கடன்! உட்பிரவேசிப்பதும் வெளியேறுவதும்
லோயியும் ரிக்கும் விவாகம் செய்துகொண்டு சுமார் ஒரு வருடமாகிறது. அநேக இளம் தம்பதிகளைப் போல, அவர்கள் எல்லாப் பொருட்களையும் உடனடியாகக் கொண்டிருக்க விரும்பினார்கள்—அது எளிதாகவும் இருந்தது! டெலிவிஷனுக்குச் செலுத்த வேண்டிய பணம் மாதம் 832 ரூபாயாகவும் அதோடு ஒரு வீடியோவைக் கூட்டுவது செலுத்தத்தை 1,248 ரூபாயாக மட்டுமே கூட்டியது. புதிய தட்டு முட்டு சாமான்கள் சற்றே அதிக கடினமாக இருந்தது—செலுத்தம் மாதத்துக்கு 4,592 ரூபாயாக இருந்தது. நிச்சயமாகவே செலுத்தத்தை 744 ரூபாயாக உயர்த்திய திரைச்சிலைகளும் கம்பளங்களும் இதில் சேர்க்கப்படவில்லை. ஆனால் பணங்கொடுத்து உதவும் கம்பெனி ஒத்துழைப்பதாக இருந்திருக்கிறது.
கருவிகள் எளிதில் கிடைப்பதாயிருந்தன. ஏனென்றால் கடை அவர்களுடைய கடன் அட்டையை ஏற்றுக் கொண்டது. அவ்வகையில், மாதாந்தர செலுத்தங்கள் தானாக செலுத்தப்பட்டன, கடனளிப்புத் தொகக்காக அவர்கள் விண்ணப்பிக்க வேண்டியிருக்கவில்லை. ரிக், அவன் திட்டமிட்டிருந்த வண்ணமாக, திருமணத்திற்கு முன்பாக அவனுடைய பந்தயக் காருக்குப் பணம் செலுத்தி தீர்த்துவிட்டிருந்தால், எளிதாக இருந்திருக்கும், ஆனால் அதை அவனால் சமாளிக்க முடியவில்லை.
ரிக் இவ்விதமாகச் சொன்னான்: “விவாகம் அது கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும் என்பதாக நான் நினைத்தேன், ஆனால் எங்கள் கடனைக் குறித்து அது வெறும் விளையாட்டல்ல என்பதால் எனக்கு அவ்வளவு கவலையாக இருக்கிறது.” லோயி இதை ஒப்புக்கொண்டு மேலுமாகச் சொன்னதாவது: “கடனில் பிரவேசிப்பது அத்தனை எளிதாக இருந்தது. நாங்கள் எப்போதாவது கடனிலிருந்து வெளியேறுவோமா?”
சோகமான இந்தக் கேள்வி, உலகிலுள்ள பெரும்பாலான தேசங்களிலுள்ள இலட்சக்கணக்கான குடும்பங்கள் எதிர்ப்படும் இரண்டக நிலையைப் பிரதிபலிக்கிறது. ஆம், மிகப் பெரிய, சில சமயங்களில் சமாளிக்க முடியாத கடன் சுமையை ஏற்றிக் கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை நடத்தும் ஆட்கள் அபூர்வமாகவே இருக்கின்றனர்.
கடனில் பிரவேசித்தல்
ஒருவர் எவ்விதமாகக் கடன்பட்டவராகிறார்? சுலபம்! அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. அரசாங்கங்கள், பன்னாட்டு வணிக சங்கங்கள், சிறிய வியாபாரிகள், குடும்பங்கள் மற்றும் தனிநபர்களும் ஆகிய அனைவருமே கடனை இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டுவிட்டிருக்கிறார்கள்.
பெருமை அநேகமாக கடனை உருவாக்குகிறது. கடன் அழுத்தத்தை உருவாக்குகிறது. அழுத்தம் மற்ற தொல்லைகளுக்கு வழிநடத்துகிறது. ஆகவே ஒருவர் எவ்விதமாக கடன்படும் மனசாய்வுள்ள ஓர் உலகில் வாழ்ந்துகொண்டு அதே சமயத்தில் கடன்படாமல் வாழமுடியும்?
ஒருவேளை கற்றுக்கொள்ளவேண்டிய முதல் பாடம் வெறுமென விற்பனை எதிர்ப்பு ஆற்றலாகும். கடனுதவியளிக்கும் விளம்பர சுவரொட்டிகளால் தாக்கப்படாமல், ஒருவர் பெரும்பாலான நிறுவனங்களின் கதவுகளுக்குள் பிரவேசித்துவிட்டு வரமுடியாது. கடன் அட்டைகள் எளிதில் கிடைக்கக்கூடியவையாக இருக்கின்றன. மோசடி செய்து பணம் சம்பாதித்து கடன் கொடுப்பது முதல், மதிப்புக்குரிய வங்கி நிறுவனங்கள் வரை, வரிசையாக பணத்தை விற்கும் வியாபாரத்திலிருக்கும் இலட்சக்கணக்கான வெற்றிகரமான துணிச்சல்மிக்க ஆட்கள் இருக்கின்றனர். அவர்களுக்குப் பணம் ஒரு சரக்காக—மளிகைச் சாமான்களைப் போல—இருக்கிறது. அவர்களுடைய வேலை அதை உங்களுக்கு விற்பதாக இருக்கிறது. வேண்டாம் என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்.
