திடீர் அழிவு! அவர்கள் எவ்விதம் சமாளித்தார்கள்?
சூறாவளி ஹூகோ சனிக்கிழமை செப்டம்பர் 16, 1989 அன்று குவாடிலோப் மீது கடுமையாக வீசியபோது, இரவுக்கு முடிவு இல்லாததுபோல் தெரிந்தது. அது “கொடுங்கனவின் ஓர் இரவு” என்பதாக அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மணிக்கு 140 மைல் வேகம் கொண்ட காற்று மான்ட்செராட்டை அச்சுறுத்தியது. இந்தக் கரீபிய தீவுகளில் 20-க்கு மேற்பட்டவர்கள் மாண்டனர்.
அதன் தாக்குதல் தொடர, செய்ன்ட் கிட்டிஸ் மற்றும் நெவிஸ் என்ற லீவர்டு தீவுகள் மீது கடுமையாக அடித்தது. மறு நாள் இரவு அது செய்ன்ட் க்ராய்க்ஸ் மற்றும் செய்ன்ட் தாமஸ் என்ற ஐ.மா. வெர்ஜின் தீவுகளைக் கண்மூடித்தனமாய்த் தாக்கியது. செய்ன்ட் க்ராய்க்ஸ் மீது அது விட்டுச் சென்ற சேதம் நம்பமுடியாதளவுக்கு இருந்தது. திங்கட்கிழமை பிற்பகல் போல் கடந்த அந்தச் சூறாவளி போர்ட்டோ ரிக்கோவின் வடக்கு பாகத்தை தரைமட்டமாக்கியது, குறிப்பாக வீக்கஸ் மற்றும் குலெப்ரா தீவுகளை பேரழிவுக்கு உட்படுத்தியது.
தண்ணீர் மீது தன் வன்மையைப் புதுப்பித்துக்கொண்டு, ஹூகோ இன்னொரு இரவு நேர தாக்குதலுக்குத் தயாரானது. வியாழக்கிழமை, நள்ளிரவுபோல் இருக்கும், மணிக்கு 135 மைல் வேகத்தில் பலத்த காற்று ஐக்கிய மாகாணங்களில் தெற்கு கரோலினா கடற்கரைப் பகுதியைத் தாக்கியது. அது தெற்கு சார்ல்ஸ்டன் முதல் மர்ட்டில் கடற்கரை வரை நூற்றுக்கும் அதிகமான மைல் பரப்பில் பேரழிவை ஏற்படுத்தியது. அழிவையுண்டாக்கிய அதன் பலத்த அடி உள்ளூரில் 200 மைல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது, வடக்கு கரோலினாவில் ஷார்லட் வரை மின்சாரக் கம்பங்களைப் பிடுங்கி, பெரிய ஓக் மரங்களை வெள்ளத்தில் ஆழ்த்தியது.
கடலோரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியதால், 17 அடி உயரமுள்ள அலைகள் அநேக வீடுகளை அடித்துச் சென்று நூற்றுக்கணக்கான மற்றவைகளை சேதப்படுத்தியபோது உயிர்தப்பினார்கள். ஆயிரக்கணக்கான வீடுகளும் கட்டிடங்களும் சொல்லர்த்தமாகவே சேதமடைந்தன.
ஏற்பட்ட சேதத்தை நம்புவுதற்கு நேரடியாகப் பார்க்க வேண்டும்—படகுகள் ஒன்றன் மீது ஒன்றாக ஆறு படகுகளின் உயரத்திற்குக் குவிக்கப்பட்டிருந்தன, தெருக்களில் மணல் மூன்று அடி உயரத்திற்குப் படிந்திருந்தது, வீடுகளின் மீது உயரமான மரங்கள் விழுந்துகிடந்தன, வீட்டுக்கூரைகள் ஓர் இராட்சதக் கைகளால் பிடுங்கப்பட்டது போன்று பெரிய துவாரங்கள் காணப்பட்டன. ‘என்னுடைய மகன் விற்பனைக்காகக் கோழி வளர்க்கிறான்,’ என்று ஒரு பெண் அறிக்கைசெய்தாள். ‘அவை காற்றில் அடித்துச்செல்லாதபடிக்கு அவன் அவற்றைக் கீழே அடைத்துவைத்திருந்தான், பெரும்பாலும் அவை பறக்கவில்லை. ஆனால் அவற்றின் மீது ஒரு சிறகுகூட இல்லை.’
