வீட்டுக் கல்வி—அது உங்களுக்கு ஏற்றதா?
“விசித்திரமாகத் தோன்றிய ஒன்று ஒரு தேசிய இயக்கமாக மாறியிருக்கிறது.” இப்படித்தான் ஐக்கிய மாகாணங்களிலுள்ள வீட்டுக் கல்வியை டைம் பத்திரிகை சமீபத்தில் விவரித்தது. இது ஒரு குழந்தை பெறக்கூடிய மிகச் சிறந்த கல்வி, பாரம்பரிய வகுப்பறையிலல்ல, ஆனால் அவனுடைய அல்லது அவளுடைய சொந்த அறையிலேயே கிடைக்கிறது என நம்பும் பெற்றோர் வெற்றிவாகை சூடிய வளர்ந்துவரும் ஒரு போக்குமுறையாகும்.
வீட்டுக் கல்வி விசித்திரமானது அல்லது புரட்சிகரமானதுகூட என்று இன்னும் சிலரால் கருதப்படுகிறபோதிலும், இது ஒவ்வொரு வருடமும் அதிக ஆதரவாளர்களைப் பெற்றுவருகிறது. வீட்டுக் கல்வியை மேற்கொள்வோரின் எண்ணிக்கை 1970-ல் சுமார் 15,000-லிருந்து 1990-ல் 5,00,000-க்கு உயர்ந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஐக்கிய மாகாணங்களில் பத்து லட்சம் குடும்பங்களுக்கு மேல் தங்களுடைய பிள்ளைகளை வீடுகளிலேயே கல்வி புகட்டுகின்றனர் என்பதாக சில வீட்டுக் கல்வி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
வீட்டுக் கல்வியினரை ஆதரிக்கும் தொகுதிகள், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், நியூஜீலாந்து போன்ற நாடுகளிலும் வேகமாக தோன்றிவருகின்றன. இது வீட்டுக் கல்வியில் உள்ள ஆர்வம் உலகமுழுவதும் பரவிவருகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
ஏன் இத்தனையநேக பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு வீட்டிலேயே கற்பிக்கவேண்டும் என தீர்மானிக்கின்றனர்? வீட்டுக் கல்வி எந்தளவுக்குப் பலனுள்ளது? அது உங்கள் குடும்பத்துக்கு ஏற்றதாய் சிந்திக்கத் தகுதியான ஒரு தெரிவுதானா?
அதன் அடிப்படை கருத்தில், வீட்டுக் கல்வி அது தோன்றுவதுபோல் முழுமையாய் இருப்பதில்லை. “பள்ளியல்ல, ஆனால் வீடே, தொடக்கமுதலுள்ள கல்விமுறையாக இருந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டு வரை, பள்ளிக்குச் சென்ற குழந்தைகளில் பெரும்பாலானோர், 12 வயதிலோ அதற்குப் பிறகோதான் பள்ளிக்குப் போகத் தொடங்கினர்,” என்று ரேமண்ட் மற்றும் டாரத்தி மூர் ஹோம்-ஸ்பன் ஸ்கூல்ஸ் என்ற தங்களது புத்தகத்தில் கருத்துத் தெரிவித்தனர்.
ஜார்ஜ் உவாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், தாமஸ் ஜாஃபர்ஸன், தாமஸ் எடிசன், ஆல்பர்ட் ஐய்ன்ஸ்டைன் போன்ற புகழ்மிக்க ஆட்கள் வீட்டில் கல்வி பயின்றவர்கள்தான். உண்மையில், 19-ம் நூற்றாண்டின் இறுதி வரை ஐக்கிய மாகாணங்களில் கட்டாய-பள்ளி-வருகை சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆகவே, ஆசிரியரும், வீட்டுக் கல்வி பெற்றோராயும் இருக்கும் கேரி பெனட் வில்லியம் சொல்கிறபடி, வீட்டுக் கல்வி, ஒரு சமீபகாலத்திய கொள்கையல்ல, ஆனால் “ஒரு பழங்கால கல்வி தராதரமாகும்.” உண்மையிலேயே, பைபிள் காலத்தில் வீட்டுக் கல்வி தராதரத்தைப் பெரும்பாலானோர் கடைப்பிடித்தனர்.
