைக்க ஆசைப்படும் கிறிஸ்தவ பெற்றோரின் கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தை நாம் காணலாம்.
எழுத்தறிவுக்கு பைபிள் உதாரணங்கள்
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளுடைய ஊழியர்களில் பெரும்பாலோர் எழுதப் படிக்க தெரிந்தவர்கள். இயேசுவின் அப்போஸ்தலரான பேதுருவும் யோவானும் யூத சமுதாயத்து மீனவர்கள். அவர்கள் பைபிள் புத்தகங்களை எழுதினார்கள்; ஆனால், அவர்கள் சொந்த பாஷையான கலிலேய கிளை மொழியில் எழுதவில்லை, கிரேக்க மொழியிலே அவற்றை எழுதினார்கள்.a அவர்களுடைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வியறிவு கிடைக்கும்படி பார்த்துக்கொண்டனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. மேய்ப்பனாக இருந்த தாவீது, விவசாயியான ஆமோஸ், ஒருவேளை தச்சராக இருந்த இயேசுவின் சகோதரன் யூதா போன்ற பிற பைபிள் எழுத்தாளர்களுடைய சூழ்நிலையும் இவ்வாறே இருந்தது.
யோபு என்ற மனிதர் எழுதப் படிக்க தெரிந்தவர்; அவருக்கு ஓரளவு விஞ்ஞான அறிவும் இருந்ததை அவர் பெயரைத் தாங்கிய பைபிள் புத்தகம் காட்டுகிறது. அவர் இலக்கிய புலமை பெற்றவராகவும் இருந்திருக்கலாம்; ஏனெனில் அந்த யோபு புத்தகத்தில் அவர் சொன்னதாக குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் கவிதை நடையில் உள்ளன. அது மட்டுமல்ல, ஆரம்பகால கிறிஸ்தவர்களும் படித்தவர்களே என நமக்கு தெரிகிறது; ஏனென்றால் உடைந்துபோன மண்பாண்ட துண்டுகளில் காணப்படுவது அவர்கள் எழுதிய வேதப்பூர்வ குறிப்புகளாக இருக்கலாம்.
கிறிஸ்தவர்களுக்கு கல்வி முக்கியம்
கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு கிறிஸ்தவர்கள் அனைவருமே பைபிள் அறிவில் முன்னேற வேண்டும். (பிலிப்பியர் 1:9-11; 1 தெசலோனிக்கேயர் 4:1) பைபிளையும் பைபிள் படிப்புக்கு உதவும் பிரசுரங்களையும் தீவிரமாக படிப்பது ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கலாம். கடவுள் தமது வார்த்தையை எழுத்து வடிவில் அளித்திருப்பதால், தம்மை வணங்குபவர்கள் முடிந்தவரை கல்வி கற்றவர்களாக இருக்கும்படி அவர் எதிர்பார்க்கிறார். பைபிளை புரிந்து வாசிக்கும்போது அதன் ஆலோசனையை பின்பற்றுவது எளிதாகிறது. சொல்லப்போனால், குறிப்புகளின் அர்த்தத்தை தெளிவாக புரிந்து, அவற்றை தியானிப்பதற்கு பைபிளின் சில பகுதிகளை பலமுறை வாசிக்க வேண்டியிருக்கலாம்.—சங்கீதம் 119:104; 143:5; நீதிமொழிகள் 4:7.
ஒவ்வொரு வருடமும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாரின் வழிநடத்துதலால் தயாரிக்கப்படும் நூற்றுக்கணக்கான பக்கங்களை உடைய பயனுள்ள விஷயங்களை யெகோவாவின் சாட்சிகள் பெற்றுக்கொள்கிறார்கள். (மத்தேயு 24:45-47, NW) இத்தகைய பிரசுரங்கள், குடும்ப வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், மதம், அறிவியல் மற்றும் வேறுபல விஷயங்களையும் அலசுகின்றன. மிக முக்கியமாக, ஆன்மீக விஷயங்களின் பேரிலான பைபிள்பூர்வ ஆலோசனை அவற்றில் உள்ளது. உங்கள் பிள்ளைகளுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் முக்கியமான தகவல்கள் பலவற்றை அவர்கள் இழந்துவிடுவார்கள்.