கடன் சமாளிப்பு
வருமானத்துக்கு கடனின் ஏற்றுக்கொள்ளத்தக்க வீதத்தை நிர்ணயிக்க அநேக சுருக்க விதிவாய்பாடுகள் இருக்கின்றன. ஆனால் இவை அவ்வளவாக வித்தியாசப்படுவதன் காரணமாக, அநேகம் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு குடும்பம், மொத்த வருமானத்தில் 30 சதவீதத்தை வீட்டுக்காக செளகரியமாக ஒதுக்கலாம் என்பதாகச் சில பொருளியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இது கடன் ஈடு செலுத்தங்களுக்கு அல்லது வாடகைக்காகும். என்றபோதிலும் மிகவும் ஏழ்மையிலிருப்பவர்களுக்கு இந்த விதிவாய்பாடு நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றாக இருக்கக்கூடும். ஆகவே பொதுவான விதிவாய்பாடுகள் அநேகமாக மிகவும் தெளிவற்றவையாக இருக்கின்றன. கடன் கட்டுப்பாட்டின் முழு பிரச்னையும் தனிப்பட்ட மட்டத்தில் மேம்பட்டவிதமாக ஆராயப்படுகிறது.
கொஞ்சம் கடன் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக இருக்கக்கூடும், ஆனால் இது பகுத்துணர்வையும் கவனமான நிர்வாகத் திறனையும் கேட்கிறது. உதாரணமாக, பெரும்பாலான ஆட்களால் கடனுக்கு உள்ளாகாமல், ஒரு வீட்டை வாங்கமுடியாது. குடும்பமானது ஒரு வீட்டை பணம்செலுத்திவிட்டு வாங்குவதற்கு பணத்தை சேமித்து வைக்கும் வரையாக அவர்கள் வாடகை வீட்டில் வாழவேண்டும் என்று நினைப்பது நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை. அது ஒருவேளை ஒருபோதும் கைகூடிவராது. மாறாக, குடும்பம் வாடகைக்காக செலுத்திக் கொண்டிருக்கும் பணம், ஒரு வீட்டின் மீது கடன் ஈடு செலுத்தமாக பயன்படுத்தப்படலாம் என்பதாக நினைக்கலாம். இந்தத் திட்டம் பல ஆண்டுகள் எடுப்பதாக இருந்தாலும்கூட, அது அதிகமாக நடைமுறையில் பயனுள்ளது என்பதாக அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
காலப்போக்கில் வீட்டின் மதிப்பு கூடும் என்பதை நாம் உணருகையில், மாதாந்தர வாடகையைக் காட்டிலும் கடன் ஈடு செலுத்தங்கள் அதிகமாக இருந்தபோதிலும், குடும்பம் மேம்பட்ட நிலையில் இருக்கக்கூடும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. ஏனென்றால் இது நிகர ஆதாயமாக இருக்கிறது, அதாவது வீட்டின் மதிப்பிலிருந்து செலுத்தவேண்டிய கடன்தொகையின் குறைப்பு. ஆகவே சமாளிக்கக்கூடிய செலுத்தங்களோடு நியாயமான விலையில் ஒரு வீட்டின் கடன் ஈடு செலுத்தம் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க கடனாக இருக்கக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான மற்ற பெரிய பொருட்களை வாங்கும் விஷயத்திலும் இதுவே சொல்லப்படலாம்.
மற்றவகையான கடன் முற்றிலும் ஏற்கத்தகாததாக இருக்கக்கூடும். கடன் சமாளிப்பு அவைகளை வேண்டாமென தள்ளிவிடும் திறமையையும் உட்படுத்துகிறது. ஒருவேளை மிகச் சிறந்த விதி இதுவாக இருக்கலாம்: உங்களுக்குத் தேவையில்லாத மற்றும் உங்களால் வாங்க முடியாதவைகளை வாங்க வேண்டம். திடீர்த் தூண்டுதலால் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். ஏதோ ஒன்று பாதிவிலையாக இருந்தாலும்கூட உங்களுக்கு வாங்க வசதியில்லாவிட்டால் அது உங்களுக்கு நல்ல பேரமாக இருக்காது. ஆடம்பரப் பொருட்களுக்காகக் கடன் வாங்காதீர்கள். நீங்கள் செல்வதற்கு முன்னால் உங்களுக்குச் செலுத்த வசதி இருந்தாலொழிய விடுமுறைப் பயணங்களை மேற்கொள்ளாதீர்கள். நீங்கள் வாங்கும் எதற்கும் விரைவிலோ பின்னாலோ பணம் செலுத்தப்பட்டே ஆகவேண்டும். பணத்தை கையிலெடுத்துச் செல்வதைத் தவிர்ப்பதற்கு கடன் அட்டைகள் பயனுள்ளதாக இருக்கின்றன. ஆனால் பணம் கடன் வாங்க ஒரு வழியாக அது பயன்படுத்தப்படுகையில், இவை பெருஞ் செலவு பிடிப்பதாக இருக்கின்றன.