அவர்கள் ஏன் அவ்வாறு செய்கின்றனர்
ஆர்வமூட்டும்வகையில், வீட்டுக் கல்வியைக் கடைப்பிடிக்கும் ஐ.மா. பெற்றோரில் 50-லிருந்து 90 சதவீதம் வரை மத சம்பந்தமான காரணங்களுக்காக அவ்வாறு செய்வதாக நேஷனல் கேதலிக் ரிப்போர்டர் மதிப்பிடுகிறது. இந்தப் பெற்றோர் பொதுவாகவே, பள்ளிகளில் நிலவியிருக்கும் நாத்திகக் கொள்கையின் செல்வாக்குகள் என்பதாக எதை உணருகின்றனரோ அதிலிருந்து தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் அக்கறைகொள்கின்றனர். “கிறிஸ்தவ மாறா மரபேற்புக் கோட்பாட்டுச் சமுதாயத்தினரே வீட்டு-பள்ளி இயக்கத்தின் முதுகெலும்பாக இருக்கின்றனர். மதம் வகுப்பறைகளில் துர்ப்பிரயோகம் செய்யப்படுகிறது, அல்லது அசட்டை செய்யப்படுகிறது என்பதாக இவர்கள் நம்புகின்றனர்,” என்று டைம் பத்திரிகை கூறியது.
மற்ற பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் மிக இளம் வயதிலேயே கேடுவிளைவிக்கும் ஒழுக்கக்கேட்டின் செல்வாக்குகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்க விரும்புகின்றனர். எனவே அவர்களை அரசினர் பள்ளிகளிலிருந்து விலக்கிவைத்திருக்கின்றனர். “பள்ளிகளில் நிலவியிருக்கும் ஒழுக்கக்கேட்டின் காரணமாக, நிலைமை கட்டுப்பாட்டை மீறிக்கொண்டிருந்தது. எங்கள் குழந்தைகளைப்பற்றியும், பள்ளியில் நிலவியிருக்கும் கவலைக்கிடமான நிலைமையைப்பற்றியும் நாங்கள் அக்கறையுடையவர்களாக இருந்தோம்,” என்று தன்னுடைய பிள்ளைகளுக்குத் தானும் தன் மனைவியும் வீட்டிலேயே போதிக்கவேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே தீர்மானித்திருந்த ஒரு கிறிஸ்தவர் சொன்னார்.
சிலவேளைகளில், பெற்றோர் கொள்கை சம்பந்தமான காரணங்களைவிட, படிப்புச்சம்பந்தமான காரணங்களுக்காக வீட்டுக் கல்வியைத் தெரிந்தெடுக்கின்றனர். அநேக அரசினர் பள்ளிகளில் பரவலாகக் காணப்படும், மாணவர் நெருக்கம் உள்ள வகுப்பறைகள், குறைந்த கல்வி தராதரங்கள், பாதுகாப்புப் பிரச்னைகள் போன்றவற்றால் அவர்கள் வெறுப்படைந்திருக்கின்றனர். நிர்வாகங்களுடைய போதனைகளின் மங்கலான முடிவுகளால் அடிக்கடி ஏமாற்றமடைந்திருக்கின்றனர். எனவே தனிப்பட்ட நேர்முக கவனம் செலுத்துவதன் மூலம் தங்களுடைய பிள்ளைகளுக்கு அதிகம் உதவிசெய்யமுடியும் என நம்புகின்றனர். வீட்டுக் கல்வி இத்தகைய கவனம் செலுத்துவதைச் சாத்தியமாக்குகிறது.
சிலர் வீட்டுக் கல்வி விரும்புவதன் காரணத்தை விளக்குகையில், வீட்டுப்பள்ளிகள்: ஒரு மாற்றுத் தெரிவு (Home Schools: An Alternative) என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “[வீட்டில் கற்பிக்கும்] பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு 100% ஈடுபாடு கொண்டிருக்கின்றனர் . . . தங்களுடைய கவனத்தைத் தங்களுடைய சொந்த குழந்தையின் கல்விக்காக தியாகம் செய்யமுடிகிறது.”
அது பலனளிக்கிறதா?