என்றபோதிலும், எச்சரிப்புகளுக்குச் செவிகொடுத்ததால், அந்தப் புயலில் ஐக்கியமாகாணங்களில் 26 பேர் மட்டுமே மாண்டனர். கரீபிய தீவுகளில் உயிர்ச்சேதத்தின் எண்ணிக்கை அதைவிட சற்று கூடுதலாக இருந்தது. மறுபட்சத்தில், பொருளாதார இழப்புகள் பேரளவாய் இருந்தது, பல லட்சக்கணக்கான டாலர்களை உட்படுத்தியது. ஹூகோவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய மாகாணங்கள் 11 லட்சம் டாலர் அவசரகால நிதியைத் துவக்கத்தில் வழங்கியது, இந்தத் தொக இதுவரையிலும் அங்கீகரிக்கப்பட்டிராத நிவாரண நிதியாகப் பெரும் தொகயாக இருந்தது. என்றபோதிலும் அந்தப் புதிய பதிவு வெகு சீக்கிரத்தில் மறைந்துவிட்டது.
அதைவிட ஒரு பெரிய அழிவு
அக்டோபர் 17 அன்று, அதாவது ஹூகோ நிலத்தைத் தொட்டு ஒரு மாதத்துக்குப் பின்னர், வடக்குக் கலிஃபோர்னியா ரிச்டர் அளவையில் 7.1 குறிக்கப்பட்டிருந்த ஒரு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. பாலங்கள் முறிந்துவிழுந்தன, கட்டிடங்கள் கவிழ்ந்தன, தாங்கள் நின்றுகொண்டிருந்த தரை 15 வினாடிக்கும் அதிகமாக அதிர்ந்ததால் ஆயிரக்கணக்கானவர்கள் அலறிக்கொண்டு தங்களுடைய வீடுகளைவிட்டு ஓடினர், மற்றும் சிலர் பயத்தில் செயலிழந்து கிடந்தனர். இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பல நூற்றுக்கணக்கிலிருந்து ஓர் ஆயிரம் வீடுகள் வரை அழிக்கப்பட்டன. நிலநடுக்கத்திற்குப் பின் ஒரு வாரம் கழித்தும் சான்டா க்ரூஸ் பகுதியின் பத்தாயிரம் மக்கள் தங்களுடைய வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை, ஏனென்றால் நிலச்சரிவுகள் சாலைகளைப் பாதித்தன.
நிலநடுக்கத்தைச் சமாளிப்பதற்கு வரையறுக்கப்பட்ட சட்டப்படியான கட்டிட முறைகள் அனுசரிக்கப்படாமலிருந்திருந்தால், உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். உதாரணமாக, 1988-ல் அர்மேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் வன்மையில் குறைந்ததாயிருந்த போதிலும் 25,000 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் கலிஃபோர்னியா நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 70 பேர் மட்டுமே உயிரிழந்தனர், அவர்களில் பெரும்பான்மையினர், மாநிலங்களுக்கிடையான இன்டர்ஸ்டேட் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மைல் நீள மேல் சாலை கீழ் சாலைமீது நொறுங்கி வீழ்ந்த போது கீழ் சாலையிலிருந்த வாகனங்களின் சேதத்தில் 880 பேர் மாண்டார்கள்.
ஐ.மா.வின் சரித்திரத்திலேயே ஓர் இயற்கைச் சேதம் இந்தளவுக்குப் பெருத்த பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தியதில்லை. அதைத் தொடர்ந்த வாரத்தில், 300 கோடி டாலர்களுக்கும் அதிகமான பணத்தை அரசு நிவாரண நிதியாக ஒதுக்கியது. என்றபோதிலும், மீண்டும் எடுப்பித்துக் கட்டுவதற்கு அதிகம் தேவை. மொத்தமாக நிலநடுக்கம் ஏற்படுத்திய சேதத்தின் மதிப்பீடு 1,000 கோடி டாலர்களாக இருப்பது “நியாயமாக இருக்கக்கூடும்,” என்கிறார் கலிஃபோர்னியாவின் தனிப்பட்ட ஈட்டுறுதி நிறுவனத்தின் தலைவர்.
அடிப்படைத் தேவைகளை நினைப்பூட்டுகிறது
ஹூகோ தாக்கி இரண்டு நாட்கள் கழிந்தன, சார்ல்ஸ்டனிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒருவர் தன் தோட்டத்தில் இருந்தார். நிவாரணப் பணியில் ஈடுபடும் ஒருவர் அப்பக்கமாகக் கடந்து செல்லுகையில், அந்த மனிதர் அந்த மீட்புப் பணியாளரைப் பார்த்து, “உங்களிடம் ஒரு குவளை தண்ணீர் இருக்கிறதா?” என்று கேட்டார். அந்த மக்களுக்கு குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லை என்பதை அந்த நிவாரணப் பணியாளர் ஒரு கணம் நினைத்துப்பார்க்கவில்லை!