கடனிலிருந்து வெளியேறுவது
கடனைச் சமாளிப்பதைப் பற்றிய ஆலோசனை தங்களுக்கு காலம்பிந்தியது என்பதாக சில ஆட்கள் நினைக்கக்கூடும். ‘நான் ஏற்கெனவே பில்கள் (குறிப்பிட்ட தொகயைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதி சீட்டு) மற்றும் வாக்குறுதிகளின் கீழ் அமிழ்ந்து போயிருக்கிறேன். நான் எவ்விதமாக வெளியேறுவது?’ உண்மை என்னவென்றால் ஆரம்பிப்பதற்கு இது ஒருபோதும் மிகவும் பிந்திவிடவில்லை.
முதல் நடவடிக்கை, பெயர் பெற்ற ஒரு வங்கியோடு நடைமுறையான ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்வதாகும். நீங்கள் கட்டாயமாகக் கடன் வாங்க வேண்டுமானால் இங்குதானே மிகச் சிறந்த வட்டி வீதத்தை நீங்கள் பெரும்பாலும் பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் வங்கி கடனுதவி அளிக்க மறுக்குமேயானால், உங்களுக்கு ஒருவேளை அது உதவிசெய்கிறது. அது பணம் கொடுக்கும் வியாபாரத்திலிருப்பதால் அது நியாயமாகத் தோன்றினால் அது உங்களுக்கு பணம் கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, ஏதாவது ஒழுங்கான ஒரு முறையில் கடன்தொகைகளைத் திரும்பச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். ஒரு தாளில் அடுத்த 24 மாதங்களில் நீங்கள் தனிப்பட்ட விதமாக எதிர்பார்க்கும் வருவாயை எழுதிக்கொள்ளுங்கள். நடைமுறைக்கு ஏற்றவாறு இருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் ஒவ்வொரு சிறிய தொகயையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் பணம் செலுத்தப்பட வேண்டிய ஒவ்வொரு காரியத்தையும் பட்டியல் போட்டுப் பாருங்கள். இப்பொழுது உங்களால் நினைத்தும்கூட பார்க்க முடியாத உருபடிகளுக்கு கொஞ்சம் செலவுத் தொகயைச் சேர்த்துக்கொள்ளுங்கள். கடன்தொகைகளை முந்துரிமையின் வரிசையில் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு கடனும் குறைந்தபட்சம் கொஞ்சம் செலுத்தத்தைப் பெற்றுக்கொள்ளும்படி நியாயமான அடிப்படையில் உங்கள் பணத்தை ஒதுக்கி வையுங்கள். ஒவ்வொரு கடனையும் செலுத்தித் தீர்க்க நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு தேதியை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
இத்திட்டத்திற்கு இசைவாக, செலவுகளை எங்கே நீங்கள் குறைக்க முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். கடன் குறைப்பு எப்பொழுதும் ஓரளவு தியாகத்தைக் கேட்பதாயிருக்கிறது. பேரம் பேசி வாங்குவதன் மூலம், மளிகைச் சாமான் செலவு குறைக்கப்படக்கூடுமா? உணவு திட்டத்தில் என்ன மலிவான பதிலீடுகள் பயன்படுத்தப்படலாம்? விடுமுறைப் பயணங்கள் கைவிடப்பட முடியுமா? உங்கள் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துக் கொள்ள முடியுமா? ஒருசில ஆடம்பரக் காரியங்கள் குறைவாக அனுபவிக்கப்பட முடியுமா? சில சமயங்களில் நாம் நம்மோடு இரக்கமற்றவர்களாக நடந்துகொள்ள வேண்டியுள்ளது. ஒருசில செலவுகள் “அத்தியாவசியம்” பகுதியிலிருந்து “ஆடம்பரங்கள்” பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படலாம்.