வீட்டில் பிள்ளைகள் மிகவும் திறம்பட்டவகையில் கற்றுக் கொள்கின்றனர் என்பதாக வீட்டுக் கல்வியை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். அவர்கள் காட்டும் காரணம், பாடங்கள் குடும்பத்தின் அனுதின செயல்களின் ஒவ்வொரு அம்சங்களோடும் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதாகும். “அநேக குடும்பங்கள் ஒரு கணித பாடபுத்தகத்தோடு தொடங்குகின்றனர். ஆனால் அனுதின அனுபவங்கள் மூலம் பாடங்களைக் கற்றுக்கொள்ளமுடியும் என்பதைப் பின்னர் கண்டுபிடிக்கின்றனர். உதாரணமாக, பொருட்கள் வாங்க கடைக்குச் செல்லுதலும், வங்கியில் கணக்கைச் சரிபார்க்கச் செல்லுதலும், பண நிர்வாகத்தைப் புரிந்துகொள்ள மாணாக்கருக்கு உதவிசெய்கிறது. வீட்டில் சில பழுதுகளைப்பார்ப்பது அளவு சம்பந்தப்பட்ட கணக்குகளுக்கு ஒரு மிகச் சிறந்த தொடக்க பாடபுத்தகமாக அமைகிறது,” என்பதாக பள்ளி நூலக பத்திரிகை (School Library Journal) புத்தகத்தில் ஜேன் A. ஆவ்னர் எழுதுகிறார்.
வீட்டுக் கல்வி எவ்வளவு பலனுள்ளதாய் இருந்திருக்கிறது? வீட்டில் கற்பவர்கள் பொதுவாகவே, தரநிர்ணயம் செய்யப்பட்ட அடைவுத் தேர்வுகளில் தேசிய சராசரிக்குச் சமமான அல்லது அதிகமான மதிப்பெண்களைப் பெறுகின்றனர். ஆனால் அத்தகைய முடிவுகள், வீட்டில் கற்றவர்கள் பாரம்பரிய பள்ளிகளில் படித்த குழந்தைகளைவிட நல்ல கல்வியைப் பெற்றிருக்கின்றனர் என்று நிரூபிக்கவேண்டும் என்ற தேவையில்லை.
“தற்போதைய அத்தாட்சி முடிவுபெறாததாய் இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளிலெல்லாம் உள்ள முதலாவது பிரச்னை என்னவென்றால், வீட்டில் கற்றவர்களின் கணிசமான ஒரு தொகுதியின் தேர்வு முடிவுகள் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கவில்லை,” என்பதாக வீட்டுப் பள்ளி கையேடு என்ற புத்தகம் கூறுகிறது.
வீட்டுக் கல்வி, கல்விமுறைகளில் மிக உயர்ந்த கல்விமுறை என்று தீர்மானமாக முடிவுசெய்வதற்கு “நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலான அத்தாட்சி ஒன்றும் கிடைக்கவில்லை. வீட்டில் கற்றவர்கள் வழக்கமாகவே நல்ல திறம்பட்டவர்களாக இருந்தாலும், எந்தக் கல்வி வித்தியாசத்திற்கும் வேறு எந்தக் காரியங்களும் காரணமல்ல என்று தகுந்த ஆராய்ச்சி செயல்முறை திட்டம் காண்பிக்கவேண்டும்.” இவ்வாறு வீட்டுப் பள்ளி கையேடு விவரிக்கிறது.
அநேகர் இன்னும் சந்தேகிக்கின்றனர்
வீட்டுக் கல்வியையும் குற்றம் கூறுபவர்களில்லாமல் இல்லை. பள்ளி அதிகாரிகள் பலர், வீட்டுக் கல்வி முயற்சிகளின் மூலம் கொடுக்கப்படும் இசைவற்ற கல்வி தரத்தைப்பற்றிய கவலையைத் தெரிவித்திருக்கின்றனர். டைம் பத்திரிகை இவ்வாறு விளக்குகிறது: “நல்லெண்ணங்கள் தானாகவே முழுமையான கல்வியில் விளைவடைவதில்லை.”