மனித சரித்திரத்தைப் பற்றி கற்றுக்கொள்வதும் முக்கியம்; ஏனெனில், கடவுளுடைய ராஜ்யம் ஏன் தேவைப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள அது நமக்கு உதவுகிறது. புவியியலைப் பற்றிய அடிப்படை அறிவும் அவசியம்தான். இஸ்ரவேல், எகிப்து, கிரீஸ் போன்ற பல இடங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. உலக வரைபடத்தில் இந்த இடங்களை உங்கள் பிள்ளையால் கண்டுபிடிக்க முடிகிறதா? தன் தாய்நாட்டை கண்டுபிடிக்க முடிகிறதா? ஒருவருக்கு வரைபடத்தை பார்க்க தெரியாவிட்டால் தனக்கு நியமிக்கப்பட்ட இடத்தில் ஊழியத்தை சரிவர செய்ய முடியாமல்கூட போகலாம்.—2 தீமோத்தேயு 4:5.
சபையில் சிலாக்கியங்கள்
கிறிஸ்தவ மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் வாசிப்பை உட்படுத்தும் அநேக பொறுப்புகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சபைக் கூட்டங்களுக்கு தயார் செய்ய வேண்டிய பாகங்கள் உள்ளன. அதோடு, பிரசுரங்கள், நன்கொடைகள் சம்பந்தமான கணக்கு வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, அடிப்படை கல்வியறிவு இல்லாவிட்டால், ஒருவரால் இந்தப் பொறுப்புகளையெல்லாம் நல்ல முறையில் கையாளவே முடியாது.
உலகம் முழுவதிலுமுள்ள பெத்தேல் இல்லங்களில் வாலண்டியர்கள் வேலை செய்கிறார்கள். ஒருவருக்கொருவர் நல்ல பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்ளவும், பிரசுரங்களை மொழிபெயர்ப்பது, மெஷின்களை பழுது பார்ப்பது போன்ற கடமைகளை செய்யவும் வேண்டுமென்றால், அவர்களுக்கு அந்த நாட்டின் ஆட்சிமொழியை வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பின்னால், உங்களுடைய பிள்ளைகளும் இந்த சிலாக்கியங்களை பெற விரும்பினால் அவர்கள் அடிப்படை கல்வியறிவை பெற்றிருப்பது முக்கியம். உங்கள் பிள்ளை பள்ளிக்கு செல்வதற்கு வேறு என்ன நடைமுறையான காரணங்கள் இருக்கின்றன?
ஏழ்மையும் மூடநம்பிக்கையும்
வறுமையில் வாடும் மக்கள் சில சூழ்நிலைகளில் அப்படியே நிர்க்கதியாக நிற்கக்கூடும். மறுபட்சத்தில், நாமும் நம்முடைய பிள்ளைகளும் போதிய கல்வி பெற்றிருந்தால் தேவையில்லா கஷ்டங்களை தவிர்க்கலாம். படிப்பறிவற்ற அநேகருக்கு வாழ்க்கையை ஓட்டுவதே படு திண்டாட்டமாக இருக்கிறது. மருத்துவ உதவியை பெற போதிய வருமானம் இல்லாததால் சில சமயங்களில், பிள்ளைகள் என்ன, பெற்றோரும்கூட செத்து மடிகிறார்கள். ஓரளவுக்கு மட்டுமே படித்த அல்லது பள்ளி பக்கமே எட்டிப் பார்க்காத பெரும்பாலோர் ஊட்டச்சத்துக் குறைவாலும், குடியிருக்க ஒரு நல்ல வீடு இல்லாமலும் தவியாய் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கல்வி பேருதவியாக இருக்கும், இல்லை வெறுமனே எழுதப் படிக்க மட்டுமாவது தெரிந்திருந்தால் ஓரளவுக்கு சமாளிக்கலாம்.