1,900 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போஸ்தலனாகிய பேதுரு, அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்தவர்களின் ஓர் அடிப்படைத் தேவையினிடமாகக் கவனத்தைத் திருப்பினார்: “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று” என்றார். “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்.” (1 பேதுரு 4:7, 8) பேதுரு இந்த வார்த்தைகளை எழுதியபோது, முழு யூத ஒழுங்குமுறையின் முடிவும் சமீபமாயிருந்தது. ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர், பொ.ச. 70-ல் ரோம சேனை எருசலேமைப் பாழாக்கிய போது முடிவு வந்தது. என்றபோதிலும் கிறிஸ்தவர்களுக்கு முன்னதாகவே ஓர் அடையாளம் கொடுக்கப்பட்டது, அவர்கள் அதற்குச் செவிகொடுத்து, யோர்தான் நதியைக் கடந்து, பெல்லா நகரத்திற்கு அண்மையிலிருந்த மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.—லூக்கா 21:20–22.
அநேகமாக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் அந்த மலைப்பகுதிகளை வந்தடையும் சூழ்நிலையைக் கற்பனை செய்துபாருங்கள். அவர்களுக்கு வீடுகள் இருந்திருக்கமுடியாது, அல்லது மற்ற அடிப்படைத் தேவைகள் இல்லை, ஆனால் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துக்கொள்ளவேண்டியிருந்தது. அவர்களுக்குக் குறைபாடுகளும் கஷ்டங்களும் இருந்தன. (மத்தேயு 24:16–20) அந்தச் சமயத்தில் அவர்களுடைய விசேஷ தேவை என்னவாக இருந்தது? “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு,” என்றார் பேதுரு. ஆம், சமாளிப்பதற்கு ஒருவருக்கொருவர் உதவி.
ஹூகோ சூறைக்காற்றாலும் நிலநடுக்கத்தாலும் ஏற்படுத்தப்பட்ட சமீப நாச விளைவுகளைத் தொடர்ந்து அவ்விதமான உதவும் ஆவியும் அன்பும் வெளிப்படுத்தப்பட்டதா?
ஹூகோ ஏற்படுத்திய அழிவைச் சமாளித்தல்
செய்ன்ட் க்ராய்க்ஸில் ஹூகோவின் தாக்குதலில் உயிர்தப்பியவர்கள் உயிர்தப்பியதில் மகிழ்ச்சியடைந்தவர்களாக, விடுபட்டவர்களாக, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துதல்களைப் பரிமாறிக்கொண்டார்கள். விரைவில் பிரமாண்டமான மீட்புப் பணி தொடர்ந்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கும் வசதியும் உணவும் கொடுக்கப்பட்டது. என்றபோதிலும் சிலர் எதிர்பாராத அந்தச் சேதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையைப் பயன்படுத்தி இலாபம் காண ஆரம்பித்தார்கள். இலாபத்தை நோக்கியிருந்தவர்கள் ஏராளமான விலைகளில் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். உதாரணமாக பொதுவாக 79 சென்ட் விலைபோகும் ஒரு மூட்டை ஐஸ் 10 டாலருக்கு விற்கப்பட்டது. கொள்ளையடித்தலும் இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்கள் மனிதர் பொதுவாகக் காண்பித்த தயை மற்றும் இரக்கம் ஆகிய பண்புகளால் மேற்கொள்ளப்பட்டது. விசேஷமாக யெகோவாவின் சாட்சிகளுடைய நிவாரண பணி சார்ந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கது.
ஹூகோ தாக்குவதற்கு முன்பே, கிறிஸ்தவ மூப்பர்கள் குறைந்த பாதுகாப்பான வீடுகளில் குடியிருந்தவர்களைச் சந்தித்து, அதிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்த ராஜ்ய மன்றங்களுக்கு அல்லது அவர்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களின் வீடுகளுக்குச் சென்றுவிடுமாறு துரிதப்படுத்தினர். தென் கரோலினாவில் சம்மர்வில்லெயிலிருந்த ராஜ்ய மன்றத்தில் அந்தப் புயல் தாக்கிய அன்றிரவு ஏறக்குறைய 50 பேர் தங்கியிருந்தனர்!
குவாடிலோப்பில் அப்படிப்பட்ட ஆயத்தங்கள் உயிரைப் பாதுகாப்பதாய் நிரூபித்தன. அந்தத் தீவில் மட்டுமே சாட்சிகளின் 117 வீடுகள் அழிக்கப்பட்டன, அதே சமயத்தில் மற்ற சாட்சிகளின் 300 வீடுகள் அதிக சேதத்திற்குள்ளாயின. அத்துடன், 8 ராஜ்ய மன்றங்கள் மோசமாக சேதமடைந்தன, மற்ற 14 மன்றங்கள் குறைந்த சேதத்திற்குள்ளாயின.