இதன் காரணமாகத்தான் பெற்றோர் தங்கள் சொந்த பிள்ளைகளைக் கற்பிக்கப்போகிறார்கள் என்று அறிவிக்கும்போது, கல்வி மாவட்ட நிர்வாகம் சிலநேரங்களில் ஒத்துழைக்காதவையாயும், எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடியவையாயும் இருக்கின்றன. சமீப ஆண்டுகளில் சில கல்வி மாவட்ட நிர்வாகங்கள் வீட்டுக் கல்வியைக் கடைப்பிடிப்பவர்களோடு அதிகம் நெருங்கி ஒத்துழைக்க முயற்சி செய்திருக்கின்றன. ஆனால் மற்ற கல்வி அதிகாரங்களோ சந்தேகிக்கக்கூடியவையாகவே இருக்கின்றன. துவக்கப்பள்ளி முதல்வர்களின் தேசிய சங்கம், தேசிய கல்வி சங்கம் [NEA] ஆகிய இவை இரண்டும் வீட்டுக் கல்விக்கெதிராக ஒரு நிலைநிற்கையை எடுத்திருக்கின்றன. சில பெற்றோர் போதுமான வீட்டுக் கல்வி புகட்டுவதற்கான திறமை இல்லாதவர்களாய் இருக்கலாம் என்ற பயமே இதற்குக் காரணம். தேசிய கல்வி சங்க அதிகார நிலைநிற்கையின் அறிவிப்பின்படி, “வீட்டுக் கல்வி திட்டங்கள் மாணாக்கருக்குப் பல்வகை கல்வியின் ஓர் அனுபவத்தைக் கொடுக்கமுடியாது.”
நல்ல ஆசிரியராயிருப்பதற்குப் பெற்றோர், கல்லூரி கல்வித் தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டிய தேவையில்லை என்பதாக வீட்டுக் கல்வி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். “தங்களுடைய பிள்ளைகளின் சொந்த கேள்விகளுக்குப் பிள்ளைகளே பதில்களைக் கண்டுபிடிக்க உற்சாகப்படுத்துவதற்கு, பெற்றோர் எல்லா பதில்களையும் தெரிந்திருக்க வேண்டிய தேவையில்லை,” என்று வீட்டுக் கல்வி—கேள்விகளுக்குப் பதில் அளித்தல் (Home Schooling—Answering Questions) என்ற புத்தகம் சொல்கிறது. தகுந்த மூல ஆதாரப் புத்தகங்களுக்குப் பிள்ளைகளின் கவனத்தைத் திருப்பக்கூடும். பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து கற்றுக்கொள்ளலாம். உயர்தர பயிற்சி அல்லது தனித்திறமை தேவைப்படும்போது தனிப் பயிற்சி ஆசிரியர்களைப் பகுதிநேர அடிப்படையில் அமர்த்திக்கொள்ளலாம்.
வீட்டில் கற்பிக்கப்பட்ட பிள்ளைகள் மிகவும் தனிப்படுத்தப்பட்டதால் தங்களுடைய சமவயதுள்ள மற்ற பிள்ளைகளோடு கொள்ளக்கூடிய இயற்கையான பரிமாற்றங்களை அவர்கள் இழக்கின்றனர் என்றுங்கூட திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். அது ஆதரவாளர்களால் முழுமையாக நிராகரிக்கப்படும் ஒரு முடிவாகும். “இந்தப் பிள்ளைகள் சமுதாய ரீதியில் தனிப்படுத்தப்படவில்லை. வீட்டில் கற்பவர்கள் வழக்கமாகவே மிருகக் காட்சிசாலை அல்லது கலை அருங்காட்சியகம் (art museum) போன்ற இடங்களுக்குச் சென்றுவருவார்கள். இவர்கள் மற்ற குழந்தைகளைப்போலவே அயலகத்தில் விளையாடுகின்றனர். காலை எட்டு மணியிலிருந்து இரவு பத்து மணிவரை இவர்கள் ஒரு தனி அறையில் அடைத்து வைக்கப்படுகின்றனர் என்ற கருத்துச் சரியில்லை,” என தேசிய வீட்டுக் கல்வி ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ப்ரையன் ரே கூறினார்.
அது உங்களுக்கு ஏற்றதா?
வீட்டுக் கல்வி “வெறுமனே தைரியத்தை மட்டுமல்ல, ஆனால் தாங்கும் சக்தி, புனைவாற்றல், சீரான ஊக்கம் போன்றவற்றையும் தேவைப்படுத்துகிறது,” என்று க்ரிஸ்டியானிடி டுடே கூறுகிறது. ஆகவே வீட்டுக் கல்வியைக் கொண்டிருப்பதைச் சிந்திப்பீர்களானால், அதில் உள்ளடங்கியுள்ள பொறுப்பைப்பற்றி நடைமுறையாகச் சிந்தித்துப் பாருங்கள். பிள்ளைகளுக்கு ஓர் அனுதின கல்வித் திட்டத்தைச் செயற்படுத்துவதோடு, வீட்டுவேலைகளையும் மற்ற குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக்கொள்வது ஊக்கமான முயற்சியையும் நல்ல ஒழுங்குபடுத்துதலையும் தேவைப்படுத்துகிறது. “விட்டொழிந்தால் போதும் என்று உணரக்கூடிய அளவுக்கு நீங்கள் கடினமாக உழைக்கலாம். அது மிக அதிகத்தை வற்புறுத்திக் கேட்பதாக இருக்கிறது,” என்று ரே சொன்னார்.