படிப்பறிவு இருந்தால் மூடநம்பிக்கை கொள்ளும் மனப்பான்மை குறையும். படித்தவரிடத்திலும் படிக்காதவரிடத்திலும் மூடநம்பிக்கைகள் சகஜமாக இருப்பது வாஸ்தவமே. ஆனால் படித்தவர்களைவிட படிக்காதவர்களே மிக எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள், சுயநலத்துக்காக பயன்படுத்தப்படுகிறார்கள்; காரணம், இப்படிப்பட்ட மோசடிகளை அம்பலப்படுத்தும் தகவல்களை அவர்களுக்கு வாசிக்க தெரியாததுதான். ஆகவே, அவர்கள் மூடநம்பிக்கைகளிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்; ஆவியுலக தொடர்பு கொண்டு குணப்படுத்துபவரால் அற்புதமாக சுகப்படுத்த முடியும் எனவும் நம்புகிறார்கள்.—உபாகமம் 18:10-12; வெளிப்படுத்துதல் 21:8.
படிப்பு—வேலைக்கு மட்டுமல்ல
படிப்பின் நோக்கமே பணம் சம்பாதிப்பதுதான் என பலர் நினைக்கிறார்கள். ஆனாலும், படித்த சிலர் வேலையில்லாமல் அலைந்து திரிகிறார்கள் அல்லது அடிப்படை தேவைகளை நிரப்புவதற்கு போதுமான பணத்தை சம்பாதிக்க முடிவதில்லை. ஆகவே, பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி எந்த பிரயோஜனமுமில்லை என பெற்றோர் சிலர் நினைக்கலாம். ஆனால், பள்ளிப் படிப்பு ஒருவரை பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல, பிள்ளைகளை அவர்களுடைய முழு வாழ்க்கைக்குமே தயாராக்குகிறது. (பிரசங்கி 7:12) ஒருவருக்கு தன் நாட்டின் ஆட்சிமொழியை பேசவும், வாசிக்கவும், எழுதவும் தெரிந்தால், எல்லாரிடமும் தொடர்பு கொள்வது எளிதாகி விடுகிறது. மருத்துவத் துறையில் வேலை செய்வோரிடமோ, அரசாங்க அதிகாரிகளிடமோ, வங்கி தொழிலாளர்களிடமோ தொடர்புகொள்ள பயந்து பயந்து நிற்பதற்கு பதிலாக காரியங்களை சகஜமாக செய்ய உதவுகிறது.
சில இடங்களில், படிக்காத பிள்ளைகளை கொத்து வேலை, மீன்பிடித்தல், தையல் வேலை அல்லது வேறு சில தொழில்களை பழகுவதற்காக யாரிடமாவது ஒப்படைத்து விடுகிறார்கள். ஒரு தொழிலைப் பழகிக்கொள்வது நல்ல காரியம்தான்; ஆனால், இந்தப் பிள்ளைகள் பள்ளி வாசலையே மிதிக்கவில்லையென்றால் சரிவர வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும். ஆகவே, முதலாவதாக அடிப்படை கல்வியை பெற்று, அதற்குப்பின் அவர்கள் ஒரு தொழிலை கற்றுக்கொள்வார்களானால், மற்றவர்கள் இவர்களை சுரண்டிப் பிழைப்பதை பெரும்பாலும் தவிர்க்கலாம், மேலும், பரம திருப்தியுடனும் வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை.