அநேக சாட்சிகள் காயமுற்றபோதிலும், குவாடிலோப்பிலும் சரி, கரீபிய தீவுகளின் மற்ற இடங்களிலும் சரி, எவருமே கொல்லப்படவில்லை. என்றபோதிலும், ஒரு சாட்சியின் பெரிய பையன், புயல் வீட்டின் கூரையைத் திடீரென்று தூக்கியெறிய, அவன் காற்றினால் அப்படியே இழுத்துக்கொள்ளப்பட்டு மாண்டுபோனான்.
புயலைத் தொடர்ந்து மூன்றாம் நாள்தான் உடன் சாட்சிகள் குவாடிலோப்பிலுள்ள தங்கள் சகோதரர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடிந்தது. என்றபோதிலும், அதற்கிடையில், பயணக் கண்காணிகளும் கிளைக்காரியாலய சகோதரர்களும் ஒன்றுகூடி, தங்களுடைய சகோதரர்களின், அதாவது உடன் சாட்சிகளின் தேவைகளைக் கண்டறிவதற்கான ஓர் ஏற்பாட்டை ஒழுங்குசெய்தனர்.
விரைவிலேயே குறைவாகப் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் தண்ணீர், உணவு, உடை மற்றும் பல தேவைகளைத் தாராளமாகத் தானம்பண்ணினர். கிளைக்காரியாலயத்தில் தண்ணீர் இருந்தது, சகோதரர்கள் தங்களிடமிருந்த எல்லாவகையான கொள்கலங்களையும் கொண்டுவந்து தண்ணீர் பிடித்து தேவையிலுள்ளவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதைக் காண்பது மனதுக்கு திருப்தியாயிருந்தது. மார்ட்டினிக்கிலுள்ள சகோதரர்கள்தான் குவாடிலோப்பிலுள்ள தங்கள் சகோதரர்களின் தேவைகளுக்கு முதலாவதாகப் பிரதிபலித்த வெளிநாட்டவராவர்.
குவாடிலோப் ஃபிரஞ்சு அதிகாரத்தில் இருந்ததால், ஃபிரான்சிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் உடனடியாக அந்தத் தீவுக்கு பலமான ப்ளாஸ்டிக் விரிப்புகள், நைலான் கயிறுகள், தண்ணீருக்காக ப்ளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றை விமானம் மூலம் அனுப்பினர். சுருக்கமாகச் சொன்னால், ஏறக்குறைய 100 மெட்ரிக் டன்கள் எடை கொண்ட கட்டிட சாமான்கள் குவாடிலோப்புக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக விநியோகிக்கப்பட்டது.
போர்ட்டோ ரிக்கோவிலுள்ள சாட்சிகளுங்கூட நிவாரணப் பணி சார்ந்த திட்டங்களை உடனடியாக ஒழுங்குபடுத்தினர். புயலுக்குப் பின் அந்த வார இறுதியில், அந்தத் தீவில் பாதிக்கப்படாத இடங்களிலிருந்து அவர்களுடைய வீடுகளைப் பழுதுபார்ப்பதில் உதவியளிப்பதற்காக நூற்றுக்கணக்கான ஆட்கள் வந்தனர். மேலும் உணவு, பொருட்கள் மற்றும் 40 சாட்சிகள் நிறைந்த இரண்டு படகுகள் குலெப்ரா என்ற அந்தச் சிறிய தீவிற்கு வந்தன. அங்கிருந்த வானொலி நிலையம் புதுப்பித்துக்கட்டும் வேலை செய்து முடிக்கப்பட்டதை உடனடியாக பாராட்டியது. அடுத்த வார இறுதியில் 112 சாட்சிகள் ஆறு டன்கள் கட்டிட பொருட்களுடன் வீக்கஸ் என்று சிறிய தீவுக்கு இதே விதமான புதுப்பித்துக் கட்டும் பணிக்காகப் பயணம் செய்தனர்.
வெள்ளிக்கிழமை, புயலுக்குப் பின்னர் ஐந்து நாட்கள் கழித்து, போர்ட்டோ ரிக்கோவிலுள்ள சகோதரர்கள் ஒரு சரக்கு விமானத்தை வாடகைக்கு எடுத்து, செய்ன்ட் க்ராய்க்ஸ் தீவுக்கு உணவும் மருந்தும் கொண்டுசென்றனர். ஒரு சகோதரர் இப்படியாக அறிவிக்கிறார்: “ஆகாயத்திலிருந்து பார்க்கும்போது, அந்த முழு தீவும் குப்பைக் கூளமாகக் காட்சியளித்தது. முழு கிராமங்களும் நாசமடைந்து உருத்திருப்படைந்து காணப்பட்டது. மலைகளில் எங்கும் மரத்துண்டுகளும், உலோகத் துண்டுகளும் நாசமடைந்த பொருட்களுமே காணப்பட்டது. பசுமையைக் காணமுடியவில்லை, மணிக்கு 200 மைல் வேகத்தில் அடித்தச் சூறைக்காற்றால் வெறுமென மொட்டை மரங்களும் எரிந்து நாசமடைந்த புற்களுமே காணப்பட்டது.”
