மற்றவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்
1 மற்றவர்களிடம் பிரசங்கிப்பதற்கான கடமை தனக்கு இருப்பதாக அப்போஸ்தலன் பவுல் உணர்ந்தார். யெகோவா தம் மகனின் விலையுயர்ந்த இரத்தத்தின் மூலமாக இரட்சிக்கப்படுவதற்கான வாய்ப்பை எல்லா மனுஷருக்கும் அளித்திருப்பதை பவுல் அறிந்திருந்தார். (1 தீ. 2:3-6) எனவே அவர் இவ்வாறு சொன்னார்: “கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்.” அதனால் தன் கடனை அடைப்பதற்காக அவர் மிகுந்த ஆர்வத்தோடும் சுறுசுறுப்போடும் நற்செய்தியை மற்றவர்களுக்குப் பிரசங்கித்தார்.—ரோ. 1:14, 15.
2 பவுலைப் போலவே இன்றைய கிறிஸ்தவர்களும், கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி நற்செய்தியைப் பிரசங்கிக்க முயற்சிக்கிறார்கள். “மிகுந்த உபத்திரவம்” நெருங்கிக் கொண்டிருப்பதால் நல்மனமுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது அவசரமான வேலையாக இருக்கிறது. எனவே, மக்கள் மீதுள்ள உண்மையான அன்பு, இந்த உயிர்காக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட நம்மை உந்துவிப்பதாக.—மத். 24:21; எசே. 33:8.
3 நம்முடைய கடனை அடைத்தல்: மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முக்கிய வழி வீட்டுக்கு வீடு ஊழியமாகும். ஊழியத்தில் வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், அந்த விலாசங்களை சரியாக எழுதிக் கொண்டு வெவ்வேறு நேரங்களில் போய் பார்க்க வேண்டும்; இதன் மூலமாக நாம் அநேகரை சந்திக்க முடியும். (1 கொ. 10:32) வியாபார பிராந்தியங்களிலும் தெருக்களிலும் பூங்காக்களிலும் வண்டிகளை நிறுத்தும் இடங்களிலும் தொலைபேசியிலும்கூட நம்மால் சாட்சி கொடுக்க முடியும். எனவே, நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘இந்த எல்லா வழிகளையும் பயன்படுத்தி, உயிர் காக்கும் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்ல முடிந்தவரை முயற்சி செய்கிறேனா?’—மத். 10:11.
4 ஒரு பயனியர் சகோதரி தன் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் நற்செய்தியைச் சொல்ல வேண்டிய முக்கிய பொறுப்பை உணர்ந்தார். அவருடைய பிராந்தியத்தில் ஒரு வீடு மட்டும் எப்பொழுதும் பூட்டியே இருந்தது, அங்கு யாருமே இருக்கவில்லை. ஒரு நாள் அந்தச் சகோதரி வேறு வேலையாக அவ்வழியே போனபோது, அந்த வீட்டிற்கு முன் ஒரு கார் நிற்பதைப் பார்த்தார். கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதிருக்க அந்த வீட்டின் பெல்லை அடித்தார். ஒரு நபர் கதவைத் திறந்தார்; அவர் நற்செய்தியில் ஆர்வம் காட்டினார், பிறகு அந்தச் சகோதரியும் அவரது கணவரும் பலமுறை மறுசந்திப்புகளைச் செய்தார்கள். கடைசியில் அந்த நபர் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார், இப்பொழுது அவர் முழுக்காட்டப்பட்ட சகோதரராக இருக்கிறார். மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கக் கடன்பட்டிருப்பதாக அந்தச் சகோதரி உணர்ந்து செயல்பட்டதற்கு அந்தச் சகோதரர் நன்றியுள்ளவராக இருக்கிறார்.
5 முடிவு வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதால் மற்றவர்களிடமுள்ள நம் கடனை அடைப்பதற்காக பிரசங்க வேலையில் மும்முரமாய் ஈடுபட இதுவே சரியான காலம்.—2 கொ. 6:1, 2.