நசரேயனாகிய இயேசு ஒரு தச்சராக இருந்தார்; தம்முடைய வளர்ப்பு தகப்பனாகிய யோசேப்புடன் சேர்ந்து ஓரளவு தொழில் கற்றிருப்பார் என தெரிகிறது. (மத்தேயு 13:55; மாற்கு 6:3) இயேசு படித்தவராகவும் இருந்தார்; அதனால்தான் 12-ம் வயதில்கூட ஆலயத்திலிருந்த அறிவாளிகளுடன் அவரால் அர்த்தமுள்ள விதத்தில் சம்பாஷிக்க முடிந்தது. (லூக்கா 2:46, 47) இயேசுவை பொறுத்ததில், ஒரு தொழிலை பழகிக்கொண்டது, மற்ற கல்விமுறைகளை பெறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கவில்லை.
பெண்பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டுமா?
சில சமயங்களில் பெற்றோர் தங்களுடைய பையன்களை பள்ளிக்கு அனுப்புகிறார்கள், பெண்பிள்ளைகளையோ அனுப்புவதில்லை. பெண்பிள்ளைகளை படிக்க வைப்பது அதிக செலவை ஏற்படுத்தும் என பெற்றோர் சிலர் நினைக்கலாம்; அவர்கள் படிக்கச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டால் அம்மாமாருக்கு ரொம்ப உதவியாக இருப்பார்கள் எனவும் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு பெண்பிள்ளைக்கு படிப்பறிவில்லையென்றால், அது அவளுடைய வாழ்க்கையில் ஊனமாகவே அமையும். ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுக் குழந்தைகள் அவசர நலநிதியின் (யுனசெஃப்) ஒரு வெளியீடு குறிப்பிடுவதாவது: “வறுமையை ஒழிக்கும் மிகச் சிறந்த உபாயங்களில் ஒன்றுதான் பெண் கல்வி என்பதை பல ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.” (வறுமையும் பிள்ளைகளும்: பின்தங்கிய நாடுகளுக்கு 90-களின் பாடங்கள் [ஆங்கிலம்]) படித்த பெண்பிள்ளைகள் வாழ்க்கையின் பிரச்சினைகளை சமாளிக்க தயாராகிறார்கள், ஞானமான தீர்மானங்களை எடுக்கிறார்கள், இதனால் குடும்பத்திலுள்ள அனைவரும் நன்மை அடைகிறார்கள்.
குழந்தைகளின் இறப்பு விகிதத்தைப் பற்றிய ஓர் ஆய்வு மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பெனினில் நடத்தப்பட்டது. படிக்காத தாய்மார்களை மொத்தமாக கணக்கில் எடுத்தால் அவர்களுடைய ஐந்து வயதுக்கு உட்பட்ட 1,000 குழந்தைகளில் 167 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் இடைநிலைக் கல்வி பெற்றவர்கள் 38 குழந்தைகளையே இழக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு காட்டியது. “ஆகவே, உலகம் முழுவதிலும் இருக்கும் நிலைமையைப் போலவே, பெனினிலும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை நிர்ணயிப்பதற்கு கல்வியின் அளவே ஒரு காரணியாக அமைகிறது” என்ற முடிவுக்கு வருகிறது யுனசெஃப். அப்படியானால், உங்களுடைய பெண்பிள்ளைகளை படிக்க வைப்பதால் அநேக நன்மைகளைப் பெறலாம்.
எழுத்தறிவு வகுப்புகள் மட்டும் போதுமானதா?
தேவையிருக்கும் இடங்களில், யெகோவாவின் சாட்சிகள் சபையிலுள்ள வாசிக்கத் தெரியாதோருக்காக எழுத்தறிவு வகுப்புகளை நடத்துகிறார்கள்.b மக்கள் தங்களுடைய உள்ளூர் பாஷையில் வாசிக்க கற்றுக்கொள்வதற்கு இந்த பயனுள்ள ஏற்பாடு உதவுகிறது. பள்ளிக்கு செல்வதையே இது முற்றிலும் மாற்றீடு செய்கிறதா? நிறைய பள்ளிக்கூடங்கள் இருந்தும்கூட கிறிஸ்தவ சபையே உங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி அளிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?
யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் நடத்தும் எழுத்தறிவு வகுப்புகள் தயவான ஓர் ஏற்பாடாக இருந்தாலும், பள்ளிக்குள் கால் எடுத்து வைத்திராத பெரியவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய பெற்றோர் படிப்பறிவின் முக்கியத்துவத்தை ஒருவேளை உணராமல் இருந்திருக்கலாம், அல்லது பள்ளிகளே இல்லாமல் இருந்திருக்கலாம். அத்தகையோர், சபைகள் நடத்தும் எழுத்தறிவு வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலம் பயனடையலாம். ஆனால், முறைப்படியாக பள்ளிக்கு சென்று கற்பதை இந்த வகுப்புகள் ஈடு செய்வதில்லை; ஆரம்ப கல்வியை புகட்டும் நோக்கத்துடன் இவை ஏற்பாடு செய்யப்படுவதில்லை. அறிவியல், கணிதம், சரித்திரம் போன்ற பாடங்கள் இந்த எழுத்தறிவு வகுப்புகளில் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. ஆனால் ஒழுங்கான பள்ளி பாடத்திட்டத்தில் இவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
ஆப்பிரிக்காவில் இந்த எழுத்தறிவு வகுப்புகள் பெரும்பாலும் குல மொழிகளிலேயே நடத்தப்படுகின்றன; ஒரு நாட்டின் ஆட்சிமொழியில் அதிகமாக நடத்தப்படுவதில்லை. என்றாலும் பொதுவாக பள்ளிகளில் ஆட்சிமொழியிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இது பிள்ளைகளுக்கு இன்னும் பல நன்மைகளை அளிக்கிறது; ஏனெனில் நிறைய புத்தகங்களும் வாசிக்க வேண்டிய மற்ற பல்வேறு விஷயங்களும் ஆட்சிமொழியில்தான் உள்ளன. சபைகள் ஏற்பாடு செய்கிற எழுத்தறிவு வகுப்புகள் ஒரு பிள்ளையின் முறைப்படியான கல்வியை பூர்த்தி செய்வதாக இருந்தாலும் அதன் இடத்தை பிடிக்க முடியாது. அப்படியானால், நடைமுறைக்கு ஒத்துவரும் பட்சத்தில், பிள்ளைகளுக்கு முறைப்படியான கல்வியை அளிக்க வேண்டுமல்லவா?
பெற்றோரின் பொறுப்பு
சபையின் ஆவிக்குரிய தேவைகளை கவனிப்பதில் முன்நின்று செயல்படுகிற ஆண்கள் முன்மாதிரியான கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் குடும்பங்களையும், பிள்ளைகளையும் ‘நல்ல முறையில்’ நடத்த வேண்டும். (1 தீமோத்தேயு 3:4, 12) ‘நல்ல முறையில்’ நடத்துவது என்பது, பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமலிருப்பதற்கு உதவியாக தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதை அர்த்தப்படுத்தும்.
கிறிஸ்தவ பெற்றோருக்கு கடவுள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார். தம்முடைய வார்த்தைக்கு இசைவாக தங்கள் பிள்ளைகளை அவர்கள் வளர்க்க வேண்டும்; அதோடு, ‘அறிவை விரும்புகிறவர்களாக’ ஆவதற்கும் அவர்களுக்கு உதவ வேண்டும். (நீதிமொழிகள் 12:1; 22:6; எபேசியர் 6:4) “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 5:8) நம்முடைய பிள்ளைகளுக்கு பொருத்தமான கல்வியை அளிப்பதும் அவசியம்.