ஏற்பட்ட சேதத்தின் அளவை நிச்சயப்படுத்தியபின்பு, சாட்சிகள் ஏறக்குறைய 75 டன்கள் கட்டிட பொருட்களை அனுப்பினர். அக்டோபர் மாதத்தின்போது, போர்ட்டோ ரிக்கோவிலிருந்து ஏறக்குறைய 100 பேர் வாலண்டியர்களாக முன்வந்து செய்ன்ட் க்ராய்க்ஸிலுள்ள சகோதரர்களின் புதுப்பித்துக் கட்டும் பணியில் உதவிசெய்தனர். ராஜ்ய மன்றம் அவர்களுக்குத் தூங்கும் இடமாக அமைந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய அனைத்துக் கிளைக்காரியாலயங்களிலும் நடைபெறுவதுபோல, ஒவ்வொரு நாளும் பைபிள் தின வாக்கியத்தைக் கலந்தாலோசிப்பதுடன் துவங்கியது. உள்ளூரிலிருந்த கிறிஸ்தவ சகோதரிகள் சகோதரர்களுக்காக உணவு சமைத்து, துணிமணிகளைத் துவைத்துக் கொடுத்தனர்.
ஷீலா வில்லியம்ஸ் ஒரு புதிய வீடு கட்டுவதற்காகப் பல ஆண்டுகள் பணம் சேர்த்து, அப்பொழுதுதானே அதைக் கட்டி முடித்துக் குடியேறினாள். ஹூகோ அதை அழித்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட போர்ட்டோ ரிக்கோவிலிருந்து சாட்சிகள் வருகிறார்கள் என்பதை அவள் கேள்விப்பட்டபோது, அதைக் குறித்து தன்னுடைய உடன் வேலையாட்களிடம் சொன்னாள். ஆனால் அவர்கள் சொன்னார்கள்: “அவர்கள் உனக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். நீ கருப்பு இனத்தவள், அவர்களைப் போல் நீ ஸ்பய்ன் தேசத்தவள் அல்ல.” விரைவிலேயே ஷீலா முழுமையான ஒரு புதிய வீட்டைக் கொண்டிருந்ததுதானே அவர்களுக்கு என்னே ஆச்சரியம்!
ஐக்கிய மாகாணங்களில் மிச்சிகனிலுள்ள ஓர் ஐந்து வயது சிறுமி செய்ன்ட் க்ராய்க்ஸ் தீவில் ஏற்பட்ட நாசத்தைப்பற்றிய செய்தி அறிக்கைகளைக் கண்டு, தங்களுடைய உடைமைகளை இழந்தவர்களுக்கு உதவிட விரும்பினாள். ஒரு சிறுமிக்கு தன்னுடைய ஓர் ஆடையைக் கொடுப்பதற்கு தாயிடம் அனுமதி கேட்டாள், ‘அந்தச் சிறுமி ராஜ்ய மன்றத்துக்குப் போகயில் பார்க்க நன்றாக இருக்க வேண்டும்’ என்பதற்காக.
“எனக்கு ஆச்சரியமாயிருந்தது என்னவென்றால்,” என்று தாய் தொடருகிறாள், “அவள் தன்னுடைய மிகச் சிறந்த உடையில் ஒன்றைத் தெரிந்தெடுத்தாள்.” அந்த ஆடை அனுப்பப்பட்டது, 16-வது பக்கத்தில் நீங்கள் பார்ப்பதுபோல, செய்ன்ட் க்ராய்க்ஸிலிருக்கும் ஒரு சிறுமி அதை அணிந்திருப்பதில் அதிக மகிழ்ச்சியுடனிருக்கிறாள்.
தென் கரோலினாவை ஹூகோ நாசப்படுத்தியதற்குப் பின்பு, வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 22, அன்று ஒரு நிவாரண பணி குழு உடனடியாக ஏற்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்த ஏராளமான சபைகளின் மூப்பர்கள் தொடர்புகொள்ளப்பட்டனர். இவர்கள் தங்களுடைய சபையிலிருந்த ஒவ்வொரு நபருக்கும் பொறுப்பாக இருந்தனர். சில சாட்சிகளின் வீடுகள் அழிக்கப்பட்டபோதிலும், மற்றும் சிலருடைய வீடுகள் சேதப்படுத்தப்பட்ட போதிலும், எவரும் காயமடையவோ அல்லது கொல்லப்படவோ இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. ஒரு ராஜ்ய மன்றம் கடுமையாகச் சேதமடைந்தது, மற்றவையும் ஓரளவு பாதிப்பைக் கொண்டிருந்தன.