ஒருமுறை தாளில் உங்கள் திட்டத்தைத் தீர்க்கமாக வரைந்துவிட்டீர்களேயானால், உங்கள் வங்கி கடனுதவி அதிகாரியிடம் அதைப் பற்றி கலந்து பேசுங்கள். நீங்கள் தொழில் தொடர்பை மனதில் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர் காண்கையில் அவர் மனம் கவரப்பட்டுவிடுவார். திட்டத்தை எவ்விதமாக மேம்படுத்துவது என்பதை அவர் உங்களுக்குக் காண்பிக்கக்கூடியவராக இருப்பார். இணைப்பு கடனுதவி தொகயைக்கூட அவர் உங்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடும். அப்படியானால், வட்டி வீதத்தையும் இணைப்பு கடனுதவித் தொக திரும்பச் செலுத்தப்பட வேண்டிய கால அளவையும் ஆராய்ந்து பார்க்க நிச்சயமாயிருங்கள். பொதுவாக நீண்ட ஒரு காலப் பகுதியின் போது சிறிய தொக செலுத்தமாக அவை இருக்கும். ஆனால் இணைப்பு கடனுதவித் தொகயை அதிகமாக பணம் கடன் வாங்க பயன்படுத்தாதீர்கள்.
பேச்சுத் தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்!
எந்தக் கடன்–குறைப்பு திட்டமும், வெற்றிகரமாக அமைய பேச்சுத் தொடர்பு தேவைப்படுகிறது. நீங்கள் கடன்பட்டிருக்கும் ஒவ்வொரு நபரையும் சந்தியுங்கள் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுங்கள். பயனுள்ளதாக இருக்கும் என்பதாக நீங்கள் நினைத்தால் உங்கள் திட்டத்தை அவர்களிடம் காண்பியுங்கள். குறைந்தபட்சம் அவர்களிடம் பேசுங்கள். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிய விரும்புவதை நினைவில் வையுங்கள். அவர்களுக்குத் தகவல் தெரியப்படுத்தி வையுங்கள். எந்த ஒரு கடன் கொடுப்பவரும் சகித்துக்கொள்ள முடியாத ஒரு காரியம் மெளனமாகும். மெளனத்துக்கு மெத்தனம் அல்லது பணம் செலுத்த மறுத்தல் என்பதாகவும்கூட வேகமாக அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. கடன் கொடுத்த அநேகர், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்க எவருமே அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்ற காரணத்துக்காகவே பணத்தை திரும்பப் பெறுவதற்காக உரிமைக்கோரிக்கை வழக்கு ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்.
கடன்தீர்க்க வகையற்றுத் தோல்வியை ஏற்றுக்கொள்வதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டுமா? சில தேசங்களில் சட்டத்தின் இப்படிப்பட்ட ஏற்பாடுகளின் நன்மைக்கு எல்லாரும் உரிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அது இலேசாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது. கடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொறுப்பாக இருக்கிறது. தார்மீகக் கடமை உட்பட்டிருக்கிறது. கடன் தீர்க்க வகையற்றுப் போவது மற்றவர்களுக்குப் பிரச்னைகளை உருவாக்கும் அலைஅலையான பாதிப்புகளைக் கொண்டிருக்கிறது. அது உங்கள் பதிவின் மேல் ஒரு கறையாக நிலைத்திருக்கும்.
“நீங்கள் போகயில் பணம் செலுத்திவிட்டுப் போங்கள்” என்ற பழங்காலத்திய கருத்தில் தவறேதுமில்லை. ஆம், கூடியமட்டும் மிகவும் ஞானமான போக்கு முதலிடத்தில் கடனில் பிரவேசியாமல் இருப்பதே ஆகும். கடன் உங்களை விழுங்கிவிடும் கொடிய உதிர்மணலாக இருக்கக்கூடும். ரிக்கும் லோயியும் தாங்கள் விழுங்கப்பட அனுமதித்துவிட்டனர். அவர்கள் செய்யவேண்டிய மாற்றங்கள் உண்டு, ஆனால் படிப்படியாக அவர்கள் தங்கள் கடனிலிருந்து ஏறிவரமுடியும்.
நீங்கள் சொல்லர்த்தமான ஒரு நிலச்சரிவில் புதைந்துவிட்டிருந்தால், உங்களை வெளியே கொண்டுவர உங்களுக்கிருக்கும் எந்த அசையக்கூடிய ஆற்றலையும் நீங்கள் பயன்படுத்துவீர்கள். அது தாமதமாக இருக்கக்கூடும், ஆனால், பயனுள்ளதாயிருக்கிறது! அது எத்தனை நீண்ட காலமாக இருந்தாலும் அல்லது அதைச் செய்வது எத்தனை கடினமாக இருந்தாலும் கடனிலிருந்து வெளியேறுவது தகுதியுள்ளதே. (g90 2/8)
[பக்கம் 23-ன் படம்]
அளவுக்கு அதிகமான கடனில் மூழ்கிவிடுவது உதிர்மணலால் விழுங்கப்படுவதற்கு ஒப்பாக இருக்கிறது