வகுப்புகளில் வதவதவென நிறைய பிள்ளைகள் இருப்பது, நிதி தட்டுப்பாடு, அல்லது ஆர்வமில்லாத, குறைந்த சம்பளத்திற்கு வேலைபார்க்கிற ஆசிரியர்கள் போன்ற காரணங்களால் சில சமயங்களில் பள்ளியின் கல்வி தரம் குறைவுபடலாம். ஆகையால், பள்ளியில் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்பதில் பெற்றோர் அதிக அக்கறை காட்டுவது மிக முக்கியம். முக்கியமாக பள்ளியின் ஒவ்வொரு பருவத்தின் ஆரம்பத்திலும் ஆசிரியர்களை சென்று பார்ப்பது ஞானமானது; பிள்ளைகள் சிறந்த மாணவர்களாக திகழுவதற்கு என்ன செய்யலாமென அவர்களிடம் ஆலோசனையும் கேட்கலாம். இவ்வாறு செய்யும் போது ஆசிரியர்கள் தாங்கள் மதிக்கப்படுவதை உணருவார்கள்; பிள்ளைகளின் படிப்புக்காக அதிக முயற்சி எடுக்கவும் தூண்டப்படுவார்கள்.
ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. “ஞானவான்கள் அறிவைச் சேர்த்து வைக்கிறார்கள்” என நீதிமொழிகள் 10:14 சொல்கிறது. மிக முக்கியமாக பைபிள் அறிவை பொறுத்தவரை இது உண்மையாக இருக்கிறது. இளையோர் முதியோர் என்ற வித்தியாசமில்லாமல் யெகோவாவின் மக்கள் முடிந்தவரை விஷயம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்; அப்போதுதான் பிறருக்கு ஆவிக்குரிய விதத்தில் உதவவும் முடியும், ‘வெட்கப்படாத ஊழியக்காரராகவும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவராகவும் தங்களை தேவனுக்கு முன்பாக உத்தமராக நிறுத்தவும்’ முடியும். (2 தீமோத்தேயு 2:15; 1 தீமோத்தேயு 4:15) அப்படியானால், உங்களுடைய பிள்ளைகள் பள்ளிக்கு போக வேண்டுமா? போக வேண்டும் என்ற முடிவுக்கே நீங்கள் வருவீர்கள். இருந்தாலும், உங்கள் நாட்டின் நடைமுறையைப் பொறுத்தே இது இருக்கும். ஆனால், கிறிஸ்தவ பெற்றோர் இந்த மிக முக்கியமான கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்: ‘என்னுடைய பிள்ளைகள் படித்தவர்களாக இருக்க வேண்டுமா?’ நீங்கள் எங்கு வாழ்ந்துகொண்டிருந்தாலும் சரி, இந்த கேள்விக்கு ஆம் என்றே பதிலளிப்பீர்கள் அல்லவா?
[அடிக்குறிப்புகள்]
a அவர்களுடைய தாய்மொழி, அரமேயிக்கின் கலிலேய கிளை மொழியாகவோ எபிரெயு பாஷையின் ஒரு கிளை மொழியாகவோ இருந்திருக்கலாம். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 1, பக்கங்கள் 144-6-ஐக் காண்க.
[பக்கம் 12, 13-ன் பெட்டி/படம்]
பள்ளிக்குச் செல்ல முடியாமல் போகையில்
சில சூழ்நிலைகளில் பள்ளிக்கு செல்ல முடியாமல் போகிறது. உதாரணமாக, அகதிகள் முகாமில் தகுதிபெற்றவர்களில் 5-ல் ஒரு பிள்ளையால் மட்டுமே பள்ளிக்கு செல்ல முடிகிறது என ரெஃப்யூஜீஸ் பத்திரிகை குறிப்பிட்டது. சில சமயங்களில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தங்கள் காரணமாக பள்ளிகள் கால வரையறையின்றி மூடப்படுகின்றன. சில பகுதிகளில் பள்ளிகள் வெகு தொலைவில் இருக்கலாம் அல்லது பள்ளிகளே இல்லாமல் இருக்கலாம். கிறிஸ்தவர்களை துன்புறுத்துவதன் காரணமாகவும் பிள்ளைகள் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலைகளில் உங்களுடைய பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்? உங்களுக்கு நிறைய பிள்ளைகள் இருக்கிறார்கள், நீங்கள் குடியிருக்கும் பகுதியிலோ பள்ளிக்கு அனுப்புவது கையைக் கடிக்கும் அளவுக்கு செலவு வைக்கிறது. இந்த சூழ்நிலையில் எல்லா பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாமல் போகையில் என்ன செய்வது? அப்படியானால், ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளையாவது பணம் செலவழித்து பள்ளிக்கு அனுப்ப உங்களால் முடியுமா? ஆவிக்குரிய விதத்தில் எந்த தடையும் வராதபடிக்கு அவர்களை பள்ளிக்கு அனுப்ப முடியுமா? அவ்வாறு செய்யும்போது பள்ளியில் கற்றுக்கொண்டதை உங்களுடைய மற்ற பிள்ளைகளுக்கு அவர்கள் சொல்லிக் கொடுக்க முடியும்.