காரியங்கள் குறிப்பாக சார்ல்ஸ்டனைச் சுற்றி நம்பிக்கையளிப்பதாயில்லை. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தும், ஒழுகல் கொண்ட நூற்றுக்கணக்கான கூரைகளும், வீடுகளும் அழிக்கப்பட்டு அல்லது சேதமடைந்து, குடிதண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல், குளிர்சாதனம் இல்லாமல், பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் காரியங்கள் அப்படியாக இருந்தது. என்றபோதிலும் நிலைமை விரைவில் மாற்றங்கண்டது.
சார்ல்ஸ்டன் பகுதியிலிருந்து அநேக சகோதரர்கள் புயலுக்கு மறுநாள் சனிக்கிழமை காலை உதவி தேவைப்பட்டவர்களாக ஒன்றுகூடினர். சுற்றியிருந்த பகுதிகளிலிருந்து சாட்சிகள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கடைசியில் வெளிவர, என்ன நடந்தது என்பதை நகர கண்காணி சகோதரர் ரான் எட்லிங் விவரிக்கிறார். “வெளியே சென்றபோது, நாங்கள் இது வரைப் பார்த்திராத மிகவும் அழகான ஒரு காட்சியைக் கண்டோம். அங்கு ஒரு வாகனத்தொடர் இருந்தது. முன்னிலையில் இருந்த வாகனத்தின் சன்னலிலும் அதைத் தொடர்ந்த மற்ற வாகனங்களிலும் ‘யெகோவாவின் சாட்சிகளுடைய சூறாவளி நிவாரணப் பணிக்குழு’ என்று எழுதப்பட்டிருந்தது.
“அந்த வாகனத் தொடரில் ஆட்களை ஏற்றிச்செல்லும் லாரிகளும், கார்களும் வாகனங்களை இழுத்துச்செல்லும் லாரிகளும் அவற்றோடுகூட ஆயிரக்கணக்கான காலன்கள் தண்ணீரும் இருந்தது. அவர்கள் சங்கிலி இரம்பங்களையும் அவற்றைச் செயல்படுத்த அவசியமான 300 காலன் டீசலும் கொண்டுவந்தனர். அது என்னால் மறக்க முடியாத ஒரு காட்சி. அந்தச் சமயத்தில் நான் நினைத்துக்கொண்டது, ‘கடவுளுடைய அமைப்பில் இதுவரை நான் அனுபவித்திராத மிக நேர்த்தியான சமயங்களில் இது ஒன்று.’ அந்தச் சகோதரர்கள் மிகவும் தேவையாக இருந்த பொருட்களைக் கொண்டுவந்ததுமட்டுமல்லாமல், தங்களோடு நம்பிக்கையும் சேர்த்து கொண்டுவந்தார்கள். அந்தச் சமயத்தில் நமக்கு இருக்கும் சகோதரத்துவந்தான் என்னே அருமை என்று எல்லாருமே உணர்ந்தார்கள் என்பதில் நிச்சயமாக இருக்கிறேன். சற்று நேரம் எடுப்பதாயிருந்தாலும், நாங்கள் முன்வருவதற்கு எங்களையே அளித்திட ஆயத்தப்பட்டோம்.”
மறுவாரக் கடைசியில் 400 சாட்சிகள்போல் நிவாரணப் பணிக்கு அங்கு ஆயத்தமாயிருந்தார்கள். மொத்தமாக ஏறக்குறைய 800 குடும்பங்களின் வீட்டுக்கூரைகள் அல்லது தோட்டங்களில் பணி நிறைவேற்றப்பட்டது; இவர்களில் சாட்சிகளாக இல்லாதவர்கள் இடங்களும் உட்பட்டிருந்தன. ஒரு நிவாரணப் பணி மையத்தில், சகோதரர்கள் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 3,000 பேருக்கு உணவளித்துவந்தார்கள். எல்லாம் சேர்த்து, சாட்சிகள் 5,00,000-ற்கும் அதிகமான பவுண்டுகள் உணவையும், 1,71,000 பவுண்டுகள் உடையையும் பெற்று பகிர்ந்தளித்தார்கள். இவற்றில் அவர்கள் அனுப்பிய கட்டிடப் பொருட்களும் மற்ற பொருட்களும் குறிப்பிடப்படவில்லை. அக்டோபர் 8, ஞாயிற்றுக்கிழமை, ஹூகோ அடித்து 16 நாட்களுக்குப் பின்னர், சபைகள் எப்பொழுதும்போல் தங்களுடைய எல்லாக் கூட்டங்களையும் அட்டவணைப்படி நடத்துவதற்கு ஏதுவாக எல்லா ராஜ்ய மன்றங்களுமே பழுதுபார்க்கப்பட்டன.