அடுத்து, உங்கள் உள்ளூரிலுள்ள வீட்டுக் கல்விமுறைச் சட்டங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களின் 50 மாகாணங்களிலுமே, வீட்டுக் கல்வி சட்டப்பூர்வமானதுதான். ஆனால் விதிமுறைகளின் படிநிலைகள் கணிசமாக வித்தியாசப்படுகின்றன. சில இடங்களில் உங்கள் குழந்தைக்கு வீட்டில் கற்பிப்பதானது, வெறுமனே உள்ளூர் பள்ளியின் கண்காணிப்பாளருக்கு அறிவித்துவிட்டு, ஓர் ஒரு-பக்க விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுப்பதை அர்த்தப்படுத்துகிறது. மற்ற மாகாணங்களில், வீட்டில் கற்பிப்பதற்குத் தகுதிபெற ஒரு பெற்றோர் சான்றளிக்கப்பட்ட ஆசிரியராக இருக்கவேண்டும். எல்லா சட்டப்பூர்வ தேவைகளையும் பூர்த்தி செய்ய ஏதுவாக, உள்ளூர் கல்விமுறைக் கொள்கைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
பிறகு, செலவைப்பற்றி யோசித்துப் பாருங்கள். போதனையில் உதவும் பொருட்களை வாங்குவது—குறிப்பாக பணக்குறைவு இருக்குமானால்—வீட்டுக் கல்வியில் மிகக் கடினமான சவால்களை முன்வைக்கிறது. “பயிற்சியாளர்களுக்கு நீங்கள் எளிதான ஓர் இலக்காகிறீர்கள்,” என்று எ சர்வைவர்ஸ் கைய்ட் டு ஹோம் ஸ்கூலிங் எச்சரிக்கிறது.
சில பயிற்சியாளர்கள் ஒரு நியாயமான பயிற்சிக் கட்டணத்தைக் கேட்கிறார்கள். மற்ற வீட்டுக் கல்வி திட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான டாலர்கள் செலவாகின்றன. சில மாகாணங்களில் வீட்டுக் கல்வி பெறுபவர்கள் மேற்கொள்ளவேண்டிய தரநிர்ணயம் செய்யப்பட்ட தேர்வுகள் ஒவ்வொன்றுக்கும் 50 டாலர்கள் வரை செலவாகிறது. புதிய பாடபுத்தகங்கள், பயிற்சிச் சிற்றேடுகள், மற்ற பொருட்கள் போன்றவை ஒவ்வொரு வருடமும் தேவைப்படுகிறது. எனவே கவனமாக திட்டமிடப்பட்ட ஒரு வீட்டுக் கல்வி வரவு செலவுத் திட்டம் மிகவும் அவசியம்.
சந்தேகமின்றி, வீட்டுக் கல்வியை வெற்றிகரமாக்க தேவையானதாக நிபுணர்கள் கூறுகிற நேரம், முயற்சி, பணம் போன்றவற்றைக் கொடுக்க எல்லா பெற்றோருமே மனமுள்ளவர்களாக அல்லது திறமையுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். “வீட்டுக் கல்வி எல்லாருக்கும் ஏற்றது அல்ல. அது சரியான சூழ்நிலைமைகள், சரியான மனநிலைகள், சரியான பெற்றோர் போன்றவற்றைத் தேவைப்படுத்துகிறது,” என தனது 7 வயதில் வீட்டுக் கல்வியைத் தொடங்கிய ஒரு 14 வயது பெண் கூறினாள். பெற்றோரின் மற்றும் குழந்தையின் பாகத்தில், சுய-சிட்சையுங்கூட இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். வீட்டுக் கல்வியை வெற்றியடையச் செய்ய, “ஓர் உறுதியான பொறுப்புணர்ச்சியை அது தேவைப்படுத்துகிறது,” என்று முன்பு குறிப்பிடப்பட்ட மனிதர் கூறினார். அவர் மேலும் கூறினார், “அதைச் செய்வதற்கான சமயத்தை ஒதுக்கி அதை இறுதிவரை செய்துமுடிப்பது ஓர் உண்மையான சவாலாக இருக்கிறது.”