சில நாடுகளில் வீட்டுக் கல்வி முறை இருக்கிறது.c இந்த ஏற்பாட்டின்படி பெற்றோரில் ஒருவர் ஒவ்வொரு நாளும் சில மணிநேரம் தங்களுடைய பிள்ளைக்கு கற்றுக்கொடுக்கிறார். பண்டைய முற்பிதாக்களின் காலங்களில், பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் பெற்றோர் வெற்றி கண்டிருக்கிறார்கள். பெற்றோர் கொடுத்த நல்ல பயிற்சியின் காரணமாகவே யாக்கோபின் மகனாகிய யோசேப்பு இளம் வயதிலேயே மேற்பார்வை செய்யும் அதிகாரியாக சேவிப்பதற்கு தகுதி பெற்றார்.
அகதிகள் முகாம் போன்ற இடங்களில் கற்றுக்கொடுப்பதற்கு ஒரு முறையான பாடத் திட்டம் கிடைப்பது கடினமாக இருக்கலாம், ஆனால் யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்படும் பிரசுரங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு அடிப்படையாக பெற்றோர் பயன்படுத்தலாம். உதாரணமாக, என்னுடைய பைபிள் கதை புத்தகம் சிறு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு உதவியாக இருக்கும். விழித்தெழு! பத்திரிகையில் உள்ள கட்டுரைகள் பல விஷயங்களை அலசுகின்றன. அறிவியல் விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்கு உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தை பயன்படுத்தலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகத்தில் ஒரு சிறிய உலக வரைபடம் உள்ளது; பல்வேறு நாடுகளிலுள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் அவர்களுடைய பிரசங்க வேலையைப் பற்றியும் அது சொல்கிறது.
நன்கு தயாரித்து பிள்ளைகளின் புரிந்துகொள்ளும் திறமைக்கு ஏற்ப கற்பிக்கும்போது நல்ல பலன் கிடைக்கும். அவர்கள் தொடர்ந்து வாசித்துக் கொண்டும் கற்றுக் கொண்டும் வந்தால், பிற்பாடு பள்ளியில் முறைப்படி கல்வி கற்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அது அவர்களுக்கு எளிதாக இருக்கும். உங்களுடைய பிள்ளைகள் நன்கு படித்தவர்களாக ஆவதற்கு முயற்சி எனும் படியில் அடியெடுத்து வையுங்கள்; கைமேல் பலன் கிட்டும்!
[அடிக்குறிப்பு]
c ஜூலை 8, 1993 விழித்தெழு! பக்கங்கள் 9-12-ல் “வீட்டுக் கல்வி—அது உங்களுக்கு ஏற்றதா?” என்ற கட்டுரையைக் காண்க.
[படம்]
நீங்கள் குடியிருக்கும் பகுதியில் பிள்ளைகள் முறைப்படியாக பள்ளிக்கு போக வாய்ப்பு இல்லையென்றால் என்ன செய்யலாம்?