கலிஃபோர்னியா நிலநடுக்கத்தைச் சமாளித்தல்
அக்டோபர் 17 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் சான்ஃபிரான்சிஸ்கோவிற்குத் தெற்கே ஏறக்குறைய 70 மைல்களுக்கு அப்பால், சான்டா க்ரூஸுக்கு வடகிழக்கில் 10 மைல்களுக்கு அப்பால் இருந்தது. சிறிது நேர நிலநடுக்கங்கள் அசாதாரண சம்பவங்களாயிராத மக்கள்தொகை மிகுந்திருந்த இந்தப் பிரதேசத்தில் நில்லாத நடுக்கம் என்பதாகத் தென்பட்ட 15 வினாடிக்கும் அதிகமான நடுக்கம் லட்சக்கணக்கானோரைத் திகிலடையச் செய்தது.
“கட்டிடம் அப்படியே முன்னும் பின்னுமாக அசைந்தது,” என்கிறார் சான் ஜோஸில் ஒரு கிறிஸ்தவ மூப்பராயிருக்கும் ரே வேடன். “அது அப்படியே நிற்குமா என்றும் நான் யோசிக்க ஆரம்பித்தேன். என்னுடைய வீட்டு சன்னல்வழியே பார்த்தபோது, சாலைகள் உச்ச நேர போக்குவரத்தால் வாகன நெருக்கடியைக் கண்டன. அப்பொழுது நேரம் 5:04 மணியாகும்.
“கடைசியில் நாங்கள் எங்களுடைய சபையின் சகோதரர்களோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம். தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியாதவர்களை நேரடியாகவே அவர்களுடைய வீடுகளுக்குப் போய் சந்திக்க ஏற்பாடு செய்தோம். இது அநேக மணிநேரங்களை எடுத்தது, ஏனென்றால் சாலைகளில் வாகன நெருக்கடி இருந்தது. மாலை 8:30 போல் எவரும் காயப்படவில்லை என்ற செய்தி வந்தது. என்றபோதிலும் பலருடைய வீடுகளினுள் பொருட்கள் உடைந்திருந்தன. அந்தப் பிராந்தியத்திலிருந்த எங்களுடைய சகோதரரில் சிலருடைய வீடுகள் மிகக் கடுமையாக சேதமடைந்தன, அவர்கள் இடமாறவேண்டும் என்பதை மறுநாள் கேள்விப்பட்டோம். அவர்கள் உடன் சாட்சிகளுடைய வீடுகளுக்குக் கூட்டிச்செல்லப்பட்டார்கள்.”
லாஸ் கேடோஸ் என்ற இடத்திற்கு அண்மையில், ஒரு கிறிஸ்தவ சகோதரி தன்னுடைய இரு மாடிகள் கொண்ட வீட்டில் இரண்டாவது மாடியில் குளித்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது முதல் மாடி முற்றிலுமாய் உடைந்தது. எனவே அவள் முதல் மாடி நிலையில் தன்னுடைய குளியல் தொட்டியிலிருந்து வெளியே வந்தாள், ஒரு காயமுமின்றி வந்தது ஆச்சரியமாயிருந்தது. அவள் முதல் மாடியில் இருந்திருந்தால், நிச்சயமாகவே மாண்டிருப்பாள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யப்படலாம் என்பதை நண்பர்கள் உடனடியாகவே கேட்க விரும்பினர். நிலநடுக்கத்திற்குப் பின்பு இரண்டாவது நாள் வியாழக்கிழமை, இவர்களுடைய தேவைகளைக் கவனிக்க ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. சனிக்கிழமை, பெரிய வாகனங்கள் கூடாரங்களையும், தூங்குவதற்கான பைகளையும், விளக்குகளையும், அடுப்புகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குடிதண்ணீர் போன்றவற்றையும் தேவையிலிருப்பவர்களுக்குக் கொண்டுவந்தன. அன்று காலை மட்டும் நிவாரண நிதிக்காக 41,000 டாலர் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது!