வீட்டுக் கல்வி சிலசமயங்களில் பலனளிக்காத அல்லது பொறுப்பில்லாதவகையில்கூட செய்யப்படுகிறது என்று வீட்டுக் கல்வியைத் தீவிரமாக ஆதரிப்பவர்களுங்கூட ஒப்புக்கொள்கின்றனர். உண்மையில், ஒவ்வொரு வருடமும் சில வீட்டுக் கல்வி முயற்சிகள் தோல்வியுறுகின்றன. இதனால் பிள்ளைகள் தங்கள் எதிர்கால கல்வி சவால்களை எதிர்ப்படத் தயாராக இல்லாமல் ஆக்கிவிடுகிறது.
மேலும், வீட்டுக் கல்வி மட்டுமே அரசினர் பள்ளிகளில் காணப்படும் ஒழுக்கக்கேடான செல்வாக்குகளிலிருந்து தங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாத்துவிடும் என்று எண்ணி பெற்றோர் தங்களையே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. உலகத்தோடு தொடர்புகொள்வதிலிருந்து முழுவதுமாக பாதுகாத்துக்கொள்ள யாருக்கும் எந்த வழியுமில்லை. பெற்றோரின் முன்மாதிரி, கூட்டுறவு, பொழுதுபோக்கு, சொந்த மற்றும் குடும்ப பைபிள் படிப்புப் போன்றவற்றை உட்படுத்தும், முறையான கல்விக்கு அப்பாற்பட்ட அநேக காரியங்கள் ஒரு குழந்தையின் எண்ணங்களை உருவமைக்கின்றன. இந்தக் காரியங்களிலெல்லாம் ஊக்கமான பயிற்சியில்லையெனில், கிறிஸ்தவ குழந்தைகளை வளர்ப்பதில் எந்தக் கல்வித் திட்டமும் வெற்றியுள்ளதாக நிரூபிக்கமுடியாது.
வீட்டுக் கல்வி தங்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு நல்ல பங்களித்திருக்கிறது என்பதாக சில பெற்றோர் உணர்ந்தது உண்மையே. ஆனால் அரசினர் பள்ளிகளுக்குப் போகிற அநேகக் கிறிஸ்தவ இளைஞருங்கூட நல்ல ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் காண்பிக்கின்றனர் என்பதையும் மறந்துவிடக் கூடாது. அநேகருடைய விஷயத்தில், தங்கள் பிள்ளைகள் ஒரு தரமான கல்வியைப் பெறுவதை நிச்சயப்படுத்திக்கொள்ள, பெற்றோர் உள்ளூர் கல்வி மாவட்ட நிர்வாகத்தோடு நெருங்கி செயல்புரிந்ததால் நல்ல பலன்களைப் பெற்றிருக்கின்றனர்.
தங்களுடைய சொந்த பிள்ளைகளின் தகுதியான கல்வி மற்றும் பயிற்சிக்கு இறுதியில் பொறுப்புள்ளவர்கள் பெற்றோரே. எனவே எவ்வகையான கல்வி தங்களுடைய குடும்பத்திற்கு மிக அதிக பலனளிக்கும் என உணருகிறார்களோ, அதைப் பெற்றோர் தாங்களாகவே தீர்மானிக்கவேண்டும். ஆகவே உங்களுடைய பிள்ளைகளுக்கு வீட்டில் கற்பிக்கத் தயாராக இருக்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்கும்முன்பே, எல்லா காரியங்களையும் கவனமாகச் சீர்தூக்கிப்பாருங்கள்.
[பக்கம் 12-ன் படங்கள்]
உங்களுடைய குழந்தைக்கு மிகச் சிறந்தது எது—பள்ளிக் கல்வியா, வீட்டுக் கல்வியா —என்பதை நீங்கள் மட்டுமே தீர்மானிக்கமுடியும்
“குழந்தைகள் பள்ளியில் இருப்பதைப் போல அவர்கள் ஒரு கால அட்டவணையைக்
கடைப்பிடிக்க வேண்டும்.”
[பக்கம் 10-ன் படங்கள்]
தங்களுடைய மகளுக்கு வீட்டில் கற்பித்த C.F.L., பெற்றோர்