உலகின் சில ஆட்களின் மனப்பான்மைக்கு என்னே ஒரு வித்தியாசம்! இன்டர்ஸ்டேட் 880 உடைந்த பகுதியில் காரில் சிக்கியிருந்த ஒரு பெண்மணியினிடமாக ஒருவன் ஊர்ந்துவந்து, அவளுக்குத் தீங்கு செய்வதில்லை என்று வாக்களித்து, அவளுடைய மோதிரங்களையும், நகைகளையும், பணப்பையையும் எடுத்துக்கொண்டு அவளுக்கு உதவி செய்யாமல் ஓடிவிட்டான். அந்தச் சாலை விபத்தில் ஏறக்குறைய 40 பேர் இறந்தனர், அவர்களில் யெகோவாவின் சாட்சியாக இருந்த மேரி உவாஷிங்டனும் ஒருவர்.
அந்தப் பிரதேசத்தின் யெகோவாவின் சாட்சிகளின் கட்டிடக் குழு ஏற்பட்ட பாதிப்புகளை விரைவில் மதிப்பிட ஆரம்பித்தது. இரண்டு ராஜ்ய மன்றங்கள் சிறிதளவே சேதமடைந்திருந்தன. என்றபோதிலும், அநேக சாட்சிகளின் வீடுகள் அவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், அவை இடிக்கப்படவேண்டியதாயிருந்தது. பணியாட்களைக் கொண்ட அந்தத் தொகுதி அநேக சகோதரர்களின் வீடுகளைப் பழுதுபார்த்து, மற்றும் சிலவற்றைப் புதுப்பித்துத்தரவேண்டியிருந்தது. இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, இந்த ஒழுங்குமுறை அதன் முடிவை நெருங்குகையில், நாம் இன்னும் அதிக பூமியதிர்ச்சிகளையும் மற்றச் சேதங்களையும் எதிர்பார்க்கலாம். (மத்தேயு 24:3–8) கஷ்டங்கள் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, எருசலேம் அழிக்கப்பட்டபோது வாழ்ந்த பூர்வ கிறிஸ்தவர்கள் பட்ட கஷ்டங்களைக் காட்டிலும் அதிகமாகவும் இருக்கக்கூடும். பைபிள் தீர்க்கதரிசனம் நம்முடைய நாளில் இன்னும் அதிக வல்லமையுடையதாய் இருக்கின்றது: “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று.” எனவே என்ன தேவைப்படுகிறது? “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்.” (1 பேதுரு 4:7, 8) யெகோவாவின் சாட்சிகளுடைய சகோதரத்துவத்தின் மத்தியில் இப்படிப்பட்ட அன்பு செயலில் வெளிப்படுத்தப்படுகிறது என்பது நிச்சயமாகவே நம்முடைய இருதயங்களுக்கு இன்பமாயிருக்கிறது! (g90 2/22)
[பக்கம் 13-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஓக்லாண்டு
சான் ஃபிரான்சிஸ்கோ
கலிஃபோர்னியா
லாஸ் கேடோஸ்
சான்டா க்ரூஸ்
[வரைப்படம்] (முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அ.ஐ.மா.
சார்ல்ஸ்டன்
அட்லாண்டிக் மகாசமுத்திரம்
போர்ட்டோ ரிக்கோ
குவாடிலோப்
[பக்கம் 14, 15-ன் படங்கள்]
வலது: தெற்கு கரோலினா கடலோரப் பகுதியில் ஹுகோ ஏற்படுத்திய அழிவு
[படத்திற்கான நன்றி]
Maxie Roberts/Courtesy of THE STATE
கீழே: ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு முன்னால் கார்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன
[படத்திற்கான நன்றி]
Maxie Roberts/Courtesy of THE STATE
கீழே கடைசி: சுத்தம் செய்வதற்கும் மீண்டும் புதுப்பிப்பதற்கும் உதவி செய்யும் யெகோவாவின் சாட்சிகளுடைய நிவாரணப் பணித் தொகுதி
[பக்கம் 16-ன் படங்கள்]
இடது: உதவி செய்ய விரும்பிய ஐந்து வயது மிச்சிகன் சிறுமி அனுப்பிய ஆடையை செய்ன்ட் க்ராய்க்ஸ் சிறுமி அணிந்திருக்கிறாள்
கீழே: குவாடிலோப்பிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் நன்கொடையாக வந்த உணவுப்பொருட்களைப் பிரிக்கின்றனர்
கீழ் இடது: நாசமடைந்த தன்னுடைய வீட்டைத் திரும்பக் கட்டுவதற்கு உதவி செய்த நிவாரணப் பணியாளருடன் ஷீலா வில்லியம்ஸ்
[பக்கம் 16-ன் படங்கள்]
மேல்: இன்டர்ஸ்டேட் 880 என்ற மேல் சாலை கீழ் சாலையில் இடிந்து கிடக்கிறது
இடது: இடிந்து முதல் மாடியின் நிலைக்கு வந்த தன் வீட்டின் இரண்டாவது மாடியிலிருக்கும் ரேய்ம் மேனர்